நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஜூலை, 2016

புலவர் பொ.வேல்சாமியின் உரைகளை ஆவணமாக்கும் பணி!

புலவர் பொ.வேல்சாமி

புலவர் பொ. வேல்சாமியின் கட்டுரைகளைக் காலச்சுவடு, தீராநதி, கவிதாசரன் உள்ளிட்ட ஏடுகளில் படித்ததுண்டு. ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் ஐயம் ஏற்படும்பொழுது அவருடன் உரையாட நினைத்தாலும் இருப்பிடம் அறியாது, காலங்கள் உருண்டோடின. சிலவாண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் சென்ற ஓர் இளங்காலைப் பொழுதில் பொ. வேல்சாமியின் இல்லம் சென்று கண்டுவந்தேன். அதன் பிறகு ஓய்வு கிடைக்கும்பொழுதெல்லாம் இருவரும் உரையாடுவோம். சில நேரம் உரையாடல் மணிக்கணக்கில் நீள்வதும் உண்டு. பயனுடைய செய்திகளை  அமுதசுரபிபோல வழங்குவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் நூல்கள் இணையத்தில் கிடைப்பதைக் கண்டு அதனை உடனுக்குடன் தெரிவிப்பவர். அரிய பழைய நூல்களை மின்படிகளாக மாற்றி வைத்துள்ள இணையதளங்களின் முகவரிகளை எடுத்துரைப்பவர். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஒவ்வொரு முறையும் கூறத் தயங்குவதில்லை. இவரின் இல்லத்தின் அருகில் நாம் இருந்தால் நம் அறிவுத்தாகம் தணிப்பார் என்று நினைத்து, ஏமாற்றம்கொள்வதுண்டு.

பதிப்புச் சார்ந்த செய்திகளில் எனக்கு ஐயம் ஏற்பட்டால் உடனே பொ. வேல்சாமியை அழைத்து, தெளிவு பெறுவேன். உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பைத் தொடங்க நினைத்தபொழுது நோக்கம் கூறினோம்; ஆர்வமாகத் தழுவி அன்புமொழிகளைத் தந்தவர். இந்த மன்றத்தின் பொழுது, சற்றும் தயங்காமல் இணைந்துகொண்டவர். தொல்காப்பியம் தொடர்பில் சலிப்பில்லாமல் மணிக்கணக்கில் செய்திகளைச் சொல்பவர்.

தொல்காப்பியத்தின் பழைய பதிப்புகள் குறித்து விரல்முனையில் செய்திகளை வைத்திருப்பவர். பிற நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்கள் தொல்காப்பியம் பற்றியும், சங்க நூல்கள் பற்றியும் அறிவித்திருந்த நூற்றாண்டுப் பழைமையுடைய அறிவிப்புகளை நினைவூட்டுபவர்; ஆங்கிலப் பாதிரிமார்கள் தம் நூல்களிலும், அகரமுதலிகளிலும், நூலடைவுகளிலும் தொல்காப்பியம் குறித்து, வெளிப்படுத்தியுள்ள செய்திகளை நுட்பமாக விளக்குபவர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் நான் மணிக்கணக்கில் கேட்கும் உரைகளை உலகம் கேட்கவேண்டும் என்று உறுதிபூண்டேன்; அந்த உரைகளும் உலகு உள்ளவரை நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வேட்கையுற்றேன்.

பொ. வேல்சாமியைப் புதுச்சேரிக்கு ஒருமுறை வந்து, உலகத் தொல்காப்பிய மன்றத்தில் சொற்பொழிவாற்றும்படிக் கேட்டுக்கொண்டேன். நாளும் நேரமும் வாய்க்கவேண்டும் என்று இருவரும் மாதக் கணக்கில் காலம் கடத்தினோம். நான் கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கிற்குச் சென்று, திரும்பிய பிறகு பொழிவை வைத்துக்கொள்ளலாம் என்று மனத்தளவில் உறுதியுரைத்தார்; உரைத்தபடி நாளும் கொடுத்தார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் ஏழாம் பொழிவுக்கு வருகை தரும் பொ. வேல்சாமியின் வருகைக்குக் காத்துக்கிடந்தேன்.

தொல்காப்பிய மன்றப் பொழிவுகள் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு நிறைவுறும். தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை எனப் பதினைந்து நிமையம் கழிந்தாலும் ஒன்றேகால் மணிநேரம் சிறப்புரை அமையும். ஒன்றேகால் மணிநேரத்தில் பொ.வேல்சாமியின் பொழிவை அடக்கமுடியாது என்ற நினைவு எனக்குப் பிறகுதான் வந்தது.

பொ. வேல்சாமி அவர்களோ நாமக்கல்லில் முட்டைவணிகம் செய்யும் தொழில் முனைவர். அவரின் நிறுவனத்தில் சரக்குந்து ஓட்டவும், முட்டைகளைக் கணக்கிடவும், பணத்தை வாங்கி வைக்கவும் எனப் பல பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடும் பொறுப்பு இவருக்கு உண்டு. வணிகத்தை விட்டுவிட்டு, தமிழ்க்காப்பு முயற்சிக்கு முதல்நாளே புதுச்சேரிக்கு வர வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கம் இருந்தது. இருப்பினும் என் விருப்பத்தைச் சொன்னதும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் முதல்நாள் இரவே புதுச்சேரிக்கு வர ஒப்புதல் தந்தார். தொல்காப்பியப் பொழிவுக்குரிய நாளும் வந்தது. பொ. வேல்சாமி தம் மகிழ்வுந்தில் புதுச்சேரிக்கு வந்துகொண்டிருப்பதை அறிவித்தவண்ணம் இருந்தார். அவர் தங்குவதற்கு ஒரு விடுதியை ஏற்பாடு செய்திருந்தேன். இரவு பதினொரு மணியளவில் புதுவை வந்து சேர்ந்தார். கையில் இருந்த சிற்றுண்டியைக் கொடுத்து, உண்டு, ஓய்வெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டு இல்லம் திரும்பினேன்.

23. 07. 2016 காலை 7 மணியளவில் விடுதியின் கதவைத் தட்டினேன். குளித்து முடித்தார்; உடைமாற்றிக்கொண்டு உடன்புறப்பட்டார். இந்த நேரத்தில் ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் வந்து இணைந்துகொண்டார்; சிற்றுண்டி முடித்தோம். புதுவையின் கடற்கரை ஒட்டிய கழிமுகப் பகுதியில் இருந்த அமைதியான தென்னந்தோப்பில் எங்களின் மகிழ்வுந்து நின்றது. படப்பிடிப்புக்கு ஆயத்தமானோம். ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தினோம்; பொ. வேல்சாமியை இருக்கையில் அமரவைத்து, அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் உரைப்பகுதிகளை நினைவூட்டிப் பேசும்படிக் குறிப்பிட்டோம்.
பொ. வேல்சாமியுடன் உரையாடும் மு..இ.

பொ.வேல்சாமி தமிழின் பன்முகத் தளங்களைக் கற்றறிந்தவர். கரந்தைப் புலவர் கல்லூரியின் மாணவர். பேராசிரியர்கள் அடிகளாசிரியர், ச.பாலசுந்தரம் போன்றவர்களிடம் பழந்தமிழ் நூல்களைப் படித்தவர். இலங்கைப் பேராசிரியர். கா. சிவத்தம்பியுடன் பழகி ஆய்வுப்போக்குகளை அறிந்தவர். இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, வரலாறு, சமூகவியல், கோட்பாட்டு ஆய்வுகளைக் கற்றுத் துறைபோனவர். எனவே இவரின் பேச்சை ஒரு வரம்பிட்டு அடக்க வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால் பேச்சு வேறு வேறு வடிவங்களைப் பெற்றுவிடும் என்று நினைத்தேன். கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றைக் கரைக்குள் அடக்கி, கல்லணை கட்டித் தேக்கி, அதன் வேகத்தை வயலுக்குள் அமைதியாக்கி அனுப்பும் ஓர் உழவனைப் போல் புலவர் பொ. வேல்சாமியின் பேச்சை அமைக்க நினைத்து, சில தலைப்புகளில் தங்கள் பேச்சு இருக்கும்படி விரும்புகின்றேன் என்று கூறினேன். முழுவதும் உடன்பட்டதுடன் தலைப்புகளையும் செப்பமாக அமைக்க அறிவுறுத்தினார். அந்த வகையில்,

1.            நானும் தமிழும்
2.            தமிழ் மரபில் தொல்காப்பியம் பெற்ற இடம்
3.            தொல்காப்பியமும் வடமொழி மரபும்
4.            தொல்காப்பியமும் உரையாசிரியர்களும்
5.            தொல்காப்பியத்தைத் தமிழ்மக்கள் மறந்த வரலாறு
6.            தொல்காப்பியம் மீட்டெடுக்கப்பட்ட வரலாறு
         
என்ற தலைப்புகளில் அமையும்படி பொ. வேல்சாமியின் உரையைக் காணொளியில் பதிவு செய்தோம். ஒளி ஓவியர் திரு. சிவக்குமாரும் அவரின் உதவியாளரும் என் உள்ளக் குறிப்பறிந்து மிக உயர்ந்த தமிழ்ப்பணிக்குத் துணைநின்றனர். எங்களின் படப்பிடிப்புப் பணிக்கு வழக்கம்போல் இடமளித்து உதவிய திரு. செயப்பிரகாஷ் இராசு அவர்கள் என்றும் தமிழர்களின் நன்றிக்குரியவர். பொ. வேல்சாமியின் வாய்மொழியில் தமிழர்கள் தங்கள் பழம்பெருமையை விரைவில் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.

பதிந்த காட்சிகளைக் கண்டு மகிழ்தல்

படப்பிடிப்பில் இணைந்த முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

படப்பிடிப்பில்...

சனி, 23 ஜூலை, 2016

புதுச்சேரியில் தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு!


புலவர் பொ.வேல்சாமி சிறப்புரை

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு 23.07.2016 (சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் உள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் தெ. முருகசாமி தலைமை தாங்கினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார்.

நாமக்கல்லைச் சேர்ந்த புலவர் பொ. வேல்சாமி தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொல்காப்பிய நூலின் சிறப்பு, தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகாலத்தில் ஏற்படுத்திய மொழிக்காப்பு முயற்சி, பிற்கால இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் பற்றி விரிவாக உரையாற்றினார். தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் 1847 இல் மழவை மகாலிங்க ஐயரால் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதல் அச்சுவடிவம் கண்டதையும் அதனைத் தொடர்ந்து தொல்காப்பியம் நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்களால் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வுநோக்கில் எடுத்துரைத்தார். இந்தப் பதிப்புகளின் வரலாறு, சிறப்புகள், நிறை, குறைகள் குறித்துப் புலவர் பொ.வேல்சாமி விளக்கினார். இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகள் பற்றியும் தம் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

முனைவர் ப. கொழந்தசாமி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவைத் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் தெ. முருகசாமி அவர்களின் தலைமையுரை

புலவர் பொ.வேல்சாமி அவர்களைச் சிறப்பிக்கும் தூ.சடகோபன் ஐயா

புலவர் பொ.வேல்சாமி அவர்களுக்கு முனைவர் அலெக்சு தேவராசு அவர்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்குதல்

தமிழுரையை ஆர்வமாகச் செவிமடுக்கும் அறிஞர்கள்

புலவர் பொ.வேல்சாமி அவர்களின் சிறப்புரையைக் கேட்க இங்கே அழுத்துக

வியாழன், 21 ஜூலை, 2016

அரியலூர்ப் புத்தகத் திருவிழா – 2016


திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்கள் நூல்களை வெளியிட, மு.இளங்கோவன் பெற்றுக்கொள்ளும் காட்சி

 பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்களைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் மு. இ.

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும் இணைந்து அரியலூரில் புத்தகத் திருவிழாவை, சூலை 15 முதல் சூலை 24 வரை நடத்துகின்றனஅரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளன. ஒவ்வொரு நாள் மாலையிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அறிஞர்களின் சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் செ. மணியன், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க. பாரி, திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய், முனைவர் சோ. சத்தியசீலன், கவிஞர் தங்கம். மூர்த்தி, மருத்துவர் சு. நரேந்திரன், பேராசிரியர் இரெ. குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

23.07.2016 மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நாளில் திரைப்பட இயக்குநர்கள் வ. கௌதமன், மு. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

19.07.2016 (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டும் சிறப்பித்தார். கானகன் புதினம் எழுதிச் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்ற லெட்சுமி சரவணக்குமார் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார்.

திரைப்பா ஆசிரியர் கே. அறிவுமதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்ணியம் இதழாசிரியர் முனைவர் ஆ. கோ. குலோத்துங்கன் எழுதிய நூல்களை வெளியிட்டும், மண்மணம் தவழும் சிறப்புரையாற்றியும் அவையினரின் பாராட்டினைப் பெற்றார்.


புரவலர் கதிர். கணேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் க. இராமசாமி, கு. இராஜபாண்டியன், பெ. மாரிமுத்து, வெ. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. திருக்கோணம் கவிஞர் மூர்த்தி அவர்களின் கிராமியத் தென்றல் நிகழ்ச்சி அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.

மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படும் காட்சி

மு.இளங்கோவன் உரையாற்றும் காட்சி

திங்கள், 18 ஜூலை, 2016

தொல்காப்பியம் – தொடர்பொழிவு 7



தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் அறிஞர்களின் பங்கேற்பில் தொல்காப்பிம் தொடர்பொழிவு நடைபெறுகின்றது. தாங்கள் இந்த நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்கவும் தொல்காப்பிய உரையமுதம் பருகவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 23. 07. 2016, காரி(சனி)க் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
 அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

தலைமை: தமிழாகரர் தெ. முருகசாமி  அவர்கள்

சிறப்புரை: புலவர் பொ. வேல்சாமி அவர்கள், நாமக்கல்
      
தலைப்பு: தொல்காப்பியப் பதிப்புகள்

நன்றியுரை: முனைவர் சு. சக்திவேல் அவர்கள்


அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700  
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

செவ்வாய், 12 ஜூலை, 2016

எழுத்துச் செம்மல் வேலூர் தெ. சமரசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்



வேலூரில் வாழ்ந்த பகுத்தறிவுச் சிந்தனையாளரும் வழக்கறிஞரும் தமிழ்ப்பற்றாளருமாகிய எழுத்துச்செம்மல்  தெ. சமரசம் ஐயா அவர்கள் மறைந்து ஓராண்டாகின்றது. அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில் அவர்தம் குடும்பத்தாரும், நண்பர்களும் நினைவுக் கருத்தரங்கம் ஒன்றினை வேலூரில் 17.07.2016 (ஞாயிறு)  அன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


கல்விச்செம்மல் த. வ. சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார். தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவிற்குத் தமிழார்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம். பயண நூல்கள் பலவற்றைத் தந்த பகுத்தறிவுப் பெருமகனாரின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

சனி, 9 ஜூலை, 2016

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) 30 வது விழா!




வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (பெட்னா) 30 வது விழா அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினியாபோலிசு மையத்தில் 2017 சூன் 30 முதல் சூலை 3 வரை (நான்கு நாள்) நடைபெறுகின்றது. தமிழர்களின் மொழி, இனம், பண்பாடு காக்கும் இத் தமிழ்க் குடும்ப விழாவிற்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

வெள்ளி, 8 ஜூலை, 2016

புலவர் நா. தியாகராசன்


புலவர் நா. தியாகராசன்

தமிழர்களின் கலைக்கருவூலமான சிலப்பதிகாரத்தின் சிறப்புகள், அதில் இடம்பெற்றுள்ள ஊர்ப்பெயர்கள், கதைமாந்தர்களின் பெயர்கள், சிலப்பதிகாரப் பதிப்புகள், சிலப்பதிகார ஆய்வறிஞர்கள், சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றும் பொழிஞர்கள், பூம்புகார் குறித்த வரலாற்று ஆய்வுகள் என ஒரு நூற்றாண்டுக்குரிய செய்திகள் அனைத்தையும் தம் உள்ளத்தில் தேக்கிவைத்துள்ள, நடமாடும் சிலப்பதிகார ஆய்வடங்கல் என்று புலவர் நா. தியாகராசனைக் குறிப்பிட்டால் சாலப் பொருத்தமாக இருக்கும்.

புலவர் நா. தியாகராசனைப் பலவாண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக நினைவு. அதன் பிறகு குடந்தைக் கல்லூரியில் மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகர் குறித்த பொதிகை தொலைக்காட்சியின் சிறப்பு ஒளிபரப்பின் படப்பிடிப்புக்குப் பூம்புகாருக்குச் சென்றபொழுது மீண்டும் சந்திப்பு; பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழாவுக்குப் புதுவைக்கு வந்தபொழுது சந்திப்பு எனப் புலவருடன் அமைந்த தொடர்பு வளர்பிறைபோல் வளர்ந்துகொண்டே இருந்தது. இடையில் செல்பேசி உரையாடலுக்கும் குறைவில்லை.

அண்மையில் ஒருநாள் புலவரின் செல்பேசி அழைத்தது. மறுமுனையில் அமைந்த அவரின் குரலில் விளரிப்பண் போல் விம்மல் தெரிந்தது. உடல்நலம் பாதிப்புற்றுள்ளதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். புலவருக்கு ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கிழமையாக மயிலாடுதுறையில் மருத்துவம் பார்த்துக்கொண்டு, இப்பொழுது மேலப்பெரும்பள்ளம் வீட்டில் ஓய்வில் இருப்பதாக உரைத்தார். நானும் அவருக்கு ஆறுதலாக வரும் காரிக்கிழமையில் இல்லம் வந்து சந்திப்பதாக உரைத்து, உடலைப் போற்றுங்கள் என்று குறிப்பிட்டு, செல்பேசியை நிறுத்தினேன். புலவரின் அறிவாற்றல், பணிகள் மீண்டும் மீண்டும் என் நினைவில் தோன்றி வருத்தியது. எனக்கு அமைந்த அனைத்துப் பணிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்தக் காரிக்கிழமை(02.07.2016) பூம்புகார் செல்லத் திட்டமிட்டேன்.

புலவர் நா. தியாகராசனாரைப் பார்த்து, ஆறுதல் சொல்லிவிட்டு வருவது அனைவராலும்  இயலும். அவ்வகையில் எளிய பயணமாக நான் என் பயணத்தை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. புலவரின் அறிவாற்றலை எதிர்வரும் காலத்திற்குப் பதிந்துவைக்க எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே என்று என் உள்மனம் நடுங்கியது. புலவரின் உடல்நலனுக்கு ஏதேனும் நடந்தால் பல அரிய செய்திகளை இழந்துவிடுவோமே என்று கவலையுற்று ஒளிப்பதிவுக் கருவிகளுடன் பூம்புகாருக்குப் புறப்பட்டோம்.

காலை பதினொரு மணிக்கு நாங்கள் புலவரின் இல்லத்தை அடைந்தோம். எங்களைக் கண்டதும் புலவருக்குப் புத்துணர்ச்சி வந்தது. அன்பொழுக வரவேற்றார்; வீட்டின் உள்ளே அழைத்துச்சென்று அவரின் சிறந்த சேமிப்பான யாழ்நூலின் முதல்பதிப்பை என் கையில் தந்துவிட்டு நான் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டு, அவர் மகிழ்ந்தார். அருகில் இருந்த அரிய நூல்களின் தொகுதிகளை ஆர்வமாக அறிமுகம் செய்தார். அப்பொழுது புலவரின் மகனார் தயக்கத்துடன் அருகில் வந்து, அண்மையில் அப்பாவுக்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்தது. அமைதியாக உரையாடுங்கள் என்று அன்புடன் குறிப்பிட்டார். இப்பொழுது எனக்குப் புலவரின் உடல்நிலையும் அவரின் பகுத்தறிவு உள்ளமும் புரிந்தது. மெதுவாக உடல்நலம் வினவினேன். நலமாக இருப்பதாகவும், இரண்டு நாளாகப் புத்துணர்வுடன் இருப்பதாகவும் கூறினார்.

அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று, அருகில் இருந்த ஒரு திருக்கோயிலுக்குப் புறப்பட்டோம். இக்கோயில் அருளாளர்களால் பாடல் பெற்றது என்ற குறிப்பைப் புலவரின் வாய்மொழியால் அறிந்தோம். திருக்கோயில் ஒட்டிய ஒரு தோப்பில் அமர்ந்து புலவரின் சிலப்பதிகாரச் சிறப்புரையைப் பதிவு செய்தோம். அரிய செய்திகளைப் புலவர் சொல்ல நினைத்தாலும் அடிக்கடி நாக்கு வறண்டு, பேச்சைத் தடைப்படுத்தியது. இடையிடையே நீரைப் பருகியவாறு புலவர் தம் பேச்சை வழங்கினார். சிலப்பதிகார உரையும், பூம்புகார் வரலாறும் ஒளிக்காட்சியாகப் பதிவாயின. ‘நயாகராஅருவிபோலப் பொங்கிவர வேண்டிய பேச்சு இப்பொழுது, சிற்றூர் ஓடைபோலச் சிறுத்து அமைந்ததைப் புலவரே ஒத்துக்கொண்டார். இந்த அளவாவது கிடைத்ததே என்று நான் ஆறுதல் பெற்றேன்.

புலவர் நா. தியாகராசன் பூம்புகாருக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ள மேலப்பெரும்பள்ளம் ஊரைச் சார்ந்த பெருநிலக்கிழார் மரபினர். மேலப்பெரும்பள்ளம் என்னும் இவ்வூர் திருவலம்புரம் என்னும் பெயரில் சமயவாணர்கள் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. அருளாளர்களால் பாடல்பெற்ற பெருமைக்குரியது இவ்வூர். புலவர் நா. தியாகராசனுக்கு அமைந்த மரபுவழிச்செல்வ வளத்தால் ஊரில் உள்ள அனைவரின் மதிப்புக்கும் உரியவராக விளங்குபவர். இளமைக்காலம் முதல் சிலப்பதிகாரத்தில் நல்ல புலமையும், பயிற்சியும் கொண்டவராக விளங்கி, சிலப்பதிகார அறிஞர்களை அழைத்துப், பூம்புகாரில் சிலப்பதிகாரத் திருவிழாக்கள், ஆய்வரங்குகள், பொழிவுகள் நடைபெற வழிவகுத்தவர். என்.டி. என்று அனைத்து மக்களாலும் அழைத்துப் போற்றப்படும் புலவர் அவர்கள் பேராயக் கட்சியில் ஈடுபாடுகொண்டவர். மூன்று முறை ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றியவர்(1963 முதல் 1973 வரை; மீண்டும் 1983 முதல் 1988 வரை). செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்தவர்.

பூம்புகாரின் சிறப்பினை உலகம் அறிவதற்கு ஆய்வறிஞர்களைத் தொடர்ந்து அழைத்துவந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், வசதிகளையும் செய்து தந்து, பூம்புகார் வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்தவர் நம் புலவர். தூண்டல் இல்லையேல் துலக்கம் இல்லை! இலக்கிய விழாக்களுக்குத் துணை நின்றமை போன்று, பூம்புகாரின் அகழாய்வுப்பணிக்கும், கடலாய்வுப்பணிக்கும் பெருந்துணை செய்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைத் தம் செல்வமாகப் பாதுகாத்து வைத்துள்ளார். புலவரின் தந்தையார் நாகமுத்து படையாட்சி  தம்முடைய இருபதாம் அகவையில்  தென்னாப்பிரிக்கா சென்று பெரும் பொருள் திரட்டியவர்(தென்னாப்பிரிக்கப் போரில் முதல் உயிர்க்கொடை தந்த நாகமுத்து படையாட்சியாரிலும் இவர் வேறானவர்).

நாகமுத்து படையாட்சி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது காந்தியாரின் போராட்டம் வலுப்பெற்று நடந்துள்ளது. சோகன்சுபர்க்கு, கிம்பர்லி போன்ற இடங்களில் கடைகள் வைத்து நாகமுத்து படையாட்சி பெரும் பொருளீட்டி,1930 ஆம் ஆண்டு அளவில் இந்தியா திரும்பினார். மேலப்பெரும்பள்ளத்தில் மிகுதியான நிலங்களை வாங்கி வேளாண்மையில் ஈடுபட்டிருந்தார். நாகமுத்து படையாட்சி மேலப்பெரும்பள்ளத்தை அடுத்துள்ள திருவெண்காட்டில் பிறந்த உதயம் அம்மையாரை மணந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்களுக்கு ஒன்பது மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலில் மூன்று பெண்குழந்தைகள் பிறந்தனர். நான்காவது குழந்தையாகப் புலவர் தியாகராசன் 16.12.1928 இல் பிறந்தவர். அடுத்து மூன்று பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளுமாகப் பிறந்தனர்.

நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தில் தொடக்கக் கல்வியைத் திண்ணைப் பள்ளியில் பயின்றவர். அதனை அடுத்து மேலையூரில் வாழ்ந்த வாஞ்சிநாத ஐயரிடம் மூன்று ஆண்டு பயின்றவர். இப்பள்ளிப் பருவத்தில் சாரணர் படையில் இணைந்து தொண்டாற்றியவர். பள்ளி ஆண்டுவிழாவில் நந்தனார் வேடமிட்டு நடித்தவர். கலையுள்ளமும், உறுதியான உடலும் இவருக்குப் பள்ளி வாழ்க்கையில் கிடைத்தன. யோகப் பயிற்சியிலும் வல்லவராக விளங்கியவர்.

நா. தியாகராசன் மயிலாடுதுறையில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். பள்ளிப்பருவத்தில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளங்கி, இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நினைவுத் தங்கப்பதக்கம், சுழற்கோப்பைகளைப் பள்ளியில் பெற்றவர். தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று, பொதுத்தொண்டிலும், சமூக சேவையிலும் மாணவப்பருவத்தில் ஈடுபட்டவர். பள்ளியில் மாணவர் தலைவராகப் பணியாற்றியவர். இப்பொறுப்புகள் இவருக்குப் பின்னாளில் மக்கள் தொண்டு செய்யும் வாய்ப்பினைத் தந்தன. பள்ளியின் பொன்விழாவுக்குத் திருவனந்தபுரத்தில் திவானாகப் பணியாற்றிய சி.பி.இராமசாமி ஐயரை அழைத்துப் பேசச்செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

மயிலாடுதுறையில் வாழ்ந்த செயபாரதியை நா. தியாகராசன் 27.08.1953 இல் திருமணம்செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டவர். இவர்களுக்கு எழில், பாரி, பார்த்திபன், இராமன் என்ற நான்கு மகன்களும் வாசுகி என்ற ஒரு மகளும் இல்லறச் செல்வங்களாக வாய்த்தனர்.

1957 இல் மாதவி மன்றம் என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழறிஞர்களை அழைத்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியமையால் புலவர்களின் தொடர்பு இவருக்கு அமைந்தது. இதனால் தமிழை முறையாகப் பயின்று பட்டம்பெற விரும்பினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966 முதல் 1968 வரை பயின்று புலவர் பட்டம் பெற்றவர்.

புலவர் நா.தியாகராசன் காந்தியக் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் இன்றுவரை பேராயக் கட்சியில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றிவருபவர். வேளாண்மைச் சங்க ஈடுபாடுகொண்ட இவர் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு உழவர்களின் உரிமை மீட்க சிறைசென்றவர். திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர். புலவர் நா.தியாகராசன் புகைப்படக் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அரிய படங்கள் சிலவற்றை எடுத்துப் பாதுகாத்து வருகின்றார். இவரின் படங்களை அக்காலத்து ஏடுகள் ஆர்வமுடன் வெளியிட்டுள்ளன. கலைக்கதிர் இதழினைத் தொடர்ந்து படிக்கும் பழக்கம் உடையவர்.

புலவர் நா. தியாகராசன் மேலப்பெரும்பள்ளத்தின் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபொழுது ஊருக்கு முதன்முதல் மின்சார வசதி ஏற்படுத்தித் தந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வருதற்குக் காரணமாக இருந்தார். மேலப்பெரும்பள்ளம், சாய்க்காடு பல்லவனீச்சரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோயில்களின் அறங்காவல் குழுத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோயில்கள் இவரால் திருக்குடமுழுக்குக் கண்டன. பல்வேறு ஊர்களில் அமைந்த நூலகங்களுக்கு இவர் உறுப்பினராகவும், புரவலராகவும் விளங்கித் தொண்டுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் திரு. சொக்கலிங்கம் பிள்ளையுடன் இணைந்து மேலையூர் தாசில்பண்ணை கௌரி அம்மாளிடம் பேசி, ஐந்து ஏக்கர் நிலம்பெற்று மேலையூரில் கல்லூரி உருவாகக் காரணமாக அமைந்தவர், கீழ்த்திசைப் பண்பாட்டுக் கல்லூரி என்ற பெயரில் 14 மாணவர்களின் சேர்க்கையுடன் 02.05.1964 இல் தொடங்கப்பட்ட கல்லூரியில் பின்னாளில் ஆண்டுக்கு இருநூறுபேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அன்றைய நாளில் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்பட்டு, பயிற்சிக் கட்டணம் இல்லாமல் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார்க் கல்லூரியாக மிளிர்ந்துள்ள இக்கல்லூரியில் இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இக்கல்லூரி இன்று தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நிருவாகம் செய்யப்படுகின்றது.

புலவர் நா.தியாகராசன் தொடங்கிய மாதவி மன்றத்திற்குத் தமிழறிஞர்கள் மு. வரதராசனார், ..ஞானசம்பந்தன், .பொ.சிவஞானம், மர்ரே எஸ்.இராஜம், எஸ்.சிவபாதசுந்தரம், .தண்டபாணி தேசிகர், குன்றக்குடி அடிகளார், கி..பெ. விசுவநாதம், தீபம் நா. பார்த்தசாரதி, புலவர் கீரன், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், சி.கோவிந்தராசனார், கோ.வி.மணிசேகரன், உள்ளிட்ட இலக்கியவாணர்கள் வருகை தந்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்களான கே.வி.இராமன், சதாசிவ பண்டாரத்தார். முனைவர் மா.இராசமாணிக்கனார், முனைவர் நாகசாமி, முனைவர் நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

புலவர் தியாகராசன் பல்வேறு இதழ்களுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரைந்ததுடன் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். அவ்வகையில் பூம்புகார் வரலாற்று ஆய்வு(1990), கொற்கையும் அயல்நாட்டுறவும்(1993),  பூம்புகாரின் தொன்மை (1967), கணிகையர் (1976), சங்க இலக்கியம் காட்டும் சோழநாட்டில் காவிரிப் பூம்பட்டினம்(2010), கொலைக்களக் காதை, துன்பமாலை, வழக்குரைகாதை (2014), இன்றைய நிலையில் பூம்புகார் - ஒரு வரலாற்றுப் பின்னணி(2014), நாகை மாவட்டத் தொல்லியல் தடயங்கள்(2013) உள்ளிட்ட இவரின் ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

புலவர் நா. தியாகராசன் மூன்று நூல்களை வழங்கியுள்ளார்.

1.பூம்புகார்க் கல்லூரியைத் தொடங்கிவைக்க வந்த மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையார் அவர்களுக்கு மே 1964 இல் வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட The Glori of Kaveripoompattinam
2. பூம்புகார்த் தொழில் மாநாட்டிற்கு வருகைதந்த மத்திய அமைச்சர் மன்மோகன்சிங் அவர்களுக்கு 07.03.1993 இல் வழங்கிய நூல் Historical  Vestiges at Pumpuhar.
3. பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்.

பூம்புகாரின் சிறப்புரைக்கும் டிஸ்கவரிசேனல் ஒளிபரப்பிலும், பொதிகை தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், தந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும் புலவர் நா. தியாகராசன் கலந்துகொண்டு பூம்புகார் குறித்த தொன்மையைப் பதிவுசெய்துள்ளார்.

புலவர் நா.தியாகராசன் பூம்புகாரை மீட்டுரைக்க வந்த ஓர் ஆய்வறிஞர் என்று துணிந்து கூறலாம்.

நன்றி: கு. சக்திவேல் எழுதிய புலவர் நா. தியாகராசன் நூல்.

புலவர் நா. தியாகராசனுடன், மு.இளங்கோவன்