நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 மார்ச், 2013

பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள்





பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள்

தமிழ்மொழியின் நுட்பங்களை உணர்ந்தவர்கள் மிகச் சிலராகவே உள்ளனர். தமிழின் ஒலிப்புமுறைகள், சொல்புணர்ச்சிமுறைகள், ஒற்றுப்பிழையால் விளையும் ஊறுகள், மொழிபெயர்ப்பில் நேரும் பொருள் குழப்பங்கள் பற்றி நுட்பமாகக் கவனித்து வரும் அறிஞர்களுள் பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இவர்களைப் போலும் செம்மல்கள் தமிழர்களால் கவனிக்கப்படாமல் உள்ளமை தமிழுக்கு நேரும் போகூழாகவே யான் உணர்கின்றேன்.

யான் வேலூர் மாவட்டம் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றியபொழுது அவ்வப்பொழுது விரும்பிச் சென்று சந்தித்து உரையாடும் பெருமகனார் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களாவார். வேலூரில் அவர்தம் இல்லம் செல்லும்பொழுதெல்லாம் பேராசிரியர் அவர்கள் அன்புடன் விருந்தோம்பி, மொழி, இலக்கியம் பற்றி நெடுநாழிகை உரையாடுவார்

. “அருட்பெருஞ்சோதி” என்று எழுதாமல் “அருட்பெருஞ்ஜோதி” என்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். ஆங்கிலத் தாக்கம் தமிழில் பொருள்மாற்றத்தை எவ்வாறு உருவாக்கிவிட்டது என்று கூறி ஒரு நிமையத்தில் பத்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார். மொழியின் இயக்கத்தை இந்த அளவு நுட்பமாகக் கவனித்து வருகின்றாரே என்று வியப்பேன். இவர்களிடம் ஆங்கில மரபுகளை அறியலாமே என்று ஒவ்வொருநாளும் நினைப்பேன். இந்த நொடிவரை அது கைகூடாமல் உள்ளது.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் வேலூர் வள்ளலார் நகர் பகுதியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். பலவாண்டுகளாக மூச்சுநோயிலும், இருமல் நோயிலுமாகத் துன்பப்படுபவர். ஆயினும் தமிழாய்விலோ, மொழியாய்விலோ தொய்வில்லாமல் பணியாற்றுகின்றார். இவர்களைப் போலும் உண்மையான மொழியறிஞர்களால்தான் தமிழ்மொழி வாழ்ந்துகொண்டுள்ளது. தமிழாய்வுகளும் தொடர்ந்துகொண்டுள்ளன.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களுடன் பலவாண்டுகள் பழகியவன் யான். புதுச்சேரிக்குப் பணிமாற்றம் அமைந்து பிரிந்துவந்த பிறகும் அச்சான்றோருடன் மின்னஞ்சலில் தொலைபேசியில் தொடர்பில் இருந்து நலம் வினவி மகிழ்வேன். என்னைப் போலும் பலர் அவரின் தமிழ், ஆங்கிலப் புலமையை அறிந்துள்ளனர். தத்தம் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டுள்ளனர்.


பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் தம் துணைவியாருடன்

மு.இளங்கோவன், பேரா.கா.பட்டாபிராமன்
வட தமிழகத்தின் பலபகுதிகளில் அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ்வாழ்க்கையை அறிவதற்கு மீண்டும் நேற்று(02.03.2013) எனக்கு வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் இலக்கியப் பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கா. பட்டாபிராமன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒன்னுபுரம் என்னும் ஊரில் 01.02.1939 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. காளிங்கராயன் - சுப்புலட்சுமி ஆவர். தமிழில் முதுகலை(1959), பி.டி(1960), எம்.பில்(1980) பட்டங்களைப் பெற்றவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பெருமைக்குரியவர். அப்பொழுதே பல ஏடுகளில் எழுதத் தொடங்கினார்.

1960-65 இல் சென்னை எழும்பூர் அரசு பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.

1965-71 இல் சேலம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். 1971-80 இல் கிருட்டிணகிரி கல்லூரியில் பணிபுரிந்தவர். 1981-82 இல் ஆத்தூர் கல்லூரியில் பணிபுரிந்தவர். 1982-1997 இல் திருவண்ணாமலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 2000-2001 இல் செங்கம் அருண்கிருஷ்ணா கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.

கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் இவரின் முதல் படைப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மொழித்திறன், அலுவலக மொழிபெயர்ப்பு ஏடுகள், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் முதலியன வெளிவந்தன. மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப  மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு ஆகிய நூல்களையும் வரைந்துள்ளார்.

2002 இல் வெளிவந்த ஒற்று மிகல்-மிகாமை விதிகளும் விளக்கமும் என்ற நூல் பத்தாண்டுகள் முயன்று உழைத்துப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மெய்ப்புத் திருத்தக்கலை, திருக்குறள் மனப்பாடப் பதிப்பு, தமிழ்நடை உள்ளிட்ட நூல்களை விரைவில் அச்சிடப் பேராசிரியர் அவர்கள் முயன்றுவருகின்றார்.

பலவாண்டுகளுக்கு முன்பே கணினியை இயக்கப் பழகித் தம் நூல்களைப் பிழையின்றித் தட்டச்சிட்டு வெளியிடுவதுடன் பிறர் நூல்கள் வெளியிடவும் துணைநிற்கின்றார். மற்ற நண்பர்களுக்காக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுப் பல நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

பேராசிரியரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தக்கன:

  1. கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் (1982)
  2. மொழிபெயர்ப்பு நுட்பங்கள் (1994)
  3. ஒற்றுமிகல் மிகாமை விதிகளும் விளக்கமும்
  4. தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பீர்(Learn English Through Tamil) 2008
  5. மொழிபெயர்ப்புக்கலை
  6. மொழிப்பயன்பாடு
  7. மயங்கொலி அகராதி

தமிழ் மொழிப் பயிற்சி ஏடுகள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.














பேராசிரியரின் தொடர்புமுகவரி:

பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள்
ஜி 55,பூங்கா நகர், வள்ளலார்,
வேலூர்- 632 009

4 கருத்துகள்:

vimal சொன்னது…

“அருட்பெருஞ்சோதி” என்று எழுதாமல் “அருட்பெருஞ்ஜோதி” என்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். "
ஐயாவின் தமிழ் மொழி பற்றுக்கு சிறந்த உதாரணம் . நன்றி பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களே .

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் பின்வரும் மடலை என் தனி மினஞ்சலுக்கு அனுப்பியிருந்தார்.

// My dear Dr.Mu.Ilango, I am extremly happy to receive U. Some years back, I foretold that U are going to be one of the pillars of Tamil. That has become an understatement! U are one of the strongest and main pillars of Tamil. Everybody who knows U , will be proud of you.Your parents, teachers ,( who taught U from I class to research degree) friends, colleagues,relatives, students and even your neighbours will feel very proud of U Dr. Mu.Va led the Tamilians in 1940-50. Now U are leading the tamilians in 2000-50.
I saw your email, but the website is prevented from opening. Operation is aborted. So I have to go to a browsing centre. But I am not doing well. Almost bedridden for the past four days.
However I thank U very much for the extreme affection shown to me. Though U have reached a very high position, U remain as humble as in the past! This is a rare quality that can be seen in a very few people, perhaps one in a crore//

அபிஉஷா சொன்னது…

என்னுடைய பேராசிரியரைப் பற்றிப் பல ஆண்டுகளுக்குப் பின் நான் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக
மிக்க நன்றி!

அபிஉஷா சொன்னது…

முனைவர்.மு.இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம். என்னுடைய பேராசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!