வியாழன், 30 ஜூன், 2011
உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்…
புதன், 29 ஜூன், 2011
பாஸ்டன் செலவு…
நான் பாஸ்டன் என்ற நகருக்குச் செல்வதால் உள்ளூர் வானூர்திகளில் மிகைச்சுமை கூடாது என்று என் ஒரு பெரும் பையைத் திரு. முத்து அவர்களின் இல்லத்தில் வைக்கும்படியும் மீண்டும் நான் அவர்கள் வீட்டிற்கு வருவதால் அங்கு அதனை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்ல இயலும் என்றும் மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களிடம் வேண்டிக் கொண்டேன். அதன்படி பின்னர் ஐயா அவர்கள் முத்து அவர்களின் இல்லத்தில் என் பையைச் சேர்த்ததை அறிந்தேன்.
மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்கள் வானூர்தி புறப்படவும், அடுத்த இடம் நோக்கிச் செல்வதற்குள் நடு இரவு ஆகும் என்றும் ஓர் இந்திய உணவகத்தில் உண்ணுவதற்கு அழைத்துச் சென்றார்கள். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து சேர்ந்தோம். எனக்குரிய செலவுத்திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்டோம். என் செலவு உறுதிப்படுத்தப்பட்டது. ஐயாவிடம் பிரியாத விடைபெற்றேன். முன்னாளில் என் ஆய்வுப் பணிக்கு உதவியும், இப்பொழுது ஒரு வரவேற்பு நல்கியும் தங்குவதற்கு உதவியும் துணைநின்ற மருத்துவர் சித்தானந்தம்-முனைவர் குணா இணையர் என் வாழ்நாளில் என்றும் நினைக்கத்தகுந்த செம்மல்களே ஆவர். அவர்களுக்கு நன்றி கூறி வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன்.
நம் ஊர் அன்பர்கள் பாதுகாப்பு ஆய்வு குறித்து எனக்குப் பல முன் நிகழ்வுகளை நினைவூட்டி அச்சமூட்டினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல் எத்தகு இடையூறும் இல்லாமல் என் பாதுகாப்பு ஆய்வு நிறைவுற்றது. எங்கள் வானூர்தி புறப்படும் வாயில் அருகில் வந்து வானூர்தி வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன். வானூர்தி நிலைய அதிகாரி ஒர் அம்மையார் கனிவுடன் மறுமொழி கூறினார். அருகில் இருந்த ஒரு தம்பி அவரும் பாஸ்டனுக்கு வரும் வானூர்தியில் செல்ல உள்ளதை அறிந்து அவரிடம் எனக்கு வானூர்தி வந்ததும் நினைவூட்டும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் உதவினார்.
குறித்த நேரத்தில் வானூர்தி வந்தது. சிறிது நேரத்தில் நாங்கள் வானூர்தியில் அமர்வதற்கு இசைவு தந்தனர். ஒருவர் பின் ஒருவராகச் சென்று அமர்ந்தோம். ஒருவர் செல்லும் வரை காத்திருந்து மற்றவர் செல்வதும், சிறு குறைபாடுகள் நேர்ந்தால் மனமுருகி வருத்தம் தெரிவிப்பதும் அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடங்கள். வானூர்தியில் எனக்கு இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். நடுவில் நான் அமர்ந்திருந்தேன். இடப்பக்கம் இருந்தவர் தேர்வுக்குப் படிப்பவர்போல் படிப்பதில் கவனம் செலுத்தினார். இன்னொருவர் இளைஞர். அமர்ந்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். அவர்க்குச் சிற்றுண்டி உண்ணக்கூட விருப்பம் இல்லை போலும்!.
நான் வானூர்திப் பணியாளர் தந்த சிற்றுண்டியையும் பழச்சாறையும் அருந்தினேன். மெதுவாகப் பத்து மணித்துளிகள் கண்ணயர்ந்தேன். விழித்த சிறிது நேரத்தில் பாஸ்டன் வானூர்தி நிலையத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தமை நினைவுக்கு வந்தது. சிறிது நேரத்தில் எங்கள் வானூர்தி தரையிறங்கியது. அனைவரும் முறையாக இறங்கி வெளியேறினோம். செலவு மேற்கொள்வோர் பொருள்கள் எடுக்கும் இடத்தில் நண்பர் பாஸ்டன் பாலா காத்திருந்தார். மிக எளிதாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் வெளியேறி மகிழ்வுந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கொருவர் நலம் வினவியபடியே வண்டியை அடைந்தோம்.
வண்டியில் ஏறி அமர்ந்த பிறகு மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்துவிட்டேன் என்று சொல்ல நினைத்தேன். என் கைப்பையை வண்டியின் பின்புறத்தில் வைத்து முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அந்தப் பையில்தான் தொலைபேசி எண்கள் இருந்தன. மீண்டும் இறங்கி அந்தத் தாளினை எடுத்துக்கொண்டு மீண்டும் பையை இருந்த இடத்தில் வைத்து வண்டியை எடுத்துக்கொண்டு வந்தோம்.
வண்டியில் அமர்ந்த இருவர் மீண்டும் வண்டியை விட்டு இறங்கி ஏதோ பொருள்களை எடுப்பதும் பேசுவதும் மீண்டும் வைப்பதுமாக இருப்பதைத் தொலைதூரத்தில் காணொளிக் கருவியால் கண்டுணர்ந்த காவலர்களின் உற்றுநோக்கலுக்கு எங்கள் வண்டி உள்ளாகியதைப் பின்னர்தான் உணர்ந்தோம். அதன் அறிகுறியாக எங்கள் வண்டியை நோக்கிக் காவலர் ஒருவர் முன்னேறி வந்து வண்டியில் உள்ளவர்கள் அதன் உரிமையாளர்களே என்று நினைத்து எங்களை ஒன்றும் கேட்காமல் நின்றுகொண்டிருந்தார். அமெரிக்கக் காவல்துறையின் நுண்ணறிவை வியந்தேன்.
மகிழ்வுந்தில் இரண்டு மணி நேரத்தில் பாலா இல்லம் அடைந்தோம். இருவரும் மனம் திறந்த தமிழ் வலைப்பதிவு, இணையத்துறை வளர்ச்சி பற்றி உரையாடியபடி அவர் வீடு வந்து சேர்ந்தோம். அவர் குடும்பத்தார் உறங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு எம்.ஐ.டி., ஆர்வர்டு பல்கலைக்கழகங்களைப் பார்வையிடச் செல்வது என்று உறுதிசெய்துகொண்டு எனக்கு அவர்கள் தந்திருந்த அமைதியான அறையில் கண்ணயர்ந்தேன்.
திங்கள், 27 ஜூன், 2011
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின்(பெட்னா) தமிழ் விழா 2011


சனி, 25 ஜூன், 2011
கொலம்பியாவில் வரவேற்பு…





வியாழன், 23 ஜூன், 2011
அமெரிக்காவின் தேசிய இயற்கை வரலாற்றுக் காட்சியகம்…

நிலவுக்கற்கள்,கருவிகள்
21.06.2011 பிற்பகல் திரு.கோபி அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு போய் தலைநகர் வாசிங்டன்னில் உள்ள இயற்கை வரலாற்றுக் காட்சியகத்தைப் (NATIONAL MUSEUM O NATURAL HISTORY) பார்க்கும்படி மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். பகலுணவுக்குப் பிறகு திரு. கோபியின் வருகைக்குக் காத்திருந்தேன். தம் மகன் ஆதித்தனை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திவிட்டு வரும்பொழுது போக்குவரவு நெருக்கடியால் காலத்தாழ்ச்சியாக வருவதைத் தொலைபேசியில் கோபி சொன்னார். சொன்னபடி சிறிது நேரத்திற்குள் வந்தார்.
அவர் மகன் ஆதித்தியன் அரசுப்பள்ளியில் படிப்பதாகவும் அவனுக்குரிய பொத்தகச் சுவடிகள் அரசால் தரமாகத் தயாரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளதாகவும் இருப்பில் இருந்த சில சுவடிகளைக் காட்டினார். குழந்தைகளின் படங்கள், வகுப்புகள் எனப் பல விவரங்கள் அந்தச் சுவடியில் இருந்தன. பெற்றோர்கள் விரும்பினால் மட்டும் அந்தப் புத்தகத்தில் மாணவக் குழந்தைகளின் படம் இடம்பெறுமாம். பாதுகாப்பு கருதுபவர்கள் படத்தை வெளியிட விரும்பமாட்டார்களாம். இதுவும் நம் நாட்டில் மேற்கொள்ளத்தக்க ஒரு நற்பழக்கமாகவே கருதுகின்றேன்.
திரு.கோபியின் மகிழ்வுந்து வாசிங்டன் நகர எல்லையை அடைந்தது. பாதை மாறி ஒரு வட்டம் போட்டு உரிய இடத்துக்கு வந்தோம். மலேசியா கோலாலம்பூரில் நடு இரவு ஒன்றில் நானும் முரசு.நெடுமாறன் ஐயா அவர்களும் பாதைமாறி ஒருமணி நேரத்துக்கு மேலாகச் சுற்றியது நினைவுக்கு வந்தது.
அமெரிக்க இயற்கை வரலாற்றுக் காட்சியகம் பரந்துகிடந்தது. எங்கும் குளிரூட்டப்பட்ட அரங்குகள். நாங்கள் அங்கு இயற்கை குறித்த படம் பார்ப்பதற்குரிய நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டோம். சான்சன் இமேஜ் திரையரங்கில் படம் 5.15 மணிக்கு என்றனர். கோபி அக்காட்சியகத்தின் உறுப்பினர் ஆனார். உறுப்புக்கட்டணம் 6.50 டாலர். குறித்த நேரத்தில் படம் ஓடியது. அனைவரும் அமைதியாக அமர்ந்து பார்த்தனர்.
கென்யாவில் வளர்க்கப்படும் குரங்குகள், யானைக்குட்டிகள் குறித்த விவரிப்பும் காட்சியும் சிறப்பாக இருந்தன. குரங்குகள் மரத்தில் விளையாடுவது மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. இயற்கை சார்ந்த தொலைக்காட்சிகளை விட இக்காட்சிகள் சிறப்பு. முப்பரிமானக் காட்சி என்பதால் கண்முன் காட்சிகள் நடப்பது போன்ற உணர்வைப் பெற்றோம். பையன் ஆதித்யன் தம் முகத்தை நோக்கிக் குரங்குகள் வருவதாக உணர்ந்து அதனைத் தாவித் தாவிப் பிடித்தபடி இருந்தான். யானைகளும், குரங்குகளும் பழக்கத்துக்கு உட்பட்டுப் பாசத்துக்கு ஏங்கிய காட்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தோம். படம் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடியிருக்கும். மெதுவாக வெளியே வந்தோம்.

காட்சிக்கூட முகப்பில் உயிரோட்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானை
மரம், செடி, கொடி, பூ, புழு, பூச்சி, மண், மலை என்று உலகின் அனைத்து இயற்கை வளர்ச்சிகளையும் படிப்படியாகக் கண்டு மகிழ்ந்தோம். மாந்தனின் அத்தனை உறுப்புகளையும் பிரித்துப் போட்டு வைத்துள்ளனர். தென்னாப்பிரிக்கர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் தனிக்காட்சிக் கூடங்களும் இருந்தன. தங்கம், வெள்ளி குறித்த காட்சிகளையும் பார்த்தபடி வந்தோம். வைரத்தின் அனைத்து வகைகளையும் கண்ணாரக் கண்டு அதன் ஒளிப்பு அழகை நேரில் கண்டு வியந்தேன். பாதுகாப்பு இந்தப் பகுதியில் மிகுதியாக இருந்தது. எங்கும் வெளிச்சமும் வளிக்கட்டுப்பாடும் இருந்தது. தகுந்த அறிவிப்புப் பலகைகள் இருந்தன. யார் உதவியும் இல்லாமல் யாவற்றையும் பார்க்கலாம். கண்ணாடிக் கூண்டுகளில் பொருள்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுகின்றன. போதிய விளக்கங்களும் உள்ளன.
நெப்போலியன் தன் காதல் மனையாளுக்கு வழங்கிய வைரமாலைகள் ஆயிரம் கதைகளைத் தாங்கிக்கொண்டு அனைவரின் பார்வைக்கும் விருந்தாக உள்ளது. இந்தியா, பிரேசில் பகுதிகளில் கிடைக்கும் வைரங்களும் காட்சிக்கு இருந்தன. தங்கப் பாலங்களைப் பார்க்கமுடிந்தது. இரும்புப் பாறைகளையும் பார்க்க முடிந்தது.
விண்வெளிக்குச் சென்று நிலவிலிருந்து கொண்டுவந்த மண்ணையும் அதனை எடுக்கப் பயன்படுத்திய கருவிகள், பெட்டிகள், உறைகளையும் பாதுகாப்பது கண்டு வியந்தேன். இந்தப் பகுதியை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாலை 7.15 மணிவரை காட்சியகத்தைப் பார்த்துக் கடைசியாக நாங்கள் வெளியே வந்தோம்.

விண்கல் அருகில் மு.இளங்கோவன்,ஆதித்தியன்

முதல் நெப்போலியனின் காதல் மனையாள் அணிந்த வைரமாலை

வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)

வைரமாலைகள்(தாய்க்குலங்களின் கனிவான கவனத்திற்கு: பார்க்கமட்டும்,கேட்காதீர்கள்(!)
இரவு மருத்துவர் சித்தானந்தம் அவர்களின் இல்லம் வரும்பொழுது நல்ல தூக்க நிலையில் இருந்தேன். நம் நாட்டு நிலையிலிருந்து என் உடல் விடுபடாததுதான் இச்சோர்வுக்குக் காரணம். கோபியிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டில் படுக்கும்பொழுது இரவு 1 1 மணி இருக்கும்.
புதன், 22 ஜூன், 2011
மேரிலாந்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அழகு…

பொட்டாமாக்கு ஆறு(படங்களைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)
அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் அருகில் ஓடும் பொட்டாமாக்கு ஆறு மேரிலாந்து வழியாகப் பல கல்தொலைவு ஓடுகின்றது. ஒருகரையில் மேரிலாந்து மாநிலமும், இன்னொரு கரையில் வெர்சீனியாவும் இருப்பது சிறப்பு. மருத்துவர் சித்தானந்தம் ஐயா அவர்களின் இல்லத்திலிருந்து கால்மணி நேரத்தில் பொட்டாமாக்கு ஆற்றின் அருவியைக் காணச் சென்றோம். இன்று மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் பணிக்குச் சென்றதால் நானும் அம்மா முனைவர் குணா அவர்களும் மகிழ்வுந்தில் அருவிக்குச் சென்றோம்.
முனைவர் குணா அவர்கள் புகழ்பெற்ற புற்றுநோய் குறித்த ஆய்வாளர். பல ஆய்வுத்தாள்களை வழங்கியுள்ளார். இருவரும் அவர்களின் கல்வி,ஆய்வு குறித்து உரையாடியபடி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நெடிதுயர்ந்த மரங்கள். ஆள் அரவமற்ற காட்டின் உள்ளே "வெயில் நுழைவு அறியாத குயில்நிழல் பொதும்பராக" அந்தத் தண்ணஞ்சிலம்பு புலப்பட்டது. சங்கப்பனுவலின் பல காட்சிகளை இந்த இடத்தில் இயைத்துப் பார்த்தேன். சிலம்பில் இடம்பெறும் “மருங்குவண்டு சிறந்தார்ப்ப” என்னுமாறு போல இரண்டு பக்கமும் அடந்த சோலை நடுவே எங்கள் மகிழ்வுந்து சீறிப்பாய்ந்தது.
ஒவ்வொரு இடத்திலும் சாலையில் ஊர்தி ஓட்டுவோர் பின்பற்ற வேண்டிய விதிகளைக் கடைப்பிடித்தபடி செல்வதால் இங்குத் தேவையற்ற நேர்ச்சிகள் தடுக்கப்படுகின்றன. அனைவரும் மார்பு வார் அணிந்து கொள்கின்றனர். நிறுத்தத்தின் எதிரில் வண்டிகள் இல்லை என்றாலும் தங்களுக்கு உரிய கட்டளைகள் வரும்வரை நின்றே செல்கின்றனர். தவறுதலாக வண்டி ஓட்ட நேர்த்தால் தங்கள் தவறுக்கு மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்கின்றனர். யாரேனும் முறையற்று வண்டி ஓட்டினால் ஒலி எழுப்பி அவரை எச்சரிக்கின்றனர். இந்த ஓர் ஓலி நம் சென்னை மக்களின் ஒருமணி நேர ஏச்சு,பேச்சுக்குச் சமமாம்.
நம் ஊரின் பேருந்தில் ஆண் பெண் இருப்பது நினையாமல் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் வல்லடி வழக்கிட்டு அவையல் கிளவிகள் மொழிவது எம் செவிப்பறைகளில் நினைவாக ஓடி நின்றது. இத்தகு உயர்பண்புகள் நம் தமிழகத்து இருபால் மக்களிடம் என்றைக்கு வாய்க்குமோ என்று நினைத்தபடி மகிழ்வுந்தில் அமர்ந்து இயற்கை அழகைக் கண்டவாறு சென்றேன். பொட்டமாக்கு அருவிப்பூங்காவை அடைந்தோம். உரிய இடத்தில் முனைவர் குணா அவர்கள் மகிழ்வுந்தை நிறுத்தினார்கள். நடந்தபடி சென்றோம்.
எங்கும் ஞெகிழித்தாள்களோ, மதுப்புட்டிகளோ, வெற்றிலைப் பாக்கு எச்சில்களோ, உணவுப் பண்டங்களின் எச்சங்களோ இல்லை.குப்பைக்கூடைகளில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தவறினால் தண்டம்தான். பேருந்து ஓட்டத்தில் எச்சிலைத் துப்பி, தண்ணீரை ஊற்றிக் கைகழுவிப் பலருக்கும் இடையூறு ஏற்படுத்திவிட்டுத் தட்டிக்கேட்டவர்களை இழுத்துப் போட்டு அடித்துப் பேருந்துப் பயணத்தை நிலைகுலையச்செய்த என் தமிழ்நாட்டு உறவினர்களுக்கு எந்தக் கல்விக்கூடத்தில் இந்தப் பாடத்தைப் பயிற்றுவிப்பது என்ற கவலையே எனக்கு ஏற்பட்டது.
பொட்டாமாக்கு ஆற்றை ஓட்டி ஒரு வாய்க்கால் ஓடுகின்றது. அது செசாபேக்கு-ஓகையா வாய்க்கால் (CHESAPEAKE AND OHIO CANAL) என்று அழைக்கப்படுகின்றது. இந்த வாய்க்கால் 1917 முதல் மக்கள் படகுப்பயணம் செய்ய உதவியுள்ளதை அங்குள்ள குறிப்புகள் வழியாக அறிந்தேன். 1828 சூலை 4 இல் இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.
பொட்டமாக்கு ஆற்றின் நீரும் பிறவகை நிலத்துநீரும் வந்து நெடுந்தொலைவு ஓடும்படி வாய்க்காலை இயற்கையாக அமைத்துள்ளனர். அந்த வாய்க்காலில் படகோட்டம் நடக்குமாம். நெடுந்தொலைவுக்குப் படகில் பயணம் செய்ய இந்த வாய்க்காலை அங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களாம். இரண்டு பக்கமும் வாய்க்காலின் கரையில் உந்து வண்டிகள், மதிவண்டிகள் செல்ல வாய்ப்பான சாலைகள் உள்ளன.தொடக்க காலத்தில் படகை நீர்நிலையில் நிறுத்திக் கரையில் குதிரையில் கயிறுகட்டிப் பிணைத்து குதிரை நடக்கும் வேகத்துக்குப் படகு சென்றுள்ளது. இடையில் உள்ள மலைக்குகளிலும் அந்த வாய்க்கால் நுழைந்து செல்கிறது.அங்கும் படகு இழுக்கும் குதிரை செல்ல பாதை இருந்துள்ளதைப் படக்காட்சியில் கண்டு மகிழ்ந்தேன்.

பொட்டாமாக்கு ஆறு

பொட்டாமாக்கு ஆறு

பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்(படகு பயன்பாட்டுக்கு)
இளநங்கையர்கள் சிலர் ஆடவர்களுடன் பேசி மகிழ்ந்தபடி செல்கின்றனர். உள்நாட்டுச் சுற்றுலாச்செலவர்களும் பலர் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பாடங்களை இயற்கைச்சூழலில் கற்பிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களும் தங்களுக்குரிய உணவு, எழுதுபொருள்கள், பாடப்பொத்தகங்கள் கொண்டு வந்து தங்கள் பணிகளை ஆர்வமுடன் செய்தனர். குழுச்செலவினர் சிலர் உணவுப்பொருட்களுடனும், மதுவிருந்துக்குரிய பொருட்களுடனும் வந்து பொழுதைக் கழிக்கின்றனர்.
நாங்கள் சென்ற சமயம் மராமத்து வேலைகள் நடந்துகொண்டிருந்தன. நம் ஊர் ஆசாரியார்களைப் போலச் சிலர் தச்சுவேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இங்கு இரும்பைவிட அதிகம் மரத்தைப் பயன்படுத்தி மதகு வேலைகள் செய்துள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த ஒரு படகினை மறித்து நிறுத்தியிருந்தனர். வாத்துகள் பல அன்னப்பறவைபோல் ஓய்யார உடலைசைத்து நகர்ந்து நீந்தின. சிட்டுக்குருவிகள் அமெரிக்கா முழுவதும் காணக்கூடியதாக உள்ளன. சில சிட்டுக்குருவிகளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். வாசிங்டன்னிலும் பல இடங்களில் குருவிகளைப் பார்த்தேன்.

மரவேலைப்பாடுகளுடன் மதகு(பொட்டாமாக்கு ஆற்றின் வாய்க்கால்)

நீரைத் தடுத்து நிறுத்தும் படகு

பொட்டாமாக்கு ஆற்றின் கரையில் மு.இளங்கோவன்
முனைவர் குணா அம்மா அவர்கள் இங்குள்ள பலர் நடைப்பயிற்சிக்கு இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டார்கள். பொட்டாமாக்கு ஆற்றறில் சிறிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் ஆற்றின் இயற்கைச் சீற்றத்துக்குக் குறைவில்லை. நெடுமரங்கள் பல இயற்கையாக முறிந்து இழுத்துவரப்பட்டு அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. நம்மூர் என்றால் இரவோடு இரவாக அள்ளிச் சென்றிருப்பார்கள். இயற்கையைப் போற்ற வேண்டும் என்பதில் அமெரிக்க மக்கள் மிகவும் கவனமாக உள்ளனர். அங்குமிங்கும் நடந்து, ஆற்றையும் அதிலிருந்து வீழ்ந்து செல்லும் அருவியையும் கண்ணாரக் கண்டோம். அங்குள்ள காட்சியகத்தையும் கண்டு மகிழ்ந்தோம்.
ஓய்வறைகள், காட்சிக்கூடம், நெறியாளர்கள், காப்பாளர்கள் யாவரும் தத்தம் கடமையைச் சிறப்பாகச் செய்தனர். ஆற்றைப் பற்றியும் வாய்க்காலைப் பற்றியும் பல பயனுடைய தகவல்கள் அடங்கிய குறிப்பேட்டை இலவசமாகத் தந்தனர். பெற்றுக்கொண்டோம். காணொளியில் ஓடும் காட்சிகளையும் பார்த்தோம்.
அடுத்து நாங்கள் மேரிலாந்திலுள்ள நூலகம் ஒன்றைப் பார்வையிட நினைத்தோம். அழகான பெரிய மாளிகையில் நூலகம் கவின்மிகு தோற்றத்துடன் காட்சியளித்தது. அங்குள்ள வண்டிகள் நிறுத்திமிடம் பரந்துகாணப்படுகின்றது. ஆனால் நாங்கள் சென்ற நேரம் நூலகம் மூடியிருந்தது. எனவே எங்கள் மகிழ்வுந்து ஒரு பேரங்காடியை நோக்கித் திரும்பியது.
கடைக்குப் போகவேண்டும் என்றால் யாவரும் புதுவை- கடலூர் வரை உள்ள தொலைவு பயணம் செய்து தங்களுக்கு உரிய கறிகாய்களை, மளிகைப்பொருட்களை வாங்கி வருகின்றார்கள். அடுப்பில் ஏனங்களை வைத்துவிட்டு தேங்காய் வேண்டும், மாங்காய் வேண்டும், எண்ணெய் வேண்டும், தொன்னை வேண்டும் என்று குறிப்பிடும் நம் மனையுறை மகளிரை நினைத்துப் பெருமூச்சுவிட்டேன்.
MACYS HOME என்ற பேரங்காடிக்கு நாங்கள் சென்றோம். மெத்தை, தலையணை, போர்வை, துணிமணிகள், குளிர்ப்பெட்டிகள், ஏனங்கள், யாவும் கடல்போன்ற அரங்கில் காட்சிக்கு இருந்தன. அடுத்த பகுதிக்குச் சென்று பார்த்தேன். கணக்கற்ற மின்னணுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. அண்மையில் வந்த கணினிகளைப் பார்வையிட வேறொரு அரங்கிற்குச் சென்றேன். விலை எல்லாம் ஒன்றரை இலக்கத்தைத் தாண்டியிருந்தது. என் பயணத்திட்டத்தின் செலவே அவ்வளவுதான் என்று நினைத்தபடி வேறு சில அரங்குகளைப் பார்த்துவிட்டு பகல் ஒருமணிக்கு ஐயா சித்தானந்தம் இல்லத்துக்கு வந்தோம்.
செவ்வாய், 21 ஜூன், 2011
தமிழ் இணையமாநாடு நிறைவுநாளும் அமெரிக்கச் சுற்றுச் செலவின் தொடக்கமும்…











கென்னடி சதுக்கம் மற்றும் போர்வீரர்கள் நினைவிடத்தில் மு.இளங்கோவன்


ஞாயிறு, 19 ஜூன், 2011
இணையமாநாட்டின் இரண்டாம்நாள் நினைவுகள்…

"வெண்பாநிரல்" தந்த பொறியாளர் மு.சித்தநாத பூபதி அவர்கள்
18.06.2011 காலை எட்டு முப்பது மணிக்கு விடுதியிலிருந்து புறப்பட்டோம். மாநாட்டு அரங்கிற்கு ஒன்பதுமணி அளவில் சிற்றுந்து சென்றது. முதல் அமர்வு காலையில் தனித்தனி அமர்வுகளாக நடந்தன. இரண்டு இடங்களில் நடந்த அமர்வுகளில் நாங்கள் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் தலைமையில் மூவர் கட்டுரை வழங்கினோம். இன்னொரு அரங்கில் நடந்த நிகழ்வுபற்றி அறியமுடியவில்லை. நண்பர் இல.சுந்தரம் அவர்கள் அந்த அரங்கில் கட்டுரை வழங்கியதைப் பின்பு அறிந்தேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாலா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த மூன்று கட்டுரைகளை வழங்கினார், தமிழ்க்கதை ஒன்றைக் கொடுத்தால் தானே அதற்குரிய படங்களை வரைந்துகொடுக்கும் மென்பொருள் உருவாக்கம் பற்றி அவையில் சொன்னதும் அனைவரும் மகிழ்ந்தோம். ஆய்வாளர் பியூலா அவர்கள் செய்திகளுக்குரிய உணர்வுசார்ந்த படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் பற்றிப் பேசினார்.
நான் இணையவழித் தமிழ்ப்பாடங்கள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். முன்னாள் துணைவேந்தர்கள் மு.ஆனந்தகிருட்டினன், மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களும், பன்னாட்டுக் கணினி, இணைய ஆர்வலகளும் பார்வையாளர்களாக இருந்தனர். என் கட்டுரையைப் படிக்கத்தொடங்கியபொழுது நண்பர் சங்கரபாண்டியும், மருத்துவர் சித்தானந்தம், குணா அவர்களும் தனித்தனியாக வந்து அரங்கில் அமர்ந்தனர்.மருத்துவர் சோ.இளங்கோவன், பேரா. வாசு உள்ளிட்டவர்களும் அரங்கில் இருந்தனர்.

என் கட்டுரை வழங்கப்பட்டபோது கலந்துகொண்ட அறிஞர்கள்
தேநீர் இடைவேளைக்குப் பிரிந்தோம்.
பிறகு பொது அமர்வு தொடங்கியது. பேராசிரியர் சிப்மன் அவர்கள் தலைமையில் நடந்த பொது அமர்வில் பேராசிரியர்கள் இ.அண்ணாமலை, வாசு, முருகையன், இராதாசெல்லப்பன் கட்டுரை வழங்கினர். அண்ணாமலை, வாசு கட்டுரை பேச்சுத் தமிழ் குறித்து அமைந்ததால் உரையாடல் விறுவிறுப்பாகச் சென்றது.
அதன்பிறகு உணவுக்குப் பிரிந்தோம்.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனி அமர்வுகள் நடந்தன. தமிழகத்தின் இனிய நேரு கட்டுரை படித்தார். வேறொரு அரங்கில் இருந்ததால் நான் செல்லமுடியவில்லை. இதன் இடையே திருக்குறள் போட்டி குழந்தைகளுக்கு நடந்தது. பிள்ளைகளும் பெற்றோர்களும் அரங்கில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தமிழ்க்குழந்தைகள் திருக்குறளைச் சொல்ல முயன்ற பாங்கு அறிந்து மகிழ்ந்தேன். திருவாளர் துரைக்கண்ணன் அவர்கள் தம் குழந்தையுடனும் தந்தையாருடனும் வந்திருந்தார். மீண்டும் சந்திக்க நினைத்தோம். இயலவில்லை. மலேசிய அன்பர்களின் கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. இளந்தமிழ் கட்டுரையும் பாராட்டுக்கு உள்ளானது.
சார்சாவிலிருந்து திரு.மு.சித்தநாதபூபதி வந்திருந்தார். முன்பே அறிமுகம் ஆனோம். அவர் கட்டுரை “வெண்பா நிரல்: வெண்பாவிற்கான பொது இலக்கணங்களைச் சரிபார்க்கும் நிரல்” என்ற தலைப்பில் கட்டுரையை வழங்கினார். மிகச்சிறந்த கட்டுரை. தமிழுக்கு ஆக்கமான கட்டுரை.
கட்டடக்கலைப் பொறியாளரான பூபதி அவர்கள் தமிழ் இலக்கணங்களை உள்வாங்கிக்கொண்டு, ஓரளவு தமக்குத் தெரிந்த(அவரே சொன்னது) தொழில்நுட்பத்தைக் கொண்டு இவர் உருவாக்கிய இந்த நிரல் தமிழுக்கு ஆக்கமான நிரல். மைக்ரோசாப்டு எக்செல் தொழில்நுட்பம்கொண்டு இதனை உருவாக்கியுள்ளார். இதனை இன்னும் மேம்படுத்தி வழங்கினால் உலகத் தமிழர்கள் மகிழ்வர். (கோபி, முகுந்து போன்ற கணினித்துறை ஆர்வலர்கள் இவரைத் தொடர்புகொண்டு தமிழுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பது என் கோரிக்கை.)
இதுபோல் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கட்டளைக் கலித்துறைக்கும் நிரல் உருவாக்கினால் அருகிவரும் தமிழ் யாப்பறிபுலவர்களின் எண்ணிக்கையை இவரின் நிரல் சரிசெய்யும்.
காசுகொடுத்தால்தான் நிரல்களை வழங்குவோம் என்று அடம்பிடிக்கும் கணினி ஆர்வலர்களிடமிருந்து வேறுபட்டுத் திருவாளர் பூபதி அவர்கள் இந்த நிரலை அனைவருக்கும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவரைத் தனியே கண்டுரையாடிப் பின்னும் எழுதுவேன். இவரிடமிருந்து தமிழுக்கு இன்னும் எதிர்பார்க்கின்றேன்.
மற்ற அமர்வுகளில் நடந்த கலந்துரையாடல்கள், கட்டுரை வழங்கலில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்தினேன். மாலையில் உத்தமம் உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. கலந்துகொண்டேன். அனைவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு நானும் மருத்துவர் சோம.இளங்கோவன் இணையர், மருத்துவர் சித்தானந்தம் இணையர் ஓர் இந்திய உணவகம் தேடி, இரவு உணவு உண்டு, உரையாடி மகிழ்ந்தோம்.

மரு.சித்தானந்தம், மு.இ, மரு.சோம.இளங்கோவன்,பேராசிரியர் கல்யாணசுந்தரம்
மரு. சோம. இளங்கோவன் ஐயாவையும் அவர்களின் துணைவியாரையும் தொடர்வண்டி நிலையத்தில் விட்டுவிட்டு என்னைக் கொண்டுவந்து அறையில் விட்டு மரு.சித்தானந்தம் அவர்கள் வேறொரு விடுதிக்கு இரவு பதினொரு மணியளவில் சென்றார்.
இன்று(19.06.2011) நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு மருத்துவர் சித்தானந்தம் அவர்களுடன் பென்சில்வேனியா, பிளடல்பியா பகுதிகளைச் சுற்றிப் பார்க்க உள்ளேன். இரவு வாசிங்டன் சென்று திரு. சித்தானந்தம் ஐயா அவர்களின் விருந்தோம்பலில் இருப்பேன்.
இணையவழித் தமிழ்ப்பாடங்கள்

சனி, 18 ஜூன், 2011
தமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டில் முனைவர் மு.ஆனந்தகிருட்டினன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் பொன்னவைக்கோ, முனைவர் தாவூத் அலி
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையமும் உத்தமம் அமைப்பும் இணைந்து நடத்தும் தமிழ் இணைய மாநாட்டில் முதல்நாள் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்குச் சென்றோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் கணினி, இணைய ஆர்வலர்கள் வந்திருந்தனர். கனடாவிலிருந்து செல்வா, மலேசியாவிலிருந்து இளந்தமிழ், பரமசிவம், இலண்டனிலிருந்து சிவா பிள்ளை, சுவிசிலிருந்து கல்யாண், சிங்கப்பூரிலிருந்து சிவகுமாரன், சீதாலெட்சுமி உள்ளிட்டவர்களைக் கண்டு அளவளாவினேன். பேராசிரியர் ஆனந்தகிருட்டினன், பேராசிரியர் பொன்னவைக்கோ உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். உரையாடி மகிழ்ந்தோம். பேராசிரியர் கெரால்டு சிப்மன் அவர்களை முதன்முதலாகக் கண்டு அறிமுகம் ஆனேன். அவருக்கு என் நூல்களை அளித்து மகிழ்ந்தேன். தமிழ் இணைய மாநாடு காலை 9.30 மணியளவில் தொடங்கியது. பேராசிரியர் வாசு அரங்கநாதன், முனைவர் கல்யாண், கவி உள்ளிட்ட அன்பர்கள் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வாசு உத்தமம் அமைப்பைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். முனைவர் கல்யாண் அவர்களும், கவி அவர்களும் அவரவர் சார்ந்த குழுவின் சார்பில் வரவேற்றனர்.
முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பேராசிரியர் ஆனந்தகிருட்டினன் நினைவுப்பரிசு வழங்கல் அருகில் கவி பேராசிரியர் கெரால்டு சிப்மன், பேராசிரியர் தாவூத் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஆனந்தகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஆண்டோபீட்டர் நன்றியுரையாற்றினார். முதல் உரையைப் பேராசிரியர் கெரால்டு சிப்மன் வழங்கினார். அவரை அடுத்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையில் பெங்களூர் பேராசிரியர் ஆ.க.இராமகிருட்டினன் அவர்கள் இசுகைப் வழியாக உரையாற்றினார். அவருடைய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது. பேராசிரியர் கீதா அவர்களின் உரையும் சிறப்பாக இருந்தது. பேராசிரியர் ஆண்டவர், பேராசிரியர் டெனிசு, பேராசிரியர் தாவூத் அலி, டிக்சன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன. பேராசிரியர் டிக்சன் அவர்கள் இணையவழிப் பயிற்றுவித்தல் தொடர்பான கட்டுரையைச் சிறப்பாக வழங்கினார். தமிழ் டைசசுடு நிறுவனத்தின் தமிழ் அறிமுகக் குறுவட்டுகள் அதன் உரிமையாளர் சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. மாலையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர்கள் வழங்கிய இன்னிசை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. இரவு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் பலரும் நகருலா வந்தோம்.