நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

பேராசிரியர் க.ப.அறவாணன் மறைவுபேராசிரியர் ..அறவாணன் 

     புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் முன்னைத் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தரும், தமிழின முன்னேற்றம் குறித்து நாளும் சிந்தித்தவருமான எங்களின் அருமைப் பேராசிரியர் ..அறவாணன் அவர்கள் 23.12.2018(ஞாயிறு) விடியற்காலை 5 மணிக்குச் சென்னை அமைந்தகரையில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

     பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக 1992-93 ஆம் ஆண்டுகளில் அவரிடம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளேன். அவரின் வகுப்பறையில் சிற்றூர்ப்புற மாணவனாக நுழைந்த நான், புதுமையை விரும்பும் மாணவனாகவும் உலகப் பார்வைகொண்ட ஆய்வாளனாகவும் மலர்ந்து, அவர் வழியில் இன்றுவரை உழைத்துவருகின்றேன். என் நூல் வெளியீட்டு விழாவுக்கும் (1995), என் திருமணத்திற்கும் (2002) பேராசிரியர் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து பெருமை சேர்த்துள்ளார்கள். என்னைப் போலும் பல்லாயிரம் மாணவர்கள் அவரால் அறிவுத்தெளிவும், உதவியும் பெற்று, வாழ்க்கையில் முன்னேறியுள்ளோம்.

     பேராசிரியர் க.ப.அறவாணன் 09.08.1941 இல் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர்.  பெற்றோர் பெயர்  பழநியப்பன், தங்கப்பாப்பு அம்மையார். க.ப. அறவாணனின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி எனவும், அருணாசலம் எனவும் அமைந்திருந்தன. பின்னாளில் அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். பிறந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றவர். அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற ஊரில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் (1959) பட்டத்திற்கும், பி.ஒ.எல்(1963) பட்டத்திற்கும் பயின்றவர். முதுகலைப் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில்(1965-1967) பயின்றவர்.

     21.04.1969 இல் பேராசிரியர் தாயம்மாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இவர்களின் இல்லறப் பயனாய் அறிவாளன், அருள்செங்கோர் என்னும் இரு மக்கட்செல்வங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கி, பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வர் பணி ஏற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர் (1970). தென்னாப்பிரிக்கா - செனகால் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக 1977-82 வரை பணிபுரிந்தவர். 1982 முதல் 1987 வரை சென்னை இலயோலா கல்லூரியிலும், 1987 முதல் , புதுவைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1998-2001 வரை துணைவேந்தராகப் பணிபுரிந்தவர். இவர்தம் பணிக்காலத்தில் சமுதாயவியல் கல்லூரி என்பதை நிறுவி, அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெருமைக்குரியவர்.

     இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு தொய்வுற்று இருந்த நிலையில் அதனை மிகப்பெரிய நிலைக்கு உயர்த்தி, தமிழாய்வுகள் சிறக்க வழிசெய்தவர். அறிவியல் தமிழியம், தேடல், முடியும், கொங்கு உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக இருந்து நடத்தியவர்.

     மூத்த பேராசிரியர்கள் வ.ஐ.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பிற்குரிய மாணவராகத் திகழ்ந்தவர். அவர்களின் வழியில் கடுமையாக உழைத்து வாழ்வின் உயர்நிலையை அடைந்தவர். அறுபதிற்கும் மேற்பட்ட அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டவர். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு, படைப்பு இலக்கியம் என்பன இவர் பங்களித்துள்ள துறைகளாகும்.  தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை, தொல்காப்பியக் களஞ்சியம், கவிதை கிழக்கும் மேற்கும், அற்றைய நாள் காதலும் வீரமும், தமிழரின் தாயகம், தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ் மக்கள் வரலாறு, அற இலக்கியக் களஞ்சியம் என்பன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவரின் படைப்பு நூல்களாக "அவள் அவன் அது', "தென்னைமரத் தீவுகளும் தீவோர மனிதர்களும்". "செதுக்காத  சிற்பங்கள்", "சொல்ல முடிந்த சோகங்கள்", "நல்லவங்க இன்னும்  இருக்காங்க", "கண்ணீரில் மிதக்கும் கதைகள்" என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

     தமிழ்நாட்டரசின் திருவள்ளுவர் விருது, தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு உள்ளிட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ், தமிழர் குறித்து உரையாற்றிய சிறப்பிற்குரியவர்.

பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகிற்குப் பேரிழப்பாகும்.

முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!

என்ற கொள்கையுறுதியுடன் வாழ்ந்துகாட்டியவர் க.ப.அறவாணன்.


திங்கள், 17 டிசம்பர், 2018

நினைப்பதற்கு நேரம் இல்லை தங்க. வேல்முருக!


 
கவிஞர் தங்க. வேல்முருகன்

     சிங்கப்பூர் குறித்த உரையாடல் நடக்கும்பொழுது என் உயிர்த்தோழர் முனைவர் இரத்தின. புகழேந்தி அடிக்கடி ஒலிக்கும் பெயர்கள் கவிஞர் தங்க. வேல்முருகன், கவிஞர் தியாக. இரமேஷ் என்பனவாகும். சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குச் சென்றபொழுது முதன்முதல் இவர்களைச் சந்தித்துள்ளேன். முதல்சந்திப்பு ஒரு தென்றல் தழுவி விலகியதுபோல் இருந்தது. அடுத்தடுத்த சிங்கப்பூர்ப் பயணங்களிலும் தங்க. வேல்முருகன், தியாக. இரமேஷ் ஆகியோருடன் அவசர சந்திப்புகள் நிகழும். அதுவும் மின்னல்போல் மின்னும். நின்றுபேச நேரம் இருக்காது. நான் தமிழகம் திரும்பியபிறகு செல்பேசி உரையாடலுக்குப் பஞ்சம் இருக்காது.

     சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றபொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கு அந்திப்பொழுதொன்றில் கவிஞர் தங்க. வேல்முருகன் ஆர்வமுடன் வந்து சந்தித்தார். அமர்ந்தும், நின்றும், நடந்தும் நிறைய நேரம் பேசினோம். அப்பொழுது கையுறையாக அவரின் நினைப்பதற்கு நேரமில்லை என்ற கவிதை நூலை வழங்கியபொழுது மிகவும் மகிழ்ந்தேன். இந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகளை முகநூலில் பார்த்ததால்  நானும் இந்த நூலைப் பெறுவதில் ஆர்வமாக இருந்தேன். விடுதியிலிருந்து விடுபட்டு, நண்பர்களுடன் சிங்கப்பூர் நகரின் சாலைகளில் காலார நடந்தவாறு பல்வேறு இலக்கிய நிகழ்வுகளைப் பேசித் திளைத்தோம்.

     தங்க. வேல்முருகன் தற்பொழுது சிங்கப்பூரில் உள்ள எச்.இ.சி மின்சாரம், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். தம் வருமானத்திற்காக மின்பணிகளில்  நாளும் கவனம் செலுத்தினாலும் அடிப்படையில் இவர் ஒரு கவிதையுள்ளம் கொண்ட கலைஞர். செய்நேர்த்தியுடன் எதனையும் செய்துபார்க்கும் இயல்பினர். தமிழிலக்கியம் பயின்ற இவரைத் தமிழ்நாட்டுக் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ளாத பொழுது, சிங்கப்பூர் நாடு செவிலித்தாயாக மாறி, அரவணைத்துக்கொண்டது. சிங்கப்பூரின் மண்மணம் கமழும் பல கவிதைகளை நாளும் வடித்துவரும் தங்க. வேல்முருகனின் படைப்புகள் தனித்து ஆய்வு செய்யும் தரமுடையன.

     தங்க. வேல்முருகன் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வட்டம் மருங்கூரில் மு.தங்கராசு, த.நாகாயாள் அம்மாள் ஆகியோரின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர் (07.04.1972). இவருடன் இரண்டு அக்காள், ஓர் அண்ணன், ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சி. கீரனூரிலும், உயர்நிலைக் கல்வியை கருவேப்பிலங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் படித்தவர்.

     விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலை, இளம் முனைவர்ப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலை கணினிப் பட்டயப் படிப்பும் பயின்றவர். குங்குமம் கிழமை இதழில் சிலகாலம் பணிசெய்தவர். கவிதைத் துறையில் கவனம் செலுத்தும் இவர் தற்பொழுது புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தங்க. வேல்முருகனின் நினைப்பதற்கு நேரமில்லை கவிதைநூல் 57 கவிதைகளைக் கொண்டுள்ளது. மணிமுத்தாற்றங்கரை நினைவுகளையும் இப்பொழுது வாழும் சிங்கப்பூர் நினைவுகளையும் இந்த நூலில் கவிஞர் சிறப்பாக வடித்துள்ளார். சிங்கைத் தாய் என்ற தலைப்பில் அமையும் வேல்முருகனின் கவிதை என் விழியை நிறுத்திப் படிக்க வைத்தது.

"எல்லாமே
புள்ளியில்தான்
தொடங்குகிற
தென்பதற்கு - நீ
உதாரணம்...

உன்வளைவு
நெளிவுகளில்கூடத்
தூய்மை துள்ளுகிறது...
சாக்கடையும் பேசும்
சந்தன மொழி
...
என் விதி நீட்டிக்கச்
சாலைவிதி மதிக்கச்
சொன்னாய்...

சட்டங்கள் கடுமையாக்கிக்
குற்றங்கள் குறைத்தாய்...

உழைக்கும் வியர்வைக்கே
உயர் மதிப்பளித்தாய்..."

என்று சிங்கப்பூரின் சிறப்புகளை நம் கவிஞர் பாடியுள்ளார். தமிழகத்தார் சிங்கப்பூர் நாட்டுக்குச் சென்று பார்த்தால் இந்தக் கவிதை வரிகள் எவ்வளவு உண்மையானவை என்று உணர்ந்துகொள்ளமுடியும்.

     சிங்கப்பூரின் தேசத் தந்தை லீக்குவான் யூ அவர்கள் நாட்டுக்கு உழைத்த அவர்தம் தியாகத்தைச் சொல்லி, உலகத் தந்தை என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை சிங்கப்பூரை நேசிக்கும் ஒவ்வொருவர் உள்ளத்தையும் மயிலிறகால் வருடுவதுபோல் உள்ளது.

     தாய்நாட்டு நினைவுகளை வடித்துள்ள தங்க. வேலுமுருகனுக்கு இங்குள்ள மக்களின் அவல வாழ்க்கையும், அரசியல்காரர்களின் சூழ்ச்சியில் சிக்கிச் சீரழியும் நிலையும்தான் மனக்கண்ணில் தோன்றி, கவிதைப் பதிவுகளாக வெளிப்பட்டுள்ளன.

"இலஞ்சம் வாங்கி
வாக்கைப் போட்டாய்!
பஞ்சம்
வந்தால்
யாரைக் கேட்பாய்!" (பக்கம் 41) என்கின்றார்.

"நட்ட நடவெல்லாம் நீரில்லாக் காயுது தம்பீ
பட்ட கடனையும் அடைக்க முடியாது போல
விவசாயத்த நம்பி...

சுட்ட கல்லும் சுவராகாமல் கிடக்குது தம்பி
வாங்கி வந்து வாசலில் கிடக்குது துருப்பிடித்த
கம்பி.."

என்று எழுதியுள்ளதில் தெரிகின்றது தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் அவல வாழ்வு.

     தாத்தா என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதையில் இந்தியத் தலைநகரில் உழவர்கள் நடத்திய போராட்டத்தைப் பதிவுசெய்துள்ளார். சமகாலப் பதிவாக நிற்கும் சான்றுக் கவிதை இதுதான்:

"அய்யாக்கண்ணு - நீ
அரை நிர்வாணமாய்த்
தேசத்தின் தலையில் நின்று...
எலிக்கறி தின்றாய்
எங்கள் பசி உணர்ந்து..." ( பக்கம் 52)

     உழவனுக்குதான் தெரியும் உழுதொழிலின் வலி. உழைத்து, உலகுக்குச் சோறூட்டும் உழவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உழவுத்தொழிலில் முன்னேர் ஓட்டியதால் தங்க. வேலுமுருகனுக்குப் புரிகின்றது அய்யாக்கண்ணுவின் போராட்ட வலி. வளமான வாழ்க்கையின் வாயில்படியில் நின்றாலும் தம் மக்கள் போராட்டத்தின் ஓர் உறுப்பினராக நின்று தங்க. வேல்முருகன் எழுத்தாயுதம் கொண்டு இப்புதுக்கவிதையைப் புவியினுக்கு வழங்கியுள்ளார்.

     சிற்றூர்ப்புற நினைவுகள், நிகழ்வுகள், தழை, செடி, கொடி, வாய்க்கால் வரப்புகள் எனத் தமிழர்களின் கருப்பொருள்களைச் சுமந்து நிற்கும் நினைப்பதற்கு நேரம் இல்லை என்ற முதல் தொகுப்பிலேயே தங்க. வேல்முருகன் தம் தடத்தைப் பதிவுசெய்துள்ளார். அடுத்த தொகுப்புகளும் அடுக்கடுக்காக அணிவகுக்கட்டும்.

மணிமுத்தாற்று மணலின் அளவாய்
வாழ்வுசிறக்கட்டும் வேல்முருக!

வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன்
17.12.2018புதன், 5 டிசம்பர், 2018

புலவரைப் போற்றுவோம்! புலவரைப் போற்றுவோம்!புலவர் இரா. கலியபெருமாள்

 தஞ்சாவூரில் அமைந்துள்ள .மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றுபவரும், முதுபெரும் புலவர் பெருமானும் ஆகிய முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் பிறந்தநாளான இன்று (திசம்பர் 5) ( பிறந்த ஆண்டு: 05.12.1936) அவர்தம் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் காணொளியை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன். ஈராண்டுகளுக்கு முன்னர் கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கல்லூரி வளாகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பெற்ற இக்காணொளியை எனக்கு அமைந்திருந்த பல்வேறு பணிகளால் உடன் அணியப்படுத்த முடியவில்லை. அப்பொழுது ஒளிப்பதிவுக்கு உற்றுழி உதவிய என் அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் க. அன்பழகன் அவர்களுக்கும், எங்களின் அழைப்பை ஏற்று மூன்றரை மணிநேரம் நின்றகோலத்திலேயை ஒளிப்பதிவுக்கு ஒத்துழைத்து, உதவிய புலவர் இரா. கலியபெருமாள் ஐயாவுக்கும் மிகுந்த நன்றியன்.

 புலவர் இரா. கலியபெருமாள் அவர்கள் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு முன்னோடியான மாணவர்; ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான ஆசிரியர். இவர்தம் மனப்பாட ஆற்றலை இந்தக் காணொளி வழியாக அறியமுடியும். இறையனார் அகப்பொருளுரையையும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திரைப்பட உரைவீச்சையும் புலவர் அவர்கள் மனப்பாடமாகச் சொல்லும் அழகில் தமிழ்ச் செழுமை புலப்படும். கரந்தைப் புலவர் கல்லூரியில் அக்காலத்தில் புகழோடு விளங்கிய புலவர் ந. இராமநாதனார், அடிகளாசிரியர், ச. பாலசுந்தரம், கு.சிவமணி ஐயா உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வீறார்ந்த தமிழ்ப்புலமையைப் புலவர் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடுவதிலிருந்து அவர்தம் ஆசிரியப் பற்றுமை புலப்படும்.

 தமிழ்நாட்டரசும், தமிழ்ச் செல்வர்களும், தமிழமைப்புகளும் இவரைப் போன்ற தன்மானத் தமிழ்ப்புலவர்களைக் கொண்டாடுங்கள் என்ற பணிவான வேண்டுகோளை வைக்கின்றேன்.

 புலவர் இரா. கலியபெருமாள் ஐயா அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் தமிழ்த்திருவடிகளைப் போற்றி வணங்குகின்றேன்.

 புலவர் பெருமான் அவர்கள் தமிழ்போல் நீடு வாழி!

 புலவரின் காணொளியைப் பார்க்கவும் கேட்கவும் இங்கே அழுத்துக!

சனி, 1 டிசம்பர், 2018

பேராசிரியர் அ. அ. மணவாளன் மறைவு!


பேராசிரியர் அ. அ. மணவாளன்

 சென்னைப்  பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ் மொழித்துறைத் தலைவரும், பன்மொழிப் புலமை கொண்டவருமான பேராசிரியர் அ. அ. மணவாளன் அவர்கள் 30.11.2018 இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். யான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றபொழுது, கருத்தரங்க நிகழ்வு ஒன்றிற்கு வருகைதந்தபொழுது ஓர் இரவு முழுவதும் அவருடன் உரையாடிய பசுமையான நினைவுகள் வந்துபோகின்றன. திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர் என்பதையும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறைத்தலைவராகப் பணிபுரிந்தவர் என்பதையும் கேட்ட எனக்கு வியப்பும் பெருமகிழ்வும் அப்பொழுது ஏற்பட்டது. பின்னாளில் பேராசிரியரின் மலையளவு திறமையை அறிந்து, அவர்மீது அளவுக்கு அதிகமான மதிப்பினைக் கொண்டிருந்தேன். எளிமையும், தெளிந்த புலமையும் ஒருங்கே வாய்த்த பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், அவர்தம் அன்புக்குரிய மாணவர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

பேராசிரியர் அ. அ. மணவாளன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

 தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் மோசவாடி என்ற ஊரில் 1935 இல் பிறந்தவர். கோவை- பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். பின்னர் திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். தமிழ் முதுகலைப் பட்டத்தைத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் 1978 - 1996 ஆம் ஆண்டுகளில் பணிபுரிந்தவர். 1988-89 ஆம் ஆண்டில் புல்பிரைட் உதவித்தொகை பெற்று இந்தியானா, சிகாகோ, இவான்சுடன், கொலம்பியா, வாசிங்டன், நியூயார்க்குப் பல்கலைக்கழகங்களில் ஒப்பாய்வுத்துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியவர்.

 இலக்கியக்கோட்பாடுகள், இலக்கிய ஒப்பாய்வு, மொழிபெயர்ப்புத் துறைகளில் வல்லுநர். 13 இலக்கியத் திறனாய்வு நூல்களையும், 4 மொழிபெயர்ப்பு நூல்களையும், 5 இலக்கியக் கோட்பாடுகள் நூலையும் இயற்றியுள்ளார். மில்டன்- கம்பனின் காப்பிய மாந்தரின் தலைமைப் பண்பு(1984), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள்(1995), பக்தி இலக்கியம்(2004), இலக்கியப் பண்பாட்டு ஒப்பாய்வு(2010) உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்கள் இவரின் பெயர் சொல்லும் பெருமை மிக்க படைப்புகளாகும். அரிஸ்டாட்டிலின் கவிதையியலை இவர் மொழிபெயர்த்து வழங்கியதன் அடிப்படையில் தமிழ்க் கல்வி உலகிற்கும், ஆய்வுலகிற்கும் பெரும்பணியாற்றியவர்.

 உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 901 முதல் 1300 வரை) எழுதி வழங்கியவர்.

 இராமகாதையும் இராமாயணங்களும்(2005) என்ற இவரின் நூலுக்கு பிர்லா அறக்கட்டளையின் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டது.

 தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஆழ்ந்த புலமையுடைவர். 


பேராசிரியர் அ. அ. மணவாளன் பிர்லா அறக்கட்டளை விருது பெறுதல்

நன்றி: வாழும் காவியம் பேராசிரியர் அ. அ. மணவாளன் சிறப்பு மலர்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

ம.இலெ. தங்கப்பாவின் வரலாறு சொல்லும் வானகத்தின் வாழ்வியக்கம் - ஆவணப்படம்!
 என் அருமை நண்பரும், புதுவையின் புகழ்பெற்ற எழுத்தாளருமாகிய பி.என்.எஸ். பாண்டியன் அவர்கள் இயக்கிய, .இலெ. தங்கப்பா வானகத்தின் வாழ்வியக்கம் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் திரையிட்டுக் கண்டுகளித்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுவருகின்றது. புதுவை நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தாலும் முழுமையாக ஆவணப்படத்தைப் பார்க்க இயலாமல், வேறு ஒரு பணியின் காரணமாக இடையில் திரும்பினேன்.

 முப்பது ஆண்டுகள் தங்கப்பா ஐயாவுடன் பழகிய நான் அந்த ஆவணப்படத்தைப் பார்க்காமல் திரும்பியமை எனக்கு வருத்தம் தந்தது. ஆவணப்படத்தின் இயக்குநர் திரு. பி.என்.எஸ். பாண்டியன் அவர்களிடம் என் விருப்பம் கூறி, ஆவணப்படத்தைப் பார்க்க விரும்பியதைச் சொன்னேன். திரு. பாண்டியன் அவர்கள் நேரம் ஒதுக்கி, நம் இல்லம் வந்து, ஒளிவட்டு வழங்கி மகிழ்வூட்டினார். ஆவணப்பட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பி.என்.எஸ். பாண்டியனுக்கு நன்றி தெரிவித்த இனியபொழுது...


 பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா நெல்லை மாவட்டம் குறும்பலாப்பேரியில் பிறந்தவர். இளம் அகவையிலேயே தமிழார்வம் தழைக்க வாழ்ந்தவர். ஆங்கிலமொழியிலும் பெரும்புலமை பெற்றவர்கள். பன்னூலாசிரியர். பல்வேறு தமிழ்ப்பணிகளில் தம் வாழ்க்கையைக் கரைத்துக்கொண்டவர். பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் இணைந்து, தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். இயற்கை ஈடுபாடு கொண்டவர். அன்பே இவ்வுலக வாழ்க்கைக்கு முதன்மையானது என்று ஆழமாக நம்பியவர். இவர்தம் வாழ்க்கையை அரும்பாடுபட்டு, நம் பாண்டியனார் ஆவணப்படமாக்கியுள்ளார். (ஆவணப்படம் குறித்து விரிவாகப் பின்னர் எழுதுவேன்).

 ஆவணப்படம் எடுப்பதில் உள்ள சிக்கல்களையும், இடையூறுகளையும், தோல்விகளையும், பொருளிழப்புகளையும் நான் நன்கு அறிவேன். என் உள்ளங்கவர்ந்த பேராசிரியரின் வாழ்க்கையைக் கலைநேர்த்தியுடன் ஆவணப்படமாக்கிய தோழர் பாண்டியனார்க்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். நண்பர் தேனி ஜெயக்கொடியின் ஒளிப்பதிவு சிறப்பு. மூத்த தமிழறிஞரின் வரலாறு சொல்லும் ஆவணப்படத்தைத் தமிழகமெங்கும் திரையிட்டுப் பார்ப்பதே ஆவணப்பட இயக்குநர் பாண்டியனார்க்கு நாம் வழங்கும் பாராட்டாக இருக்கும்.

திங்கள், 22 அக்டோபர், 2018

மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் கொண்டு வழங்கிய வாழ்த்துரை
     கனடாவுக்கு முதல்முறையாகச் சென்றபோது(2016) மருத்துவர் பால் ஜோசப் அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பினைத் திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவுநர் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். அதன் பிறகு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மருத்துவருடன் தொடர்பு தொடர்ந்தது; வலுப்பெற்றது. தங்கள் குடும்பத்துள் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, அவர்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் என்றும் நன்றியுடன் போற்றுவேன். மருத்துவர் எழுதிய கவிதைகளை அவ்வப்பொழுது மின்னஞ்சலில் அனுப்புவார். படித்துச் சுவைப்பதுடன் நிறுத்திக்கொள்வேன். ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்புக்கும் விரிவான ஒரு மதிப்புரை எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் மதிப்புரை மட்டும் இதுநாள்வரை எழுதி அனுப்பவில்லை. எனக்கு அமையும் தொடர்ப்பணிகளும், ஆய்வுப்பணிகளும் இவ்வாறு செய்ய இயலாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

     நான் உருவாக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் கனடாவில் வெளியிடுவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்ட சூழலில் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் அதன் வெளியீட்டு விழாவை நடத்துவதற்குத் தாமே முன்வந்தமையை நன்றியுடன் இங்கு நினைத்துப்பார்க்கின்றேன் (கனடா விபுலாநந்தர் கலை மன்றம் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தியமை பின்பு நடந்தது). இது நிற்க.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மனிதநேயம் மிக்க மருத்துவர். பிறர் துயரங்களைக் களையும் தூய உள்ளத்தினர். மேடைகளில் நகைச்சுவை பொங்குமாறு பேசும் ஆற்றலாளர். மருத்துவத்துறை சார்ந்த செய்திகளை வானொலிகள், தொலைக்காட்சிகள், மக்கள் மன்றங்களில் எடுத்துரைத்து நோயற்ற சமுதாயம் அமைவதற்குத் தொண்டாற்றும் நன்னெறியினர். நோயாளிகளாக வருபவர்களை நோய்நீக்கி, தம் குடும்பத்துள் ஒருவராக மாற்றிக்கொள்ளும் வகையில் "அன்பெனும் பிடியுள் அனைத்து மலைகளையும்" அரவணைத்துக்கொள்ளும் நவீன வள்ளலார்.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் எழுதிய அகவிதைகள், நலம் நலமறிய ஆவல் என்னும் இரண்டு நூல்களையும் அண்மைய கனடாப் பயணத்தின்பொழுது வழங்கிப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். ’வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய’ கதைதான். அந்த நூல்களும் புரட்டப்படாமல் நான் படிக்கவேண்டிய பகுதியில் கண்முன்னே காட்சி தந்தன. அண்மையில் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை மருத்துவரின் துணைவியாரும் எங்களின் அன்னையாருமான கேமாவதி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். எனக்கே உள்ள நோயான ’ஒத்திவைக்கும்’ பழக்கத்தால் இந்தச் சூழலிலும் நூலைப் படிப்பதற்குக் காலம் ஒதுக்கமுடியவில்லை. எனவே நூல்கள் படிக்கப்படாமல் இருந்தன. இரண்டு மூன்று நாள்களுக்கு முன் நூல்வெளியீட்டு விழா நினைவு வந்தது. நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். உள்ளத்தைத் தொடும் உணர்வுகளைத் தாங்கிய ’அகவிதை’ நூலும், அனைவருக்கும் பயன்படும் அரிய மருத்துவக் குறிப்புகளைத் தாங்கிய ’நலம் நலமறிய ஆவல்’ நூலும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்தன. என் உள்ளத்தில் ஊற்றெடுத்த நூல் குறித்த உணர்வுகளை எழுத்தாக்கி விழா நாளன்று அனுப்பினேன். அந்த மடல் இதுதான்.

     உலகிற்கே மனிதநேயத்தைக் கற்றுத்தரும் கனடா மண்ணில் மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்வெளியீட்டு விழா நடைபெறுவதை அறிந்து மகிழ்கின்றேன். தொலைவுகள் எம்மைப் பிரித்தாலும், இந்த அரங்கின் முதல்வரிசையில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனாக இந்த அரங்கில் என் உள்ளம் இருப்பதை அரங்கில் இருபோர் அறிய வாய்ப்பில்லை.

     தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், இழந்த இழப்புகளைச் சரிசெய்துகொள்வதற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, முன்னேறிக் கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளுக்கு நடுவே, கடும் உழைப்பால் இச்சமூகத்தின் நோய் நீக்கும் பணியில் ஈடுபாட்டுடன் உழைக்கும் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் இரண்டு நூல்களை எழுதி வழங்கியுள்ளமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.     அகவிதைகள் என்ற புதுப்பா நூல் தலைப்பிலயே பல நுட்பங்களைத் தாங்கியுள்ளது. விதைகள் எனவும் கவிதைகள் எனவும் அகத்தில் விளைந்த விதைகள் எனவும் அ+கவிதைகள் = அகவிதைகள் அதாவது கவிதை அல்ல என்றும் பல பொருள்தரும் வகையில் இந்த நூலின் தலைப்பு உள்ளது. 49 தலைப்புகளில் இந்தக் கவிதை நூல் 166 பக்கங்களில் அமைந்துள்ளது. கவிநாயகர் வி. கந்தவனம், பொன்னையா விவேகானந்தன் ஆகியோரின் அணிந்துரை, ஆய்வுரைகளைக் கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. அனுபவங்கள், நிகழ்வுகள், மருத்துவம், அறிவியல், உளவியல், விழிப்புணர்வு, ஈழவிடுதலை, மாந்தநேயம் குறித்த பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

     மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை அடுக்கிக்காட்டும் மருத்துவர், வரம்பின்றி இருப்பதை எடுத்துரைத்து, சின்னத்திரை தொடர்கள் போன்று நோயின் பட்டியல் நீளும் என்கின்றார்(பக்கம் 7,8).

ஆழிப்பேரலை குறித்து மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் வரைந்துள்ள கவிதை என் உள்ளம் தொட்ட கவிதை என்று உரக்கச்சொல்வேன்.

" ஏய் கடலே
ஏன் எங்கள் மீது
இவ்வளவு கோபம்.
நீலம் உனக்கு சொந்தமில்லை
அது வானத்திடம் நீ உள்வாங்கியது.
அலைகள் உனது உடைமையில்லை
அதுவும் காற்றிடம் கடன் வாங்கியது.
மீன்களும் உனக்கு உரியதல்ல
இயற்கை இன்பத்தின் இனவிருத்தி
சிப்பிகளும் வேண்டாமென்று
கரையில் துப்பிவிட்டாய்.
உப்பும் துவர்ப்பும்
இப்போது  உன்னிடம்
நிறையவே இருக்கிறது.
அது எங்களிடம் அள்ளிச்சென்ற
கண்ணீரால் வந்ததோ!:

என்று வினவும் கவிஞரின் உள்ளத்தில் சுனாமியின் சீற்றத்தால் மாந்தகுலம் சந்தித்த இழப்புகளின் பதிவுகள் தென்படுவதை உணரலாம். நீலவண்ணம், அலைகள், மீன்கள், முத்துகள் யாவும் உன்னுடையதில்லை என்று அடுக்கிக்காட்டும் கவிஞரின் கவியுள்ளத்தை இக்கவிதையில் இரசிக்க இயலும்.


" தெரிந்தோ தெரியாமலோ
எப்போதும் நாம்
அழுதுகொண்டுதானிருக்கிறோம்.
ஆனால் கண்ணீர் மட்டும்
வெளியே வழிந்தோடுவதில்லை
இன்னும் புரியவில்லையா?

கண்களில் மட்டும் கண்ணீர்
என்ற தண்ணீர் இல்லையென்றால்
காய்ந்து வறண்டுபோன
விழிகளில் ஒளியேது? (பக்கம் 18)

என்று மருத்துவர் பால் ஜோசப் கவிதைச் சொற்களால் வினவுவது அவர் ஒரு தேர்ந்த மருத்துவர் என்பதைக் காட்டுகின்றது.

     யாழ்நூலகம் அழிந்த வரலாறு என்பது மீண்டும் ஒரு குமரிக்கண்டம் அழிந்தமைக்கு நிகரானது. அதனைக் கண்ணால் கண்ட நேர்ச்சான்று நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள். தாம் கல்வி பயின்ற காலத்தில் அந்தக் கொடிய நிகழ்வு நடைபெற்றதை நம் மனத்தில் காட்சி ஓவியமாகத் தீட்டிக்காட்டுகின்றார் இவர். நூலகம் எரிந்த சோகம் தாங்காமல் பன்மொழி வித்தகர் டேவிட் அடிகளார் மயங்கி விழுந்து இறந்த செய்தியை நம் மருத்துவர் பதிவு செய்துள்ளமையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்

" அன்று நள்ளிரவு வைகாசி 31 ஆண்டு 81
பத்திரிசியார் கல்லூரி விடுதியில்
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலுள்ள வீதியெங்கும் பரபரப்பு
எழுந்துபார்த்தோம் ஜன்னல் வழியே
சற்றுத் தொலைவில் பாரிய தீப்பிழம்பு
நள்ளிரவில் செந்நிற வானம்...

மறுநாள் விடிவதற்குள்
சாம்பல்மேடாய் கருகிய தூண்களோடு
காமினி திசநாயக்காவும்
காட்டுமிராண்டி காடையரும்
கச்சிதமாய் திட்டமிட்டு
கல்வித்தாயின் கோவிலை
கரியாக்கி இடுகாடாய் மாற்றினர் (பக்கம் 104,105)

என்று எழுதியுள்ள பக்கங்களைப் படிக்கும்பொழுது கண்ணீர் நம்மையறியாமல் கன்னங்களில் கரைபுரண்டோடுவதை உணரமுகின்றது. அகவிதைகள் முளைத்து, முழுமரமாகி, சமூகம் பயன்பெற நல்ல கனிகளைத் தரட்டும்.

நூல் 2:

     மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நலம் நலமறிய ஆவல் என்ற நூல் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள அரிய மருத்துவத்துறை சார்ந்த நூல் என்று கொண்டாடலாம். இந்த நூலில் இன்று மனிதகுலம் சந்தித்துவரும் பல நோய்களை நினைவூட்டி, அவை ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. சினம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், மன அழுத்தம், செல்பேசிகளால் ஏற்படும் நோய், வீடியோகேம் போன்றவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் என்று பல்வேறு நோய்களை எளிமையாக எடுத்துரைத்து, அதற்குரிய தீர்வுகளையும் இந்த நூலில் சுட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. எளிய நடையும், எடுத்துரைக்கும் பாங்கும், சான்றுகாட்டும் அனுபவமும் இந்த நூலை இனிமையாக்குகின்றது. பெரும்பான்மையான நோய்களிலிருந்து விடுபட அண்டை அயலில் இருப்பவர்களுடன் அன்புகாட்டுதல், பாராட்டுதல், மன்னித்தல் முதலிய பண்புகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

     இதயம் பேசுவதுபோல் அமைத்துள்ள முதல் கட்டுரையின் பாங்கு சிறப்பாக உள்ளது. இதயம் சார்ந்த நோயுடையவர்கள் இந்தக் கட்டுரைப் பகுதியைப் படித்தால் நோயிலிருந்து விடுபட வழியுண்டு. இந்த நோய் இல்லாதவர்கள் இக்கட்டுரையைப் படித்தால் இந்த நோய் தம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். மன அழுத்தம் மிகப்பெரிய நோயாக இன்று உலகம் முழவதும் பரவலாகக் காணமுடிகின்றது. இதனைப் போக்கவும் மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சினம் குறித்து, திருவள்ளுவர் பலபடப் பேசியிருந்தாலும் நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மிக எளிமையாகச் சினம் குறித்து எடுத்துரைத்து, அதனால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுவதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சிக்மண்டு பிராய்டு உள்ளிட்ட மருத்துவமேதைகளைக் கொண்டாடும் இந்த உலகம் ஆயிரக்கணக்கான மனித இதயங்களாக நின்று, உளவியல் பேசிய திருவள்ளுவனைக் கொண்டாடவில்லையே என்ற கவலை நம் மருத்துவர் பால் அவர்களிடம் இருப்பதை நினைத்து அவரின் மொழியுணர்வை மெச்சுகின்றேன்.

     இன்று மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் முதன்மை நோய்களை அறிமுகம் செய்து அவை ஏற்படாமல் இருக்க அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ள நூலாக நலம் நலமறிய ஆவல் நூல் உள்ளது.

     தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் இரண்டு நூல்களை வழங்கியுள்ள மருத்துவர் பால் ஜோசப் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா
14.10.2018

நூல் வெளியீடு: மணிமேகலை பிரசுரம், சென்னை -17


சனி, 15 செப்டம்பர், 2018

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!  10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 3 முதல்  7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

  பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.

 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்;  பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.

அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)

உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழ்க்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது தில்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா,  செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் கமில் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், முனைவர் வி..சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”

 இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:

ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ்ப் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினரும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தினரும்  இணைந்து 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

 2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோம. இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு . முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை  அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்துவும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். எனவே 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவருமான  மருத்துவர் சோம. இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராகப்  பணிபுரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி. குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு . முத்து அவர்கள் ஆய்வுக் குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரைக் குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாகப்  பணிபுரிகின்றனர்.

மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சித் தலைப்புகளும் (Topics)

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.

"தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்."

இந்த மாநாடு சிறப்புற அமைய அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.

ஆராய்ச்சித் தலைப்புகளைப் பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரைச்  சுருக்கத்தையும் (ABSTRACT),ஆராய்ச்சி விரிவுக்  கட்டுரையையும்(RESEARCH PAPER) அனுப்பும் முறை,  அனுப்பவேண்டிய தேதி, ஆகியன பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:

http://www.iatrnew.org

 E.mail: iatr2019@fetna.org

இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

அன்புடன்

புலவர், முனைவர் பிரான்சிசு . முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

மருத்துவர் சோம.  இளங்கோவன்
தலைவர், ஒருங்கிணைப்புக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


பிற செய்திகளுக்கு:

திரு. சுந்தர் குப்புசாமி
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
மின்னஞ்சல்:president@fetna.org
www.fetna.org
திரு. மணி. குணசேகரன்
தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம்
மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

மாநாடு குறித்த காணொளி