நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 30 மார்ச், 2009

நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு


நா.ப.இராமசாமி

 நாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும். அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு. அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி பெற்றனர்.

 நூலகர்களுக்கு நடுவே அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர் இடையில் வந்து இணைந்து கொண்டு அரங்கில் நடப்பனவற்றை உற்று நோக்கியவண்ணம் இருந்தார். அவரை இடைவெளி நேரத்தில் வினவினேன். அவர் பெயர் நா. ப. இராமசாமி. பழையப் புத்தகங்கள் தொகுத்துப் பாதுகாக்கும் இயல்பினர் என்று அறிந்தேன். பயிலரங்கு முடித்து உடன் ஊருக்குப் புறப்படும்படி முன்பு என் பயணத்திட்டம் வகுத்திருந்தேன். இராமசாமி அவர்களிடம் பேசிய பிறகு என் பயணத்திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு நேரே அவர் அலுவலகத்திற்குச் சென்றேன். மிகப்பெரும் அறிவுக் களஞ்சியத்தைத் தன் பாதுகாப்பில் வைத்திருந்த அவரைக் காணாமலும் அவர் அலுவலகம் செல்லாமலும் வந்திருந்தால் என் பயணம் எளிமையான ஒன்றாகவே அமைந்திருக்கும்.

 நா.ப.இராமசாமி அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர் இவர் தந்தையார் படிப்பறிவு இல்லாதவர். கைரேகை பதிக்கும் பழக்கம் உடையவர். எளிய உழவர் குடும்பம். இராமசாமி அவர்கள் இளமையிலேயே கையில் கிடைத்த, கண்ணில் கண்ட இதழ்களைப் படிக்கும் பழக்கம் உடையவர். அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்,சிறுவர் நூல்கள் இவற்றை ஆர்வமுடன் படித்தார். அழ. வள்ளியப்பாவின் படைப்புகள், செட்டிநாட்டிலிருந்து வந்த சிறுவர் இதழ்களைப் படிக்கத் தொடங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த எழுத்துகள் அறிமுகம் ஆகின்றன. தொடர்ந்து கற்றலை ஒரு ஆர்வத் தொழிலாக மேற்கொண்டார்.

 இதன் இடையே மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு, கயிறு, பருத்திக்கொட்டை விற்கும் கடையைச் சிறப்புடன் நடத்தி முன்னேற்றம் கண்டார். அரசியல் சார்பு அமைகிறது. தமிழகத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய காமராசர், சம்பத், வாழப்பாடியார், நாவலர், இரா.செழியன் உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. மேலும் மொராசி தேசாய். செகசீவன்ராம் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைக் காணவும், பேசவுமான சூழலும் வாய்த்தது. இப்படி கல்வி, அரசியல் துறைகளில் ஈடுபாட்டுன் விளங்கிய இராமசாமி அவர்கள் இன்றுவரை பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இவருக்குச் சம்பத் தலைமையில் திருமணம். இவர் பிள்ளைகளுக்குத் தலைவர்களைக் கொண்டு சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தன.

 வெளியூர்ப் பயணங்களில் கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். இன்று முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாக்கும் அறிஞராக விளங்குகிறார். தமிழகத்தில், பிற நாடுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிக் கேட்டால் நா முனையில் செய்திகளை வைத்துள்ளார். ஒரு நூல் பற்றிக் கேட்டால் ஒருநூறு நூல்களை எடுத்துக் கண்முன் அடுக்கிவிடுவார். இந்த நூல்களை நமக்கு எடுத்துக் காட்டுவதில் சிறிதும் அலுத்துக்கொள்ளாமல் ஆர்வத்துடன் இவர் செயல்படுவது கண்டு மகிழ்ச்சியே ஏற்படும். பழைய நூல்களை வைத்திருக்கும் ஆர்வலர்கள் தானும் பயன்படுத்தாமல், பிறர் பார்வைக்கும் வைக்காமல் அழியவிட்டுவிடுவது வழக்கம். ஆனால் இராமசாமி அவர்கள் எடுத்து வழங்குவதில் சலிப்படையாதவர். இவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் இளமைப் பருவம் பற்றி...

 நாமக்கல்லில் வாழ்ந்த பழனியாண்டிக் கவுண்டர், காளியம்மாளுக்கு மகனாக 15.10.1939 இல் பிறந்தேன். என் தந்தையார் வண்டியோட்டியும் மூட்டை சுமந்தும் குடும்பம் நடத்தியவர். படிப்பறிவு இல்லாதவர். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்பொழுதே பொதுவுடைமை, திராவிட இயக்க உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதழ்களைப் படிப்பதும் அண்ணா, சம்பத், நாவலர் பேச்சு கேட்டதும் இயக்க ஈடுபாட்டுக்குக் காரணம். அணில், பாலர் மலர், பூஞ்சோலை (அழ.வள்ளியப்பா), ஜில் ஜில்(தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு) உள்ளிட்ட இதழ்களை இளமையில் படித்தேன்.

 அமெரிக்க அரசு அந்த நாளில் அமெரிக்கன் ரிப்போட்டர் என்ற இதழை இலவசமாக அனைவருக்கும் வழங்கியது. ஆர்வமுடன் படிப்பேன். இரண்டாம் படிவத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபொழுதே என் படிப்பு வேட்கை தொடங்கிவிட்டது. சோவியத் நாடு இதழும் படிக்கத் தொடங்கினேன். 1958 இல் உழவுப்பொருள் கடையைக் கவனித்தேன். இதே ஆண்டில் திருமணமும் நடந்தது.

நூல்கள்சேர்க்கும் பழக்கம் உங்களுக்கு எப்பொழுது தொடங்கியது?

 வெளியூர் செல்லும் பொழுது மறக்காமல் பழையப் புத்தகக் கடைக்குச் செல்வது உண்டு. சேலம், சென்னை மூர்மார்க்கட், திருச்சி, மதுரையில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் நூல் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மூர் மார்க்கட்டில் எனக்காக நூல்களை எடுத்து வைத்திருந்து வழங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. உரோசா முத்தையா அவர்களை அவரின் இல்லத்தில் கண்டு அவரிடமும் நூல்களை வாங்கி வந்த பட்டறிவு உண்டு. அவரிடம் இருந்து ஆறு பழைய கடிதங்களை வாங்கி வந்தேன். 1894-1900 ஆண்டில் எழுதப்பட்டன. அந்தக் கடிதங்கள் செட்டிநாட்டிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இந்தக் கடிதங்களில் தமிழில் மட்டும் முகவரி எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதினால் அந்த நாடுகளுக்குச் செல்லும்படியாகத் தமிழ் மொழிக்கு மதிப்பு இருந்துள்ளது.

உங்களிடம் உள்ள பழைமையான குறிப்பிடத் தகுந்த நூல்கள்?

 இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல் கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

உங்கள்அரசியல் வாழ்க்கை?

 திராவிடஇயக்கம், பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் இருந்தாலும் சம்பத் அவர்களின் தமிழ்த்தேசியக்கட்சியில் ஈடுபட்டு உழைத்தேன். சம்பத் பேராயக் கட்சியில் இணைந்த பிறகு நான் காமராசர் அவர்களுடன் இருந்தேன். பின்னர் வாழ்ப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. காமராசர் கொள்கையை இன்றும் தாங்கி வாழ்கிறேன். சனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.

உங்கள் பகுத்தறிவுக் கொள்கை?

 தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையும் சமூகச்சீர்திருத்தக் கொள்கையும் எனக்கு உடன்பாடான கொள்கைகள். எந்த வகையான சடங்கும் இன்றி எங்கள் குடும்பத்தில் திருமணம் செய்தோம். பார்ப்பனர்களை எங்கள் பகுதியில் திருமணத்திற்கு அழைப்பது இல்லை.


நா.ப.இராமசாமி தாம் தொகுத்த நூல்களுக்கு இடையே

உங்கள் நூல் தேடும் முயற்சி பற்றி?

 இன்று வரை புத்தகத்துக்காக நான் செலவு செய்வதற்குத் தயங்குவது இல்லை.பழைய புத்தகங்களை எந்த விலை சொன்னாலும் வாங்கிவிடுவேன். இப்பொழுதும் பழைய புத்தகங்களையும் புதிய புத்தகங்களையும் வாங்குகிறேன். நாமக்கல் மாவட்ட மைய நூலகம் வளர்ச்சி பெற பல வகையில் உதவியுள்ளேன்.

உங்கள் நாணயம் சேகரிப்பு பற்றி..

 என்னிடம் பழைய நாணயங்கள் பல உள்ளன. சேரர், உரோமானியர், சீனர் காலத்து நாணயங்கள் உள்ளன. கரூர் ஆற்றுப்பகுதியில் கிடைத்த பல நாணயங்களை நான் வாங்கிப் பாதுகாக்கிறேன். கொடுமணல் நாணயங்கள் என்னிடம் உள்ளன. நடுகற்கள் இரண்டைப் புலவர் இராசு அவர்களுடன் இணைந்து கண்டெடுத்துள்ளேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி?

 நான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன், 1973 இல் சப்பான் நாட்டிற்கும் 1987 இல் உருசியாவிற்கும் 1999 இல் பிரிட்டன், பிரான்சு, தாய்லாந்து, பெல்சியம் நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். மலேசியா, பிலிப்பைன்சு, ஆங்காங், சென்று வந்துள்ளேன். 2004 சனவரி ஒன்றில் யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்குப் பல நாள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்துள்ளேன். 3800 நூல்களை (சற்றொப்ப ஐந்து இலட்சம் மதிப்புள்ளது) தமிழீழத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்.

உரோசா முத்தையா நூல்கள் தொகுப்பு முயற்சி பற்றி?

 உரோசா முத்தையா அவர்களைப் பல முறை நேரில் கண்டுள்ளேன். செட்டிநாட்டில் அவர் தொகுத்த நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. கட்டுக்கட்டாக கடிதங்களைத் திரட்டியவர். அச்சில் உள்ள இதழ்கள். நூல்கள், அழைப்பிதழ்கள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பாதுகாத்தவர். ஓம் சக்தி இதழில் அவரின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்துள்ளது.

உங்கள் நூல்களை எதிர்காலத்தில் என்ன செய்ய முடிவுசெய்துள்ளீர்ர்கள்?

 என்னிடம் உள்ள பல நூல்களையும் தமிழீழம் விடுதலை அடைந்தால் கொடுக்க அணியமாக உள்ளேன்

ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உங்களால் உதவமுடியும்?

 ஆய்வாளர்கள் பலரும் என் நூலகத்துக்கு வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான நூல்களை மட்டும் எடுத்துப்படிக்கிறார்கள். அனைத்து நூல்களையும் பார்வையிடவோ, படிக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. பல பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் நூலகத்துக்கு வருகின்றனர். பலர் நூல்களை இரவலாக எடுத்துச்செல்லுவர். சிலர் நூல்களைத் திருப்பித் தருவதில்லை.

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் என்னிடம் இருந்த அரிய நூல்களைப் பெற்று மறுபதிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் எனக்கு எழுதியோ, பேசியோ முன் தகவல் தந்து வந்து பார்க்கலாம். என் நூலகத்தைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் உதவ என்றும் தயாராக உள்ளேன்.

முகவரி: நா.ப.இராமசாமி
நூல் சேகரிப்பாளர்,
சேலம் சாலை, நாமக்கல், தமிழ்நாடு.
பேசி: 04286-231704

வெள்ளி, 27 மார்ச், 2009

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சிறப்புரை...

கோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அழைத்துள்ளனர்.

என் உரையில் கணினி,இணையம் தமிழ் ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உதவும் என்ற அடிப்படையில் செய்திகளை எதிர்பார்க்கின்றனர்.கணினி வழியாகத் தமிழ் மொழியைக் கற்கும் நெறிகள்-கணினித்தமிழை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஆய்வுகள்-தமிழ்க் கணினியை மையமிட்ட ஆய்வுகள்/ நடைபெற்றுக்கொண்டுள்ள ஆய்வுகள் அறிமுகம்- தமிழ் இலக்கியத்தில் புதிய ஆய்வியல் அணுகுமுறைகள்-ஆய்வுப்போக்குகள்-தமிழ் இலக்கியத்தில் கணினி மையமிட்ட எதிர்கால ஆய்வுக்களங்கள்-தமிழ் இலக்கிய ஆய்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்-தமிழிலக்கிய ஆய்வுக்களங்களும் பிற இலக்கியங்களும் குறித்த கருத்தாக்கங்கள்-புத்தாக்கச் சிந்தனைகள் எனபன போன்ற செய்திகளை உள்ளடக்கியும் பேச உள்ளேன்.

கருத்தரங்கிற்கு நண்பர் காசி அவர்களும்(தமிழ்மணம்) எனக்குத் தெரிந்த தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரும் வருகைதர உள்ளனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ள விவரம் வேண்டுவோர் பேராசிரியர் முருகேசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.
செல்பேசி எண் : 9443821419

வியாழன், 26 மார்ச், 2009

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னை செம்மொழி நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழில் வாசிப்புப் பண்பாடும் பதிப்பு மரபும் என்ற பொருளில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினைப் புதுச்சேரியில் நடத்துகிறது.

இந்த மாநாடு நேற்று 25.03.09 தொடங்கி நாளை 27.03.09 வரை மூன்று நாள் நடைபெறுகிறது.இக்கருத்தரங்கில் தமிழ் நூல்கள் எவ்வாறு படிக்கப்படுகின்றன தொகுக்கப்படுகின்றன,பதிப்பிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் பெர்னாடு பேட்(ஏல் பல்கலைக்கழகம்),பிரான்சிலிருந்து பிரான்சுவா குரோ,செர்மனியிலிருந்து தாமசு லேமான்,இலங்கையிலிருந்து செய்சங்கர்
உள்ளிட்டவர்களும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் இரா.கோதண்டராமன்,பேராசிரியர் சுப்பிரமணியன்,முனைவர் இந்திரா மானுவல்,முனைவர் முருகரத்தினம்,ஞானாலயா கிருட்டினமூர்த்தி(புதுக்கோட்டை)சுப்பராயலு,உரோசா முத்தையா நூலகத்திலிருந்து ஆய்வறிஞர்களும் கலந்துகொள்கின்றனர்.பல பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்தரங்கு நிகழ்வுகளில் யானும் பார்வையாளனாகக் கலந்துகொள்கிறேன்.இது பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.

ஞாயிறு, 22 மார்ச், 2009

உலகு தழுவிய தமிழ்த்தொடர்...



அயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...

    தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும். நூல்கள், உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல், இணையக் குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.

    உள்ளூரில் இருப்பவர்களைப் பற்றியே நம்மவர்கள் செய்திகளைப் பதிவாக்காமல் இருக்கும் பொழுது அயலகத்தில் தமிழ்ப்பணிபுரிந்த-புரியும் அறிஞர்கள் பற்றி எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது அன்று. என் முயற்சி கடலில் இறங்கிக் கையால் மீன்பிடித்ததற்குச் சமமாகும். இத்தகு வலிவும் உரமும் அமைந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு.

    திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஐந்தாண்டுகள் படித்து முடித்த கையுடன் புதுவைப் பல்கலைக் கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக(1992-93) இணைந்தேன். என் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அறிவரங்கில் உரையாடும்பொழுதும் அயல்நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் பற்றி அடிக்கடி கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் அயல்நாடுகள் பற்றிப் பேசாமல் அவர் வகுப்பு இருக்காது. அப்பொழுதே அயலகத் தமிழ்ப்பணிகளை அறியும் வேட்கை எழுந்தது.

    மலேசியா சார்ந்த குறிஞ்சிக்குமரனார் (பாவாணர் தமிழ் மன்றம்) என்னுடன் மடல்தொடர்பு கொண்டார். பாரிசில் வாழும் என் நண்பர் இரகுநாத்மனே அவர்கள்(நாட்டியக்கலைஞர், தாசிகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) எனக்குப் பாரிசில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிமுகம் செய்து வந்தார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது கனடாவில் வாழும் ஈழத்துப்பூராடனார் நூல் வழி எனக்கு அறிமுகமானார். பதினைந்தாண்டுகளாக அவரைப் பார்க்காமலே மடல்வழி நெருங்கிப் பழகி வருகிறேன். மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறனும் எனக்கு அறிமுகமானார்.

    சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது நாளும் ஒரு வெளிநாட்டு அறிஞருடன் பழகும் சூழலை முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் அமைத்துத் தந்தார். முத்துநெடுமாறன், அலெக்சாண்டர் துபியான்சுகி. பேராசிரியர் மௌனகுரு, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு, பாலசுகுமார், அம்மன்கிளி முருகதாசு உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. இவர்களுடன் பழகும்பொழுது தமிழ் வழங்கும் இடம் வடவேங்கட மலை தென்குமரி வரை இல்லை. கடல் கடந்தது என்று உணர்ந்தேன். அயலகத்தமிழ் என்று ஒரு கட்டுரை அங்கு (உ.த.நி) நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் படித்தேன். பலருக்கும் புதுமையாக இருந்தது. பேராசிரியர் இரா. இளவரசு அமர்ந்து ஆற்றுப்படுத்தினார்.

    அயலகத்தமிழ் என்று ஓர் இதழ் தொடங்கி அயலகத் தமிழ்ச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்க முயன்றேன். அதன்பொருட்டுத் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டேன். அந்த முயற்சி அப்பொழுது கைகூடவில்லை. உள்ளத்தில் அதற்கான சுடர் அணையாமல் இருந்துகொண்டே இருந்தது.

    ஆசியவியல் நிறுவனத்தில் நடந்த கந்த முருகன் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பும் அமைந்தது. பாரதிதாசன் பலைக்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்கள் பற்றியும் அவரிடம் இசைகற்ற மேனாட்டார் பற்றியும் அறிந்தேன்.

    கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக யான் பணிபுரிந்த பொழுது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் அங்கு வந்தனர். ஒரு கிழமை தங்கி அவர்களுடன் உரையாடும் பேறு பெற்றேன். முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், சிவகுருநாதப் பிள்ளை உள்ளிட்டவர்களைக் கண்டு பழகினேன். மலேசியா சென்று பேராசிரியர் மன்னர்மன்னன், பரமசிவம் (புத்ரா பல்கலைக் கழகம்), மாரியப்பன் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுடன் பழகினேன்.

    உலகம் முழுவதும் தமிழ்க்கல்வி எந்த நிலையில் உள்ளது, கற்பிக்கப்படுகிறது என்று உணர்ந்தேன். தமிழ் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அறிந்தேன். அயலகத் தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறியாமல் உள்ளோமே என்ற கவலை எனக்குள் இருந்தது.

    பொதுவாக வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு. அந்த வகையில் இணையத்தில் தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவு செய்து வருவதை உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில் எனக்கு அறிமுகமானவர்களையும், நூல்களில் படித்தவர்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து, சிறு கட்டுரைகளாக எழுத நினைத்தேன். அதனைக் களஞ்சியத்தில் எழுதினால் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் பயன்படும் என நினைத்த வேளையில் களஞ்சியத்தில் எழுதத் தமிழ் ஓசை நாளிதழ் ஆசிரியர் வாய்ப்பு வழங்கினார். களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர் யாணன் தந்த ஊக்கமும் தொடர் 25 கிழமைகள் தொய்வின்றி வெளிவர உதவியது.

    தொடர் எழுதத் தொடங்கிய பிறகுதான் அதன் சிக்கல் எனக்குப் புரியத் தொடங்கியது. பெரும்பாலும் தொடரில் இடம்பெற்றுள்ளவர்கள் உயிருடன் வாழ்பவர்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் சரியாக, நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிலரிடம் இருந்து செய்திகள் உடனுக்குடன் கிடைத்தன. சிலரிடம் இருந்து செய்திகள் பெறுவது இயலாமல் இருந்தது. சிலரின் படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சிலரின் படம் இணையத்தில் இருந்து எடுக்கவேண்டியிருந்தது. சில அறிஞர்களின் குடும்பத்தினர் அன்புடன் உதவினர்.

    பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் உடல்தளர்ந்து பாரிசில் படுக்கையில் இருப்பதாக அறிந்தேன்.அவர் மின்னஞ்சல் முகவரி இல்லாதபொழுது அவர் மகனாரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவருடன் தொடர்புகொண்டேன். உடன் விடை தந்தார். ஒரு மாதத்தில் தந்தையார் பற்றி செய்திகள் பெற்று அனுப்புவதாகத் தெரிவித்தார். அவர் வேறு நாட்டில் இருந்ததே காரணம். அந்த வேளையில் செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் வழியாகவும் சில செய்திகள் பெற்றேன்.

    கமில் சுவலபில் அவர்களின் துணைவியார் என் முயற்சியைப் போற்றி ஒரு மடல் எழுதியமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். என் நண்பர் இரகுநாத் மனே அவர்கள் பாரிசிலிருந்தபடி கமில் அவர்களின் துணைவியாரிடம் பேசியும் செய்திகள் பெறமுடியாமல் போனது. இருந்த செய்திகள் கொண்டு சிலநாளில் கட்டுரையும் வந்தது. அந்தோ! இந்நிலையில் அவர் சனவரி 17 இல் இயற்கை எய்தினார். இந்தச் செய்தியும் களஞ்சியம் வழி முதற்கண் உலகினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

    பேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது அ.முத்துலிங்கம் அவர்கள் வழியாகப் பேராசிரியரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதி அவர்களின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவர்கள் வழியாகப் பல செய்திகள் பெற்றேன். தமிழை உலக அளவில் அறிமுகப்படுத்திய அ.கி. இராமானுசன் அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது கொரியா நா.கண்ணன் அவர்கள் வழியாக இராமானுசத்தின் அண்ணன் பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. இதனால் அ.கி.இராமானுசன் பற்றிய பல புதிய செய்திகள் என் கட்டுரையில் வெளிவந்துள்ளன. கனடாவில் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்களும் பல வகையில் துணைநின்றுள்ளார்.

    இவ்வாறு பலரும் அன்புடன் வழங்கிய தகவல்கள் உதவியால்தான் இத்தொடரைச் சிறப்பாக உருவாக்க முடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் ஒவ்வொரு தொடர் உருவாகும்பொழுதும் பயனுடைய செய்திகளை உரையாடலில் வழங்குவார்கள். கட்டுரை வெளிவந்ததும் பாராட்டு நல்கி ஊக்கப்படுத்துவார்கள். அப் பெருமகனாருக்கு என்றும் நன்றியுடையேன்.

    தமிழ் ஓசை களஞ்சியத்தில் வெளிவந்த அன்று காலையில் இணையத்தில் என் பக்கத்திலும், மின்தமிழ் இதழிலும் வெளியிடுவேன். அவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர். சிலர் இதனைத் தங்கள் இதழ்களில் மறுபதிப்புச் செய்து உலக அளவில் பரப்பினர். தட்சு தமிழ் இணைய இதழில் அதன் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களும் உதவி ஆசிரியர் அறிவழகன் அவர்களும் பல கட்டுரைகளை மறுபதிப்பு செய்ததுடன் என்னுடைய பிற கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.

    அமெரிக்கன் ஆன்லைன்( AOL) என்ற இணைய இதழிலும் இத்தொடரின் கட்டுரைகள் மறுவெளியீடு கண்டன. இதனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பலரின் பார்வைக்கு இக்கட்டுரைகள் உட்பட்டதுடன் இணையத்தில் பதிவாகியுள்ளதால் யாரும் எந்த நொடியும் இக்கட்டுரைகளைப் பார்வையிடலாம். பாவாணர், பெருஞ்சித்திரனார் விரும்பிய தமிழ் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு வெளிவரும் தமிழ் ஓசையில் அயலகத் தமிழறிஞர்கள் தொடர் வெளிவந்தமையை வாழ்க்கையில் பெற்ற பெறற்கரும் பேறாக எண்ணுகிறேன். தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.

நனி நன்றி:

தமிழ் ஓசை,களஞ்சியம்,22.03.2009

வெள்ளி, 20 மார்ச், 2009

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக்கருத்தரங்கு


பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்பு

பெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி
இணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரை யாற்றினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கணினி மென்பொருள் பூங்கா இயக்குநர் முனைவர் கோபிநாத்கணபதி அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.


ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல்

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கருத்தரங்கக் கட்டுரைகள் பற்றிய மதிப்பீட்டை வழங்கினார்.கருத்தரங்க மலரில் வெளியிடப்பட்டுள்ள 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தட்டச்சு,வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையத்தின் சிறப்பு,உலகு தழுவிய தமிழ் இணைய முயற்சிகள்
பற்றி எடுத்துரைத்தார்.

கல்லூரி விரிவுரையாளர் அ.கோபிநாத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 2,30 மணிக்கு மீண்டும் அமர்வு தொடங்கியது.
நால்வர் கட்டுரை படித்தனர்.முதல் அமர்வின் நிறைவில் மு.இளங்கோவனின் தமிழும் இணையமும் என்ற பொருளில்உரை அமைந்தது.இணைய இணைப்பு சரியாக கிடைக்காததாலும் கணிப்பொறி ஒத்துழைக்க மறுத்ததாலும் திட்டமிட்டு உரையாற்ற
நினைத்தும் முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.எனினும் குறைந்த அளவு வசதிகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன்படும் பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன.
பல்வேறு இணையத்தளங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.

சென்னை,விருத்தாசலம்,பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.


அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்


மு.இ.உரையாற்றுதல்


பயிற்சியில் மு.இ


முனைவர் கோபிநாத் சிறப்பிக்கப்படுதல்


மு.இ. சிறப்பிக்கப்படுதல்


தமிழ்மணம் வரவேற்புப் பதாகை

வியாழன், 19 மார்ச், 2009

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக் கருத்தரங்கம்


அழைப்பிதழ்

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி, இணையத்தமிழ் தேசியக்கருத்தரங்கம் 20,21.03.2009 இருநாள் நடைபெறுகிறது(வெள்ளி, காரிக்கிழமை).

முதல்நாள் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமயில் நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரையாற்றவும் முனைவர் கோபிநாத் கணபதி அவர்கள் ஆய்வுத்தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி) கருத்துரை வழங்குவதுடன் பிற்பகல் அமர்வில் தமிழ்த்தட்டச்சு,தமிழ் இணையத்தள வளர்ச்சி,தமிழ் மின் இதழ்கள் பற்றி காட்சி விளக்கத்துடன் சிறப்புரை வழங்க உள்ளார்.

21.03.09 காரிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் தி.நெடுஞ்செழியன், முனைவர் டேவிட் பிரபாகர்,முனைவர் மா.கணேசன் உரையாற்ற உள்ளனர்.



அழைப்பிதழ்(பின்புறம்)

கலந்துகொள்ள விரும்புவோர் பேராசிரியர் சானகிராமன்(தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

செல்பேசி எண் : 9842523869

கொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...

கே.எஸ்.ஆர்.கல்லூரியில் தமிழ்மணம் அறிவிப்பு 
 
 தமிழில் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் நடத்த முன்பே திட்டமிட்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தினால் தமிழுக்கு ஆக்கம் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் பலருடன் தொடர்புகொண்டு பயிலரங்குகள் நடத்தும் முயற்சியில் அண்மைக் காலமாக வெற்றியுடன் செயல்படுகிறேன். அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் பயிலரங்கம் நடத்தும் முயற்சியில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பேருதவி புரிந்தனர். அவ்வகையில் அக் கல்லூரியில் 14.03.2009 காரி(சனி)க் கிழமை பயிலரங்கம் நடத்த கல்லூரி நிருவாகத்தினரும் முதல்வரும் அன்புடன் இசைவு தந்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் முனைவர் நாக. கணேசன் அவர்களும் இங்கு நடைபெற பல்லாற்றானும் உதவினார். 
 
  13.03.2009 பகல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணியிளவில் திருசெங்கோடு சென்று சேர்ந்தேன். இரவு கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். பேராசிரியர் இரா. சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில் முனைவர் த. கண்ணன் அவர்கள் வரவேற்றார். நாளை நடக்கும் நிகழ்வுகள் பற்றித் திட்டமிட்டபடி இரவு கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.
  
கே.எஸ்.ஆர்.கல்லூரி வரவேற்புப் பதாகை 
 
14.03.2009 காலையில் கருத்தரங்கிற்காக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள மயிலாடுதுறைப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் வந்துசேர்ந்தார். பிறகு செல்வமுரளி அவர்களும் வந்து சேர்ந்தார். அனைவரும் காலை உணவு உண்டு பேரா.சந்திரசேகரன் அவர்களுடன் கல்லூரி இயக்குநர் அவர்களையும் முதல்வர் அவர்களையும் கண்டோம். அங்கு எனக்கு முன்பாக புலவர் செ.இராசு அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புலவர் இராசு அவர்களுடன் அரங்கிற்கு வந்தேன். மாணவர்களும் இணைய ஆர்வலர்கள் பலரும் காத்திருந்தனர். 
 
  திட்டமிட்டபடி 10 மணிக்குப் பயிலரங்கு தொடங்கியது. உள்ளூர்ச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதழாளார் திரு.விசயகுமார் அவர்கள் தம் சங்கமம் இணைய இதழுக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் தளத்துக்காகவும் செய்திகள் காணொளியில் பதிவு செய்யும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையத்துறையில் இயங்கி வருபவர். அவர் பற்றி முன்னமே அறியாததால் அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. பிறகுதான் அவர் ஆற்ற்ல் நேரடியாக உணர்ந்தேன். இனிவரும் காலங்களில் அவரை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளேன். இது பற்றி அவருடன் உரையாடி அவர் அன்பையும் நட்பையும் பெற்றேன். 
 
 திரு.மா.கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா.சந்திரசேகரன் விருந்தினர்களை நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் நா.கண்ணன் (கல்லூரி முதல்வர்) அவர்கள் வாழ்த்துரை நல்கினார். புலவர் செ. இராசு அவர்கள் அரியதொரு தொடக்கவுரையாற்றினார். திரு.டி.என்.காளியண்ணக் கவுண்டர் அவர்களின் திருமகனார் திரு. இராசேசுவரன் (ஓய்வு பெற்ற நீதிபதி) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தார். நீதிபதி ஐயா அவர்கள் நன்கு பேசினார். என்மேல் அன்பு பாராட்டினார். கவுண்டர் ஐயா அவர்கள் சென்னை சென்றுள்ளதாகவும் அடுத்தமுறை வந்து கண்டுபேசலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் உள்ளூர் ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். 
 
கல்லூரி முதல்வர், நீதியரசர் இராசேசுவரனுடன் மு.இ.
    நீதியரசர் இராசேசுவரன் அவர்களுடன் மு.இ.
 
  தேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.30 மணிக்கு என் உரை அமைந்தது. 1.00 மணிவரை என் உரை தொடர்ந்தது. தமிழ் இணையத்தள வளர்ச்சி, தட்டச்சு.99 விசைப்பலகை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மதுரைத் தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை, விருபா, நூலகம், தமிழ்மணம் பற்றிய செய்திகளைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். இணைய இணைப்பு சரியாக சில நேரம் கிடைக்காததால் சிறிது தொய்வு ஏற்பட்டபொழுது வேறு தகவல்களைப் பரிமாறி இயல்பாக அரங்கை நடத்த முயன்றேன். திரு.இரவிசங்கர் (விக்கி ஆர்வலர்) அவர்களை அங்குதான் முதன்முதல் சந்தித்தேன். எனக்குத் தேவையான சில காட்சி விளக்கங்களுக்கு உதவினார். பேரா.குணசீலனும் உதவினார். 
 
  பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நிகழ்ச்சிக்காகக் கரூரிலிருந்து வந்திருத்தார்.அவர் மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர்.எனவே நா.கணேசன் அவர்களுக்குப் பேராசிரியர் தங்கமணி ஐயா நன்கு அறிமுகம் ஆனவர். கணேசன் அவர்களின் தகவலால் பேராசிரியர் வந்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னமே பேரா.பே.க.வேலாயுதம் அவர்கள் இல்லத்தில் தங்கமணி ஐயாவைக் கண்டு உரையாடி நான் நட்புப்பெற்றவன். அவரைக் கண்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தருமபுரியிலிருந்து பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார். தமிழ் ஓசை களஞ்சியத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது. அதனைக்கண்டு திருச்சியிலிருந்து ஈழத்தமிழறிஞர் மருத்துவர் வே.த.லோகநாதன் அவர்கள் தம் மகளாருடன் வந்து பயிற்சியில் கலந்துகொண்டு ஆர்வாமாகப் பயிற்சிபெற்று கடைசிவரை இருந்து விடைபெற்றனர். பகல் உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்தோம். விடுதியில் சிறப்பாக உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள். 
 
 பகல் 2.30 மணியளவில் மீண்டும் அமர்வு தொடங்கியது. திருவாளர்கள் இரா.குணசீலன், த.கண்ணன், ப.சரவணன் கட்டுரைகளைக் காட்சி விளக்கத்துடன் படைத்தனர். விக்கிபீடியா பற்றி இரவிசங்கர் அவர்களும், இணையத்தளப் பாதுகாப்புப் பற்றி செல்வமுரளியும் இடையில் உரையாற்றினார். நேரம் அவர்களுக்கு அதிகமாக வழங்கமுடியாமைக்கு வருந்தினேன். பயனுடைய தகவல்களைத் தந்தனர். நான் மின் இதழ்கள் பற்றி மாலை 4 மணி வரை உரையாற்றினேன். பிறகு எளிமையாக நன்றியுரைத்தலுடன் நிறைவு விழா நடந்தது. தமிழ்த்துறைக்குச் சென்று அனைவரிடமும் விடைபெற்று விடுதி அறைக்கு வந்தேன். அங்குப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களும் பேராசிரியர் கண்ணன் (மயிலாடுதுறை) அவர்களும் காத்திருந்தனர். கண்ணன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு இணையம் பற்றிய தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு, கரூருக்கு நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். 
 
 முதலில் திருச்செங்கோடு வரை மயிலாடுதுறை கண்ணன் எங்களுடன் வந்தார். அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நானும் பேரா. இராசசேகர தங்கமணியும் வேலூர் வழியாக கரூர் வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் காலையில் சந்திப்பதாக உரைத்து விடைபெற்றார். 9.30 மணியளவில் கரூர் வந்து வள்ளுவர் விடுதியில் கரூர் மாவட்ட நூலகர் திரு.செ.செ. சிவக்குமார் ஏற்பாட்டில் தங்கியிருந்தேன். அந்த விடுதியின் உரிமையாளர் மிகப்பெரும் செல்வ வளம் உடையவர் எனவும், திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் எனவும் வள்ளுவர் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வைத்துள்ளதாகவும் அறிந்தேன்.அவர் பெயர் திருவாளர் செங்குட்டுவன் ஐயா என அறிந்தேன். செங்குட்டுவன் ஐயா விடுதியில் தமிழறிந்த இளங்கோ தங்குவது சிறப்புதானே!. மின்னஞ்சல் அனுப்பல், படித்தல் முதலிய பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது இரவு 12 .30மணியிருக்கும். 
 
  15.03.2009 காலையில் திரு.சிவக்குமார் அவர்கள் சென்னைக்குப் பணியின் பொருட்டுச் சென்றவர்கள் தொடர்வண்டியில் திரும்பினார். வண்டியில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்டு நடக்கவேண்டிய பணிகளைத் திட்டமிட்டார். காலையில் மாவட்ட நூலக அதிகாரி திரு.செகதீசன் ஐயா அறைக்கு வந்து ஒருவரை ஒருவர் கண்டு வணங்கினோம். இவர்களின் சொந்த ஊர் தாரமங்கலம் பகுதியில் இருந்ததாலும் தருமபுரியில் இவர்கள் முன்பு பணிபுரிந்ததாலும் அங்குள்ள என் நண்பர்கள் வழியாக அவர்களின் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. இருவரும் சிற்றுண்டி முடித்துக்கொண்டு மாவட்ட நூலகத்திற்குச் சென்றோம். 
 
கரூர் நூலக முகப்பில் தமிழ்மண வரவேற்பு 
  பயிற்சி பெறுவோர் 
  நூலகர்களுக்குப் பயிற்சியளிக்கும் நான் 
  செ.செ.சிவக்குமார், மு.இ., செகதீசன் 
  
 முனைவர் கடவூர் மணிமாறன் கருத்துரை 
 
  காலை 9 மணிக்குச் சென்ற பிறகுதான் திரு செ.செ.சிவக்குமார் நேரில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் மட்டும் தொடர்பு கொண்டிருந்தோம். அவரைப் பார்த்ததும் எனக்கு அவர்மேல் ஓர் ஈடுபாடு வந்தது. மிகச்சிறந்த செயல்திறம் உடையவர். கரூரில் என்ன உதவியையும் யாரிடமும் பெற்றுக் கொள்ளும்படியான திறமையும் வினைத்திட்பமும் கொண்டவர்.மாவட்ட மைய நூலகத்தை இவர் மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகமாக அது விளங்குகிறது. கணிப்பொறிகள் திரும்பிய திசைகளில் இருந்து அனைவருக்கும் உதவக் காத்துள்ளன. மாணவர்களை நூலகத்தின் பக்கம் இழுக்க பல திட்டங்களை வைத்து நடைமுறைப் படுத்தியவர். நகரின் நடுவே நூலகம் கரூருக்கு அழகுக்கு அழகு சேர்த்து விளங்குகிறது. 
 
  அரங்கில் 9.15 மணிக்கு என் விளக்கம் தொடங்கியது. அங்கிருந்த கணிப்பொறியை முதற்கண் தமிழில் இயங்கும்படி செய்தேன்.பின்னர் சிவக்குமார் அவர்களின் கணிப்பொறியும் தமிழில் இயங்கும்படி செய்தேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகர்களுக்கும் பயன்படும் வண்ணம் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30 நூலகர்கள், முனைவர் கடவூர் மணிமாறன், பேரா. இராச்சேகர தங்கமணி, திரு.காமராசு உள்ளிட்ட இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நூலக அலுவலர் அவர்களும் சிவக்குமார் அவர்களும் பிற பணிகளையும் கவனித்தபடி அரங்கை வழிநடத்தினர். 
 
   தமிழ்த் தட்டச்சிலிருந்து அனைத்துத் தகவல்களையும் பகல் ஒரு மணிவரை எடுத்துரைத்தேன். கணிப்பொறியை எனக்கு உதவிக்கு இயக்க இருவர் இருந்தனர். முறைப்பாட்டில் மின்சாரம் 10-12 நிற்பதாக இருந்தது.சிவக்குமாரின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்ந்து வந்தது. உள்ளூர் செய்தியாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் வந்து குவிந்தனர். இணையப் பயிலரங்கச் செய்தி கரூர் நகரம் முழுவதும் பரவியது. ஒரு மணி நேரத்தில் பரவியது. 1-00-2.30 மணிவரை உணவுக்காகப் பிரிந்தோம். 
 
  மீண்டும் மின்னிதழ்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.மின்னஞ்சலில் இருக்கும்பொழுது திரு.கண்ணன் (கொரியா) மயிலாடுதுறை நெடுஞ்செழியன், அறிவழகன் உள்ளிட்டவர்கள் இணைப்பில் வந்து மகிழ்வூட்டினர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பவுது உள்ளிட்ட பல தகவல்கள் என் இரு அமர்வுப் பேச்சிலும் தெரிவிக்கப்பட்டன. பலரும் புதிய அனுபவங்களை பெற்றனர். மாலை 5.30 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு 6 மணிக்குத் திரும்பினேன். 
 
   அரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு கிங் தொலைக்காட்சி நிலையம் அழைத்துச் செல்லப்பட்டேன். திரு.சிவராமன் என்ற இதழாளர் முன்பே வந்து அழைப்புவிடுத்தார்.ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் இணையம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திப் பதிவு செய்துகொண்டார். நிறைவில் ஓரிரு நாட்டுப்புறப் பாடல்களை நான் பாடும்படி நேர்ந்தது. அதனைக் கண்ட திரு. சிவராமன் நாட்டுப்புறப் பாடலில் நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டோமே என வருந்தினார். மீண்டும் ஒருமுறை வருவதாக உரைத்து புறப்பட்டேன். இரவு உணவு நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களுடன் முடித்து அறைக்குச் சென்றபொழுது இரவு 10.30 மணியிருக்கும். சில பணிகளை முடித்து ஓய்வெடுக்கும் முன்பாக கரூர் வழக்கறிஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் காலையில் சந்திப்பதாகத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். (கிங் தொலைக்காட்சி ஒளிபரப்பு 18.03.2009 இரவு 9-10 ஒருமணி நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.) 
 
  மறுநாள் நடந்த கரூர் நண்பர்கள் சந்திப்பு, நாமக்கல் நிகழ்ச்சி பற்றி பிறகு எழுதுவேன்...

புதன், 18 மார்ச், 2009

பாவலர் குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)-மலேசியா


குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா) 

  தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார். மலசியாவில் திராவிடர் கழகம், தமிழ்நெறிக்கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர். தலையாயவர். திராவிடர் கழகம், மலேசிய இந்தியப் பேராயக்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் சிலகாலம் தொடர்புகொண்டிருந்தாலும் இவற்றால் மொழித்தூய்மைக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் பயனில்லை என உணர்ந்து பாவாணர் தமிழ் மன்றம் என்ற அமைப்பை நானூறு உறுப்பினர்களுடன் 1960 இல் தோற்றுவித்தவர். 

    ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம், மொழி, கலை, பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றிய அந்த அமைப்பு தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டது. பாவாணரின் நூல்கள், தென்மொழி இதழ்கள் இவர்களின் தமிழ்ப்பணிக்கு உதவின. சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர். பன்னூல் ஆசிரியராக விளங்கியவர். பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர். இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. 

     குறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும்.இவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்துத் திருப்பத்தூரை அடுத்து இரணசிங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சாத்தையா, சிட்டாள் ஆகியோருக்கு 05.05.1925 காரிக்கிழமை முதல் மகனாகப் பிறந்தவர். 1930 இல் திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ் இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 

     1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழித் தன்மானப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராகவும் மாறினார். பாவாணரின் ஒப்பியன் மொழிநூல் படித்த இவர் பாவாணர் மேலும் அவர் கொள்கையின் மேலும் மிகுந்த பற்றுடையவர் ஆனார். பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பல நிலையிலும் துணை நின்றார். பாவாணர் குறிஞ்சிக்குமரனாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது. 

 குறிஞ்சிக்குமரனார் பேரா மாநிலத்தின் இலக்கியப் பொறுப்பாளராக ம. தே. காங்கிரசு கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர். அந்தச் சூழலில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், முனைவர் அ.சிதம்பரநாதன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்தித் தமிழ்ப்பணியாற்றினார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைபெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார். இச்செயல் இவர்தம் சமூக ஈடுபாடு காட்டுவனவாகும். 1960 இல் பாவாணர் மன்றம் தோற்றம் பெற்றதும் தமிழகத்திலிருந்து தனித்தமிழ் உணர்வு மிக்க பலரை அழைத்து மதித்துப் போற்றி அனுப்பியவர், தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் அறிஞர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர். 

    தென்மொழி இதழை மலேசியாவில் ஆயிரக் கணக்கில் விற்பனை செய்வதற்கு உரிய வழிகளை வகுத்தவர். பாவாணர் நூல்கள் மலேசிய மண்ணில் பரவ வழிவகுத்தவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மலையகச் செலவு செய்தபொழுது( 1974) அவரை வரவேற்று சொற்பெருக்காற்ற உதவியவர். முனைவர் வ.சுப.மாணிக்கம், முனைவர் மு.தமிழ்க்குடிமகன், கு.சா.ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்து அறிஞர்களை உரையாற்றச் செய்த பெருமைக்கு உரியவர். தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டிருந்தவர். பாவாணர் மன்றம் பற்றிப் பெருஞ்சித்திரனார் மிகச் சிறப்பாகப் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழகத்தில் உள்ள தம் உறவினர்களைக் காண குறிஞ்சிக்குமரனார் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து சென்றுள்ளமையை அறியமுடிகிறது. அவர் வழியினரும் அவ்வகையில் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் விருப்பம். 

  தென்மொழி வளர்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதுடன் தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் உள்ளிட்ட இதழ்களின் வளர்ச்சியிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். சிலகாலம் தென்மொழி உள்ளிட்ட ஏடுகளின் புரப்பாளராகவும் பணிபுரிந்தார். செலாமில் இருந்த தமிழ்நெறிக்கழகத்தின் வழியாகப் பல்வேறு பணிகளைச் செய்தவர்.“பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியவர். குறிஞ்சிக்குமரானாரின் தனித்தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பலரும் மதித்துள்ளனர். பல்வேறு சிறப்புகளை அவர் வாழுங்காலத்தில் பெற்றுள்ளார். 

     பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி போற்றித் “தமிழ்ச்செல்வர்” என்ற விருது பொற்பதக்கத்தில் வழங்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரிய ஒன்றாகும். குறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப் புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாசா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க் குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்வாறு பல பட்டங்களும் விருதுகளும் பெற்றாலும் மலேசியத் தமிழர்களால் தனித்தமிழ் அறிஞர் என்று மதிக்கப்படுவதே உயர்ந்த பட்டமாகக் கருதத் தகுந்தது. 

     1955 ஆம் ஆண்டு முதல் பாடல் பாடி வருபவர்.சிறந்த புலவர். நெடுங்காலமாக இலக்கிய வகுப்புகள் நடத்திப் பலர் புலமைபெறத் துணை நின்றவர். பலருக்கும் இவர் வழிகாட்டியாக விளங்கியவர். நிலைபெற்ற தலைவன் என்பது இவர் வெளியிட்டிருக்கும் நூலின் பெயர். 13.09.1992 இல் இவர்தம் தமிழருவி நூல் வெளியிடப்பெற்றது. பாவாணருக்கு மலர் வெளியிட்ட பெருமைக்கு உரியவர். பல்வறு மலர்கள், இதழ்களில் எழுதியுள்ளார். இவருக்குப் பிறகும் இவர் வழியில் பலநூறுபேர் மலேசியாவில் தமிழ்ப்பணிபுரியும்படி ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கியுள்ளார்.

குறிஞ்சிக்குமரனார் 1993 இல் எனக்கு எழுதிய மடல்

திரு.கருப்பையா அவர்கள் எனக்கு எழுதிய மடல்(1993)



திரு.கருப்பையா அவர்களின் மடல் தொடர்ச்சி 

     இவர் மாணவர் ந.கருப்பையா அவர்கள் பாவாணர் மன்றத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றார். குறிஞ்சிக்குமரனாருக்கு வாய்த்த மக்கட் செல்வங்களும் தந்தையார் வழியில் இயன்ற வகையில் தமிழ்ப்பணிபுரிந்து வருகின்றனர். தந்தை பெரியார் மறைவு பற்றி குறிஞ்சிக்குமரனார் அவர்கள் அறிவுலகின் இமயமலை! புரட்சித் தென்றல்! அரியதமிழ்ப் பெருந்தலைவன்! தென்னர் வாழ்வில் செறிந்துதிகழ் மறுமலர்ச்சித் துறைகள் தோறும் சிந்தனையால் தெளிவேற்றிச் செப்பஞ் செய்தோன்! நெறிபிறழாத் திராவிடத்தை நிலைக்கச் செய்தே நீடுயிர்த்த பேரியக்கம்! புதிய ஊழி! குறிதவறாக் கொள்கைக்கே உயிர் விடுத்த கொஞ்சுதமிழ்க் குலவிளக்கு மறைந்த தம்மா! என்று பாடியுள்ளமை போற்றத்தக்கது. 

     மலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55மணிக்கு மீளாத் துயில் கொண்டார். அவர் வாழ்வு தமிழ் வாழ்வு.தமிழ் வாழும் காலம் எல்லாம் அவர் வாழ்வார்.


தமிழ் ஓசை நாளிதழில்(15.03.09) 

 நனி நன்றி:
  தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 25 
முனைவர் கடவூர் மணிமாறன் 
முனைவர் முரசு. நெடுமாறன்(மலேசியா) 
கோவி.மணிவரன்(மலேசியா) (படம், கட்டுரைக் குறிப்புகள்) சுப.நற்குணன்(மலேசியா) 
மாரியப்பன் ஆறுமுகம்(மலேசியா) 
இரா. திருமாவளவன்(மலேசியா) 
தென்மொழி, தமிழ்நிலம் இதழ்கள்

செவ்வாய், 17 மார்ச், 2009

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி இன்று 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.நான் தமிழ் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்குகிறேன்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

திங்கள், 16 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு முதல் அமர்வு நிறைவு...

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் 16.03.2009 திங்கள் காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் உரிய நேரத்தில் கலந்துகொண்டேன்.

மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.யுவராசு அவர்கள் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்ட நூலகர் திரு.இரா.வேல்முருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நூலகர்களும்,இணைய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த அனைத்துச் செய்திகளும் காட்சி விளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

பயிலரங்கச் செய்திகள் உடனுக்குடன் உள்ளூர்த் தொலைக்காட்சிகள், செய்தி ஏடுகள் வழியாக நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.பகல் ஒரு மணி வரை பயிலரங்கு நடந்தது.
உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்துள்ளனர்.

இரண்டு மணிக்கு மின்வடிவில் வெளிவரும் இதழ்கள் அறிமுகம் செய்யும் காட்சி விளக்கமும், வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஞாயிறு, 15 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு

நாமக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைநூலகம்,ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளும்
தமிழ் இணையப்பயிலரங்கு 16.03.2009 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்துப் பயிற்சியளிக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட மைய நூலக அலுவலர்,மாவட்ட நூலகர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர்வு சிறப்புடன் நிறைவு...

கரூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் இணையப் பயிலரங்கம் இன்று 15.03.2009 ஞாயிறு காலை 9 மணிக்குத் தொடங்கியது.கரூர் மாவட்டத்தைச் சார்ந்த நூலகர்கள் 25 பேரும்
ஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மைய நூலகர் திருசெ.செ.சிவக்குமார் அவர்கள் வரவேற்றார்.மாவட்ட நூலக அலுவலர் திரு,சே.செகதீசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.

புதுச்சேரி பாரதிசான் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு,99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம்,மதுரை இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,விருபா தளம் உள்ளிட்டவற்றையும் பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

மு.இளங்கோவன் மின்னஞ்சல் தமிழில் அனுப்பும் முறையைச் சுட்டிக்காட்டியும்,பிற நண்பர்களுடன் பயிற்சியாளர்களை உரையாடவைத்தும் உரையைச் சோர்வில்லாமல் நிகழ்த்தினார். பலரும் மின்னஞ்சல் உருவாக்கும் விதத்தை அறிந்தனர்.இந்தச்செய்தி உடனுக்குடன் கரூர் செய்தியாளர்களால் தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது.

முனைவர் கடவூர் மணிமாறன்,பேராசிரியர் இராசசேகர தங்கமணி,தலைமையாசிரியர் காமராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவனின் உரை இடம்பெறும்.

சனி, 14 மார்ச், 2009

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு

  கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 15.03.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 4மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கு நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர். 
 
 புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கில் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் பற்றியும், தமிழ்த்தட்டச்சு, மின் நூல்கள், இணைய இதழ்கள், வலைப்பூ உருவாக்ககம், நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிக்கிறார். மாவட்ட மைய நூலகர் திரு.சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் திரு.செகதீசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முனைவர் கடவூர் மணிமாறன் உள்ளிட்ட இணையத்தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியது...

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 14.03.2009 காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.பேராசிரியர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் நா.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புலவர் செ.இராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.திரு.டி.என்.காளியண்ணன் அவர்களின் திருமகனார் திரு டி.என்.கே இராசேசுவரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
முதல் அமர்வில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு முனவைர் குணசீலன் அவர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி உரையாற்றினார்.

பயிலரங்கிற்குத் திருவாளர்கள் இரவிசங்கர்(விக்கி),இராசசேகர தங்கமணி, செல்வமுரளி, விசயகுமார்(சங்கமம்) உள்ளிட்ட கணிப்பொறி வல்லுநர்கள்,ஆர்வலர்கள் வந்துள்ளனர்.மேலும் நாமக்கல்,கோவை மாவட்டத்தின் பல கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அமர்வு தொடங்கியுள்ளது.

செவ்வாய், 10 மார்ச், 2009

தமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


சட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்

 தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் ஆவார். வடார்க்காடு மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு. காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக வாய்த்தவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள். 15.04.1914 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் செய்யாறு உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

 1932 இல் எட்டாம் வகுப்பில் பயின்ற பொழுது வீரபத்திரப்பிள்ளையிடம் படித்தவர். அவர் மாற்றலாகி வேலூருக்குச் சென்றபொழுது அந்த இடத்திற்கு ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பணிக்கு அமர்ந்தார். அவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை வகுப்பிலும் தனியாகவும் கற்றுப் புலமை பெற்றவர் நம் புலவர் அவர்கள். 1934 இல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். ஔவை. துரைசாமிப் பிள்ளையின் ஊக்கத்தால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகையினை நன்கு கற்றவர்.

  கா. கோவிந்தனார் 1935 இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர். வாலி வழக்கு என்ற நூல் எழுதிய புரிசை முருகேச முதலியார் அவர்கள் முன்னின்று நடத்திய பானுகவி மாணவர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் மாணவப் பருவத்தில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர் புலவர். படிக்கும் காலத்திலேயே கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, ஞானியார் அடிகள், மறைமலையடிகள் உள்ளிட்டவர்களுடன் பழகிய பெருமைக்கு உரியவர். செய்யாறு பகுதியில் தமிழ் உணர்வு தழைத்து வளரப் பாடுபட்டவர்களில் புலவரின் பங்களிப்பு மிகுதி. இவருக்கு அணுக்கமாக இருந்தவர் மாவண்ணா தேவரசான் அவர்கள் ஆவார். மாவண்ணா தேவராசன் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமைக்கு உரியவர் (என் முனைவர் பட்ட ஆய்வேடு, பொன்னி பாரதிதாசன் பரம்பரை நூலில் இவர் பற்றி விரித்து எழுதியுள்ளேன்).

 1942 இல் வேலூரில் தம் ஆசிரியர் துரைசாமியார் பணிபுரிந்த அதே பள்ளியின் பணியில் புலவர் கா. கோவிந்தனார் இணைந்து பணிபுரிந்தார். 1944 வரை பணி தொடர்ந்தது. தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல். பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லவர்.

 வேலூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபொழுது கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில் தெ.பொ.மீ. தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் உரையாற்ற அழைத்தார். அதன் பிறகு அவரின் நட்பு வளர்ந்தது. பல நூல்கள் கழகம் வழி வெளிவர அந்தச் சந்திப்பு காரணமானது.

 புலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது. அதன் பிறகு சங்க காலப் புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையின் முதல்நூல் 1952 - லும், அரசர் வரிசையில் கடைசி நூல் 1955 - லும் வெளிவந்தன.

 மலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் வழியும் புலவரின் நூல்கள் வெளிவந்தன. 1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது. 1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Orgin and Spread Tamils என்ற நூலைத் தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர். அவரின் மற்றொரு நூலான Stone Age In India என்பதை இந்தியாவில் கற்காலம் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்.

புலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம்.

 சங்க இலக்கிய ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, அரசியல் பணி என்பதே அப்பகுப்பு. இவர் பற்றிய முனைவர் பட்ட நிலையில் ஆய்வுகள் வெளிவரும்பொழுதே இவர்தம் தமிழ்ப்பணி உலகுக்கு நிலை நிறுத்தப்படும். இவர் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். விரைவில் முழுமையாக வெளியிடுவேன்.


புலவர் கா.கோவிந்தன் அவர்கள்


புலவர் கா.கோவிந்தனார் அவர்களின் நூல்கள்

சங்க காலப்புலவர் வரிசை

01.நக்கீரர்
02.பரணர்
03.கபிலர்
04.ஔவையார்
05.பெண்பாற் புலவர்கள்
06.உவமையாற் பெயர் பெற்றோர்
07.காவல பாவலர்கள்
08.கிழார்ப்பெயர் பெற்றோர்
09.வணிகரிற் புலவர்
10.மாநகர்ப் புலவர்கள்-1
11.மாநகர்ப் புலவர்கள் -2
12.மாநகர்ப் புலவர்கள்-3
13.உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
14.அதியன் விண்ணாத்தனார் முதலிய 65 புலவர்கள்
15.குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
16.பேயனார் முதலிய 39 புலவர்கள்
17.இலக்கிய வளர்ச்சி
18.இலக்கியப் புதையல் 1.நற்றிணை விருந்து
19.இலக்கியப் புதையல்-2 குறுந்தொகைக் கோவை
20.குறிஞ்சிக்குமரி
21.முல்லைக்கொடி
22.மருதநில மங்கை
23.நெய்தற் கன்னி
24.பாலைச்செல்வி
25.கூத்தன் தமிழ்
26.சாத்தன் கதைகள்
27.திருக்குறள் சொற்பொழிவுகள்
28.மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
29.காவிரி-கட்டுரைத்தொகுதி
30.சிலம்பொலி
31.புண் உமிழ் குருதி
32.அடுநெய் ஆவுதி
33.கமழ்குரல் ஆவுதி
34.சுடர்வீ வேங்கை
35.வடு அடும் நுண் அயிர்
36.முல்லை
37.வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி
38.மனையுறை புறாக்கள்
39.பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை
40.புலாஅம் பாசறை
41.கட்டுரைத்தொகுப்பு

இலக்கணம்

42.கால்டுவெல்- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-தமிழாக்கம்
43.செந்தமிழ் எழுதப் பயில

வரலாறு

44.திருமாவளவன்

சங்க கால அரசர் வரிசை

45.சேரர்
46.சோழர்
47.பாண்டியர்
48.வள்ளல்கள்
49.அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
50.திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
51.அறம் உரைத்த அரசர்
52.கலிங்கம் கண்ட காவலர்
53.இலக்கியம் கண்ட காவலர்
54.தமிழர் தளபதிகள்
55.தமிழகத்தில் கோசர்கள்
56.கழுமலப் போர்
57.தமிழர் வாழ்வு
58.தமிழர் பண்பு
59.தமிழர் வாணிகம்
60.பண்டைத்தமிழர் போர்நெறி
61.தமிழர் வரலாறு-தொகுதி-1
62.தமிழர் வரலாறு-தொகுதி-2
63.தமிழர் தோற்றமும் பரவலும்
64.ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
65.தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள்
66.தமிழக வரலாறு-கோசர்கள்
67.தமிழக வரலாறு -கரிகால் பெருவளத்தான்
68.இந்தியாவில் கற்காலம்
69.குடிமகனின் அடிப்படை உரிமையா? சட்டமன்ற உரிமையா?
(பட்டியலை விரைவில் முழுமைப்படுத்துவேன்)

(என் படைப்புகளின் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள் ).

திருக்குறள் உரையாசிரியர்கள்

1. மணக்குடவர் (1917-25)
2. பரிப்பெருமாள் (1948)
3. பரிதியார் (1938-48)
4. காலிங்கர் (1948)
5. பரிமேலழகர் (1861)
6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)
7. இராமாநுசக் கவிராயர் (1840)
8. களத்தூர் வேதகிரியார் (1850)
9. இட்டா குப்புசாமி (1873)
10. சுகாத்தியர் (1889)
11. சுந்தரம் (1893)
12. கோ. வடிவேலு (1904)
13. அயோத்திதாசன் (1914)
14. கா. சுப்பிரமணியனார் (1928)
15. க.சு.வி. இலட்சுமி (1929)
16. ஆ. அரங்கநாதனார் (1932)
17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)
18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)
19. வ.சுப. மாணிக்கம் (1991)
20. திருக்குறளார் வீ. முனுசாமி (1983)
21. ந.சி.கந்தையா (1949)
22. மு. வரதராசனார் (1949)
23. அ.மு. குழந்தை (1949)
24. சுகவனம் சிவப்பிரகாசன் (1949)
25. மு.இரா. கந்தசாமி (1949)
26. ச. தண்டபாணி தேசிகர் (1950-52)
27. கா. அப்பாத்துரையார் (1950-54)
28. ஈக்காடு சபாபதி (1951)
29. மயிலை சிவமுத்து (1953)
30. பால்வண்ணன் (1953)
31. கோ. வரதராசன் (1954)
32. ச. வெள்ளைச்சாமி (1954)
33. நாமக்கல் வெ. இராமலிங்கம் (1954)
34. பாவேந்தர் பாரதிதாசன் (1956)
(வள்ளுவர் உள்ளம் 85 பாக்கள்)
35. இரா. சாரங்கபாணி (1998)
36. செ.அர.இராமசாமி (1959)
37. சி. இலக்குவனார் (1959)
38. சுந்தர சண்முகனார் (1959)
39. அரசு மணி (1960)
40. மீ. கந்தசாமி (1960)
41. மு. கோவிந்தசாமி (1962)
42. க.தி. மாணிக்கவாசகம் (1962)
43. கி.வா. செகந்நாதன் (1962)
44. வை.மு.கோபாலகிருட்டின மாச்சாரியார் (1965)
45. செந்துறைமுத்து (1966)
46. இரா. கன்னியப்பநாயக்கர் (1968)
47. ஞா. தேவநேயப்பாவாணர் (1969)
48. ச. சாம்பசிவன் (1969)
49. கு. சிவமணி (1970)
50. ஐயன்பெருமாள் கோனார் (1973)
51. தே. ஆண்டியப்பன் (1973)
52. பி.சி. கணேசன் (1983)
53. இரா. இராசேந்திரன் (1985)
54. கு.ச. ஆனந்தன் (1986)
55. புலியூர்க்கேசிகன் (1986)
56. தி. சீனிவாசன் (1986)
57. மா.க.காமாட்சிநாதன் (1987)
58. இரா. நாராயணசாமி (1987)
59. அ. ஆறுமுகம் (1989)
60. பூவண்ணன் (1989)
61. ப.கோ. குலசேகரன் (1989)
62. இரா. இளங்குமரன் (1990)
63. ம.பி. சுதாகர் (1990)
64. அ. பாண்டுரங்கன் (1990)
65. கு. மோகனராசு (1994)
66. வி.பொ. பழனிவேலனார் (1990)
67. முல்லை முத்தையா (2003)
68. இரா. நெடுஞ்செழியன் (1991)
69. மு.பெரி.மு.இராமசாமி (1991)
70. ஞா. மாணிக்கவாசகன் (1991)
71. சு. இராமகிருட்டினன் (1991)
72. நாராயணவேலு (1992)
73. ந. சுப்பு (1993)
74. சி. இராசியண்ணன் (1993)
75. தே.ப.சின்னசாமி (1993)
76. இல. சண்முகசுந்தரம் (1994)
77. வேதாத்திரி மகரிசி (1994)
78. அ. மாணிக்கம் (1994)
79. கனகாசுந்தரம் (1995)
80. சுசாதா (1995)
81. அரிமதி தென்னகன் (1995)
82. பூவை அமுதன் (1995)
83. வாசவன் (1995)
84. தமிழ் வேட்பன் (1995)
85. எம்.ஆர்.அடைக்கலசாமி (1995)
86. இரா. கனக சுப்புரத்தினம் (1996)
87. மு. கருணாநிதி (1996)
88. வே. கபிலன் (1996)
89. து. அரங்கன் (1996)
90. மாவண்கிள்ளி (1996)
91. க. பாலகிருட்டிணன் (1997)
92. சி. வெற்றிவேல் (1997)
93. அ. சங்கரவள்ளிநாயகம் (1997)
94. பெருஞ்சித்திரனார் (1997)
(மெய்ப்பொருளுரை 240 பாக்கள்)
95. முல்லை வேந்தன் (1997)
96. இராம. சுப்பிரமணியன் (1998)
97. கோ. பார்த்தசாரதி (1998)
98. நா. விவேகானந்தன் (1998)
99. நாக. சண்முகம் (1999)
100. நல்லாமூர் கோ. பெரியண்ணன் (1999)
101. மு. அன்வர் பாட்சா (1999)
102. தமிழண்ணல் (1999)
103. மேலகரம் முத்துராமன் (1999)
104. சாலமன் பாப்பையா (1999)
105. கருப்பூர் அண்ணாமலை (2000)
106. தனுசுகோடி (2000)
107. கல்லாடன் (2000)
108. இராதா முரளி (2000)
109. விருகை ஆடலரசு (2000)
110. க. சண்முக சுந்தரம் (2000)
111. பே.சு. கோவிந்தராசன் (2000)
112. பவானிதாசன் (2000)
113. நேருகுமாரி கண்ணப்பிரத்தினம் (2000)
114. குமரி சு. நீலகண்டன் (2000)
115. கருமலைத் தமிழாழன் (2000)
116. அர. சிங்காரவேலன் (2000)
117. ஆருர் தாசு (2000)
118. ஆ.வே. இராமசாமி (2001)
119. அ.பொ.செல்லையா (?)
120. அருணா பொன்னுசாமி (2001)
121. சீர் சந்திரன் (2001)
122. ச.வே.சுப்பிரமணியன் (2001)
123. வ. சங்கரன் (2002)
124. ஆ. காளத்தி (2002)
125. செ. உலகநாதன் (2002)
126. நா. பாலுசாமி (2002)
127. அழகர் சுப்புராசு (2002)
128. பெ. கிருட்டிணன் (2003)
129. பகலவன் (2003)
130. கோ. இளையபெருமாள் (2003)
131. தொ. பரமசிவன் (2003)
132. அ.மா.சாமி (2003)
133. நாஞ்சில்மில்லர் (2003)
134. சரசுவதி பா. அருத்தநாரீசுவரர் (2004)
135. இரா. பி. சாரதி (2004)
136. சுந்தர ஆவுடையப்பன் (2004)
137. பொற்கோ (2004)
138. ஈ. சாந்தி மங்கலம் முருகேசன் (2004)
139. பா. வளன் அரசு (2005)
140. தங்க பழமலை (2005)
141. ஏ. இராசேசுவரி (2005)
142. அ. தமிழ் இனியன் (2005)
143. க.தமிழமல்லன் (2006)
144. மாதவன் (2006)
145. புலவர் அ.சா.குருசாமி (2006)
146. பெண்ணை வளவன் (2006)
147. கடவூர் மணிமாறன் (2006)
148. க.ப. அறவாணன் (2006)
149.அர்த்தநாரி(நங்கவள்ளி)

ஞாயிறு, 8 மார்ச், 2009

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்


அ.பு.திருமாலனார்

 சிங்கப்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு பழையன புகுதலும்... என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன் (2001,செப்டம்பர்). உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட உண்மையான பன்னாட்டுக் கருத்தரங்காக அது நடந்தது. மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஓர் அன்பர் என் பேச்சைக்கேட்டு, கைகுலுக்கி என்னை மலேசியாவுக்கு வந்து அவர்களின் நிறுவனத்தில் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும்படி வேண்டுகோள் வைத்தார்.

 அவர் பெயர் பேராசிரியர் மன்னர் மன்னன் (இன்று மலேசியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்). அவர் தம்பி பெயர் இளந்தமிழ். இன்னொரு உடன் பிறப்பு அண்ணாத்துரை. தங்களுக்கு எவ்வாறு இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டன? என்று வினவினேன்.

 தந்தையார் அவர்கள் தமிழ் உணர்வு உடையவர்கள் எனவும் பாவேந்தர் பாடல்களில் நல்ல பயிற்சி என்பதால் எனக்கு மன்னர்மன்னன் எனவும் அறிஞர் அண்ணாவின் கொள்கையில் ஈடுபாடு என்றதால் தம்பிக்கு அண்ணாத்துரை எனவும் பெயர் வைத்ததாகக் கூறினார். அவர் அழைப்பை ஏற்று மலேசியா சென்றபொழுது தமிழகம் போலவே தனித்தமிழ் உணர்வும் பகுத்தறிவும் அங்கும் சுடர்விட்டு இருப்பதை அறிந்து உள்ளம் மகிழ்ச்சியடைந்தேன். பல ஊர்களில் தனித்தமிழ் அன்பர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

 தமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம்.

 அ.பு.திருமாலனார் என்று அழைக்கப்படும் இவர் தம் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். பெற்றோர் மு.அரிப்புத்திரனார், சி.அன்னப்பூரனி அம்மாள் .இவர்களின் இரண்டாவது மகனாக 08.06.1936 இல் பிறந்தவர். செலாமாவைச் சேர்ந்த ஒலிரூட் என்னும் தோட்டத்தில் பிறந்தவர். மாலிய நெறிசார்ந்த குடும்பம். எனவே பெற்றோர் இவருக்கு நாராயணசாமி என்னும் பெயரிட்டனர். தனித்தமிழ் உணர்வு வரப்பெற்றதும் திருமாலனார் ஆனார். இவருடன் பிறந்தவர்கள் தமக்கையார் வீரம்மாள். தம்பி மணியனார் ஆவர்.

 அ.பு.திருமாலனாரின் குடும்பம் இசையும், நாடகமுமாக அமைந்த கலைக்குடும்பம். இளமையிலேயே இராமாயண, பாரதக் கதைகளை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். படிப்பிலும் முதல்வராக விளங்கினார். ஒலிரூட்டில் மூன்றாண்டுகள் படித்தும் பின்னர் தைப்பிங் இந்து வாலிபர் சங்கத் தமிழ்ப் பாடசாலையில் ஏழாம் வகுப்பு வரையில் படித்தார். அந்நாளில் ஏழாம் வகுப்புப் பயில்வது மலேசியாவில் ஆசிரியர் பணிக்குத் தகுதியான படிப்பாக விளங்கியது.பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் தகுதி பெற்றார். தாயாரைப் பிரிய மனமின்றி ஆசிரியர் பணிக்குச் செல்லவில்லை.

 குடும்பக் கடமைகளைச் செய்து வந்த திருமாலனார் பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் பகுத்தறிவு, தமிழ் உணர்வு சார்ந்த பணிகளில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டார். "சுந்தமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" என்ற பகுத்தறிவு சான்ற நூல் கற்று அதன் பிறகு புராணங்களில் உள்ள பொருத்தமற்ற கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தம் 19 ஆம் அகவையிலேயே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டதால் பாவலருக்கு எதிர்ப்பு உருவானது.

 பகுத்தறிவு தழுவிய இறைநெறி கொண்ட திருமாலனார் 1953-57 இல் ஒலிரூட் பகுதியின் தோட்டத் தொழிற்சங்கத்தில் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். தொழிலாளர் ஒற்றுமைக்காகவும், பகுத்தறிவுப் பரப்பலுக்கும். சாதியொழிப்பிற்கும், மது ஒழிப்புக்கும் ஆதரவாக செயல்பட்டார். தாம் பிறந்து வளர்ந்த தோட்டத்திலும் பிற தோட்டங்களிலும் வாழும் மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தார். படித்த படிப்புக்கு நல்ல வேலைக்குச் சென்றிருக்க முடியும்.மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பெண்ணி அதில் ஈடுபட்டு உழைத்தார். 1954 ஆம் ஆண்டில் சமூக மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழ்த் திருமணம் ஒன்றை நடத்திவைத்து மலேசியாவில் சீர்திருத்தத் திருமணம் தழைத்து வளர அடிக்கல் நாட்டினார். அந்தத் திருமண விழாவில் தமிழர்களின் தாலி பற்றிய சிந்தனையை அங்குச் சிறப்பாகப் பேசி அறிமுகம் செய்துவைத்தார்.

 1970 இல் மலேசியத் திராவிடர் கழகக் கிளையைத் தொடங்கி 13 ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு உழைத்தவர். மலேசியாவில் சிறப்புற்று விளங்கிய திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர்.

 திருமாலனாருக்கு இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் நல்ல ஈடுபாடு உண்டு. தைப்பிங்கில் இருந்தபொழுது மெல்லிசை, நாடகம் உள்ளிட்டவற்றில் நல்ல பயிற்சி பெற்றதால் பின்னாளில் தாமே நாடகம், பாடல் எழுதும் ஆற்றல் பெற்றார்.1951 இல் செலாமா தமிழ்ப்பள்ளி கட்டட நிதிக்கு நாடகம் எழுதி, இயக்கி, நடித்து நிதிதிரட்டி வழங்கினார்.

 முந்நூறுக்கும் மேற்பட்ட நாடகத்திற்கு உரிய பாடல்களை இயற்றியுள்ளார். ஆர்மோனியம் என்ற இசைக்கருவியை இசைப்பதில் வல்லவர். பாவத்தின் பரிசு, சூழ்ச்சி, மலர்ந்த வாழ்வு, என்னும் நெடுநாடகங்களையும் திருந்தியத் திருமணம், பரிசுச்சீட்டு, சந்தேகம், பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி, என்று விடியும், மீண்டும் இருள் என்ற குறுநாடகங்களையும் இயற்றியவர்.

 22.10.1962 இல் திருமாலனார் கெ.மீனாட்சியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். ஐயாவின் பணிக்கு உதவியாக அம்மா விளங்கினார்கள். இவர்களுக்கு அரிப்புத்திரன், அரிநாயகன் என்ற ஆண்மக்களும், அன்பரசி, அன்புமலர் என இருபெண்மக்களும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.

 பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாடல்கள் எழுதத் தொடங்கியவர். திருக்குறள் போலும் அரிய உண்மைகளைச் சொல்லும் ஈரடிக்குறள் இயற்றினார். இதனால் நண்பர்கள் இவரை ஈரடியார் என்று போற்றியதும் உண்டு. வாழ்க்கைக்காக எழுதாமல் சமூக மாற்றத்திற்குத் தம் எழுத்துகளைத் திருமாலனார் பயன்படுத்தினார். கட்டுரைகள் 15 எழுதியுள்ளார் கவிதைகள் இருநூறுக்கும் மேல் எழுதியுள்ளார். அருணகிரிநாதரைப் போல் வண்ணப்பாக்கள் 100 வரைந்தவர்.அவை திருவிசைப்பா என்னும் தலைப்புடையது.

 கனல், இனப்பற்று, தமிழ் நெறி விளக்கம், தேவையற்றது எழுத்துச் சீர்திருத்தம், தமிழர் வாழ்வறத்தில் தாலி என்னும் அரிய ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். தமிழர் வாழ்வறத்தில் தாலி என்ற நூலில் அரிய ஆய்வுச் செய்திகள் பல உள்ளன.


தமிழர் வாழ்வறத்தில் தாலி நூல் மேலட்டை

 தமிழர்த் திருமண முறை எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டு ஆரியமயப்படுத்தப்பட்டது என்பதை விளக்கியுள்ளார். கற்பு குறித்த இவர்தம் விளக்கமும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நெறி விளக்கம்(2),கனல், தமிழர்ச் சமயம், வள்ளலார் கண்ட தமிழர்ச்சமய நெறி, புதுக்குறள் உள்ளிட்ட நூல்களும் வெளியிடாமல் உள்ளன.இவை தவிர தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்நேசன், தமிழ்மலர், தமிழ் ஓசை. தினமணி உள்ளிட்ட ஏடுகளிலும், பல்வேறு சிறப்பு மலர்கள்,ஆய்விதழ்களிலும் படைப்புகளை வழங்கியவர்.

 தமிழ்நெறிக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கி 1983 முதல் பணிபுரிந்தவர் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்கள் மலேசியாவில் பரவவும் அதன் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர். தென்மொழி, தமிழ்நிலம் இவற்றின் புரப்பாளராகப் பணியாற்றியவர். தென்மொழி 1986, ஆகத்து, செபுதம்பர் இதழில் புரப்பாளர் வரிசையில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது (சா.சி.சுப்பையா பெயரும் இடம்பெற்றுள்ளது). பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை மலேசியாவுக்கு இரண்டாம் முறையாக அழைத்து ஒரு திங்களில் முப்பத்தொரு நிகழ்ச்சிகள் நடத்தி மலேசியாவில் தமிழ் உணர்வு பரப்பியவர்.

 பெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏட்டில், திருமாலனார் மலேசியாவில் பேசிய பேச்சொன்று தழைக தமிழ்நெறி என்னும் தலைப்பில் மூன்று தொடராக வெளிவந்துள்ளது (திசம்பர் 1986, சனவரி,பிப்,87). இவ்வுரையில் மிகச்சிறந்த தமிழியற் கொள்கைகளைக் கொண்டவர் இவர் என்பது அறியக் கிடக்கின்றது.

 படிப்பதும் எழுதுவதும் சிந்திப்பதும் அன்பர்களுடன் உரையாடுவதுமாக இருந்த திருமாலனார் தமிழ்நெறிக்கழகத்தின் இரண்டு கண்களாக திருமாவளவன், திருச்செல்வன் என்னும் இரண்டு செயல்மறவர்களை உருவாக்கித் தமக்குப் பின்னரும் தமிழ் இன உணர்வு மலேசியாவில் தழைக்கப் பாடுபட்டவர். இவர்களைப் போலவே பல மான மறவர்கள் மலேசியாவில் தமிழ்ப்பணிகளில் முன்நிற்கிறனர்.

 அ. பு. திருமாலனார் 29.04.1995 இல் புகழுடம்பு எய்தினார்.

கையளவு நெஞ்சம் வைத்தான்;-அதில்
கடலளவு ஆசை வைத்தான்;
மெய்யுடனே பொய்கலந்து
மேதினியில் ஏன்படைத்தான்?...

மெய்யாகிப் பொய்யாகி
மேதினியை உருட்டுகின்றான்!
செய்யாத வினையெல்லாம்
செய்தெம்மை யாட்டுகின்றான்!

என்று இறையுணர்வு கலந்து பாடியுள்ள வரிகள் இவர்தம் பாட்டு உணர்வு காட்டும்.

நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், தொடர் 24: நாள்:  08.03.2009
முரசு.நெடுமாறன் (ம.த.க.களஞ்சியம்), ம. மன்னர் மன்னன், மாரியப்பன் ஆறுமுகம், இரா. திருமாவளவன், கோவி.மதிவரன், சுப.நற்குணன், தென்மொழி, தமிழ்நிலம்.

வெள்ளி, 6 மார்ச், 2009

கோட்டோவியத்தில் யான்...


டேனியல் வரைந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னர்க் கேராளாவின் கோழிக்கோட்டில் உள்ள குருவாயூரப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாட்டுப்புறவியில் சார்ந்த கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் வந்து நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர்.

தமிழகத்திலிருந்து சென்றவர்களுள் யானும் ஒருவன்.ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்.தமிழில் படிக்கப்பெற்ற என் கட்டுரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவைக்கு வழங்கப்பட்டது.சப்பானிலிருந்து வந்த மிக்கி டனாக்கா உள்ளிட்ட ஆய்வாளர்கள் என் கட்டுரையைப் பாராட்டி மகிழ்ந்தனர்.(இவர் பின்னாளில் எனக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்து நன்றி தெரிவித்த மடலும்,படமும் என்னிடம் உண்டு).

நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை யான் பாடிக்காட்டியதால் என் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.
கேரளாவில் இருந்து வந்திருந்த பல கல்லூரி மாணவர்கள் என்னைத் தனியே பாடச் சொல்லி நாடாப்பதிவில் பதிந்துகொண்டனர்.யானும் கேரள நாட்டுப்புறப் பாடல்களைப் பதிந்து கொண்டேன்.

அவ்வகையில் அரிதாசு என்னும் மாணவர் மிகச்சிறப்பாகப் பாடினார். வட்டக்களி, சவுட்டுக்களி,மீன்பாட்டு,எனப் பல பாடல்களைப் பாடிக்காட்டினார்.யாவும் யான் பதிந்து
வைத்துள்ளேன்.களரிப் பயிற்றுப் பாடல்களைப் பதிவு செய்ய ஆர்வம் காட்டி நாடாப்பதிவுக் கருவியை அந்த விளையாட்டு நடந்த நடு இடத்தில் வைத்திருந்தேன்.மிகச்சிறந்த இசையொழுங்குடைய பாடல்கள் பாடப்பட்டன.முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது நாடா.
முக்கால் மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் எந்தப்பாடலும் பதிவாகவில்லை.காரணம் மின்கலத்தில் மின்சாரம் இல்லை என்பது அப்பொழுதான் தெரிந்தது.

மின்சாரம் ஏற்றும் பேட்டரியை இனி ஆய்வுக்களத்துக்கு எடுத்துச்செல்லக்கூடாது என அன்று முதல் முடிவு செய்தேன்.

இந்தக் கருத்தரங்கம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கருத்தரங்கம். கருதரங்கிற்குத் திருச்சி வழியாகத் தொடர் வண்டியில் சென்றதாக நினைவு.தெப்பக்குளத்தில் இறங்கி அங்காடியில் ஒரு சோனி நிறுவன நாடாப்பெட்டி ஆயிரத்து இருநூறுக்கு அப்பொழுது வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.அப்பெட்டி பல வகையில் இன்றுவரை உதவுகிறது.

கருத்தரங்கிற்கு வந்த டேனியல் என்ற மாணவர் என்னை ஒரு கோட்டோவியத்தில் என் கண்முன்னே ஐந்து நிமிடத்திற்குள் வரைந்து தந்தார்.பாதுகாத்து வந்த அந்தப்படம் நினைவுக்காக என் பக்கத்தில் பதிந்து வைக்கிறேன்.

கருத்தரங்கு முடிந்து தொடர்வண்டி நிலையம் வரை அந்த மாணவரும் அவர் நண்பரும் வந்து வழியனுப்பினர்.தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் மகிழ்ச்சியுடன் வந்தேன். தொடர் வண்டி நிலையத்தில் பார்க்கும்பொழுது என் பெயர் பயணிகள் பட்டியலில் இல்லை. காரணம் வினவியபொழுது மங்களூர் விரைவு வண்டிக்குப் பதிவு செய்திருந்தேன். அந்த வண்டிப் புறப்படும் இடத்தில் இரவு பத்து மணியளவில் புறப்படுகிறது.அந்த வண்டி நான் ஏறும் கோழிக்கோடு வரும்பொழுது நடு இரவு 12.30 மணியளவில் வருகிறது.எனவே மறுநாள் கணக்கில் நான் பதிந்திருக்கவேண்டும்.(இரவு பன்னிரண்டு மணிக்குமேல் மறுநாள்தானே)எனக்கு இந்த நுட்பம் தெரியாததால் நான் செல்லவேண்டிய வண்டி நேற்றே அதாவது முதல்நாள் நடு இரவு 12.30 மணியளவில் கடந்துவிட்டது.

எனவே எனக்குப் புதிய பயணச்சீட்டு வாங்கவேண்டியதாயிற்று. நல்ல வேலை என்னிடம் பணம் இருந்தது.முன்பு பதிந்த சீட்டைக் கொடுத்தால் மறுநாள் சிறுதொகை தருவார்கள் என்றனர்.அந்த மாணவர்களிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து மறுநாள் கிடைக்கும்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறிப் பல தொல்லைகளுக்கு இடையே மீண்டேன். கோவை, சேலம்,வழியே காட்டுப்பாடி வந்தேன்.அங்கிருந்து நான் பணிபுரிந்த இடம் வந்து சேர்ந்தேன்.

கருத்தரங்கிற்குச் சென்று, நான் பணிபுரிந்த கல்லூரிக்கு மிகப்பெரிய புகழ் ஈட்டி வந்ததாக நினைத்தேன்.சான்றிதழ்களைக் காட்டி அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். அங்குப் பணிபுரிந்தவர்கள் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து வெளியே சிரித்துக்கொண்டார்கள். அந்த மாத இறுதியில்தான் தெரிந்தது.

கருத்தரங்கிற்குச் செல்வது அங்கு மிகப்பெரிய பாவச்செயல் என்று.இருநாள் கருத்தரங்கப் பயணத்திற்கு என்னுடைய பதினைந்து நாள் ஊதியத்தைப் பிடித்துவிட்டனர்.காரணம் பிறகுதான் புரிந்தது.

சனிக்கிழமை விளக்ககணி விழா. விளக்கணி விழாவிற்கு முதல்நாள் (வெள்ளிக்கிழமை)விடுப்பெடுத்துக்கொண்டு வியாழன் மாலை ஊருக்குப் புறப்பபட்டேன்.முடிந்ததும் மறுநாள் ஞாயிறு புறப்பட்டுத் திங்கள் கிழமை கல்லூரி வந்து விடலாம் என்பது என் திட்டம். நான் புறப்பட்ட மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை முதல் கல்லூரிக்குத் திடுமென நீண்ட விடுமுறை விடப்பட்டது.கல்லூரித் திறப்பன்று கோழிக்கோட்டில் கருத்தரங்கு.சரி.கருத்தரங்கு என்பதால் பணிமேற் சென்ற சான்று காட்டிக்கொள்ளலாம் என நினைத்தேன்.புறப்பட்டேன்.
அவர்கள் அரசாங்கத்தில் இந்த அரசாங்க விதிகள் பொருந்தாது.பாதி ஊதியத்தை இழந்து பணிபுரிய வேண்டியதாயிற்று.உழைக்கவில்லை.ஊதியம் இல்லை என மனத்தை
ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

கருத்தரங்கால் பல பட்டறிவுகளும் இந்தப் படமும்தான் எஞ்சி நின்றன.

அடுத்த படம் திருநெல்வேலியில் நடந்த தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கில்நா.கணேசன், காசி ஆறுமுகம்,சேகர் பொன்னையா,சங்கரபாண்டி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். யானும் சென்றிருந்தேன்.அங்கு வந்த ஓவியர் வள்ளிநாயகம் அவர்கள் வரைந்த கோட்டோவியம் இது.


வள்ளிநாயகம் வரைந்தது.

இரண்டு கலைஞர்களுக்கும் நன்றி.