நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பன்னாட்டுக் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்னாட்டுக் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 செப்டம்பர், 2021

மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும் (Translating and Interpreting) இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கப் பதிவுகள்

 


கருத்தரங்க மலர் வெளியீடு: முனைவர் மூ. செல்வராஜ், முனைவர் கு. சிவமணி, முனைவர் ஒப்பிலா. மதிவாணன், திரு. கண்ணையன் தட்சணாமூர்த்தி, முனைவர் இரா. நிர்மலா, முனைவர் கி. மணிகண்டன், முனைவர் மு. இளங்கோவன்

புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்  தமிழ்த்துறையும், ஆத்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் தமிழ்ச்சங்கமும், இணைந்து மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும்  (Translating and Interpreting) என்னும் தலைப்பில் 27, 28, 29 - 09 - 2021 ஆகிய மூன்று நாள்களில் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தின. இதன் தொடக்க விழா 27. 09. 2021 பிற்பகல் 3 மணிக்குக் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.   

நிறுவன இயக்குநர் முனைவர் மூ. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா. நிர்மலா வரவேற்புரை வழங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் ஒப்பிலா. மதிவாணன் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரினை வெளியிட்டார். முதல் படியை மூத்த தமிழறிஞர் கு. சிவமணி பெற்றுக்கொண்டார். புதுச்சேரி வானொலி நிலையத்தின் இயக்குநர் கண்ணையன் தட்சணாமூர்த்தி, சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு செய்தி ஆசிரியர் முனைவர் கி. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. இளங்கோவன் நன்றியுரை வழங்கினார்.

27.09.2021 மாலை  4 மணிக்கு முதல்நாள் அமர்வு இணையம் வழியாகத் தொடங்கி, சிங்கப்பூர்ப் பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் மெல்பர்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் ந. சுந்தரேசன் ஒருங்கிணைப்பில் ஆஸ்திரேலிய நாட்டின் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதில் திருமதி சாந்தா ஜெயராஜ்(ஆஸ்திரேலியா), பசில் கெலிஸ்டஸ் பெர்ணாண்டோ (ஆஸ்திரேலியா), திரு. தெ. செல்வக்குமார் (கனடா), ஆய்வறிஞர் கு. சிவமணி(இந்தியா) ஆகியோர் உரையாற்றினர். முதல் அமர்வு இரவு 6. 30 மணிக்கு நிறைவுற்றது. 

28.09.2021 மாலை நான்கு மணிக்கு இரண்டாம் நாள் கருத்தரங்க அமர்வு தொடங்கியது. இலங்கைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்(இலங்கை), திரு. கு.பாலசுப்பிரமணியன்(சென்னை), திருமதி மஞ்சுளா மோகனதாசு(பின்லாந்து), முனைவர் கி.மணிகண்டன்(சீன வானொலி), திரு. பு. யோகநாதன்(செர்மனி), பொறியாளர் அருள்நிதி இராதாகிருட்டினன்(நோர்வே) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகள் குறித்து உரையாற்றினர். 

29.09.2021 – இல் நடைபெற்ற மூன்றாம் நாள் கருத்தரங்கிற்குப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் (கனடா) அவர்கள் தலைமைநேற்றார். இக் கருத்தரங்கில் பொறியாளர் சதீசு (சப்பான்), ’ஆசான்’ மன்னர் மன்னன் மருதை (மலேசியா), திரு. கண்ணையன் தட்சணாமூர்த்தி (இயக்குநர், புதுச்சேரி வானொலி நிலையம்), சிறீ கதிர்காமநாதன் (கனடா), எழுத்தாளர் ஜீவகுமாரன் (டென்மார்க்கு), கலாநிதி ஜீவகுமாரன்(டென்மார்க்கு), இராணி நடராஜன் (மியான்மர்) ஆகியோர் தத்தம் நாடுகளில் நடைபெறும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்புப் பணிகளை எடுத்துரைத்தும், தாம் செய்துவரும் மொழிபெயர்ப்புப் பணிகளை நினைவூட்டியும் உரையாற்றினர். 

நிறைவுநாளில் பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்குத் தமிழ்நாட்டரசின் உயரிய விருதான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது (2019) அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அவர்களை நிறுவனம் சார்பில் பாராட்டி, வாழ்த்துரை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம். கு.சிவமணியாரின் வாழ்த்துரையுடன் மூன்றுநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிறைவுற்றது.

முனைவர் ஒப்பிலா. மதிவாணன் வெளியிட 
ஆய்வறிஞர் கு. சிவமணி முதல்படியைப் பெறுதல்.


முனைவர் மூ. செல்வராஜ் அவர்கள் 
முனைவர் கு. சிவமணி அவர்களைச் சிறப்பித்தல்


முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களைச் சிறப்பிக்கும் 
முனைவர் இரா. நிர்மலா


முனைவர் ஒப்பிலா. மதிவாணன் அவர்களின் மலர் வெளியீட்டு உரை
 
இணையவழிக் கருத்தரங்க நிகழ்வு





வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்




சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதி உதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைக்கலாம்.

வெளிநாட்டுப் பேராளர்களும் பங்கேற்கலாம். வெளிநாட்டுப் பேராளர்கள் 70 அமெரிக்க டாலரும், இந்தியப் பேராளர்கள் உருவா 500, ஆய்வு மாணவர்கள் உருவா 350 , பங்கேற்பாளர்கள் உருவா 150 செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வரைவோலை எடுக்க வேண்டிய பெயர்

Dr. Angayarkanni, Department of Tamil, Ethiraj College for Women, Chennai

கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்வடிவில் வெளிவர உள்ளன.

கட்டுரைகள் அனுப்ப இறுதிநாள்: 30.09.2014

மின்னஞ்சல் முகவரி: tamilbk2014@gmail.com

வலைப்பதிவு: இங்கே செல்க

கட்டுரை வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்த்துறைத் தலைவர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
சென்னை- 600 008

தொடர்புக்கு:

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:
முனைவர் சு. புவனேசுவரி 94444 18670

முனைவர் பா. கௌசல்யா 91763 63139


சனி, 16 மார்ச், 2013

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்



 தொடக்க விழா அழைப்பு


நிறைவு விழா அழைப்பு

சென்னைப் பல்கலைக்கழகமும், மலேயாப் பல்கலைக்கழகமும், சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து தமிழியல் பரிமாணங்கள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கை 23.03.2013 - 24.03.2013 ஆகிய இரண்டு நாள் சென்னையில் நடத்துகின்றன.

இந்த நிகழ்வில் பேராசிரியர் எம். இரவிச்சந்திரன், முனைவர் இரா.தாண்டவன், முனைவர் எஸ் குமரன், முனைவர் பொற்கோ, முனைவர் க.இராமசாமி, முனைவர் வ.ஜெயதேவன், முனைவர் அரங்க. பாரி, ஆ.இரா.சிவகுமாரன், திரு.மா.நந்தன், பேராசிரியர் ஜி.விஸ்வநாதன், கு.கோட்டேஸ்வர பிரசாத், முனைவர் அரங்க.இராமலிங்கம், முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் ந.அருள், முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் அபிதா சபாபதி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை படிக்க உள்ளனர்.

ஞாயிறு, 18 மார்ச், 2012

பாரதி பன்னாட்டுக் கருத்தரங்கம்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும், சென்னை செம்மூதாய்ப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் பாரதி பன்னாட்டுக் கருத்தங்கம் எதிர்வரும் மே மாதம் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற உள்ளது. பாரதியார் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 15.04.2012

தொடர்புக்கு”

முனைவர் ப.சிவராஜி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி
9095831291

முனைவர் சு.சதாசிவம்
9444200369

பேராளர் கட்டணம்:

பேராசிரியர், இலக்கிய ஆர்வலர் உருவா 500-00
ஆய்வாளர் உருவா 400-00

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி:

செம்மூதாய்ப் பதிப்பகம்
எண் 17, தாகூர் தெரு, எம் எம். டி. ஏ. நகர்
சிட்லபாக்கம், சென்னை 600 064
செல்பேசி: 9444200369

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 11,12,13-02.2011 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றது.

தமிழகம்,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,இலண்டன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

இன்று(11.02.2011) காலை பத்து மணிக்குப் புதுச்சேரிப் பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன்பிறகு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிப்பொழிவு நிகழ்த்தியும் விழா நடைபெறும்.

தொடக்க நிகழ்வு பல்கலைக்கழக அரங்கில் பகல் இரண்டு மணிக்குத் தொடங்குகிறது.
நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன், முனைவர் க.ப.அறவாணன், திரு.சுகி.சிவம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

நாளை நடைபெறும் நிகழ்வில் பேராசிரியர் அப்துல்காதர், அமுதன் அடிகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். சொர்ணமால்யாவின் நாட்டிய நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற உள்ளது.

கருத்தரங்க அமைப்பாளர்
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்.
தொடர்புஎண் + 91 9360327019

ஞாயிறு, 7 நவம்பர், 2010

வான்புகழ் திருக்குறள்: பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் சென்னை வானவில் பன்னாட்டு மையமும் இணைந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளன.

நாள்: 11, 12, 13 - 02, 2011(வெள்ளி, சனி, ஞாயிறு)

திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியனுப்பினால் கட்டுரையை வல்லுநர் குழு ஆய்ந்து ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு பேராளர் கட்டணம் உருவா 800 (ஆய்வு மாணவர்கள் 400 உருவா) அனுப்பலாம்.

கட்டுரை அனுப்ப நிறைவுநாள்: 30.11.2010

மேலும் விவரங்களுக்கு:

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
ஒருங்கிணைப்பாளர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி-605 014

m_s_arivudainambi@rediffmail.com

Cell: + 91 93603 27019

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் -படங்கள்


துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை,முனைவர் ஆனந்தகிருட்டினன்(மேடையில்)

தமிழ்க்கணினி- பன்னாட்டுக் கருத்தரங்கம்-சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறப்பான திட்டமிடலுடன் நடைபெறுகிறது.தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு உழைத்த தொழில் நுட்ப வல்லுநர்களும், மொழியியல் துறை வல்லுநர்களும் தமிழறிஞர்களும் வருகை புரிந்துள்ளனர்.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் மிகச்சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தியுள்ளார். குறித்த நேரத்தில் பயிலரங்கு தொடங்குவதும்,நிறைவு பெறுவதும் சிறப்பு.அரங்கில் இருப்பவர்கள் கருத்தரங்கில் முழுக்கவனத்துடன் இருந்து பங்களிப்பு வழங்குகின்றனர்.இரண்டு நாள் நிகழ்வுகளும் தொய்வின்றி மிகச்சரியாக நடைபெற்றன.

இன்று(25.02.2010) காலை 10 மணிக்குத் தொடங்கிய அமர்வில் உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.வெங்கட்ரங்கன் அவர்கள் தலைமை தாங்கினார்.யுனிகோடும் தமிழும் என்ற பொதுத்தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் நடந்தன.பேராசிரியர் இராமன் அவர்கள் யுனிகோடு என்றால் என்ன என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்றும் அவைக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.இவ்வாறு முதலில் அரங்கிற்கு இதனை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பேரா.ந. தெய்வசுந்தரம் கேட்டுக்கொண்டதன் பேரில் இம் முன்னுரை வழங்கப்பட்டது.அதனை அடுத்து அ.இளங்கோவன் அவர்கள் யுனிகோடைப் பயன்படுத்தி அச்சிடுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.

அவர் உரை UNICODE TAMIL FOR THE PUBLISHING INDUSTRY PROBLEMS AND SOLUTIONSஎன்ற தலைப்பில் இருந்தது.பேஜ்மேக்கர்,போட்டோ ஷாப்,இன்டிசைன்,பி.டி.எப்,எக்சல்,உள்ளிட்டவற்றில் யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.TACE16அமைப்பில் உள்ள யுனிகோடு எழுத்தைப் பயன்படுத்தும்பொழுது இத்தகு சிக்கல் உருவாவதில்லை என்று எடுத்துக் காட்டினார்.யுனிகோடு கன்சார்டிய விதிமுறைகளின்படி மீண்டும் இடம் பெற வாய்ப்பில்லை எனவும்,இடம் யுனிகோடில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.ஆனால் இருப்பில் உள்ள இடைவெளியில் புதிய சில வசதிகளைப் பயன்படுத்தி யுனிகோடைப் பயன்படுத்தித் தமிழைப் பயன்படுத்தமுடியும் என்று எடுத்துக்காட்டினார்.

பொறியாளர் இராம.கி.அவர்கள் ஒருங்குறியேற்றத்தின் போதாமை ( INADQUACY OF TAMIL UNICODE)என்ற தலைப்பில் பழங்கால எழுத்து வடிவ வளர்ச்சிகளை எடுத்துக்காட்டி,யுனிகோடின் குறைகளை எடுத்து விளக்கினார்.

என்.எச்.எம்.எழுதியை உருவாக்கிய நாகராசன் அவர்கள் தமிழ் 99 விசைப்பலகை பற்றியும் யுனிகோடு பற்றியும் மிகச்சிறப்பாகத் தன் கருத்துத்துகளை எடுத்துரைத்தார்.பழைய தவறுகளை விட்டுவிட்டுப் புதியதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.TACE 16 ஐ யுனிகோடு கன்சார்டியத்தினர் ஏற்கமாட்டார்கள் என்று சொன்னார்.யுனிகோடை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.பள்ளி மாணவர்களுக்கு யுனிகோடை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.இன்டிசைன் யுனிகோடை ஏற்கவில்லை என்று ஒதுங்கமுடியாது. அடுத்த கட்டத்திற்குப் பிளக்-இன் (Plug-in) செய்ய வேண்டும் என்றார்.யுனிகோடை இனி ஒதுக்க முடியாது என்று தன் ஆழ்ந்த வாதத்தை முன்வைத்தார்.

இடையில் ஒரு கருத்தை இராமன் முன்வைத்தார்.தமிழக அரசு யுனிகோடு கன்சார்டியத்தில் உறுப்பினராக உள்ளது.ஆனால் அந்த அரசே யுனிகோடைப் பயன்படுத்துவதில்லை.ஆந்திரா அரசு கன்சார்டியத்தில் உறுப்பினர் இல்லை.ஆனால் யுனிகோடை நடைமுறைப்படுத்துகிறது என்றார்.

பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் இராமகிருட்டினன் அவர்களின் உரையை அரங்கத்தினர் ஆர்வத்துடன் கேட்டனர்.காரணம் தட்டச்சிட்டால் தமிழை ஒலித்துக்காட்டும் மென்பொருளை அவர் நேரடியாக மேடையில் அறிமுகம் செய்தார்.தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்த ஒரு செய்தியை மாதிரிக்குப் படியெடுத்து அதனைப் படிக்கும்படியாகச் செய்துகாட்டினார்.அவ்வாறு படிக்கும் பொழுது நாள்(10.02.2010),அடையாளக்குறி,பின்ன எண்கள்,எண்கள்(456), உள்ளிட்டவற்றைப் படிப்பதிலும் பிற தொடர்களைப் படிப்பதிலும் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சந்தோசுகுமார்(அமிர்தா பல்கலைக்கழகம்), உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் முருகையன்,பேராசிரியர் நடனசபாபதி,பேராசிரியர் இரவிசங்கர்(புதுவை)உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர்.

நாளை(26.02.2010)காலை பத்து மணிக்குக் கணினிவழித் தமிழ்க்கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் தலைமையில் ஆ.இரா.சிவகுமாரன்,பேரா.தியாகராசன், அண்ணாகண்ணன்,மு.இளங்கோவன், மு.பழனியப்பன், துரையரசன் உள்ளிட்டவர்கள் கட்டுரை படைக்க உள்ளனர்.


பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,துணைவேந்தர் திருவாசகம்,அமைச்சர் பூங்கோதை அவர்கள்


இராமன்,நான்,வெங்கட்ரங்கன்,இராம.கி ஐயா


வெங்கட்ரங்கன்,நான்,நாகராசன்,இராமன்


நானும், என்.எச்.எம்.எழுதி உருவாக்கிய நாகராசனும்


நானும் பேராசிரியர் இராமகிருட்டினனும்


பேராசிரியர் கணேசன்,வெங்கட்ரங்கன்,அ.இளங்கோவன்


தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் வசதியைத் தமிழுக்கு வழங்கிய பேராசிரியர் இராமகிருட்டினன்(பெங்களூரு)

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்தரங்கம்,சிங்கப்பூர்



சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னைக் கலைஞன் பதிப்பகமும் இணைந்து "இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்" என்ற தலைப்பில் ஏழாம் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினைச் சிங்கப்பூரில் நடத்த உள்ளன.

கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 15,16 மே 2010

இடம்:டின்டேல் கல்லூரி-சிங்கப்பூர்


பேராளர் தகுதி: பல்கலைக்கலைக்கழக,கல்லூரி-நிறுவன-பள்ளி ஆசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரை: தமிழிலோ,ஆங்கிலத்திலோ அமையலாம்.

கட்டணம்: கட்டுரை மட்டும் அளிப்பவர்கள் உருவா 700-00

கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்கள்(தமிழகத்திலிருந்து)உருவா 38700-00
(வானூர்திக் கட்டணம்,உணவு,தங்குமிடம்,சிங்கப்பூர்,மலேசியா சுற்றுலா சென்றுவர)

கட்டணத்தை வரைவோலையாகக் கலைஞன் பதிப்பகம்(KALAIGNAAN PATHIPAGAM) என்னும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளும் வகையில் அனுப்பலாம்.

பேராளராகப் பங்கேற்க முன் கட்டணம் உருவா 3000-00 அனுப்ப நிறைவுநாள் 31-01-2010.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் அனுப்ப நிறைவுநாள் 15.03.2010.

பிற விவரங்களுக்கு: முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
செல்பேசி: 98422 81957

பயண விவரங்களுக்கு: பேராசிரியர் அபிதா சபாபதி : 96770 37474

கட்டுரை,வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைஞன் பதிப்பகம்,19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,சென்னை-600017
பேசி: 044-24313221 044- 24345641