நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 31 ஜனவரி, 2017

புதுச்சேரி கலையருவி நாட்டியப் பள்ளியின் அரங்கேற்ற நிகழ்வு…


நாட்டியமணிகளின் அரங்கேற்றம்


ஆடற்கலையில் வல்லோரின் அரங்கேற்றம்

புதுச்சேரியில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றாலும் அனைத்திலும் கலந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளேன். புல்லாங்குழல் கலைஞர் தம்பி இராஜ்குமார் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ’தம் குடும்பத்தினர் நடத்தும் நாட்டியப் பள்ளியில் பயிலும், நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வு 29.01.2017 இல் நடைபெறுகின்றது. அதில் தாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று ஓர் அன்பு வேண்டுகோளை முன்வைத்தார். எனக்கிருந்த பல்வேறு பணிகளில் கலந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லையே என்ற ஒருவகை தயக்கத்துடன் வருவதாக ஒத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளில் கம்பன் கலையரங்கத்திற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே சென்றேன். இராஜ்குமார் அவர்களும் அவரின் தந்தையார் கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவும் அன்புடன் வரவேற்றனர்.

நாட்டிய நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொள்ள பேராசிரியர் நளினி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். இருவரும் சிறிதுநேரம் கல்வித்துறை பற்றி உரையாடிக்கொண்டிருந்தோம்.

அந்திமாலை 6.30 மணிக்குக் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தோம். இறைவணக்கத்துடன் நாட்டிய நிகழ்வு தொடங்கியது. எட்டு மாணவியர் அரங்கேறினர். குழுவாகவும், தனித்தனியாகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். புதுச்சேரி கம்பன் கலையரங்கம் கலை இலக்கிய ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. மலர்வணக்கம்(புஷ்பாஞ்சலி), கௌத்துவம், அலாரிப்பு, ஜதீசுவரம், வர்ணம், எனத் தொடங்கிச் சிவன், காளி, முருகன், இராமன், கண்ணன் என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட்டு, நிறைவில் தில்லானாவுடன் அமையும் வகையில் நாட்டிய நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அரங்கேறிய மாணவிகள் தேர்ந்த கலைஞர்களைப் போல் தம் கலையார்வத்தை வெளிப்படுத்தினர். ஆடல் ஆசானின் திறமை இந்த இளம் கலைஞர்களிடம் வெளிப்பட்டு நின்றது. விசயவசந்தம், இரேவதி, ஆரபி, இலதாங்கி, சிவரஞ்சனி அம்சத்துவனி, உள்ளிட்ட இராகங்களில் இடம்பெற்ற பாடல்கள் அவையோரின் பெரும் பாராட்டினைப் பெற்றன.

’ஆடல் ஆசான்’ இரஞ்சனி இராஜமாணிக்கம், ’இசையாசான்’ இராஜமாணிக்கம், ’தண்ணுமையாசான்’ திருமுடி அருண், ’நாமுழவு ஆசான்’ அழகு இராமசாமி, வயலின் பேராசிரியர் சீனிவாசன், குழலாசான் இராஜ்குமார் என அனைவரும் அரங்கில் இசை அரசாங்கத்தையே நடத்தினார்கள். ஒவ்வொருவரின் தனித்திறனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை மேம்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அபிதா, சௌபுதேஜாசிறீ, எரின் டைனாசியசு, கோபிகா, என எண்மர் அரங்கேறினர்.

மூன்றுமணி நேரமும் சிலப்பதிகார அரங்கேற்று விழாவை நேரில் பார்த்த மன உணர்வைப் பெற்றேன். அக்காலத்தில் இருந்த திரைச்சீலைகளும், வண்ண விளக்குகளும், ஆடல் அரங்கும், தலைக்கோல் பட்டமும்,  ஆயிரத்து எண்கழஞ்சும், வலப்புறம், இடப்புறம் நின்ற நாட்டியக்கலைஞர்களும், வேத்தியல் பொதுவியல் கூத்துகளும் என் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.

நாட்டிய நிகழ்வைச் சிறப்பாக வடிவமைத்த கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் நாட்டிய அறிவையும், குரலினிமையையும் பல்வேறு வாய்ப்புகளில் முன்பே அறிவேன். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் உருவான பொழுது, நாட்டியம், இசைத் தொடர்பான பணிகளில் இவரின் உதவி எங்களுக்கு மிகுதியாக இருந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “இசையில் தனித்தமிழை எங்கும் பரப்பி” எனத் தொடங்கும் பாடலை இவர் பாடியபொழுது பாடல் பதிவு அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்ப்பூக்களைத் துடைத்தோம். அந்த அளவு உணர்ந்து பாடிய பெருமகனாரின் குரல் உலகத் தமிழர்களால் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. புதுவையின் புகழ்மிக்க கலைஞராக உலக நாடுகளில் இசைப்பயணத்தைத் தொடர்ந்து நடத்திவரும் கலைமாமணி கா.இராசமாணிக்கம் அவர்களின் தமிழிசைப் பணியை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் தமிழிசைப் பணியை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

கா. இராஜமாணிக்கனார் அவர்களின் இசைவாழ்க்கை:

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த உலைவாய்க்கால் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் சி. காத்தவராயன், பச்சையம்மாள் ஆகியோரின் மகனாக 19.07.1963 இல் பிறந்தவர். வில்லியனூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். மேல்நிலைக் கல்வியை முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் பள்ளியில் பயின்றவர். 1982 முதல் 1986 வரை கும்பகோணம் தருமாம்பாள், வடலூர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் தன் முயற்சியாக நாட்டியம், வாய்ப்பாட்டைக் கற்றுக்கொண்டவர். 1986 முதல் 1989 வரை நான்காண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “இசைமாமணி” என்னும் இசைப்படிப்பைப் படித்து, முறையாக இசையறிவு பெற்றவர். முனைவர் சீர்காழி கோவிந்தராசன் இவரின் இசைப்பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


கலைமாமணி கா. இராஜமாணிக்கம்

ஊரில் நடைபெறும் தெருக்கூத்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு,இவரின் அப்பா ஆர்வமாகப் பாடும் இயல்புடையவர். அம்மாவின் குரலும் சிறப்பாக இருக்கும். இந்தப் பின்புலத்தில் இசை, நாட்டியத்தை முறையாகப் பயின்ற கா. இராசமாணிக்கம் அவர்கள் கே.பி. கிட்டப்பா பிள்ளை, திரு. இராமையா ஆகியோரிடம் பயின்று நாட்டிய இசையறிவை மேலும் மேலும் வளப்படுத்திக்கொண்டார்.



1990-91 ஆம் ஆண்டளவில் புதுவையில் நாட்டிய ஆசிரியராக அனைவருக்கும் அறிமுகமானார். 1992 இல் சங்கீத நாட்டியாலயா என்னும் நாட்டிய இசைப்பள்ளியை உருவாக்கிப் பல நூறு மாணவர்களுக்கு நாட்டிய இசையறிவை வாரி வழங்கும் பேராசிரியராகப் புகழுடன் விளங்கிவருகின்றார். 1989 இல் இராஜேஸ்வரி அம்மையாரை மணந்து, இரண்டு மக்கள் செல்வங்களுடன் புகழ்வாழ்க்கை வாழ்ந்து வரும் இராசமாணிக்கம் ஐயா நாட்டுப்புறப் பாடல்களிலும் பெரும் ஆற்றல் பெற்றவர்.

கலைப்பயணமாக சுவிசு (7 முறை), பிரான்சு (5 முறை) இத்தாலி, டென்மார்க்கு, செர்மனி, ரியூனியன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இசைப்பணியைத் தொடர்ந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவரின் ஆர்வத்துறை நாட்டிய நாடகங்கள் ஆகும். புரட்சிக்கவி, வீரத்தாய், சிலப்பதிகாரம் ஆகியவற்றை நாட்டிய நாடகமாக அரங்கேற்றியுள்ளார். இவரின் நாட்டியபாணி தஞ்சாவூர் பாணியாகும். பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச் சிவம் உள்ளிட்ட பாவலர்களின் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ள இவரின் ஆற்றல் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்களின் மகன் இராஜ்குமார் இராஜமாணிக்கம் மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞர்; வாய்ப்பாட்டுக் கலைஞர்; படத்தொகுப்பாளர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம், விபுலாநந்தர் ஆவணப்படம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெருந்துணைபுரிந்தவர். கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்களின் மகளார் மருத்துவர் இரஞ்சனி இராஜமாணிக்கம் புகழ்பெற்ற நாட்டியக் கலை இயக்குநர்.

கலைமாமணி கா. இராஜமாணிக்கம் அவர்கள் புதுவை மாநிலத்தில் அமைந்துள்ள ஆதித்தியா வித்தியாசிரமப் பள்ளியின் கலைத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். தமிழிசை, நாட்டியம் இவற்றில் பெரும் பங்களிப்பு செய்துவரும் இந்த இசையறிஞர்க்கு என் வாழ்த்துகளும் வணக்கமும்.



கலைமாமணி கா. இராஜமாணிக்கம் ஐயாவின் அன்பில்...


அரங்கேறியவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்



கலைமாமணி கா.இராஜமாணிக்கம் அவர்கள்



அரங்கேறியவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்


 சிலம்பிலிருந்து மேற்கோள்காட்டி மு.  இளங்கோவன் உரை

சனி, 28 ஜனவரி, 2017

பிரெஞ்சுத் தூதரகத்தில் இரகுநாத் மனே அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சி!


  புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், வீணைக் கலைஞரும், திரைப்பட இயக்குநரும் என் நெருங்கிய நண்பருமாகியசெவாலியேஇரகுநாத் மனே அவர்களுக்கு இந்திய அரசு வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான  பிரவசி பாரதிய சம்மான் விருதினை’ (Pravasi Bharatiya Samman Award) அண்மையில் அளித்தது(09.01.2017).

     இந்த விருது பெற்ற இரகுநாத் மனே அவர்களுக்குப் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரெஞ்சுத் தூதரகத்தில் 27.01.2019 மாலை பாராட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பிரெஞ்சுத் துணைத்தூதர், தூதரக அதிகாரிகள், திரைத்துறை, இசைத்துறை, நாட்டியத்துறைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டினேன். புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை அமைச்சர் திரு. கந்தசாமி, திரைத்துறை இயக்குநர் வேலு பிரபாகரன், திரு. சிராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டு இரகுநாத் மனே அவர்களைப் பாராட்டினர்.








வியாழன், 26 ஜனவரி, 2017

பழங்குடி இன நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடாவுக்குப் பத்மஸ்ரீ விருது




கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஹலக்கி ஒக்கலிக எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் சுக்ரி பொம்ம கௌடாவுக்கு இந்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்க உள்ளது. இவரின் நாட்டுப்புறக் கலைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். சுக்ரி பொம்ம கௌடா வழியாகப் பழந்தமிழகத்தின் கூத்து மரபுகள், இசை மரபுகளை அறிய வாய்ப்பு உள்ளது. மூத்த கலைஞருக்கு என் பாராட்டுகளும், வணக்கமும்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் குமூகச் சிந்தனைகள்


 மாந்தரை மீமிசை மாந்தராக மலர்த்துவன பாடல்களாகும். பாட்டு உணர்வு உணர்வுகளின் உயர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே நம் முன்னோர்கள் சிறந்த பாட்டுணர்ச்சி உடையவர்களாகவும் இசையீடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர்என்ற கருத்தினைக் கொண்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். மேம்பட்ட பாட்டுணர்வால், இருபதாம் நூற்றாண்டுப் பாட்டிலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குபவர். இவரின் பாடல்களில் பொதிந்துள்ள குமூகச் சிந்தனைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் என்பதாகும். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் உலக ஊழியர், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர். இப்பெருமக்கள் யாவரும் இயல்பிலேயே தமிழறிவும், தமிழ் உணர்வும் தழைத்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் கற்ற பெருஞ்சித்திரனார் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படும் முன்னோடிப் பாவலராக மலர்ந்தவர்.

பெருஞ்சித்திரனார் இளம் அகவையிலேயே பாடல் எழுதவும், பாவியம் புனையவுமான பேராற்றல் கொண்டிருந்தவர். தம் பதின்மூன்றாம் அகவையிலேயே பூக்காரி என்னும் பாவியம் வரைந்தவர். கையெழுத்து ஏடுகள் நடத்தியவர். புதுச்சேரி அஞ்சல் துறையில் பணியில் இணைந்த இவருக்குப் பாவேந்தரிடம் அமைந்த தொடர்பு, பாட்டுத்துறையில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கியது. பணிமாறுதலால் கடலூருக்கு இவர் சென்றபொழுது அங்குத் தென்மொழி என்னும் இலக்கிய ஏட்டினைத் தொடங்கி(1959) நடத்தியவர். இக்காலகட்டத்தில் தென்மொழி ஏட்டிலும் தமிழகத்தில் வெளிவந்த பிற ஏடுகளிலும் தமிழுணர்வு தழைக்கும் பாடல்களை இயற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் தமிழுணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.

பெருஞ்சித்திரனார் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து உள்ளிட்ட பாவியங்களையும், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் உள்ளிட்ட பாட்டுத் தொகுதிகளையும் இயற்றியவர்.

பெருஞ்சித்திரனார் காலத் தமிழக நிலை

பெருஞ்சித்திரனார் பிறந்து (1933)  வளர்ந்த காலகட்டம் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியாரின் தன்மதிப்புச் சிந்தனைகள், பகுத்தறிவுப் பார்வை, ஆரிய, புராண, இதிகாச எதிர்ப்புகள் நாடெங்கும் சுடர்விட்டு நின்றன. தவத்திரு மறைமலையடிகளாரின் தனித்தமிழ்ப் பார்வை தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற சூழல் நிலவியது. பாவாணரின் மொழி, இன மீட்சி ஆய்வுகள் மக்களிடம் பரவலாக அறிமுகம் பொற்றிருந்தன. சமற்கிருத மேலாண்மை, கட்டாய இந்தித் திணிப்பு, ஆங்கில வல்லாதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணி தொடங்கியது. தமிழகத்தில் நிலவிய இச் சூழலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கல்வி உலகத்தில் கருத்துடையோர் இருந்தமையையும் இங்குக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வடமொழிச் சார்பாளர்களும், அம்மொழியிலிருந்தே தமிழுக்கு அனைத்தும் வந்தன என்போரும், வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்து இயங்காது என்போரும் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் இக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். மேலும் கொச்சைத் தமிழ்தான் தமிழ் என்றும், தூய தமிழ் காலத்துக்கு உதவாது என்றும், இந்தி படிப்பது நன்மை தரும் என்றும் சில அறிஞர்கள் கருத்தினை முன்வைத்தனர். இவற்றை எதிர்க்கும் போர்முரசமாகப் பெருஞ்சித்திரனாரின் பாட்டுக்குரல் ஒலித்துள்ளது. தமிழீழப் போராட்டம் வேர்விட்டுப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த காலம் பெருஞ்சித்திரனாரின் இயக்கப்பணிக் காலமாகும். இதனால் இயக்க ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராகவும் பெருஞ்சித்திரனார் விளங்கினார்.

பெருஞ்சித்திரனார் தமிழில் நல்ல புலமையும், தமிழியச் சிந்தனையும் கொண்டவராக விளங்கித் தமக்கெனத் தனித்த கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர். தமிழினத்தின் பெருமையையும் அவர்களின் மொழிச் சிறப்பையும் இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த கேடுகளையும் வரலாற்று வழியாக உணர்ந்திருந்த பெருஞ்சித்திரனார் தமிழர்களையும் தமிழ்மொழியையும் மேம்படுத்தும் நோக்கில் தம் படைப்புகளை வழங்கத் தொடங்கினார். தம் கொள்கைகளை நிலைநாட்டவும், தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் இவர் எழுதிய எழுத்துகள் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தமை போல் எதிர்ப்புகளையும், சிறைத்தண்டனைகளையும் பெற்றுத் தந்துள்ளமையை இவர் வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது.

தமிழ்நாடு என்பது இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தென்பகுதியில் இருந்த பெருநிலபரப்பு; பண்டைக்காலத்தில் இது இலெமூரியாக் கண்டமாக விளங்கியது; இந்த நிலப்பரப்பில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; அவன் பேசியமொழி தமிழ்; இத்தமிழ் மொழியே உலக மொழிகளுக்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; இங்கு வாழ்ந்த மக்களே உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்; காலப் பழைமையால் இவர்கள் பேசும் மொழிகளில் திரிபுகள் உண்டாயின எனத் தம் ஆசிரியர் பாவாணர் கொள்கைகளை முழுவதும் கொண்டவர் பெருஞ்சித்திரனார். மேலும் மதம் வழியாகப் பின்னப்பட்டுள்ள சமூக இழிவுகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, கலை, இலக்கியப் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையையும் வரித்துக்கொண்டவர்; ‘கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லைஎன்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர். எனவே இக்கருத்துகளை நிலைப்படுத்தவும், பரவலாக்கவும், தம் கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களை எதிர்த்துக் கருத்துரைக்கவும் அஞ்சாதவராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியர். இக்கொள்கைகளை நிலைநாட்ட எழுத்தாலும் பேச்சாலும், இயக்கத்தாலும் பாடுபட்டவராகப் பெருஞ்சித்திரனாரை மதிப்பீடு செய்யலாம்.

பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், புலவர்கள் அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள் என அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும், இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மொழி வழியாகவே குமூகம் கட்டமைக்கப்படுகின்றது. அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மொழி என்று உணர்ந்து சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்க முனைந்தார். சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன.

என்மொழி என்னினம் என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன் !வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

என்று கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.

மூச்சுள்ள வரைக்கும் - உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் -அதில்
ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்.......
என்று பாடிய இவர்,
“எந்தக் கட்சியில் நீயிருந்தாலும்
இனத்தை மறந்துவிடாதே! தமிழா
இனத்தை மறந்துவிடாதே!’

என்று பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்த விழைந்து எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தமிழைக் கற்போரும் கற்பிப்போரும் பேசுவோரும் கணக்கின்றி உள்ளனர். வெற்று ஆரவாரக் கூச்சல்களால் பயன் இல்லை எனவும், ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுடன் விளங்கவேண்டும் எனவும் பெருஞ்சித்திரனார் விரும்பியவர். கல்வி நிலையங்கள் தமிழ்ப்பற்றை ஊட்டும் இடமாக விளங்கவேண்டும்; ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தமிழ்ப்பற்றை ஊட்டும் பணியைத் திறம்படச் செய்தல் வேண்டும்; மாணவர்கள் தமிழ்ப்பற்றுடன் இருக்க வேண்டும்; நாட்டை ஆளும் தலைவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி ஆக்கப்பணிகளில் முன்னிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுத் தமிழ்ப்பற்றுக்கு வழிகாட்டியவர். இத்தகு வைர வரிகளை மனத்துள் தேக்கிய மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும் கூடி இந்தி எதிர்ப்புப் போரில் வினையாற்றி வெற்றி வாகை சூடியமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களின் தமிழ்ப்பற்றுக்குக் காரணமாகப் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அக்காலத்தில் விளங்கின.

தமிழ்த்தொண்டு  செய்வோரின் கடமையைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.

தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
தமிழர்க்குத் தீங்கு செய்யும்!
தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
தருந்தமிழால் தமிழர் தாழ்வர்!
தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
தமிழ்நாட்டைக் கேடு சூழும்!
தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
தமிழ்நாட்டுப் பகைவ ராமே!”               (1960, கனிச்சாறு, தொகுதி 1)

பேராயக் கட்சியினரும் அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் சிலரும் வடவெழுத்துகளை வகைதொகையின்றிக் கலந்து எழுதினால்தான் தமிழ் வளரும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தமிழ்ச்சுவையறியாத  எளிய நிலை மக்களும் இக்கருத்தை மொழிவது உண்டு. இதனைப் பெருஞ்சித்திரனார்,

சந்தோஷம் என்பதற்கு வேண்டுமாம்;
ஜனநாயகத்திற்கு தேவையாம்;
சிந்தித்துப் புஸ்கத்தை அக்ஷரத்தைச்
சொல்லுங்கால் வேண்டும் க்ஷவும் வேண்டும்!
இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
விந்தையல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
வெள்ளெலும்பு கண்டார், வெள்ளெலும்பே கண்டார்!
குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்சரெல்லாம்
கோணல் முடிவல்ல’ ‘நல்ல முடிவேஎன்றார்!...
…………………………..    ………………..        நம்மனோர்க்குக்
கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
கண்டபின்னும் பிணம்போல இருப்பதற்கே! (1960, கனிச்சாறு, தொகுதி 1)

என்று கடிந்து எழுதியுள்ளார். தமிழ் மொழியில் பிற எழுத்தோ, பிற சொல்லோ கலந்தால் அதன் தூய்மை கெடும் என்பதை அறியாமல் அக்காலத்தில் ஆட்சியில் இருந்தோர் எடுத்த முடிவுகளைப் பெருஞ்சித்திரனார் துணிவுடன் கண்டித்துள்ளதை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

 தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் வடவெழுத்து, வடசொற்கலப்பு தடுத்து நிறத்தப்பட்டு எங்கும் தூய தமிழ் நிலைபெற்றமை வரலாறாகும். ‘அபேட்சகர்என்பது வேட்பாளர் எனவும், ‘அக்கிரசனாதிபதிஎன்பது தலைவர் எனவும், ‘ஸ்டேஷன்என்பது நிலையம் எனவும், ‘வந்தனா உபசாரம்என்பது வரவேற்புரை எனவும் வழக்கிற்கு வந்தமைக்குத் தனித்தமிழ் அறிஞர்களின் உழைப்பு பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.

இளைஞர்களுக்குத் தமிழ்ச்சிறப்பை எடுத்துரைத்து அவர்களைத் தமிழ் மறவர்களாக மாற்றும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன. தமிழ்ச்சிறப்பு எடுத்துரைத்தல், தமிழ்ப்பகைவர்களை அடையாளம் காட்டல், பகைமுடித்து மொழிகாத்தல் என நெறிப்படுத்தும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன.

மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
மொழிப்பால் குடிப்பாய்! – இனிப்
பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
விழிப்பாய் தமிழா!

அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
மறப்போர் புரிவாய்! - உயிர்
துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
இறப்பே தடடா!
சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
பொறுத்தாய் பலநாள்! – உயர்(வு)
அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
நிறுத்தாய் நெடுந்தோள்!”                   (1963, கனிச்சாறு, தொகுதி 1)

என்று எழுதியுள்ள வரிகள் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பற்றினையும் இன மேன்மைச் சிந்தனையையும் எடுத்துரைப்பதுடன் அவர்க்கு அமைந்திருந்த யாப்பாளுமையையும் புலமைச்செறிவையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.

பெருஞ்சித்திரனார் 1965 ஆம் ஆண்டு அளவில் இந்தி எதிர்ப்புப் பாடல்களைத் தம் இதழ்களில் எழுதி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழ் உணர்வூட்டியதால் அரசால் சிறைசெய்யப்பெற்று, வேலூர்ச் சிறையில் தளைப்படுத்தப்பட்டார். அப்பொழுது மார்கழி மாதம் என்பதால் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்கள் செந்தமிழ்ப்பாவைஎன்ற தலைப்பில் அமைந்துள்ளது.

கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
உற்றசிலர் நின்று உரிமைதரக் கேட்டாலோ
கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுன்
பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
பொற்றொடியே துஞ்சல் புரையேலே ரெம்பாவாய்!

மேற்கண்ட பாடலில் கற்றவர்களின் நிலையையும், அரசாட்சியில் இருப்பவர்களின் நிலையையும் எடுத்துரைத்துத் தமிழினம் அழியும் முன்பாக இவ்வினத்தைக் காப்பதற்குப் பெண்குலத்தோர் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுவதை இங்குக் கவனித்தல் வேண்டும்.

செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
இந்தி படிக்க இசையோம் யாம்என்பதனை
வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!

இந்தப் பாடலில் பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டு காலத்தேவைக்கு ஏற்ற கருத்தைப் பொதியவைத்து எழுதியுள்ள திறம் போற்றுதலுக்கு உரியது. குமுகத்தில் பெரும்பான்மைப் பெண்கள் பக்திவயப்பட்டவர்களாக இருப்பதும், சமய, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதும் கண்கூடு. இவர்களைச் சென்று சேரவேண்டிய கருத்துகளை இவர்களுக்கு அறிமுகமான வடிவத்தில் பெருஞ்சித்திரனார் வழங்கியுள்ளமை மிகச் சிறந்த உத்தியாகக் கொள்ள வேண்டும்.

மொழியியல் பேராசிரியர்கள் சிலர் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் கருத்தைப் பெருஞ்சித்திரனார் மறுத்து,

யாழிசைப்போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப்படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!” (1965,கனிச்சாறு முதல்தொகுதி, பக்கம்,46)

என்று இலக்கியம் எழுதுவோர் நல்லறிவு பெற்றவராகவும் மொழிநலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்று கடிந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியரை இடித்து எழுதியுள்ளமை இவரின் மொழிக்காப்பு முயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வெளிவரும் தாளிகைகள், இதழ்கள் யாவும் தமிழ்ப்பெயரின்றி வருகின்றன; தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளையும் படங்களையும் தாங்கி வருகின்றன. இதனைக் கண்டித்துப் பல பாடல்களை எழுதியுள்ளார். மிகுதியான மக்கள் படிக்கின்றனர் என்றோ, இதழ் நடத்துபவர்கள் தமிழ்ப்பற்று உடையவர்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் தம் மொழிக்கு ஊறு ஏற்படுத்தும் வேலைகளை யார் செய்தாலும் அறச்சீற்றம் கொண்ட அரிமாவாகப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.

தமிழரசின் அவைத்தலைவர்
செய்தித்தாள் நடத்துகின்றார்;
தினத்தந்தி’ ‘ராணிஎன்றே!

உமிழ்கின்ற கொச்சைநடை;
உடை களையும் புகைப் படங்கள்;
ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!

தமிழ் நாட்டின் இளைஞர்கை
மிளிர் தலெல்லாம் பேசும்படம்
குமுதங்கள் இழிந்த நூல்கள்! (1967, கனிச்சாறு, தொகுதி 1,பக்கம் 52)

எனவும்,

அவாள் இவாள் என்னும் ஆனந்த விகடன்
கவர்ச்சி ஓவியக் கழிசடைக் குமுதம்” (கனிச்சாறு, முதல்தொகுதி, பக்கம் 46)

எனவும் தமிழ்ப் பண்பாட்டைக் குலைக்கும் ஏடுகளைப் பெருஞ்சித்திரனார் கண்டித்து எழுதியுள்ளார். இவர் எழுதுவது போன்றே இவ்வேடுகளின் இதழ்ப்பணிகள் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஏடுகள் வகைதொகையின்றித் தொடக்கத்தில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதையும், தமிழ் மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செய்திகளைப் பரப்பியதையும், தமிழர் தலைவர்களின் செயல்பாடுகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தமையையும் இவண் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இந்த ஏடுகள் அட்டைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை கவர்ச்சியைத் தந்து வணிகம் செய்யும் இழிசெயல் தொடர்வதை நாகரிகக் குமூகம் தம் ஆதரவு நல்கலைத் தவிர்த்தல் வேண்டும் என்கின்றார்.

தமிழ் வாழ்க தமிழ் வாழ்கஎன்று வெற்றுரை முழங்குவதால் தமிழ் வாழாது என்று கண்டு உணர்ந்து, இன்றைய அரசியல், பொதுமக்கள் நிலையினைத் தமிழ் வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனார் பதிவு செய்துள்ளார்.

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;
எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் தமிழ் தமிழ்” - என்றெழுதி வைத்தே
முட்டி நின்று தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவ தில்லை!

என்று கூறி தமிழறிஞர்களைப் பாதுகாப்பதன் வழியாகவும், இழந்த பெருமைகளை மீட்பதன் வழியாகவும் தமிழ் வளர்க்க முடியும் என்கின்றார்(1970, கனிச்சாறு,1: 55).

பெருஞ்சித்திரனார் பாடல்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தாய்மொழி வழிக்கல்வி குறித்த செய்திகள், தமிழ் வழிபாடு(கனிச்சாறு 1: 83), தமிழக அரசு செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள், பொதுமக்கள் செய்ய வேண்டிய தமிழ்ப்பணிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கண்ணெதிரே தமிழுக்கு நேர்ந்துவரும் அழிவுகளைக் கண்டு நேர்க்கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் பாடல்களைத் தந்துள்ளார்.

கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனும் தமிழில்
கற்பதுதானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட்டே, உடன்எரி !” (கனிச்சாறு, தொகுதி 1, பக்கம்,58)

என்று பாடியுள்ளமை இதற்குக் காட்டாகும்.

சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டு அறிஞர் சமற்கிருத உதவியின்றித் தமிழ் இனிது இயங்காது என்றும், சமற்கிருதத்தின் தயவில் தமிழ் வளர்ந்தது என்றும் கூறியமையைக் கண்டிக்கும் பெருஞ்சித்திரனார், அறிஞர் தொ.பொ.மீ. உள்ளிட்டோர் இக்கருத்துக்கு உடன்பட்டு இருந்ததையும் கண்டிக்கத் தயங்கவில்லை. (கனிச்சாறு,தொகுதி 1: 60)

ஆங்கில இதழ் நடத்துவோர் அதில் பிழையின்றி நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, தமிழில் இதழ் நடத்தும்பொழுது அதில் பிழை மலிஎழுதுவதைப் பெருஞ்சித்திரனார் கண்டித்துள்ளார்(கனிச்சாறு 1:62).

தமிழர்கள் கட்சியிலும், சாதியிலும் தம்மை இணைத்துக்கொள்வதை விடுத்து மொழியடையாளம் கொண்டுதமிழர்என்று கூற வேண்டுமெனப் பல பாடல்களில் எழுதியுள்ளார்(கனிச்சாறு 1: 62). தமிழ் இளைஞர்களும் பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார். தமிழ்ப் பற்றில்லாதவர் எழுதும் நூல்களை ஒதுக்கும்படி வேண்டுகின்றார். தமிழ் நன்கு பயன்படுத்தாத திரைப்படங்கள், வானொலிகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றார். தமிழர்களையும் தமிழர் பெருமைகளையும் இழிவுசெய்யும் வரலாற்று நூல்களைத் தவிடுபொடியாக்கி நீக்க வேண்டும் என்கின்றார். பணந்திரட்டும் நோக்கில் நடத்தப்படும் ஏடுகளின் இழிதொழிலை எடுத்துப் பாடியுள்ளார் (கனிச்சாறு1:74). காமச்செய்திகளைக் கவினார்ந்த சொற்களால் வெளிப்படுத்தும் கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கின்றார் (கனிச்சாறு 1: 71).

தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்னும்பெயரில் தமிழ் அழிப்பு முயற்சி இருபதாம் நூற்றாண்டில் பலரால்  முன்னெடுக்கப்பட்டு அவ்வப்பொழுது அறிஞர் பெருமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியைக் கடிந்து எழுதும் பெருஞ்சித்திரனார் நாட்டில் சாதி, மதம் காரணமாகவும், இன்னும் பல இழிவுகள் காரணமாகவும் மக்கள் பல்வேறு இன்னல்களை அடைந்து வருகின்றனர். அந்த நிலைகளை மாற்றாமல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற மாற்றம் வேண்டுகின்றனரே என்று கடிந்து கூறுவதைத்,

தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
சிறுகுடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
ஓயாத தொல்லைகளால் நலிகின்றார்! இன்னும்
எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
எழுத்துக்களைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே! (கனிச்சாறு 1:79)

என்று பாடியுள்ளார்.

இன்று தமிழ்கற்றவர்களின் நிலையை நினைத்துப் பெருஞ்சித்திரனார் கவலை தோய்ந்து எழுதியுள்ளார். இலக்கண இலக்கியத் தேர்ச்சி இல்லை எனவும், புலமையில்லை எனவும், கொள்கைத் தோய்வு இல்லை எனவும் நேர்மை, ஒழுங்கு, மானம் முதலிய பண்புகள் இல்லை எனவும் கூறி, பெரியோரைச் சேர்தல், கிளையினைப் புரக்கும் இயல்பு யாவும் அற்றவர்களாக உள்ளனர் எனக் கூறி அற்றைநாள் புலவரைப் போல் ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு,

மண்டுபே ரறிவால் மல்கு
மறைமலை யடிக ளைப்போல்
பண்டித மணிபோல், சோம
சுந்தரப் பாவ லர்போல்
விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
விறல்மிகு திறமை மிக்கோர்
உண்டெனில் அன்றோ நந்தம்
ஒண்டமிழ் வளரும் கண்டீர்! (கனிச்சாறு 1:81)

என்று நாட்டில் பெரும்புலமை வாய்த்த அறிஞர்கள் இருத்தல் வேண்டும் என்று தம் விருப்பத்தைப் பதிந்துள்ளார்.

நிறைவுரை

தமிழர்களின் உயர்வுக்குத் தமிழ்மொழியே அடிப்படையானது என்று பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அம்மொழியைக் காப்பதன் வழியாகவும், அம்மொழியினர் ஒன்றுபடுவதன் வழியாகவும் தமிழ்க் குமூகம் மேம்படும் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளன. பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த தமிழ்க் குமூகம் பலநிலைகளில் தாழ்வுற்றிருப்பதைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் எடுத்துரைத்துத் தமிழர்களும் தமிழ்மொழியும் மேம்பாடு உறுவதற்கான வழிமுறைகளையும்  தீர்வுகளையும் சொல்லியுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பிறமொழி வல்லாண்மை எதிர்ப்பு, தனித்தமிழ்க் காப்பு, சாதியெதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல் உள்ளிட்ட குமூகச் சிக்கலை நடுவணாகக் கொண்டு பல பாடல்களைத் தந்த பெரும்பாவலராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியுள்ளார்.

குறிப்பு: என் கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக. நூல் எழுதுவோர், வெளியிடுவோர் எடுத்த இடம் சுட்டுக.

நன்றி: தமிழ்த்துறை, சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி