நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 27 ஜனவரி, 2021

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தலைவர் பூ. நாகதேவன் மறைவு!

 

                                                                    பூ. நாகதேவன்

    இலண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தலைவரும், தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, திரு. பூ. நாகதேவன் அவர்கள் தம் எழுபதாம் அகவையில் 25.01.2021 திங்கள்கிழமை அன்று, இலண்டனில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெருங்கவலையுற்றேன். இலண்டனுக்கு நான் செல்லும்பொழுதெல்லாம்  அன்புடன் வரவேற்று, விருந்தளித்தவர். அவர்கள் நடத்தும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா மலருக்கு உரிய வாழ்த்துகளை என்னிடம் பெற்று, அச்சிட்டு மகிழ்வதை வழக்கமாகக் கொண்டவர். எம் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவினை இலண்டனில் முன்னின்று நடத்தியவர். என் அருமை நண்பர் பொறியாளர் அரிசு அவர்களும் அண்ணன் அன்பழகனார் அவர்களும் நாகதேவனாருடன் இணைந்து செய்துவந்த தமிழ்ப்பணிகள் யாவும் என் மனக்கண்ணில் நிற்கின்றன.

   பூ. நாகதேவன் அவர்கள் தமிழகத்தில் உள்ள உசிலம்பட்டியில் பிறந்தவர்.  1979 இல் இலண்டன் சென்றவர். அங்குத் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகவும், தலமையாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் வழியாகத் தமிழ் மக்களை ஒன்றிணைத்து, அரும்பெரும் பணிகளைச் செய்து வந்தவர்.

  மொழிப்பற்றும், இன உணர்வும் கொண்ட பூ. நாகதேவனார் தமிழகத்திலிருந்து இலண்டனுக்குச் செல்லும் அறிஞர்களை அன்புடன் வரவேற்று, விருந்தோம்புவதை வழக்கமாகக் கொண்டவர். முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிக்கும் வகையில் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியைக் கண்ணுங்கருத்துமாகப் போற்றி நடத்தியவர்.

  இலண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) பகுதியில் தமிழ்த்தொண்டாற்றிய பூ. நாகதேவனாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர். திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தமிழர் முன்னேற்றக்கழகத்தின் தோழர்கள், தமிழார்வலர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வியாழன், 21 ஜனவரி, 2021

புலவர் இ. திருநாவலன் மறைவு!

 


புலவர் இ. திருநாவலன்

   புதுச்சேரியின் புகழ்பெற்ற தமிழாசிரியர் புலவர் . திருநாவலன் அவர்கள் தம் எண்பதாம் அகவையில் நேற்று (20.01.2021) மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். 1992 இல் நான் புதுச்சேரிக்குக் கல்வி பயில்வதற்கு வந்த நாள் முதல் புலவர் ஐயா அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளேன். ஒரு நூல்வெளியீட்டு விழாவில் தொடங்கிய எங்களின் தொடர்பு வளர்பிறைபோல் வளர்ந்து முழுமதிபோல் முழுமைபெற்றது. 2005 இல் புதுவை அரசுப் பணி எனக்குக் கிடைத்ததும் முதல் செய்தியாக ஐயாவுக்குதான் தெரிவித்தேன். அவர்களும் அவர்தம் குடும்பத்தாரும் புதுவையில் நான் வேர்பிடித்து நிற்பதற்குச் செய்த உதவிகளை எழுமை எழுபிறப்பும் நினைவேன். தம் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைந்து, எம் மீது அன்பு பாராட்டி, எம்மின் இன்ப, துன்பங்களில் துணைநின்ற பெருமகனாரின் நினைவு என்னை என்றும் வழிநடத்தும். என் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் நெறிகாட்டி வளர்த்த, புலவர் ஐயாவின் மறைவு அவர்தம் குடும்பத்தார்க்கும், பொதுவாழ்வில் ஆர்வம்கொண்ட எம் போல்வார்க்கும் பேரிழப்பாகும்.

  புதுச்சேரியின் கடற்கரை ஊரான புதுக்குப்பத்தில் புலவர் இ. திருநாவலன் 28.06.1940 அன்று பிறந்தவர். பல்வேறு அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிந்தவர். புதுச்சேரியில் தமிழாசிரியர்களுக்கு மதிப்புக் கூடுவதற்குப் பல்வேறு ஆக்கப் பணிகள் செய்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்றவர். தமிழ் இலக்கியங்களில் பெரும்புலமை பெற்ற புலவர் அவர்கள் நினைவாற்றலில் பெருந்திறன் பெற்றவர். பள்ளியின் வகுப்பறைகளுக்கு வெளியிலும் இவர் பணி நீண்டிருந்தது.

   தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்து நன் மாணாக்கர் பலரை உருவாக்கிய பெருமகனார். ஆனந்து அச்சகம் நிறுவியர். ஆனந்து மருந்தகம் கண்டவர்.

   புலவர் இ. திருநாவலன் அவர்களின் பெருமைமிகு வாழ்வினை என்றும் நினைவுகூர்வோம்!

 

புதன், 13 ஜனவரி, 2021

ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்களுக்குத் தேவநேயப் பாவாணர் விருது!

 


ஆய்வறிஞர் கு. சிவமணி

    ஆய்வறிஞரும் அகராதியியல் துறை வல்லுநருமான பேராசிரியர் கு. சிவமணி (வயது 89) அவர்களுக்குத் தமிழ்நாட்டு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் வழங்கப்படும் தேவநேயப் பாவாணர் விருதினைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது முதன்முதல் கு.சிவமணி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    தேவநேயப் பாவாணர் விருது என்பது ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கப்பதக்கம் அடங்கியது.  தமிழ்நாட்டு முதலமைச்சரால் விரைவில் நடைபெற உள்ள அரசு விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

பேராசிரியர் கு. சிவமணி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்திய அரசுக்காக தமிழ்நாடு சட்ட  ஆட்சிமொழி ஆணையத்தின் சார்பில் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். மேலும். புதுவை அரசுக்காக 1391 பக்கத்தில் இவர் உருவாக்கிய சட்ட- ஆட்சியச் சொற்களஞ்சியம் இவர்தம் வாழ்நாள் சாதனைப் பணியாகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்ற பேராசிரியர் கு. சிவமணி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புலவர் கல்லூரியில் முதல்வராகவும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சிக்குப் பொறுப்பாசிரியராக இருந்து 1500 - க்கும் மேற்பட்ட நல்லாசிரியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.  தொல்காப்பியம், சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வு நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் தமிழ் மேடைகளில்  தமிழ்ச் சிறப்பு குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றியவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகவும் பணி செய்த பெருமைக்குரியவர்.

தேவநேயப் பாவாணர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு. சிவமணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி இலக்கிய வட்டம் உள்ளிட்ட தமிழமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


 பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் தமிழ் வாழ்க்கையை அறிய இங்குச் சொடுக்கவும்.

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

மெல்பர்ன் தமிழ்ச்சங்கம் நடத்தும் திருவள்ளுவர் திருநாள் விழா!

 


  ஆத்திரேலியா நாட்டில் மெல்பர்ன் தமிழ்ச்சங்கம் தமிழர் மரபுத் திருநாளையொட்டி, திருவள்ளுவர் திருநாளை இணையம் வழியாகக் கொண்டாடுகின்றது.

  இந்த நிகழ்வு பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் (மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி) தலைமையில் நடைபெறுகின்றது. மெல்பர்ன் தமிழ்ச் சங்கத் தலைவர் பொறியாளர் ந. சுந்தரேசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் முனைவர் அ. சண்முகதாசு அவர்கள் உலகப் பொதுமறை என்னும் தலைப்பிலும், மலேயாப் பல்கலைக்கழகத்தின் முன்னை விரிவுரைஞர் ஆசான் ம. மன்னர் மன்னன் அவர்கள் திருக்குறள் சிறப்புகள் என்னும் தலைப்பிலும், சிங்கப்பூரின் தமிழ்ச் சொற்பொழிவாளர் மன்னை முனைவர் க. இராசகோபாலன் அவர்கள் ஆளுமை வளர்ச்சியில் திருக்குறள் என்னும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

  மெல்பர்ன் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சீனிவாசன் வெங்கட்ராமன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

  புதுவைப் பேராசிரியர் மு. இளங்கோவன் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

 நாள்: 15.01.2021, நேரம்: இரவு 7.00 முதல் 8.30 மணி வரை(ஆத்திரேலியா நேரம்) / இந்தியா, இலங்கை நேரம்: பகல் 1.30 முதல் 3.00 மணி வரை.

 இணைய இணைப்பு: https://meet.google.com/ezx-szcc-xfv

 முகநூல், யூடியுபிலும் காணலாம்.

 தமிழார்வலர்களைப் பங்கேற்க அழைக்கின்றோம்.