நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 26 நவம்பர், 2010

வள்ளிமலை சமணர்குகை

வேலூர் மாவட்டம் பல வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கிக்கொண்டு அமைதியாக வளர்ந்து வருகின்றது.இங்குச் சங்க காலத்துச் சான்றுகள் பல உள்ளன. அதுபோல் இடைக்காலச் சோழர் காலத்து வரலாற்றுத் தடங்களும் உள்ளன.

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் பணியாற்றியபொழுது(1999-2005) காரி, ஞாயிறு விடுமுறைகளில் ஏதாவது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மாணவர்கள் பலரும் வருகை தந்து அந்த ஊரின் சிறப்புகளை எடுத்துரைப்பார்கள். அவ்வகையில் பெருமாள்குப்பம் என்னும் ஊரிலிருந்து வந்து கல்வி பயின்ற திரு.பழனி(தந்தையார் பெயர் திரு.சுப்பிரமணி) என்னும் மாணவர் வள்ளிமலையின் சிறப்புகளைச் சொல்லி இந்த ஊருக்குத் தாங்கள் வரவேண்டும் என்று ஒரு விருப்பத்தை முன்மொழிந்தார்.

ஆர்க்காட்டிலிருந்து பொன்னை என்னும் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி, வள்ளிமலையின் மலையடிவாரத்தில் இறங்கினோம். கீழே இருந்த புகழ்பெற்ற கோயில் ஒன்றைப் பார்த்தவாறு மலையின் படிக்கட்டுகளில் ஏறி இடையில் இருந்த பால காட்சிகளைப் பார்வையிட்டபடி மேலே சென்றோம்.

இடையில் முக்கியமான சமணர் குகை ஒன்று உள்ளது.அரிய சிற்பங்கள் பல உள்ளன. தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பில் இந்தக் குகை உள்ளது.

சமணத் துறவிக்கான இந்தத் தாழ்ந்த குகையில் பல முக்கிய கங்க, பாண அரசர்களின் சிலைகளும், சமணப் படுக்கைகளும், கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளன. இதை வசதியாகக் குடைவித்த அரசன் கங்கராஜமல்லன்(கி.பி.816-843) ஆவான். இவன் கங்க சிவமாறன்(கி.பி.679-725) கொள்பேரனும் ஸ்ரீ புருஷன்(725-788) பேரனும், ரணவிக்கிரம மகனுமாவான் என இங்குள்ள ஒரு கல்வெட்டு குறிக்கிறது. பாண அரசனொருவரின் மதகுருவான பவநந்தியின் சிஷ்யையான தேவசேனையின் பதுமையை இங்குக் காணலாம். இதையும் மற்றொரு பதுமையையும் இங்குச் செய்வித்தவர் சமணகுரு ஆர்யநந்தியாவார்.

இந்தக் குகையில் நன்கு ஓய்வெடுக்கவும், உட்கார்ந்து உணவு உண்ணவும் இயலும். தூய்மையாகக் காட்சி தரும் இதனைப் பார்வையிட்டு மகிழும்பொழுது சில்லென்ற காற்று உங்கள் உள்ளம் வருடும்.

குகையின் மேலே வள்ளிமலை ஆசிரமம் உள்ளது. இங்குள்ள துறவியர் தவத்திரு. சாது பாலானந்தா அவர்கள் ஆவார். இவரைச் சென்னையில் 1998 அளவில் ஆசியவியல் நிறுவனத்தில்நடந்த ஒரு கந்தமுருகன் தொடர்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் முன்பே சந்தித்தேன். அப்பொழுது அவர் உரை கேட்டுப் பின்னாளில் அவரை அவரின் தங்குமிடம் சென்று கண்டு மகிழவேண்டும் என்று ஒரு வேட்கை எழுந்தது. காரணம் அவரின் திருப்புகழ்ப் புலமை என்னை அவரை நாட வைத்தது. திருப்புகழை நன்கு பாடினார். நம்மைப் போல் வயிற்றுப்பாட்டுக்குத் திருப்புகழை அடிகளார் கற்றாரில்லை. உணர்ந்துபாடும் ஆற்றலும், பழுத்த புலமையும் உடையவர்.

பல ஆண்டுகளுக்கு முன் நினைத்த ஒரு நினைவு எப்படியோ இந்த முறை பாலானந்தா அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது. அடிகளாரிடம் முன்பு சென்னையில் சந்தித்த சந்திப்பை எடுத்துரைத்ததும் மகிழ்ந்தார். அவர் ஒரு பொறியாளர். தம் மகிழ்வுந்தைத் தாமே இயக்கியபடி சென்னை போன்ற இடங்களுக்கு வந்துபோகும் வீரத்துறவியாக அவர் எனக்குத் தென்பட்டார். மலைக்கு வரும் நம் போன்றவர்களுக்கு உணவை வழங்குவதும் அடிகளாருக்கு மகிழ்ச்சியான செயலாகும். இருப்பதைப் பகிர்ந்து உண்ணலாம்.

அங்குள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். அங்கு ஒரு சுனை உள்ளது. அதன் இயற்கையழகை நம் மக்கள் கெடுத்து வருகின்றர். அங்குள்ள பாறைகள், மரங்கள் ஒருநாள் தங்கிச்செல்ல வேண்டும் என்ற உந்துதலைத் தரும். தவத்திரு சாது பாலானந்தா அவர்களுடன் பழகியபிறகு திருப்புகழ் விழாவின்பொழுது அழைப்பு அனுப்புவார்கள். நானும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சென்று வருவதுண்டு. புதுச்சேரிக்கு வந்த பிறகு தவத்திரு. சாது பாலானந்தா அடிகளாரின் தொடர்பு இல்லாமல் போனது. திருப்புகழை நினைக்கும் பொழுதெல்லாம் நம் அடிகளாரையும் நினைப்பது உண்டு. சாது பாலானந்தா அவர்களை இங்கிருந்தே வணங்கி மகிழ்கின்றேன்.

அதுபோல் என் மாணவர் பழனி அவர்கள் இப்பொழுது பெங்களூரில் கணிப்பொறிப் பொறியாளராக இருப்பதாகப் பழைய மாணவர்கள் சிலர் சொல்வார்கள். பழனி எளிய குடும்பச்சூழல் உடையவர் என்றாலும் உயர்பண்பு வாய்த்தவர். என்மேல் அளவுக்கு அதிகமான பாசமும் அன்பும் கொண்டவர். அவர் தந்தையார் கல்லூரிக்கு வரும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு மகிழ்வார். கல்லூரியின் விடுதிக் காப்பாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்ததால் ஒவ்வொரு மாணவரின் அசைவும் குடும்பப் பின்புலமும் அறிவேன். அடிகளார், வள்ளிமலையை நினைக்கும்பொழுதெல்லாம் இயல்பாகப் பழனியும் என் உள்ளத்தில் நுழைந்துவிடுவார்.

திங்கள், 22 நவம்பர், 2010

பாவலர் முத்துராமனின் பா முயற்சி...


பாவலர் முத்துராமன்

அண்மையில் எனக்குத் தனித்தூதில் மூன்று நூல்கள் வந்தன.பிரித்துப் பார்த்தேன்.உரையும் பாட்டுமான நூல்கள்.

முதல் நூல் முகவரி இல்லாத பூக்கள்.
புதுப்பா முறையில் கற்பனை கலந்து இருந்தது. இதன் பாடுபொருள் சமூக நடப்புகள் ஆகும். பாடல்புனையும் அறிமுக நிலையில் இருக்கும் படைப்பாளிகளைப் போன்று சில பாடல்கள் இருப்பினும் வளர்வதற்குரிய வாய்ப்பு இருப்பதைப் பல பாடல்கள் காட்டுகின்றன.

இரண்டாம் நூல் வசந்தத்தை நாடும் இலைகள்.
இன்னிசை, நேரிசை, பஃறொடை வெண்பாக்களால் அமைந்த நூல். வெண்பாவின் ஓசை பாவலருக்குப் பிடிபட்டுள்ளது. தொடர்ந்து முத்தொள்ளாயிரம், நளவெண்பா, கொடைவிளக்கு(வ.சுப.மாணிக்கம்), பெருஞ்சித்திரனார், தங்கப்பா நூல்களைப் படித்துவர இவரால் மிகசிறந்த பாவலராக மிளிரமுடியும்.

சுவைத்திடத் தூண்டும் கனிகள் என்னும் தலைப்பிலான மூன்றாம் நூல் குறள்வெண்பாவால் எழுதப்பட்டுள்ளது. பாடுபொருள் பழைமையும் புதுமையும்
கலந்து இருக்கின்றது.


பணிவெனும் பண்பைப் படித்திட நீவீர்
அணியலாம் வெற்றி அறி (621)

திருடும் தொழிலைத் தினமும் புரிவர்
இருளை அடைதல் இயல்பு (701)

அரளியில் அல்லி; அதிசயம் என்றே
புரளி பரப்பல் பிழை (1751)

பொறியியல் தன்னைப் புறக்கணிக்க வேண்டாம்
அறிய உரைத்தேன் அறிந்து (1800)

போராடப் போராடப் பூக்கும் அறிவுடைமை
போராடிக் காண்பாய்ப் புகழ் (1840)

வீண்பேச்சால் வாயும் வலித்தே சமயத்தில்
காண்பரே சண்டைக் களம் ( 1855)

என்று குறள்வெண்பா பாடிய பாவலர் முத்துராமனின் இயற்பெயர் ஆ.மு.செயராமன். நாகர்கோயில் அருகில் உள்ள கீழராமன்புதூரில் பிறந்தவர்.

பெற்றோர் திருவாளர்கள் ஆதிலிங்கம், முத்துலட்சுமி ஆவர்

முத்துராமன் நாகர்கோயில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் - இயந்திரவியல் கல்வியில் பட்டயம் பெற்றவர். இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலையில் முதுகலைப் பொது நிர்வாகம் பயில்கின்றார்.

வளரும் பாவலருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.


தொடர்பு முகவரி:

பாவலர் முத்துராமன்
கவிமேகலா பதிப்பகம்
1,முருகன்கோயில் அருகில்,
தட்டான்விளைச் சாலை,
கீழராமன்புதூர், நாகர்கோயில்- 629 002
செல்பேசி - + 91 99432 82788
மின்னஞ்சல்: kavignar.muthuraman@gmail.com

வெள்ளி, 19 நவம்பர், 2010

மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா வருகை...


மு.இளங்கோவன்,மறவன்புலவு சச்சிதானந்தன்


இன்று(19.11.2010) அலுவலக நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.
தாம் பேருந்தில் வருவதாகவும் இன்னும் கால் மணி நேரத்தில் புதுவைப் பேருந்துநிலை
வந்தால் சந்திக்கலாம் எனவும் அழைப்பின் செய்தி இருந்தது.

இலங்கைச் செலவு முடித்து மீண்டிருந்த திருவாளர் அண்ணாகண்ணனின் அழைப்புக் குரல்தான் அது.(அண்ணாகண்ணன் அமுதசுரபி இதழின் மேனாள் ஆசிரியர்.தமிழ் இணைய இதழ்கள் பலவற்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்,நூலாசிரியர்.எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எங்கள் பகுதிக்காரர். "கோடாலி கருப்பூர்" என்ற அவர் பிறந்த ஊர் எங்கள் ஊருக்குத் தெற்கே நான்கு கல் தொலைவு.கொள்ளிடக்கரையின் வடகரையில் அமைந்த ஊர். அந்த ஊரில் இத்தகு அறிவாளி தோன்றியுளார் என்பதை அருகில் உள்ள உதயநத்தம் காத்தாயி அம்மன் மேல் சூளுரை செய்தாலும் அந்த ஊர் மக்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.அந்த அளவு கல்விக்கு முதன்மையளிக்கும்(!) பகுதி எம் பகுதி.)

நான் முதன்மையான ஒரு பணியில் இருந்ததால் கல்லூரி முடிந்து நாலரை மணிக்குதான் வெளியில் வர இயலும் என்று என் நிலையைத் தெரிவித்தேன். அப்பொழுது நேரம் ஒரு மணி என்பதால் கல்லூரிக்கு வந்தால் என்னுடன் பகலுணவு சேர்ந்து உண்ணலாம் என்று அழைத்தேன்.

புதுச்சேரியில் உள்ள எழுத்தாளர் திரு.அரங்கநாதன் ஐயாவைச் சந்திக்கும்படி அண்ணா கண்ணன் பலமுறை முன்பே வற்புறுத்தியும் பல மாதங்களாகச் சந்திக்கமுடியவில்லை. அண்ணா கண்ணனுடன் சென்று எழுத்தாளரைச் சந்திக்கலாம் என்பது அண்ணாகண்ணனின் அழைப்புக்குக் காரணம்.

முன்பே திட்டம் இல்லாததால் அண்ணாகண்ணனின் திடீர்த் திட்டத்துக்கு என்னால் ஒத்துழைக்க இயலவில்லையே என்று என் அலுவலில் மூழ்கிக்கிடந்தேன்.

சற்று நேரம் கழித்து மீண்டும் அண்ணாகண்ணன் அழைத்தார். இப்பொழுது என்னால் வெளியில் சந்திக்க இயலாது என்றும் முடிந்தால் நாலரை மணிக்குமேல் அலுவலகம்
முடித்து வருவதாகவும் மறுமொழி விடுத்தேன்.

எங்கள் கல்லூரி வாயிலில் இருப்பதாக அண்ணா கண்ணன் சொன்னதும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்க வெளியில் வந்தேன்.

அப்பொழுது இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. காந்தளகம் பதிப்பகம் உரிமையாளர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களை நம் அண்ணாகண்ணன் அவர்கள் அழைத்து வந்திருந்தார். ஐயாவுடன் முன்பே மின்னஞ்சலில், இலக்கிய நிகழ்வுகளில் சந்திப்பு இருந்தாலும் தனியே சந்திப்பது இதுவே முதன்முறை.

அவர்களின் காந்தளகம் தளத்தில் பன்னிருதிருமுறைக்கு ஒரு பகுதி வைத்து அதில் திருமுறைகளை இசையுடன் பாடச் செய்வதற்கு வசதியும் இருப்பது அறிந்து ஐயாவின்மேல்
அளவுக்கு அதிகமான பாசம் எனக்கு உண்டு. மேலும் ஈழத்தமிழர்களின் தமிழ்ப்பணிகளின்மேல் எனக்கு மிகப்பெரிய மதிப்பு எப்பொழுதும் உண்டு.

என் அறைக்கு அழைத்துச்சென்று மூவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்களின் தாயக நிலை சீராகவும் அமைதிவாழ்க்கை அனைவரும் வாழவேண்டும் எனவும் என் விருப்பத்தைக் கூறி, அவர்களின் பதிப்பகப் பணிகளை வினவினேன்.அருகில் இருந்த நண்பர்களுக்குக் காந்தளகத்தின் பதிப்புப் பணிகளை நினைவூட்டினேன்.நினைவுக்குச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்.


மு.இ,மறவன்புலவு சச்சிதானந்தன்,அண்ணாகண்ணன்

அருகில் இருந்த சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று குளம்பிக்கு முன்பதிவு செய்து காத்திருந்தோம்.

எங்கள் பேச்சு மெதுவாகத் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது குறித்துச் சென்றது.
அவ்வாறு பேசத் தொடங்கியபொழுது இப்பொழுதுதான் தாம் பிரஞ்சுநாட்டுத் தமிழறிஞர் செவ்வியார் அவர்களைக் கண்டு வருவதாகச் சொன்னார்கள். நானும் சில நாளுக்கு முன் சென்று சந்தித்துக் கிரந்தம் தொடர்பாக உரையாடியதை எடுத்துரைத்தேன்.

நானும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவும் கிரந்தம் தமிழுக்குத் தேவையில்லை என்று தொல்காப்பியர்,சங்க இலக்கியம்,பக்திப்பனுவல்கள் என்று பல சான்றுகள் காட்டிப் பேசினோம். ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஈழத்துத் தமிழறிஞர்கள் யாரும் கிரந்தம் பயன்படுத்துவது இல்லை என்று மறவன்புலவு ஐயா குறிப்பிட்டார்கள். எழுத்தாளர் பழ.கருப்பையாவின் கட்டுரை பற்றியும் பேசினோம்.

அருகில் இருந்த அண்ணாகண்ணன் அவர்கள் இன்றைய நடைமுறை எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுக் கிரந்தம் தேவை என்பவர்கள் குறிப்பிடும் காரணங்களை எடுத்துரைத்தார். இசுலாமியத் தமிழ் உடன்பிறப்புகள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடும்பொழுது ஒலிப்புமுறைக்கு முதன்மையளிக்க விரும்பும் ஒரு நடைமுறைச்சிக்கலையும் எடுத்துக்காட்டினார். அதுபோல் தமிழில் நீக்கமற கலந்துகிடக்கும் ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட பிறமொழிச்சொற்களைக் குறிப்பிடும்பொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்று மக்கள் விரும்புவதை அண்ணாகண்ணன் எடுத்துக்காட்டி எங்களின் விடையினுக்குக் காத்திருந்தார்.

முன்னாள் முதல்வர் ம.கோ.இரா. அவர்களை அவர் வாழுங்காலத்தில் எம்.ஜி.ஆர். என்று அனைவரும் குறிப்பிடப், பாவாணர் உள்ளிட்ட தமிறிஞர்கள் ம.கோ.இரா என்று குறித்ததையும்,தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் இயற்பெயரைப் பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் அருட்செல்வர்(கருணை=அருள்; நிதி= செல்வர்) என்று தூய தமிழில் எழுதியதையும்(அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காப்போம்- பெருஞ்சித்திரனார்) நான் எடுத்துக்காட்டினேன். இவ்வாறு எழுதியமைக்குத் தமிழக முதலமைச்சர்கள் வருந்தவில்லை எனவும் நல்ல தமிழில் உள்ளதே என்று மகிழ்ந்ததாகவும் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துப் பேசினோம். தனியொருவருக்காக ஒட்டுமொத்த மக்கள் பேசும் மொழியைப் பலியிடுவது அறிவுலகுக்குப் பொருந்தாது என்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.

வளர்ந்து செறிந்து கிடக்கும் பிறமொழி ஆதிக்கத்தை எவ்வாறு வென்று மீள்வது என்று அண்ணாகண்ணன் கேட்க, அரசு ஓர் ஆணையிட்டுப் பிறமொழிச்சொற்களை, எழுத்துகளைக் கலவாமல் எழுதவும் பேசவும் தமிழக மக்கள் முன்வரும்படியும் அதற்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் வைத்தால் தமிழ் பிறமொழித் தாக்கம் இல்லாமல் வளரும் என்ற கருத்தை மறவன்புலவு ஐயா முன்மொழிந்தார். நானும் அதனை வழிமொழிந்தேன்.
அனைவரும் தமிழ் நினைவுகளுடன் விடைபெற்றோம்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

கிரந்தம் அறிந்த அறிஞர்களுடன் ஒரு சந்திப்பு...

கிரந்தம் பற்றிய சில அடிப்படையான புரிதல்களுக்காகப் பல அறிஞர்களுடன் நேரிலும், தொலைபேசியிலும் உரையாடி வருகின்றேன்.

இன்று(12.11.2010) புதுவை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியர் ழான் லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard), பேராசிரியர் விசய வேணுகோபால், அறிஞர் வரததேசிகன் உள்ளிட்ட அறிஞர்களுடன் உரையாடிப் பல விவரங்களைப் பெற்றேன்.

இவர்களுடன் உரையாடும்பொழுது கிரந்தம் தமிழ்நூல்களிலும் தமிழகத்திலும் எந்த அளவுப் பயன்பாட்டில் உள்ளது எனவும், கிரந்த எழுத்துகள் இல்லாமல் நம் மொழி மரபுக்காக தமிழ் ஒலிப்பில் எழுதினால் பொருள் மாறுபடும் இடங்களையும் தெளிவாக எடுத்துரைத்தனர். அறிவியல் தொழில்நுட்ப உலகில் பிறமொழிச் சொற்களைக் கையாளும்பொழுது இந்தக் கிரந்த எழுத்துகள் பயன்படுவதன் தேவையைப் பேராசிரியர் விசய வேணுகோபாலும், திரு வரததேசிகனும், பேராசிரியர் செவ்வியார் அவர்களும் எடுத்துரைத்தனர்.

தமிழ்ப் பாடல்களுக்கான விளக்கங்களைக் கிரந்த எழுத்தில் கலந்து எழுதினால் அந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள முடிகின்றது எனவும் அதனையே சமற்கிருதத்தை இன்று எழுதும் தேவநாகரி எழுத்துவடிவில் எழுதினால் முற்றாக வேறுபடுகின்றது எனவும் கருத்துரைத்தனர். எனவே பழைய தமிழ் நூல்களைப் படிக்க அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கிரந்த எழுத்தின் இன்றியமையாமையை விளக்கினர்.மூவரும் தமிழும் வடமொழி எழுத்து அமைப்பும் அறிந்தவர்கள்.


நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் உள்ள மணிப்பவள நடையினைப் படித்துப் பார்த்தபொழுது கிரந்த எழுத்துகள் தேவை என்பது போன்ற ஒரு நிலையை உணரமுடிகின்றது. ஆனால் தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களும் எழுத்துகளும் கலந்து கிடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது மொழிக்காப்பாக இருக்காது. அத்தகு பிறமொழிச்சொற்களைக் களைந்து தமிழில் எழுதும்பொழுதுதான் தமிழ் தமிழாக இருக்கும். எனவே நாம் தமிழ்நெடுங்கணக்கில் பிற எழுத்துகளைச் சேர்க்காமலும் (கிரந்தம் உட்பட), தமிழ் எழுத்துகளைப் பிறமொழி எழுத்து அட்டவணைகளில் இணைக்காமலும் இருப்பதே சிறப்பு.

மணிப்பவள நடையைத் தாங்கி நிற்கும் நூல்கள் யாவும் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அறிவைத் தாங்கி நிற்பதாக இல்லை. மாறாக அக்காலத்தில் இருந்த வடமொழியறிந்த தமிழ்ப்புலவர்கள் அரசனிடத்தும், சமூகத்திலும் தம் பெயர்,புலமையை நிலைநாட்ட செய்த வேலைகள் என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். அவர்களின் அத்தகு உரைவரையும் போக்கினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. எனவே இவையெல்லாம் எளிய காரணங்களாகவே தெரிகின்றன.

பிறமொழி எழுத்துகள், சொற்கள் இல்லாமல் எழுதமுடியாது என்ற இந்தக் கருத்துகள் யாவும் மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் காலத்திலேயே தவிடுபொடியாயின என்பதைக் கண்ணெதிரில் கண்டோம். இன்று கிரந்தத்தைத் தமிழில் கலக்க ஒப்பினால் இன்றைய தொலைக்காட்சி, திரைப்படங்களால் தமிழர் வாழ்வில் கலந்துவரும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எழுதும் எழுத்துகளையும் தமிழில் கலந்து எழுத எதிர்காலத்தில் மக்கள் முயற்சி செய்வார்கள். இன்றும் இந்த நிலையை ஓரிரு விளம்பரப் பலகைககளில் காணமுடிகின்றது. பண்பலை வானொலிகளில் வலிய ஆங்கிலத் திணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டாகக் கூறி ஆங்கிலத்தைத் தமிழில் கலக்க இயலுமா?

தமிழில் பிறமொழிச் சொற்கள், பிறமொழி ஒலிப்புகள் இல்லாமல் ஏடுகள் நடத்தித் 'தென்மொழி'யாகவும், 'தமிழ்ச்சிட்டா'கவும், 'தமிழ்நிலமா'கவும் வெளிவந்த பழைய வரலாற்றையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுபோல் மறைமலையடிகளால் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் என்று மும்மொழிப் புலமை பெற்றிருந்தும் தூய தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பை நிலைநாட்டினார். அதுபோல் பாவாணரும் இனிக்க இனிக்க, மணக்க மணக்கத் தமிழில் எழுதித் தமிழ்ச் சிறப்பைப் பல நூல்களாக வெளிப்படுத்தினார். தமிழ் மரபுப்படி எழுதுவதும், இடர்ப்படும் அருகிய இடங்களில் அடைப்பில் பிறமொழிச் சொற்களை, எழுத்துகளை எழுதிப் புலப்படுத்துவதும் தமிழுக்கும் நல்லது தமிழர்களுக்கும் நல்லது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.


செவ்வியார், விசயவேணுகோபால்செவியார், விசயவேணுகோபால், வரத தேசிகர்மு.இ, வரத தேசிகர், செவ்வியார்


கிரந்தம் உயிர் எழுத்துகள்கிரந்த மெய்யெழுத்துக்கள்சிறீ இரமணசர்மா(அட்டவணை)

வியாழன், 11 நவம்பர், 2010

கிரந்தம் பற்றிய சில அடிப்படை உண்மைகள்

கிரந்தம் என்பது தமிழர்கள் சமற்கிருதத்தை எழுதக் கண்டுபிடித்த வரிவடிவம் ஆகும். கிரந்தம் என்பது மொழி அன்று.

வடமொழியாகிய சமற்கிருதத்துக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான் என்பார் பாவாணர் (வடமொழி வரலாறு, பக்கம்127). அதனால்தான் வேதங்களை எழுதாக்கிளவி என்றும் எழுதாமறை என்றும் குறித்தனர் போலும்.

எழுத்து இருந்தால்தானே எழுதுவதற்கு முடியும். முடி இருந்தால்தானே பின்னி சடைபோடமுடியும். இல்லாதவள் பிறரின் இடிமுடியை வாங்குவதே வழக்கு.

அந்த அடிப்படையில்தான் தமிழர்களிடம் இருந்து பல மொழி சார்ந்த மூலங்களைப்(நெடுங்கணக்கு,எழுத்து வடிவம்) வடமொழியினர் பெற்றுள்ளனர்.

கிரந்தம் என்பது பண்டையத் தமிழ் ஏட்டெழுத்திலிருந்து திரிந்த எழுத்துருவாகும். அதன் காலம் கி.மு.10 ஆம் நூற்றாண்டு என்பதும் பாவாணர் கருத்தேயாம்.

இன்றுள்ள தேவநாகரி கி.பி.4 ஆம் நூற்றாண்டில் கருக்கொண்டு 11 ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. தேவநாகரி எழுத்தையும் உற்றுநோக்கினால் அதற்கும் கிரந்த எழுத்துக்கும் உள்ள நுண்ணிய வடிவ ஒப்புமைப் புலனாகும் எனவும் குறிப்பிட்டுப் பாவாணர் 'தேவமொழி யென்னும் வடமொழிக்கு நகரங்களில் ஆளப்பெற்ற எழுத்து தேவநாகரி. தேவர் நகரங்களில் ஆளப்பெற்றது தேவநாகரி என்பர் வடமொழியாளர். அவர் தேவரென்று நாணாது குறிப்பது பிராமணரை"(பக்கம் 127) என்று எழுதியுள்ளார்.

கிரந்தம் தொடர்பாக என் பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது பல செய்திகளை முன்வைத்தார். நானும் அவருமாக உரையாடியதில் நினைவுகூரப்படவேண்டிய செய்திகள் பின்வருமாறு அமைகின்றன.

ஆரியர்கள் இந்திய நாட்டுக்கு உரிமையானவர்கள் இல்லை. அவர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்பது வரலாறு.

அவ்வாறு வந்தவர்களுக்கு அ, ஆ, இ, ஈ என்னும் நெடுங்கணக்கு உரியது இல்லை. இந்த நெடுங்கணக்கு தமிழர்களுக்கு உரியது.

தமிழர்களிடமிருந்தோ, வட நாட்டில் இருந்த திராவிடர்களிடமிருந்தோ தமிழ் நெடுங்கணக்கைப் பெற்றுக்கொண்டு பின்னர் தமிழை இகழ்ந்தனர்.

ஏனெனில் வேறு எந்த ஆரியமொழியிலும் இந்த நெடுங்கணக்கு அமைப்பைப் பார்க்க இயலாது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்றுதான் இருகின்றது. இதுதான் பின்னாளில் A B C D என்று மாறுகின்றது.

தொல்காப்பியர் கிரந்த எழுத்துகள் பற்றி விரிவாகப் பேசவில்லை. ஆனால் நன்னூல் விரிவாகப் பேசுகின்றது
.
கிரந்த எழுத்துகள் கல்வெட்டில் மிகவும் குறைவு.

தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் கிரந்த எழுத்துகள் இல்லை.

சிலப்பதிகாரம், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலில் ஒரு இடத்திலும் கிரந்த எழுத்துகள் இல்லை.

கிரந்த எழுத்து வேதம் படிக்க தமிழர்களுக்கு உதவும் என்கின்றார்கள்.
இன்று பார்ப்பனர்களே வேதம் படிக்க முன்வருவதில்லை. எந்தத் தமிழன் வேதத்தைக் கேட்டான்?

வேதம் படிக்க தமிழனுக்கு உரிமை உண்டா?

வேதம் படித்த பிறகு கோயிலில் பூசை செய்ய முடியுமா?

மனுதரும சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டம் இடம்கொடுக்குமா?.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஸ ஷ ஜ ஹ க்ஷ இவற்றைச் சேர்க்கவே தமிழர்கள் அனுமதித்ததில்லை. நிலைமை இப்படி இருக்க 26 எழுத்துகளைத் தமிழில் சேர்ப்பது தமிழுக்குப் பெருங்கேடாகும்.

கிரந்தம் தேவநாகரிக்கு முந்தியது. தேவநாகரியில் சேர்க்காமல் தமிழில் சேர்ப்பது மீண்டும் மணிப்பவள நடையைக் கொண்டு வருவதற்கு ஆகும் முயற்சியாகும்.

சமற்கிருத மொழியைத் தமிழில் கலந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் புதுமொழிகள உருவாக்கித் தமிழர்களிடேயே பகையை உண்டாக்கியவர்கள் சமற்கிருதமொழியினர்.

இந்தியாவில் உள்ள ஆரியமொழிகளைத் தவிர பிற ஆரியமொழிகளில் வருக்க எழுத்துகள் உள்ளனவா?

செயற்கையாகப் பேசப்படாத ஒரு மொழியின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இம்முயற்சி.

கிரந்தம், தேவநாகரி எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னரே சமற்கிருதத்தைப் பிராமி என்ற அசோகன் காலத்து எழுத்தில் எழுதியிருக்க வேண்டும். பிராம்மி ஆரியர்க்கு உரியது அன்று. தமிழ், தமிழி, திராவிடி, பம்மி, பிராமி என்றாகியது என்று பேராசிரியர் வேலாயுதம் குறிப்பிடுகின்றார்.

வடமொழி நெடுங்கணக்கு

தமிழில் உயிர் எழுத்து பன்னிரண்டு(அ-ஔ); மெய் எழுத்து பதினெட்டு(க-ன)

"அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப"(தொல்காப்பியம்)

இதுபோல் வடமொழி எழுத்துகளை அச்சு எழுத்து(உயிர் எழுத்து) எனவும், அல் எழுத்து (மெய்யெழுத்து)எனவும் இரண்டாகப் பகுப்பர்.

அச்சு எழுத்து பதினாறு ஆகும் (16)

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஔ, அம், அஃ (சாய்வு எழுத்துகள் வடமொழிக்கு உரியவை. எஞ்சியவை தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவானவை)

அல் எழுத்து முப்பத்தேழு (37)

க, Kha, ga, Gha, ங, ச,Chha, Ja, Jha, ஞ, ட, Tha, da, dha, ண, த, ttha, ddha, dhaa, ந, ப, pha, ba, bha, ம, ய, ர, ல, வ, Sa, Sha(ஷ), ssa(ஸ), ha(ஹ), ள, க்ஷ, ஷ்க, ஷ்ப

இறுதியில் வரும் ஷ்க, ஷ்ப என்னும் இரண்டும் கூட்டெழுத்துகளாகும். இவற்றைச் சந்தியக்கரம் என்பர். இவற்றை விடுத்துச் சமற்கிருத மெய்யெழுத்துகள் 35 என்பதும் உண்டு.

இந்த மெய்யெழுத்துகளில் உள்ள க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து எழுத்துகளும் தமிழுக்கும் சமற்கிருதமொழிக்கும் பொதுவெழுத்துகளாகும்.

மேலும் இதில் உள்ள "எ,ஒ,ழ,ற,ன' என்ற ஐந்து தமிழ் எழுத்தொலி வடிவங்கள் கிரந்தத்தில் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த ஐந்து தமிழ் எழுத்து வடிவங்களையும் கிரந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது சிறீ இரமணசர்மாவின் முன்மொழிவுகளுள் ஒன்றாகும். இவ்வாறு இணைத்தால் பின்னாளில் கிரந்த வடிவிலிருந்ததுதான் தமிழ்வடிவம் வந்தது என்று வரலாற்றைத் திரிக்கவழியுண்டு. இதற்கு முன் இவ்வாறு உரைத்தமைக்குப் பல சான்று உண்டு. இதனைத்தான் பாவாணர் பெயரன் தாத்தாவைப் பெற்றான் என்பதுபோல் என்று உவமைவழிப் பல இடங்களில் விளக்கியுள்ளார். அவர் நூலில் கண்டுகொள்க.

("கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ்' என்னும் என் கட்டுரையில் இடம்பெறாத செய்திகள் இவை. தினமணிக் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது. என் கட்டுரை வேறொரு இதழுக்கு எழுதப்பட்டுள்ளது. விரைவில் அந்த இதழில் வெளிவந்ததும் இணையத்தில் என் பக்கத்தில் ஏற்றுவேன்)

ஞாயிறு, 7 நவம்பர், 2010

வான்புகழ் திருக்குறள்: பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் சென்னை வானவில் பன்னாட்டு மையமும் இணைந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளன.

நாள்: 11, 12, 13 - 02, 2011(வெள்ளி, சனி, ஞாயிறு)

திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியனுப்பினால் கட்டுரையை வல்லுநர் குழு ஆய்ந்து ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு பேராளர் கட்டணம் உருவா 800 (ஆய்வு மாணவர்கள் 400 உருவா) அனுப்பலாம்.

கட்டுரை அனுப்ப நிறைவுநாள்: 30.11.2010

மேலும் விவரங்களுக்கு:

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
ஒருங்கிணைப்பாளர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி-605 014

m_s_arivudainambi@rediffmail.com

Cell: + 91 93603 27019

புதன், 3 நவம்பர், 2010

திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் பாண்டு மாமாவின் குரல் சிறுகதை

சினிமா எக்சுபிரசு (நவம்பர்1-15) தீபாவளிச் சிறப்பிதழைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் பாண்டு மாமாவின் குரல் என்ற சிறுகதையைப் படித்துக் கண்ணீர்விட்டு அழ வேண்டியிருந்தது. எங்கள் பகுதியான செயங்கொண்டத்திற்கு அருகில் உள்ள திட்டக்குடி சார்ந்த பாளையம், ஆடுதுறை, வெள்ளாற்றங்கரை கதையின் பின்புலமாகக் காட்டப்பட்டுள்ளது.

கதிரவன் என்ற சிறுவனின் தந்தை பொதுவுடைமை இயக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டு குடும்ப நினைவும், குடும்பப்பொறுப்பும் இல்லாமல் கட்சிப்பணியில் கரைந்துபோகிறார். அவர் இரவு அரிசி வாங்கித் தந்தால்தான் அடுப்பு எரியும் என்ற நிலை. இத்தகு குடும்பத்தில் பிறந்த கதிரவன் மற்ற சிறுவர்களைப் போல் தீபாவளிக்கு வெடி வெடிக்க முடியாமுலும், புத்தாடை அணியமுடியாமலும் ஏங்கும் ஏக்கம் சிறுகதையில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. உள்ளூர்த் தையல்காரரிடம் சிவப்புத் துணியில் கால் சட்டை தைத்தும் அதனை வாங்கக்கூட காசில்லை. தையல்காரரே பல நாளுக்குப் பிறகு காந்திக்கணக்கில் வைத்துத் தைத்த துணியை இலவசமாகத் தரும் அவலம் கண்டு கதிரவன் என்ற சிறுவன் மேல் இரக்கம் ஏற்படுகின்றது.

கதிரவனின் தாய்மாமன் வாங்கி வரும் தீபாவளிப் பரிசுப்பொருள் சிறுவன் கதிரவனுக்கு நடுஇரவில் மகிழ்ச்சியூட்டுகிறது. தாய்மாமன் சொற்களை நிறைவேற்றும் கதிரவனின் சூளுரை கதையில் முத்தாய்ப்பாக அமைகின்றது.

கதையைப் படித்து முடித்துக் கதிரவனின் நிலைக்கு இரங்கியபொழுது அது இயக்குநர் கௌதமனின் இளமைக்காலம் என்று அறிந்து திடுக்கிட்டுப் போகின்றோம். குளிரூட்டி அறைகளில் பிறந்து வளர்ந்து இன்று திரைத்துறையை ஆட்டிப்படைக்கும் செல்வச் சீமான்கள் நடுவே சோளக்கஞ்சி குடித்து வளர்ந்த கௌதமன் போன்ற உழைப்பாளிகளின் நம்பிக்கைதான் இந்தத் தலைமுறைக்குத் தேவை.

நம்பிக்கையோடு இருங்கள் கௌதமன்!

காலம் உங்கள் உழைப்புக்கு உரிய பரிசு மாலையோடு உங்களைத் தேடி வரும்.

ஆம்.அந்த 'மகிழ்ச்சி' நாளுக்கு நாங்களும் காத்துள்ளோம்.
நன்றி;
சினிமா எக்சுபிரசு
என் வலைப்பூவில் ஏற்ற இசைவளித்த வ.கௌதமன்

இயக்குநர் வ.கௌதமனை அழைக்க + 91 98413 25400 begin_of_the_skype_highlighting              + 91 98413 25400      end_of_the_skype_highlighting

செவ்வாய், 2 நவம்பர், 2010

திருவரங்கம்,செண்பகத் தமிழ் அரங்கு ஆயிரமாவது கூட்ட நிறைவு விழாதிருச்சிராப்பள்ளி, திருவரங்கம் பகுதியில் இயங்கிவரும் செண்பகத் தமிழ் அரங்கு தமிழ்ப்பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றது. தமிழ் அறிஞர்களின் உரைகளைத் திருச்சிராப்பள்ளிப் பகுதி மக்கள் கேட்டுப் பயன்பெற இந்த அமைப்பு உதவுகின்றது. பலதுறை அறிஞர்கள் இங்கு வந்து உரையாற்றியுள்ளனர்.

என் பேராசிரியர் முனைவர் எழில்முதல்வன் அவர்கள் சிலப்பதிகாரம் தொடர்பில் தொடர்ந்து உரையாற்றியமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது. இந்த அரங்கின் ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா 20.11.2010 காரி (சனி)க் கிழமை முற்பகல் 09.30 மணிமுதல் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இடம்: எசு.என்.திருமண மாளிகை (காவிரிக்கரை அம்மா மண்டபம் அருகில்), திருவரங்கம், திருச்சிராப்பள்ளி.

அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் விழா நடைபெற உள்ளது. மாண்பமை அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் தொடக்கவுரையாற்ற உள்ளார். பெரும்புலவர் ப.அரங்கசாமி, முனைவர் அ.ஆறுமுகனார், முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் எழில்முதல்வன், முனைவர் கு.திருமாறன், மருத்துவர் இரா.கலைக்கோவன், கவிஞர் சிற்பி, முனைவர் பிரேமா நந்தகுமார், இரா.பாலகங்காதரன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

வழக்கறிஞர் க. இராசவேலு அவர்கள் தம் மனைவி செண்பகம் அம்மாள் அவர்களின் மேல் கொண்ட அன்பின் காரணமாக இத்தகு தமிழ் நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.அவர் உலகத் தமிழர்களால் போற்றத்தகுந்த அறிஞராவார்.

தொடர்புக்கு: வழக்கறிஞர் இராசவேலு செண்பகவல்லி
இல்லம் +91 431 2432476