நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 31 டிசம்பர், 2009

மூத்த தமிழறிஞர் தி.சா.கங்காதரன் இயற்கை எய்தினார்!


அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள்(வலப்புறம்)

புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் தமிழ் ஆய்வாளராகப் பணிபுரிந்த அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள் உடல் நலமின்றிச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனளிக்காமல் நேற்று 30.12.2009 இரவு 9.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் (இச்செய்தியை எனக்குத் தெரிவித்த பேராசிரியர் செவியா, பிரான்சு, பேராசிரியர் விசய வேணுகோபால் ஆகியோருக்கு நன்றி).

திரு.தி.சா.கங்காதரன் அவர்கள் அறிஞர் தி.வே.கோபாலையர் அவர்களின் உடன் பிறவாத தம்பி ஆவார்.இரண்டு பெரும் பேராசிரியர்களும் இணைந்து பல தமிழ்ப்பணிகளைச் செய்துள்ளனர். தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதியை (17 தொகுதிகள்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருந்தவர். பதினொன்றாம் திருமுறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் இருந்தவர். அயல்நாட்டு மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவிற்குப் பன்மொழி அறிவு பெற்றவர்.

நான் பலவாண்டுகளாக கங்காதரனார் அவர்களை அறிவேன்.அவரிடம் இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட சில நூல்களைப் பாடம் கேட்க விழைந்திருந்தேன். என் போகூழை என்னென்பது?

தம் எண்பத்தொன்றாம் அகவையில் ஐயா அவர்கள் மறைந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

புதுச்சேரியில் இன்று (31.12.2009) புலவர் பெருமானின் நல்லுடல் எரியூட்டப்பெற்றது.

அவர் பற்றி பின்னர் விரித்து எழுதுவேன்.


அறிஞர் கங்காதரனார் சிறப்பிக்கப்படும் ஒரு காட்சி


பயிலரங்கு ஒன்றில் மாணவர்கள் புடைசூழ கங்காதரனார்

அன்னாரின் மறைவால் துயருற்றுக் கலங்கும் அவரின் பன்னாட்டு மாணவர்கள், உடன் பணியாற்றும் தோழர்கள், தமிழாய்வுலகத்தினர் அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள்!

உள்கோட்டையில் ஐம்பெரும் விழா


தந்தை பெரியாருக்குச் சிலை எடுப்பித்த செம்மல்கள் 
திரு.சி.கலியபெருமாள், திரு.சி.மாணிக்கம்

எங்களின் பிறந்த ஊரான உள்கோட்டையில் ஐம்பெரும் விழா என்ற பெயரில் நேற்று (30.12.2009) மிகச்சிறந்த விழா ஒன்று நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, செம்மொழி விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா, கொள்கைவழித் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாராட்டு எனும் ஐந்து நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்தது.

சனதா பல்பொருள் அங்காடியின் உரிமையாளரும், தந்தை பெரியாருக்கு உள்கோட்டையில் சிலை எடுத்தவரும், மிகச்சிறந்த குமூகத் தொண்டாற்றுபவருமான "சனதா" சி.மாணிக்கம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவுக்குப் பெரியார் பெருந்தொண்டர் திரு. பரமசிவம் அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு.காமராசு அவர்கள் வரவேற்றார்.

அண்மையில் செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் அடிகளாசிரியர், முனைவர் அரங்க.பாரி, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோரை முறையே தொளார் ஐயா, பேராசிரியர் உ.பிரபாகரன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்) அ.சிவபெருமான் (அண்ணாமலைப் பல்கலைக்கழம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் பகுதியில் முனைவர் பட்டம் பெற்றுக் கல்வித்துறையில் சிறந்து விளங்குபவர்கள் என்ற வகையில் பேராசிரியர் கு.அரசேந்திரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் பாராட்டப் பெற்றனர்.

கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன் அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

உள்கோட்டைப் பகுதியில் பிறந்த கல்வித்துறைகளில் புகழ்பெற்று விளங்கும் இந்த அறிஞர் பெருமக்களைப் பொதுவுடைமை இயக்கத்தச் சேர்ந்த தோழர் முருகேசன், திரு.பன்னீர்ச் செல்வம், புலவர் செல்வராசனார், கு. கணேசமூர்த்தி ஐயா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஏற்புரையாளர்கள் சார்பில் பேராசிரியர் கு.அரசேந்திரன், முனைவர் ஆ.கோ.குலோத்துங்கன் ஆகியோர் உரையாற்றினர்.

மணக்கொடை வாங்காமல் மாலைநேரத்தில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்ட திரு அம்பாள் ஆறுமுகம், திரு.சேகர், புலவர் திரு.தங்கராசு உள்ளிட்டவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்தும், பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை அழைத்து ஊக்கப்படுத்தியும், குமூக அக்கறையுடன் பாடுபடுபவர்களுக்கு ஊக்கம் அளித்தும் இந்த விழா நடந்தது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவ்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பத்மபிரியா என்ற ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமி திருக்குறளின் அனைத்துக் குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் ஆற்றலை அரங்கத்தினர் அறிந்து மகிழ்ந்தனர். நான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் பேற்றினைப் பெற்றேன்.


பேராசிரியர் கு.அரசேந்திரன்


பேராசிரியர் உ.பிரபாகரன்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்தரங்கம்,சிங்கப்பூர்சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னைக் கலைஞன் பதிப்பகமும் இணைந்து "இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்" என்ற தலைப்பில் ஏழாம் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினைச் சிங்கப்பூரில் நடத்த உள்ளன.

கருத்தரங்கம் நடைபெறும் நாள்: 15,16 மே 2010

இடம்:டின்டேல் கல்லூரி-சிங்கப்பூர்


பேராளர் தகுதி: பல்கலைக்கலைக்கழக,கல்லூரி-நிறுவன-பள்ளி ஆசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரை: தமிழிலோ,ஆங்கிலத்திலோ அமையலாம்.

கட்டணம்: கட்டுரை மட்டும் அளிப்பவர்கள் உருவா 700-00

கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்கள்(தமிழகத்திலிருந்து)உருவா 38700-00
(வானூர்திக் கட்டணம்,உணவு,தங்குமிடம்,சிங்கப்பூர்,மலேசியா சுற்றுலா சென்றுவர)

கட்டணத்தை வரைவோலையாகக் கலைஞன் பதிப்பகம்(KALAIGNAAN PATHIPAGAM) என்னும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளும் வகையில் அனுப்பலாம்.

பேராளராகப் பங்கேற்க முன் கட்டணம் உருவா 3000-00 அனுப்ப நிறைவுநாள் 31-01-2010.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் அனுப்ப நிறைவுநாள் 15.03.2010.

பிற விவரங்களுக்கு: முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
செல்பேசி: 98422 81957

பயண விவரங்களுக்கு: பேராசிரியர் அபிதா சபாபதி : 96770 37474

கட்டுரை,வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

கலைஞன் பதிப்பகம்,19,கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர்,சென்னை-600017
பேசி: 044-24313221 044- 24345641

புதன், 23 டிசம்பர், 2009

சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரித் தமிழ் இணையப்பயிலரங்கம்-நிகழ்வும்,படங்களும்


சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி முகப்பு

சென்னை, தண்டலம், நாராயணசாமி நகரில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கியது. முதற்கண் கல்லூரியில் இந்திய கணிப்பொறிச் சங்கம் தொடங்கப்பட்டது. திரு.முருகேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி நிருவுநர் திரு.கே.என். இராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழனின் உள்ளங்கையில் உலகம் என்ற பொருளில் தமிழ் இணையப் பயிலரங்கத்தில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நான் அழைக்கப்பட்டேன். பகல் 12 மணிக்குத் தொடங்கிய என் உரை 1.30 மணி வரையும் உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் 3.30 மணி வரையும் அமைந்தது.

என் வருகையறிந்த கல்லூரி நிறுவுநர் அவர்கள் மிகச்சிறந்த ஊக்கவுரைகளைத் தந்து, தம் தமிழ்ப் பற்றை உறுதி செய்தார்கள். கல்லூரி முதல்வர், கணிப்பொறித்துறை, பிற துறை சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் தாரா நடராசன் அவர்கள் தம் கணிப்பொறி, இணைய ஆர்வத்தால் பயிற்சிக்கு வந்ததுடன் மாணவர்களுக்குத் தம் வாழ்த்தினையும் தெரிவித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் அவர் வருகையால் மகிழ்ந்தனர்.

என் பேச்சில் கணிப்பொறியில் தமிழ் நுழைந்த வரலாறு, தமிழுக்கு உழைத்த கணிப்பொறி வல்லுநர்கள், சிறந்த தமிழ்த்தளங்கள்,தமிழ் விக்கிபீடியா, தமிழ்த்தட்டச்சு, தமிழில் மின்னஞ்சல் அனுப்பல், உரையாடல், எ.கலப்பை, என்.எச்.எம். எழுதி பற்றி எடுத்துரைத்தேன். தமிழில் தட்டச்சிட்டால் சொற்களை ஒலித்துக்காட்டும் பெங்களூர் அறிவியல் கழகத்துப் பேராசிரியரின் மென்பொருளை அறிமுகம் செய்தேன். அனைவரும் வியந்தனர்.

தமிழ்க் கணிப்பொறி சார்ந்த அமைப்புகளுள் உத்தமம், கணித் தமிழ்ச் சங்கம், கணியத்தமிழ் நிறுவன மென்பொருள்களை அறிமுகம் செய்தேன்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணிகளையும் எடுத்துரைத்தேன். தமிழில் தேடுபொறி உருவாக்கவும், புதுப்புது மென்பொருள்கள் கண்டுபிடித்து வழங்கவும் மாணவர்களை வேண்டினேன்.

தமிழ்க்கணிப்பொறித்துறைக்கு உழைத்தவர்களுள் முத்து நெடுமாறன், கோவிந்தசாமி, சுஜாதா, காசி, முகுந்து, கோபி, உள்ளிட்ட பலரின் பணிகளை எடுத்துரைத்து விளக்கினேன். கல்யாணசுந்தரம், கொரியா கண்ணன் உள்ளிட்டவர்களின் தளங்களையும் எடுத்துரைத்தேன்.

நான் வீடு வந்து சேர்வதற்குள் பல மாணவர்கள் எனக்கு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு பல ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். தொடர்ந்து இவர்கள் தமிழுக்கு உழைக்க வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது நம் கடமையாகத் தெரிகிறது.

பல பேராசிரியர்கள்,மாணவர்கள் எனக்கு நண்பரானார்கள். தொடர்ந்து தமிழ் இணைய வளர்ச்சிக்கு அனைவரும் உழைப்போம்.


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்புச்செய்தல்


கல்லூரி நிறுவுநர் திரு.கே.என்.இராமச்சந்திரன் அவர்களுடன் நான்


பயிற்சிபெற்ற மாணவியர்


பயிற்சி பெறும் மாணவர்கள்


தமிழ் இணையம் - பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள்


பயிற்சியளிக்கும் நான்


மருத்துவர் தாரா நடராசன் அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்


கணிப்பொறிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர்


கணிப்பொறித்துறைத் தலைவர் இளங்கோவன் அவர்கள்


சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்புப் பதாகை

செவ்வாய், 22 டிசம்பர், 2009

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" - தமிழ் இணையப் பயிலரங்கம்

இடம்:
சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி,நாராயணசாமி நகர்,தண்டலம்,சென்னை
நாள்: 23.12.2009,புதன் கிழமை,நேரம் காலை 10 மணி

தலைமை:
திரு.கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

குற்று விளக்கேற்றல்: சீர்மிகு திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)

வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித்துறைத் தலைவர்)

வாழ்த்துரை: முனைவர் ப.விசய பாசுகர ராசு(முதல்வர்)

சிறப்பு விருந்தினர் திரு.முருகேசன்(இயக்குநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

விருந்தினர் அறிமுகம் பேராசிரியர் விசயகுமார்

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" உரையும்,பயிற்சியும்:
முனைவர் மு.இளங்கோவன்

நன்றியுரை: பேராசிரியர் இராமகிருட்டினன்


அழைப்பிதழ்(முன்பக்கம்)


அழைப்பிதழ்(பின்பக்கம்)

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மூக்கால்,நாக்கால் மவுத்ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இரா.இராசாராமன்


இசைக்கலைஞர் இரா.இராசாராமன்

மவுத் ஆர்கன் என்ற இசைக்கருவியை வாயால் இசைத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை.
புதுச்சேரியில் ஒரு முதியவர் மவுத் ஆர்கனை மிகவும் நயமாக மூக்காலும் நாக்காலும் இசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

“திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்”என்று இவர் மவுத் ஆர்கன் துணையால் மூக்கால் இசைக்கும் பொழுது யாரும் சிறிதுநேரம் நின்று கேட்காமல் போகமாட்டார்கள்.மூக்கால் வாசிக்கும்பொழுது நாக்கால் வாசிக்கவும் என்று சொன்னால் நாக்கை மடக்கிக் காற்றை வெளிவிட்டு மவுத் ஆர்கனைத் தன் ஏவலுக்குக் கட்டுப்படச் செய்கிறார்.

இளையராசா,இரகுமான்,புட்பவனம் குப்புசாமி பாடல்கள், இந்தி,மலையாள மொழிப்பாடல்கள் என எதனையும் தன் மூக்கு முனையிலும் நாக்குமுனையிலும் வைத்திருக்கும் இவர் புதுச்சேரியில் பல பள்ளிகளில் பாடி மாணவர்கள் திரட்டித்தரும் காசு கொண்டு வாழ்ந்து வருகிறார்.

கல்கத்தா முதலான பிற மாநிலங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கும் பறந்துவிடுவார். பல இடங்களிலும் பாடினாலும் இன்னும் எளிய நிலையில் வாடகை வீட்டில்தான் வாழ்க்கை நடத்துகிறார்.இவரின் திறமை அறிந்த புதுவை அரசு இவருக்குக் கலைமாமணி விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

இவர் வாழ்க்கை பற்றிய பின்னோட்டம்.

தரங்கம்பாடியை அடுத்த மாணிக்கப்பங்கு என்ற ஊரில் 13.07.1949 இல் பிறந்தவர் இரா.இராசாராம்.பெற்றோர் இராசு,வைரக்கண்ணு அம்மாள்.பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர் .அதன்பின்பு தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்.தொழில்நுட்பத்தில் பொருத்துநராகக் கல்வி கற்றுப் புதுவைச் சுதேசி மில்லில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.நாற்பதாண்டுகளாக மவுத் ஆர்கன் வாசிக்கும் இவர் எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால் மறுமுறை அதனை மவுத் ஆர்கனில் வாசிக்கும் நினைவு ஆற்றல் பெற்றவர்.

மலையாளத் திரைப்படமான செம்மீனில் இடம்பெறும் பாடல்களை உயிர் உருக மூக்காலும், நாக்காலும் வாயாலும் மவுத் ஆர்களை இயக்கிப் பாடும்பொழுது மொழி மறந்து சுவைக்க வேண்டியுள்ளது.அதுபோல் “மேரே தேக்கா கோயி கானாசனம்” என்று இந்திப் பாடலைப் பாடும்பொழுது மெய்ம்மறந்து கேட்கலாம்.

ஆண்டு,மாதம்,நாள் சொன்ன்னால் அடுத்த நொடியே நாம் பிறந்த கிழமையைச் சொல்லிவிடுவார்.அந்த அளவு நினைவாற்றல்.

“என் ஜோடி மஞ்சக்குருவி” பாடலை இவர் மவுத் ஆர்கன் மன்னிக்கவும் மூக்கு ஆர்கனில் வாசித்தால் இளையராசாவே உள்ளம் குளிர்ந்து பாராட்டுவார்.” கவிதை அரங்கேறும் நேரம் ,மலர்க் கணைகள் பரிமாறும் நேரம்” பாடச்சொன்னேன்.மூக்காலும் நாக்காலும் வாயாலும் ஒரேநேரத்தில் மாறி மாறி இசைத்து எங்களை அசத்திவிட்டார்.

இசையார்வம்கொண்டவர்கள் இவரின் மூக்கிசையை,நாக்கிசையைப் பதிவு செய்து பாதுகாக்கலாம். எந்த ஊருக்கு அழைத்தாலும் உடன் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார் இந்த மூத்த இசைக்கலைஞர்.மிதிவண்டியில் புதுவையை வலம் வரும் இந்த இசைப்புயலைக் கலை ஆர்வம் உடையவர்கள் ஊக்கப்படுத்தலாம்.


நாக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் கலைமாமணி இராசாராமன்


மூக்கால் மவுத் ஆர்கன் இசைக்கும் இராசாராமன்


உங்களுக்கு அவர் பாடல் கேட்க விருப்பமா?

+91 9894575252 என்ற அவர் செல்பேசிக்கு அழையுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்குக் “கொக்கு பற பற”,”வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்று செல்பேசி வழியில் மூக்கு ஆர்க்கனால் மன்னிக்கவும் மவுத் ஆர்கனால் பாடி மயங்க வைத்துவிட்டார்.

வாழ்க கலைமாமணி இராசாராம்!

புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு,தேவிதாசனார் படைப்பிலக்கிய ஆய்வரங்கம்

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் புரட்சிப்பாவலர் தேவிதாசன் அறக்கட்டளை ஐந்தாம் சொற்பொழிவு,தேவிதாசன்ர் படைப்பிலக்கிய ஆய்வரங்கம் இன்று 20.12.2009 நடைபெறுகிறது.

புதுச்சேரி,இலாசுப்பேட்டை பிப்மேட் வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் கருத்தரங்க அறையில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

மொழியியல் நிறுவன இயக்குநர் முனைவர் மு.சுதர்சன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்த உள்ளார்.

தேவி.திருவளவன் அவர்களின் அறிமுக உரையுடன் தொடங்கும் விழாவில் வழக்கறிஞர் தி.கோவிந்தராசு அவர்கள் படைப்புலகில் தேவிதாசனாரின் பதிவுகள் என்னும் பொருளில் உரையாற்றுகிறார்.ஆய்வாளர்கள் பலர் கட்டுரை வழங்குகின்றனர்.

சனி, 19 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் பன்னாட்டுக்கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்தியாமந்திர் கலை அறிவியல் கல்லூரியில் திசம்பர் 19,20 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா இன்று வித்தியாமந்திர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர், மலேசியா நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர்.

தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் வரவேற்றார்.

முனைவர் சிலம்பு நா.செல்வராசு கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார்.ஆர் அமைப்பின் ஓராண்டு செயல்பாட்டில் பல இழப்புகளும் ஆக்கங்களும் கிடைத்துள்ளன.தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவது தமிழாக்கமாக அமைகிறது.வ.ஐ.சுப்பிரமணியன்,கமில் சுவலபில் ஆகியோர் இயற்கை எய்தியமை தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.166 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர்.துளிர்,இதழ்,மலர் என்னும் மூன்று கருத்தரங்க ஆய்வுக்கோவைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.

கல்லூரிச் செயலாளர் கே. செல்வராசு,கு.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.பெரியசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றியதுடன் கருத்தரங்க ஆய்வுக்கோவைகள் சிறப்பை எடுத்துரைத்தார்.உதகமண்டலம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க.பாசுகரன் அவர்கள் இன்றைய ஆய்வுப்போக்குகளை எடுத்துரைத்தார்.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் இரா.அறவேந்தன், முனைவர் கேசவ.பழனிவேல், முனைவர் இரா.கலைவாணி,முனைவர் மு,இளங்கோவன், முனைவர் அ.செல்வராசு ஆகியோருக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களைச் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் அறிமுகம் செய்து நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் பெரு.மதியழகன் அவர்கள் ஆய்வுக்கோவைகளைப் பற்றிய மதிப்பீட்டு உரை வழங்கினார்.

ஆய்வுக்கோவைகளை வெளியிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்ந்நினார்.

சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் இரத்தின.வேங்கடேசன்,கவிஞர் இறை.மதியழகன்,கவிஞர் வேள்.பாரி ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி இணையப்பயிற்சி வகுப்பு நிறைவு...

இன்று(18.12.2009 ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையப்பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
உதவித்தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால்,ஆர்.தருமலிங்கம்,கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர்.தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர்.மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நான் காட்சி விளக்கத்துடன் உரையாறினேன்.

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகப்பயிற்சி...

கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று(18.12.2009)பிற்பகல் இரண்டு மணிமுதல் நான்கு மணிவரை தமிழ் இணையம் அறிமுகமும் இணையப் பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அருகில் உள்ள பதிவர்கள்,தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.அண்மையில் தமிழ்நாட்டு அரசு இந்தப் பள்ளியில் கணிப்பொறித் துறைக்கான மிகச்சிறந்த ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த நிகழ்வு அதில் நடைபெறும் முதல் நிகழ்வாகும்.புதுச்சேரியிலிருந்து நான் கலந்துகொள்கிறேன். மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறேன்.அரங்கிலிருந்து சந்திப்போம்.

சனி, 12 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் ஊத்தங்கரை வித்தியாமந்திர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2009, திசம்பர் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது.

19.12.2009 முற்பகல் 10 மணிக்குத் தொடக்க விழா நடைபெறுகிறது.வித்தியா மந்திர் கல்லூரியின் நிறுவுநர் வே.சந்திரசேகரன்,பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பெ.தங்கராசு,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பேராசிரியர் மா.பா.குருசாமி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இரத்தின. வேங்கடேசன், கவிஞர் இறை.மதியழகன்,முனைவர் தியாகராசன்,தமிழாசிரியர் உஷா, பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெ.மாதையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

துளிர்,மலர்,இதழ் என்னும்ஆய்வரங்கக் கோவைகள் வெளியிடப்பெற உள்ளன.

அழைப்பிதழ்தமிழறிஞர் புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ விழா

மூத்த தமிழறிஞரும்,தமிழ் ஓசை நாளிதழின் மொழிநடை ஆசிரியருமான புலவர் கி.த.பச்சையப்பன் அவர்களின் பவழ விழா 12.12.2009 காரிக்கிழமை மாலை 3 மணிக்குச் சென்னைத் தேவநாயப்பாவாணர் நூலக அரங்கில் பேராசிரியர் ம,இலெ.தங்கப்பா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

பாவலர் தமிழேந்தி அவர்கள் வரவேற்புரையாற்ற மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பவழ விழா மலரினை வெளியிடுகிறார்.

சிந்தனையாளன் ஆசிரியர் வே.ஆனைமுத்து,முனைவர் பொற்கோ,முனைவர் க.இராமசாமி, பேராசிரியர் பி.விருத்தாசலனார்,தோழர் சி.மகேந்திரன்,தோழர் பெ.மணியரசன்,வழக்குரைஞர் ச.செந்தில்நாதன்,இயக்குநர் தங்கர்பச்சான்,இயக்குநர் சீமான்,இயக்குநர் வ.கௌதமன்,தோழர் வீர.சந்தனம்,கண்ணியம் இதழாசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் புலவர். சீனு.இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் உரையாற்றுகின்றனர்.

முனைவர் ந.அரணமுறுவல் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

வியாழன், 10 டிசம்பர், 2009

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி

புதுச்சேரியில் 13 ஆம் தேசியப் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இடம்: வேல்.சொக்கநாதன் திருமண மண்டபம்,புதுச்சேரி
நாள்: திசம்பர் 18-27

கண்காட்சியில் 94 முன்னணிப் பதிப்பாளர்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,பிரஞ்சு மொழி நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

உருவா 200-00 மேல் நூல் வாங்குபவர்களுக்குப் பரிசு அட்டை வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு உரிய கழிவு வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

18.12.2009 மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ் விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்தியலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.மேனாள் கல்வியமைச்சர் திரு க.இலட்சுமிநாராயணன் அவர்கள் முன்னிலையுரையாற்றுகிறார்.தோழர் இரா.விசுவநாதன் அவர்கள் வாழ்த்துரையும் திருவாட்டி பி.தமிழரசி அவர்கள் பாராட்டுரை வழங்கவும் உள்ளனர்.

25.12.2009 இல் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் சிறப்புரையாற்றவும் மேனாள் கல்வியமைச்சர் திரு.க.இலட்சுமி நாராயணன் அவர்கள் தலைமை தாங்கவும் உள்ளனர்.

27.12.2009 இல் புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே.ஆர்.அனந்தராமன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்துகொண்டு கண்காட்சியில் தேவையான நூல்களை வாங்கலாம்.


ஏற்பாடு
புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம்,புதுச்சேரி-8
தொடர்புக்கு 98423 30358,94447 76733

கண்காட்சி நேரம்
அலுவலக நாளில் பிற்பகல் 2.00-முதல் இரவு 9.00 மணி வரை
விடுமுறை நாளில் முற்பகல் 11.00-முதல் இரவு 9.00 மணிவரை

புதன், 9 டிசம்பர், 2009

கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு இணையத்தளம் தொடக்கம்...

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சூன் 23-27 இல் நடைபெற உள்ளது.இம்மாநாட்டு விவரங்களை அறியவும்,பேராளர்கள் ஆய்வுக்கட்டுரை வழங்கவும் உதவும் வகையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குப் புதிய இணையத்தளம் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டு மகிழ இங்கே அழுத்துக.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் சந்திப்பு…

திரு.சாமிக்கண்ணு,முனைவர் திருமாவளவன்,மு.இ
  உரை கேட்கும் ஆசிரியப்பெருமக்கள் 
அரங்கில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் 
சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் 
 
 
 புதுவைத் தமிழாசிரியர்கள் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளைப் பார்வையிடவும்,இங்குள்ள கல்வி முறைகளை அறியவும் திரு.சாமிக்கண்ணு அவர்களின் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவினராக வந்துள்ளனர். 
 
 புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வெ,வைத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுக்குச் சிறப்பான வரவேற்பு தொடக்க விழாவில் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் புதுவையின் புகழ் பெற்ற பள்ளிகளுக்குச் சென்று அங்கு நடைபெறும் வகுப்புகளைக் கண்டு மகிழ்ந்தனர். ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் பழகி அவர்களுக்குப் பாடம் நடத்தினர். பல நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் பார்வையிட்டனர். முனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் பயிற்றுவிக்கும் வகையில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார். 
 
 2001 இல் நான் சிங்கப்பூர் சென்றிருந்தபொழுது அப்பொழுது நடைபெற்ற கருத்தரங்கில் பழையன புகுதலும் என்ற தலைப்பில் கட்டுரை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றேன். அவ்வுரை கேட்ட பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் மலேசியா அழைத்துச் சென்று பல கல்லூரிகளில் உரையாற்ற வாய்ப்பு அமைத்தார்கள். அந்த அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் மேலும் அங்குள்ள தமிழர்கள் மீதும் எனக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவ்வகையில் தெரிந்தவர்களைக் கண்டு மகிழலாம் என்று நினைத்து நானும் உரையாற்ற இசைந்தேன். 
 
 திரு.சாமிக்கண்ணு அவர்களை முன்பே பல கருத்தரங்குகளில் கண்டு பழகியுள்ளேன். அவர்கள் தலைமையில் வந்துள்ளவர்களை வரவேற்கும் முகமாகவேனும் நாம் செல்ல வேண்டும் என்ற உறுதியில் பிற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுச் சென்றேன். என் சிங்கப்பூர் பயண அனுபவங்களை நினைவு கூர்ந்து முன்பு பழைமை பற்றி பேசியதை நினைவுப்படுத்தி இன்று வளர்ந்து நிற்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தித் தமிழ் வளர்த்தல், தமிழ் பயிற்றுவித்தல் என்ற பொருளில் சற்றொப்ப 45 மணித்துளிகள் உரை வழங்கினேன். 15 மணித்துளிகள் கலந்துரையாடலும் இருந்தது. தமிழ் இணையத்துக்குப் பங்களிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வலைப்பூ உள்ளிட்டவற்றை உருவாக்கி படைப்புகளை வழங்க வேண்டும் என்றும் தமிழ் விக்கிப் பீடியாவின் பயன், பங்களிப்பு பற்றியும் என் உரை இருந்தது. 
 
சிங்கப்பூர் தேசிய நூலகம், புதுவை பிரஞ்சு நிறுவன நூலகம் இணையம் வழி பார்வையிட முடியும் என்று இவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்தேன். மதுரைத்திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பணிகள், தமிழ் மரபு அறக்கட்டளை, பொள்ளாச்சி நசன் அவர்களின் கல்வித்துறைப்பணிகள்,நூல் பாதுகாப்பு பற்றி காட்சிவழி விளக்க முயன்றேன்.
 
 திரு.சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் கல்வி தொடர்பாக எனக்கு அனுப்பியிருந்த சிறு காட்சிவிளக்கத்தையும் காட்டிப் பிறமொழிச்சூழலில் தமிழ் பயிற்றுவிக்க பல உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுரைத்தேன். திரைப்படம் மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் பிற நாடுகளில் தமிழ் பயிற்றுவிக்கப் பெரிதும் உதவும் என்றேன். அனைவரும், உரைக்குப் பிறகு சிறிது உரையாடி மகிழ்ந்தோம். திரு.சாமிக்கண்ணு அவர்கள் 2011 இல் மீண்டும் சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற உள்ளதை நினைவூட்டி முன்கூட்டியே ஓர் அழைப்பு விடுத்தார். சிங்கப்பூர்த் தமிழாசிரியர்களுடன் புதுவைத் தமிழாசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர். அனைவரும் மின்னஞ்சல் வழியாகச் சந்திக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.