நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

மோகனூர்,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்...

நாள் 13.10.2008 திங்கள்கிழமை,

நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை

இடம்: சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரி, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், இணையத் துறையில் தமிழ்சார்ந்து நடைபெற்றுள்ள முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ் இணையப் பயிலரங்கு மோகனூர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும், பெங்களூர் தமிழா.காம் நிறுவன உரிமையாளர் திரு.சு. முகுந்தராசு அவர்களும் வலைத்தள வடிவமைப்பாளர்கள் பொறியாளர் வே. முருகையன், பொறியாளர் வெ.யுவராசன் அவர்களும் மாணவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்து பயிற்சியளிக்க உள்ளனர். தமிழ் இணைய ஆர்வலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இப் பயிலரங்கில் தமிழ்த் தட்டச்சு முறைகள். தமிழ் 99 விசைப்பலகை, ஒருங்குகுறி, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல், தமிழில் உரையாடல், வலைப்பூ உருவாக்கம், தமிழில் உள்ள மென்பொருள்கள், தமிழ்மணம் பணிகள், தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள், தமிழ் இணைய வானொலி, தமிழ் இணையத் தொலைக்காட்சிகள், மின்நூலகங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கிப் பயிற்றுவிக்க உள்ளனர்.

பயிலரங்கத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி அவர்கள் செய்ய உள்ளார்கள்.

திங்கள், 29 செப்டம்பர், 2008

மொழியியல் அறிஞர் முனைவர் பொன்.கோதண்டராமன்(பொற்கோ)


மு.இளங்கோவனுக்கு முனைவர் பொற்கோ அவர்கள் பாவேந்தர் மரபுப்பாவலர் பட்டம் அளித்துப் பணமுடிப்பு வழங்கல்,29.04.2002(பாவேந்தர் பாசறை சென்னை, கோப்புப் படம்)

தமிழ் அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் பொற்கோ என அழைக்கும் முனைவர் பொன் கோதண்டராமன் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக் குறிச்சி என்னும் ஊரில் 1941 சூன்மாதம் ஒன்பதாம் நாள் பிறந்தவர்.

பிறந்த ஊரான இரும்புலிக்குறிச்சியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற பொற்கோ அவர்கள் மேல்நிலைக் கல்வியைப் பொன்பரப்பி என்னும் ஊரில் நிறைவு செய்தவர்.திருப்பனந்தாளில் அமைந்துள்ள புகழ்பெற்ற செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப்புலவர் படிப்பை நிறைவு செய்தவர். அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்,முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பெருமைக்கு உரியவர்.மொழியியல் துறையில் முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டமும்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்ற பெருமைக்கு
உரியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தம் கல்விப்பணியைத் தொடங்கியவர்(1969-70,1972-73).பின்னர் இலண்டன் பல்கலைக்கழகதில் உள்ள கீழையியல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் ஈராண்டு(1970-72) பணிபுரிந்த பெருமைக்குரியவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிஞராகவும்(1973-74), இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்(1974-77).மேலும் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்க ளில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவ்வகையில் நியூயார்க் இசுடோணிபுரூக்(1973)நார்த்வெசுடன் பல்கலைக்கழகம்,அமெரிக்கா(1974), சப்பானில் உள்ள டோக்கியோ காக்கூசுன் பல்கலைக்கழகத்திலும் (1990,1993,1996) பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் இணைப்பேராசிரியராக 1977 இல் பணியில் இணைந்தார். பணியுயர்வு பெற்று பேராசிரியராகவும்(1985) துறைத்தலைவராகவும் விளங்கினார். கீழைக் கலையியல் ஆய்வுப் பிரிவுக்கு இயக்குநராகவும், மொழியியல் ஆய்வுகளுக்கு இயக்குநராகவும் பெருமையுறப் பணிசெய்த பெருமைக்கு உரியவர்.

பொற்கோ அவர்களின் தகுதியையும் பெருமையையும் உணர்ந்த அரசினர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக அமர்த்தி அழகுபார்த்தனர்(24-06-1999-23-06.2002).இவர்தம் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் ஐந்து விண்மீன்தரத் தகுதியைப் பெற்றது.பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகப் பணிபுரிந்தபொழுது பல்கலைக்கழக நல்கைக்குழு உயர்சிறப்புத்திறன் பல்கலைக்கழகம் என்னும் விருதும்,30 கோடி உருவா நிதியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. நல்கைக்குழு இந்தியாவில் முதன்முதல் ஐந்து பல்கலைக் கழகங்களுக்கு இவ்விருதை வழங்கியதில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பொற்கோ அவர்கள் மொழியியல்,தமிழ் இலக்கணம், தமிழிலக்கியக் கொள்கைகள், திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், யாப்பியல்,தமிழ்-சப்பானியமொழி ஒப்பீடு உள்ளிட்ட பலதுறையில் வல்லவராக விளங்குபவர்.நாட்டுப்புறவியலிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.250 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்துள்ளார்.இவர் ஆய்வு மாணவராக விளங்கியபொழுது எழுதியகட்டுரைகளைக் கண்ட எமனோ உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் இவர் புலமையைப் பாராட்டியுள்ளனர்.முனைவர் பொற்கோ அவர்களின் மேற்பார்வையில் 39 பேர்
முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

100 பேருக்கு மேல் இளம் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.முப்பத்தைந்து ஆண்டுகளாக பயிற்றுவித்தலிலும்,ஆய்வுத்துறையிலும் பட்டறிவு உடையவர்.மிகச்சிறந்த பாவலராக விளங்கி மாணவப்பருவத்தில் கோதை வளவன் என்னும் பாவியம் பாடியவர்.

அண்ணாபல்கலைக்கழகம்,மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக்கல்வி குறித்தும் கலைச்சொல்லாக்கம் தொடர்பாகவும் கருத்துரை வழங்கியவர். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் 15 பேர் கொண்ட மொழி வல்லுநர் குழுவில் இருந்து கடமையாற்றியுள்ளார்.

கல்விப்பயணமாக இங்கிலாந்து,அமெரிக்கா,சிங்கப்பூர்,மலேசியா,சப்பான்,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார்.பன்னாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரைகள் வழங்கவும், உரையாற்றவுமாக இப்பயணம் அமைந்துள்ளது.

தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய உறவு உள்ளதை அறிஞர் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து உலகிற்கு வெளிப்படுத்தியவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, செர்மனி, ஆலந்து, உருசியா, சப்பான், மலேசியா, தென் ஆப்பிரிக்கா,மொரீசியசு முதலான நாடுகளிலிருந்து தமிழ் படிக்க வந்த மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவித பெருமைக்கு உரியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வங்காளம்,சப்பானிய மொழிகளை அறிவார்.பல உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இவரைத் தக்க வகையில் பாராட்டிப் பயன்கொண்டன. அவற்றுள் யுனெசுகோ நிறுவனத்தின் ஆய்வறிஞர் என்ற வகையில் அமெரிக்காவின் இரு பல்கலைக்கழகங்களில் மொழி இலக்கிய ஆய்வு,உயர்கல்வி நடை முறைகளை நேரில் பார்வையிட்டவர். திராவிட மொழியியல் கழகத்திற்காக வட இந்தியப் பல்கலைக்கழகங்களில் மொழிக்கல்வி குறித்து ஆய்ந்து அறிக்கை வழங்கியுள்ளார்.மலேசியப் பல்கலைக்கழகம் இவரை மொழித்துறைக்குப் புறநிலை அறிவுரைஞராகச் சிறப்பு நிலையில் பணிநியமணம் செய்தது.

தமிழக அரசின் கலைமாமணி விருது(1997)மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச் செம்மல்(2007) உள்ளிட்ட பல பெருமைப் பரிசில்களைப் பெற்றுள்ளார்.

தமிழகத்துப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, அறிஞர் குழுக்களில் இடம்பெற்றவர்.இவை தவிர உலக அளவிலான பல நிறுவனங்களில் உறுப்பினராகவும் , அறிவுரைஞராகவும் உள்ளார். அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆட்சிமன்றக்குழுவில் இருந்து கடமையாற்றியவர். இப்பொழுது குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,அழகப்பா பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தருக்குப் பதிலாகப் பணியாற்றிய இடைக்கால நிருவாகக்குழுவில் இவர் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் புலமை என்னும் ஆராய்ச்சி இதழைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்திவருகிறார்.மேலும் பல இதழ்களுக்குச் சிறப்பாசிரியராக இருந்து பணிபுரிகிறார். தற்பொழுது குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்று பணிபுரிகிறார்.சென்னைப் பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப் பிறகு பல்வேறு நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்தமை, இக்காலத்தமிழ் இலக்கணம் வரைந்தமை குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

சென்னையில் ஒவ்வொரு மாதமும் படிக்கத் தகுந்த நூல்கள் நினைக்கத் தகுந்த மேலோர் என்னும் வரிசையில் தமிழர்கள் படிக்க வேண்டிய நூல்களையும் தமிழர்கள் நினைக்கவேண்டிய அறிஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.இவர்தம் துணைவியார் மருத்துவர் பூங்கோதை அம்மா அவர்கள் காந்த மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்குபவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் தாம் கல்வி பயிலும் காலத்தில் தமிழ்மறவர் பொன்னம் பலனார், பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா,முனைவர் கு.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் தா.ம.வெள்ளைவாரணம் தமக்கு தமிழ் மரபு இலக்கண அறிவை ஊட்டினார்கள் எனக்குறிப்பிடுவார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம்,ந.குமாரசாமி இராசா, பி.எசு.சுப்பிரமணியம், முத்து சண்முகனார் உள்ளிட்டோர் மொழியறிவை ஊட்டினார்கள் எனக் குறிப்பிடுகிறார்.அதுபோல் உலகப் புகழ் பெற்ற அறிஞர்களான எமனோ,லீசு,மார்,சுசுமு ஓனா உள்ளிட்டவர்களின் அன்பையும், அறிவாற்றலை யும் நினைவுகூர்கிறார்.

முனைவர் பொற்கோ அவர்களின் முகவரி:

முனைவர் பொற்கோ,
பூம்பொழில்,
மதன்மிதிலா அடுக்ககம்,
16,ஆறாவது குறுக்குத்தெரு,
சாத்திரிநகர்,அடையாறு,
சென்னை-600 020,தமிழ்நாடு
செல்பேசி: + 91 9840150110


காலத்திற்கேற்ற தமிழ் இலக்கணம் பற்றிய நூல்


மொழியியலைப் பயிற்றுவிக்க உதவும் அரிய நூல்


யாப்பு தொடர்பிலான நூல்


இலக்கணம் பற்றிய செய்திகள் உள்ள நூல்


இலக்கணம் குறித்த அரிய நூல்


தமிழாய்வுகளை ஆங்கிலத்தில் சுட்டும் நூல்


இலக்கணம் பற்றிய புதிய சிந்தனைகள் உள்ள நூல்


சப்பானிய தமிழ் மொழி உறவு குறிப்பிடும் அரிய நூல்


மாணவப்பருவத்தில் எழுந்த பாவியம்

புதுவைத் தமிழ்ச்சங்க 41 ஆவது ஆண்டு விழா


புதுவைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா மேடையில் அறிஞர்கள்...

 புதுச்சேரியில் இன்று (29.09.2008) திங்கள் கிழமை காலை புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் 41 ஆம் ஆண்டுவிழா வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புலவர் சீனு.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் கல்வி, கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 "நாட்டுப்புற இசையமுது" என்னும் பொருளில் யான் தமிழக நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பைப் பாடி விளக்கினேன். மேலும் கேரள, இலங்கை, மலேசிய நாட்டுப்புறப் பாடல்களையும் எடுத்துரைத்தேன்.


மு.இளங்கோவன் உரை

 கல்விச்செம்மல் வி.முத்து, புலவர் நாகி, செ.ஆதவன் உள்ளிட்ட தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். புலவர் பூங்கொடி பராங்குசம் தொகுப்புரை வழங்கினார்.

மாலையில் நடைபெறும் விழாவில் முனைவர் இரா.திருமுருகன் அவர்கள் தமிழிசை அமுது வழங்கவும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வெ. வைத்திலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

அயலகத் தமிழறிஞர்கள் வரிசை-1 முனைவர் முரசு நெடுமாறன்(மலேசியா)


முனைவர் முரசு.நெடுமாறன்

 மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகச் சென்றமுறை பொறுப்பேற்ற பொழுது பாவேந்தர் பாரதிதாசன் விருதை மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களுக்கு அறிவித்தார். அப்பொழுது உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் தமிழக அரசு இதற்குமுன் அறிவித்த பரிசுகள் யாவும் தமிழகத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன.

 'வடவேங்கடம் தென்குமரி'க்கு இடையில் தமிழர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் இனமாகத் தமிழ் இனம் உள்ளது என்பதைக் கலைஞர் அவர்கள் புரிந்துகொண்டு பரிசு வழங்கியது பாராட்டுக்கு உரியது. அதுநாள் முதல் தமிழக அரசின் தமிழ் சார்ந்த செயல்பாடுகள், பரிசுகள், அறிவிப்புகள் யாவும் உலகத் தமிழர்களை மனத்தில்கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது வரலாறு.

 தமிழகத்தைவிட்டு அயல்நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் தாய்த் தமிழகத்தினைக் கல்வி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்து இலக்கியப் போக்குகளை, தமிழ் அறிஞர்களை அறிந்து தத்தம் நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் படைக்கும் இலக்கியங்களை, அவர்கள் செய்யும் ஆய்வுகளை நாம் அறிய வாய்ப்பில்லாமல் பலகாலம் இருந்தோம். ஆனால் ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வுக்குப் பின்னும், கணிப்பொறி, இணையப் பயன் பாட்டிற்குப் பிறகும் அயல்நாட்டு இலக்கியங்களை அறியும் போக்கு தமிழகத்தில் தொடங்கி விட்டது.

 அயல் நாட்டு அறிஞர்கள் தமிழகத்திற்கு வருவதும், தமிழகத்து அறிஞர்கள் அயல் நாட்டினருடன் தொடர்பு கொள்வதும் இன்று எளிதாகிவிட்டதால் அயலகத் தமிழ் பற்றி இன்று அறியமுடிகிறது. அயலகத்தமிழ் இலக்கியங்கள் தமிழகத்தில் பாட நூல்களாக இடம்பெற்று வருகின்றன. அயல்நாட்டு அறிஞர்கள் தங்கள் நாட்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ள போக்குகளை நூல்கள், இதழ்கள், இணையும் வழியாக நமக்குத் தெரிவித்ததால் அந்நாட்டு இலக்கிய வளர்ச்சியை அறிந்து மகிழமுடிகிறது. அவ்வகையில் மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களின் வழியாக உருவான மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம் மலேசிய நாட்டின் இலக்கியப்போக்கை நமக்கு எடுத்துரைக்கிறது. மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலும், இலக்கிய வளர்ச்சியிலும், மலேசிய இலக்கியங்களை அறிமுகம் செய்வதிலும் முன்னிற்கும் முரசு நெடுமாறன் அவர்களின் வாழ்க்கையை இங்கு அறிமுகம் செய்கிறோம்.

 முரசு நெடுமாறன் அவர்கள் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் உள்ள 'கேரி தீவில்' 14.01.1937 இல் பிறந்தார். பெற்றோர் (இ)ராசகிள்ளி சுப்புராயன் - முனியம்மை. இவரின் இயற்பெயர் கணேசன் ஆகும். தமிழார்வம் வரப் பெற்றதும் நெடுமாறன் என மாற்றிக்கொண்டார். ஆவணங்களிலும் இவ்வாறு பதிவானது. முரசு என்பது பெற்றோர்களின் பெயர்ச் சுருக்கம் ஆகும். மேலும் தம் படைப்புகளைப் போற்றி வெளியிட்ட தமிழ்முரசு இதழின் நினைவாகவும் முரசு இடம் பெறலாயிற்று. இயற்பெயரும் புனைபெயரும் மறைந்து முரசு என்ற பெயரே இன்று உலக அளவில் தெரியலாயிற்று. முரசு அஞ்சல் என்று இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு தெரியும்.இவர்களின் நிறுவனம் அதுவாகும்.

 முரசு நெடுமாறனின் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தவர்கள். எனவே முரசு தாம்பிறந்த 'கேரி தீவில்' தொடக்கக் கல்வியைப் பெற்றார். இவர் பயின்ற இடம் பள்ளிக்கூடம் என்று சொல்லமுடியாதபடி குழந்தைகள் காப்பகமாகவும், கோயிலாகவும் இருந்தது. பின்பு சாதாரண தனிக்கட்டடமாக இருந்தது. பின்னர் கிள்ளானில் உயர்நிலைக் கல்வி பெற்றார். தனிப்பட்ட முறையில் பயின்று தமிழ் ஏழாம்வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஏழாம் வகுப்பு என்பது அக்காலத்தில் ஆசிரியர் பணிபுரிவதற்குரிய ஆயத்தக் கல்வியாகும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆவதற்குரிய கல்வி பெற்றிருந்தும் ஆசிரியர் பணி இவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் கற்றிருந்த தையற்கலைத் தொழில் இவருக்குக் கை கொடுத்தது.

 தையற்கலைத் தொழிலால் வாழ்க்கை நடத்திய முரசு அவர்களுக்கு 1963 இல் ஒரு பொற் காலத்திற்கான கோட்டைக் கதவு திறக்கப்பட்டது. ஆம்!. தற்காலிக ஆசிரியர் பணிபுரியலனார். 1973-1976 காலகட்டங்களில் விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றுத்தகுதி மிக்க ஆசிரியர் ஆனார். அக்காலத்தில் மலாய், ஆங்கிலக் கல்வியில் ஈடுபட்டுச் சொந்த முயற்சியாலும், சிறப்புப் பயிற்சியாலும் மூன்றாம் படிவத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ஐந்தாம் படிவத்தில் தேர்வு எழுதிப் பொது நிலை தேர்ச்சி பெற்றார். பின்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி வழியாக இலக்கிய இளவல்(பி.லிட்), முதுகலை(எம்.ஏ) பட்டங்களையும் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் முனைவர் பட்டத்தினைப் (1994-2002) பெற்றவர்.

 முரசு அவர்கள் தற்காலிக ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு தகுதி பெற்ற ஆசிரியராக விளங்கி 1992 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றார்.பணி ஓய்வுக்குப் பிறகு ஒப்பந்த ஆசிரியராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.

 முரசு ஆசிரியர் பணியில் இருந்த காலகட்டத்தில் மலேசியக் கல்வித்துறையில் பல புதிய உத்தி முறைகளைப் பின்பற்றித் தமிழ் கற்றலை எளிமைப்படுத்தினார். இதனால் மாணவர்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியரானார்.1980 இல் புதி பாடத்திட்டம் மலேசியாவில் நடைமுறைக்கு வந்தபொழுது இவரின் கல்வி நடவடிக்கைகள், அணுகுமுறைகள் அதில் இடம்பெற்றன.மலேசியக்கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் முதலான பல துறையினரும் இவர்தம் கல்விப் புலமையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

 1996 இல் கல்வி ஒலிபரப்புத்துறையில் பள்ளி ஒலிபரப்புத் தொடங்கியபொழுது இத்துறையில் பகுதிநேரக் கலைஞராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் அவ் ஒலிபரப்பு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுதியா இசைப்பாடல்கள் எழுதி (ஏறத்தாழ 600) மாணவர்களுக்கு இசைவழியாகக் கல்வியார்வம் ஊட்டியவர்.

 முரசு நெடுமாறன் மலேசியாவில் ஆசிரியர் பணி புரிந்ததுடன் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தில் பயிலரங்குகள், பாடத்திட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வு அரங்குகள் போன்றவற்றில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் பணிபுரிந்தவர். முரசு நெடுமாறனின் தமிழ் இலக்கியப் பணியை மதிக்கும் வகையில் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரை வருகைதரு பேராசிரியராக (2001-02) அமர்த்திப் பெருமை செய்தது. மலேசியாவில் புத்ரா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

 முரசு நெடுமாறன் அவர்கள் பொதுத்தொண்டு புரிவதில் மிக்க ஈடுபாடு உடையவர். பல்வேறு அமைப்புகளில் இடம்பெற்றுத் திறம்படப் பணிகள் செய்தவர்.தாம் வாழ்ந்த 'கேரி தீவு' பகுதியில் தம் பதினாறாம் அகவையில் செய்த தொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். தோட்டங்களில் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் நாடகங்களில் முரசு பங்குகொண்டவர். இதனால் இவருக்குச் செல்வாக்கும் மதிப்பும் கூடியது. இவரின் தொழிற்சங்க ஈடுபாட்டால் தோட்டத்தொழில் நிருவாகத்திற்கு இவர்மேல் வெறுப்பு ஏற்பட்டது.

 எனவே இவர் தந்தையார் பார்த்த கங்காணி வேலையை இழக்கவேண்டியதானது. இவரும் தோட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பும் வந்தது. ஆனால் நல்ல உள்ளம் படைத்த சிலரால் முரசு அங்கேயே பணியாற்றும் நிலை ஏற்பட்டது.தமக்குப் பாதுகாப்பாகவும் மக்கள் தொண்டு செய்ய வாய்ப்பாகவும் முரசு ம.இ.கா. என்னும் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவரின் அரசியல் ஈடுபாட்டை மேனாள் அமைச்சர் மாணிக்கவாசகம் அவர்கள் பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார்.

 முரசு நெடுமாறன் நல்ல கலை உணர்வு உடையவர். இவரின் தாத்தா திரு.மாரிமுத்து அவர்கள் (பெரிய கங்காணி) அனைவராலும் மதிக்கப்பட தெருக்கூத்துக் கலைஞர். (முரசுவின் முன்னோர்கள் தெருக்கூத்துக்குப் புகழ் பெற்ற உத்திரமேரூர் பகுதியிலிருந்து சென்றவர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.) இவருக்குக் கீழ் ஒரு நாடகக் குழு இருந்தது. தாத்தா வழியாக முரசு பாடல் பாடுவது, நடிப்பது போன்ற கலைகளைக் கைவரப்பெற்றார். நல்ல தங்காள் கதை,ஏணி ஏற்றம் போன்ற இசை நாடகங்களையும் இவர் வழியாக முரசு பெற்றார். முரசு தோட்டப்புறங்களில் பல நாடகங்களை அரங்கேற்றியது போல் -ஆசிரியர் பணியாற்றும் காலங்களிலும் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

 முரசு நெடுமாறன் நல்ல படைப்பாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர்.பல நூல்களை எழுதி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தந்துள்ளார். மலேசியநாட்டில் வெளியிடப்பட்ட தமிழ் தொடக்க,இடைநிலைப் பள்ளிப்பாட நூல்களில் இவர் படைப்புகள் பல இடம்பெற்றுள்ளன. சிறுவர் பாடல்கள், நாடகம், கதை,கட்டுரை போன்ற துறைகளில் இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் என்னும் பெயரில் இவர் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து உருவாக்கியுள்ள பெருங்களஞ்சியம் இவருக்கு உலக அளவில் நிலைத்த புகழைத் தந்தது.

மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம்

 மலேசியா, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் 1887முதல் 1987 வரை எழுதியுள்ள கவிதைகளை 40 ஆண்டுகளாகத் தொகுத்து முரசு நெடுமாறன் வெளியிட்ட நூலே மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஆகும்.இந்நூல் 1080 பக்கம் கொண்டது. 254 கவிஞர்கள் எழுதிய 650 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ ஒரு இலட்சம் கவிதைகளிலிருந்து 650 கவிதைகள் சிறப்பு நோக்கித் தொகுக்கப்பட்டுள்ளன.14 உட்தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.


மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

 இந்நூல் வெறும் களஞ்சியமாக மட்டும் அமையாமல் மலேசியத்தமிழ் இலக்கிய வரலாறு, மலேசிய நாட்டுவரலாறு,தமிழக வரலாறு எனப் பல சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ளது. மலேசியத் தமிழர்களின் அனைத்துத் துறை பற்றிய செய்திகளையும் தாங்கியுள்ளது. மலேசியாவில் வெளிவந்த,வெளியாகும் இதழ்கள், நூல்கள், ஆண்டுமலர்கள், சிறப்பு வெளியீடுகள் எனப் பலவற்றைப் பற்றிய செய்திகள் உள்ளன.ஒரு களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்றால் இந்நூலைப் பார்த்துத் தொகுக்கவேண்டும் என்ற அளவில் இது மாதிரி நூலாக விளங்குகிறது.

 முரசு நெடுமாறன் தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆய்வரங்குகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்தவர். தமிழகத்தின் புகழ்பெற்ற ஏடுகள் பல இவரின் சிறப்புச் செவ்வியை வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றியும் இலக்கிய அரங்குகளில் கலந்துகொண்டும் மலேசியத்தமிழ் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 முரசு நெடுமாறனின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அரசும்,தமிழ் அமைப்புகளும் பல்வேறு பாராட்டுகளை வழங்கியுள்ளன. பரிசுகளைத் தந்துள்ளன.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1997 இல் இவரின் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தைத் தேர்ந்தெடுத்து வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசான 5000 மலேசிய வெள்ளியை அளித்தது. தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்தது.சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவருக்குத் தமிழவேள் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது.

 முரசு நெடுமாறன் வளர்ந்துவரும் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒலிப்பேழைகளிலும், குறுவட்டுகளிலும் தம் படைப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். பாடிப் பழகுவோம் என்னும் தலைப்பில் இவர் உருவாக்கிய குறுவட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 முரசு நெடுமாறன் செயற்கரிய பல செயல்களைச் செய்த பெரியவராக விளங்கும் அதே வேளையில் தம் குடும்பப் பணிகளிலும் செம்மையாக வாழ்ந்துள்ளார். இவரின் துணைவியார் திருவாட்டி சானகி(மதி) அம்மையார். 1960 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முரசு முத்தெழிலன் (முரசு அஞ்சல்), இளவரசு எனும் ஆண்மக்கள். அமுதா. அல்லிமலர் என்னும் இரு பெண்மக்கள்.

 முத்தெழிலன் கணிப்பபொறி வல்லுநராக உலக அளவில் மதிக்கப்படுபவர். முரசு அஞ்சல் செயலியைக் கண்டுபிடித்தவர். தமிழைக் கணிப்பொறிக்குக் கொண்டு வந்த முன்னோடிகளுள் ஒருவர். உத்தமம் என்ற தமிழ் இணைய அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர். முரசு நெடுமாறனின் இளைய மகன் இளவரசு. இவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்.பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

 முரசு அவர்களின் இரு பெண்மக்களும் இசையறிவு பெற்றவர்கள்.முரசு எழுதிய பாடலுக்கு அவர் மகன் இசையமைக்க அவர் மகள் பாடுவதால் அவரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் எனல் பொருந்தும். அவ்வகையில் பாடிப் பழகுவோம் என்ற ஒலிப்பேழை பத்துப் பாடல்களுடன் 1998 இல் உருவானது. இரண்டாம் பகுதியும் அண்மையில் வெளிவந்துள்ளது.

 முரசு நெடுமாறன் தேர்வெழுதும் மாணவர்களுக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசத் தமிழ்வழிகாட்டி வகுப்புகளை நடத்திவருகிறார். இதனால் எண்ணற்ற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இவர் தமிழ்ப்பண்பாடு மலேசியாவில் செழித்துவளர 1978 முதல் மாணவர் பண்பாட்டு விழாக்களை நடத்திவருகிறார். மாணவர்களைப் படைப்பாற்றல் மிக்க வர்களாக்க இவ்விழா பெரிதும் உதவுகிறது. கல்வியாளர்கள், சமுதாய அரசியல் தலைவர்களால் பெரிதும் வரவேற்கப்படும் விழாவாக இது மலேசியாவில் விளங்குகிறது.

 எளிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, கொள்கையுணர்வுடனும், தமிழ்ப் பற்றுடனும் விளங்கி, மனைத்தக்க மாண்புடையவரைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தம் பணிகளுக்கு என்றும் துணைநிற்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அருள்திரு பங்காரு அடிகளாரையும் அவர்களின் துணைவியார் புலவர் இலக்குமி பங்காரு அடிகாளாரையும் உயர்வாகப் போற்றுபவர்.

(தமிழ் ஓசை நாளேட்டில் இணைப்பாக வெளிவரும் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 1 என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை.
நாள் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை)

நனி நன்றி:
தமிழ் ஓசை, சென்னை, தமிழ்நாடு

சனி, 27 செப்டம்பர், 2008

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் கல்லூரியில் ஆய்வரங்கம்...


தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் கல்லூரி

மயிலம் என்னும் ஊர் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஊராக விளங்கும் பெருமையுடையது. இவ்வூர் இறைவன்மேல் சண்முகன் வண்ணப்பாட்டு, சுப்பிரமணியர் துதியமுது பாடி இவ்வூரைத் தமிழ் இலக்கிய உலகில் என்றும் நினைவுகூரும்படி செய்தவர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார்.இவ்வூரில் புகழ்பெற்று விளங்கும் கல்லூரி தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரி.

தமிழ் இலக்கியப்பணியாற்றவும், தமிழ்ப்புலவர் பெருமக்களை உருவாக்கவும் தொடங்கப் பெற்ற இக்கல்லூரி இன்று கலை அறிவியல் கல்லூரியாக விளங்குவதுடன் தமிழ் இலக்கியம் பட்ட வகுப்பு, முதுகலை வகுப்பு, இளம் முனைவர், முனைவர் உள்ளிட்ட ஆய்வு வகுப்புகளையும் கொண்டு விளங்குகிறது.

இக்கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. துறைசார் அறிஞர் பெருமக்களை அழைத்து மாணவர்கள் பயன்பெற சிறப்புரையரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இத் திங்களுக்கான நிகழ்ச்சிக்குப் புதுவை மொழியியல், பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களும் யானும் அழைக்கப் பெற்றிருந்தோம்.

'இலக்கிய ஆய்வில் மானுடவியல் அணுகுமுறைகள்' என்னும் பொருளில் பக்தவத்சலபாரதி அவர்கள் உரையாற்றினார். மாணவர்கள் ஆர்வமுடன் அவர் பேச்சைக் கேட்டதுடன் வினா விடையிலும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நான் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை அறிமுகம் செய்து உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தேன். என் பேச்சுக்கு முன்பாகப் பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் சு.திருநாவுக்கரசு அவர்கள் யான் தமிழ் இணையத்துறையில் வளர்ந்துவரும் ஆர்வலன் எனவும் தமிழ் இணையம் பற்றி அறிமுகம் செய்யும்படியும் வேண்டினார்கள்.

அதன்படி தமிழ் இணையத்துறையில் என் முயற்சியை அறிமுகம் செய்து தமிழ்மாணவர்கள் அனைவரும் கணிப்பொறி, இணையம் பற்றி அறிய வேண்டும் என உரையாற்றினேன். (மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கிற்கு நிருவாகத்தினர் ஏற்பாடு செய்து வருவது கூடுதல் செய்தி).

பின்னர்த் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்புக்குப் பேச வந்தேன். நாட்டுப்புறவியல் சொல்விளக்கம், பின்லாந்து மக்களின் ஆர்வம் தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு முயற்சி,ஆங்கிலேயரின் பங்களிப்பு, பேராசிரியர் வானமாமலையின் பங்களிப்பு பற்றி பேசினேன்.

தொல்காப்பியம். சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம், பக்திப்பனுவல்கள், சிற்றிலக்கியங்கள், பாரதி பாடல்கள், திரைப்படப்பாடல்கள் இவற்றில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் இடம் பெற்றுள்ளதைச் சான்றுகளுடன் பாடிக்காட்டினேன். மேலும் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள், இலங்கையில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்கள், தமிழகத்தில் வழங்கும் ஒப்பாரி, கும்மி, நடவு, காதல் பாடல்கள், விளையாட்டுப் பாடல், உலக்கை இடிக்கும் பாடல்கள் உள்ளிட்டவற்றைப் பாடி விளக்கினேன். அனைவரும் கேட்டு இன்புற்றனர்.

கல்லூரிச் செயலாளர் சிவத்திரு குமாரசிவ. இராசேந்திரன் அவர்கள் வந்திருந்து வாழ்த்துரை நல்கினார். பேராசிரியர் இரா.இலட்சாராமன் அவர்கள் நன்றியுரை நவின்றார்.

பேராசிரியர் எழில் வசந்தன் அவர்கள் தொடக்கத்தில் வரவேற்புரை நல்கினார்.

அடிகளாசிரியர், சிவலிங்கனார் உள்ளிட்ட மிகச்சிறந்த தமிழ்ப்பேராசிரியர்கள் பணிபுரிந்த, பல அறிஞர்கள் தமிழ் பயின்ற மயிலம் தமிழ் மண்ணை வணங்கியபடி விடைபெற்று வந்தேன்.

ஆய்வரங்கக் காட்சிகள்


மு.இ, பக்தவத்சலபாரதி, குமாரசிவ. இராசேந்திரன்


முனைவர் இலட்சாராமன், மு.இ,சு.திருநாவுக்கரசு, எழில்வசந்தன்


பங்கேற்ற மாணவியர்களின் ஒரு பகுதியினர்


மு.இளங்கோவன் உரை

வியாழன், 25 செப்டம்பர், 2008

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கம்(17.04.1917-25.04.1989)


மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்


மூதறிஞர் எனவும் செம்மல் எனவும் அழைக்கப்பெறும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி என்னும் ஊரில் பிறந்தவர்(17.04.1917). இவர் தம் பெற்றோர் வ.சுப்பிரமணியன் செட்டியார் தெய்வானை ஆச்சி என்பதாகும். அண்ணாமலை என்பது இவர்தம் பிள்ளைப்பருவத்துப் பெயராகும். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர், மகளிர் இருவர் என உடன் பிறந்தார் நால்வராவர்.

இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார் தம் தாய்வழிப்பாட்டி, மீனாட்சி ஆச்சியும், தாத்தா அண்ணாமலைச் செட்டியாரும் வளர்க்க, வளர்ந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் குருகுல முறையில் ஏழாம் அகவை வரை தொடக்க கல்வியைத் தம் பிறந்த ஊரில் வாழ்ந்த திரு.நடேச ஐயரிடம் கற்றார். ஐயர் அவர்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடையவர்கள். அவர் வழி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம் நூல்களை ஐயம் திரிபறக் கற்றார்.

பின்னர் பர்மா சென்று கைபழகுதல் என்னும் வணிகத்தொழில் பழகினார். 11 அகவையில் பர்மா சென்ற மாணிக்கனார் இருமுறை தமிழகம் வந்துள்ளார். பின்னர்க் கடை முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால் வேலையிழந்து தமிழகம் வந்தார். அப்பொழுது மாணிக்கனார்க்கு அகவை பதினெட்டு ஆகும்.

அறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் உறுதுணையால் மாணிக்கனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வித்துவான் வகுப்பினை நிறைவு செய்தார்(1936-40).பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக பி.ஓ.எல் (1945), முதுகலை(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். அடுத்து, தமிழில் வினைச்சொற்கள் என்னும் பொருளில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார்(1948). தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்(1957).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கனார் கற்ற பொழுது பண்டிதமணியார், இரா. இராகவ ஐயங்கார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார், இரா. கந்தசாமியார், ஆ.பூவராகன் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை முதலான அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களாக இருந்து தமிழறிவு ஊட்டினர். இவர்களுள் பண்டிதமணியார் அவர்கள் பலவகையிலும் மாணிக்கனாரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்ததால் நன்றியின் அடையாளமாகத் தாம் வாழ்ந்த இல்லத்திற்குக் 'கதிரகம்' எனப்பெயரிட்டனர். தம் மகனுக்குப் பூங்குன்றன் எனப்பெயரிட்டனர்.

ஆசிரியப்பணி

வ.சுப.மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே 1941 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியேற்றார். ஏழாண்டுகள் (1941-48) அப்பணி அங்கு அமைந்தது.1948 இல் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இணைந்தார்.1964-1970 இல் அக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் பேறும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மீண்டும் பணியாற்ற அழைப்பு விடுத்தது.  அதன் காரணமாக 1970-1977 வரை தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணிபுரிந்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் தம் கடுமையான உழைப்பாலும்,ஒப்பாரில்லாத தமிழ்ப்புலமையாலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்(17-08-1979-30-06-1982).இவர் துணைவேந்தர் பணிபுரிந்தகாலை மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் சார்பில் அரிய கண்காட்சி அமைத்தமை, பல நூல்கள் வெளியிட்டமை இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கன. பல்வேறு துறைகளை உருவாக்கிப் பல்கலைக்கழகம் புகழ்பெற வழி கண்டார்.

தம் ஆசிரியர் பெயரில் பண்டிதமணி அரங்கு நிறுவியமை,பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்கவேண்டும் என ஆணையிட்டமை, ஆசிரியர்கள், பணியாளர்கள் வீடு கட்டிக்கொள்ள கடனுதவி வழங்கியமை உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன. தக்க அறிஞர்களைச் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்த்தித் தமிழ் ஆய்வுக்கு வழி வகுத்தார்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் துணைவேந்தர் பணியிலிருந்து விடுபட்ட பின்னர் திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தில் 'தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.முதுபேராய்வாளர் என்னும் பதவியில் இப்பணியை ஐயா அவர்கள் செய்தார்கள்.

பின்னர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காபிய ஆய்விற்கென அமைக்கப்பெற்ற ஆய்விருக்கையில் தொல்காப்பியத் தகைஞர் என்னும் பொறுப்பில் இருந்து ஓராண்டு ஆய்வு செய்தா(1985-86).இவ்வாய்வு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என்னும் பெயரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்வழி வெளிவந்துள்ளது. தொடர்ந்து பல நூல்கள் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தையும்,குன்றக்குடி ஆதீனம் முதுபெரும்புலவர் என்னும் பட்டத்தையும்,ஈப்போ பாவாணர் தமிழ்மன்றம் பெருந்தமிழ்க்காவலர் என்னும் பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவின் பொழுது இவருக்கு மூதறிஞர் (டி.லிட்.,1979) என்னும் பட்டத்தையும் வழங்கிச்சி றப்பித்தன. தமிழக அரசு இவருக்குத் திருவள்ளுவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது(மறைவிற்குப் பின்).

வ.சுப.மாணிக்கம் அவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைக்கு ஆசிரியர் பணியமர்த்தல் நேர்காணல் தேர்வாளராக 24.04.1989 இல் புதுச்சேரி சென்றார். புதுச்சேரி உப்பளம் அரசினர் தங்குமனையில் இரவு பதினொருமணி வரை நன்கு உரையாடியபடி இருந்தார். நள்ளிரவு ஒருமணியளவில் அவருக்கு அடிக்கடி இருமல் ஏற்பட்டது. வாந்தியும் எடுத்தார். உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவ ஊர்தியில் ஏற்றிக்கொண்டு கோரிமேடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் 25.04.1989 ஆம் நாள் வைகறையில் பிரிந்தது.

இல்லறம்

வ.சுப.மாணிக்கம் அவர்கள் 14.11.1945 இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சி அவர்களைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி எனும் ஆண்மக்களும், தென்றல், மாதரி, பொற்றொடி என்னும் மூன்று பெண்மக்களும் பிறந்தனர்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்புலமை உடையவர்கள். தமிழ்ப்பற்று உடையவர்கள்.இருபதாம் நூற்றாண்டில் உரைநடையில் எழுத வல்லாருள் இவருக்குத் தனி இடம் உண்டு. நன்றியுணர்வு உடையவர்கள். சங்க இலக்கியங்களைத் தம் நா நுனியில் வைத்திருந்தவர். இவருக்கெனப் பல கொள்கைகள் இருந்தன. தமிழ்வழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திருக்குறள் செயல் நூல் என்றவர். தம் வாழ்க்கையில் திருக்குறள் கருத்துகளை ஏற்றுக் கடைப்பிடித்தவர்.

தொல்காப்பியத்தையும், பிற சங்கப் பனுவல்களையும் உயர்வாக எண்ணியவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஆர்ப்பாட்டம் விரும்பாதவர். கடும் உழைப்பாளி. தாம் பணிபுரிந்த நிறுவனங்கள்மீதும் அதனைத் தோற்றுவித்தவர்கள் மீதும் மிகச்சிறந்த பற்றுடையவர். தாம் பணிபுரிந்த கல்லூரியான அழகப்பர் கல்லூரியின் நிறுவுநர் வள்ளல் அழகப்பரின் சீர்த்திபேசும் கொடைவிளக்கு என்னும் நூல் உயர்ந்த தரத்தன. அந்நூலின் பாடல்கள் கற்பாரைக் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் உடையன. அதுபோல் தமக்குப் பணி நல்கிய அண்ணாமலை அரசர் மேல் பாடப்பெற்ற பாடல்கள் அப்பல்கலைக்கழகத்தாரால் இன்றும் நினைவுகூரப்படும் தரத்தன.

பல்வேறு புதுக் கலைச்சொற்களை வழங்கித் தமிழுக்குச் சொல்வளம் சேர்த்தவர் வ.சுப.மாணிக்கம் அவர்களாவார். மக்கள் இயக்கம் கட்டித் தில்லையில் தேவாரத் திருமொழிகள் அம்பலம் ஏற வழி வகுத்தவர். ஊர்தோறும் சென்று தமிழ்வழிக் கல்விக்காகக் குரல்கொடுத்தவர்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை

01. மனைவியின் உரிமை,1947
02. கொடைவிளக்கு,1957
03. இரட்டைக் காப்பியங்கள்,1958
04. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
05. தமிழ்க்காதல்,1962
06. நெல்லிக்கனி,1962
07. தலைவர்களுக்கு,1965
08. உப்பங்கழி, 1972
09. ஒருநொடியில்,1972
10. மாமலர்கள்,1978
11. வள்ளுவம்,1983
12. ஒப்பியல்நோக்கு,1984
13. தொல்காப்பியக் கடல்,1987
14. சங்கநெறி,1987
15. திருக்குறட் சுடர்,1987
16. காப்பியப் பார்வை,1987
17. இலக்கியச்சாறு,1987
18. கம்பர்,1987
19.தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, 1989
20. திருக்குறள் தெளிவுரை,1991
21. நீதிநூல்கள்,1991
22. The Tamil Concept of Love
23. A Study of Tamil Verbs
24. Collected Papers
25. Tamilology

அறிக்கைகள்

26.எழுத்துச் சீர்திருத்தம், எங்கே போய்முடியும்?(01.04.1989)
27. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மொழியறிக்கை(15.05.1989)
28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12.06.1988)

நன்றி

01.முனைவர் இரா.மோகன், வ.சுப.மாணிக்கம், சாகித்திய அகாதெமி வெளியீடு,
02.முனைவர் இரா.சாரங்கபாணி, மாணிக்கச்செம்மல், மணிவாசகர் பதிப்பகம்

பின்குறிப்பு

(1992இல் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தலைமையில் இயங்கும் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக்கழகம் சார்பில் நடைபெற்ற மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் தமிழ்ப்பணிகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் தமிழக அளவில் யான் எழுதிய கட்டுரை தங்கப் பதக்கத்திற்கு உரியது என அறிஞர்கள் தேர்ந்தெடுத்துத் தங்கப்பதக்கம் வழங்கினர். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முனைவர் ச.மெய்யப்பன் அவர்களின் வழியாக அறிஞர் மாணிக்கனாரை அவர்களின் நூல்கள் வழியாக அறியும் வாய்ப்புப்பெற்றேன். அன்றுமுதல் செம்மல் அவர்களை என் கொள்கை முன்னோடியாக நினைத்துப் போற்றுகிறேன்.செம்மலின் தம்பியார் ஐயா வ.சுப.சொக்கலிங்கம். மதுரை இராம.விசுவநாதன், அறிஞர் தமிழண்ணல், பேராசிரியர் மது.ச.விமலானந்தம் ஆகியோரின் தொடர்பும் பின்னாளில் எனக்கு அமைந்தது).

திங்கள், 22 செப்டம்பர், 2008

முதுபெரும்புலவர் ஆ.சிவலிங்கனார்(30.11.1922)


அறிஞர் ஆ.சிவலிங்கனார்

 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர் ஆ.சிவலிங்கனார். இவர் கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் (கரையேறவிட்ட குப்பம்) 30.11.1922 இல் பிறந்தவர். பெற்றோர் ஆறுமுகனார் - பொன்னம்மாள். நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஆ.சிவலிங்கனார் தொடக்கக் கல்வியைக் கடலூர் நகராட்சி (முனிசிபல்) பள்ளியில் பயின்றவர்.

 பிறகு கடலூரில் புகழ்பெற்று விளங்கிய ஞானியார் மடத்தில் தம் இருபதாம் அகவை வரை பயின்றவர். ஞானியார் மடத்தில் பயின்றபொழுது இவருக்கு ஐந்தாம் பட்டத்தில் இருந்த சிவசண்முக மெய்ஞான சிவவாக்கியார் சுவாமிகள் ஆசிரியராக விளங்கிச் சமய நூல்களைப் பயிற்றுவித்துள்ளார் (இச் சுவாமிகள்தான் தந்தை பெரியாருக்கு நெருங்கிய நட்புரிமை கொண்டவர். அக்காலத்தில் சமூகச்சிந்தனையுடன் விளங்கியவர். இசுலாமிய, கிறித்தவ மதம் சார்ந்தவர்களும் இவர்களிடத்துத் தமிழ்ப்பாடம் கேட்டுள்ளதை அறியமுடிகிறது.

 ஞானியார் மடத்தில் படித்தகாலை அறிஞர் சிவலிங்கனார்க்குத் தமிழ் இலக்கணங்களில் நல்ல பயிற்சி அமைந்தது.அங்குப் பணிபுரிந்த உருத்திரசாமி ஐயர் (வீரசைவ மரபினர்) ஆசிரியராக விளங்கி இவருக்கு நல்லமுறையில் தமிழ் இலக்கியங்களைப் பயிற்றுவித்தார்.

 அறிஞர் ஆ.சிவலிங்கனார் திருவையாறு கல்லூரியில் தமிழ்பயின்று தம் புலமையை வளர்த்துக்கொண்டார்(1936-1940). அப்பொழுது திருவையாறு கல்லூரியில் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, புருசோத்தம நாயுடு, கோவிந்தசாமி பிள்ளை, சோமசுந்தர தேசிகர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நம் சிவலிங்கனார் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களாக இருந்துள்ளனர். புருசோத்தம நாயுடு அவர்கள் அணியிலக்கணம், தொல்காப்பியம் பொருளதிகாரம் பயிற்றுவித்ததையும், சோமசுந்தர தேசிகர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பயிற்றுவித்ததையும், வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பயிற்றுவித்ததையும் அறிஞர் சிவலிங்கனார் குறிப்பிடுகிறார்.

 திருவையாற்றுக் கல்வியை முடித்த கையோடு அக்காலை வேலை கிடைப்பது மிக அரிதாக இருந்தமையால் தம் வகுப்புத் தோழர் உதவியால் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சிவலிங்கனார் இணைந்தார். பின்னர் 1942 முதல்-1972 வரை மயிலம் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இணைந்தார்.

 இவர் காலத்தில் மயிலத்தில் பேராசிரியர் அடிகளாசிரியர், சுந்தரசண்முகனார், துரைசாமி ஐயர், குமாரசாமி ஆசாரியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் ஈபட்டிருந்தனர். மயிலம் கல்லூரியில் ஓய்வுபெற்ற பிறகு 1973 இல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார். தாம் பயின்ற கடலூர் ஞானியார் மடத்தில் 1974 முதல் 1979 வரை மடாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

 அறிஞர் க.வெள்ளைவாரணனார் அவர்கள் விரும்பியாங்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பிய உரைவள வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுத் தொல்காப்பிய உரைவள நூல்கள் பல தொகுதிகளாக வெளிவர உதவினார்.

 அறிஞர் ஆ.சிவலிங்கனார் அவர்களின் துணைவியார் பெயர் மங்களம் என்பதாகும். இவர்களுக்கு ஆறு ஆண்மக்கள்,இரண்டு பெண்மக்கள்.மக்களும் சுற்றமும் சூழ நல்ல உடல்நலத்துடன் அறிஞர் ஆ.சிவலிங்கனார் புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார். சமய நூல்களைப் பதிப்பிப்பதிலும், இலக்கிய, இலக்கண ஆய்வுகளில் ஈடுபடுவதிலும் தம் அரிய வாழ்க்கையை ஈடுபடுத்தி வருகிறார்.

 அறிஞர் ஆ.சிவலிங்கனார் அவர்கள் பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், தமிழ் மாருதம், செந்தமிழ், மக்கள் சிந்தனை, வீரசைவ முரசு என்னும் இதழ்கள் குறிப்படத்தகுந்தன. தமிழகம்,புதவை சார்ந்த பல்கலைக்கழங்களிலும் பல அறிவு அரங்குகளிலும் தொடர்ந்து உரையும் பொழிவும் வழங்கி வருகிறார்.

 தமிழகப் புலவர் குழு உறுப்பினராகவும்,தமிழக அரசு அமைத்த தமிழ் இலக்கண நூல் மீண்டும் உருவாக்குதல் குழுவின் வல்லுநர் குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். இவர்தம் தமிழ்ப்பணியை மதித்த பல நிறுவனங்கள் இவரைத் தக்க வகையில் போற்றியுள்ளன. மயிலம் மடம் இவரை ஆதீனப் புலவராக அறிவித்துப் புகழ்கொண்டது(1954). சிவநெறிப்புலவர் என்னும் பட்டம் வழங்கி மதுரை ஆதீனம் மகிழ்ந்தது (1956). உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொல்காப்பியச் செம்மல் என்னும் பட்டம் வழங்கியது(1997).

 அரசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உருவா ஐம்பதாயிரம் பண முடிப்புப் பெற்றவர் (2000). இவரிடம் தமிழ் பயின்றவர்களுள் மயிலம் 19 வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் தவத்திரு சாந்தலிங்கசாமி அவர்கள், முனைவர் வை.இரத்தினசபாபதி, முனைவர் த.பெரியாண்டவன், தெ.முருகசாமி உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பேராசிரியர் ஆ.சிவலிங்கனாரின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் சில:

01.தொல்காப்பியம் உரைவளம்(27 பகுதிகள்,உ.த.நி.வெளியீடு)
02.தொல்காப்பியம் எழுத்ததிகாரம்-இளம்பூரணம் விளக்கக் கட்டுரைகள்
03.அகத்தியர்கள்
04.எட்டாந் திருமுறை
05.மூலன் தமிழ்
06.தொல்காப்பியர் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்
07.மாணிக்கவாசகர் சமயமும் காலமும்
08.பெரியபுராணப் பெண்மணிகள்
09.தமிழ் இலக்கண உணர்வுகள்

உரைகள்

10.திருவெங்கைக் கலம்பகம் உரை
11.சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல் உரை
12.திருவெங்கை உலா உரை
13.திருக்கூவப்புராண உரை
14.சிவஞான பாலய சுவாமிகள் பதிகம் உரை... உள்ளிட்ட நூல்கள்தொல்காப்பியம் உரைவளம், எழுத்து, மொழிமரபு


தொல்காப்பிய உரைவளம்தொல்காப்பிய உரைவளம், பொருள்.

மாணிக்கவாசகர் காலமும் சமயமும்


அகத்தியர்கள் பற்றிய ஆய்வு நூல்


தமிழ் இலக்கண உணர்வுகள்பேராசிரியர் ஆ.சிவலிங்கனார் முகவரி:

பேராசிரியர் ஆ.சிவலிங்கனார் அவர்கள்
31,கங்கையம்மன் கோயில் தெரு,
கதிர்காமம்,புதுச்சேரி-605 009.

பேசி : 0413 -2273519

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை


அறிஞர் இரா.சாரங்கபாணியார்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம். இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும், கவிதை வாசிப்புகளும், நகைச்சுவையின் பெயரில் அடிக்கப்படும் கோமாளிக் கூத்துகளும் இன்று தமிழ் என்று ஆகிவிட்டது.

தொலைக்காட்சிகளின் நாடிப்பிடித்தும், அரசியல்வாதிகளின் அடிமனத்து விருப்பங்களை அறிந்தும் தங்கள் கலைச்சரக்குகளைக் கவிதை, பட்டிமன்ற, அரட்டைக் கச்சேரிகளின் வடிவில் காசாக்கிப் பலர் வயிறுவளர்க்கும் சூழலில் தமிழறிஞர் என்றால் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று இலக்கணவாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஒருவர். அவர்தான் அறிஞர் இரா.சாரங்கபாணியார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராக இருந்து பலநூறு மாணவர்கள் தரமான மாந்தர்களாகவும், தமிழறிஞர்களாகவும் மாற வழிவகுத்தவர் இரா.சாரங்கபாணியார். தமிழர்களின் மறையாகப் போற்றப்படும் திருக்குறள், சங்க இலக்கியங்களைப் பிழையறக் கற்று, அதன்வழி வாழ்ந்து வரும் இரா.சாரங்கபாணியார் தமிழ்இலக்கியங்கள் தவிர பிற உலகியல் ஒன்றும் அறியாதவர். பரிபாடல் என்னும் பிறரால் நுழைந்து ஆழம் காணமுடியாத சங்க இலக்கியப் பனுவலைத் தம் நுண்ணறிவால் ஆழமாகக் கற்றவர். அதில் மிகச்சிறந்த ஆய்வு நடத்தி நூலாக வெளியிட்டவர்.

திருக்குறளின் அத்தனைக் குறட்பாக்களின் வேர் மூலமும் அறிந்தவர் . திருக்குறளுக்குக் காலந்தோறும் எழுந்த உரைகளை நுட்பமாகக் கற்று அதன் வேறுபாடுகளை நா நுனியில் வைத்திருப்பவர்.தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட இரா.சாரங்கபாணியார் மாணிக்கனாரின் விருப்பப்படி பல ஆண்டுகள் காரைக்குடியில் அவருடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.உள்ளத்துள் தூய்மையுடையவராகப் புலால் மறுத்து, திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைய வாழ்ந்து வருபவர் இரா.சாரங்கபாணியார். இன்றும் இவர் வீட்டில் மாடு, கன்றுகளை வளர்த்து அதன் பயன் நுகரும் சிற்றூர் சார்ந்த எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அகவை 84 என்ற நிலையிலும் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆராய்ந்தும், தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறார். செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்காக இவர் திருக்குறள், பரிபாடல் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரின் திருக்குறள் உரை வேறுபாடுகள் நூலும்,பரிபாடல் திறன் நூலும் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படுவனவாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள மாரியப்பா நகரில் ஓய்வு பெற்ற பிறகும் இரா.சாரங்கபாணியார் முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் செ.வை.சண்முகம் ஆகியவர்களுடன் நாளும் உரையாடித் தமிழ் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர். புறங்கூறாமையை மேற்கொண்டு வாழ்ந்துவரும் இரா.சாரங்கபாணி அவர்கள் தம் பேராசிரியர் நண்பர்களுடன் தமிழ் ஆய்வுகள் பற்றியே உரையாடுவாராம். இவரின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.

இவர் மகன் அந்துவன் அவர்கள் இலண்டனில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணிபுரிபவர். தந்தையாரைப் போலவே எளிமையும், அடக்கமும் விரும்புபவர். பெயரர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரினர். 18.09.1925 இல் பிறந்தவர். பெற்றோர் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார். தேவங்குடி என்பது அமரர் கோபாலகிருட்டிணன் (மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்)உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த ஊர்.

அவ்வூரில் தோன்றிய இரா.சாரங்கபாணியார் அவ்வூரில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று புலவர் பட்டமும் (1947), பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர்.முதுகலை(1955),எம்.லிட்(1962), முனைவர் பட்டம் (1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்.

பி.ஓ.எல் வகுப்பில் இவருடன் பயின்றவர்கள் முனைவர் மு.கோவிந்தசாமி, முனைவர் ப.அருணாசலம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அறிஞர் சாரங்கபாணியார்க்கு ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்களுள் கா.சுப்பிரமணிய பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக் கல்வியை நிறைவுசெய்த பிறகு 1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பணியாற்ற தொடங்கினார்.விரிவுரையாளர் பணியேற்ற இவர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிஞர் வ.சுப.மாணிக்கனாருடன் பணிசெய்யும் வாய்ப்பு அமைந்ததை நன்றியுடன் நினைவு கூர்பவர்.இவருக்குத் திருக்குறளிலும்,பிற சங்க இலக்கியப் பனுவல்களிலும் மிகுந்த ஆர்வம் தோன்ற செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்களே காரணம் எனில் மிகையன்று. திருக்குறள் உரைவேற்றுமை உள்ளிட்ட நூல்கள் உருவாக அடித்தளம் அமைத்தவரும் அறிஞர் வ.சுப.மா அவர்களேயாவர்.

காரைக்குடி கல்லூரிப் பணியிலிருந்து தாமே ஓய்வு பெற்றுத் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்(1982-86 இல்) சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியில் இணைந்து தமிழ் இலக்கியத்துறையின் தலைவராக மிளிர்ந்தார். நான்காண்டு உழைப்பின் பயனாய்ச் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இரு தொகுதிகள்)வெளியிட்டார்.

1988-1994 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அறிஞர் சாரங்கபாணியார் காரைக்குடித் தமிழ்ச்சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து, சங்க இலக்கிய வகுப்புகள் நடத்திய பெருமைக்கு உரியவர்.

சிதம்பரம் தில்லைத் தமிழ்மன்றத்தில் கிழமைதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தி மூன்றாண்டுகளில் திருக்குறள் பாடத்தையும் புறநானூற்று வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திப் புறநானூற்றுப் பாடல்களை அனைவருக்கும் பரப்பியமையும் இவரின் தமிழ் இலக்கிய ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும். தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியவர். ஆய்வரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியவர்.

யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூற்குழுவின் தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்ககலைக் கழகத்திலும் இவர் எழுதிய இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன்,சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் நூல்கள் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

இவர் எழுதிய பரிபாடல் திறன்(1975),மாணிக்கச்செம்மல்(1999) நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டமும்(1981), சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழியும்(1991), தமிழ்நாட்டரசின் விருதும்(1998), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருதும் பெற்றவர்(2000).

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் திருமணம் 15.06.1949 இல் குமுடிமூலை என்னும் ஊரில் நடந்தது. தனலக்குமி அம்மையாரை மணந்துகொண்டார். இவர்தம் ஆசிரியப்பெருமக்கள் ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, க.வெள்ளை வாரணனார், கு.சீநிவாசனார், நண்பர் க.திருமாறன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் வாழ்வு வாழ்ந்துவரும் இவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடம் உண்டு.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்கள் தம் ஊரில் படிக்கும் மாணவர்களுள் பத்தாம் வகுப்பிலும், மேல்நிலை வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் உருவா ஆண்டுதோறும் பரிசில் நல்கி ஊக்கப்படுத்தி வருகின்றார்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் வழங்கிய நூற்கொடை

01.இயற்கை விருந்து(1962)
02.குறள் விருந்து(1968)
03.பரிபாடல் திறன்(1972)
04.A critical Study of Paripatal(1984)
05.A Critical Study of Ethical Literature in Tamil(1984)
06.சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
07.திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
08.திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
09.திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
10.திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
11.சங்கச் சான்றோர்கள்(1993)
12.வள்ளுவர் வகுத்த காமம்(1994)
13.புறநானூற்றுப் பிழிவு(1994)
14.மாணிக்கச் செம்மல்(1998)
15.திருக்குறள் இயல்புரை(1998)
16.சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
17.திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
18.சங்கத்தமிழ் வளம்(2003)
19.பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
20.சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
21.சங்க இலக்கியப்பிழிவு(2008)
22.திருக்குறள் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)
23.பரிபாடல் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)


மாணிக்கச் செம்மல்(வ.சுப.மாணிக்கம் வாழ்க்கை வரலாறு)


பரிபாடல் திறனாய்வு(ஆங்கிலமொழியில்)


பரிபாடல் கோவிலூர் ஆதீனப்பதிப்பு


திருக்குறள் உரைவேற்றுமை


திருக்குறள் உரைவேற்றுமை


சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்


திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்)திருக்குறள் உரையாசிரியர்கள்

அறிஞர் இரா.சாரங்கபாணியார் இல்ல முகவரி :

முனைவர் இரா.சாரங்கபாணியார்
குறள் இல்லம்,
330,மாரியப்பா நகர்,
அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 002
தொலைபேசி : 04144 - 238038

நனி நன்றி:
தமிழ் ஓசை - களஞ்சியம்,சென்னை,தமிழகம்.21.09.2008
முனைவர்.மூவேந்தன்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் தன.சசிகலா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க.பாரி,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர்.சே.கல்பனா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்


முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929)

 இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர். அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும் தமிழுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

 புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார். இவர்தம் பெற்றோர் பெயர் அ.இராசு, இரா.அரங்கநாயகி. திருமுருக னாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951), கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப் பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். 44 ஆண்டுகள் அரசு பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும், புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர். தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும், தமிழ்நலம் கெடும் இடங்களில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப் பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர். என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியுள்ளன. சிந்துப் பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப் பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும். இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர், இயலிசைச் செம்மல், முத்தமிழ்ச் சான்றோர், நல்லாசிரியர் (நடுவணரசு), மொழிப்போர் மறவர், சிந்திசைச் செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம், பாவேந்தர் பைந்தமிழ்க் காவலர் உள்ளிட்ட பட்டங்களும் விருதுகளும் குறிப்பிடத் தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்--7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003முனைவர் இரா.திருமுருகனார் முகவரி:

முனைவர் இரா.திருமுருகனார்
ஏழிசைச்சூழல்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி-605 001
பேசி : 0413- 2334391

சனி, 20 செப்டம்பர், 2008

படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு


படைப்புவேந்தர் தகடூரான் அவர்கள்

தருமபுரி பண்டைக்காலத்தில் தகடூர் என அழைக்கப்பெற்றது.அதியமான் ஒளவையார் வழியாகத் தமிழக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஊராக இவ்வூர் விளங்குகிறது.இத்தகடூர் பெயரை நினைவூட்டும் முகமாகத் தகடூரான் என்னும் புனைபெயரில் பல நூல்களை எழுதியவர் அறிஞர் கிருட்டிணன் அவர்கள் ஆவார்.இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொம்மிடியை அடுத்த புது ஒட்டுப்பட்டியில் பிறந்தவர்(09.05.1932).பெற்றோர் சின்னசாமிக் கவுண்டர். முனியம்மாள்.மூன்று மாதக் குழந்தையாக இருந்தபொழுதே தருமபுரி காமாட்சி யம்மன் தெருவிலுள்ள தாத்தா லிங்காக்கவுண்டர் இல்லத்தில் வளர்ந்தார்.

இளம் அகவையில் கல்வியில் நாட்டத்துடன் விளங்கியதுடன் பிற நூல்களை யும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.பாவேந்தர் பாடல்கள்,திராவிட இயக்க ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.மேட்டூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராக விளங்கினார்.

கிருட்டிணன் அவர்களின் துணைவியார் பெயர் சரசுவதி ஆகும்.சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டவர்.இவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்மகளும் உள்ளனர்.

தகடூரான் அவர்கள் பென்னாகரத்துக்கு அண்மையில் உள்ள கூத்தப்பாடி என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.பணியிலிருந்தபடியே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானார்.பள்ளிகளில் பணிபுரிந்தபொழுது பல நாடங்கங்களை இயற்றிப் படைப்பாளியாக மிளிர்ந்தார்.

தருமபுரியில் தங்கியிருந்தபொழுது படிக்கும் மாணவர்கள் கல்வியறிவுபெற படிப்பகம்,நாடக மன்றம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தினார்.தருமபுரியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை ஏற்படுத்தி 1977 இல் அதனைப் பதிவு செய்தார்.பதினேழு ஆண்டுகள் அதன் செயலாளராகப் பணிசெய்தார்.பல்வேறு தமிழ் நூல்களைத் தந்து, தமிழ்ச்சங்கம் கண்ட அறிஞர் தகடூரன் அவர்கள் குருதி அழுத்த நோய் காரணமாக 20.10.2002 இல் இயற்கை எய்தானார்.

தகடூரான் அவர்களின் தமிழ்க்கொடை

01.கம்பன் ஓர் ஒப்பீடு
02.கம்பன் உத்திகள்
03.பாவேந்தர் அமைதி
04.இருண்டவீடு ஓர் ஆய்வு
05.சமயம் கடந்த நெறி
06.மும்மதங்கள்
07.இந்துமதம்
08.வாழ்வின் திறவுகோல்
09.வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்
10.திருமணப் பரிசு
11.நம்பிக்கைப் பயணம்
12.பெரியார் பேசுகிறார்.
13.விடியல்
14.அந்த மனம் வருமா?
15.காட்டு வெளிதனிலே
16.பறவைகள் பலவிதம்
17.ஒரு மத்தாப்பு மலராகிறது
18.எரி அம்பு
19.தீப்பொறி
20.சம்பரன் போர்
21.இளையராணி
22.காத்தவராயன்
23.அனுராதபுரத்தழகி
24.ராயரின் காதலி
25.தகடூரான் சிறுகதைகள்
26.தொட்டிலி
27.பாரதம் தரும் பாடம்
28.இலக்கியம் படைக்க எளிய வழிகள்
29.மேடைப்பேச்சு
30.யானைத்தீவு
31.ஜப்பான் கதைகள்
32.விந்தை உலகம்
33.இந்தோனேசிய பர்மியக் கதைகள்
34.தகடூரான் பாலர் பாடல்கள்
35.தாகம் தீர்க்காத் தண்ணீர்
36.கவிதை மலர்கள்