நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் கண்காட்சி இன்று(30.12.2012) மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், மணி.மணிவண்ணன், ப.அர. நக்கீரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மு.இளங்கோவன் நன்றியுரை கூறினார்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்




முனைவர் மா.இராமநாதன் அவர்கள் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வுக்கட்டுரை மலர் வெளியிடுதலும் முனைவர் செ.வை.சண்முகம் அவர்கள் பெறுதலும்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(28.12.2012) காலை 10.15 மணிக்கு உலகத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசர் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி  மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 

மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணி. மணிவண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையாற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். மாநாட்டு மலரினைத் துணைவேந்தர் வெளியிட முனைவர் செ.வை.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

திரு.சிவாப்பிள்ளை(இலண்டன்), திரு.மணியம்(சிங்கப்பூர்), திரு.அனுராஜ் (இலங்கை),முனைவர் இல.இராமமூர்த்தி(மைசூர்), திரு.இளந்தமிழ் (மலேசியா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கவிழாவிற்குப் பிறகு உலகத் தமிழ் இணையமாநாட்டின் கண்காட்சியையும், மக்கள் அரங்கத்தையும் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் திறந்துவைத்தார். திரு.அ.இளங்கோவன், வள்ளி மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொது அமர்வில் அடோபி நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு மோகன் கோபால கிருட்டிணன் அவர்கள் மையக்கருத்துரை வழங்கினார்.  மக்கள் அரங்கில் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படித்தார். அதனைத் தொடர்ந்து துரை. மணிகண்டன், முனைவர் மு.பழனியப்பன், பேராசிரியர் சீதாலெட்சுமி, திரு. யோகராஜ் ஆகியோர் கட்டுரை வழங்கினர். ஆய்வரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். 

உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் உள்ளிட்ட அயல்நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி, மக்கள் அரங்கு, ஆய்வரங்கு நாளை(29.12.2012) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.  


துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றுதல்



உலகத் தமிழ் இணைய மாநாட்டு மேடையில் அறிஞர்கள்



மக்கள் அரங்கிற்கு வருகை தந்த துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்களுடன் மு.இளங்கோவன்,அ.இளங்கோவன், மா.கணேசன், துரை. மணிகண்டன்,  வள்ளி ஆனந்தன், ப.அர.நக்கீரன்




தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையுரை, மு.இளங்கோவன்(கட்டுரையாளர்)


பொறியாளர் வள்ளி ஆனந்தன் அவர்களுடன் மு.இளங்கோவன்

தமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…



தமிழ் இணையமாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று 28.12.2012 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மக்கள் அரங்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் தொடங்கிவைத்தார். முனைவர் நக்கீரன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். பிற்பகல் உணவுக்குப் பிறகு தமிழ் இணைய அறிமுகம், வலைப்பூ உருவாக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டுரைகள் படிக்கப்பட உள்ளன.

வியாழன், 27 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு, மக்கள் அரங்கம் நிகழ்வுகள்



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையமாநாடு 2012, டிசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் மக்கள் அரங்கம் என்ற அரங்கில் தமிழகத்தின் முன்னணித் தமிழ் இணைய வல்லுநர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையத்தை மக்களிடம் அறிமுகம் செய்ய உள்ளனர்.


சிதம்பரம், கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கும்பகோணம், செயங்கொண்டம், அரியலூர் சார்ந்த பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மக்கள் அரங்கில் கலந்துகொள்ள எந்தவிதக் கட்டணமும் இல்லை.

மக்கள் அரங்கத்தில் தமிழ்த்தட்டச்சுப் பயிற்றுவிக்கப்படும். அதுபோல் மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவது, மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூ(பிளாக்) உருவாக்குவது. பதிவிடுவது பயிற்றுவிக்கப்படும். மேலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்குத் தொடங்கி எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பயிற்சியளிக்கப்படும். ஸ்கைப் என்ற தளத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுடன் எவ்வாறு பேசுவது என்றும் பயிற்றுவிக்கப்படும்.

பள்ளி, கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும், மின் நூலகங்கள், மின் நூல்கள் அறிமுகம் செய்யப்படும். மழலைக்கல்வி குறித்த இணைய தளங்களும் அறிமுகம் செய்யப்படும். ஆய்வு மாணவர்கள் எவ்வாறு இணைய தளங்களைப் பயன்படுத்தித் தங்கள் ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யலாம் என்றும் விளக்கப்படும். 

மின்பலகை(டேப்லட்), இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சிகள், மின் இதழ்கள், மின் புத்தகங்கள் தயாரிப்பது பற்றியும் இணையத்துறை வல்லுநர்கள் பயிற்சி வழங்குவார்கள். விக்கிப்பீடியா தளத்தைப் பயன்படுத்துவது, எவ்வாறு பங்களிப்பது என்றும் காட்சிவிளக்கம் தரப்படும்.

மக்கள் அரங்கத்தின் தலைவராக முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி) இருந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளார். முனைவர் துரை.மணிகண்டன், ஒரிசா பாலு, செல்வமுரளி, தகவல் உழவன் உள்ளிட்ட முன்னணி இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.

செல்பேசிகளில் தமிழ்ப்பயன்பாடு, குறுஞ்செய்திகள் வழியாக நடத்தப்படும் இதழ்கள், தமிழ் மென்பொருள்கள், தேடுபொறிகள், வலைப்பூ வளர்ச்சி, இணைய விளம்பரங்கள் பற்றிய 25 ஆய்வுக்கட்டுரைகள் மக்கள் அரங்கில் படிக்கப்பட உள்ளன.

புதன், 26 டிசம்பர், 2012

குவைத் உலா… 1




 குவைத் நாட்டுக் கடற்கரையில் மு.இளங்கோவன்

குவைத் நாட்டுக்கு வந்து தமிழுரை வழங்கும்படி நண்பர் தமிழ்நாடன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே விருப்பம் தெரிவித்திருந்தார். நண்பர் தமிழ்நாடன் அவர்கள் குவைத்தில் வாழும் பொறியாளர். குணவாசல் ஊரினர். மற்றவர்களுக்கு உதவும் இயல்பும், தமிழ்ப்பற்றும், கடும் உழைப்பும் கொண்டவர். மற்றவர்களை இணைத்துத் தமிழ்ப் பணியாற்றுவதில் அனைவராலும் போற்றப்படுபவர். இணையம் வழியாகவே எங்கள் தொடர்பு அமைந்தது.

எங்களுக்குள் நட்பு கனிந்து, ஓரிரு சந்திப்பும் தமிழகத்தில் அமைந்தது. என் நூல் எழுதும் முயற்சியைப் பலவகையில் ஊக்கப்படுத்தியவர். ஒருமுறை திருக்குறள் நூல் வழங்கும் நிகழ்வைக் கடலூரில் நிகழ்த்தி முடித்தோம். அந்த நிகழ்வுக்காகப் பொறியாளர் சேதுமாதவன் அவர்கள் குவைத்திலிருந்து வந்திருந்தார். அப்பொழுது இணைந்து பணிபுரிந்தோம். அதன் தொடர்ச்சியாகத் தமிழர் பண்பாட்டு விழா குவைத்தில் நடைபெறுவதாகவும் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து உரையாற்ற வரும்படியும் பொங்குதமிழ் மன்றம், தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் அழைப்பு விடுத்திருந்தனர்.

குவைத் நாடு பற்றி நண்பர்கள் வழியாக முன்பு அறிந்திருந்தேன். பாலைநிலம் எனவும், கன்னெய்(பெட்ரோல்) வளம் கொண்டதாகவும், தமிழர்கள் பல நிலைகளில் பணிபுரிவதாகவும் அறிந்திருந்தேன். தமிழமைப்புகள் பல உள்ளன எனவும் அவரவர்களும் தங்களுக்கு வாய்ப்பான நிலைகளில் தமிழ்ப்பணிகளைச் செய்கின்றனர் எனவும் அறிந்திருந்தேன். குவைத் செலவு(பயணம்) உறுதியானதும், வானூர்தி புறப்பாடு பற்றியும், அந்நாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிந்துகொண்டு புறப்பட்டேன். திட்டமிட்டபடி என் செலவு சிறப்பாக இருந்தது. இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியும் சிறப்பாக இருந்தது. இவை பற்றி முன்பும் பதிந்துள்ளேன். இரு நாள் நிகழ்வுகளும் முடிந்த பிறகு இரண்டுநாள் எனக்கு வானூர்திக்குக் காத்திருக்க வேண்டியநிலை இருந்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் குவைத் நகரத்தைச் சுற்றிப்பார்க்க நண்பர்கள் ஏற்பாடு செய்தனர்.

17.12.2012 காலை பொறியாளர் திரு.இராமன் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு மகிழ்வுந்து நான் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்தது. ஓட்டுநர் பெயர் திரு. ரெட்டி. சற்று நேரத்தில் தம்பி பிலவேந்திரன் அவர்களும் வழித்துணைக்கு வந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு, காலையுணவுக்குச் சரவணபவன் உணவகம் சென்றோம். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காலை 10 மணியளவில் மகிழ்வுந்து புறப்பட்டு, குவைத் நகரத்தின் தூய சாலையில் விரைந்து சென்றது. சாலையின் வனப்பையும், நெடுமையையும் கண்டு வியந்தேன். போக்கு வரவு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்து வண்டியை இயக்குகின்றனர். எங்கும் மகிழ்வுந்துகள்தான் சீறிச்செல்கின்றன. நம்மூர் போல இருசக்கர சாகசக்காரர்களைக் காணமுடியவில்லை(ஓரிரு குவைத்திய இளைஞர்கள் கப்பல் போன்ற இரு சக்கர வாகனங்களை அலற விட்டு ஓட்டுவதை நகரப் பகுதிகளில் பார்த்தேன். அவர்கள் அந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்ற மமதையில் செல்வதைக் கூர்ந்து உணர்ந்தேன்). அதுபோல் மிதிவண்டிகளும் அங்குக் கண்ணில் தென்படவில்லை.

குவைத் நகரத்திற்கு முன்பாக உள்ள சால்மியா கடற்கரையை நாங்கள் சுற்றிப் பார்க்க வண்டியை நிறுத்தினோம். அங்கு இருந்த பழைய கப்பல் காட்சியைக் கண்டு வியந்தேன். அதனைப் பார்த்தபொழுது கடலாய்வாளர் ஒரிசா பாலுதான் நினைவுக்கு வந்தார். கடற்கரையில் எங்களைப் போல் சுற்றுலாக்காரர்கள் மிகுதியாக வந்திருந்தனர். தம்பி பிலவேந்திரன் பல கோணங்களில் படம் எடுத்தார். ஓட்டுநர் ரெட்டி அவர்களும் சில படங்களை எடுத்து உதவினார். அடுத்துக் குவைத் அறிவியல் நடுவத்திற்குள்(The Scientific Center, Kuwait) சென்று அங்கிருந்த வானியல் காட்சிப்பொருள்களைக் கண்டோம். பிறகு குவைத் மீன்காட்சியகத்தையும் கண்டோம்(Kuwait Aquarium).

மீன் காட்சியகம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சார்ள்சுடன் மீன் காட்சியகம், சிங்கப்பூர் மீன் காட்சியகம் முன்பே கண்டவன் ஆதலின் அவ்விரு காட்சியகங்களிலிருந்து இது வேறுபட்டு இருந்தது. அழகிய மீன் இனங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மீன்நிறைந்த நீர்நிலைகளை உரிய உடையணிந்து தூய்மை செய்யும் பணியாளர்களின் செயல் பாராட்டிற்குரிய ஒன்றாகும். பாலைவன உயிரிகளும் இடையில் சிறப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுறா மீன்கள், திமிங்கிலம், எல்லாம் அழகுக்கு அழகு சேர்த்தன. குவைத்தியர்கள் மீன்படி தொழிலில் முன்பு சிறந்து விளங்கியவர்கள் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். சிறுவர்கள், மாணவர்களுடன் பலர் காட்சியகத்தைப் பார்வையிட வந்திருந்தனர். பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்ததைக் கண்டேன். சற்றொப்ப இரண்டு மணி நேரம் இனிமையான அந்தக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

அடுத்த நாங்கள் அங்குள்ள மெரினா கடற்கரைக்குச் சென்றோம். கப்பல் வடிவில் இருந்த உணவகத்தில் பலர் உண்டு திரும்பினர். கடற்கரை எழிலுடன் காட்சி தருகின்றது. எங்கும் தூய்மைதான். நம் திருச்செந்தூர் கடற்கரைபோல் அங்குக் கழிவுகளைக் காணமுடியவில்லை. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர். அங்கிருந்து பார்க்கும்பொழுது குவைத் நகரக் கட்டடங்கள் வனப்போடு காட்சி தருகின்றன. கடற்கரையில் காலார நடந்தோம். சற்று அமர்ந்து பேசினோம்.

எங்கள் நண்பர் திரு.கருணாகரன்(புதுச்சேரி ஊரினர்) அவர்கள் பகலுணவுக்கு அழைத்திருந்தார். அவர் எங்களுக்காகக் காத்திருப்பதை அறிந்தோம். எனவே எங்கள் வண்டி குவைத் நகரத்தின் புகழ்பெற்ற உணவகமான மொகல் மகால்(Mughal Mahal) நோக்கிப் பறந்தது.



கப்பல் ( மாதிரிகள்)


வண்ண விளக்குகளில் ஒளிரும் மீன்கள்


மீன்காட்சியகம்(குவைத்)


குவைத் நகரத்தின் தூரக் காட்சி


கப்பல் வடிவ உணவகம்(குவைத்)


குவைத் மீன்காட்சியகம்


மீன்காட்சியகத்தில் மு.இ.


காட்சிக்குரிய கப்பல் அருகில் மு.இ.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு





அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 2012, திசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள் நடைபெற உள்ளது. ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் மாநாட்டு நிகழ்வுகள் இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மா. இராமநாதன் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார்கள். பன்னாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கவும் ஆய்வுரை வழங்கவும் உள்ளனர். திரு.மோகன் கோபாலகிருட்டினன் அவர்கள் மையக் கருத்துரை வழங்கவும், உத்தமம் அமைப்பின் தலைவர் திரு.மணி.மணிவண்ணன் அவர்கள் தலைமையுரை வழங்கவும் உள்ளனர். பேராசிரியர் கணேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை வழங்க உள்ளார்.

நிறைவு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தலைமையுரையாற்றவும், முனைவர் பொன்னவைக்கோ(துணைவேந்தர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்) அவர்கள் நிறைவுரையாற்றவும் உள்ளனர். பேராசிரியர் அரங்க.பாரி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்ற உள்ளார். பேராசிரியர் மா. கணேசன், வள்ளி. ஆனந்தன்(கணித்தமிழ்ச்சங்கம்), முனைவர் கா.மு.சேகர், முனைவர் க. பசும்பொன், முனைவர் ந.நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.



மாநாட்டு விவரங்கள் அறிய கீழ்வரும் இணைப்பு உதவும்:

மாநாட்டில் படிக்கப்பெற உள்ள கட்டுரைகள் குறித்த விவரத்திற்குக் கீழ்வரும் இணைப்பு உதவும்:

வெள்ளி, 21 டிசம்பர், 2012

இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 - நூல் வெளியீட்டு நிகழ்வு





புதுவை சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு வ.சபாபதி அவர்கள் நூலை வெளியிடப் புலவர் சீனு.இராமச்சந்திரன் பெற்றுக்கொள்ளுதல்



இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 (INDIAN STEAMSHIP VENTURES , 1836-1910) என்னும் ஆங்கில  நூலின் வெளியீட்டு நிகழ்வு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்தில் இன்று(21.12.2012) முற்பகல் 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

பிரெஞ்சு நாட்டு வரலாற்றுப் பேராசிரியர் மொரே (J.B.P.MORE) அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 என்ற ஆங்கில நூலினைப் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு  வ.சபாபதி (எ) கோதண்டராமன் அவர்கள் வெளியிடப் புதுவைப் புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள் முதற்படியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முனைவர் மு.இளங்கோவன், திரு. வீரமதுரகவி, திரு.குலசேகரன், கலைமாமணி வேலவதாசன் ஆகியோர் நூலின் படிகளை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள்,1836-1910என்ற நூலில் புதுச்சேரியைச் சேர்ந்த தருமநாதன் புருஷாந்தி அவர்கள் கப்பல் ஓட்டிய வரலாறு விளக்கப்பட்டுள்ளது. வங்காளத்தைச் சேர்ந்த  துவார்கநாத் தாகூர் அவர்கள் இந்திய நீராவிக் கப்பல் துறையில் முதலில் ஈடுபட்டவர் என்று இந்த நூல் விளக்குகின்றது.

புச்சேரியைச் சேர்ந்த தருமநாதன் புருஷாந்தி பிரெஞ்சு இந்தோ சீனாவில்(வியட்நாம் - சைக்கோனில்) நீராவிக் கப்பலை 1891 இல் இயக்கினார் என்ற குறிப்பு கப்பல் வரலாற்றில் குறிக்கத்தக்க ஒன்றாகும். கம்போடியாவிலிருந்து கொச்சின் சைனா(தெற்கு வியட்நாம்) வரை ஓடிய மெக்காங்(Mekong) ஆற்றில்  அலெக்சாண்டர், புருஷாந்தி என்னும் பெயரில் இரண்டு கப்பல்களை 1891 இல்  தருமநாதன் புருஷாந்தி இயக்கியமை வரலாற்றில் பதியப்படவேண்டிய  செய்தியாகும்.

  1895 இல் கடல் வழியாகப் பயணிகள் கப்பல் இயக்குவதற்கு அனுமதி வேண்டினார் எனவும் இந்தியர் - தமிழர் கப்பல் இயக்குவதுற்கு விதி இல்லை என்ற காரணத்தால் பிரெஞ்சு அரசால் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் விவரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன(பக்கம் 44 முதல் 49 வரை).

கடல் வழியாகப் பயணிகள் கப்பல் சைக்கோனிலிருந்து பேங்காக் வரை செலுத்தியவர் தருமநாதன் புருஷாந்தி அவர்களே என்று இந்த நூலில் நூலாசிரியர் பதிவுசெய்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நீராவிக் கப்பல் விடுவதற்கு முயற்சி செய்தவர்கள் சி.வா. கம்பெனியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் வ.உ.சி. தூத்துக்குடியில் இந்திய சுதேசி கம்பெனியைத் தொடங்கினார். இந்த நிறுவனம்தான் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கப்பல் விட்டது. உலகில் நடைபெற்ற கப்பல் இயக்கும் முயற்சிகளும், இந்தியாவில் நடைபெற்ற கப்பல் இயக்கும் முயற்சிகளும் இந்த நூலில் பதிவாகியுள்ளன.


முனைவர் மு.இளங்கோவன் நூலின் படியை மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல்

                இந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)





லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy)


லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் “பிரவே” வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர்.

பெரும் செல்வ வளம் பெற்றிருந்த லெயோன் புருஷாந்தி அவர்கள் சைக்கோனில்(வியட்நாம்) வாழ்ந்த தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். 1939 இல் சைக்கோனில் நடைபெற்ற தமிழர் மாநாடு வெற்றியாக நடைபெறுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர். அந்த மாநாட்டில் தமிழருக்கு ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறிவரும் என்று இவர் பேசிய பேச்சு சைக்கோனில் தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளது. தமிழர்கள் அனைவரும் உடையில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுத், தமிழர்கள் வேட்டி, கைலி அணிவதை நிறுத்தி, பேண்டு, சட்டை அணிய வலியுறுத்தினார். அதுபோல் குடுமி நீக்கி, கிராப் வெட்ட வேண்டும் என்றார். 1930 ஆம் ஆண்டளவில் உடைச்சீர்திருத்தத்தை வலியுறுத்தி, மகாத்மா காந்தியடிகளுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் மடல் விடுத்துள்ளார்.

1939 ஆம் ஆண்டளவில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. பிரான்சு நாட்டைச் செர்மானியப் படைகள் கைப்பற்றின. செர்மானியரின் சொற்படி பிரெஞ்சு தேசம் ஆளப்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தோ சீனத்தில் சப்பானியரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பிரெஞ்சு ஆதிக்கம் வீழ்ந்தாலும்  சைக்கோனில் உள்ள  புதுச்சேரித் தமிழர்கள் சப்பானியருக்கு ஒத்துழைப்புத் தரத் தயங்கினர். நேதாஜி அவர்கள் சப்பானியரின் துணையுடன் இந்திய விடுதலை பெற்றுத் தருவார் என்று நம்பிய லெயோன் புருஷாந்தி அவர்கள் நேதாஜியின் படைக்குப் பலவகையில் ஆதரவு திரட்டினார். நேதாஜி அவர்கள் சைக்கோன் தெருக்களில்  காரில் ஊர்வலமாக வந்தபொழுது காசு மாலைகளை அணிவித்துப் பெருமை செய்தார்.

நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் அலுவலகத்திற்குச் சைக்கோனில் தாம் வாழ்ந்த வளமனையை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்து உதவினார். சைக்கோனில் Rue Paul Blanchy தெருவில் உள்ள 76 ஆம் எண்ணுள்ள வீட்டில்தான் இந்திய தேசிய இராணுவத்தின் அலுவலகம் செயல்பட்டுள்ளது. படைக்கு ஆள் சேர்ப்பது, இரகசியக் கூட்டங்கள் நடத்துவது இவர் வீட்டில்தான் நடந்துள்ளது. இங்கு இந்துத்தானி மொழியும் இந்தியர்களுக்கு தமிழர்களுக்கு) கற்பிக்கப்பட்டது. இதற்கான சான்றுகள் சைக்கோனிலிருந்து வெளியான ஆசாத் ஹிந்த்(Azad Hind)(சூலை 1945) இதழில் உள்ளன.

அமெரிக்காவின் அணுக்குண்டு தாக்குதலுக்குப் பிறகு சப்பான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இதனால் பிரெஞ்சுப் படையினர் சைக்கோன் வந்திறங்கினர். பிரெஞ்சுநாட்டுக்கு எதிராக லெயோன் புருஷாந்தி செயல்பட்டார் என்று இராசதுரோகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மூன்றுமாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். மூன்றுமாதம் கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு மனநிலை பாதிக்கப்பட்டு லெயோன் புருஷாந்தி மனநோயாளியாக வெளிவந்தார். சிறைதண்டனைக்குப் பிறகு பழைய நினைவுகள் எதுவும் இல்லாமல் இருந்தார். தம் செல்வநிலை, நிலபுலங்கள் பற்றிய எந்த நினைவும் இல்லாதபடி இருந்தார். அந்த அளவு சிறையில் மின்சாரம் பாய்ச்சப்பெற்றுச் சித்திரவதைக்கு ஆளானார்.

சைக்கோனில் இருந்த Dr. Le Villain என்ற ஆங்கில மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டார். ஆனால் மருத்துவம் பயனளிக்கவில்லை. இந்தோ சீனத்தில் இருந்த சொத்துகள் எதனையும் விற்பனை செய்யாமல் லெயோன் புருஷாந்தி குடும்பத்தினர் 1946 ஆம் ஆண்டில் புதுச்சேரி வந்துவிட்டனர். இவர்தம் வீடுகளும், சொத்துகளும் வியட்நாமியர் வாழும் இடமாக மாறிப்போனது. சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லெயோன் புருஷாந்தி அவர்கள் ஓரளவு நலம் பெற்றாலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். லெயோன் புருஷாந்தி அவர்கள் தம் 65 ஆம் அகவையில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.

குதிரையேற்ற வீரராகவும், இந்திய விடுதலைக்கு உழைத்தவராகவும், தம் பொருள் செல்வங்களை வழங்கியவராகவும் விளங்கிய லெயோன் புருஷாந்தி அவர்களின் வாழ்வு முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் 1940 முதல் 1945 வரை இந்தோ சீனத்தில் நடைபெற்ற நேதாஜி அவர்களின் செயல்பாடுகளும் எழுதிப் பாதுகாக்கப்பட வேண்டும்.





புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்- வேறொரு தோற்றம்)


புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்-வேறொரு தோற்றம்)


புருஷாந்தியின் 76 ஆம் எண் பொறிக்கப்பட்டுள்ள சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)


புருஷாந்தியின் பராமரிப்பு இல்லாத சைக்கோன் வீடு(நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)



தேநீர்க்கடையாக மாறிப்போன இன்றைய வீட்டு நிலை(சைக்கோன்-நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம்)




புருஷாந்தியின் சைக்கோன் வீட்டில் உள்ள சிங்கச் சிற்பம்(புதுவையிலும் இது போல் உள்ளது)



ஆசாத் ஹிந்து இதழில் சைக்கோன் இந்தியத் தேசிய இராணுவ அலுவலகம் குறித்த குறிப்பு

புதன், 19 டிசம்பர், 2012

புதுவைப் புத்தகக் கண்காட்சி இனிதே தொடங்கியது...





 புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்தல்.

புதுவையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இன்று(19.12.2012) மாலை தொடங்கியது. புதுச்சேரி வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்கள். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியதுடன்,  பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார். 

புதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. இராசவேலு அவர்களும். கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதுசேரிப் புத்தகச் சங்கத்திற்குச் சிறப்பான தொண்டு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கோ.முருகன் அனைவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கினார்.

 புத்தகச் சங்கத்தின் தலைவர் எம்.கே. சாயிகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் புத்தகச் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள், புலவர் நாகி அவர்கள், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து அவர்கள், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் அரங்க. முருகையன் ஆகியோர் உரையாற்றினர்.

புத்தகக் கண்காட்சி  19-12.2012 முதல் 30.12.2012 வரை நடைபெற உள்ளது. காலையில் 11.30 முதல் இரவு 8.45 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும். இக்கண்காட்சியில் 104 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 


முதலமைச்சர் அவர்கள் கண்காட்சியைப் பார்வையிடல். அருகில் அமைச்சர்கள்.




மேடையில் அறிஞர்கள்


முனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் முதல்வர் அவர்களிடம் விருது பெறல்



தியாகி மசீத் அவர்கள் முதல்வர் அவர்களிடம் பரிசு பெறல்



புதுவை முதல்வர் அவர்களின் அருகில் எம்.கே.சாயிகுமாரி அம்மா, வி.முத்து, மு.இளங்கோவன்



அமைச்சர் பி.இராசவேலு, புலவர் சீனு.இராமச்சந்திரன், மு.இ.





மு.இளங்கோவன் உரை

செவ்வாய், 18 டிசம்பர், 2012

விடுதலை நாளிதழில் குவைத் கண்காட்சி பற்றிய செய்தி…



 விடுதலை(17.12.2012)


குவைத்தில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி உலக அளவில் பலருக்கும் முன்மாதிரியான கண்காட்சியாக அமைந்தது. அமெரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்காட்சிப்பொருட்கள் தேவை என்று தமிழார்வலர்கள் பலர் உடனடியாக கண்காட்சி அமைப்பாளர்களுக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். 

மேலும் பல நாடுகளிலிருந்து இந்தக் கண்காட்சி குறித்த செய்திகள் பல மாதங்களாக இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் வெளிவந்த வண்ணம் இருந்தன. குவைத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சி பற்றி விடுதலை நாளிதழில் முதல் பக்கத்தில்(17.12.2012) படத்துடன் செய்தி வெளியானது. செய்தியை வெளியிட்டு உதவிய விடுதலை ஆசிரியர் திரு. கி. வீரமணி ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.




திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...





பொங்குதமிழ் மன்றத்தார் வழங்கும் நினைவுப்பரிசில்( இராமன், தமிழ்நாடன், இலட்சுமிநாராயணன், மு.இளங்கோவன், முத்து, சேதுராமன்)

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன். அன்றைய நாள் முழுவதும் எழுதுவதும், படிப்பதும், ஓய்வுமாகப் பொழுது கழிந்தது(13.12.2012). மாலையில் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்கள் உணவுடன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார். உண்டபடியே இருவரும் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடினோம். மறுநாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு நண்பர் கிருட்டிணமூர்த்தி விடைபெற்றுக்கொண்டார். காலையில் கண்காட்சி தொடக்கம் என்பதால் இரவில் நன்கு ஓய்வெடுத்தேன்.

14.12.2012 காலையில் ஒரு மகிழ்வுந்தில் கண்காட்சிக் கூடத்திற்குச் சென்றோம். குவைத் வாழும் பொறியாளர்களும், தமிழ் நண்பர்களும் அன்புடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். கண்காட்சி தொடக்கவிழா காலை 10 மணியளவில் அமைந்தது, பொறியாளர் திரு. இராமராஜ் அவர்கள் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்கள்.

கண்காட்சியின் தொடக்கவிழாவில் பொறியாளர்  திரு.செந்தமிழ் அரசு அவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழகத்தில் பொதிகைத் தொலைக்காட்சியில் எங்கள் உள்ளம் இனிக்கும்படி செய்திபடித்த அதே செந்தமிழ் அரசு அவர்களை இருபதாண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். தோற்றம் மாற்றம்கொண்டு விளங்கினார். அதே இனிமை ததும்பும் தமிழ் ஒலிப்பைக் கேட்டு வியந்தேன். செந்தமிழ் அரசு பொறியாளர் என்று அறிந்ததும் இன்னும் வியப்பு இருமடங்கானது.

பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்களின் தந்தையார் இராமநாதன் செட்டியார் அவர்கள் சென்னைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் எனவும் பரிபாடல் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியவர் எனவும் அறிந்தபொழுது ஐயா செந்தமிழ் அரசு அவர்களைச் சந்தித்ததைப் பெருமையாகக் கருதினேன். உடன் பேராசிரியர் இராமநாதன் செட்டியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைத் தந்து உதவும்படி கேட்டேன். இசைவு தந்தார்.

கண்காட்சியைத் திறந்துவைத்த பிறகு மேலோட்டமாக ஒரு பார்வையிட்டேன். தமிழ்நாட்டையே இறக்குமதி செய்தமைபோல் பல்வேறு அரங்குகள் விளங்கின. தஞ்சைக் கோயில், கங்கைகொண்டசோழபுரம், மாமல்லபுரம், இராமேசுவரம், என்று தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் யாவும் படத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தேர், வண்டி, முக்காலி, உலக்கை, உரல், அம்மிக்குழவி, ஆட்டுக்கல் என்று நம் மரபை நினைவூட்டும் பொருட்களைப் பார்த்து மகிழ்ந்தேன். பனைப்பொருட்கள், கோரைப்பொருட்கள் காட்சிக்கு இருந்தன. உணவுப்பொருள்கள், கறிகாய், மலர், மூலிகைப்பொருட்கள், புத்தக அரங்கு என்று அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் பலவகைப் பொருட்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. பார்வையிடவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வந்திருந்த பொறியாளர்கள், பல்வேறு நிலைகளில் பணிபுரியும் தோழர்களைக் கண்டு உரையாடி மகிழ்ந்தேன்.

காலை 11 மணிக்கு மேல் மேடை நிகழ்வுங்கள் தொடங்கின. பொங்குதமிழ் மன்றத்தின் தோழர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுக் கண்காட்சியின் நோக்கம் பற்றி உரையாற்றினர். உள்ளூர்ப் பேச்சாளர்கள் பலரும் பலவகைப் பொருளில் பேசினர். நான் தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் குறித்து இரண்டு பிரிவாக இரண்டுமணிநேரம் உரை நிகழ்த்தினேன். தமிழக நாட்டுப்புறப்பாடல்களின் தொன்மையை எடுத்துரைத்து நடவுப்பாடல்கள். கும்மிப்பாடல்கள், கோலாட்டப் பாடல்களை நினைவூட்டினேன். அரங்கில் இருந்தவர்கள் அமைதியாக என் உரையைச் செவி மடுத்தனர். பகலுணவு முடிந்தது.

மீண்டும் மாலையில்  குவைத் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேசினர். சிறுவர்களும் பெரியவர்களும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கண்காட்சிக்கு மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இரவு நண்பர்களிடம் விடைபெற்று, நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களின் மகிழ்வுந்தில் அறைக்குத் திரும்பினேன்.

15.12.2012 காலையில் பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் காலைச்சிற்றுண்டிக்கு அழைப்பு விடுத்தார். நானும் பொறியாளர் இராமன்(திருத்துறைப்பூண்டி) அவர்களும் புறப்பட்டோம். திரு.செந்தமிழ் அரசு அவர்களும் எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார். எங்கள் வண்டிகள் குவைத்தில் புகழுடன் விளங்கும் சரவணபவன் உணவகத்தில் நின்றன. சரவணபவன் உணவகத்தின் அமைப்பைக் கண்டு வியந்தேன். தூய்மைக்கும் சுவைக்குப் பெயர்பெற்ற அந்த நிறுவனம் மேலும் தன் தரத்தைப் பறைசாற்றிகொண்டு அழகிய கடற்கரை ஓரம் நிற்கின்றது. காலைச்சிற்றுண்டியைச் சுவைத்து உண்டோம். தமிழக உணவான இட்டிலி, துவையல், குளம்பியுடன் காலை உணவு முடிந்தது. பொறியாளர் செந்தமிழ் அரசு அவர்கள் அந்தக் கடையின் தொடர் வாடிக்கையாளர் என்பதால் கடை ஊழியர்கள் எங்களை மதிப்புடன் நடத்தினர். கடையின் சிறப்பினை அரசு அவர்கள் எடுத்துரைத்தார்.

உணவுக்குப் பிறகு நாங்கள் கண்காட்சி அரங்கிற்குச் சென்றோம். பகல் முழுவதும் நண்பர்களுடன் உரையாடுவதில் பொழுது கழிந்தது. அங்கு வந்திருந்த ஒளிப்படக் கலைஞர்கள் என்னைப் பல கோணங்களில் படம் எடுத்து வழங்கினர். கேரளாவிலிருந்து இவர்கள் குவைத்துக்குத் தொழில் நிமித்தம் வந்தவர்கள். இவர்களின் கடமையுணர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் கண்டு அனைவரும் பாராட்டினோம். மாலையில் அவர்களுக்கு ஒரு நினைவுப்பரிசில் கொடுத்துப் பாராட்டியதில் அவர்கள் மிக மகிழ்ந்தார்கள்.

மாலையில் நிறைவு விழா தொடங்கியது. செந்தமிழ் அரசு அவர்கள் தமிழர் பண்பாடு குறித்து உரையாற்றினார். நான் நிறைவுரையாகச் சிலர் கருத்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்தேன்.

நிறைவாகத் தோழர் தமிழ்நாடன் அவர்கள் நன்றியுரை என்ற அமைப்பில் கண்காட்சி தொடக்கம் முதல் நிறைவு வரை சந்தித்த இடர்களை எடுத்துரைத்து, உதவியர்கள் அனைவருக்கும் முறையாக நன்றி தெரிவித்தார். எனக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். இரண்டு மரப்பாச்சி சிலைகளையும் வழங்கினார்கள்.

மரப்பாச்சி மரம் என்று நினைக்காமல் அதனை உயிர் உள்ள குழந்தையாக நினைத்துப்போற்றும் நம் மரபைத் தமிழ்நாடன் நினைவுகூர்ந்து பரிசிலாகக் கொடுத்தமை எனக்கு மகிழ்ச்சி தந்தது. இரண்டு மரப்பாச்சிகளையும் பாதுகாப்பாகத் தமிழகத்திற்குக் கொண்டுசெல்வேன். அதுபோல் தமிழகத்திலிருந்து ஒளிப்படங்கள் எடுத்து வழங்கிய புதுவை முருகன், ஓவியர் அன்பழகன், திருமுதுகுன்றம் முனைவர் இரத்தின.புகழேந்தி, ஆசிரியர் சான்போசுகோ உள்ளிட்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கினர். அனைவரிடமும் விடைபெற்றுகொண்டு நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி அவர்களுடனும் பட்டுக்கோட்டை சத்தியா அவர்களுடனும் இரண்டாம் நாள் இரவு அறைக்குத் திரும்பினேன்.





கண்காட்சியைத் திறந்து வைத்தல்



செந்தமிழ் அரசு அவர்களுடன் மு.இ



நினைவுப்பொருள் வழங்குதல்



குழந்தைகளின் ஆடல்



வருங்கால மாதவிகள்



இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல




சிற்பம் குறித்த செய்திகளை விளக்கும் அரங்கம்


இசைக்கருவிகள் குறித்த அரங்கு



தேர்வுக்குப் படித்தவர்கள்



தமிழக உணவு வகைகளைப் பதம் பார்க்கும் பார்வையாளர்கள்



கைவினைப் பொருட்களை நோட்டமிடும் பெண்கள்