தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள வளனார் நகரில் 15.01.2022 மாலை 5 மணிக்குத் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரந்தைத் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர், பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் தலைமை தாங்கி, திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்து, அரியதோர் சிறப்புரை வழங்கினார். திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு மாதமாகத் திருக்குறள் முற்றோதலில் ஈடுபட்ட 40 குழந்தைகளின் குடும்பங்களுக்குத் திருவள்ளுவர் சிலை பரிசளிக்கப்பட்டது. 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த 10 குழந்தைகளுக்குத் திருக்குறள் திலகம் விருதும் உருவா 1300 பணப்பரிசும், திருக்குறள் எழுதுவதற்கு ஆறு குழந்தைகளுக்குத் திருக்குப் பலகையும் வழங்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுபெற்றோர்க்குப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பரிசளித்துப் பாராட்டினார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பதிவாளர் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், நா.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் இரா. கலியபெருமாள், மணற்பாறைப் புலவர் நாவை. சிவம், அரு உலகநாதன், பழ. மாறவர்மன், இராம. கோவிந்தன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தஞ்சையில் வாழும் திரு. அ. கோபிசிங் அவர்களும், பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் உறவினர் திரு சி. சிவபுண்ணியம் அவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பேராசிரியர் இலலிதா சுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
புலவர்
மா. கந்தசாமி அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த
நிகழ்வு நடைபெற்றது.