நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 27 மே, 2016

நாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் குறித்த மதிப்பீடுஇளையதம்பி தங்கராசா


  ஈழத்துப்பூராடனார் என்னும் முதுபெரும் தமிழறிஞர் வழியாக ஈழத்து இலக்கிய அறிமுகமும் இலக்கிய அறிஞர்களுடனான தொடர்பும்  எனக்குக்  கிடைக்கலாயிற்று (1993). அதன்பிறகு வளர்பிறைபோல் ஈழத்து இலக்கியத் தொடர்பு வளர்ந்துகொண்டுள்ளது. அண்மைக்காலமாகப் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழியாக ஈழத்துத் தொடர்பைப் புதுப்பித்த வண்ணம் உள்ளேன்.

 அண்மையில் பிரான்சுக்குச் சென்றிருந்தபொழுது “மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் மான்மியம்’ என்னும் பெயரில் அமைந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கினார்கள். நூலினை மேலோட்டமாகப் பார்த்தபொழுது, நூலாசிரியர் நாவற்குடா இளையதம்பி தங்கராசா என்ற பெயர் எனக்கு மிகவும் அறிமுகமானதாக  இருந்தது.

 ஒருநாள், ஈழத்து அன்பர் சிவபாதசுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, அவரின் அருகில் இருந்த இளையதம்பி தங்கராசா அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது தங்கராசா அவர்கள் தமக்கும் ஈழத்துப்பூராடனாருக்கும் அமைந்த தொடர்பைக் கூறியதும் அவரின் மேல் மிகுந்த மதிப்பு உண்டானது.

  இளையதம்பி தங்கராசா தாம் ஒரு புதினம் எழுதியுள்ளதாகவும் அதன் இருதொகுதிகளை அனுப்புவதாகவும் கூறினார். சொல்லியவண்ணம் அனுப்பியும் வைத்தார். “நான் என் அம்மாவின் பிள்ளை” என்னும் பெயரில் அமைந்த 1098 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளும் (27+484=511 பாகம்-1; 27+560= 587 பாகம்-2) கிடைத்ததும் உருவுகண்டு மலைத்தேன். எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கிடையே இதனைப் படித்து முடிக்கக் காலம் ஆகலாம் என்று நினைத்தபடி மேலோட்டமாகப் பார்வையிட்டேன்.

      பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு.எதிர்மன்னசிங்கம், செல்வி க.தங்கேஸ்வரி ஆகியோரின் மதிப்புரைகளும், பண்டிதர் ம. செல்வராசா அலெக்சாந்தர் அவர்களின் வெண்பாக்களும் நூலாசிரியரின் முன்னுரையும் உடனடியாக இந்த நூலினைப் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தன.

    தமிழகத்தில் புதின ஆசிரியர்கள் சிலர் தங்கள் படைப்புகளை எழுதுவதற்கும், அதனைப் பரப்புவதற்கும் கைக்கொண்டிருக்கும் பல்வேறு உத்திகளைக் கண்டு கண்டு, உண்மை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் தரமான புதினங்களை மட்டும் தேடிப்பிடித்துப் படிப்பது என் வழக்கம். புலம்பெயர்ந்தோர் ஆய்வுநூல்கள், மரபிலக்கியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளைப் படித்துள்ளேனே தவிர, பெரிய அளவில் புதினங்களைப் படித்ததில்லை.


      நாவற்குடா இளையதம்பி தங்கராசா அவர்களின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் மிகச்சிறந்த நோக்கத்துடனும் திட்டமிடலுடனும் படைக்கப்பட்டுள்ளது. உயர்வு நவிற்சியில் அமையும் சில செய்திகளை நோக்காது, இதில் இடம்பெறும் கதைக்கூறுகளையும், நாட்டார் வழக்காற்று மரபுகளையும் எடுத்துரைப்பு உத்திகளையும் முன்கதைத் தொடர்ச்சிகளை உரிய இடங்களில் நினைவூட்டிச் செல்லும் உத்தி முறைகளையும் நோக்கும்பொழுது இந்தப் புதினத்தின் தேவையும் முக்கியத்துவமும் தெரியவரும்.

ஹினெர் சலீம் அவர்களின் “அப்பாவின் துப்பாக்கி” என்ற புதினத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களின் தமிழ்மொழிபெயர்ப்பில் படித்தபொழுது சலீம் என்ற குர்திஸ்தான் போராளியின் வாழ்க்கை வரலாற்று வழியாக அவர்களின் நாட்டுவரலாறு, பழக்கவழக்கங்கள், இன்றையநிலை முதலியவை மிக நுட்பமாகச் சித்திரித்துக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. அப்பாவின் துப்பாக்கிபோல் கதையமைப்பில் மொழி, இன, நாட்டுச்சிறப்பு உணர்த்தும் படைப்புகள் வெளிவருமா? என ஏங்கிக்கொண்டிருந்த என் மனக்குறையை நான் என் அம்மாவின் பிள்ளை’ என்ற புதினம் நீக்கியது.

     இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் கிழக்கிலங்கை மக்களின் பண்பாட்டு மரபுகள் மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆவணப்படுத்தல் முயற்சிகளில் தமிழர்கள் ஈடுபடாததால் பலவற்றை இழந்து நிற்கின்றோம். இளையதம்பி தங்கராசா அவர்களைப் போலும் படைப்பாளிகள் ஈழத்திலும் தமிழகத்திலும் நிலவும் நம் மரபுகளையும் பண்பாடுகளையும் தங்கள் படைப்புகளில் ஆழமாகப் பதிவுசெய்ய வேண்டும். மொழி, இன, நாட்டுக்குப் பயன்படாத எந்தப் படைப்புகளையும் அது என்ன வகையான விளம்பரங்களுடன் வெளிவந்தாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையில்லை. அதே பொழுது மொழி, இன, நாட்டு மீட்சிக்குப் பயன்படும் ஆக்கங்களை இந்த உலகின் எந்த மூலையிலிருந்து எவர் தந்தாலும் அவர்களை உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் நிலை தமிழுலகிற்குத் தேவையாகும்.

    இளையதம்பி தங்கராசா அவர்கள் புதினம் எழுதுவதன் ஊடாக மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பொருளாதாராம், பண்பாடு, மொழி வழக்கு, இலக்கியம், கலைகள், தொழில்முறைகள், சமூக அமைப்பு எனப் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார் என்று முனைவர் இ.பாலசுந்தரம் அவர்கள் தம் அணிந்துரையில் முன்மொழிவு தந்துள்ளார்.

  இலங்கையில் பிறந்த அகத்தியன் என்னும் இளைஞன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கப்பலில் பயணம் செய்து, அமெரிக்கத் துறைமுகம் ஒன்றில் அகதியாக இறங்குகின்றான். பத்தி என்ற பெயருடன் கப்பலில் பணிசெய்த பணியாளன் ஒருவன் அந்த நேரத்தில் நேர்ச்சியில் இறந்துவிட, அவன் பெயரில் அமெரிக்காவில் நுழைந்து கல்வி கற்று, அணுசக்தி குறித்த பேரறிவு பெற்ற அறிவியலாளனாக, அமெரிக்காவின் சொத்தாக உயர்வு பெறுகின்றான். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து, தாயக நினைவுடன் இலங்கை வந்து, தம் மட்டக்களப்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பல வகை முயற்சிகளைச் செய்வதும், தாயகத்தில் தாம் திருமணம் செய்துகொள்வதுடன் தம்மைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அனைவருடன் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் நிகழ்வுகளும்தான் புதினத்தின் கதைக்களமாகும்.

      இந்தக் கதையை இளையதம்பி தங்கராசா அவர்கள் மிகச் சிறப்பாகப் புனைந்து, படிப்பவர்களை உடன் பயணிக்கவைக்கின்றார். அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா செல்லுதல்அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வருவது, அங்குச் சரயு என்ற பெண்ணைச் சந்திப்பது, மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணைக் காண்பது, சென்னைக்கு வருதல், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் அமைந்துள்ள கோயில்களைப் பார்த்துக்கொண்டு, சென்னைக்குத் திரும்புவது என்பவை கதைப்போக்காக உள்ளன. இடையிடையே கோயில்கள் குறித்து அளித்துள்ள விளக்கங்கள் தங்கராசா அவர்களின் சமய ஈடுபாட்டையும் இசைப்புலமையையும் காட்டுகின்றன.

      அகத்தியன் சென்னையிலிருந்து இலங்கை வருவது; ரங்கதுரை என்ற தம் குடும்ப நண்பரைச் சந்திப்பது; வீட்டிற்குத் தேவையான பொருள்களைக் கொழும்பில் வாங்குவது; மட்டக்களப்பில் உள்ள தன் இல்லத்தை அகத்தியன் அடைவது; பெற்றோர் மற்றும் நண்பன் மாணிக்கன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்தல்; தாய்மாமன் குடும்பத்தாரின் தப்புக்கணக்கு, நண்பன் மாணிக்கனின் தங்கை சுவனீயை மணக்கத் திருமண ஏற்பாடு, தம்பி ஆனந்தனுக்குக் கராச்சியில் கண்ட பெண் சரயுவையும், நண்பன் மாணிக்கனுக்கு மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணையும் மணம்செய்ய நடைபெறும் முயற்சிகள் யாவும் கதையை இன்பமுடிவு நோக்கி நகர்த்துகின்றன. அகத்தியன் புதிய வீடு கட்டுவது, வயலில் வீடுகட்டுவது, மிகுதியான திருமணங்கள், மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று நடத்தும் ஒப்பந்தம், பட்டமளிப்பு விழாக்கள், அனைத்துப் பணிகளும் நிறைவுற்றதும் அகத்தியன் குடும்பத்தாருடன் அமெரிக்கா திரும்புவது, அமெரிக்க அதிபர் இலங்கைக்கு வருவது என்று கதைப்போக்கு நீள்கின்றது.

பாத்திரப் படைப்புகள்

      ‘நான் என் அம்மாவின் பிள்ளை’ புதினத்தில் இடம்பெறும் கதைப்பின்னலின் ஊடே, நனவோடை உத்தி வழியாகத் தங்கராசா சில பாத்திரங்களைத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். கதையோட்டத்தில் பல்வேறு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. தெவ்வியம்மா, மாணிக்கன், சுவனீ, வேலப்போடியார், இரேவதி, மார்க்கண்டர், யோகராணி, ஆறுமுகம், நாராயணன், பார்வதி அம்மா, ரங்கவடிவேல், ஆனந்தன், சரயு, மெனிக்கே, செல்லம்மா, இளையவர், கோபாலகிருஷ்ணன், மாதவி, மாஅக் கிறகர், நன்சி, தொம்சன், உவட்சன், பற்றீரிசியா, காண்டிராக்டர் சுப்பிரமணியம், அலிஹாஜியார், அப்துல்லா, அதுறலிய, மச்சந்தி, தரணி, தவசி, மகேந்திரன், ஜெகதீஸ்வரி, வரகுணபாண்டியன், வாசுகி, சாமி உள்ளிட்ட பாத்திரங்கள் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்.

      இளையதம்பி தங்கராசா அவர்களின் மண் பற்று இந்தப் புதினத்தில் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் மட்டக்களப்புப் பிரதேசத்தின் இயற்கை வளம், விருந்தோம்பல், வழக்கில் உள்ள மந்திரச்சடங்கு, வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மீன்பிடித்தொழில்கள், அறுவடைத்தொழில்கள், உணவுப் பழக்கவழக்கம், மக்களின் திருமண உறவுகள், நாட்டார் வழக்குகள், பாடல்கள், பழமொழிகள், கல்விமுறைகள் என யாவற்றையும் இந்தப் புதினத்தில் பொருத்தமான இடங்களில் அமைத்து, கற்பார்க்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளார்.

      மட்டக்களப்புப் பகுதியில் உள்ள அவணம், கிறுகி, குளுத்தி, கொட்டான், பொடியன், நுளம்பன், போடியார், மடைப்பெட்டி, மயண்டை, முல்லைக்காரன், வாவி, வரம்பு, பதைச் சுழுந்து, ஆள்வெருட்டி, உப்பட்டி, வரவை, பூச்சி பட்டை, கொல்லா / விசாள், சேருவக்கால், கரத்தை, தேசிக்காய், குடுகு, பசளை, சவள், வாடி, சல்லு, கூடு, குசினி, களிசான், கோப்பிசம், வக்கடைகள், கண்ணாக்காடு, கரச்சை, திராய் (192), விசளம், வட்டாமடை, கொல்லா, புறியாணி, றீ(டீ), சிக்கின். பிளேன்ரீ போன்ற வழக்குச் சொற்களை இந்த நூலில் பெய்து எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்குப் புரியும் இச்சொற்கள் தாயகத் தமிழ் மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

      இளையதம்பி தங்கராசா அவர்கள் கற்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாதவாறு பல்வேறு உத்திகளைப் பின்பற்றிப் புதினத்தை உருவாக்கியுள்ளார். பத்தி என்பவனை அறிமுகப்படுத்தி, அவன் அகத்தியனாக நம் இதயத்தில் பதியும்வரை உள்ள பகுதிகள் ஒரு மர்மப் புதினம் படிக்கும் உணர்வை உண்டாக்குகின்றன. அமெரிக்காவிலிருந்து புறப்படும் பத்தி, ஆப்பிரிக்காவில் தரையிறங்கும்பொழுது அகத்தியனாகின்றான். அங்கிருந்து கராச்சிக்குச் சென்று, தங்கி இந்தியாவுக்குப் பயணமாவதும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளும் மிகச் சிறப்பாக உலகியல் நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. கதையின் முக்கியப் பாத்திரங்களாக மாறப்போகும் சரயு, மெனிக்கே ஆகியோரைக் கராச்சியில் சந்திக்க வைத்து, உரையாடல் புனைவுகளால் கதையை மிகச்சிறப்பாக நகர்த்தியுள்ளார்.

      கராச்சியை நோக்கி விமானம் பறந்தபோது தமது பழைய வாழ்க்கையை அகத்தியன் அசைபோடுவதாகப் புதின ஆசிரியர் பழைய நிகழ்வுகளை நமக்கு எடுத்துரைக்கின்றார். தம்மைத் தற்காத்துக்கொள்ள கொலைசெய்யவும் துணிந்த அகத்தியனைக் காத்த தெவ்வியம்மாளின் வழியாக அகத்தியனின் இளமை வாழ்க்கை அறிமுகம் செய்யப்படுகின்றது. அகத்தியன் திறமையானவன் என்பதும் அவன் வளர்ச்சி, புகழ் கண்டு மாமன் மகன் மோகன் பொறாமையால் ஆள்வைத்து அடிக்க முயற்சி செய்வதும் அதில் நிகழ இருந்த கொலை தடுக்கப்படுவதும் அதிலிருந்து விடுபட அகத்தியன் வெளிநாட்டுக்குப் புறப்படுவதும் என அமெரிக்கா புறப்பட்டதற்கான புதிர் விடுவிக்கப்படுகின்றது. அகத்தியன் மந்திரக்கலையில் வல்லவன் என்று குறிப்பிடும் வகையில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழக்கில் உள்ள மந்திரம், சடங்கு, அஞ்சன மைபோட்டுப்பார்க்கும் பழக்கம், காட்டுப்பிள்ளையார் வழிபாடு என்று பல செய்திகளைப் புதின முகப்பில் ஆசிரியர் அறிமுகம் செய்கின்றார்.

  இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் தமிழ் இலக்கியச் செய்திகள், திரைப்படப்பாடல்கள், இசைப்பாடல்கள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. திருமுறைகளையும் கம்பராமாயணத்தையும் (II. 475) பெருங்கதையையும் கீதையையும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் அயல்நாட்டுப் பழமொழிகளையும் வழக்கில் உள்ள தமிழ்ப் பழமொழிகளையும் பொருத்தமாக ஆண்டுள்ளார். எல்லாளன், துட்டுகைமுனு வரலாற்றையும் உரிய இடத்தில் நினைவூட்டுகின்றார் (II, 476). இவ்வாறு மரபுவழிப்பட்ட செய்திகளையும் முன்னோர் மொழிபொருள்களையும் எடுத்தாளும் உள்ளம் பண்பாடு காக்க முனைவோர்க்கே வாய்த்த ஒன்றாகும்.

தமிழ்-சிங்கள உரையாடல்

 இளையதம்பி தங்கராசாவின் புதினத்தில் சிங்களச் சொற்களும் உரையாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு - குருணாகலை செல்பவர்கள் அன்னாசிப் பழங்கள் விற்கும் கடவத்தை என்னும் இடத்தில் இறங்கி அன்னாசிப் பழங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள். அகத்தியன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் தேநீர் குடிக்க வண்டியை நிறுத்தியபொழுது, அங்கு,

அனாசிக்கெடி ஓணதை மகாத்தையா”

றத்தாங் பகட்ட றவும முரிசு கேடி தியணவத?”

ஓணதறங் தியனவா மகாத்தையா,
மகாத்தைஐயாட்ட கெடி கீயதோணே”

அபிட்ட கெடி விஸ்சக் தோறலா தெண்ட”(பக்கம் 189)

என்று தொடரும் உரையாடல்கள் சிங்கள-தமிழ் மக்களின் வணிக உறவைக் காட்டும் தொடர்களாகும்.

மெனிகேயின் தந்தை கராச்சியில் இலங்கை அரசின் தூதுவராகப் பணியாற்றுபவர். தம் மகளுக்குத் திருமண வாழ்க்கை அமைய உள்ள மகிழ்வில் இரகசியமாக மட்டக்களப்பு வருவதும் தன் மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்து, மாணிக்கனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்க விரும்புவதும், தன் மகளுடன் சிங்களத்தில் உரையாடுவதும் இந்தப் புதினத்தில் நெஞ்சை உருக்கும் பகுதிகளாகும். மெனிகே, “வேண்டாம் தாத்தே”, ”துக்கத்தில் அழவில்லையடா துவே” “பூஞ்சி அம்மே, நங்கி, மல்லிலா, கொகோமத தாத்தே”, “சியலுதெனாம ப்பெயிங் இன்னவா துவே” (பக்கம் II, 132), சீயா, (136) ) என்னும் சிங்களச் சொற்களும் உரிய உரையாடல் சூழலில் ஆளப்படுள்ளன.

மாலு மாலு மாலு
ரஞ்ஜனீட்ட மாலு
ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

மாலு மாலு மாலு
ரஞ்ஜனீட்ட மாலு
ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

என்ற இலங்கையில் பாடப்படும் பைலா பாட்டினை அதுறலிய அவர்கள் பாடியதாகக் காட்டியுள்ளது இலங்கை நாட்டின் இசைமுறையை நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைகின்றது(147).

கொட்டைகுத்திப் புல்லுக்கு விளக்கம் தருவது (230, 231), புதிர் எடுத்தலும் புதிர் சாப்பிடுவதும் (469, 470), சூடடித்தல், களவட்டிப் பொங்கல் (II 62), பொலிப்பாடல், அறக்குப்புதையல் (II 173), வலதுகால் எடுத்து வைத்தல் (II 188), பாடும் மீன்கள், யானைக்கல் (II 225), சாவல் காக்காவின் சாப்பாட்டுக்கடை, பரவற்கல் (II 252), மீனவர் வாழ்க்கை (II 257), மீன்கடிக்கும் நேரம் (II 262), மடைப்பெட்டி எடுத்தல் (I. 76), றாகத்தான சாப்பாடு (I 199), தாலிக்குப் பொன்னுருக்குதல் (II 282), மட்டக்களப்பு வாவி, மாணிக்கக்கற்கள் (II. 328), கொழுக்கட்டைப்பெட்டி (II. 405) முதலிய செய்திகளோடு விபுலானந்த அடிகளாரின் பணிகள் மற்றும் இசைப்புலமையையும் (I.101), (I. 429, 444), (II 237-240,) உரிய இடங்களில் நினைவு கூருவதும் நாட்டார் மரபைப் போற்றும் இளையதம்பி தங்கராசா அவர்களின் உள்ளத்திற்குச் சான்றாகும்.

பழமொழிகள்

      தங்கராசா அவர்கள் தம் புதினத்தில் பழமொழிகள், வழக்குச்சொற்கள், பட்டறிவு மொழிகளை மிகுதியாக ஆண்டுள்ளார்.

செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப் பகை”

பசு தம்பிரானுக்கு பால் நம்பியானுக்கு”

தாரமும் குருவும் தலை எழுத்துப் படி”

போன மச்சான் திரும்பி வந்தான்
பூமணத்தோட”

காகமும் இருக்கக் குரும்பட்டியும் அதன்மேல் விழுந்த கதை” (1, 232)

ஆத்தாத நாய் கழிக்கோலைக் கடிக்குமாம்” (1, 278)

எட்டாத பழம் புளிக்கும்தானே”

“Good things no cheep and cheep things no good” சீனப் பழமொழி

இருண்ட வானத்திலும் ஒருவெள்ளிக்கரை தெரியும்” (1,.331)

எறும்புக்கு எருமை மாட்டின் சிறுநீர்,
ஏகப்பட்ட ஏரியாகத் தெரியுமாம்” (1, 456)

பல்லால கிழிக்க வேண்டிய பனங்கிழக்குக்கு
வல் இட்டுக் கிட்டியும் ஆப்பையும் பாவிப்பது  மாதிரி” (1, 477)

கைப்புண்ணைப் பார்ப்பதற்குக்
கண்ணாடி என்னத்திக்கிடா” (II 477)

மந்திரம் கால், மதி முக்கால்”(II 479)

அகத்தி ஆயிரம் காய்களைத்தான் காய்த்தாலும் அது புறத்தி புறத்தி தானே”(II,90)
முதலைக்குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை”(I 29)
ஆள்பாதி ஆடை பாதி,(I 181),

“Footwear and headwear” -ஆங்கில சொலவடை

தலையால் வருகின்ற செல்வத்தைக் காலால் உதைத்துத் தள்ளிவிடாதே”(I. 295)

முதலிய பழமொழிகளைப் பொருத்தமாக ஆண்டுள்ளார். இவை நாட்டார் இலக்கியம் குறித்த ஆய்வுலகிற்குப் பயன்படும் செய்திகளாகும்.

காத்தான்குடி முஸ்லீம்கள் நண்டு உண்பதில்லை” (IV 140) என்றும் “கரடியனாற்று கட்டித் தயிரையும், வாகனேரித் தேனையும்” (II.165). முருங்கைக் கீரை, முருங்கைக் காயின் மகத்துவம், ஏறாவூர் சந்தை (I, 192), ஆள்வெருட்டி (I 371) பற்றியும் அரிய உண்மைகளைப் பதிவு செய்துள்ளமை தங்கராசாவின் படைப்புத் திறனுக்குச் சான்று பகரும் இடங்களாகும்.

பில்லிவிடுதல், சூனியம், கொழுந்து முறித்தல், நெட்டை முதலான மந்திரம் தொடர்பான செய்திகளையும் தம் புதினத்தில் விளக்குகின்றார்.

இலங்கையின் சிறப்பு இசைக்கூறாகப் பொலிப்பாடல்கள் விளங்குகின்றன. நாட்டார் இசையில் சிறப்பிடம் பெறும் பொலிப்பாடல்களை உழவர்கள் ஆர்வமுடன் பாடுவது மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழமையான நிகழ்வாகும். இந்தப் புதினத்தில் பொலிப் பாடல்கள் உயிர்பெற்று விளங்குகின்றன,

தாயே பொலி, தம்பிரானே பொலி
பூமிபொலி, பூமாதேவித் தாயே
மண்ணின் களமே, மாதாவே நிறைகுடமே
பொன்னின் களமே, பொலி பொலியோ!

முன்னங்கால் வெள்ளையல்லோ
பொலியம்மா தாயே – நீ
முகம் நிறைந்த சீதேவி
பொலி பொலியோ!

வெள்ளி வெளிச்சத்திலே - நீ
விளையாடி வா பொலியோ
வாரி சொரியப் பொலி தன்ம தாயே – இந்த
வளநாடு பொன் சொரியப் பொலி பொலியோ” (II, 74)

என்பன பொலிப் பாட்டுக்குச் சான்றாகும் பாடல்களாகும்.

குழுக்குறிச் சொற்கள்

    மட்டக்களப்புப் பிரதேசத்தில் உழவுத்தொழிலின்பொழுது சூடடிக்கும் இடத்தில் சில குழூக்குறிச் சொற்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் புதின ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையை இராவணன் ஆண்டபொழுது நிகும்பலை யாகம் செய்தான். அந்த யாகத்திலிருந்து பல பூதங்கள் வெளியேறின. அந்தப் பூதங்கள் சக்தி வாய்ந்தவை. இவைகளைக் கொண்டு இராவணன் மக்களுக்குத் தேவையான ஆக்கப் பணிகளைச் செய்தான் எனவும் அவன் மறைவுக்குப் பிறகு அந்தப் பூதங்கள் 108 உம் கைவிடப்பட்ட நிலையில் உணவுதேடி அங்கும் இங்கும் அலைந்தன எனவும், பகலில் குகை ஒன்றில் இவை ஒளிந்துகொள்வதாகவும் மக்கள் நம்பினர். இராம பக்தையாகிய ஆடக சௌந்தரி என்னும் இளவரசி இராம மந்திரம் ஓத, அப்பூதங்கள் அவளை வணங்கி, அவள் அடிபணிந்தன. அவற்றை அழைத்துச்சென்று, நாளொன்றுக்கு 24 கலம் அரிசிக் கஞ்சி வழங்குமாறு இளவரசி தம் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்தப் பூதங்களைக் கொண்டு பல நீர்த்தேக்கங்களைக் கட்டினாள் எனவும் 140 ஆம் வயதில் அவள் இறையடி சேர்ந்த பின்னர் மீண்டும் அப்பூதங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் திரிகின்றன எனவும் மக்கள் நம்புகின்றனர். எனவே சூடடிக்கும் களங்களில் மக்களின் வழக்கில் உள்ள சொற்களை சூடுமிதிப்பவர்கள் பேசினால் அப்பூதங்கள் புரிந்துகொண்டு தொல்லை விளைவிக்கும் என நம்பி, அதனால் வயற்களத்தில் பலவகையான குழுக்குறிச் சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, 32 குழுக்குறிச் சொற்கள் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவையாவன:

1.   பொலி - நெல்
2.   களம் – சூடுமிதிக்கும் இடம்
3.   வெள்ளம் / கலங்கல் – தண்ணீர்
4.   வேலைக்காரன் – வைக்கோலைக் கிளறும் வளைதடி
5.   போர் – சூடு – நெற்கதிர் குவியல்
6.   வாரிக்காலன் – சூடுமிதிக்கும் மாடுகள்
7.   கரைஞ்சான் – வாழைப்பழம்
8.   வலிச்சான் – உறட்டி
9.   வெள்ளோடன் தேங்காய்
10. கூரைக்கோடு – வீடு
11. பொலிக்கொடி – வைக்கோல் / வைக்கோல் கயிறு
12. கணக்கன் – மரைக்கால்
13. குஞ்சுவாயன் – கைப்பெட்டி
14. பெருவாயன் – கடகம்
15. நெடுமுளவன் – கயிறு
16. கட்டு – வா / போ
17. பெருக்கம் – குறைவு / முடிந்துவிட்டது
18. மின்னிக்கட்டுதல் – நித்திரை கொள்ளல்
19. நெடுமின்னி – மரணம்இறப்பு
20. வாடி கட்டுதல் – ஓரம் கட்டுதல்(களவட்டியின்)
21. வருணன் – மழை
22. கூளக்கையன்- பேய்- பூதம்
23. பெருமாள் – ஆண்பிள்ளை
24. அடைக்கலச்சல்லிபெண்பிள்ளை
25. கடற்கரும்பு –மீன்
26. கருங்காய் – பாக்கு
27. புகைஞ்சான் – புகையிலை
28. களம் பொலிதல்- சூடடித்து முடிதல்
29. வெள்ளப்பெருக்கம் – தண்ணீர் குறைவு – இல்லை
30. அரக்கன் – சூடு மிதிக்கும் முல்லை மாடு
31. வெட்டி வாயன் – மண்வெட்டி
32. அவுரி – பொலி தூற்றப் பாவிக்கப்படும் முக்காலி

இளையதம்பி தங்கராசா அவர்கள் இசை ஈடுபாடும் நாட்டிய ஈடுபாடும் உடையவர் என்பதை இந்த நூலில் எடுத்து வழங்கியிருக்கும் இசைப்பாடல்களிலிருந்தும் நாட்டியம் குறித்த செய்திகளிலிருந்தும் அறிந்துகொள்ளலாம். மாதவி அம்மா, கோபால கிருஷ்ணன், மச்சந்தி, அகத்தியன், சரயு உள்ளிட்ட யாவரும் ஒவ்வொரு கலைகளில் தேர்ந்த அறிவுடையவர்களாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இசையிலும் நாட்டியத்திலும் சிறப்புற்று விளங்குவதாகப் புதின ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மகா கணபதி”,
எந்தரோ மகானுபாவலு அந்தரீக்கு வந்தனம்”(II, 181)
தலையைக் குனிந்த தாமரையே(II,183),
ஓர் ஆயிரம் பார்வையிலே (II, 184),
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை
காணக் கண் ஆயிரம் வேண்டாமோ”(II 209 ),
தங்கத் தடாகத்தில்”((II 234),
மன்மத லீலையை”
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே”
"தண்டலை மயில்கள் ஆட” (II 256),

போன்ற இசைத்தொடர்புடைய வரிகளை ஆண்டுள்ளமை இவர்தம் இசையீடுப்பாட்டுக்குச் சான்று பகர்வனவாகும்.

உணவு வகைகள்

ஈழத்தில் வழக்கில் இருந்த உணவுகளை இந்த நூலாசிரியர் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பதிந்துவைத்துள்ளார். இவற்றைச் சமைப்பதையும், பரிமாறுவதையும் நயம்பட உரைக்கும் நூலாசிரியர் கற்போருக்கு இந்த உணவு வகைகளின்மேல் ஈர்ப்பு உண்டாகும்படிச் செய்துவிடுகின்றார்.

      அவற்றுள், கைக்குத்தரிசி மாவால் தயார் பண்ணப்பட்ட இடியாப்பம், கூனி இறால் சுண்டல், ஒட்டி மீன் தீயக்கறி, தேங்காய்ப்பூ போட்டு அவித்த அரிசிமாப்புட்டு, மணலைமீன் கறி, இறால் பாலணம், பாலப்பம், இறால் கருவாட்டுச் சம்பல்(II, 192), இறால் கறி, மாசிச்சுண்டல், இட்டிலி, தோசை, இஞ்சிப் பிளையின் டீ, பறங்கி வாழைக்குலை, முட்டைக் கொத்து, சிக்கின் கொத்து, இறால், மீன் பொரியல், கொத்து ரொட்டி, சினை நண்டுப் பொரியல், மட்டுறால் பொரியல், உவைன், நண்டின் சினை, முட்டை, பச்சை மிளகாய் கீறல், ஒம்லெட், ஒட்டி மீனும் முருங்கைக்காயும் சேர்த்துச் சமைத்த வெள்ளைக்கறி, முட்டையப்பம், குத்தரிசி மா இடியாப்பம், மட்டன் குறுமா, சிக்கின் புரியாணி, கரடியனாற்றுக் கட்டித்தயிர், வாகரைத்தேன், கட்டுச்சோறு, கோப்பி, இடியாப்பம், ஆணம், கட்டித்தயிர், தேன், புட்டு, பிஞ்சுப் பலாக்காயுடன் மாசியும் போட்டுக் காய்ச்சிய ஆணம், மாம்பழ ஒட்டி மீன் தீயக்கறி, நண்டுச்சினை ஓம்லெட், மாம்பழங்கள், மணலைமீன் பொரியல், பால் றால் பொரியல், சீனி காய்ச்சி வார்த்த முந்திரியம் பருப்புகள், நண்டு.றால், கணயான் கருவாடு போட்ட கத்தரிக்காய் குழம்பு, துண்டு, முருங்கை இலைச்சுண்டல், முருங்கைக்காய் கறி, கட்டுச்சோறும் கட்டாப்பாரை கருவாட்டுக்கறி, நாட்டுக்கோழிக் கறி, சீனி அப்பம், சாவல் ஸ்பெசல் மட்டுறால் (Tigher shrimps), கீரிமீன் பொரியல், முட்டைக்கொத்து, முடிச்சுசோறு (Lumprice) என மட்டக்களப்புப் பகுதியில் பரிமாறப்படும் உணவு வகைகளை அறியும்பொழுது தமிழர்களின் உணவுப்பழக்கம் நமக்கு அறிமுகம் ஆகின்றது.

      “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற புதினம் பல்வேறு உண்மைகளைத் தமிழ் உலகுக்குச் சொல்லி நிற்கின்றது. கல்வி அறிவில் எந்த உயர்நிலைக்குச் சென்றாலும் பிறந்த மண்ணையும் மக்களையும் நினைக்க வேண்டும்; ஒரு மனிதனுக்குத் தேவையான உயர்ந்த பண்புகளுள் நன்றியுணர்வு குறிப்பிடத்தக்க பண்பாகும்; எளியவர்களுக்கும், தேவையானவர்களுக்கும் உதவுவதற்கு வாய்ப்பு அமையும்பொழுது முன்னுரிமை தந்து உதவ வேண்டும்; மரபுகளையும், பழைமையையும் போற்றுவதில் ஆர்வம்காட்ட வேண்டும்; பெற்றோரை மதிப்பதில் அனைவரும் ஆர்வம்காட்ட வேண்டும் என்பன போன்ற அறவுரைகளை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது. அதற்குத் தகுந்தாற்போல் பாத்திரப் படைப்புகள் வார்க்கப்பட்டுள்ளன.

      அகத்தியன் போன்ற மக்கள் பற்றாளர்கள் அறிவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த முன்வந்துள்ளமையும், தம் செல்வத்தையும், செல்வாக்கையும் மக்கள் முன்னேற்றத்திற்கு வழங்கியுள்ளதையும் புதினம் உணர்த்தி நிற்கின்றது.

      பல இனங்களைச் சேர்ந்தவர்களும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும், பல தொழில்களைச் செய்பவர்களும் இந்தப் புதினத்தில் தோன்றித் தங்கள் மரபுகளைப் பேணியுள்ளதை நுட்பமாகப் புதினத்தைப் படிக்கும்பொழுது விளங்கிக்கொள்ளலாம். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை இந்தப் புதினம் பல இடங்களில் அடையாளப்படுத்தியுள்ளது. உழவுத் தொழிலை மேற்கொள்ளும் மக்கள் காலவரிசையில் செய்யும் தங்கள் தொழில்சார்ந்த முன்னேற்பாடுகளும் வேலைகளும் மிகச்சரியாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளன. நடவு தொடங்கி அறுவடை வரையிலான அனைத்துப் பணி நிலைகளையும் புதின ஆசிரியர் கதையின் வழியாகக் கட்டமைத்துக் காட்டியுள்ளார்.

  மட்டக்களப்புப் பிரதேசத்தின் முதன்மைத் தொழில்களுள் ஒன்றான மீன்பிடித்தொழில் குறித்த பல்வேறு நுட்பங்களை இந்தப் புதினத்தில் புதின ஆசிரியர் படைத்துள்ளார். மீன்பிடி கருவிகள், மீன்பிடி முறைகள், மீன்வகைகள், மீன் சமைத்தல், மீன் விற்பனை, மீன் வலைகள், மீனவர்களின் சோகம் நிறைந்த வாழ்க்கை, படகுகள், கட்டுமரங்கள் குறித்த பல விவரங்களை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது.

    அகத்தியன், மாணிக்கம், ஆனந்தன், தரணி உள்ளிட்டவர்களின் திருமணத்தை ஒட்டி நடைபெறும் பல்வேறு நடைமுறைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், உடைகள், யாவும் தமிழர்களிடம் தொன்றுதொட்டுக்காணப்படும் மரபுத்தொடர்ச்சியை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்பொழுது செய்யப்படும் தாலி செய்தல், குண்டு செய்தல் என்பன முக்கியச் செயல்களாகும். அதனை நினைவிற்கொண்ட புதின ஆசிரியர், அகத்தியன் தந்தையார் வழியாக தம் மரபுநிலைப் பழக்கவழக்கங்களை அழகாக மொழிந்துள்ளார். இன்றைய வேலை வாய்ப்பு, பணிச்சூழலில் பெண்கள் தாலி அணிவதில் உள்ள சிக்கல்களை நினைவூட்டி, அதே பொழுது தாலியின் அவசியத்தை வலியுறுத்துவது அவரின் உள்ள விருப்பத்தை நமக்குக் காட்டுகின்றது. மெட்டி அணிதல், மோதிரம் எடுத்தல், வலதுகால் எடுத்துவைத்தல், கெட்டிமேளம் போன்ற சடங்குகளின் முக்கியத்துவத்தைப் புதின ஆசிரியர் விளக்கிச் செல்வது அவர்தம் பல்துறைப் புலமையை மதிப்பிட உதவுகின்றது.

  சிங்கள மக்களின் ஆடை அலங்கார முறை, பெண்களின் திருமணத்தின்பொழுது வழங்கும் சீர்ப்பொருள்கள், அவர்களின் நாகரிகமும், வளமும் நிறைந்த பொருளாதார வாழ்க்கையை மெனிகே திருமணத்தின் வழியாகவும், மெனிகேயின் தாயினுக்குக் கொடுக்கப்பட்ட சீர்ப்பொருள்களின் வழியாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. முதல் மனைவியின் மகளான மெனிகே மீது அவளின் தந்தை கொண்டிருந்த பாசமும், மகளுக்குத் தன் இரண்டாம் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவந்து, அவளுக்குத் திருமணம் நடைபெற உள்ள சூழலை அறிந்து அவர் அடைந்த மகிழ்ச்சியும் படிப்பவர்களைக் கரைந்துருகச் செய்யும் பகுதிகளாகும். மெனிகேயின் தாத்தா மெனிகேக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று சேர்த்துவைத்துள்ள சீதனப் பொருள்களை அறியும்பொழுது ஒட்டுமொத்தக் குடும்பமும் மெனிகே மீது வைத்திருந்த அன்பும், அவளுக்கு அவர்கள் எதிர்பார்த்த திருமண வாழ்வு அமைந்த முறையும் புதினத்தின் சிறப்புப் பகுதிகளாகும். பேராதேனியப் பல்கலைக்கழகத்தின் பௌதீகப் பேராசிரியர் மகன் லலித், சிறீமா திருமணம் பற்றிய குறிப்புகளிலும் சிங்கள மக்களின் செல்வச் செழிப்பைக் காணமுடிகின்றது(I. 261).

      முசுலிம் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், வணிகம், மீன்பிடித்தொழில் குறித்த செய்திகளையும் புதின ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள முசுலீம் மக்களின் பிரதிநிதிகளாக வெள்ளையன் காக்காவும், சுல்தான் காக்காவும், மீன் வியாபாரி செய்யதும் காட்டப்படுகின்றனர். பீதாம்பரம் என்னும் மீன்பிடிக்காரர், மெண்டிஸ் போன்றவர்களையும் கடல் பயணத்தில் காண முடிகின்றது. சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடிப்பதற்கான காரணங்களையும் இந்தப் புதினம் குறிப்பாகச் சுட்டுகின்றது.

மட்டக்களப்பு வாவியில் மீன்பாடும் பகுதியையும் மீன்கள் பாடுவதற்கான காரணத்தையும் நமக்கு அங்கு வழங்கும் பல்வேறு செய்திகளின் அடிப்படையில் புதின ஆசிரியர் வழங்கியுள்ளார். விபுலானந்த அடிகள் அவர்கள் மீன்பாடும் செய்திகுறித்தும் இசை குறித்தும் சொன்ன செய்திகளை புதினம் பொருத்தமாக நமக்குக் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் பார்த்து மகிழத்தக்க கல்லடி லேடி மஅனிங் பாலம், பாசிக்குடா கடற்கரை, பூநொச்சிமுனைக் கடற்கரை, கதிர்காமம், அறுகம்பே வாடிவீடு, குமணை சரணாலயம், பொத்துவில் வில்லுக்குளத்து யானைக்கூட்டம் போன்ற இடங்களையும் அந்த இடத்தின் சிறப்புகள் குறித்த செய்திகளையும் நமக்கு இந்தப் புதினம் வழியாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

புதினத்துடன் தொடர்புடை செய்திகளை விளக்கும் வண்ணப்படங்களையும் ஆசிரியர் இணைத்துள்ளமை மட்டக்களப்புப் பிரதேசப் பழக்கவழக்கங்களை அறிய விரும்புவார்க்குப் பேருதவிபுரியும்.

  “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற அரிய புதினம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உரிய நூலாக உள்ளது. பெரும் தொகுதியை உருவாக்கியதன் வழியாக மட்டக்களப்புப் பகுதியின் சிறப்பினையும் பண்பாட்டு மரபுகளையும் நிலைப்படுத்தி, வாழ்விக்க வழிசெய்த இளையதம்பி தங்கராசா நம் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர்.

நூல்: நான் என் அம்மாவின் பிள்ளை(இரண்டு பகுதிகள்)
ஆசிரியர்: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, கனடா

வெளியீடு: 2015

குறிப்பு: கட்டுரையை முழுவதுமாகவோ, பகுதியாகவோ எடுத்தாளுவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.