திரு. கி. தனவேல் இ.ஆ.ப.
இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுள் படைப்பார்வம்
கொண்டவர்களும், ஆராய்ச்சி ஆர்வம் கொண்டவர்களும் அருகிய எண்ணிக்கையிலேனும் இருந்துகொண்டுதான்
உள்ளனர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான கி.தனவேல் அவர்கள் படைப்பார்வம் கொண்டவராகவும்
கலைஞர்களைப் போற்றும் இலக்கிய ஈடுபாட்டாளராகவும் விளங்கியதைப் பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பே அறிவேன்.
1997 இல் சென்னையில் நான் பணியாற்றியபொழுது
நடைபெற்ற ஓர் இலக்கியச் சந்திப்பில் அவரின் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
அதன் பிறகு திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல்
சார்ந்த பயிலரங்கில் நான் கலந்துகொண்டபொழுது நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவருக்கும்
தம் சொந்தப் பொறுப்பில் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்ததை நேரில் கண்டேன். அப்பொழுது அவர்
மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய நேரம். அதன் பிறகும் சில சூழல்களில் கண்டு உரையாடியதுண்டு.
அண்மையில் செம்புலச் சுவடுகள் என்ற பெயரில்
திரு. கி.தனவேல் அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதாகவும், இதன் வெளியீட்டு விழாவுக்கு
வர வேண்டும் என்றும் பேராசிரியர் த. பழமலை அவர்கள் அழைப்பு அனுப்பினார்கள். எனக்கிருந்த
பணி நெருக்கடியில் விழாவுக்குச் செல்ல முடியவில்லை. எனினும் அந்த நூலைப் படிக்க ஆர்வமுடன்
இருந்தேன். தாவரத் தகவல் தொகுப்பாளர் திரு. பஞ்சவர்ணம் அவர்கள் திரு.கி. தனவேல் அவர்களைச்
சந்தித்தபொழுது செம்புலச் சுவடுகள் நூலினை வாங்கி வந்தார்கள்.
செம்புலச் சுவடுகள் 128 பக்கத்தில் வெளிவந்துள்ள
உரைக்கவிதைத் தொகுப்பு நூலாகும். இந்த நூலுக்குப் பேராசிரியர் த.பழமலை, எழுத்தாளர்
கண்மணி குணசேகரன் ஆகியோர் அணிந்துரை தந்துள்ளனர். இருவரும் திரு. தனவேல் அவர்களையும் அவர் நடைபயின்ற
செம்புல மண்ணையும் நன்கு அறிந்தவர்கள். செம்புலம் என்று குறிக்கப்படும் பகுதி இன்றைய
நெய்வேலி, பண்ணுருட்டி, விருத்தாசலம் சார்ந்த பகுதிகளாகும். நெய்வேலி நிலக்கரியால்
இன்று மின்சாரமும், கரிவளமும் இந்தியாவுக்குக் கிடைத்தாலும் இந்தக் கரியை எடுப்பதற்கு
முன்பாக இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களை அரசு வேறு ஊர்களுக்குப் புதுக்குடியேற்றம்
செய்ததையும், தங்கள் வாழ்வு ஆதாரங்களை, நில புலங்களை இழந்த இப்பகுதி மக்கள் சொந்த நாட்டுக்குள்
இடப்பெயர்வுக்கு உள்ளாகிப் பல்வேறு இன்னல்களை அடைந்து வருவதையும் இந்தப் பகுதி படைப்பாளிகள்
சிறப்பாகத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். ஒளிஓவியர் தங்கர்பச்சான், அறிவுமதி,
கண்மணி குணசேகரன், பேராசிரியர் பழமலை, இரத்தின.கரிகாலன், இரத்தின.புகழேந்தி உள்ளிட்ட
பல படைப்பாளிகளின் எழுத்துகளில் நெய்வேலி நிலம் இழந்தவர்களின் சோகம் கண்ணீர்விடுவதைக்
காணலாம்.
கடலூர் மாவட்டத்தின் கூரைப்பேட்டை, வெள்ளையங்குப்பம்,
பெருமத்தார், இளவரசம்பட்டு, விளாங்குளம், அத்திப்பட்டு முதலிய ஊர்களும் வேறு சில ஊர்களும்தான்
இன்றைய நெய்வேலியாகப் பெயர்பெற்று நிற்கின்றன. கூரைப்பேட்டையில் இருந்தவர்களை இடம்பெயரச்செய்து,
விருத்தாசலம் அருகில் காப்புக்காடாக இருந்த இடத்தில் புதுக்கூரைப்பேட்டை என்ற ஊரை உருவாக்கிக்
குடியமர்த்தினர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஊர்ப்பெயரையும் கொண்டுபோனார்கள். இந்தக்
குடிப்பெயர்வில் புலம்பெயர்ந்த குடும்பங்களுள் ஒன்றுதான் திரு. கி. தனவேல் அவர்களின்
குடும்பமும். குடிப்பெயர்வு அமைந்து பல ஆண்டுகள் ஆனாலும் மூதாதையர் வழிபட்ட தெய்வங்களையும்,
பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் மறக்காமல் அந்த ஊர் மக்கள் உள்ளனர் என்பதைத் திரு.
தனவேல் அவர்கள் எழுதியுள்ள செம்புலச் சுவடுகள் நூலில் கண்டு பழைய நினைவுகளில் மூழ்கினேன்.
கி. தனவேல் அவர்கள் நாற்பது தலைப்புகளில்
செம்புலச் சுவடுகள் நூலை உருவாக்கியுள்ளார். நினைவோடை உத்தி, நினைவுகூர்தல் உத்தியை
மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி இந்த நூலை யாத்துள்ளார். தனவேல் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,
உறவினர்கள் நூலின் பாத்திரங்களாக உலா வருகின்றனர். ஊர் மக்கள் பலரும் உண்மை முகத்துடன்
வந்து நமக்குக் கண்முன் நிற்கின்றனர்.
திரு. கி. தனவேல் அவர்கள் பெற்ற கல்விதான்
தமிழகத்து மாணவர்கள் அந்த நாளில் பெற்ற கல்வி. அவரின் ஆசிரியர்களைப் போலவே தமிழகத்து
மாணவர்கள் சந்தித்த ஆசிரியர்களும் முன்பு இருந்தனர். கி. தனவேல் அவர்கள் பள்ளிக்குச்
செல்லும்பொழுது சந்தித்த அதே வறுமையும், வசதி இன்மையும்தான் தமிழகத்து மாணவர்கள் முன்பு
சந்தித்தனர். ஆனால் இன்றைய தலைமுறை முற்றாக வேறு சூழலில் வளர்ந்துவருகின்றனர். நம் தலைமுறை பழைய, புதிய என இரண்டு வகையான கல்வியைக் கண்டுள்ளது.
கடந்த கால் நூற்றாண்டில் கண்டுள்ள சமூக மாற்றங்கள்,
கல்வித்துறை மாற்றங்கள் யாவற்றையும் நாம் நேரில் கண்டுள்ளோம். “கேந்திரிய வித்யாலயங்களும்”,
“மெட்ரிகுலேஷன்களும்”, “இண்டர் நேஷ்னல் ஸ்கூல்களும்” “டியூஷன் கிளாஸ்களும்” என அடைகாக்கப்படும்
இந்தத் தலைமுறை மாணவர்களுக்குத் திரு. கி. தனவேல் அவர்களின் கல்வி கற்ற வரலாறு வியப்பாகவே
இருக்கும்.
தமிழகத்து மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள்,
வழிபாடுகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், மன உணர்வுகள், பழமொழிகள் யாவும் செம்புலச் சுவடுகள் என்ற இந்த
நூலில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களின் வரலாறு மக்கள் மொழியில்- மக்களுக்கான
வடிவத்தில் வெளிவந்துள்ளது.
இவர் எழுத்தில் வடலூர் தைப்பூசம் புதுவடிவம்
பெறுகின்றது.
கி. தனவேல் அவர்களின் படைப்பில் துள்ளிவிழும்
கவிதை உரைவீச்சுகள் உள்ளத்தை இழுக்கின்றன.
“ஆயாக்களிடம் விடப்பட்ட
அடுத்த தலைமுறை அறியுமா
அம்மாயிகளின் வாசம்” (பக்கம் 20)
என்று அம்மாயி என அன்புடன் அழைக்கும் பாட்டியின்
பாசத்தை நூலின் பக்கத்தில் கல்வெட்டாகப் பதிவு செய்துள்ளார்.
“வீட்டுக்கு வீடு அரிசியும், பசும்பாலும்
பண்டிகை நாட்களில் வேட்டியும் துண்டும்
வாத்தியாருக்கு வரும் சன்மானமாக” (பக்கம்
25)
என்று ஆசிரியர்கள் மேல் ஊர்மக்கள் கொண்டிருந்த
மதிப்பை நமக்கு நினைவூட்டுகின்றார்.
“கிராமத்துக்கு மாசா மாசம்
ஓமத்திரவம் விக்கறவர்
வந்துட்டுப் போவார்.
குழந்தைப் புள்ளைக்காரங்க
சீசாவுல வாங்கி வச்சிப்பாங்க” (பக்கம்
44)
என்று சிற்றூர்ப்பெண்களின் சிறந்த வாழ்க்கையை
அறிமுகம் செய்கின்றார்.
“பாட்டி வைத்தியத்துக்குக்
கட்டுப்படாத நோய்க்கு
பாவாடை வைத்தியரு.
பாவாடைக்கும் கட்டுப்படாததுக்கு
மருங்கூர் டாக்டரு.
மருங்கூராருக்கும் மசியாத நோய்க்கு
மஞ்சக்குப்பம் ஆஸ்பத்திரி.
அதுக்கு மேல
அவங்கவங்க தலவிதி” (பக்கம் 45)
என்று புதுக்கூரைப்பேட்டை மக்களின் மருத்துவ
வசதிகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
“வேர்ல ஏர்மாட்டி, மிரளும் உழவுமாடு
காலுல ஏத்திக்கும் கலப்பைக் கொழு முனையை
வீட்டுக்கு வந்ததும் மாட்டுக்கு வைத்தியம்
தென்னமரக்குடி தைலத்த காய்ச்சி
ஒத்தடம் கொடுக்கணும் ஒரு வாரத்துக்கு.” (பக்கம்
59)
என்று எழுத உழவர்குடியில் பிறந்த ஒருவரால்தான்
முடியும்.
“ஊத்தாங்கால் உழவும் அறாது
கொம்பாடிக்குப்பம் எழவும் அறாது” (பக்கம்
61)
என்று புதுக்கூரைப்பேட்டையில் வழங்கும் பழமொழி
இந்த நூலில் பதிவாகியுள்ளது.
“பட்டிக்காட்டான் பாவ புண்ணியம் பார்ப்பான்.
மிஞ்சிப் போனா வேட்டியத்தான் அவுப்பான்
பட்டணத்தான் ஏமாந்தா கோமணத்தையும்
அவுத்துபுடுவான்டா” (பக்கம் 79)
என்று நகரத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளைத்
தம் ஊர்மக்களின் பட்டறிவு வாயிலாகப் பதிவு செய்துள்ளார்.
“ஊருக்கே முடிதிருத்திய முனியன்
சாகற வரைக்கும் தன் குடுமியைத்
திருத்திக்கொள்ளவேயில்லை!” (பக்கம் 90)
என்று வறுமை வாழ்க்கை வாழ்ந்த சிற்றூர்ப்புற
முடித்திருத்தும் கலைஞரின் நிலையை நினைவூட்டுகின்றார்.
“அந்தத் தலைமுறை மாறியாச்சு
நடைமுறையும் மாறிப் போச்சு.
இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும்
சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும்
போயிடறாங்க ஜவுளி எடுக்க” (பக்கம் 94)
என்று நகர நாகரிகத்தை விரும்பும் சிற்றூர்ப்புற
மக்களின் மன நிலையைக் குறிப்பிடுகின்றார்.
சிற்றூரில் உடலுக்கு ஊறு செய்யாத எளிய உணவுகளை
உண்டு வாழ்ந்த மக்கள் படிப்பால் - பணியால் கிடைத்த நாகரிக வாழ்க்கையில் ஈடுபடும்பொழுதும்
பசுமரத்தாணி போல் நினைவில் பதிந்த நிகழ்வுகளை அசைபோடுவதை,
“இப்போதெல்லாம்
நட்சத்திர உணவு விடுதியில்
அதிகப் பணத்துக்கு
மஷ்ரூம் ஐட்டம் ஆர்டர் செய்கையில்
நினைவுக்கு வருகிறது.
அப்பா அம்மாவின் அன்போடு
செலவின்றிக் கிடைத்த
எங்க ஊர்க் காளானின் ருசி. (பக்கம் 95)
என்ற கவிதையில் நினைவூட்டியுள்ளார்.
தானே புயலால் பேரழிவுக்கு உள்ளான கடலூர் மாவட்டத்து மக்களின் வேளாண்மை, மரங்கள் குறித்த கவிதை இந்த நூலில் இடம்பெற்றுள்ளதுடன் ஒளிஓவியர் தங்கர்பச்சானின் தானே புயல் குறித்த ஆவணப்படுத்திலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கி. தனவேல் அவர்களின் படைப்புகள் கடந்த காலத்தை
நிகழ்காலத்தில் நின்று அலசுகின்றது. எதிர்காலத்தில் இவைதான் மக்கள் வரலாறு.
கி. தனவேல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:
கி.தனவேல் அவர்கள் கடலூர் மாவட்டம் பழைய
கூரைப்பேட்டையில்(நெய்வேலியில்) 1956 இல் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்
இளம் அறிவியல், சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். வங்கியில் காசாளராகப்
பணியைத் தொடங்கியவர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வில் வெற்றி
பெற்றவர். 1985 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பணியாற்றியவர். இந்திய
ஆட்சிப்பணி அதிகாரியாக 1992 இல் பணி உயர்வுபெற்றவர். 1998 - 2001 இல் நெல்லை மாவட்ட
ஆட்சித்தலைவராகப் பணியாற்றியவர். இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின்
நேர்முகச் செயலராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இப்பொழுது தமிழ்நாட்டு அரசில் செயலராகப்
பணியாற்றி வருகின்றார்.
குறிப்பு: புதிய கூரைப்பேட்டை உருவான நாள்:
01.12.1957. அதன் நினைவாக இக்கட்டுரை இன்று வெளியிடப்படுகின்றது. தமிழ்நாட்டின் அன்றைய
முதலமைச்சர் திரு. கு.காமராசு அவர்களால் புதுக்கூரைப்பேட்டை ஊரின் திறப்பு விழா நடைபெற்றது
என்று அறியமுடிகின்றது.
1 கருத்து:
கி.தனவேல் அவர்கள் பாராட்டுக்குரியவர். நூல்களை அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றி
கருத்துரையிடுக