முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்கள்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்
முஸ்தபா அறக்கட்டளையின் கரிகாலன் விருது வழங்கும் விழாவிற்கு (14.12.2013) வரும்படி
திரு. எம்.எ.முஸ்தபா அவர்கள் அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். அந்த விழாவுக்குச் செல்லத்
திட்டமிட்டிருந்தேன். என் வருகையை அறிந்த பூண்டி, திருபுட்பம் கல்லூரியின் தமிழ்த்துறைப்
பேராசிரியர் திரு. பாலா அவர்கள் முதல்நாள் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்று நடத்த ஆர்வம்கொண்டு
அன்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு வியாழன் இரவே தஞ்சைக்குச் சென்று சேர்ந்தேன்.
வெள்ளிக்கிழமை (13.12.2013) காலை பேராசிரியர்
வீ. சிவபாதம் அவர்கள் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து தம் மகிழ்வுந்தில் கல்லூரிக்கு
அழைத்துச் சென்றார். மகிழ்வுந்தில் செல்லும்பொழுது தமிழ் நிலை குறித்து உரையாடியவண்ணம்
சென்றோம். மாலையில் ஓய்விருந்தால் பேராசிரியர் அ. தட்சணாமூர்த்தி அவர்களைச் சந்திக்க
வேண்டும் என்ற என் விருப்பத்தைச் சொன்னதும் பேராசிரியர் வீ. சிவபாதம் அவர்கள் மகிழ்ச்சி
அடைந்தார். ஏனெனில் பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில்தான் “கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப்
பார்வை” என்ற தலைப்பில் வீ. சிவபாதம் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்கள்.
தஞ்சையின் தமிழ்ச்சூழலை உரையாடியபடியும்
மாலை நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தபடியும் நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் பூண்டி திருபுட்பம்
கல்லூரி எங்களை அன்புடன் வரவேற்றது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்
கண்ணைத் திறக்க திருமான் பூண்டி ஐயா அவர்கள் நிறுவிய கல்லூரி அல்லவா? இக்கல்லூரி இல்லை
என்றால் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதி மக்கள் தங்கள் நிலையில் முன்னேறியிருக்க முடியாது.
தொலைநோக்குடன் சிந்தித்துக் கல்லாத இனம் எல்லாம் கற்க வழிசெய்த திருமான் பூண்டி ஐயா
அவர்களின் சமூகச் சிந்தனையை எண்ணியபடியே கல்லூரியில் கால்பதித்து நடந்தோம்.
சற்றொப்ப
எட்டாயிரம் மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் படிக்கின்றனர். இகல்லூரியில் பயில நன்கொடை இல்லை. காலை முறை, மாலை முறை என்று
இரண்டு முறையில் கல்லூரி செயல்படுகின்றது. மாலை முறையில் பெண்கள் அச்சமின்றி வந்து
கல்வி பயின்று பேருந்துகளில் பாதுகாப்பாக வீடு போய் சேர்கின்றனர். கல்லூரியின் கட்டுப்பாடு,
திருமான் பூண்டி ஐயாவின் கருணை நினைந்து மக்கள் அனைவரும் தம் பிள்ளைகளை இக்கல்லூரியில்
ஆர்வமுடன் கல்விபயிலச் சேர்த்து வருகின்றனர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கோ. வெ. நடராசன்
தலைமையில் பேராசிரியர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். பூண்டியில் உள்ள திருபுட்பம்
கல்லூரிக்கு மூன்றாவது முறையாகச் செல்கின்றேன் என்ற நிலையில் அனைவருடனும் அன்புடன்
உரையாட முடிந்தது.
காலை பத்து மணிக்குப் பயிலரங்கம் தொடங்கியது.
ஒரு மணிக்கு உணவுக்காகப் பிரிந்தோம். மீண்டும் இரண்டு மணியளவில் கூடித் தமிழ் இணையத்தின்
அனைத்துக் கூறுகளையும் மாணவர்களும் பேராசிரியர்களும் உளம்கொள்ளும் வகையில் பரிமாறிக்கொண்டோம்.
நான்கு மணிக்கு நிறைவு விழா(விழா குறித்த படங்களை என் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்
ஐந்து மணியளவில் விடுதிக்குத் திரும்பினோம்.
இதன் இடையே இணைய நண்பர் திரு. கரந்தை செயகுமார் அவர்களுடன் தொடர்புகொண்டு நான் தங்கியிருந்த விடுதிக்கு
வரும்படி சொன்னதும் அடுத்த சில மணித்துளிகளில் அங்கு வந்து சேர்ந்தார்கள். கரந்தை செயகுமார்
அவர்களைப் பார்ப்பது இதுதான் முதல் முறை. இணையத்தில் தமிழ் சார்ந்த செய்திகளை எழுதி
வரும் கணக்கு ஆசிரியர் இவர். அனைவரும் அறிமுகம் ஆனோம்.
பேராசிரியர் அ. தட்சணாமூர்த்தி அவர்களைச்
சந்திக்கும் நோக்கில் மூவரும் தஞ்சாவூர் அருளானந்தர் நகரில் உள்ள திருபுட்பம் குடியிருப்பில்
பேராசிரியரின் இல்லத்தில் நின்றோம். முன்பே பேராசிரியர் அவர்களுக்கு என் வருகையைத்
தெரிவித்திருந்தேன். பேராசிரியர் அவர்களும் அம்மா அவர்களும் எங்களை அன்புடன் வரவேற்று
உரையாடினார்கள்.
பேராசிரியர் அ. தட்சணாமூர்த்தி அவர்களை அவர்கள்
எழுதிய தமிழக வரலாறும் பண்பாடும் என்ற நூலின் வழியாகப் பலவாண்டுகளுக்கு முன்பே அறிவேன்.
அதன் பிறகு பல்கலைக்கழகங்களில் படிக்கும்பொழுதும் பணிபுரிந்தபொழுதும் அவர்களைப் பன்முறைக்
கருத்தரங்குகளில் கண்டு, அவர்களின் தமிழ் உரையை மாந்தி மகிழ்ந்ததுண்டு. அமைதியாக அமர்ந்து
பேசுவது இதுவே முதல் முறை.
பேராசிரியர் அ. தட்சணாமூர்த்தி அவர்கள் தமிழ்ப்பேராசிரியராகப்
பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் சங்கத்தமிழ் நூல்களை மொழிபெயர்த்து, வெளியுலகுக்குத் தமிழ்ச்சிறப்பு உணர்த்துவதற்குத் தந்த பெருமகனார் ஆவார். ஆனால் பேராசிரியர்
அவர்களின் அறிவுக்கும் உழைப்புக்கும் உரிய சிறப்புகள் இத் தமிழ்நாட்டின்கண் கிடைக்காமல்
உள்ளமை ஒரு பெருங்குறையே ஆகும். தமிழ்ச்செல்வர்களின் பணத்தையும், விருதுகளையும் தமிழினத்துக்கு
எதிராவனர்கள் கையில் கொடுத்து மகிழும் இன்றைய நிலை மாறிப் பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி
போன்ற தமிழ் அறிஞர்களுக்குக் கொடுக்கும்பொழுதுதான் விருதும் மதிப்பினைப் பெறும், கொடுப்பவர்கள்
தமிழ் உலகில் என்றும் நினைவுகூரவும்படுவார்கள் என்று துணிந்து சொல்கின்றேன்.
பேராசிரியர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
முன்பே அறிந்தவன் என்பதால் அவர்களிடம் சங்க இலக்கியங்கள் குறித்தும், தமிழக அரசர்கள்,
குறுநில மன்னர்கள், தஞ்சைப்பகுதி மக்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்கள் குறித்தும் எங்கள் உரையாடல் நீண்டது. அடுத்து ஐயா அவர்கள் மொழிபெயர்ப்புப் பணிகள் தொடங்கிய வரலாற்றைக்
கேட்டேன்.
பூண்டிக் கல்லூரியின் ஆங்கிலத் துறையில்
நடைபெற்ற ஒரு பயிலரங்கில் தாம் கலந்துகொண்டதையும் அப்பொழுது தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பாடல்களை மொழிபெயர்க்கத் தொடங்கியதையும். அந்த
மொழிபெயர்ப்பை அனைவரும் பாராட்டி ஊக்குவித்ததையும் சொல்லி மகிழ்ந்தார்கள். அதன் பிறகு
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்று ஒவ்வொரு நூலாக மொழிபெயர்த்த வரலாற்றை நினைவுகூர்ந்தார்கள்.
அவ்வகையில் புறநானூறு, பதிற்றுப்பத்து, நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை
என்று சங்க இலக்கியங்கள் பதினைந்தை நம் பேராசிரியர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.இன்னும்
எஞ்சியிருப்பவை பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு நூல்கள் மட்டுமேயாகும். முத்தொள்ளாயிரமும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தமிழச்சியின்
கத்தி, கடல்மேற் குமிழிகள், காதலா, கடமையா?, நல்ல தீர்ப்பு, இருண்டவீடு உள்ளிட்ட நூல்களையும்
மொழிபெயர்த்துத் தமிழ்ப்பணியாற்றியுள்ளார்கள்.
இவ்வாறு தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி
உழைத்த இவருக்கு இத் தமிழகத்தின்கண் - இந்தியாவின்கண் வழங்கும் உயர்பரிசில்கள், விருதுகள் பலவும் வழங்கியிருக்க
வேண்டுமல்லவா? பின்தங்கிய சமூகத்தில் பிறந்த நம் பேராசிரியரை முன்மொழியத் தமிழகத்தில்
யாரும் முன்வராமல் போனமை வருத்தம் தருவதாக உள்ளது.
பேராசிரியர் அவர்களின் மொழிபெயர்ப்புப் பணியைப்
பற்றி ஆர்வமாக நாங்கள் கேட்டதும் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி இருந்ததை உரையாடலில்
உணர்ந்தேன். ஐயாவின் இசைவுடன் அவர்களின் உரையை என் செல்பேசியில் காணொளி (வீடியோ) வடிவில்
பதிந்துகொண்டேன். அடுத்த கட்டத்திற்கு எங்கள் உரையாடல் நீளத் தொடங்கியபொழுது என் செல்பேசியின்
கொள்ளவு நிறைவு பெற்றிருந்தை அறிந்து மீண்டும் வருவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.
பேராசிரியர் அவர்களின் தமிழ்ப்பணிகள்
முனைவர் வீ. சிவபாதம், பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி,
மு.இளங்கோவன்
கரந்தை செயகுமார், பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி, மு.இளங்கோவன்
பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்களுடன் மு.இளங்கோவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக