நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 டிசம்பர், 2013

தொல்காப்பிய அறிஞர் முனைவர் பூந்துறையான்…


முனைவர் பூந்துறையான் அவர்கள்

இணையம் வழியாக அண்மையில் முனைவர் பூந்துறையான் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஈரோட்டுக்குச் செல்லும்பொழுது கட்டாயம் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அவ்வகையில் ஈரோட்டுக்குச் செல்லும் என் செலவுத்திட்டம் உறுதியானதும் என் வருகையை ஐயாவிடம்  சொன்னேன். முனைவர் பூந்துறையான் அவர்களும் என்னைச் சந்திப்பதில் ஆர்வம்கொண்டு அழைப்பு விடுத்தார்.

மகாராசா கல்லூரியின் தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்து உரையாற்ற கல்லூரி முதல்வர் பேராசிரியர் க. இராசலெட்சுமி அவர்களும், முனைவர் ந. இராசேந்திரன் அவர்களும் என்னை அழைத்திருந்தனர். கல்லூரியில் ஆற்ற வேண்டிய பணிகளை முடித்து (20.12.2013), நண்பர்களுடன் மாலையில் பெரியார் நினைவு இல்லம் சென்றேன். எங்களுடன் நூலகர் தருமராசு ஐயா அவர்களும், கல்லூரியின் நிருவாக அதிகாரி அவர்களும் வந்திருந்தார்கள். பெரியார் நினைவில்லம் பார்த்து, விடுதிக்குத் திரும்பும்பொழுது முனைவர் பூந்துறையான் அவர்கள் நான் தங்கியிருந்த விடுதியில் காத்திருந்தார்கள். அனைவரும் அருகில் இருந்த உணவகத்தில் சிற்றுண்டி முடித்து விடைபெற்றுக்கொண்டோம்.

நான் பூந்துறையான் அவர்களுடன் விடுதி அறைக்குத் திரும்பினேன்.

முனைவர் பூந்துறையான் அவர்களை நூல்கள் வழியாக முன்பே அறிவேன் எனினும் நேரில் உரையாடும்பொழுது அவரின் புகழ்மிகு வாழ்வை அறிந்து மகிழ்ந்தேன். இவர்களைப் போலும் தமிழ்ப்பற்றும், தமிழ்ப்புலமையும் உடையவர்களால்தான் தமிழ் நிலைபெற்று விளங்குகின்றது எனவும் தமிழினம் மெதுவாகவேனும் ஆக்கத் திசைகளில் முன்னேறுகின்றது எனவும் உணர்ந்தேன்.

எடுத்த எடுப்பிலேயே தங்கள் பெயர் பூந்துறையான் என்றுதானே வரும். பூந்துறயான் என்று எழுதுகின்றீர்களே? இது பிழையல்லவா? என்று கேட்டேன். பூந்துறையான் என்பது தம் குலதெய்வம் சார்ந்த பெயர் எனவும், தம் பெயர் இரத்தினமூர்த்தி எனவும் ஐயா குறிப்பிட்டார். பூந்துறயான் என்று எழுதுவது தவறில்லை என்றும் ஐயா அவர்கள் குறிப்பிட்டார்.

பூந்துறையான் அவர்கள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தம் வாழ்க்கையைத் தமிழ்ச்சூழலுடன் அமைத்துக்கொண்டு வாழ்பவர். வாழ்க்கை பற்றிய தெளிந்த பார்வையுடையவர். தம் மாணவர்களைத் தம் பிள்ளைகளாகக் கருதி வளர்ப்பவர். தம்மை நெருங்கி நின்று உதவி கேட்பவர்களுக்குத் தமிழ் சார்ந்த ஆய்வுத்தலைப்புகளை வழங்கி அவர்களின் ஆய்வுக்குத் தொடர்ந்து உதவி வருபவர். தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் மலர்ச்சிக்குமான சிந்தனையில் நாளும் திளைப்பவர். தம் இல்லத்தில் புத்தகங்களின் நடுவே வாழ்ந்துவருபவர்.

முனைவர் பூந்துறையான் அவர்கள் தமிழுக்காக உழைப்பவர்களில் முதன்மையானவர். தனித்தமிழறிஞர்கள் பலரின் தொடர்பில் இருந்தவர். அவர்களின் நூல்களைக் கற்றும், இயக்கப் பணிகளில் பங்கெடுத்தும் வருவபவர். தமிழ் எண்ணம் கொண்டு ஆக்கப்பணிகளில் தம் ஓய்வுக்காலத்தைச் செலவிடும் இவர்தம் தமிழ் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் பூந்துறையான் அவர்கள் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த கா.வெங்கடாசலம், வீரம்மாள் ஆகியோரின் மகனாக 23.04.1950 இல் பிறந்தவர். கள்ளிப்பட்டியில் தொடக்க காலக் கல்வியை முடித்தவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர். அதன் பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.

 பூந்துறையானின் இளம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு திருமுருகாற்றுப்படை அமைப்பியல் ஆய்வு என்பதாகும். தொல்காப்பியத்தில் தமக்கிருந்த மிகு புலமையை அறுதியிட்டு உரைக்கும் வகையில் தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை என்னும் தலைப்பைத் தேர்ந்து, பேராசிரியர் முனைவர் கா. அரங்கசாமி ஐயா அவர்களின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேட்டைக் கற்கும்பொழுது ஐயாவின் தொல்காப்பியப் புலமையையும், புத்திலக்கியப் பயிற்சியையையும் கண்டு மகிழலாம்.

முனைவர் பூந்துறையான் அவர்களின் துணைவியார் திருவாட்டி சாந்தி அவர்கள் ஐயாவின் தமிழ்ப்பணிகளுக்குத் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் நல்கி வருபவர்.

தமிழகத் தமிழாசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிந்து வருபவர். கள்ளிப்பட்டியில் தமிழ் வாழ்வு வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து தொல்காப்பிய ஆய்விலும், சங்க இலக்கிய ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தாம் மட்டும் தமிழ் வாழ்க்கை வாழ்வதுடன் அமையாமல் தமிழ்க்குழந்தைகளையும் அந்த வாழ்க்கையில் பழக்க வேண்டும் என்று அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நூல்கள் இவர் எழுதிய நூல்களாகும்.


பூந்துறையான் அவர்கள் தமிழுக்கு வழங்கிய கொடை:

·         மரபுத்தொடர்களும், சொற்றொடர்களும் (1977)
·         தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை (2000)
·         திருமுருகாற்றுப்படை அமைப்பியல் ஆய்வு (2001)
·         மாணவர் நாற்பது (2004)
·         குடும்ப மேலாண்மை (2005)
·         நாம் தமிழாசிரியர் (20010)
·         கண்மணி நீ அய்..எஸ். ஆக வாழ்த்துகிறேன் (2010)
·         குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களின் வண்ணப்படங்களுடன் (2011)
·         தெரிந்த குறட்பாக்கள் எத்தனை? (2011)
·         தொண்டு செய்யத் துடிப்போர்க்கு (2011)
·         திருக்குறள் உரை (குறுந்தகட்டுடன்) (2011)
·         மாணவர் இருபது (2012)
·         தமிழ்நாட்டு அஞ்சல் குறியீட்டு எண்கள் (2012
·         தலை நிமிர்வோம், தமிழ் உணர்வோடு (2012)
·         செல்லக் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் (2012)
·         இளைய வீறே! எழுகவே! (2013)
·         திருவள்ளுவர் வெள்ளி,பொன் காசுகள் (2009)
·         திருவள்ளுவர் வெள்ளிச்சிலை (2010)
·         மாணவர் இருபது காணொளி / video (2013)

தொடர்புக்கு:
முனைவர் பூந்துறையான் அவர்கள்
தமிழியல் ஆய்வு அறக்கட்டளை,
337, திருவள்ளுவர் நகர், கள்ளிப்பட்டி – 638 505
ஈரோடு மாவட்டம்
செல்பேசி: 0091 9442716372

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

முனைவர் பூந்துறையான் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்.