நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 டிசம்பர், 2013

புலவர் நாச்சிகுளத்தார்…


புலவர் நாச்சிகுளத்தார்

பெருமழைப்புலவரின் வரலாற்றை அறிய நான் திருத்துறைப்பூண்டி சார்ந்த பெரியோர்கள் பலரைச் சந்தித்தபொழுது அறிமுகமானவர் புலவர் நாச்சிகுளத்தார் ஆவார். புலவரின் கவிதை ஆர்வத்தைச் சிங்கப்பூரில் வாழும் திரு. முஸ்தபா அவர்களும் எனக்குச் சொல்லி அவரின் இல்ல முகவரியைச் சொல்லி அனுப்பிவைத்தார்

புலவரைச் சந்திக்கச் சென்றபொழுது புலவர் உதயை மு. வீரையன் அவர்களும் உடன் இருந்தார். புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் அகவை முதிர்ந்த தமிழன்பராக இருந்தார். இசுலாமிய மார்க்க நெறிகளை அறிந்தவர். திருவள்ளுவரின் திருக்குறளில் நல்ல ஈடுபாடுகொண்டவர். திருவள்ளுவரைச் சமயநெறிக்குள் அடக்க முனையும் அன்பர்களைப் போல் புலவர் நாச்சிகுளத்தாரும் சமயநெறிக்குள் நின்று நோக்குகின்றார்.

புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் சீறாப்புராணத்தை இரு தொகுதிகளாகப் பதிப்பித்தவர் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பல இலட்சம் கவிதைகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிடும் நாச்சிகுளத்தார் வெண்பா எழுதுவதில் வல்லவர். இவர்தம் திருமண நிலையத்தின் மேல் பகுதிகள் முழுவதும் தம் நூல்களை அச்சிட்டு விற்பனையாகததால் தேக்கிவைத்துள்ளார். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டுள்ளார்.


புலவர் நாச்சிகுளத்தார் அவர்களின் சிறப்பை நான் பலவாண்டுகளுக்கு முன்பே அறிந்தவன் எனினும் எனக்கிருந்த பல்வேறு பணிகளில் அவரின் வாழ்க்கையை இணையத்தில் பதிவதற்கு உரிய வாய்ப்பு அமையாமல் இருந்தது. இன்று (17.12.2013) புதுச்சேரியில் நடைபெறும் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தில் புலவர் நாச்சிகுளத்தார் அவர்களுக்கு மகாகவி இக்பால் விருது வழங்கும் நிகழ்ச்சி இருந்தது. தாம் புதுவை வருவதை முன்பே தொலைபேசி வழியாக எனக்குத் தெரிவித்திருந்தார். நானும் புலவரின் வருகைக்குக் காத்திருந்தேன்.


 புலவர் நாச்சிகுளத்தார் அவர்களுக்கு மகாகவி இக்பால் விருது வழங்குபவர் புதுவை அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு குரு. பன்னீர்செல்வம் அவர்கள்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கு காற்று வளிப்பாட்டு அறையாக இருந்ததால் சமையற் கூடம் அருகில் அமர்ந்திருப்பதைத் தெரிவித்ததை ஒட்டி அங்குச் சென்று விருது வழங்கப்பட்டவுடன் நம் இல்லத்துக்குப் புலவரை அழைத்து வந்தேன். அழைத்து வந்து, உரையாடியபடியே அவர்தம் வாழ்க்கை வரலாற்றைக் கேட்க முடிந்தது.

புலவர் அவர்கள் முறையான கல்வி பெறாதவர் என்றாலும் தாமே படித்து சித்தர் பாடல்கள், தாயுமனவர் பாடல்கள், குணங்குடியார் பாடல்கள், பல்வேறு சிற்றிலக்கியங்களிலிருந்து பாடல்களை மனப்பாடமாகச் சொல்லும் இயல்புடையவர். திருக்குறளில் நல்ல பயிற்சி உண்டு. 

புலவர் அவர்கள் தாயின் வயிற்றில் ஆறுமாதக் கருவாக இருந்தபொழுது தந்தையார் மறைந்தார். அன்னையார் மிக வறுமையுற்ற சூழலில், குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்கினார். தம் பதினாறாம் அகவையில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியாவில் ஐம்பதாண்டுகள் வணிகம் செய்து பொருளீட்டித், தமிழகம் வந்து புலவரின் பிறந்த ஊரில் தமிழ்ப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, தமிழில் மரபுப்பாடல் வரைவதில் ஈடுபட்டுப் பல இலக்கம் கவிதைகளைப் புனைந்துள்ளமை அறிந்து மகிழ்ந்தேன்.

ஒரு வெள்ளைத்தாள் வாங்கி ஒரு வெண்பாவை விரைந்து வரைந்து வழங்கினார். அது இது:

“என்னை அழைத்தே இளங்கோ உபசரித்த
அன்னையைப் போன்ற அரவணைப்பை - என்னால்
மறக்க முடியாது; மாண்பார் தமிழே!
சிறக்க வழியதனைச் செய் ” – புலவர் நாச்சிகுளத்தார் (17.12.2013)

தமிழில் மரபுப்பாட்டு வரையும் இவர்தம் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

புலவர் நாச்சிகுளத்தார் அவர்களின் இயற்பெயர் முகம்மது யூசுப் ஆகும். புனைபெயர் கவியோகி நாச்சிகுளத்தார். பெற்றோர் பெயர் முகம்மது மைதீன், ஆமினா அம்மாள். இவர் பிறந்த ஆண்டு 1934. பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் ஆகும். இவர் பள்ளிக்கூடம் சேர்ந்தது 1940 ஆம் ஆண்டு. வெளியேறிய ஆண்டு 1944 ஆகும். 1960 இல் கவிதை புனையத் தொடங்கி மூன்று இலட்சம் கவிதைகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இவருக்கு யாரும் மரபிலக்கணம் பயிற்றுவித்ததில்லை. தாமே உணர்ந்து மரபிலக்கணப்படி எழுதுபவர். ஐம்பது ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்தவர்இவருக்கு ஐந்து மக்கள் செல்வங்கள் வாய்த்துள்ளனர்குக. சதாசிவ அடிகள்(சங்கேந்தி), பெருமழைப் புலவர், சுவாமி இராமதாசர், கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட குருமார்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றவர்.

திருக்குறளில் இடம்பெறும் நீந்துவர்?” “நீந்தாதவர்?”  என்றும் கற்பவைஎன்றும் உரிய இடங்களில் பயன்படுத்திய சொற்கள் பொருள் பொதிந்தவை என்கின்றார். திருக்குறள் பயிற்சியுடைவர் என்பதற்கு இவையே சான்றுபகரும்.

நாச்சிகுளத்தில் அறிவாலயம் ஒன்றும், நாச்சிகுளம் பள்ளி இரண்டு கட்டடங்களும், பேருந்து நிறுத்தும் நிழலகமும் கட்டித் தந்துள்ளார்.

நாச்சிகுளத்தாரின் தமிழ்க்கொடைகளுள் சில:

சீறாப்புராணம்- (மூலம் மட்டும்)
சீறாப்புராணம்- (உரையுடன்)
இராஜநாயகம்
ஞானகளஞ்சியம்
வேதாந்த பாஸ்கரன்
ஞானயோக ரகசியம்
நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்
இன்பத் தமிழில் ஏசுநாதர் (தெய்வீக அந்தாதி)
கம்பருக்குத் தாலாட்டு(பிள்ளைத் தமிழ்)
கந்தன் கலிவெண்பா
நாலடியில் இரண்டாயிரம்
தென்னகத்தின் திருத்தூதர் திருவள்ளுவர்
குறிப்பை உணர்த்தும் குறள் 

புலவர் நாச்சிகுளத்தார் முகவரி:

புலவர் நாச்சிகுளத்தார்,
உதயமார்த்தாண்டபுரம் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்- 614 706


தொலைபேசி: 04369 – 245413 செல்பேசி : 9486741248

கருத்துகள் இல்லை: