நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 13 டிசம்பர், 2013

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரிகாலன் விருதுகள் வழங்கும் விழா!


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் 14.12.2013 சனிக்கிழமை கரிகாலன் விருது வழங்கும் விழா நடைபெறுகின்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூடத்தில் காலை பத்து மணிக்கு நடைபெறும் தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கில் மலேசியா கவிஞர் சீனி.நைனா முகமது அவர்களின் தலைமையில் கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர். 

சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி இதுவரை என்ற தலைப்பில் முனைவர் சு.கௌசல்யா அவர்களும், திருமதி வீர. விஜயபாரதி அவர்களும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி இனி என்ற தலைப்பில் முனைவர் சீதாலெட்சுமி அவர்களும் கட்டுரை வழங்குகின்றனர்.

மலேசியாவில் தமிழ் வளர்ச்சி இதுவரை என்ற தலைப்பில் ஆ.குணநாதன் அவர்களும், மலேசியாவில் தமிழ்வளர்ச்சி இனி என்ற தலைப்பில் குமாரி கே.எஸ். செண்பகவள்ளியும் கட்டுரை வழங்குகின்றனர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்கள் மதிப்பீட்டுரை வழங்க உள்ளார்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறும் விழாவில் அறக்கட்டளை நிறுவுநர் எம்.எ.முஸ்தபா அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்கள் தலைமையுரையாற்றவும், தமிழ் வளர்ச்சித்துறையின் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள் தமிழ்க்கலை என்ற இதழை வெளியிடவும், புதின ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சிறப்புரை வழங்கவும் உள்ளனர்.

விருது பெறுவோர்: எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்), எழுத்தாளர் சுந்தராம்பாள் (மலேசியா)

தகுதியுரை வழங்குவோர் முனைவர் உ.பிரபாகரன், முனைவர் தெ.வெற்றிச்செல்வன்.


முனைவர் சா.உதயசூரியன் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகமும், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கரிகாலன் விருதுகள் வழங்கும் விழா இனிது நிகழ்வுற வாழ்த்துகின்றேன். விருதுபெறும் தமிழறிஞர்கட்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்