முனைவர் க.சுந்தரபாண்டியன்
முனைவர் க.சுந்தரபாண்டியனின் தமிழில்
பொருளிலக்கண வளர்ச்சி என்னும் ஆய்வு நூலை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
இந்த நூலாசிரியர் அண்மையில் குடியரசுத் தலைவரின் செம்மொழி இளம் அறிஞர்
விருது பெற்றவர். மேலும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயத்தின்
வளர்தமிழ் விருதும் பெற்ற பெருமைக்குரியவர். மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில்
கலந்துகொண்டு பல்வேறு பரிசில்களைப் பெற்றவர். இன்றையத் தமிழகச் சூழலில் குறிப்பிடத்தக்க
இளைஞராக வளர்ந்து வருபவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப்
பணிபுரிபவர்.
முனைவர் க.சுந்தரபாண்டியன்.
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரைச் சேர்ந்தவர். பெற்றோர்
திருவாளர்கள் சி.கருத்தபாண்டி, க.முத்துலட்சுமி. தொடக்கக் கல்வியைத் திண்டுக்கல்,
மரியநாதபுரம் புனித ஆரோக்கியம்மாள் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியைத் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை மதுரை ஏ.வி. மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். இளங்கலை,
முதுகலை, இளம் முனைவர்ப் பட்டங்களை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று பெற்றவர்.
கல்வியியல் படிப்பைப் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் பயின்று பெற்றவர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும்
தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டம் பெற்றவர்.
தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் இந்த
நூலுக்கு முனைவர் பொற்கோ (மேனாள்
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), முனைவர் க.இராமசாமி ஆகியோரின் அரிய அணிந்துரைகள்
நூலுக்கு அழகுசேர்க்கின்றன. நூலின் சிறப்பைச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி என்னும் இந்த நூல்
முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களாக அமைந்துள்ளது.
முதல் இயல் காலந்தோறும் பொருளிலக்கண
நூல்கள் என்ற தலைப்பில் அமைந்து தொல்காப்பியம் தொடங்கிப் பொருளிலக்கணம் கூறும் நூல்களை
அறிமுகம் செய்கின்றது.
இரண்டாம் இயல் பொருளிலக்கண நூல்களின் அகமரபு
என்று அமைந்து பொருளிலக்கண நூல்களில் அமையும் அகத்திணைச் செய்திகளைச் சிறப்பாக ஆராய்கின்றது.
தமிழிலக்கியத்தில் அகம்சார் கருத்துக்கள்
என்று அமையும் மூன்றாம் இயல் எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்களில் இடம்பெறும் அகம் சார்ந்த கருத்துக்களை ஆராய்ந்துள்ளது.
பொருளிலக்கண நூல்கள் சுட்டும்
புறமரபுகள் என்னும் நான்காம் இயல் புறத்திணை நூல்களில் குறிப்பிடப்படும்
புறத்திணை சார்ந்த செய்திகளை ஆராய்கின்றது.
ஐந்தாம் இயல் தமிழிலக்கியத்தில் புறப்பொருள்
கருத்துக்கள் என்று அமைந்து தமிழிலக்கியங்களில் புறப்பொருள் குறித்துப் பேசப்படும்
செய்திகளை எடுத்துரைக்கின்றது.
பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள செய்திகள் தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்குப்
பயன்படும் அரிய தகவல்களாகும்.
இலக்கணம் என்றால் அஞ்சி நடுங்கும் இன்றையத்
தமிழ்ச்சூழலில் அரிய தலைப்பைத் தேர்ந்து ஆய்வு செய்துள்ள முனைவர் க.
சுந்தரபாண்டியன் தொடர்ந்து இலக்கண ஆய்வுகளில் முன்னிற்க வேண்டும் என்பது
நம் அவா. அவருக்கு நம் அன்பான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக