தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்
தமிழ்வள்ளல் முஸ்தபா அவர்கள் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச்
செய்து வருகின்றார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத்
தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கில் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழவேள் கோ. சாரங்கபாணி
ஆய்விருக்கை மூலம் கரிகாலன் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது வழங்கும் விழா 2013 திசம்பர் 14 இல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்
நடைபெற உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ச. சுந்தராம்பாள் எழுதிய பொன்கூண்டு(சிறுகதைத்
தொகுப்பு) நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய திரிந்தலையும்
திணைகள்(புதினம்) நூலுக்கும் இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில்
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
விருது வழங்கும் விழாவில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து
பேராளர்கள் பத்துப்பேர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளைத்
தமிழ்ப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் செய்துள்ளன.
எழுத்தாளர் ச.சுந்தராம்பாள்
எழுத்தாளர் ச.சுந்தராம்பாள் அவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 02.02.1953 இல் பிறந்த இவரின் புனைபெயர் சுதா ஆகும். தமது, 14 ஆம் அகவையில்
மாணவர்களுக்கான கதை, கட்டுரை, கவிதை என எழுதத்
தொடங்கிய இவர், இதழ்களுக்கும், வானொலி
நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து எழுதிவருகிறார்.
தமது 16-ஆவது அகவையில் “சிரிப்பு ஒன்றே போதும்” என்ற இவரது
சிறுகதை ‘தமிழ் நேசன்’ இதழில் வெளிவந்தது. இவரின் தந்தை மா. சதாசிவம்,
இதழாளர் முருகு சுப்பிரமணியம், அப்துல்
முத்தாலிப், எஸ்.எஸ்.சர்மா இவர்களின் ஊக்குவிப்பும், இலக்கிய வானில் ஒரு துருவ விண்மீனான இவரின் கணவர் எம். ஏ. இளஞ்செல்வன் அவர்களின் ஒத்துழைப்பும் அமைய எழுத்துத்துறையில் சுடர்விடத் தொடங்கினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இவருக்கு ‘முருகு சுப்பிரமணியம்’ இலக்கிய விருது, தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது. 35 ஆண்டுகளாக
மலேசியாவின் தமிழ் இதழ் முகவராக இருந்தவர்.
இப்பொழுது ‘தினக்குரல்’ நாளிதழின் இயக்குநர்களில் ஒருவராகவும், துணையாசிரியராகவும், ஞாயிறு, மங்கையர் குரல், மாணவர் குரல், பக்தி குரல், தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றார்.
எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்
எழுத்தாளர் ஜெயந்தி
சங்கர் அவர்கள் சிங்கப்பூரில் 1990 முதல் வாழ்ந்துவருகின்றார்.
சிங்கப்பூர்ப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1995 ஆம்
ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள், மொழிபெயர்ப்பு
ஆகியதுறைகளில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இணைய இதழ்களில் எழுதி உலகத் தமிழ்
மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவரைப் பற்றி மேலும் அறிய இங்குச் செல்க.
படங்கள் உதவி: மலேசிய எழுத்துலகம், விக்கிப்பீடியா
1 கருத்து:
விருது பெறஇருப்போருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன். நன்றி ஐயா
கருத்துரையிடுக