நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
அரிக்கமேடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிக்கமேடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 மார்ச், 2013

சொல்லாய்வுச் செல்வர் சு.வேல்முருகன்




முனைவர் சு.வேல்முருகன்

புதுவையில் புகழ்பெற்ற ஆய்வாளர்களுள் சொல்லாய்வுச்செல்வர் சு.வேல்முருகன் அவர்கள் குறிப்பிடத்தகுந்த பெருமைக்குரியவர். நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக இருந்த காலத்திலிருந்து சு.வேல்முருகன் அவர்களை நன்கு அறிவேன். அவருடன் இணைந்து அரிக்கமேட்டு அகழாய்வுக்குச் சென்ற நினைவுகள் அலைமோதுகின்றன.

அரிக்கமேடு பற்றிய விவரங்களை நண்பர்களிடம் கேட்டபொழுது சிறு சிறு செய்திகளை மட்டும் சொன்னார்கள். ஆனால் சு.வேல்முருகன் அவர்களைக் கேட்டபொழுது மலைக்கத்தகுந்த செய்திகளைச் சொல்லி வியப்பூட்டினார். அதனால் அவரை அழைத்துக்கொண்டு, ஒளிப்படக் கலைஞர் செந்தமிழினியனையும் அழைத்துக்கொண்டு அரிக்கமேடு சென்றேன். அங்கிருந்த ஒவ்வொரு பகுதிகளையும் எனக்கு விரிவாகக் காட்டி, அரிக்கமேடு குறித்த விரிவான விவரங்களை எனக்குச் சொன்னார். சு.வேல்முருகன் அவர்களின் முன்னோர் அரிக்கமேடு அகழாய்வில் பணியாற்றிய விவரத்தையும் அதனால் அரிக்கமேட்டு ஆய்வில் கூடுதல் விவரம் தமக்குத் தெரியும் என்றும் சொல்லித் தாம் சேமித்து வைத்திருந்த அரிக்கமேட்டு அரும்பொருள்களை என் பார்வைக்கு உட்படுத்தினார். 

அதுபோல் அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், ஓடுகள், சாயம் தோய்ந்த பொருள்களையெல்லாம் எனக்குக் காட்டினார். நினைவுக்குச் சில பொருட்களை வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அதன்பிறகு அரிக்கமேடு குறித்த ஒரு கட்டுரை எழுதித் தினமணி ஏட்டில் அது வெளிவந்தது.

பின்னர்த் தமிழ் இலக்கியம், இலக்கணம் சார்ந்த, தமிழ் உணர்வாளர்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்பொழுது சு.வேல்முருகன் ஐயாவிடம் நலம் வினவி மகிழ்வேன். இவர்கள் வாணிதாசன் இலக்கிய ஆய்வுகளிலும், புதுவைச் சிவம் இலக்கிய ஆய்வுகளிலும் ஆழங்கால்பட்ட புகழ்ப்பெருமைக்குரியவர். சிறப்பிற்குரிய சு.வேல்முருகன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் சு.வேல்முருகன் அவர்களின் தமிழ்வாழ்க்கை

சு.வேல்முருகன் அவர்கள் புதுவை மாநிலம் தவளக்குப்பத்தில்26.12.1946 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் சுப்பராயன்-செங்கேணி ஆவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

புதுவை அரசின் கல்வித்துறையில் 37 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். புதுவை அரசின் நல்லாசிரியர் விருது, கலைமாமணி விருது பெற்றவர். இவர்தம் நூல்கள் தமிழக அரசாலும், புதுவை அரசாலும் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சொல்லாய்வு, கல்வெட்டாய்வு, அகழாய்வுத்துறைகளில் ஈடுபாடுகொண்டவர். மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் உரையாற்றுவதில் வல்லவர். தமிழுக்கு ஆக்கம் தேடும் போராட்டங்களில் ஈடுபட்டுத் தொடர்ந்து குரல்கொடுப்பவர். புதுவையின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பேற்றும், இணைந்தும் பணிபுரிகின்றார்.

சு.வேல்முருகன் அவர்கள் செந்தமிழ்க்கொண்டல் ஆய்விதழின் ஆசிரியராக விளங்குகின்றார்.

முனைவர் சு.வேல்முருகன் தமிழுக்கு வழங்கிய கொடை: 
1.   அன்னை இந்திரா ஒரு வெள்ளைப்புறா
2.   வாணிதாசன் பாடல் திறாய்வு
3.   ஆராய்ச்சி ஒரு சொல்லாய்வு
4.   கோப்பெருஞ்சிங்கன் கனவு
5.   வாணிதாசன் குழந்தை இலக்கியம்
6.   வாணிதாசன் பாடல்களில் உருக்காட்சி
7.   மாறுபட்ட மல்லிகை
8.   கம்பன் பாடிய அறம்
9.   கம்பனில் அறிவு
10. பகல் அல்லி
11. சேக்கிழார் வரலாறு
12. சுந்தரர் வரலாறு
13. அப்பர் வரலாறு
14. புதுச்சேரி மண்ணில் பிரான்சுவா மர்த்தேன்
15. வாணிதாசன் கவிதைக்கலை
16. கம்பனில் அருமறை ஆட்சி
17. வாகூர் நாட்டு வண்டார்குழலி
18. திருவக்கரை வரலாறு
19. செவ்வியல்மொழி தமிழ்
20. சேக்கிழாரும் செந்தமிழும்
21.சமுதாய மறுமலர்ச்சிக்குப் புதுவைச் சிவத்தின் பங்களிப்பு


மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)


மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)



மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில்)



  மு.இளங்கோவன், சு.வேல்முருகன் (அரிக்கமேட்டில் மணி,ஓடுகள் தேடுதல்)

புதன், 28 நவம்பர், 2012

கல்வெட்டு அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன்...





வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் படிக்க வந்தபொழுது(1992-93) புதுவையில் உள்ள முதன்மையான நூலகங்களுக்குச் சென்று வருவது வழக்கம். அப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்தில் அறிமுகமானவர் வில்லியனூர் ந. வேங்கடேசன் ஆவார். அன்று முதல் இன்றுவரை படிப்பதை ஒரு வாழ்க்கைமுறையாகக் கொண்டிருப்பவர் வில்லியனூர் ந. வேங்கடேசன்.  எப்பொழுது பிரெஞ்சு நிறுவன நூலகத்திற்குச் சென்றாலும் குனிந்த தலை நிமிராமல் தென்னிந்தியக் கல்வெட்டுகளின் தொகுப்புகளைப் பார்வையிட்டு ஏதேனும் குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பார். இடையூறு செய்யக்கூடாது என்று நான் ஒரு வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு வருவேன்.

கல்வெட்டுகள், அல்லது புதுவை பற்றிய பழைய செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தால் அடுத்த நொடி ஐயாவை அழைத்து விளக்கம் பெறுவேன். பழகுதற்கு இனிய பண்பாளர். பி.எல். சாமி குறித்தும், திருமுடி சேதுராமன் செட்டியார் பற்றியும், குடந்தை ப. சுந்தரேசனார் பற்றியும், அரிக்கமேடு பற்றியும் பல செய்திகளை நான் உரையாடிப் பெற்ற பட்டறிவு உண்டு.

வில்லியனூர் ந. வேங்கடேசனார் எழுதியுள்ள நூல்களைப் பயன்படுத்தாமல் ஒருவர் புதுவை வரலாற்றை எழுதிமுடிக்க இயலாது. அந்த அளவுக்குச் சான்று காட்டும் தரத்தில் அரிய செய்திகளைக் கொண்டு வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள் விளங்குகின்றன. பெருமைக்குரிய அறிஞரின் வாழ்க்கைக் குறிப்பையும் தமிழ்ப்பணிகளையும் இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

வில்லியனூர் ந. வேங்கடேசன்

கல்வெட்டுத்துறையில் தொடர்ந்து இயங்கிவரும் அறிஞர் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் புதுவை மாநிலம் வில்லியனூரில் 30.10.1940 இல் பிறந்தவர். பெற்றோர் சீ. நடராசன், சுப்புலட்சுமி. ந. வேங்கடேசன் தொடக்கக் கல்வியைப் புதுவை வேதபுரீசுவரர்  வித்தியாநிலையத்தில் பயின்றவர். அங்குப் பணிபுரிந்த திரு. தாமோதரன் என்ற தமிழாசிரியர் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார். ந. வேங்கடேசன் எழுதிய கட்டுரையைப் படித்த ஆசிரியர் தனித்தமிழ் படித்தால் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்தி, புலவர் புகுமுக வகுப்பிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து, 12 மாணவர்களை எழுதச் சொன்னார். அதில் ஒன்பது மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அந்த ஒன்பது மாணவர்களில் வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களும் ஒருவர்.

1958 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐந்தாண்டுகள்  படித்தவர். பிறகு 1964 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓ.பி.ஆர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் வள்ளலார் குருகுலத்தில் தமிழாசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு  சென்னையில் அரசுப் பள்ளிகளில் பணியேற்று,  35 ஆண்டுகள் பணிபுரிந்தார். தமிழாசிரியர் பணியை வளவனூர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தவர்(1998).

கல்வெட்டுத் துறையில் தம்மையும் தம் ஒருசாலை மாணாக்கர் பாகூர் புலவர் குப்புசாமி அவர்களையும் வழி நடத்தியவர் அமரர் திருமுடி சேதுராமன் செட்டியார் என்று அடிக்கடி ந. வேங்கடேசன் குறிப்பிடுவார். அவர்தான், “தமிழ்படித்தவர்கள் கல்வெட்டுத் துறைக்கு வரவேண்டும்” என்று ஊக்கப்படுத்தி வில்லியனூர் ந. வேங்கடேசன் போன்றவர்களைக் கல்வெட்டுத்துறைக்கு ஆற்றுப்படுத்தினார்.

 வில்லியனூர் ந. வேங்கடேசன் அன்றிலிருந்து பேசுவது, அல்லது எழுதுவது கல்வெட்டுத்துறையை மட்டும் என்று அமைகின்றது. திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்கள் வில்லியனூர் ந. வேங்கடேசனைப் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று டாக்டர் பிலியோசா, டாக்டர் பிரான்சுவா குரோ, போன்ற பேராசிரியர்களிடம் அறிமுகப்படுத்தி,  பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தார். திருமுடியாரின் நினைவாகத் தாம் நடத்தும் பதிப்பகத்திற்குத் திருமுடிப் பதிப்பகம் என்று பெயர்சூட்டித் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தி வருபவர்.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களுக்கு 1958 முதல் விடுமுறை நாள்களில் பிரெஞ்சு நிறுவன நூலகத்துடன் தொடர்பு உண்டு. அது இன்றுவரை நீடிக்கின்றது.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் இதுவரை 26 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பாலும் கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பு விளக்கும் நூல்களாக அமைந்துள்ளன.

வில்லியனூர் ந. வேங்கடேசன் நூல்கள்:

  1. பண்பும் பயனும் (மொழியியல் கட்டுரைகள்) 1979
  2. வரலாற்றில் வில்லியனூர்- 1979
  3. வரலாற்றுச் சின்னங்கள்
  4. வரலாற்றில் ஆரிய வைசியர்
  5. பல்லவன் கண்ட பனைமலைக்கோயில்
  6. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள்
  7. புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும்
  8. புதுவை மாநிலச் செப்பேடுகள்
  9. கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள்
  10. கல்வெட்டுகளும் சில வரலாறுகளும்
  11. வரலாற்றில் அரிக்கமேடு
  12. நீர்நிலைகளும் வரிகளும்
  13. கல்வெட்டுகளில் திருவாண்டார் கோயில்
  14. கல்வெட்டுகளில் திருபுவனை
  15. கல்வெட்டுகளில் மதகடிப்பட்டு
  16. கல்வெட்டுகளில் பாகூர்
  17. கல்வெட்டுகளில் அரியசெய்திகள்
  18. கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
  19. தேவாரத்தில் இசைக்கருவிகள்
  20. பொன்பரப்பின வாணகோவரையன்(இணையாசிரியர்)
  21. திருநள்ளாற்று தருபாரணேசுவரர் கோயில் ஒரு ஆய்வு
  22. கல்வெட்டுகளில் தொண்டைநாட்டுத் திருமுறைத் தலங்கள்
  23. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்(தொகுதி 1) தொகுப்பாசிரியர்
  24. பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி 2) தொகுப்பாசிரியர்
  25. நடுநாட்டில் சமணம்


வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 தொடர்கள்  தொடர்ந்து உரையாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்து உரையாட்டில் பங்காற்றியுள்ளார்.  புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்றுப் புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள் என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள் (பல்கலைக்கழக வெளியீடு).

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் எழுதிய “வரலாற்றில் மதகடிப்பட்டு” என்ற நூலுக்குப் புதுவை அரசு “தொல்காப்பியர் விருது” வழங்கியது. புதுவை அரசின் “கலைமாமணி” விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது(2008). “கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி” என்னும் நூலுக்குக் காரைக்காலில் உள்ள திரு. கணபதி சுப்பிரமணியம் என்ற தணிக்கையாளர் தலைமையில் இயங்கும் பாரதியார் கழகம் “கல்வெட்டுக் கலைமணி” என்று பட்டமளித்துப் பாராட்டியுள்ளது.

தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராகப் பணியாற்றுகின்றார். புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகின்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். நடன. காசிநாதன் நிறுவிய தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இப்பொழுது தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றார். பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.

.வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் பல இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதுடன் புதுவை வானொலியில்  வரலாற்றுச் செய்தி கள் குறித்த பல உரையும் ஆற்றியுள்ளார்.


வில்லியனூர் ந.வேங்கடேசன் அவர்களின் தொடர்புமுகவரி:

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள்,
40, கிழக்கு சந்நிதி வீதி,
வில்லியனூர்,
புதுவை மாநிலம்
605 110
செல்பேசி: 0091- 9442066599

(குறிப்பு: இக்கட்டுரையை - படத்தைப் பயன்படுத்துவோர் முன் இசைவு பெறுக)



புதன், 10 பிப்ரவரி, 2010

புதுச்சேரி அகழாய்வில் இரண்டு தாழிகள், ஓர் ஈமப்பேழை


தாழியின் தோற்றம்

புதுச்சேரி அரியங்குப்பம் அடுத்த மணவெளிப் பகுதியில் கடந்த ஞாயிறு(31.01.2010) வீட்டுக்குக் கடைக்கால் தோண்டியபொழுது முதுமக்கள் தாழி கிடைத்தது.இதனால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறை அறிஞர்களின் அகழாய்வுப் பணிக்குக் காத்திருந்தனர். தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த அறிஞர்களும் புதுவைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மணவெளிப் பகுதியில் கிடைத்துள்ள அகழாய்வுப் பொருள்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு புதைபொருளாகக் கிடைத்துள்ள தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று அறிவித்தனர்.இக்கால கட்டத்தில் அருகில் உள்ள அரிக்கமேடு மிகச்சிறந்த வணிகத் தளமாகவும்,நாகரிக மாந்தர்களின் வசிப்பிடமாகவும் விளங்கியதை முன்பே ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இப்பொழுது மணவெளி சுடலை வீதியில் கிடைத்துள்ள அகழாய்வுப்பொருள்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் பரந்துபட்ட மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கும்,புதைக்கும் பழக்கம்,எரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருந்துள்ளனர் என்பதற்கும் இத்தாழிகளும் ஈமப்பேழைகளும் சான்றாக விளங்குகின்றன.

வீட்டுக்குக் கடைக்கால் தோண்டும்பொழுது ஒரு முதுமக்கள் தாழியும் சில சிறிய வடிவக்குவளைகளும், சிறு குடங்களும் கிடைத்தன.முன்பே இவை பற்றிப் படத்துடன் எழுதியுள்ளேன்.அருகில் பெரிய தாழி இருந்ததால் அதனை அப்படியே வைத்துவிட்டனர்.

நேற்று அகழாய்வுக்குத் தொல்பொருள்துறை சார்ந்த ஆய்வாளர்களும் புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் வந்து 4 மீட்டர் X 4 மீட்டர் அகழாய்வுக்குழி தோண்டிப் பெரிய அளவில் இருந்த தாழியை வெளிப்படுத்தினர்.அந்தத் தாழி அருகில் ஈமப் பேழை ஒன்றும் இருந்து கண்டெடுத்துள்ளனர்.இந்த ஈமப்பேழையின் அடிப்பகுதியில் எட்டுக்கால்கள் உள்ளன.இந்தக் கால்கல்தான் பேழையைத் தாங்கிக்கொண்டு இருந்தன.இப்பேழையின் உள்ளே சிதைந்த எலும்புத் துண்டுகள் இருந்துள்ளன.இந்தப் பகுதியில் உள்ள மண் மணலாக இருந்ததால் எந்த நாளும் ஈரப்பதமாக இருந்து எலும்புகளும் மற்ற பொருள்களும் சிதைந்துவிட்டன.

பெரிய தாழியின் உள்ளே இரண்டு சிறிய மண்குடம்,ஒரு குவளை(டம்பளர் போன்றது)இருந்தன. ஈமப்பேழையின் அருகில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஒரு குடம் இருந்தது.எலும்புத்துண்டுகள் பெரிய தாழியிலும் சிறிய அளவில் இருந்தன.

இறந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சடங்குகளை நினைவூட்டும் வண்ணம் இத்தாழிகளும்,ஈமப்பேழைகளும், குடங்களும்,குவளைகளும் உள்ளன.புதுச்சேரியின் அருகில் உள்ள அரிக்கமேடு பழங்காலத்தில் பரந்துபட்ட நகரகாக இருந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இந்த இடுகாட்டுப் பகுதிகள் இருந்திருக்கலாம். பேராசிரியர் இராசன் அவர்களிடம் பேசியபொழுது புதுச்சேரியின் பழைமையை மெய்ப்பிக்க இது அரிய சான்றாகும் என்றார்.

தொல்பொருள் ஆய்வுத்துறை சார்ந்த துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாசுஅவர்களும், பிரசன்னா, இரமேசு,பெருமாள் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இந்த அகழாய்வுப்பணியில் ஈடுப்பட்டனர்.ஆய்வு மாணவர் பெருமாள் அவர்கள் பொருள்களின் இருப்பிடம் குறித்து வரைந்து வைத்திருந்த சிறு குறிப்பையும் அவர் இசைவுடனும் நன்றியுடனும் இங்கு அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.

அகழாய்வுப் பொருட்கள் புதுச்சேரி காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நானும் புலவர் விசயரங்கன் திருவேங்கடம் அவர்களும் சென்று அகழாய்வுக்குழிகளைப் பார்வையிட்டுச், செய்திகளைத் திரட்டிப்,படம்பிடித்து வந்தோம்.


பெரிய தாழியும்,ஈமப்பேழையும் கிடைத்த பகுதி


தாழியின் மற்றொரு தோற்றம்


ஈமப்பேழையின் ஒடிந்த கால் பகுதிகள்


கூம்பு வடிவமாக ஈமப்பேழையின் கால்


ஈமப்பேழையின் சிதைவு


ஆய்வாளர் பெருமாள் அவர்களின் குறிப்பு


சிதைந்த நிலையில் அகழாய்வுப்பொருட்கள்


தாழியின் தோற்றம்


உடைந்த நிலையில் ஒரு குடம்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

புதுச்சேரியில் முதுமக்கள் தாழி...


நிலத்தில் வெளிப்பட்டு நிற்கும் முதுமக்கள் தாழி




பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அகழாய்வுப் பொருட்கள்

  புதுச்சேரியின் அரிக்கமேடு என்னும் பகுதி வரலாற்று முதன்மை வாய்ந்த பகுதியாகும். புதுவையின் எழிலார்ந்த கடற்கரை ஒட்டி அமைந்துள்ள அரிக்கமேடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். என் பிறந்த ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் - அரியாங்குப்பம் ஆற்றைக் கடக்கும் பொழுதெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்ப்பது என் வழக்கம்.

 நேற்று (31.01.2010) என் பிறந்த ஊர் சென்று பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது இரவு 9மணியளவில் அரியாங்குப்பம் பகுதியில் கடையில் தொங்கிய ஒரு செய்தித்தாளில் அரியாங்குப்பத்தில் தங்கப் புதையலா? என்று ஒரு செய்தி கண்டு மகிழ்ச்சியடைந்தேன். புதுவை வீடு திரும்பியதும் உடனடியாகச் செய்தியை இணையத்தின் வழியாக உறுதிப்படுத்திக்கொண்டேன்.

 பழைய வரலாற்றுச் செய்திகளை அறிவதில் ஆர்வம்கொண்ட நான் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற பொருள்களையும் இடத்தையும் பார்வையிட நினைத்தேன். பேராசிரியர் நண்பர் ஒருவருடன் புதைபொருள் அகழ்ந்த இடத்தைப் பார்வையிடச் சென்றேன் (01.02.2010). புதுச்சேரியின் தென்பகுதியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து இரண்டு கல் தொலைவு அடுத்து மணவெளி ஊர். அங்குச் சுடுகாட்டு வீதியில் ஐந்தாம் குறுக்குப் பகுதியில் திரு.சீனிவாசன் என்பவரின் வீட்டுமனை உள்ளது.

  வீடு கட்டுவதற்காகக் கடைக்கால் இடுவதற்குக் குழிதோண்டியுள்ளனர். ஆறு பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டுவதற்கு அடையளம் செய்தனர். அதில் ஒரு குழியை அகழும்பொழுது பானை ஒன்று கிடைத்துள்ளது. சாதாரண ஓடு என நினைத்தவர்களுக்குப் பானையின் முழுவடிவம் கண்டு வியப்பு மேலிட்டது. அந்தப் பானையின் உள்ளே சில எலும்புத் துண்டுகளும் இருந்துள்ளன. இரண்டு சிறு டம்பளர் வடிவில் மண்ணால் வனையப்பட்ட பொருளும், இரண்டு சிறு குடங்களும், சட்டியும் வேறு சிறு பொருள்களும் கிடைத்துள்ளன. உடனே அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இடம் பாதுகாப்புக்கு உள்ளாகியுள்ளது.

  முதுமக்கள் தாழி ஒன்று பெரிய அளவில் வெளியே எடுக்கப்படாமல் நிலத்தில் புதைந்த நிலையில் உள்ளது.எஞ்சிய பகுதிகளையும் முழுமையான அகழாய்வுக்கு உட்படுத்தினால் அரிக்கமேட்டின் ஆய்வில் புதிய ஒளி பிறக்கலாம். இன்று சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை பண்டைக் காலத்திலும் சுடுகாடாக விளங்கியிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. முன்பு இந்தப் பகுதிகள் மரங்கள் அடர்ந்த காடுகளாக இருந்துள்ளது என்று மக்கள் சொல்கின்றனர்.

 எழுத்துக்குறியீடுகள் ஏதேனும் இருக்குமோ என்று பார்த்தேன்.ஒன்றும் தென்படவில்லை. அழகிய வேலைப்பாடுகளுடன் பாண்டங்கள் உள்ளன. மீண்டும் இது பற்றி எழுதுவேன்...

(ஆய்வாளர்களுக்குப் பயன்படும் எனக் கூடுதல் படங்கள் இணைத்துள்ளேன்.உரியவர்கள் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளலாம்)


அகழாய்வுக்குழிகள் வேறொரு தோற்றம்


அகழாய்வுப்பொருட்கள்


அகழாய்வுக்குழிகள் அருகில் பொருட்கள்


அகழாய்வுக்குழிகளடங்கிய பகுதி


வீடு கட்ட அடிமனை பறிக்க குழிதோண்டிய பகுதிகள்


தாழியின் இன்னொரு தோற்றம்


பிறந்த குழந்தைபோல் தூய்முயுறாமல் இருக்கும் தாழி


புதைபொருள்கள் எடுக்கப்பெற்ற குழி


காவல்துறையினரின் பாதுகாப்பில் அகழாய்வுக்குழிகள்


எலும்புத்துண்டுகள் அடங்கிய பானை

திங்கள், 13 ஆகஸ்ட், 2007

புதுவைக்குப் புகழ்சேர்க்கும் அரிக்கமேடு ARIKKAMEDU

 தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

 அரிக்கமேடு எனும் பகுதி புதுவையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியாகும். அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் பாதையில் காக்காயன்தோப்பு எனும் ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. அரிக்க மேட்டின் வடக்கே தேங்காய்த்திட்டும், தெற்கே காக்காயன்தோப்பும், கிழக்கே வீராம்பட்டினமும், மேற்கே அரியாங்குப்பமும் எல்லைகளாக உள்ளன.


(கி.பி.17 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்ட கட்டடப் பகுதிகள்)


 அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

 அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.




 அரிக்கமேடு ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமேல் பண்டைக்காலத்தில் புகழ் பெற்ற ஊராக விளங்கினாலும் அது பற்றிய எந்தக் குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பதிவாகாமல் உள்ளமை வியப்பளிக்கிறது. எனினும் அரிக்கமேட்டை அகழாய்வு செய்த அயல்நாட்டு அறிஞர்கள் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளனர். ரோமானிய அரசன் அகஸ்டஸ் காலத்தில் அரிக்கமேடு புகழ்பெற்று விளங்கியமையை இங்குக் கிடைத்த அகஸ்டஸின் உருவம் பொறித்த காசுகள் தெரிவிக்கின்றன.

 அரிக்கமேடு என்ற ஊரின் பெயர்காரணம் பற்றி அறிஞர்கள் பலரும் பல கருத்துக்களைச் சொல்கின்றனர். அருகர் சமயத்தார் இங்கு மிகுதியாக இருந்தனர். எனவே அருகன்மேடு - அரிக்கமேடு என்றானது என்பர். மேலும் அருகர் - புத்தர். புத்தர் சிலை இங்கு இருந்ததால் அரிக்கமேடு என்றானது என்பர். இவ்வாறு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அரிக்கமேட்டின் இயற்கை அமைப்பைப் பார்க்கும்பொழுது ஆற்று நீரும், கடல் நீரும் பல காலம் பரந்துபட்ட பகுதியை அரித்து மேடாக ஒரு பகுதியை மாற்றியதால் ஊர்மக்கள் வழக்கில் அரிச்சமேடு - அரிக்கமேடு என்று வழங்கி இருப்பார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாதபடி மேட்டுப்பகுதியாக மாமரத் தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

  தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

  அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையெடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

  புதுவையைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் பலமுறை முயற்சி செய்தனர் எனினும் பிரெஞ்சியரின் ஆட்சிக்குட்பட்டுப் புதுச்சேரி இருந்தது. புதுவைக்குப் பிரான்சு நாட்டிலிருந்து பலர் கல்வி, ஆட்சி, ஆய்வின் பொருட்டு வந்தனர். அவர்களுள் லெழாந்தீய் ( Le Gentil ) என்பவர் அரிக்கமேட்டின் சிறப்பை முதன்முதல் வெளியுலகிற்குத் தெரிவித்தார். 1769 இல் இவர் தம் முயற்சி நூலாக வெளிவந்தது. இதில் அருகன்சிலை ஒன்று இருந்ததை வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஏற்பட்ட போர் முயற்சியால் இவ்வாய்வு முயற்சி தொடரவில்லை போலும்.



  1908-இல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய் (Jouveau Dubreuil ) என்பவர் அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி 1939இல் வியட்நாமில் இருந்து அரிக்கமேட்டு ஆய்விற்கு அறிஞர் ஒருவர் வந்தார். கொலுபேவ் என்னும் அந்த அறிஞரின் ஆய்வின் பயனாக அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட உரோமானிய நாணயங்களைக் கண்டு வெளியிட்டார்.

 1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நடுவதற்குக் குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்குத் தெரியவந்தன.

  1949இல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சில் நூலாக வெளியிட்டார். 1980இல் அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி ஆய்வு செய்து 1983இல் ஒரு கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர்ப் பகுதிகளைப் பற்றி ஆராய்ந்து எழுதினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையை முழுவதும் தாங்கியுள்ளன.

முனைவர் மு.இளங்கோவனும், முனைவர் சு. வேல்முருகனும்
(2007 இல் எடுக்கப்பட்ட படம்)


அயல்நாட்டினர் பல்வேறு காலங்களில் உருவாக்கிய ஆய்வு முயற்சிகளைத் தொடர்ச்சியாக இன்று கிடைக்கும் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திச் செய்திருந்தால் மிகப்பெரும் உண்மைகள் தெரிந்திருக்கும். பழமையைப் போற்றாத நம்மக்களுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :

  அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப் பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

  பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணிஉருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

  பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

 கூர்முனைச் சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச் சாடிகள் சான்றுகளாக உள்ளன.

  எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

    உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன. அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்யும்பொழுது, பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

நன்றி: 
தினமணி புதுவைச்சிறப்பிதழ் நாள் :19.07.2007 (அனைத்துப் பதிப்புகளிலும்)