தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மு.இராசாராம் தலைமையுரை
சென்னையில் அமைந்துள்ள
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக முனைவர் கோ. விசயராகவன்
அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையில் சீரிய முறையில் துணை
இயக்குநராகப் பணியாற்றிய இவரைத் தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
இயக்குநராகப் பணியமர்த்தியுள்ளது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இவர் இந்த
நிறுவனத்தில் பணியேற்ற பிறகு பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனப்பணிகள் வேகமெடுத்துள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப்
புதிய கட்டடம் கட்ட 4 கோடி உருவாவில் திட்டமிட்டு, அரசிடமிருந்து தொகை பெற அனுமதி
பெற்றுள்ளமை ஒன்றே இவரின் வினைத்திறனுக்குப் போதிய சான்றாகும். மேலும் 2013
பிப்ரவரி மாதம் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகள்,
பயிலரங்குகள், சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமையும் இங்குக்
குறிப்பிட்டாக வேண்டும்.
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை
ஒருங்கிணைக்கும் முயற்சியில் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில்
அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற தலைப்பில் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கம்
14,15-02.2013 இரண்டுநாள் நடைபெறுகின்றது.
முதல் நாள் காலை முதல்
அமர்வுத் தொடக்க விழாவாக அமைந்தது. தேசியக் கருத்தரங்கம் என்று
குறிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், பிரான்சு,
அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்கள் கலந்துகொண்டனர். தமிழகம்,
புதுவை சார்ந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்,
மாணவர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைத்தனர். திரைப்பா ஆசிரியர் கே.அறிவுமதி
உள்ளிட்ட பெருமக்களும் கலந்துகொண்டனர்.
உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற பொருண்மையிலான கருத்தரங்கிற்கு
வந்திருந்தவர்களை நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்றார்.
தமிழ்நாட்டு அரசின் தமிழ்
வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறையின் செயலாளர் முனைவர் மு.இராசாராம்
அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். முனைவர் மு.இராசாராம் அவர்கள் ஆங்கில
இலக்கியம் பயின்ற பெருமைக்குரியவர். தமிழ்ப்பற்றும், தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்டவர்.
திருக்குறளைப் பிற மொழியினரும் அறிய வேண்டும், படிக்கவேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். தமிழ் வளர்சிக்குப்
பல்வேறு பணிகளை அமைதியாகச் செய்துவருபவர். இவரின் பெரும் ஒத்துழைப்பால்தான் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் புதிய கட்டடம் கிடைக்க உள்ளது. தொடர்ந்து நிறுவனப்
பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதற்குச் செயலாளர் அவர்கள் உதவி வருகின்றார்கள்
என்பதை அவர்களின் தலைமையுரையில் அறிந்து பன்னாட்டு அறிஞர்களும் பாராட்டினர்.
தமிழ்நாட்டு அரசின்
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கலந்துகொண்டு
தமிழ்நாட்டு அரசு தமிழுக்குச் செய்துவரும் பணிகளை நினைவுகூர்ந்தார். முனைவர் ந. தெய்வசுந்தரம்
அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பேராதனைப்
பல்கைலக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் துரை. மனோகரன் அவர்களும்,
மலேசியாவின் சபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் அருள்செல்வன் அவர்களும்
வாழ்த்துரை வழங்கினர்.
முதல் அவர்வு இலங்கைப்
பேராசிரியர் யோகராசா அவர்கள் தலைமையில் நடந்தது. பேராளர்கள் ஆறுபேர் கட்டுரை
படித்தனர். நான் பிரான்சு நாட்டு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புலகம்
என்ற தலைப்பில் அவர்தம் புதினங்களை அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.
முனைவர் மு.வளர்மதி,
முனைவர் து.ஜானகி, முனைவர் கு.சிதம்பரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
முனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல். அருகில் உ.த.நி.இயக்குநர் முனைவர் கோ.வியராகவன்
முனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல்
முனைவர் மு.இராசாராம், மு.இளங்கோவன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுக்கு வாழ்த்துரைத்தல் மு.இளங்கோவன்
முனைவர் மு.இளங்கோவன் ஆய்வுரை அருகில் இலங்கைப் பேராசிரியர்கள் யோகராசா, திரு.குணேசுவரன்
1 கருத்து:
வணக்கம் இளங்கோவன். எனது பக்கத்தில் என் சார்பான படங்கள் பதிவேற்றியுள்ளேன்.
http://skuneswaran.blogspot.com/2013/02/blog-post.html
http://vallaivelie.blogspot.com/
கருத்துரையிடுக