சென்னை, காட்டாங்குளத்தூர் திரு.இராமசாமி
நினைவுப் பல்கலைக்கழகத்தில் (SRM University) நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் கலந்துகொண்டு
கணினியியல் தொழில்நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுகளும் என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்
(06.02.2013, பிற்பகல்). இரண்டு கிழமையாக எனக்கு இருந்த பல்வேறு பணிநெருக்கடிகளுக்கு
இடையில் இக்கட்டுரையைக் கடைசி நேரத்தில்தான் உருவாக்கமுடிந்தது.
குற்றாலம் பராசக்திக்
கல்லூரிப் பயிலரங்கிற்கு இரண்டுநாள் செலவிட்டமை, உ. த. நி. கருத்தரங்கிற்கு நாகரத்தினம்
கிருஷ்ணாவின் படைப்புலகம் கட்டுரைக்கு அவரின் புதினங்கள் மூன்றைப் படித்தது என்று நேரம்
போதாமல் தவித்தேன். காட்சிவிளக்கம் சில்லுகள் சிறப்பாகத் தயாரிக்க நேரம் இல்லாமல் இருந்ததால்
வீட்டில் தயாரித்திருந்த கரட்டு வடிவை நிகழ்ச்சிக்கு முன்பாக அமர்ந்து அவற்றை நண்பர்
சுந்தரத்தின் உதவியுடன் முழுமைப்படுத்திக்கொண்டேன்.
என் உரையில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த
செய்திகள் குறைந்த அளவில்தான் இணையத்தில் இடம்பெற்றுள்ளன என்ற நிலையை எடுத்துரைத்து,
தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இணையத்தில் ஈடுபட்டுத் தமிழ்ப்பங்களிப்புக்கு
உழைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை அரங்கில் முதலில் வைத்தேன். அனைவரும் ஆர்வமுடன்
ஏற்றுக்கொண்டனர்.
தமிழ் எழுத்துருக்களின் உருவாக்கம், தமிழ்
விசைப்பலகை என்று பல தடைகளைக் கடந்து இணையத்தில் தமிழ் நுழைந்த வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.
சங்க இலக்கிய ஆய்வுக்குப் பயன்படும் வகையில் மதுரைத்திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம்,
நூலகம்.org, பொள்ளாச்சி நசனின் பணிகள், இளந்தச்சன் பணிகள் இவற்றை நினைவூகூர்ந்தேன்.
அமெரிக்காவில் வாழும் வைதேகி அவர்களின் பணிகள், பேரா.பாண்டியராசனின் பத்துப்பாட்டு
ஆய்வுகள், மாதவிப்பந்தல் பணிகள், பொறியாளர் பிரபாகரனின் புறநானூற்று உரைச்சிறப்பு,
செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் முற்றோதல், மு.இளங்கோவன், முனைவர்
செந்தமிழ்ப்பாவையின் வலைப்பூ, முனைவர் கல்பனா சேக்கிழார் வலைப்பூ பணிகள் இவற்றை அரங்கிற்கு
எடுத்துரைத்தேன்.
மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள்
என அனைவரும் என் உரையை ஆர்வமுடன் செவிமடுத்தனர். இணையத்தில் சங்க இலக்கிய ஆய்வுகள்
குறித்த செய்திகளை நான் கவனித்து வருவதால் கூடுதல் செய்திகளை அறிந்தோர் அறிவிக்க நன்றியுடன்
ஏற்பேன். விரவில் கட்டுரையை முழுமைப்படுத்தி வெளியிடுவேன்.
1 கருத்து:
தங்களின் கணினி இலக்கியப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
கருத்துரையிடுக