நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

குற்றாலம் தமிழ் இணையப் பயிலரங்கம் முதல்நாள் நிகழ்வுகள்…



முனைவர் பா.வேலம்மாள், முனைவர் சி.இராசேசுவரி(கல்லூரி முதல்வர்), முனைவர் மு.இளங்கோவன்
நெல்லை மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை உயராய்வு மையத்தினர் ஏற்பாடு செய்திருந்த இரண்டுநாள் பயிலரங்கு 02.02.2013 காலை 10 மணிக்குக் கல்லூரியின் நூலக அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரிப் பேராசிரியர் முனைவர் பா.வேலம்மாள் அவர்கள் கணினி, இணைய அறிவின் தேவையை வலியுறுத்தியும், கல்லூரிப் பாடத்திட்டத்தில் கணினி, இணையம் குறித்த பாடப்பகுதியை அறிமுகம் செய்ததன் முக்கியத்துவத்தையும் விளக்கி, அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் சி.இராசேசுவரி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். கணினி, இணையம் மாணவர்களுக்குத் தேவை என்பதைப் பல்வேறு சான்றுகளைக் காட்டி விளக்கினார். கணினி, இணையத்தை ஒவ்வொரு மாணவரும் கற்கவேண்டும் எனவும், இணையத்தில் அனைத்துச் செய்திகளும் உள்ளன எனவும் அவற்றை ஒவ்வொரு மாணவரும் பயன்படுத்தி முன்னேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பயிற்றுநர் உரை என்ற அடிப்படையில் முனைவர் மு.இளங்கோவன் கணினி, இணைய அறிவு அனைவருக்கும் தேவை எனவும் குறிப்பாகத் தமிழ் பயிலும் மாணவர்கள், ஆய்வு மாணவர்களுக்குத் தேவை எனவும் வலியுறுத்திப் பேசினார். மாணவர்களின் அறிவை வளப்படுத்தும் பல நூல்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன எனவும் இவற்றை இலவசமாகப் படியெடுத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார். தமிழ்த்தட்டச்சு தொடங்கி இணைய வரலாறு உள்ளிட்ட அனைத்துச் செய்திகளையும் காட்சி விளக்கத்துடன் அறிமுகம் செய்தார்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சு.மகாலட்சுமி அவர்கள் தமிழ் இணையத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும்பொழுது மாணவிகள் ஆர்வமாகக் கற்பதை எடுத்துரைத்து நன்றியுரை வழங்கினார். முனைவர் சோ.பாண்டிமாதேவி அவர்கள் தொகுப்புரை வழங்கினார். சற்றொப்ப நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். புதிய தலைமுறையின் செய்தியாளர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைப் படம்பிடித்து, வெளியுலகிற்கு அறிமுகம் செய்தார். நெல்லை இந்துக்கல்லூரி மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. சிவசங்கரன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



இரண்டாம் நாள் நிகழ்ச்சி..

இரண்டாம் நாள் நிக்ழச்சி 03.02.2013 காலை 10 மணிக்குத் தொடங்கியது. முனைவர் பா.வேலம்மாள் அவர்கள் மாணவர்களின் ஆர்வத்தை வரவேற்று உரையாற்றினார். முனைவர் மு. இளங்கோவன், முனைவர் ச. பட்டாபிராமன் உள்ளிட்ட கணினி இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு வலைப்பூ உருவாக்கம், தரவிறக்கம் பற்றி வகுப்பெடுத்துவருகின்றனர். வரலாற்றுத் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ஒ. ஆனந்தவல்லி, கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இராசராசேசுவரி உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் பயிற்சித்திறனைப் பாராட்டினர். மாலை 4 மணிக்கு நிறைவு விழா நடைபெறும்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

good

Unknown சொன்னது…

good