நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

என் திருப்பூர் செலவு...
 தமிழ்ச்செம்மல் கே.பி.கே. செல்வராசு அவர்கள்
(தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)

திருப்பூருக்கு நான் சென்றது இதுதான் முதன்முறைச் செலவு, பேராசிரியர் செ. திருமாறன் அவர்களின் தொடர்பால் பார்க்சு கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்காக அழைக்கப்பெற்றிருந்தேன். திட்டமிட்டவாறு செலவு சிறப்பாக அமைந்தது. அமெரிக்காவில் வாழும் நண்பர் தில்லை அவர்கள் வழியாகத் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராசு ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.

23.02.2013 காலை 10 மணிக்குக் கல்லூரியில் நிகழ்ச்சி தொடங்கியது. திரு.செல்வராசு ஐயா அவர்களும் நானும் ஒரே நேரத்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். என் நூல்களை ஐயாவுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். அவர்களும் வெளியிட்ட நூல்களை எனக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். கல்லூரி முதல்வர் திரு. திருமாறன் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துக் கல்லூரிச் செயலரிடம் அறிமுகம் செய்தார். தேநீர் விருந்தோம்பலுக்குப் பிறகு அரங்கிற்குச் சென்றோம்.
    
கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பிற கோவைக் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஈரோடு கல்லூரி மாணவர்கள், திருப்பூரின் மற்ற கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. பார்க்சு கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கூட்டுமுயற்சியில் நிகழ்ச்சி முழுநாளும் தொய்வின்றி நடந்தது.

கல்லூரிச் செயலர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராசு, கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோரின் உரைகளுக்குப் பிறகு நான் தமிழ் இணையம் குறித்த அறிமுக உரையாற்றினேன். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கின் முதன்மை உரை அமைந்தது. அனைவருக்கும் குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டிருந்தன, ஆர்வமுடன் அனைவரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

பகல் உணவுக்குப் பிறகு மீண்டும் மூன்று மணி நேரம் பயிலரங்கம் தொடர்ந்தது. செய்முறைக் காட்சிகள் செய்துகாட்டப்பட்டன. பிறகு பங்கேற்பாளர்களின் கருத்துரைகள் எழுத்திலும் பேச்சிலுமாகப் பெறப்பட்டன. அனைவரும் மிகச்சிறப்பாக நிகழ்ச்சி அமைந்ததை எடுத்துரைத்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கல்லூரியில் பயிலரங்கம் நடத்த அழைப்பு விடுத்தனர். ஓய்விருக்கும்பொழுது தவறாமல் கலந்துகொள்வேன் என்று உறுதிகூறி அனைவரிடமும் பிரியா விடைபெற்றேன்.பங்கேற்ற பேராசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்பங்கேற்ற பேராசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்
                               பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்

நிகழ்ச்சி முடிந்து மாலை ஆறு மணிக்கு விடுதிக்கு வந்தேன்.  திரு. கே.பி.கே. செல்வராசு ஐயா அவர்கள் விடுதிக்கு வந்து என்னை அழைத்துகொண்டு அருகில் இருந்த அவர் அலுவலகம் சென்றார். நம் அன்பிற்குரிய செல்வராசு ஐயா மிகப்பெரிய நிலையில் துணி, நூல் வணிகம் செய்வதுடன் தமிழுக்கு அவ்வப்பொழுது இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றார். பெட்னா விழாவுக்குப் புரவலராக இருந்து அவ்வப்பொழுது உதவுவது இவர் வழக்கம் என்று அறிந்தேன். பல மாணவர்களின் படிப்புக்கும் அமைதியாக உதவி வருவதை நண்பர்கள் வழியாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நல்ல தமிழ்ப்பற்றாளரை நண்பராக அறிமுகம் செய்துவைத்த நண்பர் தில்லை அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும்.

திரு. செல்வராசு ஐயா அவர்களின் ஏற்பாட்டில் டாலர் நகரம் நூலாசிரியர் திரு. ஜோதிஜி அவர்கள் வந்திருந்தார். இவருடன் முன்பே இணையவழித் தொடர்பு அமைந்திருந்தமை அப்பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. இருவரும் செய்யும் பணிகளை நினைவுகூர்ந்தோம். என் நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், சேலம் இலட்சுமணன் ஐயா வழியாகத் திரு. ஜோதிஜி அவர்களைப் பற்றி அறிவேன். எங்கள் இருவரையும் பேசிக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு இடையில் சில குடும்பக் கடமைகளுக்காக ஐயா செல்வராசனார் அவர்கள் புறப்பட்டார்கள். நாங்களும் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுக்கொண்டோம்.


திரு. ஜோதிஜி, திரு. கே.பி.கே.செல்வராசு, மு.இளங்கோவன்


நான் அறைக்குத் திரும்பியதும் கல்லூரியிலிருந்து என்னை வழியனுப்ப நண்பர்கள் வந்திருந்தனர். இரவு உணவுக்காக ஒரு சிறந்த உணவகத்திற்கு அழைத்துச் சொன்றனர். திருப்பூரில் கோழியிறைச்சிக்காக அமைக்கப்பெற்றிருந்த "கொக்கரக்கோ" உணவகத்தில் சிறப்பு உணவுக்கு ஆயத்தம் செய்திருந்தனர். நல்ல தூய்மையான, சுவையான உணவு. அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். 

விடுதிக்குத் திரும்பிப் பொருள்களை எடுத்துகொண்டு அவிநாசிக்கு மகிழ்வுந்தில் வந்தோம். ஒரு மணி நேரம் காத்திருந்து நள்ளிரவில் பேருந்தேற்றிவிட்டனர். அன்புடன் விருந்தோம்பிய திரு.சு. சந்நாசி திரு.கார்த்தி, பேராசிரியர் மு. சாமிசுந்தரம் மற்ற பேராசிரிய நண்பர்கள், கல்லூரி முதல்வர் திரு. செ. திருமாறன் ஐயா, பயிலரங்கில் பங்கேற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், கல்லூரி நிருவாகத்தினர் அனைவருக்கும் நன்றியுடையேன். இந்தப் பயிலரங்கம் தமிழ் இணைய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்கப் பயிலரங்கமாக அமைந்தது.

3 கருத்துகள்:

Ravichandran Somu சொன்னது…

நண்பர் ஜோதிஜியை சந்த்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வளர்க தங்கள் தமிழ்ப்பணி !!!

ஜோதிஜி சொன்னது…

மிக்க நன்றி. தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களை டாலர் நகரம் விழாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...