நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பேராசிரியர் தங்க.மணியன் அவர்கள்   முனைவர் தங்க.மணியன் அவர்கள்

மைசூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் தங்க.மணியன் அவர்கள் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க மொழியியல் அறிஞர் ஆவார்.இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பரணம் என்ற ஊரில் 28.06.1949 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் தங்கவேல்- அமிர்தம் ஆவர்.

 அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியை நிறைவுசெய்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும், மொழியியலிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாளிதழ்களில் மொழியமைப்பு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் விரிவிரையாளராக 1980 இல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடங்கிப் பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றவர்(2009).

மைசூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால் கன்னடமொழியில் பயிற்சி ஏற்பட்டது. இதன் காரணமாகக் கன்னடப் படைப்புகளைத் தமிழுக்கும், தமிழ்ப்படைப்புகளைக் கன்னடத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். இவர் தம் நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகளில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். மக்கள் நோக்கு என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். சப்பான் நாட்டில் நடைபெற்ற மொழியியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கிய பெருமைக்குரியவர்.

முனைவர் தங்க.மணியன் அவர்களின் துணைவியார் பெயர் பகுத்தறிவு என்பதாகும். இவர்களின் திருமணம் 25.08.1982 இல் நடைபெற்றது.

தமிழில் பல நூல்களை வழங்கியுள்ள பேராசிரியர் தங்க.மணியன் அவர்கள் பணி ஓய்விற்குப் பிறகு சென்னையில் வாழ்ந்துவருகின்றார்.

முனைவர் தங்க.மணியன் அவர்களின் நூல்கள்:

1.   பத்திரிகைத் தமிழ்(1978)
2.   பத்திரிகை மொழிநடை(1986)
3.   பத்திரிகையியல்
4.   திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு

கன்னடம்
திராவிடமொழிகளின் ஒப்பீட்டாய்வு
தமிழ்மொழி வரலாறு(தமிழ் பாஷா சரித்திரே)

கருத்துகள் இல்லை: