நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ


 முனைவர் சிவ.இளங்கோ

புதுவையில் திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தொடக்க காலத்தில் பலர் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் பாவேந்தர் பாரதிதாசன், புதுவைச் சிவம், தேங்காய்த்திட்டு இராமகிருஷ்ணன், வாணிதாசன் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுள் புதுவைச் சிவம் அவர்கள் பாவேந்தரின் படைப்புகளை வெளியிடுவதிலும் பதிப்பகத்தைக் கவனிப்பதிலும் பெரும் பங்காற்றியவர் ஆவார். புதுவைச் சிவம் பாவேந்தரைத் தம் ஆசிரியராகவே மதித்துப் போற்றியவர். பாவேந்தர் அரசு பணியில் இருந்ததால் வெளிப்படையாக இயங்கமுடியாத நிலை ஏற்பட்டபொழுது புதுவைச் சிவம் அவர்களின் பெயரில் இயக்கப்பணிகளை முன்னெடுத்துள்ளார்.

புதுவைச் சிவம் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும், திராவிட இயக்கத் தொண்டராகவும் செயல்பட்டவர். திராவிட இயக்கக் கொள்கை ஈடுபாட்டின் காரணமாக இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். புதுவைச் சிவத்தின் படைப்புகளையும் பாவேந்தரின் வெளியுலகம் அறியப்படாத படைப்புகளையும் வழங்கி ஆய்வுலகத்தின் பாராட்டைப் பெற்றவர் முனைவர் சிவ. இளங்கோ ஆவார். இவர் புதுவைச் சிவத்தின் மகனாவார்.

புதுவைப் பல்கலைக்கழகத்திற்கு நான் ஆய்வு செய்ய வந்த காலம்(1992-1993) முதல் முனைவர் சிவ. இளங்கோ அவர்களை அறிவேன். பாரதிதாசன் பரம்பரை என்ற என் ஆய்வுக்கு இவர் வழங்கிய நூல்களும் குறிப்புகளும் பலவகையில் பயன்பட்டன. முனைவர் சிவ.இளங்கோ அவர்களின் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் சிவ.இளங்கோ

புதுவைச் சிவம்- செகதாம்பாள் ஆகியோரின் இளைய மகனாகப் பிறந்தவர் சிவ. இளங்கோ  ஆவார்(15.02.1957). அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், இளம் முனைவர் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கவிஞர் புதுவைச் சிவமும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் இவரின் முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. புதுச்சேரியின் அரசியல் வரலாற்றையும் திராவிட இயக்க வரலாற்றையும் நூல்கள் வழியாக வழங்கி வருபவர்.

 சிவ.இளங்கோ நூல்கள்:

கவிஞர் புதுவைச் சிவம் நினைவுப்பூக்கள்(1989)

பாவேந்தரும் புதுவைச் சிவமும்(1990)

புதிய பேராசிரியர்கள்(1990)

பாரதிதாசன் என்கிற கனக-சுப்புரத்தினம்(1991)

பிரஞ்சிந்தியாவும் திராவிட இயக்கமும்(2000)

எட்டுமணிநேர வேலை-ஆசியாவின் முதல் வெற்றி(2004)

பெரியார் பெருந்தொண்டர் புதுவைச் சிவம்(2007)

புதுவைச் சிவம் கவிதைகளும் புரட்சிக் கோட்பாடுகளும்(2008)

கவிஞர் புதுவைச் சிவத்தின் சீர்திருத்த நாடகங்கள்(2012)

தொகுப்பாசிரியர்:

புதுவைச் சிவம் கவிதைகள்(1997)

புதுவைச்சிவம் நாடகங்கள்(2000)

புதுவைச் சிவம் படைப்புகள்(2007)

புதுவைச் சிவம் கட்டுரைகள்(2009)

முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம் வழியாகத் தமிழகம் புதுவையில் நன்கு அறிமுகம் ஆனவர்.

பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவில் இணைந்து தமிழ்த் தொண்டாற்றியவர்.


அண்ணா பேரவையின் புதுவை மாநில அமைப்பாளர். கவிஞர் புதுவைச் சிவம் அறக்கட்டளையின் நிறுவுநர்.தொலைக்காட்சி, வானொலிகளில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். புதுவை அரசின் தொல்காப்பியர் விருது உட்படப் பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றவர்.





முகவரி
முனைவர் சிவ. இளங்கோ அவர்கள்,
எண்.6, புதுவைச்சிவம் வீதி,
வெங்கட்டா நகர்
புதுச்சேரி- 605 011
செல்பேசி: 0091 9994078907


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கம்



தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மு.இராசாராம் தலைமையுரை

சென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையில் சீரிய முறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய இவரைத் தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தியுள்ளது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இவர் இந்த நிறுவனத்தில் பணியேற்ற பிறகு பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப்பணிகள் வேகமெடுத்துள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் புதிய கட்டடம் கட்ட 4 கோடி உருவாவில் திட்டமிட்டு, அரசிடமிருந்து தொகை பெற அனுமதி பெற்றுள்ளமை ஒன்றே இவரின் வினைத்திறனுக்குப் போதிய சான்றாகும். மேலும் 2013 பிப்ரவரி மாதம் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற தலைப்பில் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கம் 14,15-02.2013 இரண்டுநாள் நடைபெறுகின்றது.

முதல் நாள் காலை முதல் அமர்வுத் தொடக்க விழாவாக அமைந்தது. தேசியக் கருத்தரங்கம் என்று குறிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்கள் கலந்துகொண்டனர். தமிழகம், புதுவை சார்ந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைத்தனர். திரைப்பா ஆசிரியர் கே.அறிவுமதி உள்ளிட்ட பெருமக்களும் கலந்துகொண்டனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற பொருண்மையிலான கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்றார்.

தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறையின் செயலாளர் முனைவர் மு.இராசாராம் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். முனைவர் மு.இராசாராம் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற பெருமைக்குரியவர். தமிழ்ப்பற்றும், தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்டவர். திருக்குறளைப் பிற மொழியினரும் அறிய வேண்டும், படிக்கவேண்டும் என்ற நோக்கில்  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். தமிழ் வளர்சிக்குப் பல்வேறு பணிகளை அமைதியாகச் செய்துவருபவர். இவரின் பெரும் ஒத்துழைப்பால்தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் புதிய கட்டடம் கிடைக்க உள்ளது. தொடர்ந்து நிறுவனப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதற்குச் செயலாளர் அவர்கள் உதவி வருகின்றார்கள் என்பதை அவர்களின் தலைமையுரையில் அறிந்து பன்னாட்டு அறிஞர்களும் பாராட்டினர்.

தமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டு அரசு தமிழுக்குச் செய்துவரும் பணிகளை நினைவுகூர்ந்தார். முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பேராதனைப் பல்கைலக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் துரை. மனோகரன் அவர்களும், மலேசியாவின் சபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் அருள்செல்வன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

முதல் அவர்வு இலங்கைப் பேராசிரியர் யோகராசா அவர்கள் தலைமையில் நடந்தது. பேராளர்கள் ஆறுபேர் கட்டுரை படித்தனர். நான் பிரான்சு நாட்டு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புலகம் என்ற தலைப்பில் அவர்தம் புதினங்களை அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.

முனைவர் மு.வளர்மதி, முனைவர் து.ஜானகி, முனைவர் கு.சிதம்பரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.



முனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல். அருகில் உ.த.நி.இயக்குநர் முனைவர் கோ.வியராகவன்


முனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல்



முனைவர் மு.இராசாராம், மு.இளங்கோவன்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுக்கு வாழ்த்துரைத்தல் மு.இளங்கோவன்



முனைவர் மு.இளங்கோவன் ஆய்வுரை அருகில் இலங்கைப் பேராசிரியர்கள் யோகராசா, திரு.குணேசுவரன்