நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

முனைவர் கா.செல்லப்பன் அவர்கள்முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள்

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட சூழலில் நான் விண்ணப்பித்திருந்தேன்(1992-93). நேர்காணலுக்கும் அழைக்கப் பெற்றிருந்தேன். அப்பொழுது நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்யும் நிலையில் இருந்தேன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினனாக நான் இருந்தாலும் அதிகம் அந்த ஊருக்குச் சென்றதில்லை. முதன்முதலாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குச் சென்ற பொழுது நண்பர் திரு. நாராயண நம்பி(பெரியார் கல்லூரிப் பேராசிரியர்) அங்கு ஆய்வுமாணவராக இருந்தார். அப்பொழுது திரு. தமிழ்மாறன்(பெரியார் பல்கலைக்கழகம்) அவர்களும் ஆய்வுமாணவராக இருந்தார். இவர்கள் வழியாகப் பேராசிரியர் அரு. மருததுரை அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

முனைவர் பட்ட ஆய்வுமாணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு எழுத்துத்தேர்வும், பின்னர் நேர்காணல் தேர்வும் நடந்தது. ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பலர் பரிந்துரையுடன் வந்திருந்தனர். அந்த நிலையில் தங்கப்பதக்கம், சான்றிதழ்களுடன் நேர்காணல் அறைக்குள் நுழைந்த என்னை அறிஞர்குழு தகுதியானவனாகத் தேர்ந்தெடுத்தது. என்னைத் தேர்ந்தெடுத்ததில் பெரும்பங்காற்றியவர் முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் என்று பின்னாளில் அறிந்தேன். தகுதிக்கும், திறமைக்கும் ஆர்வத்திற்கும் மதிப்பளிப்பதில் முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள் எப்பொழுதும் தயக்கம் காட்டுவதில்லை.

பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வுமாணவனாகச் சேர்ந்த பிறகு ஒரு முறை நன்றி சொல்லி வர அவர்களின் துறைக்குச் சென்றிருந்தேன். பல்வேறு பணிநெருக்கடிகளில் இருந்தாலும் அன்புடன் அழைத்து வாழ்த்துச் சொல்லிப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பிலான என் ஆய்வு சிறக்க டி.எஸ்.எலியட்டின் மரபும் தனித்திறனும் என்ற கட்டுரையை விளக்கி வாழ்த்துரைத்து அனுப்பினார்கள்.
(முனைவர் கா.செல்லப்பனார் அவர்களுடன் ஒரு மாநாட்டில் மு.இ.)

அதன் பிறகு பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் ஐயாவைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பற்றும் ஆங்கிலப் புலமையும் கண்டு நான் பலநாள் வியந்தவன். மாணவப்பருவத்தில் பேராசிரியர் கா.செல்லப்பனார் அவர்கள் சேக்சுபியரின் அனைத்து நாடகங்களையும் மனப்பாடமாகச் சொல்வார்களாம். என் பேராசிரியர் மருதூர் வேலாயுதம் அவர்கள் கா. செல்லப்பனாரைப் பற்றி மணிக்கணக்கில் உரையாற்றுவார். இத்தகு பெருமைக்குரிய பேராசிரியர் கா. செல்லப்பனாரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் பெருமைமிகு வாழ்க்கை

ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11. 04. 1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர்.  அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் அழைப்பில் அவர் மேற்பார்வையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்(1975).

புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் அரசு கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இங்கிலாந்து நாட்டின் நிதியுதவி பெற்று அந்த நாட்டுக்குக் கல்வி கற்கும்பொருட்டுச் சென்றுவந்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மையம் திருச்சிராப்பள்ளியில் இயங்கியபொழுது 1976- இல் பணிபுரிந்து 1978 இல் பேராசிரியராகப் பணி உயர்வுபெற்றார். இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 இல் தொடங்கப்பட்டதும் ஆங்கிலத்துறையில் பெருமைமிகு பேராசிரியராகப் பணியாற்றி 1996 இல் ஓய்வுபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், தமிழ்நாட்டு அரசின் அங்கில மொழித்துறையின் இயக்குநராகவும் இருந்து 2001 வரை பணியாற்றினார்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் பேசும் ஆற்றல்பெற்ற பேராசிரியர் கா.செல்லப்பனார் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாகப் பல அரிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

எங்கெங்கு காணினும் சக்தி (ஒப்பாய்வு), Bharathi the visionary Humanist(மொழிபெயர்ப்பு), தோய்ந்து தேர்ந்த தளங்கள் முதலியன இவரது படைப்புகள். சிலம்புச்செல்வர் ம.பொ.சி யின் விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இந்திய விடுதலைப் போரில் தமிழகம், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம், கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதினிலே உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

சாகித்ய அகாதெமிக்காக விவேகானந்தர், குற்றாலக் குறிஞ்சி(கோவி மணிசேகரன்) மொழிபெயர்ப்பு, தாகூரின் கோரா(Gora) (மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழைமை(மீரா பதிப்பகம்), ஒப்பியல் தமிழ்(எமரால்டு பதிப்பகம்), ஒப்பிலக்கியக் கொள்கைகளும் செயல்முறைகளும்(உ.த.நி. வெளியீடு), தமிழில் விடுதலை இலக்கியம், திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை(பாவை பதிப்பகம்), விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்(நியூ செஞ்சுரி), இலக்கியச்  சித்தர் அ.சீனிவாச இராகவன் எனப் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் நம் கா.செல்லப்பனார் அவர்கள். சென்னையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் கா.செல்லப்பனார்  இலக்கியப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

(குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்துப் பயன்படுத்தும் குறுங்கட்டுரையாளர்கள் எங்கிருந்து எடுக்கப்பெற்றது என்ற குறிப்பை- இணைப்பைப் பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன்)

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முனைவர் கா.செல்லப்பன் அவர்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி....