நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தமிழறிஞர் சேலம் கோ.வேள்நம்பி அவர்கள்


புலவர் கோ.வேள்நம்பி அவர்கள்

 சேலம் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் பிறந்து தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பலவகையில் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கோ.வேள்நம்பி அவர்கள் ஆவார். 27.11.1935 இல் சி.கோபால்சாமி, திருவாட்டி கமலம்மாள் ஆகியோர்க்கு மகனாகச் சேலத்தில் பிறந்தவர் கோ.வேள்நம்பி ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயராசன் என்பதாகும். 1983 இல் ஈழத் தமிழர் போராட்டம் உயர்வுநிலைக்கு வந்தபொழுது விசயன் என்ற சிங்கள மன்னன்தான் இலங்கையின் முதல் அரசனாகக் குறிக்கப்படும் வரலாறு அறிந்து, சிங்கள மன்னனின் பெயரைத் தாங்குதல் தவறு என்று கருதித், தம்பெயரை மாற்றி வேள்நம்பி என்று அரசிதழில் பதிவு செய்துகொண்டார்.

 பள்ளிப் படிப்பை மேட்டூர் அணையிலும், வித்துவான் படிப்பைக் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பெற்றவர் (1954-59). கரந்தையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர்களுள் புலவர் ந.இராமநாதனார், ச.பாலசுந்தரம், அடிகளாசிரியர், சி.கோவிந்தராசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பெருமக்களாவர்.

 தனிப்படிப்பாக இளங்கலைப் பட்டம்(1969), முதுகலை(1971), பி.எட்.(1978 மண்டலக் கல்லூரி, மைசூர்), எம்.எட் (1989, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

 1958 இல் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல்நிலைத் தமிழாசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் (1989-1993) என்று பல நிலைகளில் தமிழ்ப் பணிபுரிந்துள்ளார். தமிழாசிரியர் கழகப் பொறுப்புகளிலும் இருந்து திறம்படப் பணிபுரிந்தவர்.

 1956 இல் குமுதம் இதழ் நடத்திய திராவிட நாடு வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றவர் பல்வேறு விருதுகளையும், சான்றுகளையும் பெற்றவர். பலதுறை நூல்களை எழுதியுள்ளார்.

நாடகம்:

நெருஞ்சிப்பூ
முத்தமிழ்
விடியலைக் காணாத விழிகள்

கவிதை:

தனக்குவமை இல்லாதான்
வண்ணண நிலவின்  வளர்கலை
வெள்ளி உருகி விழுதுகள் ஆகி

உரைநடை:

புரட்சிக் கவிஞரின் தாலாட்டு
செய்யுள் நயம்
தமிழ் தந்த பேறு (அமெரிக்கப் பயண இலக்கியம்)
சிறகு முளைத்த நாள்முதல்

தொகுப்பு:

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் (அறிஞர் அண்ணா உரைகள்)- 2009

இவர் காலத்தில் செய்த  சில தமிழ்ப்பணிகள்:

தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். 1985 இல் ஆசிரியர் போராட்டத்தில் சிறைத்தண்டனை அடைந்தவர். 1999 இல் சென்னையில் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திச் சாகும்வரை போராட்டம் மேற்கொண்ட 102 தமிழறிஞர்களுள் இவரும் ஒருவர். 1979 இல் தொடங்கி 10685 சதுர அடியில் மனை வாங்கி 1991 இல் தமிழகத் தமிழாசிரியர் இல்லம் சேலத்தில் அமைத்தமை குறிப்பிடத்தக்க பணியாகும்.

ஏர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் வாயில் அமைத்தமை. பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகின்றமை.


கோ.வேள்நம்பி அவர்களின் தமிழ்க்குடும்பம்:

புலவர் வேள்நம்பி அவர்களின் துணைவியார் பெயர் இரா. சரோசா ஆகும். இவர்களுக்கு அதியமான், கதிரவன், கால்டுவெல் என்று மூன்று ஆண்மக்களும், அன்பரசி என்ற மகளும் மழலைச் செல்வங்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்கா, கனடாவுக்குச் சென்று தமிழ்மணம் பரப்பிய சிறந்த பேச்சளாராகவும் கவிஞராகவும் கோ.வேள்நம்பி அவர்கள் விளங்குபவர்.

திராவிட இயக்க உணர்வு:

புலவர் வேள்நம்பி அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதியாகவும், திராவிட இயக்க உணர்வாளராகவும் விளங்குபவர். 08.02.1948 இல் மேட்டூர் அணையில் தந்தை பெரியாரைக் கண்டு அவர் சொற்பொழிவை முதன்முதல் கேட்டார். 20.09.1949 இல் ஓமலூரில் அறிஞர் அண்ணா அவர்களைக் கண்டு அவரிடமே அறிஞர் அண்ணா யார்? என்று கேட்டவர். அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர்.

1950 ஆகத்து மாதம் நடைபெற்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நடந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றவர்.

11.02.1963 இல் மாமா பெத்தி அவர்களின் மகன் பெயர்சூட்டு விழாவில் அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்றுப் பேசிய பெருமைக்குரியவர். 25.11.1971 இல் அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுப் பேசியவர்.

வேள்நம்பியின் சாதனை

புலவர் வேள்நம்பி அவர்கள் திராவிட இயக்க வராலற்றைச் சொல்லும் வகையில் பயணம் என்ற நெடுங்கவிதை நூலை எழுதியுள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பிரிவுகளாக அமைந்த இந்த நூல் 3014 பக்கங்களைக் கொண்டுள்ளது. (வெளியீடு: சீதை பதிப்பகம், 6/6  தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை).

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அருவினையாளர் விருது(05.07.2008)

தினத்தந்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது(27.09.2008) பெற்றவர்.

சேலத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் வேள்நம்பி ஐயா அவர்கள்  பலவாண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே நம் விருப்பம்.

புலவர் வேள்நம்பி அவர்களின் வீட்டில் அரிய நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது.

புலவர் கோ.வேள்நம்பி அவர்களின் முகவரி:

புலவர் கோ.வேள்நம்பி
தமிழகம்
3/6 சி.எஸ்.ஐ. மாணவர் விடுதி பின்புறம்,
நேதாஜி நகர், அசுத்தம்பட்டி,
சேலம்- 636 007
பேசி: 0427- 2312240



துணைவியாருடன் வேள்நம்பி அவர்கள்

வேள்நம்பி, மு.இளங்கோவன்

அறவாழி, ஆடல், வேள்நம்பி, இலட்சுமணன்








சனி, 29 செப்டம்பர், 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012




உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள்டைபெற உள்ளது.

உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும் தமிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை உலகத் தமிழ் இணைய மாநாடு 2012” ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. 

அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் மா. கணேசன் அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.  உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திரு. இளந்தமிழ்(மலேசியா) அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும். ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது. 

கண்காட்சியும்  மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களில் நடக்கும். மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ள இயலும். கண்காட்சியிலும், சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார்.  கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்.

 இவ்வாண்டின் கருத்தரங்குக்குச் செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமைஎன்ற  தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  இது தவிர, கணினி சார் மொழியியல், திறவூற்று மென்பொருள் ஆய்வுகள், மின்வணிக முறைகள், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை  அனுப்பலாம்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

தமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது.  கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். 

இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளைச் செய்ய உள்ளனர்.

கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

தமிழ் இணைய மாநாட்டுக்கு உரிய ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் 20 அக்டோபர் 2012 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-நாளுக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.


கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:

செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.

மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.

திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.

தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.

தமிழ் தரவுத்தளங்கள்.

கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்

கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.

கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாநாட்டு மலர் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு மலரில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். மாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது.

(4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாகக் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் மாநாட்டுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளலாம்.

ti2012@infitt.org 

ed@infitt.org 

chair@infitt.org


http://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட உள்ளனர்.

 மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் வருகையை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும்படி உத்தம நிறுவனத்தின் தலைவர்  மணி மு. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது….




குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்குக் குமாரராணி முனைவர் மீனா முத்தையா அவர்கள் தலைமை தாங்கினார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார், முனைவர் ஒப்பிலா மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கிருட்டிணமூர்த்தி ஆகியோர் பயிற்சி வழங்கினர். சென்னையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

புதன், 26 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்




சென்னை, அடையாறில் அமைந்துள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

தொடக்க விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல், முனைவர் க.திருவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

குமாரராணி மீனா முத்தையா கல்லூரியின் தாளாளர் முனைவர் மீனா முத்தையா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க உள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், கல்லூரி முதல்வர் முனைவர் பி.டி.விஜய்ஸ்ரீ அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

பயிலரங்க நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளார்.

பயிலரங்கம் குறித்த ஆய்வறிக்கையைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சீ.சாந்தா அவர்கள் வழங்குவார்.

முனைவர் மு.இளங்கோவன்( பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி, புதுச்சேரி), முனைவர் ஆர்.கிருட்டிணமூர்த்தி (கணினிப்பொறியியல் பேராசிரியர் (பணிநிறைவு), அண்ணா பல்கலைக்கழகம்)

ஆகியோர் தமிழ் இணையம் பற்றியும் தமிழ் மென்பொருள்கள் பற்றியும் உரை நிகழ்த்துவர்.

தொடர்புக்கு :
 முனைவர் சீ.சாந்தா,
தமிழ்ப்பேராசிரியர்,
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, 
4, கிரசென்ட் அவென்யூ சாலை, அடையாறு, சென்னை- 600 020
 9962426445

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

எழுத்தாளர் கோ. தெய்வசிகாமணி (03.06.1947 - 20.09.2012)

ஆசிரியர் கோ.தெய்வசிகாமணி அவர்கள் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) தமிழுலகிற்குப் பல திறமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் ஆவார்.

கோ. தெய்வசிகாமணி அவர்கள் விருத்தாசலம் வட்டம் வேட்டக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் கோவிந்தசாமி, இராசாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடன் இரு தம்பியும், ஒரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். கோ.தெய்வசிகாமணி அவர்கள் வேட்டக்குடியில் தொடக்கக் கல்வியையும், கொசப்பள்ளத்தில் நடுநிலைக் கல்வியையும், திருமுதுகுன்றத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் முடித்தவர். கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபொழுது பள்ளியில் முதல் மாணவராகத் தேறியர். 20 கி.மீ.தூரம் நாளும் நடந்து சென்று படித்தவர்.

கோ.தெய்வசிகாமணி அவர்கள் 1967 இல் மு.பரூர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர். ஆசிரியர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் 1968 இல் பழனியம்மாள் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். இவர்களுக்கு மூன்று பெண் மக்கள்.

1973 இல் புத்திலக்கியங்களில் ஈடுபாடும், 1980 - 81 இல் திரைப்படத் திறாய்விலும் ஈடுபாடுகொண்டு அத்துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். 1994 இல் மணிமுத்தா நதி மக்கள் மன்றத்தில் இணைந்து பணிபுரிந்தார். 1998 இல் விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தார்.

 2001 இல் நடவு என்ற இதழைத் தொடங்கி 2010 வரை 25 இதழ்களை வெளியிட்டார். இதுவரை 60 சிறுகதைகளையும், 70 கட்டுரைகளையும் , ஒரு புதினத்தையும் வெளியிட்டுள்ளார். 2004 இல் சிதையும் கூடுகள், 2008 இல் வடுவின் ஆழம் என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

2010 இல் இவர் வெளியிட்ட கானல்காடு புதினம் தமிழகப் புதின வரலாற்றில் குறிப்பிடத்தக்க புதினமாகும். கொடுக்கூர் ஆறுமுகம் என்ற சமூகத் தலைவரின் வாழ்க்கை எவ்வாறு மாற்றம்பெற்றது என்பதை அழகிய புதினமாகத் தீட்டியுள்ளார். உடையார்பாளையம் வட்டத்தின் அரிய படைப்பாக இந்த நூல் கருதத் தக்கது.

 தடம்பதித்த முன்னோர்கள், கதவற்ற வீடு என்ற படைப்புகளை எழுதி வெளியிடும் நிலையில் வைத்திருந்தார். 20.09.2012 இரவு 7.15 மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார். இளைஞர்களை, படைப்பாளிகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியராகத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாற்றிய கோ. தெய்வசிகாமணி அவர்களின் புகழ் இவ்வையம் உள்ள அளவும் நின்று நிலவுக.
கானல்காடு

 நன்றி:
பேராசிரியர் த.பழமலை பட்டி.சு.செங்குட்டுவன் தெ.க.எழிலரசன்

சனி, 22 செப்டம்பர், 2012

சேலம், சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் தொடங்கியது…


சேலம் ,சாமிநாயக்கன் பட்டி கேவி. கல்வியியல் கல்லூரி பயிலரங்கம் இன்று (22.09.2012) காலை இனிதே தொடங்கியது… கல்லூரி தாளாளர் திரு. அபுபக்கர் அவர்கள் பயிலரங்கத் தலைமையேற்று, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜானகி அவர்கள் அறிமுகவுரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்வியாளர்கள் தொடர்ந்து உரையாற்ற உள்ளனர்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பாவாணர் மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் மறைவு

அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான்

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் மூன்றாவது மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் அவர்கள் தம் 76 ஆம் அகவையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மதியம்பட்டியில் இன்று(21.09.2012) இயற்கை எய்தினார். அன்னாரின் உடல் சேலம் அத்தம்பட்டி, அடைக்கலநகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை(22.09.2012) காலை 11மணிக்குத் தேவாலயத்தில் இறைவழிபாடு முடிந்த பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உலகத் தமிழ்க்கழகப் பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்பினர்,உறவினர்கள்,பொதுமக்கள் காலையில் இறுதிவணக்கம் செலுத்த உள்ளனர். தொடர்புக்கு: 0091- 8056462388 0091- 9791574538

சேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்


சேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஒருநாள் புத்தொளிப் பயிலரங்கம் சேலம், சாமிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் 22.09.2012 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகின்றது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றலை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கில் மாணவர்களுக்குத் தமிழகத்தின் கல்வியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் கே.வி.அபுபக்கர் அவர்கள் தலைமையில் தொடக்க விழா நடைபெறும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குவார். வரவேற்பு: திரு.ஜானகிராமன் தலைமையுரை டாக்டர் கே.வி.அபுபக்கர் சிறப்புரை: முனைவர் முத்தையன் தொடக்கவுரை முனைவர் ஜானகி(முதல்வர்) வாழ்த்துரை எஸ்.அகமதுல்லா நன்றியுரை: திரு.கே.அங்கமுத்து பயிற்றுநர்கள்: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி முனைவர் வேல்முருகன், மதுரை முனைவர் ஆர்.கிருட்டிணகுமார், மதுரை முனைவர் முத்தையன் திருவமை. கான்

புதுச்சேரியில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் விழா

அழைப்பிதழ்

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் புகழ்பெற்ற கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இடம்: நியூ பாரிசு மகால்,கருவடிக்குப்பம்,புதுச்சேரி நாள்: 21.09.2012, நேரம் பிற்பகல் 3 மணி முதல் தொடக்க விழாவின் தலைமை: மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள் (மின்துறை,கல்வி, கலை, பண்பாட்டுதுதறை அமைச்சர், புதுவை அரசு) வாழ்த்துரை: திரு.வெ.வைத்திலிங்கம் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப. அவர்கள் அறுபது கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெறும். சிறப்புரை முனைவர் வீ.அரசு. சென்னைப் பல்கலைக்கழகம். அனைவரும் கலந்துகொண்டு மறைந்த கவிஞரின் புகழ்பாடலாம்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

கானல் காடு நாவலாசிரியர் விருத்தாசலம் தெய்வசிகாமணி மறைவு!


திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் ஆசிரியர் பணியாற்றியவரும், நடவு இதழின் ஆசிரியரும், கானல் காடு என்ற பெயரில் கொடுக்கூர் ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கையை நாவலாக எழுதியவருமான எழுத்தாளர் தெய்வசிகாமணி அவர்கள்(ஜி.டி) 20.09.2012 அன்று இரவு 7.15 மணியளவில் விருத்தாசலத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகின்றேன். அவரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளில் ஈடுபட்டுத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.

புதன், 19 செப்டம்பர், 2012

வஞ்சிக்கப்படும் மக்களின் போர்வாள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம்



இந்திய அரசு 2005 இல் தன் நாட்டு மக்களுக்குத் தந்த உயரிய சட்டம் “தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005” என்பதாகும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியக் குடிமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பத்து உருவா பணம்கட்டி பெற்றுக்கொள்ள முடிகின்றது.

அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடம் பொறுப்புடைமையை மேம்படுத்துவது; அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு அதனை அளிக்க வகை செய்வதுடன் ஊழலை ஒழிப்பது; அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதுடன் உள்ளார்ந்த தகவல்களின் இரகசியத்தைக் கட்டிக்காத்தல் என்பது இந்தச் சட்டத்தின் நோக்கங்களாகும்.

தங்களுக்கு உரிய பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று நினைத்தால் அல்லது தங்களுக்குரிய சேவையில் குறைபாடு இருப்பதாக உணர்ந்தால் அரசு அலுவலகங்களில் ஒரு விண்ணப்பம் போட்டு முப்பது நாளுக்குள் உரிய தகவலைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஒருவரின் சுதந்திரம், உயிர், உடைமைக்காப்பு பற்றிய தகவல்களை 48 மணி நேரத்தில் தரவேண்டும்.

மக்களாட்சியின் மாண்பினை உணர்த்துவதாக இந்தச் சட்டம் உள்ளது. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள், பதவி உயர்வு இவற்றுக்குத் தடை உண்டானால் இந்தச் சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்தச் சடத்தின் சிறப்பினை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணர்த்திவிட்டால் தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள். கையூட்டு நாட்டில் இல்லாமல் ஒழியும். இந்திய நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும்.

இந்தச் சட்டத்தின் சிறப்புகளையும், மேன்மைகளையும், சட்டத்தின் பல்வேறு நடைமுறைகளையும் தன்னார்வலர்கள் பலர் ஒவ்வொரு மொழியிலும் விளக்கி நூல்களை எழுதியுள்ளனர். கையேடுகள், துண்டறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு இருந்தாலும் பலருக்கு உதவி தேவைப்படும்பொழுது யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியாமல் தவிப்பதைப் பார்க்கின்றோம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய புரிதலுக்கு எனக்கு ஒரு முறை உதவி தேவைப்பட்டபொழுது சரியான நெறிகாட்டல் எனக்குக் கிடைக்கவில்லை. பலரைத் தொடர்புகொண்டபொழுதும் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை மட்டும் சொன்னார்கள்.

இந்த நிலையில் அண்மையில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூலினைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

ஆசிரியர் வேலூர் எம்.சிவராஜ் அவர்கள். பலவாண்டுகளாக அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி இவர். அரசின் அனைத்துச் சட்டக்கூறுகள், நடைமுறைகளை நன்கு அறிந்தவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்த நூல் எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது.

இந்தியன்குரல் என்ற அமைப்பின் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது. 304 உருவா விலையுள்ள இந்த நூல் 292 பக்கங்களில் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

ஊழல் என்ற நடைமுறையை இந்தியாவிலிருந்து விரட்ட இந்தச் சட்டம் பெரிதும் துணைபுரியும். அதனால்தான் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், தவறிழைப்பவர்கள், ஊழல் பேர்வழிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அல்லது ஆங்கிலத்தில் RTI என்று இந்தச் சட்டத்தின் பெயரைச் சொன்னாலே அஞ்சி நடுங்குகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச்bசட்டத்தின்படி விவரம் கேட்டு எவ்வாறு மடல் எழுதவேண்டும் என்று தொடங்கி, மேல்முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு பற்றியெல்லாம் விரிவாக இந்த நூலில் தகவல்கள் உள்ளன. நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படும் தகவல்கள் இந்த நூலில் இருப்பதால் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பயனுடைய நூல் இது.

நூல் கிடைக்குமிடம்:

இந்தியன் குரல்,(VOICE OF INDIAN)
267, திரு.வி.க. குடியிருப்பு,
திரு.வி.க.நகர், செம்பியம்,
பெரம்பூர், சென்னை- 600 082
விலை 304 - 00
தொலைபேசி: 044 43576948

நூலாசிரியர் முகவரி:
எம்.சிவராஜ்
12, ஆறுமுகம் தெரு, வசந்தபுரம்,
வேலூர்- 632 001
அலைபேசி: 94434 89976

புதுச்சேரியில்: திரு இரவிச்சந்திரன் 9443601439

சனி, 15 செப்டம்பர், 2012

கணினிமொழியியல் வல்லுநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய பேராசிரியர்களுள் ஒருவராக விளங்கியவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஆவார். தமிழையும் மொழியியலையும் நன்கு கற்றவர். மொழியியல் கொள்கைகளை நன்கு கற்றதுடன், இலக்கணத்தில் அழுத்தமான புலமையுடையவர். தற்கால இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டவர்கள். கடுமையான உழைப்பும், நேர்மையான வினையாண்மையும் கொண்டவர். எதனையும் திருத்தமுறச் செய்யும் இயல்பினர்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தொழில்நுட்பத்துக்குத் தகத் தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்தியவர். இவர்தம் துறைசார் ஈடுபாடு எனக்கு என்றும் வியப்பைத் தரும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் துணைவேந்தராக விளங்கிய காலத்தில் கணினிமொழியியலைத் தனித்துறையாக நிறுவிப் பயிற்றுவித்தவர். பல மாணவர்கள் இத்துறையில் புலமைபெற்றனர். ஆராய்ச்சியாளர்களாக மேம்பட்டு நின்றனர். தமிழகத்தில் முன்னோடித் துறையாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினி மொழியியல் துறை விளங்கியது. அடுத்து வந்த துணைவேந்தர்களின் ஒத்துழைப்பு இன்மையால் கணினிமொழியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இல்லாமல் போனது.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஐயா அவர்களை நான் பலவாண்டுகளாக அறிவேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் தமிழ்க்கணினிக்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் கட்டுரைபடிக்கும் வாய்ப்பையும் பேராசிரியர் அவர்கள் எனக்குத் தந்தார்கள். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிலும் பேராசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் சிவ.நயினார், நா.பாப்பு அம்மாள். பிறந்த நாள் 01.06.1950. நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியில் இயற்பியல் இளங்கலைப் பட்டம் ( 1971) படித்தவர். பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் (1971-73) படித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் முதுகலைப் பட்டம் ( 1973-75)படித்தவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொன். கோதண்டராமன் ( பொற்கோ ) அவர்களின் வழிகாட்டுதலில் "தமிழில் இரட்டை வழக்கு" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு 1980 – இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

1981-82 ஆம் ஆண்டுகளில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றியவர். . 1983-85 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் முதுநிலை ஆய்வாளராக விளங்கியவர். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010 சூன் மாதம் இறுதிவரை விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் , துறைத்தலைவர் ஆகிய பதவிகளில் ஆசிரியப் பணியாற்றினார். மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

ஒலிநாடா வழி அயல்நாட்டினர்க்குத் தமிழ் என்ற திட்டத்தை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக ( 1981-82) மேற்கொண்டார். தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் ( 2002-2004) சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்துள்ளார்.

இன்றைய தமிழ் , Tamil Diglossia ( தமிழ் இரட்டைவழக்கு) என்ற இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சமூகமொழியியல், மருத்துவமொழியியல், கருத்தாடல் ஆய்வு, மாற்றிலக்கண மொழியியல் , கணினிமொழியியல் போன்ற துறைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்துறைகளில் தமிழ்மொழிக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கி, பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை நடத்தினார். இவரது வழிகாட்டலில் பல மாணவர்கள் இத்துறையில் எம்.பில்,. முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேரவையின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.
இவரது "தமிழ்ச்சொல் 2000" என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.

"மென்தமிழ்" என்ற மற்றொரு தமிழ்ச்சொல்லாளர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் மலேயாவிலும் வெளியிடப்பட்டது. தற்போது மென்தமிழின் மூன்றாவது பதிப்பு வெளிவந்துள்ளது.

பேராசிரியரின் புதல்வர் நயினார் பாபு ( மென்பொருள் பொறிஞர், அட்லாண்டா, அமெரிக்கா ) இவரது தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்கு மிகவும் துணைபுரிந்துவருகிறார்.
டென்மார்க் , சிங்கப்பூர், மலாயாப் பல்கலைக்கழகங்களில் கணினிமொழியியல் தொடர்பான பல பணிமனைகளை நடத்தியுள்ளார்.

தற்போது NDS Lingsoft Solutions Pvt Ltd என்ற ஒரு நிறுவனத்தைத் தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவியுள்ளார். SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் ஆய்வுக்கான மதிப்புறு பேராசிரியராகவும் இருந்துவருகிறார். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கணினிமொழியியலைப் பயிற்றுவிப்பதில் ஈடுபாட்டுடன் உழைத்து வருகின்றார். பேராசிரியரின் கணினிமொழியியல் அறிவையும் ஆராய்ச்சியையும் உயராய்வு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டால் தமிழுக்கு அது ஆக்கமாக இருக்கும்.


மென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா



பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் பல்லாண்டு உழைப்பில் உருவான மென்பொருள் மென்தமிழ் ஆகும். கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருளாக மென்தமிழ் விளங்குகின்றது. உலக அளவில் பலராலும் இந்த மென்பொருள் பாராட்டப்பட்டுள்ளது.

மென்தமிழ் மென்பொருள் வெளியீட்டு விழா 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தில் நடைபெறுகிறது.

முனைவர் மு. பொன்னவைக்கோ தலைமையில் நடைபெறும் விழாவில் இல.சுந்தரம் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் ந.தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகின்றார்.

உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. தி. ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகின்றார். முதலிரு படிகளை முனைவர் ப.அர.நக்கீரன் அவர்களும், முனைவர் மு.முத்துவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். முனைவர் நா.சேதுராமன் வாழ்த்துரை வழங்குகின்றார்.
நன்றியுரை கோ.பாக்யவதி இரவி அவர்கள்.

இவ் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பிக்கலாம்.

குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- உரூபாய்க்கு வழங்கப்படும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அஞல் கடித்தால் டெங்குக் காய்ச்சல் !!


நன்றி: அந்திமழை

அந்திமழை மாத இதழில் அரிய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்து மொழி ஆர்வலர்களுக்குப் பழைய சொற்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் ஒரு வாய்ப்பைத் தந்தார். அதற்காக மாதந்தோறும் சில தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த வகையில் கீழ்வரும் சொற்கள் அந்திமழை இதழில்(ஆகத்து-செப்டம்பர்) அறிமுகம் ஆயின.ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு சொற்கள் விடையாகத் தரப்பட்டிருக்கும். உரிய பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களைச் சரியாக அடையாளம் கண்டால் அதற்குரிய மதிப்பெண்ணை நீங்களே வழங்கி உங்களை ஊக்கமூட்டிக்கொள்ளலாம். விடை தேவை என்றால் அடியில் கண்டு மகிழலாம். இதழாசிரியர்களுக்கு நன்றி.


1. அக்கு: காணி, பகுதி, துண்டு, நிலம்,
2. காழ்: விதை, மரத்தின் உள் வயிரம், தண்டு, பட்டை
3. அகணி: இலை, நார், தழை, தண்டு
4. அகப்பா: கொடி, வாயில், மதில், காவல்மரம்
5. அகலம்: முகம், மார்பு, தலை, கை
6. அகன்றில்= பறவை, குருவி, ஆண் அன்றில், மரங்கொத்தி
7. அகுட்டம்= கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள்
8. அகைமம்= புல்லுருவி, தழை, செடி, சருகு
9. கொங்கை= இதழ், மார்பு, முலை, தொடை
10. அங்காப்பு= சத்தம்போடுதல், வாய்திறத்தில், வாய்மூடல், பேசுதல்,
11. அங்கை=, முழங்கை, வெறுங்கை, விரல். உள்ளங்கை
12. துப்பு= வீரம், மறம், வலிமை, ஆற்றல்
13. அசர்= தலைப்பொடுகு, பேண், ஈறு, சீழ்
14. அசுணம்= பறவை, விலங்கு, நீர்வாழ் உயிரி, பயிர்வகை
15. அசோகம்= முள், ஒருவகை மரம், பூ, செடி,
16. அஞ்சுகம்= புறா, நத்தை, கிளி, குயில்
17. அஞல்= மூட்டைப்பூச்சி, பூராண், கொசு, பல்லி
18. அட்டாலி= சின்னவீடு, மாடிவீடு, கூரைவீடு, குச்சுவீடு
19. அட்டு= சர்க்கரை, இனிப்பு, கற்கண்டு, வெல்லம்
20. அடவி= புதர், காடு, தோப்பு, அருவி
21. அடிசில்= குழம்பு, சோறு, பொறியல், கூட்டு
22. மடையன்= தின்பவன், பரிமாறுபவன், சமைப்பவன், பார்ப்பவன்
23. அடைகாய்= சுண்ணாம்பு, வெற்றிலைப்பாக்கு, சீவல், புகையிலை
24. அண்ணாந்தாள்= சுதந்திரம், தண்டனை, விடுதலை, வழக்கு
25. அணைகயிறு= சாட்டைக்கயிறு, பால்கறக்கும்போது மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு, தாலிக்கயிறு, சவுக்கு,

விடைகள்: 1. துண்டு 2. மரத்தின் உள்வயிரம் 3. நார் 4. மதில்,5=மார்பு 6. ஆண் அன்றில் 7. மிளகு 8. புல்லுருவி 9. முலை 10. வாய்திறத்தல் 11. உள்ளங்கை 12. வலிமை 13. தலைப்பொடுகு 14. விலங்கு 15. ஒருவகை மரம் 16. கிளி 17.கொசு 18. மாடிவீடு 19. வெல்லம் 20.காடு, 21, சோறு 22.சமைப்பவன்,23, வெற்றிலைப்பாக்கு, 24 தண்டனை, 25பால்கறக்கும் மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு


புதுவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம்



புதுவை அம்மா சமூக சேவா மையமும் இந்தியன் குரல் அமைப்பும் இணைந்து நடத்தும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விளக்கம் மற்றும் உதவிக் கூட்டம் புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 16.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நடைபெற உள்ளது.

திரு.கே.ஆர்.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் திருமதி வீ.கண்ணம்மா அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். வழக்கறிஞர் ஆர்.பிரவின் குமார், திரு ஹேமச்சந்திரன் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. எம். சிவராஜ் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய அடிப்படைச் செய்திகள் முதல் அனைத்து விளக்கங்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

விழாவில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூல்(விலை 250 உருவா) விற்பனைக்குக் கிடைக்கும்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பேராசிரியர் துளசி. இராமசாமியின் பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே நூல்வெளியீடு




சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும் புகழ்பெற்ற பல நாட்டுப்புற ஆய்வு நூல்களை எழுதியவருமான முனைவர் துளசி.இராமசாமி அவர்கள் எழுதிய பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே என்னும் நூல்வெளியீட்டு விழா சென்னை கன்னிமாரா நூலகத்தில் 16.09.2012 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முனைவர் விசய வேணுகோபால் அவர்கள் நூலை வெளியிடவும், கவிஞர் பல்லடம் மாணிக்கம், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் கனல்மைந்தன், பேராசிரியர் பெருமாள்முருகன், முனைவர் மே.து.இராசுகுமார்,முனைவர் ப.கிருட்டினன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளனர்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

முதுமுனைவர் இராமர் இளங்கோ அவர்கள்


பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள்

முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்குபவர். எடுக்கும் செயலை மிகச்சிறப்பாகச் செய்து முடிக்கும் வினையாண்மை உடையவர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், பதிப்புத்துறைப் பொறுப்பாளராகவும் இருந்து திறம்படத் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை ஒரு குறுகிய மனப்பான்மைகொண்டு நடத்தாமல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்கள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றியபொழுதுதான் நானும் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களும் ஆராய்ச்சி உதவியாளர்களாகப் பணியில் இணைந்தோம். எங்களுக்கு முதன்முதல் அரசுப் பணி வாய்ப்பு வழங்கிய பெருமகனார் இவர். இவர்தம் வாழ்க்கைக் குறிப்பினை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன்.


முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்கள் தேனி மாவட்டம் ஆனைமலைப்பட்டியில் வாழ்ந்த திருவாளர்கள் சுருளி, வீரம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 10.09.1944 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமைக்கல்வி இராயப்பன்பட்டியிலும், புகுமுக வகுப்பை உத்தமபாளையத்திலும் நிறைவு செய்தவர். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக இளங்கலை(1965–68), முதுகலை (1968– 70), முனைவர் (1970 – 76) பட்டங்களைப் பெற்றவர்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் முதலில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் பட்டத்தை (டி.லிட்) 24.04.90 ஆம் ஆண்டில் பெற்றவர்.

பேராசிரியரின் குடும்பம்:

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களின் துணைவியார் பேராசிரியர் இராஜாமணி  அவர்கள் ஆவார். இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு பெண்மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். முதலாமவர் மருத்துவர் இசையமுது இளங்கோ, இரண்டாமவர் பொறியாளர் மஞ்சு இளங்கோ.

ஆய்வுப்பணிகள்:

ஆய்வுத்துறையில் ஈடுபட்டு இளநிலை ஆய்வாளர் நிதி உதவி பெற்றவர்(1970 டிசம்பர் முதல் 1974 வரை) (பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு). பல்கலைக்கழக நல்கைக் குழுவின் வழி நிஜலிங்கப்பா கல்லூரியில் (பெங்களூர்) குறுங்கால ஆய்வுத் திட்டம்(1978) மேற்கொண்டவர். இணை நிலை ஆய்வாளராகப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிதி உதவி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்தவர்.

ஆய்வாளராக இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டவர் (மைசூர்)15.10.91 முதல் 14.10.92 வரை.

ஆய்வுத் தலைப்புகள்:

முனைவர் பட்டம்- பாரதிதாசன் கதைப் பாடல்கள்

முது முனைவர் பட்டம்- பாரதிதாசன் படைப்புகள்
(பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு)
-
பாரதிதாசன் நாடகங்கள்-இந்திய மொழிகள் நடுவண் நிறுவன ஆய்வாளர்- பாரதிதாசன் கவிதை நடை- பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு குறுங்கால ஆய்வுத் திட்டம்-பாரதிதாசன் காலமும் கவிதையும்

வெளியீடுகள்

நூல்கள்- 14
தொகுப்பு நூல்கள்- 21
ஆய்விதழின் ஆசிரியர்- 02
செய்தி இதழ் ஆசிரியர்- 02
ஆய்வுக் கட்டுரைகள்- 09


கற்பித்தலில் அனுபவம்:

துணைப் பேராசிரியர், அரசு திருமகள் ஆலைக் கலைக் கல்லூரி, குடியேற்றம். - 18.07.1970 - 11.09.1970. (1979 – 1984 துறைத் தலைவர், நிஜலிங்கப்ப கல்லூரி, பெங்களூர்


ஆட்சித்திற அனுபவம்:

இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை.-16.10.1994 - 31.01.2002


இயக்குநர் (பொ.),
தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுசார் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.- 03.07.2003 - 31.07.2004

பதிப்புத்துறை அலுவலர்,
சென்னைப் பல்கலைக்கழகம் -01.08.2002 - 31.07.2004

வருகைதரு பேராசிரியர்,
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு -
அண்ணா பொதுவாழ்வியல் மையம்
சென்னைப் பல்கலைக்கழகம்- 03.12.2004 - 02.03.2005

பேராசிரியர் - தலைவர்,
பாரதிதாசன் உயராய்வு மையம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024

இயக்குநர் - பதிப்புத்துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024- 2005 - 2010

கல்வித்துறை சார்ந்த உள்நாட்டு - வெளிநாட்டுப் பங்கேற்புகள்


பேராளர், ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடுஇ மதுரை.1981
குடி அரசு இதழில் பாரதிதாசன் படைப்புகள்

பேராளர், ஆறாவது உலகத்தமிழ் மாநாடு,கோலாலம்பூர், மலேசியா.1987 பாரதிதாசனின் படிநிலை வளர்ச்சி,

பேராளர், தமிழ் இலக்கியக் கருத்தரங்கம், சிங்கப்பூர்.1987
தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதிதாசன்,

பேராளர், எட்டாவது உலகத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்.1995, நகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்

இரண்டாம் மொழி கற்பித்தல் பாடநூல் தயாரித்தல் (மதியுரைஞர் வள அறிஞர்), ஜெர்மனி IBF அழைப்பு, 26.06.2000 17.07.2000

அறக்கட்டளைச் சொற்பொழிவு:

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை
சென்னைப் பல்கலைக்கழகம்,22, 23, 24.04.1992

பேரா. தண்.கி. வேங்கடாசலம் அறக்கட்டளை
பெங்களூர், 19.03.1986 - 20.12.1993

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,
காந்திகிராமப் பல்கலைக்கழகம்,1996

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,1997

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், 1998

பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை
புதுவைப் பல்கலைக்கழகம்,2007

சிறப்புகள் / பரிசுகள்:

1978 ஆம்ஆண்டு ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காக மறைந்த முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் பாராட்டி சிறப்புச் செய்தமை.

பாரதிதாசன் பற்றிய சிறந்த ஆய்வு நூலுக்கான தமிழக அரசின் பரிசு, 1978.

தமிழ் வளர்ச்சித்துறை 1979 ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு.

28.04.1991 தமிழக அரசு நடத்திய பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் பாவேந்தர் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், வண்ணைத் தமிழ்ச்சங்கம், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி முதலிய அமைப்புகள் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் (1990 - 91) பாரதிதாசன் பற்றி ஆய்வு செய்தமைக்காகச் சிறப்பிக்கப் பெற்றமை.

தமிழக அரசு 2002 ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதை (ரூ. 1 இலட்சம் காசோலை மற்றும் ஒரு பவுன் பதக்கம்) 17.09.2004 அன்று நடைபெற்ற அரசு விழாவில் வழங்கிச் சிறப்புச் செய்தமை.

சாகித்திய அகாதமி, சி.பா. ஆதித்தனார் ஆகிய இலக்கிய அமைப்பு படைப்பாளர்களுக்கு வழங்கும் விருதுகளைத் தெரிவுசெய்யும் குழுவில் இருந்தமை.

உறுப்பினர்:

பேரவை, ஆட்சிக்குழு, தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர், 1994 முதல் 2002 வரை.

பேரவை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி, 2005 முதல் 2010 வரை.



வெளியிட்ட நூல்கள்:

பாரதிதாசன் கதைப் பாடல்கள்
தமிழ்மணிப் பதிப்பகம்
சென்னை.1978

பாரதிதாசன் இலக்கியம்
பூம்புகார் பதிப்பகம், சென்னை.1978

பாரதிதாசன் ஒரு நோக்கு
சிந்தனையாளர் பதிப்பகம், சென்னை,1981

குடிஅரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள்
அகரம், சிவகங்கை,1982

பாரதிதாரசன் பார்வையில் பாரதி
அன்னம்,சிவகங்கை,1984

பாரதிதாசன் படைப்புக் கலை
அகரம்,சிவகங்கை,1984

பாரதிதாசன் நாடகங்கள் ஓர் ஆய்வு
ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.1990

பாரதிதாசன் திருக்குறள் உரை,
பாரி நிலையம்,சென்னை.1992

நகர தூதனில் பாரதிதாசன் படைப்புகள்
முல்லைப் பதிப்பகம், சென்னை.1995

பாரதிதாசன் தலையங்கங்கள்
NCBH,சென்னை.1995

பாரதிதாசன் பார்வையில் பாரதி (இ.ப.)
சாளரம் பதிப்பகம், சென்னை.2005

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிதாசன்
பாரி நிலையம்,சென்னை.2011

புரட்சிக் குயில் பாரதிதாசன்
சாளரம் பதிப்பகம், சென்னை. (அச்சில்)2011

பாரதிதாசனின் கவிதை நடை
பாரி நிலையம்,சென்னை. (அச்சில்),2011


பாரதிதாசன் பற்றிய தொகுப்பு ஃ பதிப்பு நூல்கள்

தலைமலை கண்ட தேவர்
பூம்புகார் பதிப்பகம்இ சென்னை.1978

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?1980

பொங்கல் வாழ்த்துக் குவியல்,1980

ஏழைகள் சிரிக்கிறார்கள்,1980

சிரிக்கும் சிந்தனைகள்,1981

கேட்டலும் கிளைத்தலும்,1981

பாட்டுக்கு இலக்கணம்,1981

கோயில் இரு கோணங்கள்,1981

பாரதிதாசன் பேசுகிறார்,1981

மானுடம் போற்று,1983

உலகுக்கோர் ஐந்தொழுக்கம்,NCBH,. சென்னை,1994

பாரதிதாசனின் புதிய நாடகங்கள்,1994

உலகம் உன் உயிர்,1994

இலக்கியக் கோலங்கள்,1994

பாரதியாரோடு பத்தாண்டுகள்,பாரி நிலையம்,சென்னை,1992

பாரதிதாசனின் புதினங்கள்,1992

சான்றோர் பார்வையில் பாரதிதாசன்,முல்லைப் பதிப்பகம், சென்னை,1995

எஸ். முத்துசாமி பிள்ளை நீதிக்கட்சி வரலாறு, முல்லை நிலையம், சென்னை,1995

பாரதிதாசன் தமிழ் இலக்கிய ஆளுமை (கருத்தரங்கம்)

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,2007

பல்கலைக்கழகம் போற்றிய பாரதிதாசன் (கருத்தரங்கம்)
பாரதிதாசன் பல்கலைக்கழகம்இ திருச்சிராப்பள்ளி,2008

பாரதிதாசனின் கடிதங்கள் (இணை ஆசிரியர்),2008

டாக்டர் மு. வ. கட்டுரைத் திரட்டு,பாரி நிலையம்,2011,அச்சில்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்(ஆய்வும் பதிப்பும்),பாரி நிலையம்,2012

இதழ்கள்:

1.தமிழியல்,அரையாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்இ சென்னை,(1994- 2002)

2.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செய்திக் கதிர்,
காலாண்டு இதழ்,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (1994 - 2002)

3.அறிவியல் தொழில்நுட்ப இதழ்,அரையாண்டு இதழ்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,2007 - 2010

4.பாரதிதாசன் பல்கலைக்கழச் செய்திமடல்
அரையாண்டு இதழ்,2005 - 2010



காப்பியம் கதைப்பாடல் ஆன கதை
காஞ்சி, காஞ்சிபுரம்
09.07.1972, 12.07.1972

காப்பியம் கதைப்பாடல் ஆன கதை
சத்தியகங்கை, சென்னை,சூலை 1972

காப்பிய உருவாக்கம்,முத்தாரம், சென்னை
மே 1972, ஏப்ரல் 1979


பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - கலை
விடுதலை, சென்னை,ஏப்ரல் 1979

பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - ஓவியம்
தென்னகம், சென்னை, ஏப்ரல் 1979

எதிர்பாராத முத்தம்,தென்னகம், சென்னை, ஏப்ரல் 1979

திருமுன் படைத்தல்,தமிழரசு, சென்னை,ஏப்ரல் 1979

பாரதிதாசன் பாடல்களில் பாடவேறுபாடு,தென்மொழி, சென்னை
மே- சூன், சூலை - செப்டம்பர் 1980

பாரதிதாசனின் கலை இலக்கியக் கோட்பாடுகள் - இசை
உதயக்கதிர், சென்னை, ஏப்ரல் 1980

தற்போதைய பணி:
சிறப்புநிலைப் பேராசிரியர்,
தமிழ்ப்பேராயம்,
திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம்
காட்டாங்குளத்தூர் - 603 203

முகவரி:
முனைவர் இராமர் இளங்கோ,
பி3, சுங்கவரி கலால் அலுவலர்கள் குடியிருப்பு
75, தேவாலயம் சாலை, பெருங்குடி,
சென்னை - 600 096.


தொடர்பு எண்கள்:
செல்பேசி : 94444 94941

தொலைபேசி:(அ)044-2741 7378, (வீ) 044-4280 3828

சென்னை பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழா




சென்னை, பாரதியார் சங்கம் 2012 செப்டம்பர் 10,11 ஆகிய நாட்களில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரதியார் இல்லத்தில் முப்பெரும் விழாவை நடத்துகின்றது. பாரதி அன்பர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கலாம்.

நிகழ்ச்சியில் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி, உழைப்புச்செம்மல் இரா.மதிவாணன், அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் கே.என்.பாஷா, நீதியரசர் எஸ்.தமிழ்வாணன், தமிழறிஞர் கு.ஆளுடைய பிள்ளை, முனைவர் க.ப.அறவாணன், முனைவர் மறைமலை இலக்குவனார், வெ.முரளி (பட்டயக் கணக்கர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சனி, 8 செப்டம்பர், 2012

தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு, சென்னை


பார்வையாளர்கள்

தமிழ் இணைய ஆர்வலர்களின் சந்திப்பு சென்னையில் 08.09.2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சார்ந்த தொழில் நுட்ப ஆர்வலர்கள், வல்லுநர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.


தமிழ் இணைய ஆர்வலர்கள் சந்திப்பு- படம்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்





சென்னை, அடையாற்றில் குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியாகிய டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியால் 1996 இல் இக்கல்லூரி சென்னையின் முதன்மைப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் மரபு வழிப் பண்பாட்டினைக் கல்வியுடன் சேர்த்துக் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டு இகல்லூரி செயல்பட்டு வருகின்றது.

இக்கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 2012 செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.

பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியின் வரலாற்றையும், தமிழ்த் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பதிவுகள், மின்னிதழ்கள், மின்னூல்கள், தமிழ்க்கல்வி, தமிழ் ஆராய்ச்சிக்கு உதவும் தமிழ் இணையதளங்கள் குறித்துத் தமிழ்வழியில் வழங்கப்படும் விளக்கங்களை அறியலாம். துறைசார் வல்லுநர் பயிற்சியளிக்க உள்ளார்.

பதிவுக்கட்டணம்:

பேராசிரியர்கள் உருவா 200-00

ஆராய்ச்சி மாணவர்கள் உருவா 100-00

பதிவுக்கட்டணம் வரைவோலையாக

PRINCIPAL,
KUMARARANI MEENA MUTHIAH COLLEGE OF ARTS& SCIENCE,
GANDHI NAGAR, ADYAR, CHENNAI- 600 020

என்ற முகவரிக்குப் பதிவுப்படிவத்துடன் அனுப்பப்பெற வேண்டும்.

தொடர்புக்கு :

முனைவர் சீ.சாந்தா, சென்னை
9962426445