நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 செப்டம்பர், 2012

பேராசிரியர் கு.சிவமணி அவர்களின் தமிழ்வாழ்க்கை!


முனைவர் கு. சிவமணி அவர்கள்

பேராசிரியர் கு.சிவமணி அவர்கள் தமிழ்ப்பற்றும், தமிழ் உணர்வும் நிறைந்த பெரும்புலமை மிக்க பேராசிரியர் ஆவார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் பெரும்புலமை வாய்க்கப் பெற்றவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றும் இவர்தம் வாழ்வு தமிழ்வாழ்வாகும்.

தஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி அவர்களுக்கும், திருவாட்டி பருவதத்தம்மைக்கும் மகனாக 01.08.1932 இல் பிறந்தவர். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958)அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்ற பெருமைக்குரியவர். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.

கரந்தைத் தமிழ்க்கல்லூரியிலும், பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராகவும், குமரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணிசெய்த பெருமைக்குரியவர். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு, தேர்வுக்குழு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குழுக்களில் இருந்து பணிபுரிந்துள்ளார்.

தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்குகின்றார்.

பேராசிரியர் கு.சிவமணி அவர்கள் தமிழுக்கு வழங்கிய கொடை:

இலக்கியம்:

1.பாரதியின் குயில்பாட்டு(1968);
2.பாரதியின் குயில் நுண்ணாய்வு(2008)
2.திருவள்ளுவர் கருத்துரை(அதிகார அடைவு உரை-புதிய அணுகுமுறை) (1970)
3.தமிழ்மொழி
4.தமிழ் இலக்கியம்

இலக்கணம்:

5. தமிழ் இலக்கண அகராதி
6.நன்னூல் தெளிவுரை(அச்சில்)

திறனாய்வு

7.The Age of Tolkappiyam: Dimensitions of Tolkappiyam

வரலாறு:

8.தமிழர் கல்வி வரலாறு

அகராதி

9.சட்டச் சொல் அகராதி(சென்னைப் பல்கலைக்கழகம்)
10.சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம்(புதுவை அரசு வெளியீடு)

மொழிபெயர்ப்பு:

11.The Summom Bonum of Tirukkural (அச்சில்)

12.இந்திய அரசமைப்பு( அதிகாரமுறைத் தமிழாக்கம், இந்திய அரசுக்காக)

புதினம்:

13.அன்புவலை(1960),
14.வேள்வி(அச்சில்)

கவிதைகள்:

15.பாட்டரங்கம்,
16.கவிதைச் சோலை,
17.காதல் மலர்கள்,
18.சிறுவர் பூங்கா,
19.தமிழிசை மலர்கள்,
20.கடற்கன்னி,
21. இறைவா வா!

நாடகங்கள்:

22.கலிங்கத்துப்பரணி,
23தமிழ்நந்தி(வரலாற்று நாடகங்கள்),
24.ஆசை நிழல்(வரலாற்று நாடகம்),
25.சங்க இலக்கிய ஓரங்க நாடகங்கள்

கட்டுரை:

26.காற்று அலைகளிலே (வானொலி உரைகள்)

பேராசிரியர் கு.சிவமணி அவர்கள் பெற்ற விருதுகள்:

பண்டித ரத்தினம், கவிஞர்கோ, திருக்குறள்மணி, முத்தமிழ்மாமணி, பல்கலைக்குரிசில், தமிழ்வேள் விருது(கரந்தைத் தமிழ்ச் சங்கம்), தொல்காப்பியர் விருது, புலவர் மாமணி.

அருஞ்செயல்கள்:

1965 இல் கரந்தைப் புலவர் கல்லூரியை மூடும் சூழல் உருவானபொழுது அதனைத் தடுத்து நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் கு.சிவமணியைச் சாரும்.

1969 இல் நெல்லை மாவட்டம் பாவநாசத்தில் இயங்கிய வள்ளுவர் செந்தமிழ்க்கல்லூரி ஏற்புடைமை இழந்த சூழலில் திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உயிர்பித்து வளர்த்த பெருமையும் பேராசிரியர் கு.சிவமணிக்கு உண்டு.

1959 இல் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநாட்டில் தமிழ்க்கல்லூரிகளையும் கலைக்கல்லூரிக்கு நிகராகக் கருத வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தவர்.

சிதறிக் கிடந்த தமிழ்க்கல்லூரிகளை ஒன்று திரட்டி, தமிழக மொழிகல்லூரிகள் மன்றம் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

தமிழ்க்கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகள் போல் கருதவேண்டும் எனவும், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு ஏனைய பேராசிரியர்களுக்கு வழங்கும் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தமிழ் வித்துவான் பட்டத்திற்குப் பதிலாக பி.லிட் பட்டம் வழங்க வேண்டும் எனவும் அரசுடன் பேசி, தமிழ்க்கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

கரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபொழுது ஒரு நல்ல பேராசிரியருக்கு உரிய இலக்கணத்துடன் விளங்கியமையும், கரந்தைப் புலவர் கல்லூரித் தேசிய மாணவர் படையை(NCC) உருவாக்கித் தாமே தலைமையேற்று நடத்தியமையும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

நேர்மையும் கண்டிப்பும், எதற்கும், யாருக்கும் வளைந்துகொடுக்காத போக்கும் இவருக்கு மாணவர்களிடத்திலும் பெற்றோர் இடத்திலும் நற்பெயர் பெற்றுத் தந்தன. இவர் கல்லூரி முதல்வராக இருந்தபொழுது மாணவர்கள் வேலை நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமில்லை. “எல்லாக் கல்லூரி முதல்வர்களும் கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வர் கு.சிவமணி போல் இருந்துவிட்டால் மாணவர்கள் சிக்கலே ஏற்படாது” என்பது காவல்துறைக் குறிப்பு.

ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் தமிழாசிரியராக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரிடம் படித்த மாணவர்கள் பலர் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களாகவும், சொற்பொழிவாளர்களாகவும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

அறுபதாண்டுகளாகப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தலைமையேற்றும் நடுவராக இருந்தும் நடத்திய பெருமைக்குரிய பேராசிரியர் கு.சிவமணி அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்து வருகின்றார்.

பேராசிரியர் கு. சிவமணி அவர்களுடன் தொடர்புகொள்ள:

செல்பேசி: 9444532269

மின்னஞ்சல்: sivakarthi1932@gmail.com

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எவ்வளவு விளக்கங்கள்... இவ்வளவு சிறப்பு மிக்க பேராசிரியர் பற்றி அறிந்து கொண்டேன்... வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி சார்...