நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
அந்திமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்திமழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

அந்திமழை இதழுக்கு நன்றி!




அந்திமழை மாத இதழ் காதல் செய்திகள் ததும்பும் சிறப்பிதழாக இந்த மாதம் வெளிவந்துள்ளது (பிப்ரவரி, 2015). திரைப்பாடல்களில் இடம்பெறும் கவின்மிகு காதல் வரிகளை இனங்கண்டு  இந்த இதழில் கட்டுரையாளர்கள் நமக்குச் சுவையாக வழங்கியுள்ளனர். ஒவ்வொருவர் உள்ளத்தையும் ஈர்க்கும் கவித்துவமான வரிகளை இந்த இதழ் முழுவதும் கண்டு மகிழலாம். திரைப்பா ஆசிரியர்களின் தரமான வரிகளையெல்லாம் இத்துறையில் நல்ல பயிற்சியுடையவர்கள் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர்.  

இளம் பாவலர்களின் இனிய வரிகளை இயக்குநர் சீனுராமசாமி நமக்குச் சுவைத்த வடிவில் தருகின்றார். கவிப்பேரரசு வைரமுத்துவின் உள்ளம் உருக்கும் வரிகளைப் பேராசிரியர் இரவிக்குமார் எடுத்து வழங்கியுள்ளார். செல்வன் அவர்கள் மூத்த பாடலாசிரியர்கள் முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா. காமராசன், மேத்தா, அறிவுமதி ,டி.இராசேந்தர் உள்ளிட்டவர்களின் புலமைத்திறத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பழனிபாரதியின் திரையுலக வாழ்க்கை இந்த இதழில் அழகாகப் பதிவாகியுள்ளது. முத்துக்குமாரின் நேர்காணலும் இதழை மெருகூட்டுகின்றது.

பூமாலையில் ஒரு மல்லிகை என்ற தலைப்பில் மீரா வில்வம் கண்ணதாசனின் உயிரோட்டமான பாட்டுவரிகளை அடையாளம் காட்டுகின்றார். நெல்லை ஜெயந்தா வாலி அவர்களின் திரைத்துறைப் பணிகளை நினைவுகூர்ந்துள்ளார்.

பமேலாவின் குழந்தைகள் என்ற தலைப்பில் இயக்குநர் பமேலா ஜூனேஜாவின் வாழ்வையும், திரைத்துறைப் பங்களிப்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ள தொடர் உள்ளம் கவரும் தொடர். 

திரை இலக்கிய ஆர்வலர்களுக்குத் தித்திக்கும் பொங்கல் இந்த இதழ்!

 அரசியல் செய்தி, சிறுகதை ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

அந்திமழை இந்த இதழில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டையும் வழங்கியுள்ளனர். எங்களின் எளிய முயற்சியை ஊக்கப்படுத்திப் பண்ணாராய்ச்சி வித்தகரை நினைவுகூர்ந்துள்ள அந்திமழை ஆசிரியருக்கு நன்றி.

தொடர்புக்கு:

அந்திமழை
24.ஏ, கண்பத்ராஜ் நகர்,
காளியம்மன் கோயில் தெரு,
விருகம்பாக்கம், சென்னை – 600 092

தொலைபேசி: 044 – 43514540

மின்னஞ்சல்: editorial@andhimazhai.com

சனி, 6 ஏப்ரல், 2013

அசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல்…



சீனப்பயணியான யுவான்சுவாங் பற்றி வரலாற்றுப் பாடத்தில் ஒரு மதிப்பெண் அல்லது மூன்று மதிப்பண் அளவிற்கு நமக்கு அறிமுகம் ஆகியிருக்கும். அதன்பிறகு கல்லூரிக் காலங்களில் யுவான்சுவாங் நிழலாக அறிமுகம் ஆகியிருப்பார். அதனைத் தவிர அதிகம் அறிமுகம் இல்லாமல் இருந்த யுவான்சுவாங் என்ற பயணி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து பௌத்த ஞானம் பெற்ற சீரிய வரலாற்றைப் புனைகதையாக வடித்துள்ளார் அசோகன் நாகமுத்து. அந்திமழை மாத இதழின் நிர்வாக ஆசிரியராகக் கடமையாற்றும் இவர் வேதாரண்யம் அடுத்த மருதூர்க்காரர். கால்நடை மருத்துவம் பயின்ற இவர் சென்னையில் தங்கி ஊடகத் துறையில் தொய்வில்லாமல் உழைத்துவருகின்றார்.

தமிழ்ப் புதின ஆசிரியர்கள் பலரும் பல்வேறு சோதனை முயற்சிகளை அவரவர் கல்வி, பட்டறிவுகளுக்கு ஏற்பச் செய்துபார்த்துள்ளனர். வாழ்க்கையை வரலாறாக அமைத்தும், வரலாற்றை வாழ்க்கையாக அமைத்தும், சிற்றூர்ப்புற மக்களின் வழக்காறுகள், பண்பாடுகள் இவற்றை உள்ளடக்கமாக அமைத்தும், அரசியல், நாட்டு நடப்புகள், சமயம், சாதிப்பூசல்கள், பெண்களின் பிரச்சனைகள் இவற்றை உள்ளடக்கமாக வைத்தும் பல்வேறு புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதிலிருந்து சற்று மாறுபட்டுப் பயணக்குறிப்பை அடிப்படையாகக்கொண்டு ஒரு புதினத்தை உருவாக்கியுள்ள அசோகன் நம் பாராட்டுக்கு உரியவர்.

சீன தேசத்திலிருந்து யுவான்சுவாங் புறப்பட்ட பயணப்பாதைகளை அடையாளங்கண்டு அதன் பின்புலத்துடன் போதிய கற்பனைகள் குழைத்து இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தைக் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் நின்று ஆசிரியர் கதையைப் புனைந்துள்ளார். இப்புதினத்தை உருவாக்க அசோகன் களப்பபணியாற்றியும், உரிய நூல்களைக் கற்றும் உரியதுறையில் போதிய அறிவுபெற்றும் புதினத்தைப் புனைந்துள்ளமை பாராட்டிற்குரியது. சுகுமாரனின் அறிமுகவுரையும், அசோகனின் முன்னுரை, பின்னுரைகளும் இந்தப் புதினத்திற்குரிய சிறப்பைப் பெற்று நிற்கின்றன. தமிழ்ப் புதினங்களில் ஒரு தேக்க நிலை அண்மைக்காலத்தில் நிலவியது. அதனை உடைத்து இதுபோன்ற புதினங்கள் வெளிவருகின்றமை தமிழின் நல்ல சூழலாகவே பார்க்கின்றேன்.

சீன தேசத்திலிருந்து அரசனின் கட்டளையை மீறி யுவான்சுவாங் மேற்கு நோக்கிப் புறப்படுவதும், வரும் வழியில் வெப்பத்தையும், குளிரையும் தாங்கியும் ஆறலைக் கள்வர்களின் கொள்ளையடிப்புகளில் தப்பியும், அரசர்களின் ஆதரவில் பயணத்தை அமைத்துக்கொண்டும் வருகின்றமை புதினத்தைக் கற்போர் ஆர்வமாகப் புதினத்தைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன.

யுவான்சுவாங் வெறும் பயணியாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் தங்கி ஒரு மாணவனைப் போல் பௌத்த ஞானத்தைக் கற்பதும் பௌத்த நெறிகளைப் பரப்புவதும். அந்த அந்தப் பகுதியில் உள்ள சமயம் சார்ந்த அறிவைப் பெறுவதும் இயல்பாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளன. புதினத்தைக் கற்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க திருப்பங்களையும், கற்பனைக் கதைமாந்தர்களையும் படைத்துள்ளார்.

 பௌத்த சமயம் சார்ந்த உண்மைகளையும் வரலாறுகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாகத் தந்து செல்வது அசோகனின் திறமையாகக் கொள்ள வேண்டும். யுவான் வருகைபுரிந்தபொழுதும், அதற்கு முன்பு புத்தர் காலத்திலும் இருந்த அரசர்கள், அவர்களின் புத்தமதத் தொண்டு, பணிகள், கொடைகள், சமய ஆதரவு குறித்த பல தகவல்களை இந்தப் புதினத்தில் நாம் அறியமுடிகின்றது. வடநாட்டில் பரவிக்கிடக்கும் தூபிகளின் வரலாற்றையும், வேற்றுச் சமயப் படையெடுப்புகளில் புத்த பிக்குகளில் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இந்தப் புதினத்தில் அசோகன் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தரின் பிறந்த இடம், ஞானம் பெற்ற இடம், பரிபூரணம் அடைந்த இடம் யாவும் கண்டு, அதனை உரியவகையில் இயைத்துப் புதினத்தை அசோகன் திறம்பட யாத்துள்ளார். புத்தரின் வரலாற்றையும், கருத்துகளையும் நினைவுகளையும் நிலைபெறச் செய்த பெருமை அசோக மன்னருக்கு உண்டு. அதுபோல் யுவான்சுவாங்கின் பயணத்தைத் தமிழில் நிலைநிறுத்திய பெருமை நம் அசோகனுக்கு உண்டு.

காடு, மலை, ஆறு, நாடு கடந்துவந்த யுவான்சுவாங் புத்தரின் தடம்தேடிப் பலவாண்டுகள் வந்து, நாளந்தாவில் கல்வியும் சமய அறிவும் பெற்று ஒரு முழுமதி நாளில் போதியின் நிழலில் கண்மூடித் தியானித்ததை வாழ்வின் பெரும்பேறாக உணர்கின்றார்.

சற்றொப்ப பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 645 இல் யுவான்சுவாங் சீன தேசத்தின் சாங்கானுக்குச் செல்லும்பொழுது 22 குதிரைகளில் 627 சமற்கிருத நூல்களும், புத்தர்பிரானின் 115 புனிதப் பொருட்களும் புத்தரின் பொற்சிலை ஒன்றும் கொண்டுசென்ற குறிப்பை அசோகன் குறிப்பிட்டு, யுவான்சுவாங்கின் அறிவார்வத்தை நமக்கு நினைவூட்டுகின்றார். யுவான்சுவாங் தம் அறுபத்தைந்தாவது வயதில்(கி.பி.664 இல்) இயற்கை எய்தினார் என்று படிக்கும்பொழுது யுவானின் பௌத்த ஈடுபாடும், கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடும் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றது.

போதியின் நிழல் புதினத்தைப் பொழுதுபோக்கிற்காகப் படிக்காமல் வரலாற்றை அசைபோடுவதற்காகப் படிக்கலாம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாகப் பயிலும் சிறப்பிற்குரிய நூல்.

நூல்: போதியின் நிழல்
ஆசிரியர்: அசோகன் நாகமுத்து
விலை: 180
பக்கம்: 266

கிடைக்குமிடம்:
அந்திமழை
ஜி 4, குருவைஷ்ணவி அபார்ட்மென்ட்சு,
20, திருவள்ளுவர் நகர் முதன்மைச்சாலை,
கீழ்க்கட்டளை, சென்னை- 600 117
செல்பேசி:  044- 43514540
0091 9444954674

புதன், 5 டிசம்பர், 2012

தமிழக வரலாற்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்




பாவலரேறு பெருஞ்சித்திரனார்

   "என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
    எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
    எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
    புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
    பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
     பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று எழுதி அதன்வழி வாழ்ந்துகாட்டியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தமிழில் பிறமொழிச் சொற்களை வகை தொகையின்றிக் கலந்து எழுதும் போக்கை இருபதாம் நூற்றாண்டில் தடுத்துநிறுத்தியவர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் என்றால், தமிழைத் தூய தமிழாக வழக்கில்கொண்டுவர முனைந்து நின்றவர்கள் மொழிஞாயிறு பாவாணரும், அவர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த பாதிப்புகளைவிட இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. சமற்கிருதச் செல்வாக்கு, இந்தி எதிர்ப்பு, வடபுல ஆதிக்கம், ஆங்கிலவழிக்கல்வி, ஈழத்தமிழர் போராட்டம் என்று பலமுனைகளில் தமிழும், தமிழர்களும் தாக்கப்பட்டனர். இவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டவர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவர்.

அஞ்சல்துறையில் அரசுப்பணியாற்றிய துரை.மாணிக்கம் அவர்கள் தம் இயக்கப் பணிகளுக்குச் சார்பாகப் பெருஞ்சித்திரனார் என்னும் புனைபெயரில் எழுதத்தொடங்கினார். இத்தகு மானப்பெயரில் சங்க காலத்தில் ஒரு பெரும்புலவர் வாழ்ந்துள்ளதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். மான உணர்வு நிறைந்த பழம்புலவரின் இப்பெயரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இவருக்குச் சின்னஞ்சிறு அகவையில் தமிழ்ப்பற்று உருவாவதற்குக் காரணம் தமிழ்உணர்வு கொண்டவர்கள் ஆசிரியர்களாக வாய்த்தமையே ஆகும். தமிழ் மறவர் பொன்னம்பலனார், சேலம் நடேசனார் என்னும் புலவர்களிடம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் கற்ற பெருஞ்சித்திரனாருக்குச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் ஆசிரியராக வாய்த்தமை தமிழ் செய்த தவமாகும்.

பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த துரைசாமி-குஞ்சம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1933 இல் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பின்னர் துரை.மாணிக்கம் என்று குறிக்கப்பட்டார். ஆனால் பெருஞ்சித்திரனார் என்ற புனைபெயரே தமிழகத்தில் நிலைபெற்றது.

இளம் அகவையில் தமிழார்வம்கொண்டு விளங்கிய துரை.மாணிக்கம் மாணவப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார். அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்னும் கையெழுத்து ஏட்டையும் நடத்தினார். கல்லூரியில் பயிலும்பொழுது மல்லிகை, பூக்காரி என்னும் நூல்களை எழுதி, அதனைப் பாவேந்தரிடம் காட்டி வாழ்த்துப் பெற நினைத்தார். பாவேந்தர் அந்த நூல்களுக்கு அணிந்துரை நல்கவில்லை. பின்னாளில் பெருஞ்சித்திரனார் எழுதிய பாவியத்தைக் கொய்யாக்கனி என்னும் பெயரில் பாவேந்தர் தம் அச்சகத்தில் அச்சிட்டு வழங்கினார் என்பது தனிச்செய்தியாகும்.

துரை.மாணிக்கம் கல்லூரியில் பயிலும் காலத்தில் கமலம் என்ற பெண்ணைத் தம் வாழ்க்கைத் துணைவியாக மணந்துகொண்டார். அந்தக் கமலமே இன்றைய தாமரை அம்மையார் ஆவர்.

கல்லூரிக் கல்விக்குப் பிறகு புதுச்சேரியில்  ஐந்து ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணியாற்றினார். 1959 இல் கடலூருக்குப் பணிமாற்றல் அமைந்தது. தமிழ் வளர்ச்சிக்கு ஓர் இதழ் தொடங்கி நடத்த விரும்பினார். இந்தக் காலகட்டத்தில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியில் இணைந்தார். பெருஞ்சித்திரனார் தொடங்க இருந்த இதழுக்குத் தென்மொழி என்னும் பெயரைப் பாவாணர் சூட்டினார். துரை.மாணிக்கம் அரசுப்பணியில் இருந்ததால் பெருஞ்சித்திரனார் என்னும் புனைபெயரைத் தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்கினார். பாவாணர் தென்மொழியின் சிறப்பாசிரியராக இருந்தார். பெருஞ்சித்திரனாரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு இதழ் வெளிவந்தது. பதினாறு இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச்செறிவுடனும் புதுப்பொலிவுடனும் இதழ் மீண்டும் வெளிவந்தது.

தென்மொழி ஏடு தூய தமிழில் வெளிவந்த ஏடுகளுள் முதன்மை இடம் பெற்றதாகும். ஆசிரியர்கள், மாணவர்கள் தென்மொழி ஏடு படிப்பதை மிக உயர்வாக நினைத்தனர். இதனால் இதழ் விற்பனை மிகச்சிறப்பாக இருந்தது. பாவாணர் கொள்கைகளும், கருத்துகளும் மக்களிடம் சேர்வதற்குத் தென்மொழி மிகச்சிறந்த தொண்டாற்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் தமிழ்ப்பற்றினுக்குத் தென்மொழியும் காரணமாக இருந்தது.

தமிழ்ப்பற்றுடனும் கொள்கை உறுதியுடனும் தென்மொழியை நடத்திய சூழலில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வு மிகுதியாக இருந்தது. தம் கொள்கையை வெளியிடவும், செயல்படவும் அரசுப் பணி தடையாக இருந்ததால் அரசுப்பணியிலிருந்து பெருஞ்சித்திரனார் விலகினார். இவர் எழுதிய இருமாத(1965, மார்ச்சு,ஏப்பிரல்) இதழ்களின் ஆசிரிய உரை அரசைத் தாக்குவதாக இருந்ததால் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாகக் குற்றம் சாற்றப்பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். வேலூர் சிறைவாழ்க்கையில் ஐயை என்னும் பாவியத்தின் முதல்பகுதியை எழுதினார்.

பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தமிழ்ச்சிட்டு என்ற இதழினை நடத்தினார். இந்த இதழில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய வகையில் பாடல்களும், கட்டுரைகளுமாக வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் விரும்பிப்படிக்கும் இதழாகத் தமிழ்ச்சிட்டு விளங்கியது.

1968 இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பாவாணர் பெயரளவுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பெற்றதால் தனித்தமிழ் அன்பர்கள் வருந்தினர். எனவே தமிழ் அமைப்பு ஒன்றை உருவாக்க நினைத்தனர். திருச்சியில் நடைபெற்ற தனித்தமிழ்க்கழக மாநாடு உலகத் தமிழ்க்கழகம் என்ற அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. உ.த.க.வின் பொதுச்செயலாளராகப் பெருஞ்சித்திரனார் பணிபுரிந்தார். தமிழைப் பிறமொழிப் பிணிப்பிலிருந்து விடுவிப்பது, தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் என்னும் உண்மையை நிலைநாட்டுவது, தமிழை அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தி வளப்படுத்துவது பாவாணரின் உயரிய நோக்கமாக இருந்ததால் அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு உ.த.க.வின் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டுப் பாவாணர் பணியின்றி இருந்தபொழுது அவர்தம் அகரமுதலிப் பணிக்கு உறுதுணையாகப் பொருளுதவி வழங்கும் திட்டத்தைத் தென்மொழியில் அறிமுகம் செய்து பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பெருஞ்சித்திரனார் உதவியாக இருந்தார்.

தென்மொழி ஏட்டின் வழியாகத் தமிழகம் முழுவதும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனார் 1972 இல் திருச்சிராப்பள்ளியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டை நடத்தினார். 1973 இல் மதுரையில் இத்தகு மாநாடு நடத்த முயன்றபொழுது சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பாட்டு உணர்வால் தமிழகத்தில் தமிழ் உணர்வு தழைத்தோங்கப் பாடுபடுவதை நினைத்துப் பாவாணர் அவர்கள் “பாவலரேறு” என்னும் மதிப்புமிக்கப் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்று 1974 இல் மூன்று திங்கள் அயலகப் பயணம் மேற்கொண்டார். இதன் பிறகு கடலூரிலிருந்த தென்மொழி அச்சகம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவெங்கும் நெருக்கடி நிலை(MISA) நடைமுறைக்கு வந்தது. ஆட்சியாளர்கள் தங்கள் கருத்துக்கு முரண்பட்டவர்களைச் சிறையில் அடைத்தனர். அவ்வகையில் பெருஞ்சித்திரனார் தமிழக விடுதலை மாநாடு நடத்த முனைந்தமைக்குக் கைதுசெய்யப்பெற்றுச் சென்னைச் சிறையில் அடைக்கப்பெற்றார். நெருக்கடிநிலை காரணமாக சிறைசெய்யப்பெற்ற அரசியல் கைதிகளுக்கு அவர்களின் கட்சியினர் குடும்பத்திற்கு உதவினர். ஆனால் பெருஞ்சித்திரனாரின் குடும்பம் பொருள்நிலையில் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இந்த முறை சிறைக்குச் சென்றபொழுது ஐயை நூலின் இரண்டாம் பகுதி எழுதி நிறைவுசெய்யப்பெற்றது. இக்காலகட்டத்தில் தென்மொழி இதழ் தடைசெய்யட்டது. தமிழ்ச்சிட்டு தென்மொழியின் கொள்கைகளைத் தாங்கி வெளிவந்தது.

1977 இல் இலங்கையில் அறிஞர் க.பொ.இரத்தினம் ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் மாநாட்டிற்குப் பெருஞ்சித்திரனார் அழைக்கப்பட்டார். அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1978 இல் அந்தமான் சென்று அங்குத் தமிழ்ப்பொழிவு செய்து மீண்டார்.

பெருஞ்சித்திரனார் தமிழகத்தில் நடைபெற்ற தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவான பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையையே வாழ்விடமாகக்கொண்டிருந்தவர். படுக்கையறை முனகல்களைப் பாட்டாக வடிக்கும் இன்றையப் போலிப்பாவலர்கள் கோடம்பாக்கத்தைவிட்டு வெளியே வரப் பல இலட்சம் வசூலிக்கும் நிலையில் தனித்தமிழில் எழுதுவதற்கு ஒப்புமைசொல்லமுடியாத உயர்புலமை வாய்த்த பெருஞ்சித்திரனார் தம் வாழ்நாள் முழுவதும் சுற்றிச்சுழன்று பணியாற்றி வறுமையிலும், சிறையிலுமாகக் கழித்தார் என்பதே அவர்தம் வரலாற்றுப் பெருமை. தென்மொழி அன்பர்கள் அனுப்பும் நன்கொடையில்தான் அவர் குடும்பவாழ்வு இருந்தது. காலம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என நினைத்து உழைத்த பெருஞ்சித்திரனாருக்குத் தமிழகம் அளித்த சிறப்புப் பரிசில் வறுமைதான்.

போராட்டங்களுக்கும், வறுமைக்கும், சிறை வாழ்க்கைக்கும் இடையில் பெருஞ்சித்திரனார் எழுதிய பாடல்கள், நூல்கள் தனிச்சிறப்பிற்கு உரியன. பெருஞ்சித்திரனார் அயலிடங்களுக்குச் சென்று அமைதி இடம் தேர்ந்து, இலக்கியம் புனைந்தாரில்லை. காவல்துறையின் நெருக்கடி, போராட்டம், வழக்கு, அச்சுறுத்தல்களுக்கு இடையில்தான் இவர்தம் படைப்பிலக்கியப் பணி இருந்தது.

இவரின் படைப்பில் முனை மழுங்காத யாப்பு அமைப்புகள், எதுகை, மோனைக்கு வறுமையில்லாத சொல்லாட்சிகள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்கொண்ட பொருளை இனிதின் விளக்கும் பாத்திறம் இவருக்கு நிகராக இந்த நூற்றாண்டில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாகத் தந்தை பெரியாரைப் பற்றி பெருஞ்சித்திரனார் வரைந்திருக்கும் பாட்டு ஓவியம் எளிய இனிய தனித்தமிழில் இதோ:

“பெரும்பணியைச் சுமந்த உடல்!
பெரும்புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்தமதி;
அறியாமைமேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா,இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!...

உரையழகு இங்கு எவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடைநடந்து
திரையுடலை-நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா,இவ்
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!...”

எனப் பகுத்தறிவுப் பகலவனைப் பாட்டுவடிவில் நம் கண்முன் நிறுத்துவார்.

காவிரியைப் பற்றி:

“பூவிரித்தாய்; வண்ணப் பொழில்விரித்தாய்; தென்னைத்தேன்
மாவிரித்தாய்; வாழைப் பலாவிரித்தாய் - நாவரிக்கப்
பாவிரித்தேன் பண்டைப் புகழ்பாடும் வண்டினஞ்சூழ்
காவிரித்தாய் காவிரித்தாய் என்று ”

பாடியுள்ளமை இவரின் இயற்கை ஈடுபாடு, கற்பனையாற்றல், மொழியாளுமை யாவற்றையும் காட்டும்
அறுபருவத் திருக்கூத்து என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள நூலில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பருவத்திலும் நடைபெறும் இயற்கை மாற்றங்களையும் கூர்ந்து நோக்கிப் பாடல் வடித்துள்ள பாங்கு போற்றத்தக்கது. சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு இயற்கையைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகப் பதிவுசெய்துள்ளவர் பெருஞ்சித்திரனார் எனில் மிகையன்று. சங்கப் புலவர்களும் தாம் பாடும் இடத்திற்குத்தக இயற்கையை வரைந்துள்ளனரே அன்றிப் பெருஞ்சித்திரனார் போல் அறுபருவத்தின் நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தவர் தமிழ் உலகில் இல்லை எனலாம். வடமொழியில் காளிதாசர் ‘இருதுசம்காரம்’ என்ற நூலில் இயற்கையைப் பாடியுள்ளார். இதுபோல் நூல் தமிழில் இல்லை என்னும் குறையைச் சரிசெய்ய அறுபருவத் திருக்கூத்து உதவும்.

இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இவர் வரைந்திருக்கும் பாட்டுகள் தமிழகத்தில் பரப்பப்படவேண்டிய அரிய செல்வங்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் முழுவதும் வஞ்சிப்பாவில் அமைந்த நூல் இதுவரை வெளிவரவில்லை. அக்குறையை நீக்கியவர் பெருஞ்சித்திரனார் எனின் மிகையன்று. மகபுகுவஞ்சி என்ற பெயரில் இவர் வரைந்த பா நூல் சிறப்பிற்கு உரியது.

மகபுகுவஞ்சி நூல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் பெண்ணொருத்திக்கு இல்லறச் சிறப்பின் மேன்மையைப் பல நிலைகளில் விளக்கிக்காட்டும் வகையில் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளதுடன் அப்பாடல்களுக்கு நூலாசிரியரே தெளிந்த, விரிந்த உரையும் வரைந்துள்ளதால் நூல் கூறும் பொருளை மயக்கமின்றி உணரமுடிகின்றது. மகபுகுவஞ்சி அகவியல், புறவியல், பொதுவியல் என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இயலுக்குப் பத்துப்பாடல்கள் என்ற முறையில் முப்பதுபாடல்கள் உள்ளன.

“கணவற்றழூஉம் கழைமென்றோளீ!
உணவாய்ந்திடு; உடலோம்பிடு;
குடிகாப்பிடு; குறைதாழ்ந்திரி;
வடிநீர்தவிர்; வளர்புன்னகை
வரினே,
ஒருநாள் ஒருநாள் உறுகொண் கனொடு
திருநாள் காண்குவை தலைநாட் டகவே!”

என வரும் மகபுகுவஞ்சியின் பாடல் வஞ்சிப்பாடலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“நூறாசிரியம்” என்ற பெயரில் இவர் வரைந்த பாட்டும் உரையுமான நூல் சங்கப் புலவருக்கு நிகரானவராக  இவரை அடையாளப்படுத்தும். பாட்டும் உரையும் ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு அறிவுவளம் காட்டும்.

பல்வேறு காலங்களில் பாடப்பெற்ற  பெருஞ்சித்திரனாரின் பாடல்களைத் தென்மொழி அன்பர்களின் முயற்சியால் கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தமிழகக் கல்வி நிறுவனங்கள் போற்றிக்கொண்டாடப்பட வேண்டிய பாடல்கள் ஆகும்.

திருக்குறளுக்குப் பெருஞ்சித்திரனார் வரைந்துள்ள மெய்ப்பொருளுரை அரிய புலமை நலம் காட்டும் சான்றாகும். பெண்ணின் சிறப்புரைக்கும் காதல் காப்பியமான பெருஞ்சித்திரனாரின் ஐயை பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இருந்த பெருமைக்குரியது.

பெருஞ்சித்திரனார்  அவர்களின் முதல்நூல் கொய்யாக்கனி 1955 இல் பாவேந்தரின் அணிந்துரையுடன் வெளிவந்தது. ஐயை 1968 (முதல்தொகுதி) வெளியிடப்பெற்றது. பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, கற்பனையூற்று, பள்ளிப்பறவைகள், மகபுகுவஞ்சி என்பன அடுத்தடுத்து வெளிவந்தன.

தமிழைச் செழுமைப்படுத்த தம் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் 11.06.1995 இல் சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.16.06.1995 இல் நடைபெற்ற இவர்தம் இறுதி ஊர்வலத்தில் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 12 கல்தொலைவு நடந்து வந்தனர். சென்னை மேடவாக்கத்தில்  பெருஞ்சித்திரனாருக்குத் தமிழ்க்களம் என்னும் பெயரில் நினைவிடம் அமைக்கப்பெற்று ஐயாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. தமிழக வரலாற்றில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் பல்லாயிரம் மொழிமறவர்களை உருவாக்கிய பாசறை எனில் அது மிகையன்று.

குறிப்பு:
2012 திசம்பர் மாத அந்திமழை  இதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம். படம் வரைந்த ஓவியருக்கும், வெளியிட ஒப்புதல் தந்த அந்திமழை குழுவினருக்கும் நனி நன்றியன். இக்கட்டுரையை வெளியிட விரும்புவோர் முன் இசைவு பெறுக.

திங்கள், 12 நவம்பர், 2012

அந்திமழை - தமிழ் தெரியுமா? தொடர் 3



உழவுத்தொழிலுக்குள் அனைத்துத் தொழிலும் அடங்கிவிடுவதால் திருவள்ளுவர் உழவை மட்டும் சிறப்பித்துத் திருக்குறளில் பாடினார். இயற்கை பொய்த்ததாலும், மனைவணிகம் தமிழகத்தில் கொடிகட்டிப் பறப்பதாலும் வேளாண்மைத்தொழில் மிக விரைவாக அழிந்து வருகின்றது. வேளாண்மையுடன் அது சார்ந்த தமிழ்ச்சொற்களும் அழிந்து வருகின்றன. இந்தப் பகுதியில் வேளாண்மைச் சொற்கள் நினைவூட்டப்படுகின்றன.

1.   ஆச்சல்- ஆமாம், மரம், பள்ளம், சோலை
2.   இடிவிழுதல்- மின்னல்தோன்றல், மரத்தைக் கரியாகச் சுடும்பொழுது மூட்டத்தில் பொந்துவிழுவது, மழைக்காலம், மரம் அருகில்
3.   உயிர்த்தண்ணீர்- விக்கலில் குடிப்பது, தாகத்தில் குடிப்பது.மரம்,செடி நடும்பொழுது முதலில் ஊற்றும் நீர்,சாவும்பொழுது ஊற்றுவது,
4.   ஊட்டி- ஊர், குடித்தல், உணவு கொடு, தொண்டையின் கண்டப்பகுதி,
5.   ஊத்தா- ஊசிய பொருள், மீன்பிடி சாதனம், ஆயா, அம்மா.
6.   எக்கடையான்- பெரியகடை,கடலை எள் இவற்றின் பாலை உறிஞ்சும் பூச்சி, சிறியது, ஊர்,
7.   எடாவுதல்- அடிப்பது, ஓடுவது, துரத்துவது, மாடு கொம்பை ஆட்டுவது.
8.   பொட்டு- மூளை, குங்குமம், நெற்றி, தரமற்ற எள்,
9.   ஏர்க்கால்- அழகிய கால், வண்டியின் நடுமரம், நீட்டுக்கால், ஊர்.
10.  ஒரு பூட்டு- திண்டுக்கல்,சேப்டிலாக்கர், பெட்டகம், ஏரோட்டும் கால அளவு.
11.  கசங்கு- வீண், கட்டுவதற்கு உதவும் ஈச்சம்செடியின் கழி, மடிப்பு, அழுக்கு.
12.  கட்டக்கால்- மருத்துவர்போடுவது, அடிபட்டகால், பன்றி, குள்ளமானவர்
13.  கட்டு- வண்டிச்சக்கரத்தின் இரும்புப்பட்டை, மூட்டை,புறப்படுதல், வீக்கம்.
14.  கல்லங்கழி- பிரம்பு, தடி, உறுதியான மூங்கில், கடற்கரை.
15.  கலவடை- ஓட்டலில் கிடைக்கும்வடை,பானை, குடங்களின் வாய்ப்பகுதி, ஊசிப்போன வடை, சண்டை.
16.  குண்டு- சிறிய நிலம், பெரியது, கோலி, உப்புநீர்.
17.  சீட்டை- சீட்டுப்பணம், முறுக்கு, உருண்டை, தப்பி நிற்கும் கம்பங்கதிர்.
18.  பட்டம்- படித்துப்பெறுவது, காசுகொடுத்து வாங்குவது, வானில்விடுவது, நிலங்களில் இடைவெளிவிட்டு வரிசையாகப் பயிரிடல்,
19.  மோழிப்பால் குடித்தல்- தரம் உயர்ந்த பால், திரட்டுப்பால், கழுதைப்பால், ஏரோட்டப் பழகுவோரின் கையை அழுத்திப் பயிற்றுவிப்பது.
20.  முறுக்காத்தி- பண்டிகையில் சுடுவது, காரைக்குடி பலகாரம், ஆறிப்போனது, ஆடு,மாடு கட்டும் கயிற்றில் இணைக்கப்படும் சிறு கருவி.

விடைகள்:
1. பள்ளம் 2. மரத்தைக் கரியாகச் சுடும்பொழுது மூட்டத்தில் பொந்துவிழுவது.3. மரம்,செடி நடும்பொழுது முதலில் ஊற்றும் நீர்,4. தொண்டையின் கண்டப்பகுதி 5. மீன்பிடி சாதனம் 6. கடலை,எள் இவற்றின் பாலை உறிஞ்சும் பூச்சி,7. மாடு கொம்பை ஆட்டுவது 8. தரமற்ற எள் 9. வண்டியின் நடுமரம் 10. ஏரோட்டும் கால அளவு 11. கட்டுவதற்கு உதவும் ஈச்சம்செடியின் கழி 12. பன்றி 13. வண்டிச்சக்கரத்தில் பொருத்தப்படும் இரும்புப்பட்டை 14. உறுதியான மூங்கில் 15. பானை, குடங்களின் வாய்ப்பகுதி 16. சிறிய நிலம் 17. தப்பி நிற்கும் கம்பங்கதிர் 18. நிலங்களில் இடைவெளிவிட்டு வரிசையாகப் பயிரிடல் 19. ஏரோட்டப் பழகுவோரின் கையை அழுத்திப் பயிற்றுவிப்பது 20. ஆடு, மாடு கட்டும் கயிற்றில் இணைக்கப்படும் சிறு கருவி.

அந்திமழையில் தமிழ்தெரியுமா? பகுதி 3

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அஞல் கடித்தால் டெங்குக் காய்ச்சல் !!


நன்றி: அந்திமழை

அந்திமழை மாத இதழில் அரிய தமிழ்ச்சொற்களை அறிமுகம் செய்து மொழி ஆர்வலர்களுக்குப் பழைய சொற்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று அதன் ஆசிரியர் ஒரு வாய்ப்பைத் தந்தார். அதற்காக மாதந்தோறும் சில தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த வகையில் கீழ்வரும் சொற்கள் அந்திமழை இதழில்(ஆகத்து-செப்டம்பர்) அறிமுகம் ஆயின.ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு சொற்கள் விடையாகத் தரப்பட்டிருக்கும். உரிய பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களைச் சரியாக அடையாளம் கண்டால் அதற்குரிய மதிப்பெண்ணை நீங்களே வழங்கி உங்களை ஊக்கமூட்டிக்கொள்ளலாம். விடை தேவை என்றால் அடியில் கண்டு மகிழலாம். இதழாசிரியர்களுக்கு நன்றி.


1. அக்கு: காணி, பகுதி, துண்டு, நிலம்,
2. காழ்: விதை, மரத்தின் உள் வயிரம், தண்டு, பட்டை
3. அகணி: இலை, நார், தழை, தண்டு
4. அகப்பா: கொடி, வாயில், மதில், காவல்மரம்
5. அகலம்: முகம், மார்பு, தலை, கை
6. அகன்றில்= பறவை, குருவி, ஆண் அன்றில், மரங்கொத்தி
7. அகுட்டம்= கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள்
8. அகைமம்= புல்லுருவி, தழை, செடி, சருகு
9. கொங்கை= இதழ், மார்பு, முலை, தொடை
10. அங்காப்பு= சத்தம்போடுதல், வாய்திறத்தில், வாய்மூடல், பேசுதல்,
11. அங்கை=, முழங்கை, வெறுங்கை, விரல். உள்ளங்கை
12. துப்பு= வீரம், மறம், வலிமை, ஆற்றல்
13. அசர்= தலைப்பொடுகு, பேண், ஈறு, சீழ்
14. அசுணம்= பறவை, விலங்கு, நீர்வாழ் உயிரி, பயிர்வகை
15. அசோகம்= முள், ஒருவகை மரம், பூ, செடி,
16. அஞ்சுகம்= புறா, நத்தை, கிளி, குயில்
17. அஞல்= மூட்டைப்பூச்சி, பூராண், கொசு, பல்லி
18. அட்டாலி= சின்னவீடு, மாடிவீடு, கூரைவீடு, குச்சுவீடு
19. அட்டு= சர்க்கரை, இனிப்பு, கற்கண்டு, வெல்லம்
20. அடவி= புதர், காடு, தோப்பு, அருவி
21. அடிசில்= குழம்பு, சோறு, பொறியல், கூட்டு
22. மடையன்= தின்பவன், பரிமாறுபவன், சமைப்பவன், பார்ப்பவன்
23. அடைகாய்= சுண்ணாம்பு, வெற்றிலைப்பாக்கு, சீவல், புகையிலை
24. அண்ணாந்தாள்= சுதந்திரம், தண்டனை, விடுதலை, வழக்கு
25. அணைகயிறு= சாட்டைக்கயிறு, பால்கறக்கும்போது மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு, தாலிக்கயிறு, சவுக்கு,

விடைகள்: 1. துண்டு 2. மரத்தின் உள்வயிரம் 3. நார் 4. மதில்,5=மார்பு 6. ஆண் அன்றில் 7. மிளகு 8. புல்லுருவி 9. முலை 10. வாய்திறத்தல் 11. உள்ளங்கை 12. வலிமை 13. தலைப்பொடுகு 14. விலங்கு 15. ஒருவகை மரம் 16. கிளி 17.கொசு 18. மாடிவீடு 19. வெல்லம் 20.காடு, 21, சோறு 22.சமைப்பவன்,23, வெற்றிலைப்பாக்கு, 24 தண்டனை, 25பால்கறக்கும் மாட்டின் பின்காலில் கட்டும் கயிறு


வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அந்திமழை புதிய மாத இதழ்!




சென்னையிலிருந்து அந்திமழை மாத இதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது (ஆகத்து-செப்டம்பர் 2012). இலக்கிய ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்டவும், சமூக, அரசியல் ஆர்வலர்களைச் சிந்திக்கச் செய்யவும், விளையாட்டு, திரைத்துறையினர்க்குப் புத்துணர்ச்சியூட்டவும் இந்த இதழ் பயனுடைய செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டினுக்கு உரியது. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், பெருமைக்குரிய எழுத்தாளர்களின் படைப்புகள், நாட்டு நடப்புகள் குறித்த கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

இந்த மாத இதழில் பாமரன், அந்திமழை இளங்கோவன், இரா.கௌதமன், சஞ்சனா மீனாட்சி, ஜோதி ஸ்வரூபா, குமரன் மணி, சகாயம் ஐ.ஏ.எஸ், அ.முத்துலிங்கம், பேராச்சி கண்ணன், திருச்சி லெனின், செல்வி, என்.அசோகன், நாகராஜ சோழன், அ.தமிழன்பன், மு.இளங்கோவன், பெருமாள் முருகன், புதுவை இளவேனில், சுகுமாரன், இயக்குநர் மணிவண்ணன், ஆர்.சி.ஜெயந்தன் ஆகியோரின் படைப்புகள், திறனாய்வுகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.

கான் அகாடமியின் நிறுவுநர் சல்மான் கான் பற்றிய கட்டுரையும், சின்னப்பிள்ளை அவர்களின் சாதனை வாழ்வும், சகாயம் அவர்கள் அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் தமிழ் உணர்வு குறித்துப் பகிர்ந்துகொண்ட அனுபவப் பகிர்வும், புதுவை இளவேனிலின் குறிப்பிடத்தக்க ஒளிப்படங்களும் இதழை அழகூட்டி வியக்க வைக்கின்றன. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய இதழ்.

அந்திமழை ஆசிரியர் குழு:

சிறப்பாசிரியர்: சுகுமாரன்
நிர்வாக ஆசிரியர் என்.அசோகன்
ஆசிரியர்: கௌதமன்

தனி இதழ் விலை: 20 ரூபாய்

முகவரி:

அந்திமழை,
24 ஏ, கண்பத்ராஜ் நகர், காளியம்மன் கோயில்தெரு,
விருகம்பாக்கம், சென்னை- 600 092
தொலைபேசி: 044- 43514540