நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவாணர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 நவம்பர், 2016

சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்




தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது. 

திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.  

காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் க. தமிழமல்லன் அவர்களும், நீலாம்பிகையாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மறை. திரு. தாயுமானவன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

பிற்பகல் 3 மணிக்கு அமையும் இரண்டாம் அமர்வில் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் பொற்கோ அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: அறிஞர் செவ்வியன் இல்லம், 311, 5 ஆம் தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை- 600115

நிறுத்தம்: நீலாங்கரை காவல் நிலையம் நிறுத்தம் எதிரில்.


தொடர்புக்கு: 99624 61632 / 97916 29979

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

முதன்மொழி இதழுக்கு நன்றி!




மொழிஞாயிறு பாவாணர் அவர்களும் அவர்தம் பற்றாளர்களும் உலகத் தமிழ்க் கழகம் என்ற அமைப்பை உருவாக்கித் தமிழ், தமிழர் மேம்பாட்டுக்கு உழைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகம் பாவாணரின் மறைவுக்குப் பிறகும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாகப் பாவாணர் பற்றாளர்கள் ஒன்று கூடி அமைப்பைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டு, சிறப்பாக நடந்துவருகின்றன.

உலகத் தமிழ்க் கழகம் சார்பில் வெளிவரும்  முதன்மொழி இதழ், இம்மாத இதழை இசைப்பேரறிஞர் ப. சுந்தரேசனார் நூற்றாண்டுச் சிறப்பு இதழாக வெளியிட்டு வழங்கியுள்ளமை இசையார்வலர்களுக்குப் பெரும் விருந்தாகும். அட்டைப்படத்தில் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படம் இடம்பெற்றுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இந்த இதழில் இசையறிஞர் குடந்தை. பசுந்தரேசனார் அவர்களின் இசைப்பணிகளும் வாழ்வியலும் அறிஞர்களால் நினைவுகூரப்பட்டுள்ளன.

தமிழார்வம் கொண்ட உலகத் தமிழ் அன்பர்கள் முதன்மொழியை வாங்கி உதவலாம். புரவலர்களாகித் தமிழ்த்தொண்டு செய்யலாம்.

தொடர்புக்கு:

முனைவர் ந. அரணமுறுவல்
ஆசிரியர், முதன்மொழி,
726, பாவாணர் தெரு, முல்லை நகர், மேற்குத் தாம்பரம்,
சென்னை- 600 045

செல்பேசி: + 94442 03349

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பாவாணர் மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் மறைவு

அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான்

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் மூன்றாவது மகன் அடியார்க்குநல்லான் அருங்கலைவல்லான் அவர்கள் தம் 76 ஆம் அகவையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகில் உள்ள மதியம்பட்டியில் இன்று(21.09.2012) இயற்கை எய்தினார். அன்னாரின் உடல் சேலம் அத்தம்பட்டி, அடைக்கலநகரில் உள்ள உறவினர் இல்லத்தில் தமிழ் உணர்வாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை(22.09.2012) காலை 11மணிக்குத் தேவாலயத்தில் இறைவழிபாடு முடிந்த பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உலகத் தமிழ்க்கழகப் பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்பினர்,உறவினர்கள்,பொதுமக்கள் காலையில் இறுதிவணக்கம் செலுத்த உள்ளனர். தொடர்புக்கு: 0091- 8056462388 0091- 9791574538

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

புதுச்சேரியில் பாவாணர் விழா


முனைவர் பொற்கோ அவர்களைச் சிறப்பிக்கும் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து, க.தமிழமல்லன், பொறிஞர் பாலு உள்ளிட்டோர்

புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் பாவாணர் விழா 25.02.2012 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமை தாங்கினார். பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் பாவாணரின் மொழிமீட்சி, மொழிக்காப்பு, மொழி ஆய்வுப்பணிகளை நினைவுகூர்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் கலந்துகொண்டு பாவாணரின் வாழ்நாள் பணிகளை நினைவுகூர்ந்தார். பாவாணருக்கும் தமக்குமான தொடர்புகளை எடுத்துரைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணர் பணியாற்றியமை, பாவாணருக்குப் பொற்கிழி சேலத்தில் வழங்கிய நிகழ்வு, பாவாணரின் எம்.ஓ.எல். பட்ட ஆய்வுரை மறுக்கப்பட்டதன் பின்னணி என்று அரிய செய்திகள் பலவற்றை அவைக்கு வழங்கினார்.

மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் பாவாணரின் இறுதிப்பேருரை நடைபெற்றதன் பின்னனி, உடல் அடக்க நிகழ்வு நிகழ்ச்சி பற்றிப் பலரும் அறியாத செய்திகளை எடுத்துரைத்தார். பாவாணரின் பன்மொழிப்புலமை, கொள்கை உறுதி யாவற்றையும் முனைவர் பொற்கோ நினைவுகூர்ந்தார். தமிழின் இன்றைய நிலையை எடுத்துரைத்துத் தமிழ் மேம்பாட்டுக்கு ஓர் அமைப்பு இன்று இல்லாமல் உள்ளது. அதனை நிறுவித் தமிழ்க்காப்புக்குப் பாடுபட வேண்டும் என்றார். தமிழ் சிலருக்குக் குடையாக உள்ளது. சிலருக்குச் செருப்பாக உள்ளது. நமக்கு மூச்சாக உள்ளது என்று தம் தமிழ்ப்பற்றை நிலைப்படுத்தினார்.

புதுவை வாழ் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முனைவர் பொற்கோ உரை


தமிழ்ச்சங்க விழாவில் முனைவர் பொற்கோ, முத்து,தமிழமல்லன், பொறிஞர் பாலு

புதன், 21 டிசம்பர், 2011

மருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்

திருக்குறள் நூல் பன்னெடுங் காலத்திற்கு முன்பு பெரும்பேராசான் திருவள்ளுவரால் தமிழகத்தின் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சுவையுணர்ந்த சான்றோர்கள் பலர் அவர்தம் காலச்சூழல், பட்டறிவு, கல்வியறிவு, கொள்கை ஆகியவற்றிற்கு ஏற்பத் தத்தம் விளக்கங்களைக் - கருத்துகளை உரையாக வரைந்துள்ளனர். இவ்வுரைகளில் மூல நூலாசிரியர் வழிநின்றும், மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மூல நூலாசிரியர் சுருக்கிச் சொன்னதை விரித்தும், அவர் ஒரு கருத்து எல்லையில் நின்று உரைத்ததைத் தம் கால நூலறிவுகொண்டு பன்மடங்கு வகைப்படுத்தியும் உரைக்கும் போக்கினையும் உரையாசிரியர்கள் கைக்கொண்டுள்ளனர். இவ்வுரை வரையும் போக்குகள் பல அறிவுக்கருத்துகளை முன்வைக்கின்றன. இதனை மருந்து எனும் அதிகாரக் குறட்பாக்களின் துணைகொண்டு அவற்றிற்கு எழுந்த பல்வேறு உரைகளை ஒப்பிட்டு விளக்கும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்து அதிகாரத்தின் சிறப்பு

திருக்குறளின் அனைத்து அதிகாரச் செய்திகளும் முதன்மை வாய்ந்தவையாகும். திருவள்ளுவரே தம் ஒவ்வொரு அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தியும், தம் ஒவ்வொரு கருத்துகளையும் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் உயர்வுப்படுத்தியும் உரைப்பதை அவரின் குறட்பாக்கள் வழியாகவே உணரமுடியும்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் 300)

என்று வாய்மையின் மேன்மையைப் போற்றிப் பாடுவார். அவரே,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)

எனக் குழந்தைப்பேற்றின் சிறப்பினைக் கொண்டாடுவார்.

இவ்வாறு திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அனைத்துச் செய்திகளும் உயர்வானதாகவே இருக்கின்றன. திருவள்ளுவரின் மற்ற அதிகாரங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு “மருந்து” அதிகாரத்திற்கு மட்டும் உண்டு.

கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெருமையைப் போற்றுவார். புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கள் பேற்றின் மாண்பினை எடுத்துரைப்பார். ஆனால் மருந்து எனும் அதிகாரத் தலைப்பிட்டு எழுதிய திருவள்ளுவர் மருந்து வேண்டாம் என்று புதுமையான முறையில் கருத்தினை முன்வைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவமுறை நோய் வராமல் காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை மருத்துவமுறையாகும். உணவுச்சார்பு, பழவினை, மரபுவழி(Generation), சுற்றுச்சார்பு காரணமாக நோய் வந்தால் அதனைப் போக்கிக்கொள்ளும் முறையினையும் திருவள்ளுவர் தம் மெய்யறிவு புலப்பட வரைந்துள்ளார்.

மருந்து என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பாக்கள் உணவே மருந்து என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்குகின்றன. மேலும் இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைகள் மருத்துவம் - உடல் ஓம்பல் குறித்த மேலதிகத் தகவல்களைத் தருகின்றன.

திருக்குறளின் மருந்து அதிகார முதல் குறட்பா ஊதை(வளி), பித்தம், கோழை(ஐ) என்னும் மூவகை உடற்கூறும் மிகினும் குறையினும் நோய் உண்டாகும் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதனை அடுத்து நோய் வராமல் தடுக்கும் முற்காப்பினை அடுத்த ஆறு குறட்பாக்கள் குறிப்பிடுகின்றன. நிறைவாக உள்ள மூன்று குறட்பாக்களில் உணவுத் தவறாலும், பிற காரணங்களாலும் நோய் வந்துற்றபொழுது மருத்துவர் செய்யும் மருத்துவமுறைகள்- நோயாளிகளின் கடமைகளைக் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் தமிழ் மக்களின் வாழ்வியல்-அரசியல்-வணிகம்-மெய்ப்பொருளியல் முதாலன எண்ணங்களைப் பதிவுசெய்தவர். அதுபோலவே தமிழக மருத்துவமுறைகளை உளங்கொண்டு தம் குறட்பாக்களை எழுதியுள்ளார். அதனை உணராதவர்போல் பரிமேலழகர் வடமொழிச் சார்பான விளக்கங்களைப் பல இடங்களில் முன்வைத்துள்ளார். குறிப்பாக மருந்து அதிகாரத்தில் பரிமேலழகர் ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவநூல் முறையைப் பின்பற்றி உரை வரைந்திருப்பதைப் பாவாணர் போன்ற உரையாசிரியர்கள் தக்கவாறு தம் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்த உடல்களை நோய் தாக்குவதற்குப் பல காரணங்களை இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. மரபு வழியாகவும், நோய்த்தொற்று அடிப்படையிலும், உணவு, உடை, நஞ்சு, போர், அச்சம், சுற்றுச்சூழல்(காற்று, ஒலி, நீர்) முதலியவற்றின் காரணமாகவும் நோய் மாந்தர்களை, விலங்குகளை, பறவைகளைத் தாக்குகின்றன. திருக்குறள் ஆசிரியரோ சுருக்கிச்சொல்வதுபோல் உடலில் உள்ள ஊதை(வளி), பித்தம், கோழை என்னும் மூன்றும் தம் சுரத்தல் தொழிலில் மிகுதியாக இருப்பினும் குறைவாக இருப்பினும் உடலில் நோய் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றார்.

ஊதை, பித்தம், கோழை(ஐ) என்னும் மூன்றும் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதன. மூச்சு, பேச்சு, உட்பொருள் இடம் மாற்றம், வெளியேற்றத்திற்குத் தனியாகவும் பிற தாதுக்களுடன் இணைந்தும் ஊதை(வளி) செயல்புரிகின்றது. அதுபோல் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்குப் பெரிதும் உதவுவது பித்தநீர் ஆகும். தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்குக் கோழை உதவுகின்றது. இவை மருத்துவ அறிஞர்களின் கருத்தாக இருப்பதைப் பாவாணர் கற்று உணர்ந்து தம் உரையில் எழுதியுள்ளார். இம்மூன்றும் குறைவதற்கும் மிகுவதற்கும் பல காரணங்கள் உண்டு. உணவு, உடை, செயல்கள், ஒவ்வாமை, பழக்கவழக்கங்கள், மரபுவழி எனக் காரணங்களைச் சுட்டலாம். இம்மூன்றின் இயக்கமும் சரியாக இருக்கும்பொழுதே உடல்நோய் இல்லாமல் இருக்கும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார்.

பாவாணர் போன்ற தமிழ்நெறி சார்ந்தவர்கள் திருவள்ளுவரின் கருத்துக்கு இயையவே உரை கண்டுள்ளனர். ஆனால் பரிமேலழகரோ மிகினும் குறையினும் என்பதற்கு உணவும் செயலும் அவரவர் உடல் வலிவுக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் எனவும் இதில் மிகுதியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய் உண்டாகும் எனவும் விளக்கம் தருகின்றார்.
பரிமேலழகர் உரையின்படி நோய்க்குக் காரணம் உணவும், செயலும் மிகுவதும் அல்லது குறைவதும் என்பது பெறப்படுகின்றது. மணக்குடவரும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் நோய்தரும் என விளக்கம் தருகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகள் சரி எனப்படினும் ஆனால் இவை மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணியதாகப்படுகின்றது. ஏனெனில் வள்ளுவப் பெருந்தகை தம் குறட்பாவில் வளி முதலான மூன்றும் என்று குறித்தாரேயன்றி, உணவையோ, செயலையோ நேரடியாகத் தம் குறட்பாவில் இடம்பெறச் செய்தாரில்லை. எனவே பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகளை ஏற்கத் தயக்கம் ஏற்படுகின்றது.

உணவுநெறி

உடல் தோற்றம், செயல்பாடுகள், அறிவுமலர்ச்சி, நோயின்மை இவற்றிற்குத் தக்க உணவுகளே அடிப்படையாக அமைகின்றன. இத்தகு உணவினைப் பயன்படுத்தும் முறைகளில் மாறுபாடுகள் உண்டானால் மேற்கண்ட யாவும் குலையும். பெரும்பாலும் நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, பொருந்தா உணவு, மிகை உணவு என்பனவாகும். எனவே உடல் பாதுகாப்பு, வாழ்க்கைக் காப்பிற்கு உதவும் உணவுகளை உண்ணுவதாலும், உண்ணாமையாலும் ஏற்படும் நோய்களை - உடல்மாறுபாடுகளைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இதற்கென இவர் ஆறு குறட்பாக்களைத் தருகின்றார்.

முன்பு உண்டது செரித்துப் பசித்த பிறகு உண்ண வேண்டும்(944). அளவுடன் உண்ணவேண்டும்(946). குறைவாக உண்ணவேண்டும்(947) உடல்கூறு, பருவம், விருப்பம், காலம், இடம் இவற்றிற்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும்(945). நாவின் சுவைக்கு இடம் தராமல் வயிற்றில் வெற்றிடம் இருக்கும்படி உண்ணவேண்டும் என்று உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தும்படி குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கருத்துகளைத் திருக்குறளின் வழியாக அறியும் அதே நேரத்தில் உரையாசிரியர் பரிதியார், செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டுகூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒருகூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியைவிட்டு அசனம் பண்ணக்கடவன்” என விளக்குவது உணவு உண்ணும்பொழுது கவனத்தில்கொள்ளவேண்டியதை நினைவூட்டுகின்றது.

எனவே நம் முன்னோர்கள் உணவு உண்ணுவதில் மிகச்சிறந்த நெறிகளைப் பின்பற்றியதால் நெடிதுய்க்கும்(943) முறையினைத் தெரிந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

“மாறுகொள்ளாத உண்டி”யை உண்ணும்படி வள்ளுவரும் வள்ளுவர் குறளுக்கு உரைவரைந்த உரையாசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாறுகொள்ளுதல் என்பது உண்ணும் அளவு, காலம், சுவை, வீரியம் இவற்றில் இருத்தல்கூடாது. உண்ணும் அளவில் மிகுதலும், பகலில் உண்பதை இரவிலும், இரவில் உண்பதைப் பகலிலும், மழைக்காலத்தில் உண்பதை வேனிற்காலத்திலும் வேனிற்காலத்தில் உண்பதை மழைக்காலத்திலும் மாற்றி உண்பதும், சுவை கருதி நெய்யும் தேனும் சம அளவுகலந்து உண்டால் நஞ்சாக மாறிக்கொள்ளும் என மணக்குடவர் உரையில் விளக்கம் தருவர்.

இன்றைய நிலையில் Food Poison எனும் நோய்க்கு இதுவே காரணம். இறைச்சி அல்லது காலம் கடந்த மாவு, பூச்சியுற்ற பொருளில் செய்யும் உணவு யாவும் நஞ்சு உணவாக மாறித் துன்பம் செய்யும்(இக்காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பெறும் பண்ணியங்களை உண்பதால் புற்றுநோய் உண்டாதலும் எண்ணிப்பார்க்கவும்). எனவே உடலுக்கு மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பசித்திருக்கச் சொன்னார்கள் போலும்(!).

உணவை உண்ணுவதில் தோன்றும் மகிழ்ச்சியைவிட உண்ட உணவு செரிப்பதில்தான் மகிழ்ச்சி. உண்ட உணவு இல்லாமல் போவதுதான் பெரு மகிழ்ச்சியை நமக்குத் தரும்.

இதனை உணர்ந்து பார்த்த வள்ளுவர் காமத்துப்பாலில்

“உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலி னூடல் இனிது(1326) என்பார்.

எனவே வயிற்றில் உணவு அற்றுப்போகும் தன்மையில்தான் உண்மை இன்பம் உண்டு என்பதைப் பொறி புலன்களால் உணர்ந்து அறிக!.

உலக உயிர்களில் மாந்தப் பிறப்பு உயர்வானதாகும். இம்மாந்தப் பிறப்பு வாய்க்கப்பெற்றவர்கள் தத்தம் உடம்பினைப் பேணிக்காத்து நெடிதுநாள் வாழவே விரும்புவர். துறவிகளோ இப்பிறவி வேண்டாம் என்றும் பிறப்பு நீக்கிச் செம்பொருள் நுகர்வு வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் திருவள்ளுவப் பேராசான் போன்ற சித்தர் மரபினர் உடம்பினைப் பேணிக் காப்பதைத் தேவையென மாந்த குலத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”(724) “உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”(725) என்பர் திருமூலர். இவ்வுடம்பினைப் போற்றும் வகை தெரியாமல் மிகுதியாக உண்டோ அல்லது வேறு வகையில் உண்டோ உடல்நலம் கெட்டால், உய்யும்பொருட்டு மருத்துவம் பார்த்தல் குறித்த பல செய்திகளைத் திருவள்ளுவரும் அவரின் குறட்பா வழி உரையாசிரியர்களும் தருகின்றனர்.

நோயாளியின் சொல்லாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் முதலான கழிபொருள்களின் இயல்பாலும் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து- அந்த நோய் தோன்றியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பிறகு அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை மருத்துவன் கைக்கொள்ள வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர் வழிநின்று பாவாணர்(948).
நோய்நாடி எனத்தொடங்கும் குறட்பாவில் திருவள்ளுவர் “நாடி” எனும் சொல்லை நோய்நாடி, நோய்முதல்நாடி, வாய்நாடி என மூன்று முறை பயன்படுத்தியுள்ளது குறிப்பாக நாடிப்பார்த்தல் எனும் தமிழ் மருத்துவமுறையை உள்ளம்கொண்டே எனப் பாவாணர் கருதுகின்றார். ஏனெனில் நாடிப்பார்த்து நோய்தீர்க்கும் முறை தமிழர்கள் பன்னெடுங்காலம்தொட்டுச் செய்துவரும் மருத்துவமுறையாகும்.

மேலும் “உற்றவன் தீர்ப்பான்..” (950) எனத்தொடங்கும் குறட்பாவில் அரிய மருத்துவத்துறைச் செய்திகளைத் திருவள்ளுவர் வைத்துள்ளார். அவற்றைக் கண்டு காட்டும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரும், பாவாணரும் பல புதிய நுட்பங்களைத் தருகின்றனர். மருத்துவம் வெற்றியாக நிறைவேற நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அம்மருத்துவனுக்குக் கருவியான மருந்து அல்லது மருத்துவமுறை, அம்மருத்துவனுக்குத் துணையாக இருந்து மருந்துகொடுப்பவன் எனும் நான்கு கூறுகளையும் விரித்துக்காட்டும் பரிமேலழகரும், பாவாணரும் மிகச்சிறந்த உலகியல் அறிவுகொண்டு இக்குறட்பாக்களுக்கு விளக்கம் வரைந்துள்ளனர். மருந்து அதிகாரக் குறட்பாக்களும், உரைகளும் தமிழர்களின் மருத்துவமுறையினை எடுத்துக்காட்டுவதில் முன்னிற்கின்றன.

புதன், 22 செப்டம்பர், 2010

சென்னையிலிருந்து முதன்மொழி…


முதன்மொழி

பாவாணர் உருவாக்கிய உலகத்தமிழ்க்கழகம் அமைப்பைப் புதிய வளர்ச்சியுடன் பாவாணர் பற்றாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக முதன்மொழி இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.

முதன்மொழி இதழின் நெறியாளர்களாக முதுமுனைவர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, பேராசிரியர் கு.பூங்காவனம் உள்ளனர்.ஆசிரியர் குழுவில் முனைவர் ந.அரணமுறுவல்,பாவலர் கதிர்.முத்தையன், பாவலர் தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி. திரு.கி.வெற்றிச்செல்வன், புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளனர்.

இந்த மாத இதழில் (சூன்-ஆகத்து-2010)செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள், சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு,இந்திய நாகரிகத்திற்கு அடிப்படை தமிழே!,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு?, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே! தமிழ் வழியில் படிப்போரே! என்னும் தலைப்புகளில் அமைந்த படைப்புகள் உள்ளன.

தமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கொண்டு 52 பக்கத்தில் வெளிவரும் இதழைத் தமிழ்ப்பற்றாளர்கள், நூலகங்கள் வாங்கி உதவலாம்.

தனி இதழ் 10.00 உருவா
ஆண்டுக்கட்டணம் 100.00
வாணாள் கட்டணம்: 1000.00
புரவலர் கட்டணம்: 3000.00

தொடர்புக்கு:

முதன்மொழி
726,பாவாணர்தெரு,
முல்லைநகர்,மேற்குத் தாம்பரம்,
சென்னை- 600 045
செல்பேசி + 91 9444203349

சனி, 14 ஆகஸ்ட், 2010

மொழிஞாயிறு பாவாணரின் அரிய கட்டுரை ஒன்று கிடைத்தது...

இரண்டு நாளுக்கு முன் புதுச்சேரி-பிரஞ்சு ஆய்வு நிறுவனத்தில் ஔவை.சு.துரைசாமி பிள்ளை அவர்களின் மத்தவிலாச பிரகசனம் என்ற கட்டுரையைத் தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எதிர்பாராத வகையில் பாவாணரின் "மொழித்திறத்தின் முட்டறுப்பது மொழி நூலே "என்ற கட்டுரை கிடைத்தது.எட்டுப்பக்க அளவுள்ள கட்டுரை.1955 இல் உருவான கட்டுரை.தமிழ்மண் பதிப்பக வெளியீடுகளில் இக்கட்டுரை வெளிவந்துள்ளதா என இனிதான் பார்க்கவேண்டும். வந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்"

என்னும் பழைய வெண்பாவை எடுத்துக்காட்டித் தொடங்கும் கட்டுரை மொழித்திறத்தின் முட்டறுக்கத் துணைபுரியும் நூல்கள், அகராதி,இலக்கணம்,சொற்பிறப்பியல் என்னும் சொல்லியல்,மொழிநூல் என நால்வகை என்று வகைப்படுத்துகிறது.

இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களிலுள்ள வழுக்களிற் பல தொல்காப்பியத்தினின்றே தொடர்ந்து வருகின்றன.அவை பல திறத்தன.அவையாவன:

1.எழுத்துநிலை
2.புணர்மொழிச்சொற்கள்
3.புணர்ச்சித்திரிபு
4.பகுசொல்லுறுப்புப் பிரிப்பு
5.தொகைச்சொல்லியல்பு
6.சொல்வரலாறு
7.சொல்வகை

என்னும் குறுந்தலைப்புகளில் பாவாணர் அரிய விளக்கங்களைத் தந்துள்ளார்.
(நேரம் கிடைக்கும்பொழுது முழுக்கட்டுரையையும் வெளியிடுவேன்)

ஞாயிறு, 16 டிசம்பர், 2007

தமிழ்வளர்ச்சிப்பணியில் குடந்தைக் கதிர்.தமிழ்வாணன்


குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்

  தமிழ்ப்பணி என்பது பல்வேறு வகையினவாக அமைகிறது. தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் எழுதுவது, பேசுவது, பயிற்றுவிப்பது, பயில்வது, ஆராய்வது என யாவுமே தமிழ்ப்பணியாகக் கருதத் தக்கனவே.இத்தகு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அனைவரும் தமிழ்வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அத்தகு பெருமைக்குரிய தமிழ்வாழ்க்கை நடத்துபவர்களில் குடந்தையில் வாழ்ந்துகொண்டிருக்கும் 'பாவாணர் பற்றாளர்' கதிர் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர்களின் வாழ்க்கையை அறிந்தபொழுது அவர்மேல் அளவுகடந்த மதிப்பும், அவர்கள் செய்துவரும் பணிகளை உற்றுநோக்கியபொழுது வியப்பும் மேலிட்டு நிற்கிறது.

  திருக்குறளில் ஆழ்ந்த பற்றும், பயிற்சியும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் இயல்பினர். பல கோயில்களுக்குத் தமிழ்மறைகளின் வழியில் திருக்குடமுழுக்கு நிகழ்த்திய பெருமைக்கு உரியவர். நாடு முழுவதும் பல திருமணங்களைத் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல் உள்ளிட்ட தமிழ்மறைகள் ஓதி நடத்திய பெருமைக்கு உரியவர். இவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் ஊரில் திருவாளர்கள் கு.கதிர்வேல்-சாலாட்சி அம்மாள் இவர்கட்கு மகனாக 23.04.1937 இல் பிறந்தவர். குத்தாலம் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்று பின்னர் ஆசிரியர் பயிற்சிபெற்று 28-11-1961 முதல் குடந்தை நகராட்சிப்பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாள் தமக்குத் தலைமை ஆசியரியர்களாக வாய்த்த ஆசிரியப் பெருமக்களையும் தமக்குக் கல்வி வழங்கிய கல்வி நிறுவனங்களையும் சென்று வணங்கி வந்தவர்.

  கதிர் தமிழ்வாணனார் அவர்கள் பெற்றோர்கள் வழியும் கற்றோர்கள் வழியும் தமிழ்நூல்களைக் கற்று மகிழ்ந்தவர். கல்வெட்டறிஞர் வை.சுந்தரேச வாண்டையார் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தமிழிலக்கிய அறிமுகம் பெற்ற இவர் தாமே கற்றுத்தகுதி பெற்றார். பாவாணரின் உலகத் தமிழ்க்கழகப் பணிகளில் முன்னின்று உழைத்தவர்.தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் பேச்சில் ஈர்ப்புண்ட இவருக்குத் திருக்குறள் பின்னாளில் வழிகாட்டி நூலாக ஆனது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் பலருக்குத் தமிழுணர்வும் திருக்குறள் பற்றும் ஏற்படக் காரணமாக விளங்கியவர். இவர்தம் வகுப்பறையில் நாள்தோறும் திருக்குறளை எழுதிப் போடுவதும் வீட்டு அரங்கத்தில் திருக்குறளைப் பலரின் பார்வைக்கு எழுதி வைப்பதும் இவர்தம் அன்றாடக் கடமையாகும்.

  குடந்தை நகராட்சிப்பள்ளிகள் இருபத்தொன்றிற்கும், திருவள்ளுவர் படத்தை நகராட்சியின் இசைவுடன் வழங்கித் திருக்குறள் தொண்டு செய்துள்ளார்.

 தம் வகுப்பில் பயின்ற மா.தையல்நாயகி என்னும் மாணவியின் நினைவாற்றல் அறிந்து அம்மாணவிக்குத் திருக்குறள் 1330 உம் முற்றோதல் செய்யும் பயிற்சி தந்தார்.அம் மாணவிக்குத் 'தமிழ்மறைச்செல்வி' என்னும் பட்டத்தையும் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.தமிழ்நாட்டரசு இவர்தம் திருக்குறள் பயிற்றுவிக்கும் பணியைப் போற்றி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் ஆடையும் பதக்கமும் அளிக்கப்பெற்று 'திருக்குறள் நெறித்தோன்றல்' என்னும் நற்சான்றிதழும் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பெற்றார்.

  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் திருக்குறள் பேரவையில் பல பொறுப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர். திருக்குறள் பதின்கவனகர் பெ.இராமையா அவர்களின் திருக்குறள் திறனை அறிந்து 1979 ஆம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக ஒருமாதம் மருத்துவ விடுப்பெடுத்துக்கொண்டு கவனகரைத் தம் இல்லத்தில் தங்க வைத்துக் குடந்தையிலும் அண்டை, அயலில் உள்ள ஊர்களிலும் திருக்குறள் கவனக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கவனகரின் ஆற்றல் மாணவர்க்குத் தெரியும்படிச் செய்தார்.திருக்குறளைத் தம் வாழ்க்கையில் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டவர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் வழியாகப் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார் இவற்றுள் திருக்குறள் குறித்த உரைகள் குறிப்பிடத்தக்கன.

 கதிர் தமிழ்வாணனார் அவர்களின் வீட்டு மாடியில் ஒலிபெருக்கி அமைக்கப்பெற்று நாளும் திருக்குறள் ஒலிபரப்பப்படுகிறது. இவர்தம் வீட்டில் உள்ள இடங்களுக்குத் தக திருக்குறளும் தமிழ்வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. சிறுபூந்தொட்டிகளில் உள்ள எழுத்துகளை உற்று நோக்கினால் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்று எழுதி வைக்கப்பெற்றிருக்கும் பாங்கினைக் காணும்பொழுது தமிழின்பம் பெறலாம். அதுபோல் மின்விசிறியின் இறக்கை மூன்றிலும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என எழுப்பட்டிருப்பதைக் காணும் யாவரும் வியந்து நிற்பர்.

  அயல்நாட்டுக்காரர்களும், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் இவர் வீட்டுத்தமிழை வியப்பர். அதனால்தான் குமுதம், தேவி, இதயம்பேசுகிறது முதலான பல்வேறு புகழ்பெற்ற ஏடுகளும் வீட்டில் நடைபெறும் தமிழ்ப்பணியை நாட்டுக்கு எடுத்துரைத்தன போலும்.

  மொழிஞாயிறு பாவாணர் அவர்களைத் தம் அறிவாசானாக ஏற்றுக்கொண்ட கதிர் தமிழ்வாணனார் பாவாணரின் வழியில் 1987 இல் நீடாமங்கலம் மருத்துவர் மறையரசன் அவர்களுடன் இணைந்து 4 கட்டங்களாக 1000 குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1990 இல் குடந்தையில் உள்ள ஆயிரம் கடைப்பெயர்களை ஆய்வு செய்து தாமே தமிழ்ப்பெயர்களை வைத்திருந்த கடை உரிமையாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தார்.

  ஆரவார நாகரிகத்திற்கு ஆட்படாத இவர் இதுவரை கே.பி.சுந்தராம்பாள் நடித்த அவ்வையார் படம் மட்டும் பார்த்தவர்.தம் மனைவியாரும் பிள்ளைகளும் தம் வழியில் நிற்கும் படி வாழ்பவர். பாவாணர் தனித்தமிழ்ப்பயிற்றகம் என்னும் அமைப்பை நிறுவி உள்கோட்டை, குத்தாலம், தஞ்சாவூர், திருவையாறு என ஒவ்வொரு ஊருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று தனித்தமிழ்ப்பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்திவருகின்றார்.

  பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனாரின்மேல் அன்பு கொண்ட இவர் அவர் தம் பெருமையைக் குடந்தைப் பகுதியில் நிலைநாட்டிவருபவர்.

  குடும்பவிழாக்கள், சடங்குகள், கோயில் பணிகள், திருமணம், வகுப்பறை என அனைத்து நிலைகளிலும் தூய தமிழ் பயன்படுத்தும் கதிர் தமிழ்வாணனார் வள்ளுவர் வழியிலும் வள்ளலார் வழியிலும் வாழ்பவர்.தம் மறைவுக்குப்பிறகு தம் உடலையும் கண்ணையும் பிறருக்கு உதவும் படியாக மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கி இசைவுதெரிவித்து ஒப்புதல் வழங்கியுள்ளார்.தாம் இதுநாள்வரை பயன்படுத்திய, தொகுத்து வைத்திருந்த அரிய நூல்களை மாணவர்களுக்குப் பயன்படும்படியாக நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் . தமிழுணர்வும்,இறையுணர்வும் கொண்ட கதிர் தமிழ்வாணனார் அவர்கள் குடந்தைப்பகுதியில் வாழும் தமிழறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

முகவரி:

குடந்தைக் கதிர் தமிழ்வாணனார்
பாவாணர் இல்லம்
54,செல்வராசு நகர்,
குடந்தை -612001,தமிழ்நாடு,இந்தியா
பேசி: + 9364212184