நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

எழுத்தாளர் கோ. தெய்வசிகாமணி (03.06.1947 - 20.09.2012)

ஆசிரியர் கோ.தெய்வசிகாமணி அவர்கள் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) தமிழுலகிற்குப் பல திறமையான எழுத்தாளர்களை வழங்கியுள்ளது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் ஆவார்.

கோ. தெய்வசிகாமணி அவர்கள் விருத்தாசலம் வட்டம் வேட்டக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருவாளர் கோவிந்தசாமி, இராசாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடன் இரு தம்பியும், ஒரு தங்கையும் உடன் பிறந்தவர்கள். கோ.தெய்வசிகாமணி அவர்கள் வேட்டக்குடியில் தொடக்கக் கல்வியையும், கொசப்பள்ளத்தில் நடுநிலைக் கல்வியையும், திருமுதுகுன்றத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் முடித்தவர். கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபொழுது பள்ளியில் முதல் மாணவராகத் தேறியர். 20 கி.மீ.தூரம் நாளும் நடந்து சென்று படித்தவர்.

கோ.தெய்வசிகாமணி அவர்கள் 1967 இல் மு.பரூர் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி 2005 இல் ஓய்வுபெற்றவர். ஆசிரியர் கோ. தெய்வசிகாமணி அவர்கள் 1968 இல் பழனியம்மாள் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். இவர்களுக்கு மூன்று பெண் மக்கள்.

1973 இல் புத்திலக்கியங்களில் ஈடுபாடும், 1980 - 81 இல் திரைப்படத் திறாய்விலும் ஈடுபாடுகொண்டு அத்துறைகளில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். 1994 இல் மணிமுத்தா நதி மக்கள் மன்றத்தில் இணைந்து பணிபுரிந்தார். 1998 இல் விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தார்.

 2001 இல் நடவு என்ற இதழைத் தொடங்கி 2010 வரை 25 இதழ்களை வெளியிட்டார். இதுவரை 60 சிறுகதைகளையும், 70 கட்டுரைகளையும் , ஒரு புதினத்தையும் வெளியிட்டுள்ளார். 2004 இல் சிதையும் கூடுகள், 2008 இல் வடுவின் ஆழம் என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

2010 இல் இவர் வெளியிட்ட கானல்காடு புதினம் தமிழகப் புதின வரலாற்றில் குறிப்பிடத்தக்க புதினமாகும். கொடுக்கூர் ஆறுமுகம் என்ற சமூகத் தலைவரின் வாழ்க்கை எவ்வாறு மாற்றம்பெற்றது என்பதை அழகிய புதினமாகத் தீட்டியுள்ளார். உடையார்பாளையம் வட்டத்தின் அரிய படைப்பாக இந்த நூல் கருதத் தக்கது.

 தடம்பதித்த முன்னோர்கள், கதவற்ற வீடு என்ற படைப்புகளை எழுதி வெளியிடும் நிலையில் வைத்திருந்தார். 20.09.2012 இரவு 7.15 மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார். இளைஞர்களை, படைப்பாளிகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியராகத் தம் வாழ்நாள் முழுவதும் கடமையாற்றிய கோ. தெய்வசிகாமணி அவர்களின் புகழ் இவ்வையம் உள்ள அளவும் நின்று நிலவுக.
கானல்காடு

 நன்றி:
பேராசிரியர் த.பழமலை பட்டி.சு.செங்குட்டுவன் தெ.க.எழிலரசன்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆசிரியர் கோ.தெய்வசிகாமணி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

கவிக்குரல் சொன்னது…

gd ayaavin illam thala murai eighthaalargalluku periya eizhappu...avarin paniyai thodarvom...!!!
karunguzhi ka.sethil