நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 29 ஜூன், 2008

நாசா விண்வெளி ஆய்வுநடுவத்தில் ஒரு தமிழுள்ளம்....தமிழ் ஓசையில் என் கட்டுரை

தமிழ் ஓசை களஞ்சியம் மின்வருடிப் படம்

  உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகமான பெயர் நாசா விண்வெளி ஆய்வு மையமாகும். தெரிந்தோ, தெரியாமலோ உலக மக்களாகிய நாம் அனைவரும் நாசாவின் ஆராய்ச்சிப் பயனிலும் சேவையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். செல்பேசிகள், இணையம் இவற்றைப் பயன்படுத்த நாசா நமக்கு உதவியுள்ளது.

  உலகின் தலைசிறந்த அறிவாளிகளின் கடும் உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் இவ்விண்வெளி மையம் எந்தநேரமும் இயங்கிக்கொண்டே உள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த அறிவாளிகள் பணிபுரிந்து விண்வெளி ஆய்வுகளில் முத்திரை பதிக்கின்றனர். இந்நிறுவனத்தின் வழியாக நடைபெற்ற நிலவுப்பயணம், செவ்வாய்க்கோள் பயணம் என்பனவும், வானுலகில் பன்னாட்டு ஆய்வுமையம் அமைக்கும் பணியும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அண்மைக் காலமாக வான்வெளியில் பன்னாட்டு ஆய்வு நிலையம் அமைப்பதை உலக மக்கள் ஆர்வமுடன் பேசிவருகின்றனர்.

  வான்வெளி ஆய்வுமையம் புவியிலிருந்து 250 கல் தொலைவுக்கு மேலே1600 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இவ் வான்வெளிக்கு ஏவு ஊர்திகளை அனுப்புவதில் தமிழர் ஒருவர் பெரும் பங்காற்றி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

  பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஊர் சமீன் காளியாபுரம்.இவ்வூரில் பிறந்தவர் நா.கணேசன் (அகவை 48).பெரும் செல்வ வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்த நா.கணேசன் இளமையில் பொள்ளாச்சியிலும் கோவையிலும் வாழ்ந்தவர்.(நா.கணேசனின் தாயார் வீடு சிங்காநல்லூரில் உள்ளது.இது தேவர்மகன் படத்தில் காட்டப்படுவது). சிற்றூர்ப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்.இளம் அகவையில் பள்ளிக்குச் செல்லாமல் மலை மக்களுடன் சேர்ந்து மலைப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை வளங்களைக் கண்டு சுவைத்தவர். பின்னாளில் சங்க இலக்கியக் காட்சிகளைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்கிறார்.

  பொறியியல் படிப்பைச் சென்னைக் கிண்டிப் பொறியியல் கல்லூரியிலும் முதுநிலைப் பொறியியலை சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயின்றவர். முதுநிலை அறிவியல், முனைவர் பட்டங்களை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கடந்த பதினேழு ஆண்டுகளாக நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இயங்கியல் துறையில் (Notes and Dynamic)) மேல்நிலைப் பொறியாளராகப் பணிபுரிகின்றார்.

  கணேசன் அவர்கள் தாம் கற்ற கல்வியில் தம் பேரறிவு விளங்கும்படி கடுமையாக உழைத்தவர். இரு கண்டுபிடிப்புகளைப் புதியதாக வானாய்வுத் துறைக்கு வழங்கியவர். இவை கணேசன் மாதிரி (Ganesn Model) என அறிஞர் உலகால் அழைக்கப்படுகிறது.

திரு.நாக. கணேசன் அவர்கள்

 கணேசன் அவர்கள் பொறியியல் படிக்கின்ற காலத்திலேயே தமிழ்ப் பற்றுடையவராக விளங்கியவர். இவர் தம் உறவினர்களான கு. அருணாசலகவுண்டர் அவர்கள், வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இவரின் தமிழ்ப்பற்றிற்கு ஒருவகையில் காரணகர்த்தாக்களாக விளங்கியுள்ளனர். ஓலைச் சுவடிகள், தமிழறிஞர்களின் வரலாறு, தமிழ்நூல் பதிப்பு பற்றிய பேரறிவு பெற்றவராக மாணவப் பருவத்திலேயே நா.கணேசன் விளங்கியவர். இப்பொழுது அவ்வறிவு தமிழ் ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் வகையில் மலர்ச்சி பெற்றுள்ளது. இவ்வகையில் காராணை விழுப்பரையன் மடல் என்னும் நூலைப் பதிப்பித்து மின்னூலாகத் தமிழ் மரபுத் திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பட்டிப்புராணம் பதிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். பழனித் திருக்கோயில் பற்றிய வரலாற்று ஆவணங்களைப் புலவர் இராசு அவர்களைத் தொகுக்கச் செய்து விரைவில் வெளியிட உள்ளார்.

  அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்குப் பலருக்கும் உதவுவது இவர் இயல்பு. அமெரிக்கா செல்லும் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருந்தோம்புவதைத் தம் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார். வீ.ப.க.சுந்தரம், சிற்பி, கி.நாச்சிமுத்து, சாலமன் பாப்பைய்யா, அமுதன், மா.ரா.பெஎ.குருசாமி, இராம. சுந்தரம், அறிவுமதி, வா.செ.குழந்தைசாமி, தமிழன்பன், மலேசியா பரமசிவம் உள்ளிட்டவர்களை அழைத்துப் பெருமை செய்துள்ளார்.

  தம் பொள்ளாச்சி வீட்டில் மூவாயிரம் அரியதமிழ் நூல்களும், அமெரிக்க வீட்டில் மூவாயிரம் அரிய தமிழ் நூல்களும் பாதுகாத்து வருகின்றார். வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்படிக்க.ஆய்வு செய்யப் பலருக்கு இவர் நூல்கள், குறிப்புகள் வழங்கி உதவி செய்துள்ளார்.உலக அளவில் தமிழ்பற்றி நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகளில் தமிழர், திராவிட மொழிகள் பற்றி கருத்துரைக்கும் கட்டுரை வரையும் இயல்புடையவர். சமற்கிருதப் பெருமை கூறி தமிழைத் தாழ்த்தும் அறிஞர்கள் உள்ளம் உவக்கும் வகையில் தமிழின் பெருமையை, தமிழர்களின் பெருமையை நிலை நாட்டி இவர் வரைந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் உலகத் தரத்தனவாகும்.

  அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளுடனும் தமிழர்களுடனும் நல்லுறவை வைத்திருக்கும் கணேசன் அவர்கள் உலக அளவில் தமிழர்களுக்கு உதவும் பல அமைப்புகளில் அறிவுரைஞர் குழுக்களில் இடம்பெற்றுள்ளவர். தமிழ் மணம் என்ற இணையத்திரட்டிக்கு இடையூறு வந்தபொழுது அமெரிக்கா வாழ் நண்பர்களுடன் இணைந்து அந்நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல உதவி அதன் உறுப்பினராகவும் விளங்குபவர்.

  தமிழ் இணைய வளர்ச்சியில் கணேசனுக்கு ஒரு பங்கு உண்டு. தமிழ் எழுத்துரு, தமிழ் மென்பெருள் பற்றிய ஆய்வுகிளல் ஈடுபடுபவருக்குப் பல வகையில் உதவுவது, கருத்துரை வழங்குவது இவர் இயல்பு. இவ்வகையில் முகுந்துவின் எ.கலப்பை உருவாக்க உதவியுள்ளார். வலைப்பதிவு தமிழர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என்பதை அறிந்த கணேசன் வலைப்பதிவர்களை ஊக்கும் வகையில் பல செயல்களைச் செய்து வருகின்றார். தமிழகத்தின் பகுதிகள்தோறும் தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை நடைபெற அறிவுரை வழங்கி அமெரிக்காவில் இருந்தபடியே தக்கவர்களை நியமித்துப் பணிபுரிந்து வருகிறார்.

 தமிழர்களுக்கு இணையத்தில் இன்று தேவையாக இருப்பது ஒருங்குகுறி எழுத்துருவாகும்.அவ்வெழுத்துருக்களின் வளர்ச்சி பற்றி தெளிவான வரலாறு அறிந்தவர்களுள் கணேசனும் ஒருவர். பல தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பாளர்களுக்குக் கருத்துரை வழங்கியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களைப் பின்பற்றி கருத்துரைப்பவர். உகரங்களை உடைத்து எழுதவேண்டும் என்னும் இவர் கருத்தைத் தமிழ் அறிஞர் உலகம் ஏற்பதில்லை.

  தமிழில் வெளிவந்துள்ள பழைய பதிப்புகள், புலவர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்கள், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரல்நுனியில் வைத்திருப்பவர். கல்வெட்டுகள் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்.

  அண்மையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூருக்குப் பயணம் செய்தபொழுது அங்கிருந்த மலைப்பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக இரும்பு உருக்கியதற்கான தடயங்கள் இருந்ததை அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எடுத்துரைத்த பொழுது இலங்கையிலும் இத்தகு இரும்பு உருக்கும் உலைகள் இருந்துள்ளது என்பது பற்றி மேனாட்டு அறிஞர் ஒருவர் ஆராய்ந்துள்ளதை நா.கணேசன் எடுத்துரைத்தார்.

  மேல்நாட்டு அறிஞர்கள் தமிழகத்தைப் பற்றி எழுதியுள்ள நூல்கள், கட்டுரைகள் பற்றி வினவினால் அடுத்த நொடியில் விளக்கம் தரக்கூடியவர். நா.கணேசன் அவர்களிடம் பேசும்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முந்திய இலக்கியம் சார்ந்த செய்திகளை, சிற்றிலக்கியங்களை, புலவர்களைப் பற்றிக் கேட்டால் புது உற்சாகம் பிறக்கும் இவருக்கு. தமிழகத்துப் பாறை ஓவியங்கள் பற்றி நன்கு அறிந்தவர். தெய்வச் சிலைகள், படிமங்கள் பற்றியும் நன்கு அறிவார்.

  ஆராய்ச்சிப் பணிகளிலும் பொறுப்பு வாய்ந்த நாசா விண்வெளி ஆய்வுப்பணியிலும் இருக்கும் நா.கணேசனுக்குத் தமிழில் பதிவு எழுத நேரம் குறைவு. எனவே கிடைக்கும் நேரத்தில் யாகு இணையதளக் குழுமத்தில் இந்தியவியல், சீனவியல், சுமேரியவியல், மொழிநூல், கலைவரலாறு, எழுத்தியல்புகள் பற்றி எழுதும் பேராசிரியர்களுக்கு நடுவே தமிழ், தமிழர், திராவிடவியல் பற்றி எழுதுவதில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும் உலகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பவர். ஆண்டுக்கு ஒருமுறை தாயகமாம் தமிழகத்திற்கு வந்து அறிஞர்களைக் காண்பது இலக்கிய முயற்சிகளை அறிவது என இவரின் விருப்பமாக உள்ளது. கொங்கு மணம் கமழ உரையாடும் இவரின் வாழ்க்கை அமெரிக்க மண்ணில் என்றாலும் நினைவுகள் என்னவோ தமிழ் இலக்கியங்களைப் பற்றியே உள்ளது.

காராணை விழுப்பரையன் மடல்

  காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை நா.கணேசன் பதிப்பித்துள்ளார். இந்நூல் அச்சுவடிவம் பெறுவதற்கு முன்பாக மின்னூலாக வந்துள்ளது தனிச்சிறப்பு. மின்னூல்கள் என்பன உலகெங்கும் இருப்பவர்களுக்குப் பயன்படும் தரத்தின. இந்நூல் செயங்கொண்டார் இயற்றியது. இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள அண்ணமங்கலம், தீபங்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் சோழரின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன், விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர்பெற்றுள்ளது. இந்நூல் நெடில்கீழ் தகர எதுகை (ஆதி நாதன்) கொண்டு 550 அடிகளில் அமைந்துள்ளது.

 பேராசிரியர் வே.இரா.தெய்வசிகாமணி கவுண்டரின் ஓலைச்சுவடி, சென்னைக் கீழ்த்திசை நூலக ஓலைச்சுவடிகளைக் கொண்டு பதிப்பித்துள்ளார். உலகாய்தம் பற்றி எடுத்துரைக்கும் அரியநூல் இது. தமிழ்க்கொங்கு என்னும் பெயரில் இவர் வைத்துள்ள இணைய தளங்களுக்குச் செல்லும் பொழுது பயனுடைய தகவல்களைப் பெறலாம்.

கணேசன் மாதிரியின் சிறப்பு

  எந்திரவியலில், முக்கியமான எல்லாக் கருவிகளும் அதன் பகுதிகளும் Finite Element Modeling என்னும் முறையில் கணினிகளில் வடிவமைக்கப்படுகின்றன. கணினிகளின் திறனின் அசுர வளர்ச்சியால் ஃபைனைட் எலிமெண்ட் மாடல்களின் அளவு (matrix size) கூடிக்கொண்டே போகிறது. மில்லியன் கணக்கான மாதிரிகள் இந்நாளில் சாதாரணம். ஆனால், அவ்வெந்திரங்களின் அதிர்வெண் (modal frequency), அதிர்வு வடிவம் (mode shape) பரிசோதனை முறையில் வரையறுக்க ஒரு சில நூறு பரிசோதனை சானல்களே இருக்கும். இதற்கே, விண்வெளி ஆய்வில் ஏராளமான செலவு ஆகும் நிலை, எனவே கணினி கொள்ளளவு போல பரிசோதனைகளில் சானல்களைப் பெருக்க முடியாது. அந்தப் பரிசோதனை Accelerometer channel-களைக் குறைந்த செலவில் தேர்ந்தெடுக்க 'கணேசன் மாதிரி' பல்வேறு களங்களில் விண்துறையில் 20 ஆண்டுகளாய்ப் பயன்படுகிறது.

நனி நன்றி : தமிழ் ஓசை, களஞ்சியம் 29.06.2008, சென்னை, தமிழ்நாடு

10 கருத்துகள்:

மோகன் கந்தசாமி சொன்னது…

/////தமிழ் மணம் என்ற இணையத்திரட்டிக்கு இடையூறு வந்தபொழுது அமெரிக்கா வாழ் நண்பர்களுடன் இணைந்து அந்நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல உதவி அதன் உறுப்பினராகவும் விளங்குபவர்.////

நண்பரே,
தமிழ்மணத்திற்கு என்ன பிரச்சினை வந்தது என அறிய விரும்புகிறேன், உதவ முடியுமா?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி.
தமிழ்மணம் நிறுவனத்தினரைக் கேட்பது சிறப்பு.
மு.இளங்கோவன்

கோவை சிபி சொன்னது…

திரு. நா.கணேசன் அவர்களின் பணிகள் பற்றிய தொகுப்பு பிரமிக்கவைக்கிறது.வாழ்த்துக்கள் உங்களுக்கும்,கணேசன் அவர்களுக்கும்.

வேளராசி சொன்னது…

தமிழ்கூறும் நல்லுலகத்திற்க்கு இவரது சேவை தொடர வாழ்த்துகள்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி..
மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

கோவை சிபி அவர்களுக்கு,
தங்கள் வாழ்த்திற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.

மு.இளங்கோவன்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கணேசன் அவர்கள் எளிமையானவரும்,இயல்பானவரும் ஆவர்;சில செய்திகள் பற்றிய பதிவுகள் எழுதிய போது தொலைபேசிப் பாராட்டி அளவளாவி மகிழ்ந்தவர்.
நல்ல நண்பரும் கூட என அவதானிக்கிறேன்..
கட்டுரைக்கு நன்றி..

Thamizhan சொன்னது…

தமிழுக்காக ஒரு தனி மனிதன் என்ன செய்துவிட முடியும் என்று கேட்போருக்கு உரிய பதிலாக விளங்குபவர் நாக.கணேசன் அவர்கள்.
எதிலும் முன்னோடியான கருத்துக்கள்,செயல் பாடுகள் அவர் முத்திரை.நேரமில்லை என்று சொல்பவர்கட்கு அவர் ஒரு வியப்பு.
22 வலைப் பதிவுகளில் அவரது தமிழ்,மொழி,இனம்,வரலாறு சார்ந்த ஆதாரபூர்வமானக் கருத்துக்கள் வருகின்றன்.கணிணியில் அவர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டுக்கு மட்டுமே
தமிழுக்காக ஒரு நோபல் பரிசு ஏற்படுத்தித் தரவேண்டிய மனிதர் அவர்.
அவர் பற்றி எழுதுயுள்ளமைக்கு நன்றி.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் பதிவிற்கு நன்றி

s.vinaitheerthan சொன்னது…

நண்பர் திரு கணேசன் பணிகளைப் போற்றுகிறேன். தங்கள் பதிவு அவர் செயல்பாடுகளைச் சிறப்பாகத் தெரிவிக்கிறது.

பதுவில்
சமற்கிருதப்பெருமை கூறி தமிழைத் தாழ்த்தும் அறிஞர்கள் உள்ளம் உவக்கும் வகையில் தமிழின் பெருமையை, தமிழர்களின் பெருமையை நிலை நாட்டி இவர் வரைந்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் உலகத் தரத்தனவாகும்."
தமுழின் பெருமைக்கு சமக்கிரதச் சார்ப்பாளார்கள் எவ்வாறு மகிழ்வார்கள் என்ற குழப்பம் இருக்கிறது.
நன்றி
சொ.வினைதீர்த்தான்