நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#தமிழறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#தமிழறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை


அறிஞர் இரா.சாரங்கபாணியார்

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம். இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும், கவிதை வாசிப்புகளும், நகைச்சுவையின் பெயரில் அடிக்கப்படும் கோமாளிக் கூத்துகளும் இன்று தமிழ் என்று ஆகிவிட்டது.

தொலைக்காட்சிகளின் நாடிப்பிடித்தும், அரசியல்வாதிகளின் அடிமனத்து விருப்பங்களை அறிந்தும் தங்கள் கலைச்சரக்குகளைக் கவிதை, பட்டிமன்ற, அரட்டைக் கச்சேரிகளின் வடிவில் காசாக்கிப் பலர் வயிறுவளர்க்கும் சூழலில் தமிழறிஞர் என்றால் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று இலக்கணவாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஒருவர். அவர்தான் அறிஞர் இரா.சாரங்கபாணியார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராக இருந்து பலநூறு மாணவர்கள் தரமான மாந்தர்களாகவும், தமிழறிஞர்களாகவும் மாற வழிவகுத்தவர் இரா.சாரங்கபாணியார். தமிழர்களின் மறையாகப் போற்றப்படும் திருக்குறள், சங்க இலக்கியங்களைப் பிழையறக் கற்று, அதன்வழி வாழ்ந்து வரும் இரா.சாரங்கபாணியார் தமிழ்இலக்கியங்கள் தவிர பிற உலகியல் ஒன்றும் அறியாதவர். பரிபாடல் என்னும் பிறரால் நுழைந்து ஆழம் காணமுடியாத சங்க இலக்கியப் பனுவலைத் தம் நுண்ணறிவால் ஆழமாகக் கற்றவர். அதில் மிகச்சிறந்த ஆய்வு நடத்தி நூலாக வெளியிட்டவர்.

திருக்குறளின் அத்தனைக் குறட்பாக்களின் வேர் மூலமும் அறிந்தவர் . திருக்குறளுக்குக் காலந்தோறும் எழுந்த உரைகளை நுட்பமாகக் கற்று அதன் வேறுபாடுகளை நா நுனியில் வைத்திருப்பவர்.தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட இரா.சாரங்கபாணியார் மாணிக்கனாரின் விருப்பப்படி பல ஆண்டுகள் காரைக்குடியில் அவருடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.உள்ளத்துள் தூய்மையுடையவராகப் புலால் மறுத்து, திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைய வாழ்ந்து வருபவர் இரா.சாரங்கபாணியார். இன்றும் இவர் வீட்டில் மாடு, கன்றுகளை வளர்த்து அதன் பயன் நுகரும் சிற்றூர் சார்ந்த எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அகவை 84 என்ற நிலையிலும் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆராய்ந்தும், தமிழ் நூல்களைப் பதிப்பித்தும் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறார். செம்மொழி உயராய்வு நிறுவனத்திற்காக இவர் திருக்குறள், பரிபாடல் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரின் திருக்குறள் உரை வேறுபாடுகள் நூலும்,பரிபாடல் திறன் நூலும் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படுவனவாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அருகில் அமைந்துள்ள மாரியப்பா நகரில் ஓய்வு பெற்ற பிறகும் இரா.சாரங்கபாணியார் முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் செ.வை.சண்முகம் ஆகியவர்களுடன் நாளும் உரையாடித் தமிழ் ஆய்வுகளை நிகழ்த்தி வருபவர். புறங்கூறாமையை மேற்கொண்டு வாழ்ந்துவரும் இரா.சாரங்கபாணி அவர்கள் தம் பேராசிரியர் நண்பர்களுடன் தமிழ் ஆய்வுகள் பற்றியே உரையாடுவாராம். இவரின் வாழ்க்கை தமிழ் வாழ்க்கை.

இவர் மகன் அந்துவன் அவர்கள் இலண்டனில் புகழ்பெற்ற மருத்துவராகப் பணிபுரிபவர். தந்தையாரைப் போலவே எளிமையும், அடக்கமும் விரும்புபவர். பெயரர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தேவங்குடி ஊரினர். 18.09.1925 இல் பிறந்தவர். பெற்றோர் பொ.இராசகோபால் மழவராயர், சனமாலிகை அம்மையார். தேவங்குடி என்பது அமரர் கோபாலகிருட்டிணன் (மேனாள் பாராளுமன்ற உறுப்பினர்)உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த ஊர்.

அவ்வூரில் தோன்றிய இரா.சாரங்கபாணியார் அவ்வூரில் தொடக்கக் கல்வியையும், புவனகிரி கழக உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில் ஆறாம்படிவம் வரையிலும் பயின்று,1942 இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்பயின்று புலவர் பட்டமும் (1947), பி.ஓ.எல் பட்டமும்(1949) பெற்றவர்.முதுகலை(1955),எம்.லிட்(1962), முனைவர் பட்டம் (1969) ஆகியவற்றைச் சென்னைப்பல்கலைக்கழகத்தின் வழியாகப் பெற்றவர்.

பி.ஓ.எல் வகுப்பில் இவருடன் பயின்றவர்கள் முனைவர் மு.கோவிந்தசாமி, முனைவர் ப.அருணாசலம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அறிஞர் சாரங்கபாணியார்க்கு ஆசிரியர்களாக இருந்து நெறிப்படுத்தியவர்களுள் கா.சுப்பிரமணிய பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக் கல்வியை நிறைவுசெய்த பிறகு 1949 ஆம் ஆண்டில் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பணியாற்ற தொடங்கினார்.விரிவுரையாளர் பணியேற்ற இவர் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறந்தார்.1979 முதல் மூன்றாண்டுகள் உயராய்வு நடுவத்தின் இயக்குநராகவும் இருந்தார்.இருபதாண்டுகளுக்கும் மேலாக அறிஞர் வ.சுப.மாணிக்கனாருடன் பணிசெய்யும் வாய்ப்பு அமைந்ததை நன்றியுடன் நினைவு கூர்பவர்.இவருக்குத் திருக்குறளிலும்,பிற சங்க இலக்கியப் பனுவல்களிலும் மிகுந்த ஆர்வம் தோன்ற செம்மல் வ.சுப.மாணிக்கனார் அவர்களே காரணம் எனில் மிகையன்று. திருக்குறள் உரைவேற்றுமை உள்ளிட்ட நூல்கள் உருவாக அடித்தளம் அமைத்தவரும் அறிஞர் வ.சுப.மா அவர்களேயாவர்.

காரைக்குடி கல்லூரிப் பணியிலிருந்து தாமே ஓய்வு பெற்றுத் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்(1982-86 இல்) சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியில் இணைந்து தமிழ் இலக்கியத்துறையின் தலைவராக மிளிர்ந்தார். நான்காண்டு உழைப்பின் பயனாய்ச் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இரு தொகுதிகள்)வெளியிட்டார்.

1988-1994 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஆய்வகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அறிஞர் சாரங்கபாணியார் காரைக்குடித் தமிழ்ச்சங்கத்தில் துணைத்தலைவராக இருந்து, சங்க இலக்கிய வகுப்புகள் நடத்திய பெருமைக்கு உரியவர்.

சிதம்பரம் தில்லைத் தமிழ்மன்றத்தில் கிழமைதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தி மூன்றாண்டுகளில் திருக்குறள் பாடத்தையும் புறநானூற்று வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திப் புறநானூற்றுப் பாடல்களை அனைவருக்கும் பரப்பியமையும் இவரின் தமிழ் இலக்கிய ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும். தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியவர். ஆய்வரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியவர்.

யாழ்ப்பாணம் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாடநூற்குழுவின் தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்ககலைக் கழகத்திலும் இவர் எழுதிய இயற்கை விருந்து, குறள் விருந்து, பரிபாடல் திறன்,சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் நூல்கள் பாடநூல்களாக இடம்பெற்றுள்ளன.

இவர் எழுதிய பரிபாடல் திறன்(1975),மாணிக்கச்செம்மல்(1999) நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசில்களைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டமும்(1981), சீராம் நிறுவனத்தின் திருக்குறள் பொற்கிழியும்(1991), தமிழ்நாட்டரசின் விருதும்(1998), மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச்செம்மல் விருதும் பெற்றவர்(2000).

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்களின் திருமணம் 15.06.1949 இல் குமுடிமூலை என்னும் ஊரில் நடந்தது. தனலக்குமி அம்மையாரை மணந்துகொண்டார். இவர்தம் ஆசிரியப்பெருமக்கள் ஆ.பூவராகம் பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, க.வெள்ளை வாரணனார், கு.சீநிவாசனார், நண்பர் க.திருமாறன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் வாழ்வு வாழ்ந்துவரும் இவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடம் உண்டு.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் அவர்கள் தம் ஊரில் படிக்கும் மாணவர்களுள் பத்தாம் வகுப்பிலும், மேல்நிலை வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் உருவா ஆண்டுதோறும் பரிசில் நல்கி ஊக்கப்படுத்தி வருகின்றார்.

அறிஞர் இரா.சாரங்கபாணியார் வழங்கிய நூற்கொடை

01.இயற்கை விருந்து(1962)
02.குறள் விருந்து(1968)
03.பரிபாடல் திறன்(1972)
04.A critical Study of Paripatal(1984)
05.A Critical Study of Ethical Literature in Tamil(1984)
06.சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(இருதொகுதி)1986
07.திருக்குறள் உரை வேற்றுமை, அறத்துப்பால் (1989)
08.திருக்குறள் உரையாசிரியர்கள்(1991)
09.திருக்குறள் உரை வேற்றுமை, பொருட்பால் (1992)
10.திருக்குறள் உரை வேற்றுமை, காமத்துப்பால்(1992)
11.சங்கச் சான்றோர்கள்(1993)
12.வள்ளுவர் வகுத்த காமம்(1994)
13.புறநானூற்றுப் பிழிவு(1994)
14.மாணிக்கச் செம்மல்(1998)
15.திருக்குறள் இயல்புரை(1998)
16.சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்(1999)
17.திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம் (2000)
18.சங்கத்தமிழ் வளம்(2003)
19.பரிபாடல் உரைவிளக்கம்(2003), கோவிலூர் மடம்
20.சங்க இலக்கிய மேற்கோள்கள்(2008)
21.சங்க இலக்கியப்பிழிவு(2008)
22.திருக்குறள் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)
23.பரிபாடல் செம்மொழிப்பதிப்பு(அச்சில்)


மாணிக்கச் செம்மல்(வ.சுப.மாணிக்கம் வாழ்க்கை வரலாறு)


பரிபாடல் திறனாய்வு(ஆங்கிலமொழியில்)


பரிபாடல் கோவிலூர் ஆதீனப்பதிப்பு


திருக்குறள் உரைவேற்றுமை


திருக்குறள் உரைவேற்றுமை


சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்


திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்)



திருக்குறள் உரையாசிரியர்கள்

அறிஞர் இரா.சாரங்கபாணியார் இல்ல முகவரி :

முனைவர் இரா.சாரங்கபாணியார்
குறள் இல்லம்,
330,மாரியப்பா நகர்,
அண்ணாமலை நகர்,சிதம்பரம்-608 002
தொலைபேசி : 04144 - 238038

நனி நன்றி:
தமிழ் ஓசை - களஞ்சியம்,சென்னை,தமிழகம்.21.09.2008
முனைவர்.மூவேந்தன்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் தன.சசிகலா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க.பாரி,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர்.சே.கல்பனா,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா


ம.இலெ.தங்கப்பா

    தென்காசி மாவட்டம், குறும்பலாப்பேரியில் 08.03.1934 இல் பிறந்தவர் ம.இலெனின் தங்கப்பா. இவர்தம் பெற்றோர் புலவர் ஆ. மதன பாண்டியன், இரத்தினமணி அம்மையார். தந்தையாரின் இளமைக்காலக் கல்விப் பயிற்றலில் இயற்கையாகவே தமிழ்ப்புலமை கைவரப் பெற்றவர் தங்கப்பா. பல்வேறு தமிழ் நூல்கள் இளமையிலேயே அறிமுகமாயின. அப்பாடல்களின் ஓசை உள்ளத்தில் பதிந்ததால் தங்கப்பா இயற்றும் பாடல்கள் மிகச்சிறந்த ஓசையின்பம் கொண்டனவாக விளங்குகின்றன. இளங்கலைப் பொருளியல் பயின்ற தங்கப்பா, பின்னர் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றவர்.

 மாணவப் பருவத்திலேயே மொழிபெயர்ப்புப் பணிகளில் விளையாட்டாக ஈடுப்பட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். கல்வி கற்றவுடன் தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் வரலாறு, ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார் (1954 -1959). பின்னர்ப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் (1959-68) பணிபுரிந்தார். 1968 முதல் 1994 வரை புதுச்சேரி அரசுக்கு உரிமையான கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக்காலில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 ஆரவாரம் இல்லாமல் அடக்கமே வடிவாக விளங்குபவர். அன்பின் மேன்மையை உலகிற்குப் பல நூல்களின் வழியாகவும் நடைமுறை வாழ்வியல் வழியாகவும் விளக்கி வருபவர். இயற்கையீடுபாடு கொண்டவர். தம் பிள்ளைகளுக்குச் செங்கதிர், விண்மீன், இளம்பிறை, மின்னல் எனப் பெயரிட்டுள்ள பாங்கு ஒன்றே இவர்தம் இயற்கை ஈடுபாடு காட்டும் சான்றுகளாகும்.

  மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு பல பணிகள் செய்தவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்து தொடக்க காலத் தென்மொழி வளர்ச்சிக்கு உழைத்தவர். தமிழ் இன முன்னேற்றத்திற்கானஅமைப்புகளுடன் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.

 பாவேந்தர், பெருஞ்சித்திரனார், கண்ணதாசன், கோவேந்தன் உள்ளிட்ட தமிழ்ப்பற்றாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். பாவேந்தரின் குயில் இதழில் ம.இலெனின் என்னும் பெயரில் எழுதத் தொடங்கியவர்.

  தங்கப்பாவின் படைப்புகள் தொடக்கத்தில் பல இதழ்களின் வழியாக வெளிவந்தன.அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தென்றல், வானம்பாடி, பூஞ்சோலை, இனமுழக்கம், தமிழகம், உரிமை வேட்கை, கைகாட்டி, கவிஞன், மீட்போலை, அரும்பு, விருந்து, கவியுகம், பொதுமை, தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ், கண்ணியம் முதலான இதழ்கள் குறிப்பிடத்தகுந்தன.

  தங்கப்பா இதழ்களுக்குத் தகக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர் இல்லை. தமிழ்மொழி, இனம் சார்ந்த கொள்கைகளையும் இயற்கை,அன்பு இவற்றை வலியுறுத்தியும் மிகுதியாக எழுதியுள்ளவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிக்கு அறிமுகம் செய்த வகையிலும், பிறமொழி இலக்கியங்களைத் தமிழிற்கு மொழிபெயர்த்து வழங்கிய வகையிலும் என்றும் நினைவுகூரத் தக்கவர். தமிழ் இதழ்களில் எழுதுவதுடன் ஆங்கில இதழ்களிலும் எழுதி வருபவர். இவற்றுள் Caravan,Poet, Cycloflame (u.s.a), Modern Rationalist,Youth Age, New Times, Observer முதலியன குறிப்பிடத்தகுந்தன.

  தங்கப்பா தம் பதினேழாம் அகவையில் பாடல் புனையத் தொடங்கி இன்றுவரை கற்பனை வளம் குறையாமல் படைப்புகளை வழங்கி வருபவர். தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர்.Hues and Hormonies என்னும் பெயரில் சங்கப் பாடல்களையும் Songs of Grace in St.Ramalingam என்னும் பெயரில் இராமலிங்க அடிகளாரின் பாடல்களையும் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மொழி பெயர்த்து Selected Poems of Bharathidasan எனவும் வெளியிட்டவர்.

  பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்த்தமைக்குக் கல்கத்தா தமிழ்ச்சங்கப் பரிசில் பெற்றவர். அரவிந்தர் பாடல்களைத் தமிழிற்குப் பெயர்த்தமைக்கு 1972 ஆம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தின் பரிசினையும் பெற்றவர்.

  தங்கப்பாவின் படைப்புகள் இவருக்குப் பல பரிசில்களைப் பெற்றுத் தந்துள்ளன. இவற்றுள் தமிழ் நாட்டரசின் பாவேந்தர் விருது(1991), பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியார் விருது(1998), தமிழர் தேசிய இயக்கத்தின் தமிழ்த்தேசியச் செம்மல்(2002) விருது உள்ளிட்டன குறிப்பிடத்தகுந்தன. இரண்டுமுறை சாகித்ய அகாதெமி விருதுபெற்றவர். பல்வேறு தமிழமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். தெளிதமிழ் இதழின் ஆசிரியராகத் தமிழ்த்தொண்டு செய்தவர்.

  புதுச்சேரி அரசு வழங்கிய விருதை அவ்வரசு தமிழுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடாததைச் சுட்டிக்காட்டித் திருப்பி வழங்கியவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும், தில்லி சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகவும் விளங்குபவர். தென்மொழி இதழின் உறுப்பாசிரியராகவும் விளங்கியவர்.

ம.இலென் தங்கப்பா இன்று 31.05.2018 அதிகாலை 1.30 மணியளவில் இயற்கை எய்தினார்.

ம.இலெ.தங்கப்பாவின் நூல்கள்

கட்டுரை நூல்கள்

01. பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்,1987
02. நுண்மையை நோக்கி,1989
03. எது வாழ்க்கை,1994
04. திருக்குறளும் வாழ்வியலும்,1995
05. வாழ்க்கை அறிவியல்,1998
06. பாட்டு வாழ்க்கை,1994,1999.
07. மொழிமானம்,2000
08. கொடுத்தலே வாழ்க்கை,2001

தமிழாக்கம்

09. புகழ்பெற்ற ஆங்கிலப் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கம்,1959
10. மலைநாட்டு மலர்கள்,1975(இரசுல் கம்சுதாவ் பாடல்கள்)
11. மண்ணின் கனிகள்,1996
12. கனவுகள்,2002(ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கம்)

ஆங்கில ஆக்கம்

13. Hues and Harmonies From Ancient Land,1970
14. Songs of Grace in St.Ramalingam,1985
15. Selected Poems of Bharathidasan,1992
16. House of Darkness,1996(இருண்ட வீடு)
17. Hues and Harmonies From Ancient Land,Part II
18. The Prince Who Became a Monk and Other Stories from Tamil Literature, 2016
19. Red Lilies and Frightened Birds: Muttollayiram, 2011
20. Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry, 2010

ஆங்கில மொழியில் எழுதியவை

21. This Question of Medium(Essay)-1996

22. Meadow Flowers(Poems)-1984

பிற நூல்கள்

23. பாடுகிறேன்,1973
24. தேடுகிறேன்,1980
25. ஆந்தைப்பாட்டு,1983
26. அடிச்சுவடுகள்,1983
27. வேப்பங்கனிகள்,1985
28. கள்ளும் மொந்தையும்,1987
29. இயற்கையாற்றுப்படை,1989
30. மயக்குறுமக்கள்,1990
31. அகமும் புறமும்,1991
32. பின்னிருந்து ஒரு குரல்,1992
33. பனிப்பாறை நுனிகள்,1998
34. புயற்பாட்டு,2000
35. பாட்டெனும் வாள் எடுப்பாய்,2004

குழந்தைகளுக்கான நூல்கள்

36. எங்கள் வீட்டுச்சேய்கள்,1973,2003
37. மழலைப்பூக்கள்,1983
38. இயற்கை விருந்து,1991
39. வாழ்க்கை மேற் காதல்
40. மரபுப்பாடல் செத்துவிட்டதா?
41. இடித்துரைப் பாடல்கள்(வசையமுது)
42. நையாண்டிமாலை(பாட்டும் உரையும்)
43. சோளக்கொல்லைப் பொம்மை
44. வாழ்வியல் அறிவீர்.


















பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் இல்ல முகவரி:

பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
7-11,அவ்வை நகர்,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி- 605 008

இல்லம் பேசி : 0413-2252843

புதன், 17 செப்டம்பர், 2008

தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்


முனைவர் கடவூர் மணிமாறன்

 தனித்தமிழில் பாடல் புனையும் ஆற்றலும், தமிழ்மொழியில் மிகச்சிறந்த புலமையும் கொண்டவர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள். இவர் தம் இயற்பெயர் ப. முத்துசாமி என்பதாகும். இயற்பெயர் மறைந்து, புனைபெயர் நிலைபெறும்படி தொடர்ந்து இயங்கிவருபவர். பேச்சும், வாழ்க்கையும் இரண்டாக இல்லாமல் ஒன்றென வாழும் இயல்பினர்.

 கருவூர் அருகில் உள்ள கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் 21.01.1947 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. கு.பழனியப்பனார் - திருவாட்டி கன்னியம்மாள் ஆவர்.  இவர் புலவர்., முதுகலை., பி.ஒ.எல்., கல்.மு., முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 35 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பணியும் செய்த பெருமைக்கு உரியவர்.

 கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களில் கல்வி கற்ற பெருமைக்கு உரியவர்.

 முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடல், கட்டுரை என எழுதிவரும் மணிமாறன் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றும் இயல்புடையவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வழியில் தனித்தமிழில் எழுதவும் பேசவுமான ஆற்றல் பெற்றவர். பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர். அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, முரசொலி, கண்ணியம், கவிக்கொண்டல், கவிதை உறவு, எழுகதிர், முகம், தமிழ் ஓசை உள்ளிட்ட இதழ்கள் குறிப்பிடத் தகுந்தன.

 மணிமாறன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

 பல்வேறு கருத்தரங்குகளில் கட்டுரை படித்தும், பாட்டரங்குகளில் பாடல் வழங்கியும் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆறாம் உலகத்தமிழ் மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றபொழுது(1987) மலேசியா. சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று வந்தவர். அந்தமானில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டிலும் கலந்துகொண்ட பெருமைக்கு உரியவர். தமிழ்நாட்டுப் பாடநூற் குழுவில் இடம்பெற்று ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களை உருவாக்கியவர்.

 மணிமாறனின் அழகோவியம், சிறகை விரித்த சிந்தனைகள், பொன்னி, தமிழ்க்களம், ஆகிய நூல்கள் பரிசுபெற்ற நூல்களாகும். மணக்கும் மலேசியா நூல் கல்லூரிகளில் பாட நூலாக இருந்தது. இவர்தம் பாடல்கள் தமிழ் நாட்டரசின் பாடநூல்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன. இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளதுடன் பலரின் நூல்கள் வெளிவரத் துணை நின்றுள்ளார். இவரின் வழியாகப் பலர் பாவலர்களாக, ஆசிரியர்களாக மலர்ந்துள்ளனர்.

 இவர் தம் ஆசிரியர் பணிக்காகத் தமிழ்நாட்டரசு வழங்கிய இராதாகிருட்டிணன் விருது, உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை வழங்கிய கவிமாமணி விருது, கனிமொழி இலக்கிய அமைப்பு வழங்கிய இலக்கியச் சுடர் விருது, திருக்குறள் நெறித்தோன்றல் விருது உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.

 கருவூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், குளித்தலை தமிழ்க் கா.சு. இலக்கியக்குழுவின் தலைமைப் பேராளரகவும், கிருட்டிணராயபுரம் திருக்குறள் கழகச் செயலாளராகவும் பணிபுரிபவர்.

கடவூர் மணிமாறனின் தமிழ்க்கொடைகள்:

01. நான் பாடுகிறேன், 1979
02. இயற்கை வடிவங்கள், 1980
03. மயக்கமா?உறக்கமா?, 1981
04. நீதிகேட்ட நெடிய பயணம், 1982
05. எதிர் நீச்சல், 1983
06. விடியல் விதைகள், 1985
07. சிவப்புமலர்கள், 1986
08. மணக்கும் மலேசியா, 1988
09. சங்கே முழங்கு, 1989
10. அறிவுரைக் கதைகள், 1990
11. புரட்சிக்கவிஞர் கவிதைக்கோட்பாடுகள், 1990
12. கடவூர் மணிமாறன் பாடல்கள், 1991
13. மாணாக்கர் ஆற்றுப்படை, 1992
14. புரட்சிப் பாவலர்கள், 1992
15. அழகோவியம், 1993
16. அழகிய அந்தமான், 1994
17. சிறகை விரித்த சிந்தனைகள், 1995
18. பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஒப்பாய்வு, 1997
19. அன்றும் இன்றும் சில ஆய்வுகள், 1997
20. பேராசிரியர் பார்வையில் பெருஞ்சித்திரனார், 1997
21. பாவலர் நெஞ்சில் பேராசிரியர், 1997
22. அரங்கில் பூத்த அருந்தமிழ், 1997
23. கருப்பண்ண பிள்ளை கலியுகச்சிந்து, 1998
24. காவிரி முதல் கங்கை வரை, 1998
25. பொன்னி, 1999
26. அகமும் முகமும், 2000
27. கொஞ்சும் தமிழ், 2000
28. பாவாணரும் பைந்தமிழும், 2001
29. தமிழர் பண்பாடும் வாழ்வியலும், 2002
30. நல்லாசிரியர் வெள்ளமுத்து புகழ்மணிமாலை, 2003
31. வாழ்க்கைச் சுவடுகள், 2003
32. கற்றல் கற்பித்தலில் புதிய நோக்குகள், 2003
33. ஆய்வுச் சோலை, 2004
34. தமிழ்க்களம், 2005
35. உன்னை அறிவாய்! உலகை வெல்வாய்!, 2005
36. திருக்குறள் இனிய தெளிவுரை, 2005
37. முனைவர் கடவூர் மணிமாறன் கவிதைகள் ஓர் ஆய்வு, 2006
38. திறனாய்வுப் பூக்கள், 2007
39. முழக்கம், 2007
முனைவர் பட்ட ஆய்வேடு நூல்வடிவில்

பேராசிரியர் பார்வையில் பெருஞ்சித்திரனார் நூல்

மரபுப்பாடல் தொகுதி



                               கடவூர் மணிமாறன் கவிதைகள் ஓர் ஆய்வு நூல்

முகவரி:
முனைவர் கடவூர் மணிமாறன்
1 / 53 பெரியார் நகர், குளித்தலை -639 104
கரூர் மாவட்டம்
செல்பேசி : 94431 44372

ஞாயிறு, 29 ஜூன், 2008

நாசா விண்வெளி ஆய்வுநடுவத்தில் ஒரு தமிழுள்ளம்....தமிழ் ஓசையில் என் கட்டுரை

தமிழ் ஓசை களஞ்சியம் மின்வருடிப் படம்

  உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிமுகமான பெயர் நாசா விண்வெளி ஆய்வு மையமாகும். தெரிந்தோ, தெரியாமலோ உலக மக்களாகிய நாம் அனைவரும் நாசாவின் ஆராய்ச்சிப் பயனிலும் சேவையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். செல்பேசிகள், இணையம் இவற்றைப் பயன்படுத்த நாசா நமக்கு உதவியுள்ளது.

  உலகின் தலைசிறந்த அறிவாளிகளின் கடும் உழைப்பிலும் ஆராய்ச்சியிலும் இவ்விண்வெளி மையம் எந்தநேரமும் இயங்கிக்கொண்டே உள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த அறிவாளிகள் பணிபுரிந்து விண்வெளி ஆய்வுகளில் முத்திரை பதிக்கின்றனர். இந்நிறுவனத்தின் வழியாக நடைபெற்ற நிலவுப்பயணம், செவ்வாய்க்கோள் பயணம் என்பனவும், வானுலகில் பன்னாட்டு ஆய்வுமையம் அமைக்கும் பணியும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அண்மைக் காலமாக வான்வெளியில் பன்னாட்டு ஆய்வு நிலையம் அமைப்பதை உலக மக்கள் ஆர்வமுடன் பேசிவருகின்றனர்.

  வான்வெளி ஆய்வுமையம் புவியிலிருந்து 250 கல் தொலைவுக்கு மேலே1600 அடி நீளமும், 400 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. இவ் வான்வெளிக்கு ஏவு ஊர்திகளை அனுப்புவதில் தமிழர் ஒருவர் பெரும் பங்காற்றி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

  பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஊர் சமீன் காளியாபுரம்.இவ்வூரில் பிறந்தவர் நா.கணேசன் (அகவை 48).பெரும் செல்வ வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்த நா.கணேசன் இளமையில் பொள்ளாச்சியிலும் கோவையிலும் வாழ்ந்தவர்.(நா.கணேசனின் தாயார் வீடு சிங்காநல்லூரில் உள்ளது.இது தேவர்மகன் படத்தில் காட்டப்படுவது). சிற்றூர்ப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்.இளம் அகவையில் பள்ளிக்குச் செல்லாமல் மலை மக்களுடன் சேர்ந்து மலைப் பகுதிகளுக்குச் சென்று இயற்கை வளங்களைக் கண்டு சுவைத்தவர். பின்னாளில் சங்க இலக்கியக் காட்சிகளைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது என்கிறார்.

  பொறியியல் படிப்பைச் சென்னைக் கிண்டிப் பொறியியல் கல்லூரியிலும் முதுநிலைப் பொறியியலை சென்னை ஐ.ஐ.டி.யிலும் பயின்றவர். முதுநிலை அறிவியல், முனைவர் பட்டங்களை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கடந்த பதினேழு ஆண்டுகளாக நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இயங்கியல் துறையில் (Notes and Dynamic)) மேல்நிலைப் பொறியாளராகப் பணிபுரிகின்றார்.

  கணேசன் அவர்கள் தாம் கற்ற கல்வியில் தம் பேரறிவு விளங்கும்படி கடுமையாக உழைத்தவர். இரு கண்டுபிடிப்புகளைப் புதியதாக வானாய்வுத் துறைக்கு வழங்கியவர். இவை கணேசன் மாதிரி (Ganesn Model) என அறிஞர் உலகால் அழைக்கப்படுகிறது.

திரு.நாக. கணேசன் அவர்கள்

 கணேசன் அவர்கள் பொறியியல் படிக்கின்ற காலத்திலேயே தமிழ்ப் பற்றுடையவராக விளங்கியவர். இவர் தம் உறவினர்களான கு. அருணாசலகவுண்டர் அவர்கள், வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இவரின் தமிழ்ப்பற்றிற்கு ஒருவகையில் காரணகர்த்தாக்களாக விளங்கியுள்ளனர். ஓலைச் சுவடிகள், தமிழறிஞர்களின் வரலாறு, தமிழ்நூல் பதிப்பு பற்றிய பேரறிவு பெற்றவராக மாணவப் பருவத்திலேயே நா.கணேசன் விளங்கியவர். இப்பொழுது அவ்வறிவு தமிழ் ஓலைச்சுவடிகளைப் பதிப்பிக்கும் வகையில் மலர்ச்சி பெற்றுள்ளது. இவ்வகையில் காராணை விழுப்பரையன் மடல் என்னும் நூலைப் பதிப்பித்து மின்னூலாகத் தமிழ் மரபுத் திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பட்டிப்புராணம் பதிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளார். பழனித் திருக்கோயில் பற்றிய வரலாற்று ஆவணங்களைப் புலவர் இராசு அவர்களைத் தொகுக்கச் செய்து விரைவில் வெளியிட உள்ளார்.

  அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்குப் பலருக்கும் உதவுவது இவர் இயல்பு. அமெரிக்கா செல்லும் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருந்தோம்புவதைத் தம் பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார். வீ.ப.க.சுந்தரம், சிற்பி, கி.நாச்சிமுத்து, சாலமன் பாப்பைய்யா, அமுதன், மா.ரா.பெஎ.குருசாமி, இராம. சுந்தரம், அறிவுமதி, வா.செ.குழந்தைசாமி, தமிழன்பன், மலேசியா பரமசிவம் உள்ளிட்டவர்களை அழைத்துப் பெருமை செய்துள்ளார்.

  தம் பொள்ளாச்சி வீட்டில் மூவாயிரம் அரியதமிழ் நூல்களும், அமெரிக்க வீட்டில் மூவாயிரம் அரிய தமிழ் நூல்களும் பாதுகாத்து வருகின்றார். வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்படிக்க.ஆய்வு செய்யப் பலருக்கு இவர் நூல்கள், குறிப்புகள் வழங்கி உதவி செய்துள்ளார்.உலக அளவில் தமிழ்பற்றி நடைபெறும் கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகளில் தமிழர், திராவிட மொழிகள் பற்றி கருத்துரைக்கும் கட்டுரை வரையும் இயல்புடையவர். சமற்கிருதப் பெருமை கூறி தமிழைத் தாழ்த்தும் அறிஞர்கள் உள்ளம் உவக்கும் வகையில் தமிழின் பெருமையை, தமிழர்களின் பெருமையை நிலை நாட்டி இவர் வரைந்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் உலகத் தரத்தனவாகும்.

  அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளுடனும் தமிழர்களுடனும் நல்லுறவை வைத்திருக்கும் கணேசன் அவர்கள் உலக அளவில் தமிழர்களுக்கு உதவும் பல அமைப்புகளில் அறிவுரைஞர் குழுக்களில் இடம்பெற்றுள்ளவர். தமிழ் மணம் என்ற இணையத்திரட்டிக்கு இடையூறு வந்தபொழுது அமெரிக்கா வாழ் நண்பர்களுடன் இணைந்து அந்நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல உதவி அதன் உறுப்பினராகவும் விளங்குபவர்.

  தமிழ் இணைய வளர்ச்சியில் கணேசனுக்கு ஒரு பங்கு உண்டு. தமிழ் எழுத்துரு, தமிழ் மென்பெருள் பற்றிய ஆய்வுகிளல் ஈடுபடுபவருக்குப் பல வகையில் உதவுவது, கருத்துரை வழங்குவது இவர் இயல்பு. இவ்வகையில் முகுந்துவின் எ.கலப்பை உருவாக்க உதவியுள்ளார். வலைப்பதிவு தமிழர்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் என்பதை அறிந்த கணேசன் வலைப்பதிவர்களை ஊக்கும் வகையில் பல செயல்களைச் செய்து வருகின்றார். தமிழகத்தின் பகுதிகள்தோறும் தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை நடைபெற அறிவுரை வழங்கி அமெரிக்காவில் இருந்தபடியே தக்கவர்களை நியமித்துப் பணிபுரிந்து வருகிறார்.

 தமிழர்களுக்கு இணையத்தில் இன்று தேவையாக இருப்பது ஒருங்குகுறி எழுத்துருவாகும்.அவ்வெழுத்துருக்களின் வளர்ச்சி பற்றி தெளிவான வரலாறு அறிந்தவர்களுள் கணேசனும் ஒருவர். பல தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பாளர்களுக்குக் கருத்துரை வழங்கியுள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களைப் பின்பற்றி கருத்துரைப்பவர். உகரங்களை உடைத்து எழுதவேண்டும் என்னும் இவர் கருத்தைத் தமிழ் அறிஞர் உலகம் ஏற்பதில்லை.

  தமிழில் வெளிவந்துள்ள பழைய பதிப்புகள், புலவர் பெருமக்களின் ஆராய்ச்சி நூல்கள், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரல்நுனியில் வைத்திருப்பவர். கல்வெட்டுகள் செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பவர்.

  அண்மையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூருக்குப் பயணம் செய்தபொழுது அங்கிருந்த மலைப்பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக இரும்பு உருக்கியதற்கான தடயங்கள் இருந்ததை அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் எடுத்துரைத்த பொழுது இலங்கையிலும் இத்தகு இரும்பு உருக்கும் உலைகள் இருந்துள்ளது என்பது பற்றி மேனாட்டு அறிஞர் ஒருவர் ஆராய்ந்துள்ளதை நா.கணேசன் எடுத்துரைத்தார்.

  மேல்நாட்டு அறிஞர்கள் தமிழகத்தைப் பற்றி எழுதியுள்ள நூல்கள், கட்டுரைகள் பற்றி வினவினால் அடுத்த நொடியில் விளக்கம் தரக்கூடியவர். நா.கணேசன் அவர்களிடம் பேசும்பொழுது பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முந்திய இலக்கியம் சார்ந்த செய்திகளை, சிற்றிலக்கியங்களை, புலவர்களைப் பற்றிக் கேட்டால் புது உற்சாகம் பிறக்கும் இவருக்கு. தமிழகத்துப் பாறை ஓவியங்கள் பற்றி நன்கு அறிந்தவர். தெய்வச் சிலைகள், படிமங்கள் பற்றியும் நன்கு அறிவார்.

  ஆராய்ச்சிப் பணிகளிலும் பொறுப்பு வாய்ந்த நாசா விண்வெளி ஆய்வுப்பணியிலும் இருக்கும் நா.கணேசனுக்குத் தமிழில் பதிவு எழுத நேரம் குறைவு. எனவே கிடைக்கும் நேரத்தில் யாகு இணையதளக் குழுமத்தில் இந்தியவியல், சீனவியல், சுமேரியவியல், மொழிநூல், கலைவரலாறு, எழுத்தியல்புகள் பற்றி எழுதும் பேராசிரியர்களுக்கு நடுவே தமிழ், தமிழர், திராவிடவியல் பற்றி எழுதுவதில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க மண்ணில் வாழ்ந்தாலும் உலகத் தமிழர்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பவர். ஆண்டுக்கு ஒருமுறை தாயகமாம் தமிழகத்திற்கு வந்து அறிஞர்களைக் காண்பது இலக்கிய முயற்சிகளை அறிவது என இவரின் விருப்பமாக உள்ளது. கொங்கு மணம் கமழ உரையாடும் இவரின் வாழ்க்கை அமெரிக்க மண்ணில் என்றாலும் நினைவுகள் என்னவோ தமிழ் இலக்கியங்களைப் பற்றியே உள்ளது.

காராணை விழுப்பரையன் மடல்

  காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை நா.கணேசன் பதிப்பித்துள்ளார். இந்நூல் அச்சுவடிவம் பெறுவதற்கு முன்பாக மின்னூலாக வந்துள்ளது தனிச்சிறப்பு. மின்னூல்கள் என்பன உலகெங்கும் இருப்பவர்களுக்குப் பயன்படும் தரத்தின. இந்நூல் செயங்கொண்டார் இயற்றியது. இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள அண்ணமங்கலம், தீபங்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் சோழரின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன், விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர்பெற்றுள்ளது. இந்நூல் நெடில்கீழ் தகர எதுகை (ஆதி நாதன்) கொண்டு 550 அடிகளில் அமைந்துள்ளது.

 பேராசிரியர் வே.இரா.தெய்வசிகாமணி கவுண்டரின் ஓலைச்சுவடி, சென்னைக் கீழ்த்திசை நூலக ஓலைச்சுவடிகளைக் கொண்டு பதிப்பித்துள்ளார். உலகாய்தம் பற்றி எடுத்துரைக்கும் அரியநூல் இது. தமிழ்க்கொங்கு என்னும் பெயரில் இவர் வைத்துள்ள இணைய தளங்களுக்குச் செல்லும் பொழுது பயனுடைய தகவல்களைப் பெறலாம்.

கணேசன் மாதிரியின் சிறப்பு

  எந்திரவியலில், முக்கியமான எல்லாக் கருவிகளும் அதன் பகுதிகளும் Finite Element Modeling என்னும் முறையில் கணினிகளில் வடிவமைக்கப்படுகின்றன. கணினிகளின் திறனின் அசுர வளர்ச்சியால் ஃபைனைட் எலிமெண்ட் மாடல்களின் அளவு (matrix size) கூடிக்கொண்டே போகிறது. மில்லியன் கணக்கான மாதிரிகள் இந்நாளில் சாதாரணம். ஆனால், அவ்வெந்திரங்களின் அதிர்வெண் (modal frequency), அதிர்வு வடிவம் (mode shape) பரிசோதனை முறையில் வரையறுக்க ஒரு சில நூறு பரிசோதனை சானல்களே இருக்கும். இதற்கே, விண்வெளி ஆய்வில் ஏராளமான செலவு ஆகும் நிலை, எனவே கணினி கொள்ளளவு போல பரிசோதனைகளில் சானல்களைப் பெருக்க முடியாது. அந்தப் பரிசோதனை Accelerometer channel-களைக் குறைந்த செலவில் தேர்ந்தெடுக்க 'கணேசன் மாதிரி' பல்வேறு களங்களில் விண்துறையில் 20 ஆண்டுகளாய்ப் பயன்படுகிறது.

நனி நன்றி : தமிழ் ஓசை, களஞ்சியம் 29.06.2008, சென்னை, தமிழ்நாடு