நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 25 அக்டோபர், 2007

ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்

 திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக இன்றும் விளங்குகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலும், இன்னும் பல்வேறு புகழ்பெற்ற ஊர்களும்,மலைகளும் இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இவ்வூரில் வாழும் சி.மனோகரன் என்னும் அன்பர் அமைதியாக ஒரு பெரும்பணியை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்து வருகின்றார். இவ்வூரிலும் பக்கத்து ஊர்களிலும் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகள், அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழி வுகள், சுழலும்சொற்போர், நாடகங்கள்,தெருக்கூத்துகள்,பட்டிமண்டபங்கள், இசை நிகழ்ச்சிகளை ஒலிநாடாக்களில் பதிவுசெய்து பாதுகாத்து வருகின்றார். வறுமைநிலையில் வாழ நேர்ந்தாலும் தம் கொள்கையில் விடாப்பிடியாக இருந்து பல்லாயிரக் கணக்கான மணிநேரம் பதிவு செய்யப்பெற்ற ஒலிநாடாக்களைப் பாதுகாப்பதிலும், தொடர்ந்து பதிவு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.


 இலக்கியங்களை,தத்துவங்களை, கதைகளைப் பாட்டாகவும், உரையாகவும் மக்களிடம் கொண்டுசேர்த்த எத்தனையோ அறிஞர்களின் முகத்தைப் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் முடியாதபடி பதிவுசெய்யும் நாட்டம் இல்லாதவர்களாக நம் முன்னோர்கள் இருந்துள்ளனர். அரிய பொருள் பொதிந்த பேச்சுகள் காற்றோடு காற்றாகவும், உருவம் மண்ணோடு மண்ணாகவும் கலந்துபோயின. பதிவுக்கருவிகள் வந்த பிறகும் நாம் விழிப்படைந்தோமா என்றால் இன்னும் தேவை என்ற அளவில்தான் நிலைமை உள்ளது.அடுத்த தலைமுறைக்கு உ.வே.சா, மறைமலையடிகளார், பாவாணர், பெரியார், அண்ணா ,காமராசர், திரு.வி.க, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் முதலானவர்களின் பேச்சு, பாடல்கள் சில மணி நேரம் கேட்கும்படி இருக்குமே தவிர முழுமையாக நாம் அவற்றைப் பதிவு செய்தோமில்லை. பாதுகாத்தோமில்லை.

இக்குறையைப் போக்கும் வகையில் திருவண்ணாமலை சி.மனோகரன் அவர்களின் முயற்சி உள்ளது. இவருக்கு அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஒலி இலக்கியச் செம்மல் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர் தமிழ்ஒளிஇயக்க அன்பர்கள். எதற்குப் பாராட்டு? ஏன் பாராட்டு? பாராட்டுப் பெற்றவருக்கு இப்பாராட்டு பொருந்துமா என்பது பற்றி இங்கு எண்ணிப் பார்ப்போம்.


அறிஞர்களின் பேச்சுகளை ஊர் ஊராகச் சென்று கேட்டதோடு அமையாமல் பதிவுசெய்து பாதுகாத்தும், வேண்டியவருக்குக் குறைந்த செலவில் படியெடுத்தும் வழங்கும் பணியை மேற்கொள்பவர் திருவண்ணாமலை சி.மனோகரன். (மனோகர் ரேடியோ அவுசு36 டி,திருவூடல்தெரு, திருவண்ணாமலை (தொலைபேசி + 9944514052 ) என்னும் முகவரியில் வாழும் இவருடன் உரையாடியதன் வழியாகப் பல தகவல்களை அறியமுடிந்தது.


சி.மனோகரன் அவர்களின் சொந்த ஊர் திருவண்ணாமலையை அடுத்த சோழவரம் என்பதாகும். பெற்றோர் சின்னக் குழந்தைவேலு, ஆண்டாள். பள்ளியிறுதி வகுப்புவரை படித்தவர். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர். சுவர்களில் விளம்பரப் பலகைகள் எழுதும் பணியில் தொடக்கத்தில் ஈடுபட்டிருந்தார். பின்பு திருச்சி சியாமளா ரேடியோ இன்சுடியுட்டில் வானொலி பழுதுபார்க்கும் தொழில்நுட்பம் தெரிந்துகொண்டு 1974 இல் தாமே சிறிய அளவில் ஒரு பழுது பார்க்கும் கடையைத் தொடங்கி நடத்தினார். 1984 இல் பதிவுக்கருவி வாங்கும் அமைப்பு அமைந்தது. அதன்பிறகு திருவண்ணாமலையிலும் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யத் தொடங்கினார். இவர் பதிவு செய்த ஒலிநாடாக்கள் என்ற வகையில் அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் சொற்பொழிவாக அமைந்த பின்வரும் ஒலிநாடாக்கள் மிகச்சிறந்த தொகுப்புகளாகக் கொள்ளலாம்(இப்பட்டியல் முழுமையானதல்ல).


1.தொல்காப்பியம் 39 மணிநேரம்


2.சங்கஇலக்கியம்

திருமுருகாற்றுப்படை 6 மணிநேரம்

நற்றிணை 2 மணிநேரம்

திருக்குறள் 7 மணிநேரம்


3.சிலப்பதிகாரம் 40 மணிநேரம்

4.திருவாசகம் 120 மணிநேரம்

5.திருக்கோவையார் 19 மணிநேரம்

6.பெரியபுராணம் 150 மணிநேரம்

7.மகாபாரதம்,

8.கந்தபுராணம், 15 மணிநேரம்

9.திருவிளையாடல்புராணம் 75 மணிநேரம்

10.திருப்புகழ் 13 மணிநேரம்

12திருமந்திரம் 40 மணிநேரம்

13.பதினோராம் திருமுறை 45 மணிநேரம்

14.திருவிசைப்பா 9 மணிநேரம்

மேற்குறித்த தொகுப்புகள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தத் தக்கன.


 பல்லாயிரம் ஒலிநாடாக்களில் பலபொருள்களில் அறிஞர்கள் பேசிய பேச்சுகளைப் பதிவுசெய்ய இவர் எடுத்த முயற்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. அவை சிதைந்துவிடாமல் போற்றிப் பாதுகாக்கும் இவரின் அர்ப்பணிப்பு உணர்வுக்குத் தமிழகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் எளியகுடும்பத்தில் பிறந்து வளர்ந்து பழுதுநீக்கும கடை வருமானத்தில் குடும்பத்தைக் கவனித்து, ஊர் ஊராகச் சென்றுவரப் பேருந்துக் கட்டணம், தங்குமிடம், உணவுச்செலவுக்குப் பெரிதும் திண்டாடியுள்ளார்.பதிவு செய்ய ஒலிநாடாக்கள் இல்லாமல் பல நாள் ஏங்கியுள்ளார்.


சி.மனோகரன் சிறந்த சிவ பக்தர்.12 ஆண்டுகள் தொடர்ச்சியாக 2 மணி நேரத்தில் மலைவலம் வந்தவர். இவர் ஓதுவார்கள் பலரும் பாடிய தேவார, திருவாசகங்களைப் பல்வேறு குரலில் பதிவுசெய்துள்ளார்.தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களான திருக்குறளார் வீ.முனிசாமி, சோ.சத்தியசீலன், அ.அறிவொளி, சாலமன் பாப்பையா, இராசகோபாலன், இரா.செல்வகணபதி, மலையப்பன், தா.கு.சுப்பிரமணியன், சண்முகவடிவேல், அகரமுதல்வன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், சரசுவதி இராமநாதன், ம.வே.பசுபதி முதலானவர்களின் பேச்சுகள் பலநூறு மணிநேரம் பதிவுசெய்யப்பட்டு இவரிடம் உள்ளன.


திருவள்ளுவர், சிலப்பதிகாரம், கம்பன், வள்ளலார், கண்ணதாசன், பெரியபுராணம், பத்திரிகைத்துறை சார்ந்த தலைப்புகளில் நடைபெற்ற பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர் தொடர்பான எழுபது நிகழ்ச்சிகளுக்கு மேலான பதிவுகள் இவரிடம் உள்ளன.


ஒலிப்பதிவு ஆர்வலர் சி.மனோகரனைச் சந்தித்து உரையாடியபொழுது திருவண்ணாமலை சார்ந்த இலக்கிய ஆர்வம்,நாட்டுப்புறவியல்ஆய்வு சார்ந்த பல செய்திகளைப் பெற முடிந்தது.அவரிடம் உரையாடியதிலிருந்து...

ஏன் பேச்சுகளைப் பதிவுசெய்யவேண்டும் என்று நினைத்தீர்கள்?


ஒரு பொருளைப் பற்றிப் பேச வருபவர்கள் நம்மைவிட அதிகம் கற்றவர்களாக இருப்பர். நாம் அதிகம் படிக்காதபொழுது மற்றவர்களின் பேச்சைக்கேட்பதே பல நூல்களைப் படிப்பதற்குச் சமமாகும். 'கற்றிலனாயினும் கேட்க' என்கிறார் திருவள்ளுவர். நான் கேட்டதோடு அமையாமல் மற்றவர்களும் கேட்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பதிவுசெய்து பேச்சுகளை ஒலிநாடாக்களில் பாதுகாத்துவருகிறேன்.


உங்கள் இளமைக்காலம் பற்றி?


வறுமை நிறைந்த குடும்பம்.படிக்க வசதி இல்லை.பணிக்குச் செல்லவும், நன்கொடைதரவும் வசதி இல்லை. வானொலி பழுதுபார்க்கும் கடைவைக்க முதலீடு இல்லை. சேட்டு ஒருவரின் உதவியால் சிறிய கடை வைத்துக் குடும்பத்தைக்காப்பாற்றிவருகிறேன்.


அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்களின் பேச்சு அமைந்த ஒலிநாடாக்களை ஆர்வமுடன் பாதுகாக்க காரணம் என்ன?


எனக்குச் சைவ சமய ஈடுபாடு அதிகம்.'அண்ணாமலை அண்ணாமலை' எனப்படிக்கும் காலத்திலிருந்து சொல்வேன். சமயம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் படித்தால் நூல்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி என் கல்விநிலை குறைவாக இருந்தது. இந்த நிலையில் செய்தித்தாள்களில் இரத்தினகிரியில் திருவிளையாடல் புராணம் பற்றி அறிஞர் கு.சுந்தரமூர்த்தி அவர்கள் உரையாற்றும் செய்தி கண்டேன். அதன்பிறகு அங்குச்சென்றேன். முதன்முதல் கு.சுந்தரமூர்த்தி அவர்களை அங்குக் கண்டு பழகினேன். அவர்பேச்சில் ஈடுபாடு கொண்டேன். கு.சுந்தரமூர்த்தி அவர்கள் எதனைப் பேசினாலும் சங்க இலக்கியங்கள் 38 நூல்களையும் மேற்கோளாகக் காட்டுவார். சமயநூல்கள் புராண நூல்கள் பற்றியெல்லாம் கூறுவார். எனவே அவர் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பதிவுசெய்வதைக் கடமையாகக் கொண்டேன்.


பேச்சுப்பதிவில் பல்வேறு இடையூறுகளைச்சந்தித்திருப்பீர்களே? அவை பற்றி..


பொருளாதார நெருக்கடியால் பலமுறை துவண்டுள்ளேன்.பேருந்துக்குப் பணம் இல்லாமலும் ஒலிநாடா வாங்க வசதியில்லாமலும் பலமுறை தவித்துள்ளேன்.பாடகர்கள் சிலர் தம் தொழில் பாதித்துவிடும் எனப் பதிவு செய்யக்கூடாது என்பர். அத்தகு இயல்புடையவர்கள் பாடல்களை நான் கேட்பதுகூடக் கிடையாது.ஆனால் பேச்சாளர்கள் யாரும் என்னைத் தடுத்தது கிடையாது.

பாரதக் கதைகளைப் பல ஒலி நாடாக்களில் பதிவுசெய்து வைத்துள்ளீர்கள்? பாரதக்கதை சொல்பவர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்றவர்கள் யார்?


நான் பாரதக் கதைகளைப் பலர் பாடக் கேட்டுள்ளேன். பலரின் பாடலைப்பதிவு செய்துள்ளேன்.பாரதக் கதைகளை அனைவரும் சுவைக்கும்படி எளிமையாகவும் இசையோடும் பாடுவதில் மேல்நந்தியம்பாடி ச.நடராசன் சிறந்தவர். எனவே அவருடைய பாரதக்கதை முழுவதையும் பதிவுசெய்யவேண்டும் என நினைத்தேன். திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கேட்டவரம்பாடி முதலான ஊர்களில் அவர்சொன்ன செய்துள்ளேன். 110 ஒலிநாடாக்களில் பாரதக்கதை என்னிடம் பதிவு செய்யப்பட்டது உள்ளது. அவர்மகன் ந.செல்வராசு பின்பாட்டு நன்கு பாடுவார்.


பம்பை, தபேலா, ஆர்மோனியம் முதலான இசைக்கருவிகள் வைத்து இடும்பிக்குறி என்ற கதை சொன்னார்கள். பாரதக் கதையை ஒரு இடும்பி குறியாகச் சொல்வதுபோல் பாடுவது இக்கதை. மேல்நந்தியம்பாடி நடராசனுக்கு 60 வயது இருக்கும். இவர் தேவாரம், திருவாசகம் முதலானவற்றைக் கண்ணீர் வரும்படி பாடும் இயல்பினர்.


திருவண்ணாமலை மாவட்டம் என்றால் தெருக்கூத்து அதிகம். இதில் யார் யார் புகழ்பெற்றவர்கள்?இதன் ஒலிநாடாக்கள் உள்ளனவா?


தெருக்கூத்தில் தேவனூர் பழனி புகழ்பெற்றவர். மக்களுக்கு அறிவுரை பாரதக்கதை வழிசொல்வார். வேடம் அணிந்தும், கட்டைகள் கட்டிக்கொண்டும் ஆடுவார். கள்ளிக் காத்தான் கதை, கற்பகவல்லி கதை, கற்பகாம்பாள் நாடகம், காத்தவராயன் கழுகு ஏறுதல் முதலானவை மணியால் சிறப்புடன் நடிக்கப்பட்டன. (47 வயதிருக்கும் பொழுது இறந்துவிட்டார்)

பெண்ணாத்தூர் பக்கம் நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற ஊரில் அரவான் களப்பலி, கர்ணமோட்சம் என்ற நாடகம்நடித்தவர்கள் பதிவு செய்யச் சொன்னபொழுது 10 மணிநேரம் பதிவு செய்து அந்த நடிகர்களுக்கு அளித்தேன்.

கல்வெட்டு நடேசன் குழுவும் நன்கு ஆடும். இதனையும் பதிவு செய்துள்ளேன். ஏறத்தாழ 50 மணிநேரம் தெருக்கூத்துப் பற்றி என்னிடம் ஒலிநாடாக்கள் என்னிடம் உள்ளன.


உங்களிடம் வணிகரீதியாக ஒலிநாடாக்களை யாரேனும் பதிவு செய்து வாங்குகின்றார்களா?


பதிவுக்கு ஒரு மணிநேரத்திற்கு எட்டு உரூபாய் எனத் தொடக்கத்தில் வாங்கினேன்.இப்பொழுது சிறிது ஏற்றியுள்ளேன்.


இப்பொழுது குறுவட்டுகள் வந்துவிட்டன. இவை குறைவான விலையில் நீண்டநேரம் கேட்கும்படியான பாடல்களைத் தாங்கி வருகின்றன.இக்காலச்சூழலில் அதிக விலைக்கு ஒலிநாடாக்களை விற்கமுடியுமா? பாதுகாக்க முடியுமா?


எனக்குச் சாதாரண கேசட் வாங்கவே பணம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் என்னிடம் உள்ள சாதாரண ஒலிநாடக்களைக் குறுவட்டாக மாற்றி வணிக முறையில் விற்க இயலாது. யாராவது என் பல ஆண்டுகால உழைப்பைமதித்து உதவி செய்தால் அறிஞர்களின் பேச்சைக் குறைந்த விலையில் வழங்குவதில் மறுப்பேதும் இல்லை.


பலவிதமான பதிவுக்கருவிகள் வைத்துள்ளீர்கள்.எவ்வாறு வாங்கினீர்கள்?


பலரிடம் கடன்பெற்றுதான் இவ்வெளிநாட்டுக் கருவிகளை வாங்கினேன்.என் முயற்சியை மதிக்கும் அன்பர்கள் சிலர் வட்டியில்லாக் கடன் கொடுத்தனர்.சிலர் என்னிடம் உள்ள பதிவுகளைப் படியெடுத்துக் கேட்டனர். அவ்வகையில் சிதம்பரம் பாபா சுவாமிகள் பல ஆயிரம் உரூபாவிற்கு ஒலிநாடாக்களை வாங்கி ஆதரித்தார்.


அறிஞர்களின் பேச்சுகள், சொற்பொழிவுகள் மட்டும் பதிவுசெய்த நீங்கள் சாதாரண மக்களின் பேச்சுகள், பாடல்களைப் பதிவு செய்துள்ளீர்களா?


இருளர் இன மக்கள் கன்னிமார்சாமி நிகழ்ச்சியைக் கட்டைக்கட்டி ஆடுவர். கிராமிய, பழைமையான பாடல்களைப் பாடுவர். இங்குக் கடைத்தெருவில் அவர்கள் வந்தபொழுது கடையில் அமரச் செய்து பதிவுசெய்தேன். மன்மத தகனம் பதிவு செய்துள்ளேன் (தாழ்த்தப்பட்ட மக்கள் பாடுவது).


உங்கள் ஒலிப்பதிவு முயற்சி யார் யாருக்கு உதவியாக இருக்கும்?


என் ஒலிநாடாத்தொகுப்பு அனைவருக்கும் பயன்பட்டாலும் கண்பார்வையற்ற மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். குறிப்பாகத் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்குப் பயன்படும். எந்நேரமும் பயணத்தில் இருப்பவர்கள் ஒலிநாடாக்களைக் கேட்பதன்வழித் தமிழிலக்கியங்களை அறியமுடியும். ஓரளவே படிப்பறிவு உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். இலக்கண நூல்கள், சமயநூல்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டால் பாடத்தை எளிமையாக நடத்தமுடியும். குறுவட்டாகும் பொழுது மாணவர்களுக்கும், குறிப்பாக அஞ்சல்வழியில் தமிழ் படிப்பவர்களுக்கும், அயல்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மிகச்சிறந்த பயன் கிடைக்கும். தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தோல்வியடைந்தனர். என்னிடம் உள்ள ஒலிநாடாக்களைக் கேட்டுப் படித்தபிறகு தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அயல்நாட்டுத் தமிழர்கள் யாரேனும் உங்கள் பதிவுகளைப் பாதுகாக்க,விலைக்கு வாங்க நினைத்தால் தருவீர்களா?


என் பல ஆண்டு கால முயற்சியை, உழைப்பை மதித்து உதவி செய்தால் பிற்காலத்தில் வழங்க முடிவுசெய்துள்ளேன்.

இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தாலும் தன் சேமிப்பில் உள்ள ஒலி நாடாக்களை வரிசைப்படுத்துவதிலும், அவற்றிற்கு ஒழுங்கான வரிசை எண் இட்டு அடுக்கி வைப்பதிலும் தேடி வரும் வாடிக்கையாளருக்குப் பதிவு செய்வதிலும் பம்பரமாக இயங்குகிறார் இந்த ஒலி இலக்கியச்செம்மல்...


நன்றி : திண்ணை இணையதளம் (11.10.2007)

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அய்யா இதெல்லாம் வாங்கிக்கேட்டா சாப்பாடு வந்துடுமா எது தேவையோ அத விட்டு தேவை இல்லாத்த எல்லாம் செய்திருக்கார்

பெயரில்லா சொன்னது…

My name is swaminathan,

I am from Tiruvannmalai currently working in Gulf. I studied my entire schooling from Tiruvannamalai. During those days every month during Kirthigai and Tamil month beginning day lot of Tamil scholors used to do Upanyasam. It used to be excellent. We used to know lot about tamil literature and depth of tamil. The entire tamil is with " Bakthi" margam. Lot in Kambaramayanam , silapathikaram etc., Apart fro having apprecaiton to tamil literature these lectures use to imbibe lot of value system. Now a days it is all missing in the current world in TV seriels. Yong stsundents are busy in studying only academics.We missed a lot. The so called Kazaga Kanmaniga totally killed tamil , becasue most are Anmigam. The paradox is they say they preseved Tamil. I know Manoharan well , i have copied many casstes and I was not knowing that he has done such a wonderful collections. I would like to definetly help him for his endevour. Kudos.

Pls translate / edit in Tamil and post. Sorry that i could not post in Tamil

Swami