“மரபுப் பெயர்களும் சங்க இலக்கியமும்” என்னும் இவ்வாய்வுப் பனுவலின் ஆசிரியர் முனைவர் பி. தமிழகன் அவர்களைத் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் ஆய்வு மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த காலம்(1993-1997) முதல் நன்கு அறிவேன். எங்கள் பெரும் மதிப்பிற்குரிய தனித்தமிழ்ப் பேராசிரியர் இரா. இளவரசு அவர்களைக் காண்பதற்குக் “காசாமலைக் குடியிருப்புக்குச்” செல்லும்பொழுதெல்லாம் அற்றை நாளில் எம்மை அன்புடன் வரவேற்று, விருந்தோம்பி வழியனுப்புவதைப் பேருவைகையுடன் செய்த செம்மல் முனைவர் பி. தமிழகன் அவர்கள் ஆவார். பி. இராசலிங்கம் என்னும் இயற்பெயருடன் இயங்கித் தமிழாசிரியர் பணிசெய்த இவர்தம் பிறந்த ஊர் திருத்தவத்துறையை (இலால்குடி) அடுத்த குமுளூர் என்பதாகும்.
தொல்காப்பியத்தில் தோய்ந்த உள்ளமும், சங்கப் பனுவல்களில் ஆழங்கால்பட்ட பேரறிவும், வழக்குச்சொற்களை ஆராய்ந்துரைக்கும் செறிபுலமும் ஒருங்கு வாய்க்கப்பட்டிருந்த இவர்களின் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது பேராசிரியர் பி. தமிழகன் அவர்கள் தொல்காப்பிய அறிஞர் அடிகளாசிரியர் அவர்களின் தலைமாணாக்கர் என்பதே ஆகும். தம் ஆசான் அடிகளாசிரியர் அவர்களின் பணியோய்வுக்குப் பிறகு தம் கூகையூர் என்னும் சிற்றூரில் தங்கி, ஆய்வுப்பணிகளை நரைமுது பருவத்தும் தொடர்ந்து செய்தகாலை, அவரைச் சென்றுபார்த்துப், பரிவுடன் உரையாடல் செய்து மீளும் இவரின் ஆசான் பற்றை அறிந்து, எம் புன்கணீர் பூக்கும்.
கரந்தை புலவர் கல்லூரியில் தமிழ்பயின்ற நம் பேராசிரியர் பி. தமிழகன் அவர்கள் சிவப்பிரகாச சேதுராயர், ஆய்வறிஞர் கு. சிவமணி, கல்வெட்டறிஞர் சி. கோவிந்தராசனார், ச. பாலசுந்தரனார், அடிகளாசிரியர் முதலான சான்றோர்களிடத்துத் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களைப் பாடங்கேட்ட பெருமைக்குரியவர். பி. தமிழகன் அவர்களுக்குத் தொல்காப்பியம் எழுத்ததிகார நூற்பாக்கள் அனைத்தும் மாணவப் பருவத்துள் மனப்பாடம் என்பது இவர்தம் தொல்காப்பியப் புலமைக்கு ஒரு பதச்சோறு போன்றது. அதுபோல் அக்காலம் முதல் இக்காலம் வரை எழுதப்படும் தமிழ் நூல்கள் பலவற்றை மெய்ப்பு நோக்கி வழங்குவதைத் தமிழ்த்தொண்டாக ஆற்றி வருபவர். அடிகளாசிரியர், இரா. இளங்குமரனார் போன்ற சான்றோர் நூல்களுக்கும் மெய்ப்பு நோக்கிய திறம் ஒன்றே இவர்தம் கூரறிவுக்குச் சான்றுகாட்ட போதும் என நினைக்கின்றேன்.
இத்தகு பெரும்புலமை கைவரப்பெற்ற நம் பேராசிரியர் பி. தமிழகன் அவர்கள் “மரபுப் பெயர்களும் சங்க இலக்கியமும்” என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வுக்குத் தலைப்பினைத் தேர்ந்து, பன்னெடுங்காலம் ஆராய்ந்தவர். தாம் ஆராய்ந்து கண்ட அறிவு விளைச்சலைத் தமிழ்த்தாய்க்கு உரிய மணியாரமாக இந்த நூலின்வழிப் படைத்துள்ளமை நினைந்து, இவருக்கு இத்தமிழுலகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
பட்டப்பேற்றுக்கும் பதவித் துய்ப்புக்கும் அலைந்து, ’நுனிப்புல் மேயும்’ ஆய்வாளர் குழாத்தின் நடுவண் தொல்காப்பிய மரபியலைப் பேராசிரியர் உரையுடன் கற்று, பிற உரையாசிரியர் உரைகளையும் ஒப்புநோக்கி, நிகண்டு நூல்களைத் துணைக்கு அருகிருத்திக்கொண்டு, திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகரமுதலியை(DED) ஒப்புநோக்கிச் சங்கப் பனுவல்களை ஆராய்ந்து மிகச் சிறந்த ஆய்வு நூலைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ள முனைவர் பி. தமிழகன் அவர்களின் ஆற்றலை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
தொல்காப்பியம் தமிழ் மரபு காக்கும் அரிய நூல் என்பது உலகம் ஒப்பும் உண்மை. இந்த நூலின் தாக்கம் ஈராயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய தமிழ் நூல்களில் பெரும் தாக்கத்தைச் செலுத்தி வருகின்றது. வள்ளுவப் பேராசானும் இதற்கு நெறிவிலக்கல்ல. தமிழ் மொழியின் அமைப்பினையும், இலக்கிய – இலக்கண மரபுகளையும், பண்டைத் தமிழரின் செம்மாந்த வாழ்வியலையும் தாங்கி நிற்கும் நூல் இதுவாகும். தமிழை அறிய விழைவார்க்கு இவற்றையெல்லாம் திரட்டுப்பால் போல உணர்த்தும் வகையில் இந்தத் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டுள்ளது.
நூல் மரபு, மொழி மரபு, தொகை மரபு, விளிமரபு, மரபியல் என்று அமையும் இயல் பகுப்பினைக் கொண்டு, தொல்காப்பியரின் மரபுபோற்றும் ஆர்வத்தை நம்மால் உய்த்துணர இயலும். ’மரபுநிலை திரிதல் கூடாது’ என்பது தொல்காப்பியர் நமக்கு இட்டுள்ள ஆணையாகும். அந்த மரபுகளை அடுத்த பிறங்கடையினருக்குத் தெரிவிக்கும் வகையில் இந்நூலின் நூற்பாக்கள் உள்ளன. அவ்வகையில் மரபியல் பகுதியில் அமைந்துள்ள நூற்பாக்கள் தொல்காப்பியக் கல்வியில் முதன்மை இடம் பெறுவனவாகும். தொல்காப்பிய மரபியல் செய்திகளின் முதன்மையை உணர்ந்த சில்லோர் சில போலி நூற்பாக்களை இவ்வியலில் இணைத்து, இதன் ஒழுங்கினைக் குலைத்துள்ளனர் என்பதை முனைவர் ப. மருதநாயகம் போன்ற ஆய்வறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். இத்தகு இடைச்செருகல் செய்திகளைத் தவிர்த்துவிட்டு, மரபியலின் அரிய நூற்பாக்களை இனங்கண்டு, சங்க இலக்கியச் சான்றுகளுடன் இந்த நூலில் விளக்கும் பி. தமிழகனின் ஆய்வுத்திறம் போற்றுதலுக்கு உரியது.
இவ்வாய்வு நூலை உருவாக்கும் முன்னர் முனைவர் பி. தமிழகன் அவர்கள் தொல்காப்பிய மரபியலை நன்கு கற்று உள்வாங்கியுள்ளார். மரபியலுக்கு அமைந்த உரை நூல்களையும் ஆழங்கண்டுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிடும் இருதிணைப் பொருட்குணமாகிய இளமைப் பெயர்களை - ஆண்பால் பெயர்களை – பெண்பால் பெயர்களை ஆழ்ந்து கற்றுள்ளார். அதுபோல் ஓரறிவு உயிர்களாகிய புல், மரம் பற்றிய பெயர் மரபு, ஈரறிவு உயிர் முதல் ஆரறிவு உயிர் வரையுள்ள அறிவுப் பாகுபாடுகளை நன்கு அறிந்துள்ளார்.
மரபியலைக் கசடறக் கற்றுணர்ந்த பி. தமிழகன் மரபியலில் நூற்பாக்களை அமைப்பதில் தொல்காப்பியர் பல உத்திகளைப் பின்பற்றியுள்ளார் என்று ஆராய்ந்து முடிவு காட்டியுள்ளார். மூவகைப் பெயர்கள் தொகை நூற்பாக்களில் கூறிய முறையில் அமையாமல் விரி நூற்பாக்களில் வேறு வகையில் முறைமாற்றிக் கூறப்பட்டுள்ளதைத் தம் அறிவுத்திறத்தால் எம்போலும் இளையோர்க்குக் கண்டுணர்த்தியுள்ளார். அதற்குச் சான்றாகச் “சே”, “கண்டி”, “கடுவன்” என்னும் ஆண்பாற் பெயர்கள் தொகையுள் கூறப்பட்டு, விரியுள் கூறப்படாமல் உள்ளமையை எடுத்துக்காட்டுகின்றார். “ஆ”, “பிணவல்” என்னும் பெண்பாற் பெயர்கள் தொகையுள் கூறப்படாமல் விரியுள் கூறப்பட்டுள்ளன என்று முடிவுரைக்கின்றார்.
மரபியலில் கூறப்பட்டுள்ள மரபுப் பெயர்கள் பல சங்க இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டி இஃது “மரபு போற்றல்” என்கின்றார். அத்தகைய மரபுப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெறாமையை எடுத்துக்காட்டி இது “மரபு வீழ்ச்சி” என்று கூறுகின்றார். மரபுப் பெயர்களை மாற்றிக் கையாளுதலை “மரபு மாற்றம்” என்கின்றார். இத்தகைய மூன்று நிலைகளில் மரபியல் நூற்பாக்களைச் சங்கப்பாடல்களுடன் பொருத்திக்காட்டி, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றார். இவை யாவும் தக்க சான்றுகளின் வழியாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தக்கது.
மரபியலில் இடம்பெறாத பல இளமைப் பெயர்களைச் சங்க இலக்கியம் தாங்கியிருப்பதையும், உரையாசிரியர்களுக்குப் புலப்படாத பல சொற்கள் மக்கள் வழக்கில் இருப்பதையும் முனைவர் பி. தமிழகன் எடுத்துரைப்பது இவரையும் உரையாசிரியர் வரிசையில் உயர்த்திவைத்து, எண்ண வைக்கின்றது. சான்றாக மூடு(பெண் ஆட்டுக்குட்டி) என்பதைக் குறிப்பிடலாம். பேராசிரியர் “இவை இப்பொழுது வழக்கினுள் அரிய” என்று உரைப்பர். இவ்வாறு குறிப்பிடப்படும் “மூடு” (மரபியல் 64) எனும் பெண்பாற் பெயர் பஞ்சப்பட்டி, ஈரோடு உள்ளிட்ட கொங்குப் பகுதிகளிலும், அறந்தாங்கிப் பகுதிகளிலும் இன்றும் வழக்கில் உள்ளதை ஆய்வாளர் பி. தமிழகன் எடுத்துரைப்பது அவர்தம் சொல்லாய்வுத் திறத்துக்குச் சான்றாகும்.
பி. தமிழகனின் இந்த ஆய்வு நூல் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. அவை:
1. தொல்காப்பிய மரபியல் சொற்கள்
2. மரபியல் சொற்களின் வகைப்பாடுகள்
3. சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள்
“தொல்காப்பிய மரபியல் சொற்கள்” என்று அமையும் முதல் இயலில் மரபு குறித்து, இலக்கண நூலாசிரியர்களும், உரையாசிரியர்களும் கூறும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் மரபு என்னும் சொல்லாட்சி, பெயர்க்காரணம் யாவும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நூற்பாக்களின் எண்ணிக்கை குறித்த செய்திகள், மரபியலின் அமைப்பு, நூற்பாக்களின் வைப்பு முறை, மரபியல் பெயர்கள் யாவும் தேவைப்படும் இடங்களில் பட்டியலிட்டு விளக்கப்பட்டுள்ளன. இவை நூலைக் கற்பவர்களுக்கும் – ஒப்புநோக்கி ஆராய விழைபவர்களுக்கும் பெரிதும் பயன் நல்குவன. தொல்காப்பியர் மரபியலில் இளமைப் பெயர்கள் ஒன்பது எனவும் ஆண்பாற்பெயர்கள் பதினைந்து எனவும், பெண்பாற் பெயர்கள் பதின்மூன்று எனவும் குறிப்பிட்டுள்ளதை ஆய்வாளர் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
“மரபியல் சொற்களின் வகைப்பாடுகள்” என்னும் இரண்டாவது இயல் மரபியல் கூறும் சொற்களை மிகச் சிறப்பாக விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அகப்பொருளில் கருப்பொருளாகச் சுட்டப்படும் “மா, மரம் புள்” (பொருள்.20) என்பனவற்றை ஆழமாக மரபியல் விளக்குகின்றது என்று நூலாசிரியர் இவ்வியலின்கண் குறிப்பிடுவது நுட்பமான ஆய்வுப் பார்வையாகும். இளமைப் பெயர்களை வகைப்படுத்திக்கொண்டு, மரபியலில் எவ்வாறு அவை குறிப்பிடப்படுகின்றன எனவும் சங்க இலக்கியத்தில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன எனவும் ஒப்பு நோக்கி உரைப்பது, ஆய்வின்பம் நுகர்வோர்க்கு அருமையான பகுதிகளாகும்.
மூங்கா என்பது கீரி என இளம்பூரணரும், மூங்கா வேறு கீரி வேறு எனப் பேராசிரியரும், மூங்கா – கீரியினம் என்று ச. பாலசுந்தரமும் கருதுவதை ஆய்வாளர் ஒப்புநோக்கி உரைப்பதுடன் பிற திராவிட மொழிகளில் முங்கி, முங்கிஸி, முங்குலி (க), முங்கிலி (து), முங்கி, முங்கிஸா (தெ) என்று வழங்குவதை எடுத்துரைப்பதுடன் மராத்தியில் மங்கூஸ் என்று கீரிப்பிள்ளை அழைக்கப்படுவதை எடுத்துரைப்பது தொல்காப்பிய ஆய்வாளர்களுக்குப் பெருவிருந்துப் படையலாகும். அதுபோல் “ஏறு”, “ஒருத்தல்”, “சே”, “மோத்தை”, ”அப்பர்” “கண்டி” என்னும் சொற்களுக்கு இந்நூலில் தரப்படும் விளக்கமும் அருமையுடைத்தாகும்.
மூன்றாம் இயல் “சங்க இலக்கியத்தில் மரபுச் சொற்கள்” என்று அமைந்துள்ளது. மரபியலில் குறிப்பிடப்படும் சொற்கள் சங்க இலக்கியத்தில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதையும், சங்க இலக்கியம் குறிப்பிடாத மரபுச் சொற்கள் எவை எவை என்பதையும் இந்த இயலின் செய்திகள் விரிவாக விளக்கியுள்ளன. மரபியலையும் சங்கப் பனுவலையும் இணைத்துக் கற்ற பெருமக்களுக்கே இத்தகைய ஒப்பீட்டுச் செய்திகளை வழங்க இயலும்.
“குட்டி” என்னும் சொல்லைத் தொல்காப்பியம் மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி ஆகியவற்றுக்கு உரியதாகக் குறிப்பிடும். “குட்டி” என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பன்றிக்கு மட்டும் ஓரிடத்தில் வழங்குகின்றது எனவும் பிற விலங்குகளுக்குக் “குட்டி” என்னும் பெயர் வழங்கவில்லை எனவும் கூறுவது அரிய செய்தியாகும். நிகண்டு நூல்களைச் சான்றுகாட்டி நரி, முயலுக்கு மட்டும் குட்டி என்ற சொல் வழங்குகின்றது என்று ஆய்வாளர் குறிப்பிடுவது இவர்தம் நுண்மாண் நுழைபுலம் உணர்த்தும் சான்றாகும். சங்க இலக்கியம் சுட்டும் அரவு, ஆளி, எண்கு, முசு ஆகிய விலங்குப் பெயர்களை உணர்த்தும் சொற்கள் தொல்காப்பியத்தில் இடம்பெறவில்லை என்பதை அறியும்பொழுது இந்நூல் கற்ற பெரும்பயனை அடைய இயலும்.
மரபியலில் சுட்டப்பட்ட ஒன்பது இளமைப் பெயர்களையும் சங்க இலக்கியம் பெற்றுள்ளது என்று முடிவுகாட்டும் ஆய்வாளரின் ஆய்வுத்திறன் பாராட்டுக்கு உரியது.
ஓரறிவு உயிர்களுக்கு உரிய குமரி, குழவி, நாகு, நாறு(நாற்று) ஆகிய நான்கு இளமைப் பெயர்களும் சங்க இலக்கியத்தில் பயில்கின்றன. நெல்லுக்குரிய நாறு, குமரி, நாகு என்னும் இளமைப் பெயர்களைத் தொல்காப்பிய மரபியல் பதிவு செய்யவில்லை என்று பி. தமிழகன் குறிப்பது பாராட்டுக்குரிய உண்மையாகும்.
அதுபோல் மக்கள் வழக்கில் பிள்ளைக் குட்டி என்பதில் பிள்ளை என்பது ஆணையும், குட்டி என்பது பெண்ணையும் குறிக்கிறது என்று ஆய்வாளர் குறித்துள்ளார். சில ஊர்களில் அன்பின் மிகுதியால் மாறி இவை வழங்குவதையும் உற்றுநோக்க முடிகின்றது. “கோட்டான்” என்ற சொல் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இச்சொல் இன்றும் வழக்கில் உள்ளது என்று இந்த நூல் பதிவுசெய்துள்ளது. ஆட்டின் ஆண்பாற் பெயர்களான “மோத்தை”, “தகர்”, “உதள்”, “அப்பர்” ஆகிய நான்கும் இன்று வழக்கு வீழ்ந்துவிட்டன என்று குறிப்பிடும் இந்த நூல் “கிடாய்”, “கிடா” மட்டும் வழக்கில் இருப்பதை எடுத்துரைக்கின்றது.
ஆண் புலியைக் குறிக்கும் “உழுவை” என்னும் சொல்லை மரபியல் சுட்டவில்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் இச்சொல் இருபது இடங்களில் பதிவாகியுள்ளது. ஆண் புலியை அகநானூறு இரு இடங்களில் “உழுவை” என்று குறிப்பிடுகின்றது. அதுபோல் “காளை” என்னும் பெயர் மரபியலுள் சுட்டப்படவில்லை. ஆயின் “காளை” என்ற ஆண்பால் பெயர் சங்க இலக்கியத்தில் இருபத்தெட்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார் நூலாசிரியர். ஓரிடத்தில் மட்டும் எருதுவையும் பிற இடங்களில் ஆண்மை நிறைந்த ஆடவனையும் குறிப்பதாகக் காளை என்னும் சொல் உள்ளது.
மரபியலில் இடம்பெறாத “செச்சை” என்னும் சொல் சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் மட்டும் பயின்றுள்ளது. அரசனைப் பின்தொடர்ந்து செல்லும் இளைஞருக்கு வெள்ளாட்டினைப் பின்தொடர்ந்து செல்லும் கிடாய் போல் என்னும் உவமை கூறுமிடத்தில்,
“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல” (புறம் 286)
என்று ஆளப்பட்டுள்ளதை ஆய்வாளர் பதிவுசெய்துள்ளார்.
விலங்கு, பறவை, நீர்வாழி, மக்கள் குறித்த பெயர்களை மரபியலையும் சங்க இலக்கியத்தையும் துணையாகக் கொண்டு ஆராய்ந்துள்ள இந்த ஆய்வுநூலின் பின்பகுதியில் நிலைத்திணைகள் குறித்தும் அதன் உறுப்புகள் குறித்தும் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் எவ்வாறு குறிப்பிடுகின்றன என்பதை அறிஞர் பி. தமிழகன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்து இந்த ஆய்வுப் பனுவலைத் தமிழுலகிற்குப் பெரும் கொடையாக நல்கியுள்ளார்.
புலவர் பி. தமிழகனார் அவர்களின் தமிழ்ப்புலமையையும், ஆராய்ச்சி வன்மையையும் இந்த நூல் என்றும் உணர்த்திக்கொண்டே இருக்கும். இவ்வரிய ஆராய்ச்சி நூலைத் தந்துள்ள இவரை அரசும் தமிழமைப்புகளும் போற்றிப் பாராட்ட வேண்டும்; விருதுகளையும் பரிசில்களையும் அளித்துப் புகழ்தல் வேண்டும்; மேலும், இந்த நூலினைத் தமிழுலகம் வாங்கிப் போற்றுதல் வேண்டும். இத்தகு ஊக்கச் செயல்கள்தான் தமிழ்த் தொண்டர்களுக்கு இற்றை நாளில் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. “அற்ற குளம்” என்று அறுநீர்ப் பறவைகள் செழுநிலம் அமர்ந்து, இரையுண்ணும் இவ்வுலகில் பி. தமிழகன் போலும் புலமையாளர்களைக் கொண்டாடுவது தமிழ்க்குலத்தின் தலைக்கடன்.
முனைவர் பி. தமிழகன் ஐயாவையும் அவரொத்த ஆய்வுத்துறையில் உழைக்கும் தமிழறிஞர்களையும் போற்றும் நாள்தான் தமிழுக்கு ஆக்கம் நல்கும் நாளாக இருக்கும்!. தொல்காப்பிய ஆய்வறிஞர் பி. தமிழகனார் நீடு வாழி!. இவர்தம் நூல் தமிழ்நிலம் எங்கும் பரவித், தொல்காப்பியப் பயிர் விளைக்குமாக!
அன்பும் பணிவும் செறிந்த
மு. இளங்கோவன்
புதுச்சேரி
25.09.2025
முனைவர் பி. தமிழகன் அவர்களுடன் தொடர்புடைய பதிவுகள் இங்கே...
முனைவர் பி. தமிழகன் அவர்களுடன் தொடர்புடைய பதிவுகள் இங்கே...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக