நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

முனைவர் பி. தமிழகன்

 

முனைவர் பி. தமிழகன் 

[முனைவர் பி. தமிழகன் இலால்குடியை அடுத்த குமுளூரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றியவர். ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பேராசிரியராகவும் கடமையாற்றியவர். அகராதி நூல்களை வெளியிட்டவர். தொல்காப்பிய மரபியல், சங்க இலக்கியம் ஆகியவற்றை இணைத்து இவர் உருவாக்கிய ஆய்வேடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதிப்புப் பணியில் பலருக்கும் உதவிய பெருந்தகை] 

அண்மையில் மரபுப் பெயர்களும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வு நூல் ஒன்றினை முனைவர் பி. தமிழகன் அவர்கள் அணிந்துரைக்காக எனக்கு அனுப்பியிருந்தார்கள். ஒரு திங்களாக அந்த நூலினைக் கற்று, ஆறு பக்கம் ஓர் அணிந்துரையை வரைந்து அனுப்பினேன். தமிழாராய்ச்சித்துறைக்கு அந்த நூல் ஒரு முன்னோடி நூல் என்று குறிப்பிடலாம். 

/// தொல்காப்பிய மரபியலைப் பேராசிரியர் உரையுடன் கற்று, பிற உரையாசிரியர் உரைகளையும் ஒப்புநோக்கி, நிகண்டு நூல்களைத் துணைக்கு அருகிருத்திக்கொண்டு, திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகரமுதலியை(DED) ஒப்புநோக்கிச் சங்கப் பனுவல்களை ஆராய்ந்து மிகச் சிறந்த ஆய்வு நூலைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ள முனைவர் பி. தமிழகன் அவர்களின் ஆற்றலை எண்ணி எண்ணி வியந்தேன்//// 

/// தொல்காப்பிய மரபியலில் இடம்பெறாத பல இளமைப் பெயர்களைச் சங்க இலக்கியம் தாங்கியிருப்பதையும், உரையாசிரியர்களுக்குப் புலப்படாத பல சொற்கள் மக்கள் வழக்கில் இருப்பதையும் முனைவர் பி. தமிழகன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைக் கற்று மகிழ்ந்தேன்./// 

முனைவர் பி. தமிழகன் அவர்களின் நூல்களைக் கற்று மகிழ்ந்த நிறைவில் அவர்தம் வாழ்க்கையைத் தமிழுலகின் பயன்பாட்டுக்கும் பார்வைக்கும் பதிந்துவைக்கின்றேன். 

பேராசிரியர் பி. தமிழகனின் தமிழ் வாழ்க்கை 

முனைவர் பி. தமிழகன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள  இலால்குடி வட்டத்தைச் சார்ந்த குமுளூர் என்னும் ஊரில் 05.10.1946 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் பி. இராசலிங்கம் என்பதாகும்.. இவர்தம் பெற்றோர் பெயர் . பிச்சை மீனாட்சி என்பனவாகும்.  இவருடன் பிறந்தோர் மூன்று ஆண்கள் ஆவர்

பி. தமிழகன் தொடக்கக் கல்வியைக் குமுளூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். உயர்நிலைக் கல்வியைப் பூவாளூரில் அமைந்துள்ள மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். கல்லூரிக் கல்வியைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்றவர் (1965-1969). கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்பயின்ற நம் பேராசிரியர் பி. தமிழகன் அவர்கள் சிவப்பிரகாச சேதுராயர், ஆய்வறிஞர் கு. சிவமணி, கல்வெட்டறிஞர் சி. கோவிந்தராசனார், . பாலசுந்தரனார், அடிகளாசிரியர் முதலான சான்றோர்களிடத்துத் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களைப் பாடங்கேட்ட பெருமைக்குரியவர். பி. தமிழகன் அவர்களுக்குத் தொல்காப்பியம் எழுத்ததிகார நூற்பாக்கள் அனைத்தும் மாணவப் பருவத்துள் மனப்பாடம் என்பது இவர்தம் தொல்காப்பியப் புலமைக்கு ஒரு பதச்சோறு போன்றது.

1976 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பி.லிட் பட்டத்தையும், 1980 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் வழியாக முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். கல்வியியல் இளையர்(1982), கல்வியியல் முதுவர்(1986) பட்டத்தையும் பெற்றவர்

 முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதியியல் துறையில்  2000 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நிகழ்த்தி, "மரபியல் சொற்களும் சங்க இலக்கியப் பயன்பாடும்" என்ற தலைப்பில்  ஆய்வேட்டினை வழங்கிப் பட்டம் பெற்றவர்

பி. தமிழகன் அவர்களின் திருமணம் 26.05.1978 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இவர்தம் மனைவியார் பெயர் இரா. தேன்மொழி என்பதாகும். இவர்களுக்கு அதியன் என்ற மகன் மக்கள் செல்வமாக வாய்க்கப் பெற்றவர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகின்றார். 

திருச்சிராப்பள்ளி, மரக்கடைக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கியவர். குளித்தலை வட்டம், பஞ்சப்பட்டி என்னும் ஊரில் 1973 பிப்ரவரியில் நிலைத்த பணியில் இணைந்தார்.     1982 முதல் 2005 வரை சோமரசன்பேட்டையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். புலவர் பி. தமிழகன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தஞ்சாவூர் .மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் 2005 முதல் 2018 வரை தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்

முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் நூல்கள் தமிழ்மண் பதிப்பகம் வழியாக வெளிவந்தபொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் துணைநின்றவர். 

முனைவர் பி. தமிழகன் நூல்கள் 

1.       தமிழகத்தில் தொல்லியல் ஆய்வு - புலவர் பாடநூல், - 2007

2.   வழக்குச் சொல்லகராதி (திருச்சி மாவட்டம்) – 2009

3.   தமிழைச் சரியாக எழுதுக - 2015

4.   மரபுத் தொடரகராதி - 2018

5.   இணைச்சொல் அகராதி - 2019

6.   பழமொழிகளும் வாழ்வியலும் – 2016, 2019, 2022, 2023

7.   பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுங்கள் – 2021 

என்பன இவர்தம் தமிழ்க்கொடையாகும்.







தொடர்புடைய பதிவு - இங்கே

கருத்துகள் இல்லை: