[குறளேருழவர் நெல்லைப் பகுதியில் திருக்குறள் தொண்டுசெய்த அறிஞர். சிறுகதை, நாடக நூல்களை எழுதியவர். திருவள்ளுவர் அறக்கட்டளையை நிறுவியவர். திராவிட இயக்க உணர்வினர்; மக்கள் பணிக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் சிறைசென்றவர். தமிழகத்து முதலமைச்சர் பலராலும் மதிக்கப்பட்டவர்]
தமிழ்த்தொண்டிலும் திருக்குறள் தொண்டிலும் நெல்லைப் பகுதியில் உழைத்துவரும் பெருமக்களைச் சந்திப்பது என்று முடிவுசெய்திருந்தேன். அதனடிப்படையில் நெல்லையில் வாழ்ந்துவரும் நல்லாசிரியர் வை. இராமசாமியார் அவர்களிடம் தக்கவர்களை அறிமுகப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொண்டேன். 81 அகவை கொண்ட முனைவர் வை. இராமசாமியாரும் நானும் திட்டமிட்டு 08.02.2026 காலை முதல் இரவு வரை நெல்லைப் பகுதியில் பலரைச் சந்தித்தோம்.
பகல்பொழுதில் சத்தியம் தொலைக்காட்சியின் செய்தியாளர் திருவாளர் வனராஜ் சங்கர் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம். இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் அழைப்பை நண்பர் நாகராசன் அவர்கள் விருப்பமுடன் தெரிவித்தார். மிகச் சிறப்பாக நடைபெற்ற அத்திருமணத்தில் விருந்துண்டு மகிழ்ந்தோம். பகலுணவுக்குப் பிறகு பேருந்தேறி, தங்கும் மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். எங்கள் உரையாடலில் நெல்லைப் பகுதித் தமிழ்த்தொண்டர்கள் ஒவ்வொருவராக அவர்தம் பணிகளின் வழியாக மீண்டும் பிறப்பெடுத்தவண்ணம் இருந்தனர்.
நெல்லைப் பகுதியில் மொழிப்பற்றுடனும் திருக்குறள் பற்றுடனும் வாழ்ந்த குறளேருழவர் அவர்களின் செம்மாந்த தமிழ்ப்பணிகளை வை. இராமசாமியார் எனக்கு எடுத்துரைத்தார். மேலும் குறளேருழவர் அவர்களின் மகன் நாலடியார் அவர்கள் நெல்லையில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதையும் தமக்கும் அவருக்குமான நட்பையும் சொன்னார்கள். குறளேருழவர், நாலடியார் என்ற பெயர்களைக் கேட்டவுடன் விடுதிக்குச் செல்லும் விருப்பத்தைத் தவிர்த்து, நேரே குறளேருழவர் இல்லம் செல்வோம் என்று திட்டமிட்டு, அவர்தம் இல்லம் சென்றோம். எங்கள் வருகைக்காக நாலடியார் ஐயா அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். குறளேருழவர் அவர்களின் தமிழ்ப்பணியை நான் அறிய விரும்புவதாக வை. இராமசாமியார் தெரிவித்ததும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தனர். குறளேருழவரின் தமிழ்ப்பணிகளை அவர்கள் ஒவ்வொருவராகப் பகிர்ந்துகொண்டனர்.
குறளேருழவரின் தமிழ் வாழ்க்கை
தமிழ்த்தொண்டுகளால் நெல்லைப் பகுதியில் அனைவரின் உள்ளத்திலும் இடம்பெற்றவர் குறளேருழவர் அவர்கள், திருநெல்வேலியில் அமைந்துள்ள பேட்டை என்னும் ஊரில் 03.06.1923 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் ஆவுடையப்பர், இசக்கியம்மாள் என்பனவாகும். குறளேருழவர் அவர்களின் இயற்பெயர் பாலகிருட்டினன் என்பதாகும்.
குறளேருழவர் தொடக்கக் கல்வியைப் பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயின்றவர். பின்னர் நெல்லையில் உள்ள மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பயின்றவர். பள்ளிப் படிப்பின்பொழுதே இவருக்குத் திருக்குறளிலும், கவிதை எழுதுவதிலும் ஆர்வம் இருந்தது.
குறளேருழவர் அவர்கள் திராவிட இயக்க உணர்வினர். இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுச் சிறைசென்றவர். திராவிட நாட்டுக் கொள்கைகளை விளக்கும் போராட்டங்களில் ஈடுபட்டும் சிறை சென்றவர். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதும் சிறைசெல்வதும் இவர்தம் அற்றைப் பொழுதின் செயல்பாடுகளாக இருந்தன. மக்கள் பற்றும் மொழிப்பற்றும் கொண்ட குறளேருழவரின் பெருமை மக்களுக்குத் தெரியத்தொடங்கியது.
குறளேருழவர் மதுரை நடுவண் சிறையில் 1953 ஆம் ஆண்டு தளைப்படுத்தப்பட்டிருந்தார். அப்பொழுது சிறைச்சாலையில் திருக்குறள் நூல்களை அனைவரும் படிப்பதற்கு வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்பட்டுத், திருக்குறள் நூல் படிப்பதற்கு வைக்கப்பட்டது. அங்கிருந்த சிறைக்கைதிகளுக்குத் திருக்குறளைப் பயிற்றுவிக்கும் பெரும்பணியில் குறளேருழவர் ஈடுபட்டார். திருக்குறளை நாளும் படித்து மனத்துள் நிறுத்தியதால் பெரும்பான்மையான திருக்குறள் இவருக்கு நினைவுகூரும் வகையில் அமைந்தன. திருக்குறள் மீது இருந்த பற்றின் காரணமாகத் தம் பெயரைக் குறளேருழவர் என்று மாற்றி, அரசிதழிலும் பதிவுசெய்துகொண்டவர்(வில்லேருழவர், சொல்லேருழவர் சொல்லாட்சிகள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதை நினைவில் நிறுத்துங்கள்).
குறளேருழவரின் திருக்குறள் பணிகள்
குறளேருழவர் திருநெல்வேலியில் திருவள்ளுவர் அறக்கட்டளையை நிறுவித் திருக்குறள் பணிகளில் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டவர். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள் முற்றோதல் வகுப்புகளை நடத்தியவர். திருக்குறள் தேன் என்னும் பெயரில் நூலெழுதித், திருக்குறள் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்த்தவர்.
குறளேருழவர் திருக்குறள் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் சிறு சிறு கதை நூல்களை வெளியிட்டவர். மாணவர்களிடம் பரவலாக இந்த நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறளேருழவரின் திருக்குறள் கதை நூல்கள்
1. குறள் காட்டும் குட்டிக்கதைகள் (1959)
2. ஔவை சொன்ன கதைகள் (1962)
3. திருக்குறள் முத்துக் கதைகள் (1964)
4. பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் கதைகள்
(1978)
5. தினசரி திருக்குறள் வாசிப்பு (1980)
6. குறள்மணிக் கதைகள் (1981)
7. திருக்குறள் கதைகள் (1982)
8. குறட்சுவைக் கதைகள் (1982)
9. குறள்நெறிக் கதைகள் (1982)
10. தினசரி குறள் வாசிப்பு (1983)
11. குறள் மணக்கும் கதைகள் (1985)
12. குறள் கூறும் கதைகள் (1988)
13. குறள் மிளிரும் கதைகள் (1988)
14. இன்பத்துக் காலக் கதைகள் (1993)
15. இயைபுத் திருக்குறள் (1994)
திருக்குறள் சார்ந்த பிற நூல்கள்
16. குறள் காட்டும் நட்பும் சுற்றமும்
17. வள்ளுவம்
18. வள்ளுவன் விரும்பும் மனிதன்
19. குறள் காட்டும் மகவு
20. மாணவிகளுக்கு
குறளேருழவர்
திருக்குறள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் "பண்பு" என்ற மாத இதழைப்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். இந்த இதழில் திருக்குறள் சார்ந்த கட்டுரைகள்
கவிதைகள், நாடகங்கள் இடம்பெற்றிருந்தன. "சைவத் தமிழ்" என்னும் இதழையும் நடத்தியவர்
குறளேருழவரின் நாடக நூல்கள்
திருக்குறள் செய்திகள் மக்களிடம் சேர்வதற்கு ஏற்ற வடிவம் நாடகம் என்பதை உணர்ந்த குறளேருழவர் பல்வேறு மேடை நாடகங்களை இயற்றியுள்ளார். சமூக நாடகங்களாகவும், வரலாற்று நாடகங்களாகவும் அவை விளங்கின. சினேகிதியின் தியாகம், கண்ணம்மாவின் காதல், கோடம்பாக்கம் கொலை வழக்கு, அன்புள்ள... முதலிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. 64 வானொலி நாடகங்களை எழுதியவர் என்றும் அறியமுடிகின்றது.
குறளேருழவர் பல்வேறு வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். வேதியர் வெங்கண்ணா, இமயவரம்பன், கபிலவஸ்து, ஹர்சர், கரிகால் சோழன், வெறுங்கோயில், தண்ணீர்ப்பந்தல், திப்பு சுல்தான் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திப்பு சுல்தான் நாடகம் 13.01.1967 இல் சென்னை, ஒற்றைவாடைக் கலையரங்கில் நடிக்கப்பெற்றுப் பலரின் பாராட்டையும் பெற்றது.
திருவள்ளுவர் அறக்கட்டளை
திருவள்ளுவர் அறக்கட்டளை என்னும் பெயரில் ஓர் அமைப்பை 01.09.1988 இல் நிறுவி, அதில் 1330 உறுப்பினர்களைச் சேர்த்துத் திருக்குறள் தொண்டாற்றினார். திருவள்ளுவர் அறக்கட்டளையில் உறுப்பினர்களாகச் சேர்பவர்களுக்குத் திருக்குறள் தேன், திருவள்ளுவர் படம், திருக்குறள் ஒலியிசை, குறட் கருவூலம் முதலியவற்றை அன்பளிப்பாக அளிப்பது குறளேருழவரின் வழக்கமாகும். இதனால் மக்கள் பலரும் உறுப்பினராகச் சேர்ந்து திருக்குறள் பணியாற்றினர். இவ்வமைப்புக்குத் திருநெல்வேலியில் 07.45 செண்டு இடம் உள்ளது.
குறளேருழவரின் மனைவி பெயர் மாரியம்மாள் என்பதாகும். இவர்களுக்கு ஒரு மகன் குழந்தைச் செல்வமாக வாய்த்தார். அவர் பெயர் நாலடியார்(17.05.1958). நாலடியாருக்கு குறளமுதன், தமிழரசி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.
குறளேருழவர் அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலான முதலமைச்சர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.
குறளேருழவரின் திருக்குறள் பணிகளைக் கருத்தில்கொண்ட தமிழ்நாட்டு அரசு “திருக்குறள் நெறித்தோன்றல்” என்னும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் படைப்புச் செம்மல் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
திருக்குறள் கருத்துகளைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகச் செய்துவந்த குறளேருழவர் அவர்கள் 28.03.2008 இல் இயற்கை எய்தினார்.
.jpeg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக