தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் பெரும்புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இயற்றியுள்ள அரும்பெரும் ஆராய்ச்சி நூலினைக் கண்ணுற்றுப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. இவ்வாய்ப்பை எனக்கு நல்கியவர் கரூரின் சீர்சால் செந்தமிழ்த்தொண்டரும் புலவரும் புரவலருமான அருணா பொன்னுசாமியார் ஆவார். அருணா பொன்னுசாமியார் அவர்கள் என் மாணவப்பருவத்திலிருந்து என் முயற்சியினை உற்றுநோக்கி நெறிப்படுத்தும் சான்றோர் ஆவார். பொன்னுசாமியாரின் புலமைத் தொடர்பால் எனக்கு அரும்பெரும் புதையலாகப் பெ. கறுப்பண்ணன் அவர்களின் நூல் என் பார்வைக்குக் கிட்டியது.
புலவர் அருணா பொன்னுசாமியாருடன் இணைந்து அளப்பரும் தமிழ்ப்பணிகளை அன்றன்றும் ஆற்றிவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்நூற்கடல் தி. வே. கோபாலையரின் அன்புக்குரிய மாணவராக அமர்ந்து, தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்; பன்னூலாசிரியர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் செயல் மறவராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர். தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாக விளங்கும் கருவூரில் தம் பணியோய்வுக்குப் பிறகு அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்கு அரிய அணிகலனாகத் தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் இத் தண்டமிழ்ப் பனுவலைத் தந்துள்ளார்.
தொல்காப்பியச் செய்திகள் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூலாக இந்நூல் மிளிர்கின்றது. புலவர் பெ. கருப்பண்ணன் அவர்களின் தொல்காப்பிய அறிவும், திருக்குறள் புலமையும் சங்கப் பனுவல்களில் தோய்ந்த இவர்தம் அரும்புலமையும் இந்த நூலில் வெளிப்பட்டு நிற்கின்றன.
தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் என்பதை நாம் அறிவோம். தமிழின் உயிராக விளங்கும் இந்த நூலினை மோலோட்டமாகக் கற்றவர்கள் இந்நூல் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூறும் நூல் என்று மட்டும் கூறிவிட்டு, ஒதுங்கிக்கொள்வார்கள். ஆயின் அதில் தோய்ந்தவர்கள் – ஊடாடி ஒன்றாகக் கலந்தவர்கள் தொல்காப்பியரின் உள்ளத்தை அறிந்து நவில்வதுடன் அந்நூலில் பொதிந்துகிடக்கும் அரிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, நம் அறிவுப்பசிக்கும் சிந்தனைத் தூண்டலுக்கும் இரை போடுவார்கள்.
மாணிக்க நாயகர், சோமசுந்தர பாரதியார், தி.வே.கோபாலையர், அடிகளாசிரியர், கு. சுந்தரமூர்த்தியார், வ.சுப.மாணிக்கம், தமிழண்ணல், ஆ. சிவலிங்கனார், ச. பாலசுந்தரனார், வீ.ப.கா. சுந்தரம், இரா. இளங்குமரனார் உள்ளிட்ட அறிஞர்கள் அவ்வகையில் தொல்காப்பிய ஆராய்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு நல்கியுள்ளனர். அவ்வகையில் தொல்காப்பியத்தை ஊன்றிக் கற்ற புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் தொல்காப்பியச் செய்திகளைக் கொண்டு, நூல் படைத்துள்ள திருவள்ளுவரையும் சங்கப் புலவர்களையும் ஆழ்ந்து கற்று, நமக்கு ஒப்பற்ற அருந்தமிழ்ப் பனுவலாம் இந்த நூலை வழங்கியுள்ளமைக்குத் தமிழுலகம் இவருக்கு நன்றி தெரிவிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் – திருக்குறள் ஓர் ஒப்பாய்வு என்னும் பெயரில் அமையும் இந்த நூல் ”வள்ளுவப் பெருமகனாரின் வாழ்வியல் இலக்கிய நூலுக்குத் தொல்காப்பியனாரின் ஆழ்நிலை இலக்கண நூலே முதல் நூலாக இருந்துள்ளது” என்னும் கருதுகோளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளைப் பற்றிச் செய்யுளியலில் குறிப்பிடும்பொழுது “பயனே மெய்ப்பாடு எச்சவகை எனா” என்று குறிப்பிடுவதை எடுத்துக்காட்டியும் பிற உரையாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டியும் நூலினால் பயன் உருவாகும் தன்மையை இந்த நூலில் நம் புலவர் அவர்கள் விளக்கியுள்ளார். “பயன் என்பது சொல்லிய பொருளால் பிறிதொன்று பயப்பச் செய்தல்” என்பது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அவர்களின் கருத்தாகும்.
அவ்வகையில் தொல்காப்பியர் நால்வகையில் அமையும் பாக்களைக் கொண்டு மூவகைப் பொருளை (அறம்,பொருள்,இன்பம்) வெளிப்படுத்த இயலும் என்பதைத் தம் செய்யுளியலில்,
“அந்நிலை மருங்கி
னறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப” (செய். 102)
என்று உரைத்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு நம் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் இந்த நூலில் அரும்பெரும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.
அறம் பொருள் இன்பம் வீடு என்பது பிற்கால வழக்கு எனவும் தொல்காப்பியர், காலத்தில் அறம் பொருள் இன்பம் என்னும் மூவகைப் பயனே மக்களிடம் இருந்தது எனவும் இதனை உளங்கொண்டே திருவள்ளுவப் பெருமான் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் வகுத்தனர் என்பதும் இந்த நூலின் வழியாக அறியப்படும் முதல் அறிவு விருந்தாகும். வடநூலார் குறிப்பிடும் “தர்மார்த்த காம மோட்சம்” என்பன பிற்கால வழக்கு என்று கூறித் தமிழ் மரபை அரணிட்டுக் காக்கும் புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் அறிவுத்தெளிவை எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
வீடுபேறு அடைய விரும்பும் துறவோர்களைப் பற்றித் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் குறிப்பிடுவதையும் இந்த நூலில் குறித்துள்ளார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் என்று செய்திகள் இடம்பெற்றுள்ளதை நினைவிற்கொண்டே அறத்துப்பாலில் (பாயிரவியலை நீக்கி) இல்வாழ்வை முதற்கண் வைத்து, அதன் பின்னர் பொருள்சார்ந்த செய்திகளை நவின்று, ஈற்றில் களவு, கற்பு வாழ்வை வள்ளுவர் அமைத்துள்ளார் என்பது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் ஆய்வு எண்ணமாக உள்ளது.
தொல்காப்பிய நூற்பாவடிகளும், தொல்காப்பியரின் கருத்துகளும் திருக்குறளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்று சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டும் இந்த நூலாசிரியரின் ஒப்பீட்டுப் புலமை பாராட்டுதலுக்கு உரியது.
“புறத்திணையும் அகப்பொருளின் ஒரு கூறே என்று உணர்த்தவே புறப்பொருளை அகத்திணைக்கும் களவியலுக்கும் இடையில் வைத்துள்ளார்” எனவும் “பொருள் என்னும் சொல் பலபொருள் ஒரு சொல்லாகப் பல்வேறு இடங்களிலிலும் பயின்று வருகிறது” எனவும் பெ. கறுப்பண்ணன் கண்டு காட்டும் உண்மைகள் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஆழமாக ஆராய விழைவார்க்கு நல்வழிகாட்டும் திசைகாட்டிகளாகும்.
திருக்குறளில் இடம்பெறும் 133 அதிகாரத் தலைப்புகளைக் குறிக்கும் சொற்கள் தொல்காப்பியத்தில் எவ்வாறு வடிவம் பெற்று நிற்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துக்காட்டும் புலவர் கறுப்பண்ணரின் செயல் இவர்தம் தொல்காப்பியப் புலமைக்குக் கட்டியம் கூறும்.
உரையாசிரியர்கள் திருக்குறளை எவ்வாறு பொருத்தமுடன் ஆண்டு, தொல்காப்பிய நூற்பாக்களை விளக்கியுள்ளனர் என்பதையும் புலவர் பெ. கறுப்பண்ணன் இந்த நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
தொல்காப்பியத்துள் இடம்பெறும் தெய்வம், கடவுள், இறை, அமரர் முதலான சொற்களை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் இறை என்று குறிப்பிடும் பொருத்தப்பாட்டையும் இந்த நூல் விளக்கியுள்ளது. அவ்வகையில் தொல்காப்பிய நூற்பாக்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ள புலவரின் ஆய்வுச் சிறப்பினையும் நுண்ணாய்வு நோக்கினையும் பாராட்டுதல் வேண்டும்.
கருத்துகள் சங்கப்பாடல்களில் பொருந்திப் போகும் இடங்களையும் புலவர் எடுத்துக்காட்டிப் பட்டியலிட்டுள்ளார். அவ்வகையில் அறத்துப்பால் செய்திகள், பொருட்பால் செய்திகள், இன்பத்துப்பால் செய்திகள் சங்கப் பனுவல்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்பதைத் தனித்தனித் தலைப்புகளில் எடுத்துக்காட்டும் பாங்கினை அறியும் பொழுது புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுக்கு அளித்துள்ள பங்களிப்புத் தெளிவாகத் தெரிகின்றது.
புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் தொல்காப்பியப் புலமையும் வள்ளுவப் புலமையும் உரையாசிரியர்களின் கருத்தறிந்த தன்மையும், சங்கநூற் புலமையும் இந்த நூலின் வழியாக ஒருசேரப் புலப்படுகின்றன.
திருக்குறளுக்கு முன்னரே ஒருவரியில் தொகுப்புரை வரைந்த பெருமகனார் புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் கொங்குநாட்டின் கண்ணர்குலத்தில் தோன்றித் தமிழ்த்தாயின் திருவடியில் இந்நூலாம் ஆய்வுமலர் ஒன்றைச் சூட்டியுள்ளமைக்கு இத்தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் – திருக்குறள் என்னும் இருநூல் கடலுள் மூழ்கி அறிவு முத்துகளைக் கண்டெடுத்து வழங்கியுள்ள புலவர் பெ. கறுப்பண்ணர் அவர்கள் காவிரி மணலின் எண்ணிலமையும் ஆண்டுகள் கவின்மிகு வாழ்வில் திளைக்க, எம் தமிழ்த்தாய் அருள்புரியட்டும். இந்நூல் ஆய்வறிஞர்களின் கைகளில் தவழட்டும். இந்நூலால் தமிழாய்வு உலகம் பயன்பெறட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்.
பணிவுடன்
மு.
இளங்கோவன்
புதுச்சேரி
– 605008
26.12.2025
புலவர் பெ. கறுப்பண்ணன் அவர்களின் பணிகளை அறிய இங்குச் செல்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக