திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம், பாளையங்கோட்டையில் கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றிவரும் அமைப்பாகும். இவ்வமைப்பினர் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியினை நடத்தி வெற்றிபெறும் மாணவருக்குத் தங்கப்பதக்கத்தையும், த.பி.சொ. அரிராம் சேட்டு நினைவுச் சுழற்கோப்பையையும் பரிசாக ஆண்டுதோறும் வழங்குவது மரபாகும்.
அவ்வகையில் 1992, 1994 ஆகிய இரண்டு ஆண்டுகளில் “மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பிலும், “பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு” என்னும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரை எழுதி, இரண்டு முறை யான் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். என்னைப் போலும் பல அறிவார்வம் கொண்ட மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பதக்கங்களைப் பெற்றதுடன் தமிழகத்தில் உயர்பணிகளிலும் உள்ளனர்.
இவ்வாண்டின் வியப்பு யாதெனின் முன்பு பரிசுபெற்ற மாணவனாகிய யான் எழுதிய நூல்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆய்வுக்கட்டுரை வரைதல் வேண்டும் என்ற அறிவிப்புடன் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களும் அவர்தம் தலைமையில் இயங்கும் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தாரும் அறிவிப்பினை வெளியிட்டனர். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்களும் ஆய்வு மாணவர்களும் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் கட்டுரையினை வரைந்து, தனித்தமிழ் இலக்கியக் கழகத்துக்கு அனுப்பியிருந்தனர். அறிஞர் குழு கட்டுரைகளை மதிப்பீடு செய்து அண்மையில் முடிவினை அறிவித்தது.
அவ்வகையில் கீழ்வரும் பரிசாளர்கள் 07. 02. 2026, காரிக்கிழமை மாலை நான்கு மணிக்குப் பாளையங்கோட்டை, திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசுபெற உள்ளனர்.
முதல் பரிசு : திரு. இரா. வீரமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014 (கடந்த ஆண்டும் முதல்பரிசு பெற்றவர்)
இரண்டாம் பரிசு: கோ. அருண்குமார், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் – 635601
மூன்றாம் பரிசு: அபிகேசு, சட்டக்கல்லூரி, பாளையங்கோட்டை - 627002
போட்டியில் வென்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டு வெற்றிவாய்ப்பை நோக்கிச் சென்ற மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியவாகட்டும்.
என் எழுத்துப்பணிகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும்
வகையில் என் நூல்களை நடுவணாகக் கொண்டு தலைப்பமைத்து, தமிழக அளவில் போட்டியை நடத்திய
அறிஞர் பா. வளன் அரசு ஐயா அவர்களுக்கும் அவர்களின் அமைப்பினைச் சார்ந்த சான்றோர் பெருமக்களுக்கும்
எழுமை எழுபிறப்பும் நன்றியனாக இருப்பேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக