நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
#திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 பிப்ரவரி, 2026

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் பரிசளிப்பு விழா!

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம், பாளையங்கோட்டையில் கடந்த அறுபத்து மூன்று ஆண்டுகளாகத் தமிழ்ப்பணியாற்றிவரும் அமைப்பாகும். இவ்வமைப்பினர் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியினை நடத்தி வெற்றிபெறும் மாணவருக்குத் தங்கப்பதக்கத்தையும், த.பி.சொ. அரிராம் சேட்டு நினைவுச் சுழற்கோப்பையையும் பரிசாக ஆண்டுதோறும் வழங்குவது மரபாகும். 

அவ்வகையில் 1992, 1994 ஆகிய இரண்டு ஆண்டுகளில் “மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணி” என்னும் தலைப்பிலும், “பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு” என்னும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரை எழுதி, இரண்டு முறை யான் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளேன். என்னைப் போலும் பல அறிவார்வம் கொண்ட மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பதக்கங்களைப் பெற்றதுடன் தமிழகத்தில் உயர்பணிகளிலும் உள்ளனர். 

இவ்வாண்டின் வியப்பு யாதெனின் முன்பு பரிசுபெற்ற மாணவனாகிய யான் எழுதிய நூல்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, ஆய்வுக்கட்டுரை வரைதல் வேண்டும் என்ற அறிவிப்புடன் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களும் அவர்தம் தலைமையில் இயங்கும் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தாரும் அறிவிப்பினை வெளியிட்டனர். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்களும் ஆய்வு மாணவர்களும் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் கட்டுரையினை வரைந்து, தனித்தமிழ் இலக்கியக் கழகத்துக்கு அனுப்பியிருந்தனர். அறிஞர் குழு கட்டுரைகளை மதிப்பீடு செய்து அண்மையில் முடிவினை அறிவித்தது. 

அவ்வகையில் கீழ்வரும் பரிசாளர்கள் 07. 02. 2026, காரிக்கிழமை மாலை நான்கு மணிக்குப் பாளையங்கோட்டை, திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள மாநிலத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசுபெற உள்ளனர். 

முதல் பரிசு : திரு. இரா. வீரமணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014 (கடந்த ஆண்டும் முதல்பரிசு பெற்றவர்)

இரண்டாம் பரிசு: கோ. அருண்குமார், தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் – 635601 

மூன்றாம் பரிசு: அபிகேசு, சட்டக்கல்லூரி, பாளையங்கோட்டை - 627002

போட்டியில் வென்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டு வெற்றிவாய்ப்பை நோக்கிச் சென்ற மாணவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரியவாகட்டும். 

என் எழுத்துப்பணிகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் என் நூல்களை நடுவணாகக் கொண்டு தலைப்பமைத்து, தமிழக அளவில் போட்டியை நடத்திய அறிஞர் பா. வளன் அரசு ஐயா அவர்களுக்கும் அவர்களின் அமைப்பினைச் சார்ந்த சான்றோர் பெருமக்களுக்கும் எழுமை எழுபிறப்பும் நன்றியனாக இருப்பேன்.

 

வெள்ளி, 25 ஜூலை, 2025

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் முனைவர் மு. இளங்கோவன் நூலாய்வுப் பொழிவுகள்…

 


 திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடைபெற்று வருகின்றது. முதல் பரிசு பெறும் மாணவருக்கு ஒரு பவுன் மதிப்புடைய தங்கப்பதக்கமும், அரிராம் சேட்டு நினைவுச் சுழற்கோப்பையும் பரிசாக அளிக்கப்பெறும். 

 அவ்வகையில் 1992, 1994 ஆகிய இரண்டு ஆண்டுகள் நான் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் முதல் பரிசு பெற்றன. இரண்டு முறை தங்கப்பதக்கமும், வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றேன். 

 காலங்கள் உருண்டோடின…. 

 2025 ஆம் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டிக்கு நான் எழுதிய நூல்கள் கட்டுரைப்போட்டியின் தலைப்பாகியுள்ளது. என்னின் சில நூல்களைக் கிழமைதோறும் அறிஞர் பெருமக்கள் அறிமுகம் செய்து பேச உள்ளனர். பாளையங்கோட்டைத் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் 26.07.2025 முதல் பத்து வாரங்கள் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. வாய்ப்புடைய அன்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கலாம். 

 தொடர்புக்கு: பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

பேசி: 7598399967

 

 

 

 

வியாழன், 7 நவம்பர், 2019

திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழகக் கல்லூரி மாணவர் கட்டுரைப் போட்டி 2019-20



திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையங்கோட்டையில் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் என்னும் தமிழமைப்பினைப் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். கல்லூரி மாணவர்களின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளப்படுத்துவது இவ்வமைப்பின் தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

தமிழக அளவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் இவ்வமைப்பு நடத்தும் ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரை எழுதி, முதல் தகுதிபெறும் எழுத்தோவியத்திற்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடைய தங்கப்பதக்கமும், அவர் பயிலும் கல்லூரிக்கு இருபத்தைந்தாயிரம் மதிப்புடை த.பி.சொ.அரிராம் சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பரிசாகப் பெற இயலும்.

இந்த ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய தலைப்பு:

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்தோவியங்கள்.

தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் ஆண், பெண்  ஆகிய இருபாலரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

எழுத்துரை அறுபது பக்கங்களுக்குக் குறையாமலும் எழுபது பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். துணைநூற்பட்டியும் இணைத்தல் வேண்டும்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் எழுத்துப்பணியை விளக்கும் வகையில் ஆய்வுரை அமைதல் வேண்டும்.

ஆய்வுக்கட்டுரை அனுப்ப இறுதி நாள்: 16.12.2019

கட்டுரையை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா.வளன் அரசு,
எண் 3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை – 627 002, திருநெல்வேலி மாவட்டம்.

பரிசுகள் 08.02.2020 காரி(சனி)க் கிழமை மாலை நெல்லையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.