நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 ஜனவரி, 2026

பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்: சாமி பழனியப்பன்

 

சாமி. பழனியப்பன் (27.01.1926 - 20.07.2013)

[சாமி பழனியப்பன் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராக அறியப்படுபவர். இதழாசிரியர்; பன்னூலாசிரியர்; திராவிட இயக்க உணர்வாளர். தமிழரசு இதழில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர்தம் கவிதைகளைத் திராவிடநாடு, குடியரசு முதலிய ஏடுகள் மறுவெளியீடு செய்துள்ளன. மேலைச்சிவபுரியை அடுத்துள்ள புதுப்பட்டியில் பிறந்தவர். இவர்தம் மகன் பழநி பாரதி அவர்கள் திரைப்படப் பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர்] 

கவிஞர் சாமி. பழனியப்பன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியில் 27.01.1926 இல் ஒரு தச்சுத்தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் உ.வே. சாமிநாதன் – இலக்குமி அம்மாள். 

சாமி. பழனியப்பனின் தந்தையார் உ.வே.சாமிநாதன் அவர்கள் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். கவிதைபாடும் ஆற்றலும் கைவரப்பெற்றவர். எனவே, கவிஞர் சாமி. பழனியப்பனுக்குப் பகுத்தறிவுச் சூழலும் தமிழ்ச் சூழலும் குடும்பத்தில் அறிமுகமாகியிருந்தன. 

சாமி. பழனியப்பன் மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள வலையப்பட்டி, சித்தி விநாயகர் செந்தமிழ்க் கலாசாலையில் தொடக்கக் கல்வி பயின்றவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் உயர்நிலைப் பள்ளி, வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்வியைப் பயின்றவர். சில காலம் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். இவர் பயிலுங்காலத்தில் இவருடன் தமிழண்ணல், முடியரசன், மெ.சுந்தரம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் உடன் பயின்ற மாணவர்களாவர். 

கவிஞர் சாமி. பழனியப்பன் பள்ளி மாணவராக இருந்தபொழுது இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, உரையாற்றியும், பரிசுகள் பெற்றும் தமிழார்வம் கொண்டவராக இருந்தார். சித்தி விநாயகர் செந்தமிழ்க் கலாசாலையின் வெள்ளி விழாவில் ஏழாம் வகுப்பு மாணவராக இவர் இருந்தபொழுது புகழ்பெற்ற பேராசிரியரான கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளையின் தலைமையில் சாமி. பழனியப்பன்  கலந்துகொண்டு, “நான் விரும்பும் கவிஞர்” என்னும் தலைப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களைக் குறித்து உரையாற்றினார். இதனைச் செவிமடுத்த, கரந்தைக் கவியரசு, மாணவர் சாமி. பழனியப்பனைத் தனியாக அழைத்து அவர்தம் பேச்சினைப் பாராட்டிவிட்டு,  புரட்சிக்கவிஞர் கடவுள் மறுப்புக் கொள்கையுடைவர். அவர் கொள்கை வழி செல்லாதே! என்று குறிப்பிட்டதைச் சாமி. பழனியப்பன் பின்னாளில் குறிப்பிடுவது உண்டு. 

கவிஞர் சாமி. பழனியப்பன் படிக்கும் காலத்திலேயே கவிதைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் இருந்தவர். இவர் பத்தாம் வகுப்பு மாணவராக இருந்தபொழுது எழுதிய “ஆட்சி பெறுவதெங்கே?” என்ற கவிதை அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு இதழில் வெளிவந்தது. சாமி. பழனியப்பன் எழுதி, இதழில் வெளிவந்த முதல் கவிதை இதுவாகும். பாரதிதாசன் உவமைகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை நாரண துரைக்கண்ணனின் ஆனந்தபோதினி இதழில் வெளிவந்தது. இது இதழில் வெளிவந்த இவர்தம் முதல் கட்டுரையாகும். 

கவிதை உணர்வு நிறைந்த இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் ஒரு குடையின்கீழ்க் கொண்டுவரும் முயற்சியைப் பொன்னி இலக்கிய இதழ் 1947 இல் தொடங்கியது. அவ்வகையில் பொன்னி இதழ் 48 கவிஞர்களைப் பாரதிதாசன் பரம்பரையினர் என்ற தலைப்பிட்டு அறிமுகம் செய்தது. மு. அண்ணாமலை, நாரா. நாச்சியப்பன், சுரதா, வாணிதாசன், முடியரசன், புதுவைச் சிவம், வா.செ.குலோத்துங்கன், புத்தனேரி சுப்பிரமணியன் முதலான கவிஞர்களின் வரிசையில் ஒருவராகக் கவிஞர் சாமி பழனியப்பனாரும் பாரதிதாசன் பரம்பரையில் இடம்பெற்றவர். 

பொன்னி இதழ் 1947 நவம்பர் மாத இதழில்  “அமைதி கொள்வாய்” என்ற தலைப்பில் சாமி. பழனியப்பன் எழுதிய கவிதையை வெளியிட்டு இவரைக் கவிதை உலகுக்கு அறிமுகம் செய்தது. அப்பொழுது சாமி. பழனியப்பனின் அகவை இருபத்தொன்றாகும். இலங்கையிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் இவர் துணையாசிரியராக இருந்த நேரம் அதுவாகும். இளம் அகவையில் இவர் வரைந்துள்ள கவிதையின் சொல்லாட்சிகளும் எடுத்துரைப்பும் இவரின் கவிதைப் பயிற்சியை அறிவிக்கும் சான்றாக விளங்குகின்றது. பாவேந்தர் கவிதைகளில் இவருக்கு இருந்த பயிற்சியும் புலப்படுகின்றது. கற்பனையாற்றல் சொல்லாட்சி, எடுத்துரைப்பு, புனைந்துரை யாவும் ஒரு தேர்ந்த கவிஞருக்கு உரிய அடையாளத்தை இக்கவிதை நமக்கு வழங்குகின்றது. 

வீரகேசரி அலுவலகப் பணியை முடித்துவிட்டு ஒருநாள் கொழும்பு கடற்கரைக்குச் சென்று ஓங்கி உயர்ந்து எழுந்த கரையைத் தொடும் அலைகளைக் கவனித்து, “அமைதிகொள்க” என்ற தலைப்பில் கவிதை வடித்து அதனைப் பொன்னி இதழுக்கு அனுப்பினார். அக்கவிதை பாரதிதாசன் பரம்பரை என்ற அறிமுகத்துடன் பொன்னி இதழில் வெளிவந்தது. 

அக்கவிதை வருமாறு: 

அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை

ஆளுகின்றோ மென்கிறன ஆணவத்தி னாலா

நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த

நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?

அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,

அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,

நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ

நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்! 


வறுமைமிகு தொழிலாள ருணர்வு பெற்று,

வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்

புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும்

பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்

இறந்துவிடு கின்றனையே! புறப்பட் டோரின்

இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்.

மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை

மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!

 

மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று

மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்

அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!

ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொருத்தி,

கணிகையென ஆகின்றாள் சிலரைச் சேர்ந்தால்!

காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்

கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்!

கடலே!அத் துணிவாலா நீயு மிந்நாள்,

 

திங்களினைக் கண்டதுமே மேலெ ழும்பித்

தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப்

பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?

புன்மைக்கும் அன்னவனோ ஒப்பவில்லை.

மங்காத காதல்கொண்ட அல்லி என்னும்

மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு

நங்கையினைக் காதலித்தால் தவறா மென்று

நகைத்தலினைக் கண்டிடுவாய், அமைதி கொள்வாய்! 

மேற்கண்ட எண்சீர் ஆசிரிய விருத்தப்பாடலில் கடலலையின் காட்சியினைக் காட்டிப் பல்வேறு உலகியல் செய்திகளைக் கவிஞர் விளக்கியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அகங்கார உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தொழிலாளர் நிலையை நினைவூட்டுகின்றார்.  ஆண்-பெண் சமத்துவ உணர்வை நிலைநாட்டியுள்ளார்.  நிலவு, தாமரை, அல்லி இவற்றைக் காட்டி, ஒருதார மணத்தை உளமார இக்கவிதையில் கவிஞர் வரவேற்றுள்ளார். 

அக்காலத்தில் இந்தித் திணிப்பு முயற்சி தமிழகத்தில் தலைதூக்கியது. இந்தித் திணிப்பை எதிர்த்து, வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப்பள்ளி அலுவலகத்தின் முன்பு சாமி. பழனியப்பன் தம் பள்ளியிறுதி வகுப்புச் சான்றிதழைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, வெளியேறியவர். அப்பொழுது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.எஸ். சேஷய்யா என்பவர் சாமி. பழனியப்பனின் இச்செயலை அன்பு காரணமாகக் கண்டித்தார். சான்றிதழ் இல்லாமலேயே தாம் வேலை தேடி வாழமுடியும் என்று தலைமை ஆசிரியரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து பழனியப்பன் புறப்பட்டார். 

சாமி. பழனியப்பனின் தந்தையாருக்கு வேண்டிய நண்பரான கீழச் சீவல்பட்டி கிருஷ்ணப்பச் செட்டியாரிடம் தம் எழுத்துத் துறை ஈடுபாட்டைச் சொன்னார். தாம் காரைக்குடியில் படித்துக்கொண்டிருந்தபொழுதே பத்திரிக்கைகளுக்குக் கவிதை, கட்டுரை எழுதியதையும், பள்ளிக்கு அருகில் இருந்த “குமரன்” என்னும் வார இதழில் பிழைத்திருத்தும் பணியில் இருந்ததையும், செய்திகளைச் செப்பனிடும் பணியைச் செய்ததாகவும், அப்பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்த முருகு சுப்பிரமணியம் தமக்குப் பயிற்சியளித்து ஊக்கப்படுத்தியதாகவும் கிருஷ்ணப்பச் செட்டியாரிடம் தெரிவிக்க, அவர் ஆவனிப்பட்டி பி.பி.ஆர். எஸ். சுப்பிரமணியன் செட்டியாரிடத்துக் கூட்டிப் போனார். 

சுப்பிரமணியன் செட்டியார் கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழின் உரிமையாளர் என்பதை அறிந்துகொண்ட சாமி. பழனியப்பன், தாம் பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை, கவிதை எழுதுவேன், பத்திரிகைகளுக்கு வரும் செய்தியைச் செப்பனிட்டுத் தருவேன். பிழையைத் திருத்துவேன் என்று குறிப்பிட்டார். இதனை ஆர்வமுடன் கேட்ட சுப்பிரமணியன் செட்டியார், இன்னும் ஒரு மாதத்தில் கொழும்பு, வீரகேசரி அலுவலகத்திலிருந்து தங்களுக்குக் கடிதம் வரும் என்று தெரிவித்தமை சாமி. பழனியப்பனுக்கு நம்பிக்கையைத் தந்தது. அவரிடம் முகவரியை எழுதிக்கொடுத்துவிட்டு, விடைபெற்ற சாமி. பழனியப்பன் 20 நாளில் வீரகேசரி அலுவலகத்திலிருந்து பணி ஆணை கிடைத்து, கொழும்பு சென்று வீரகேசரி இதழ் அலுவலகத்தில் பணியில் இணைந்தார். 

இவருக்கு முன் அதே வீரகேசரி இதழில் வ. ரா, திரைப்படப் பாடலாசிரியர் கு.மா. பாலசுப்பிரமணியம் முதலானவர்கள் தமிழகத்திலிருந்து சென்று பணியாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். 

கொழும்பில் இருந்த சாமி பழனியப்பன்  நெருங்கிய ஒரு நண்பரின் திருமணத்துக்குப் புதுப்பட்டிக்கு வந்தார். குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் இலங்கை செல்லும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. பின்னர் பொன்னி இதழின் ஆசிரியர் முருகு சுப்பிரமணியனைச் சந்தித்தபொழுது அதில்  துணை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அமைந்தது. பொன்னி இதழ் சென்னைக்கு இடம்பெயர்ந்ததும் காரைக்குடியில் இருந்த “யுனைட்டட் பிரிண்டர்ஸ்”  அச்சகத்தில் மேலாளராகப் பணியாற்றினார். “கலைமகள் பிரஸ்”  என்ற அச்சகத்தை நடத்திக்கொண்டிருந்த தி. நா. நாராயணன் அவர்கள் “வாரச் செய்தி” என்னும் பத்திரிக்கை தொடங்க இருப்பதாக அழைத்தார். 

வாரச்செய்தி இதழில் சாமி. பழனியப்பன் ஏழு ஆண்டுகள் பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழில் பணிபுரிவதற்குச் சென்னைக்கு வந்தார். சென்னை வாழ்க்கை நம் கவிஞருக்கு ஒத்துவரவில்லை. கண்ணதாசனுடன் நெருங்கிப் பழகிய சாமி. பழனியப்பனின் நிலையை பின்னாளில் அறிந்தபொழுதுதான் “பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்”  என்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் எழுதினார். 

திருச்சியிலிருந்து திருலோக சீதாராம் நடத்திய சிவாஜி இதழில் இரண்டு ஆண்டுகள் உதவி ஆசிரியராகச் சாமி. பழனியப்பன் இருந்தார். பின்னர் மதுரையில் இருந்த பாரதி புத்தக உரிமையாளர் சோ. சாமிநாதனின் அழைப்பினை ஏற்று, பாரதியார் நூல்கள் பலவற்றைப் பிழையின்றிப் பதிப்பிக்க உதவினார். 

பாரதி புத்தக நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது பாவேந்தர் பாரதிதாசன்  தமக்கு எழுத்து உதவியாளராக இருக்குமாறு புதுச்சேரிக்குச் சாமி. பழனியப்பனை அழைத்துச் சென்றார். பாவேந்தரின் “திருக்குறள் புரட்சி உரை” பதிப்புப் பணியில் இரண்டு ஆண்டுகள் அங்கு இருந்தார். அப்பணியும் தமக்கு ஒத்துவராததால் சாமி. பழனியப்பன் மீண்டும் புதுப்பட்டிக்குத் திரும்பினார். 

சாமி. பழனியப்பன் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உதவியாளராகவும் அவரது தமிழகம் இதழின் ஆசிரியராகவும் அடிகளாருடன் எட்டாண்டுகள் பணியாற்றினார். அடிகளாருக்கும் தமக்கும் பிணக்கு ஏற்பட்டதால் அப்பணியிலிருந்தும் விலகினார்.  பின்னர் கோயம்புத்தூர் வேடப்பட்டி காந்தி நிலையத்தில் ஓராண்டு பணியாற்றினார். 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதனால் சாமி. பழனியப்பன் மீண்டும் சென்னைக்கு வந்தார். அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த செ. மாதவன் அவர்களின் பரிந்துரையால் “பனைச் செல்வம்”  இதழில் மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். “பனைச் செல்வம்” இதழில் பணியாற்றியபொழுது சாமி. பழனியப்பனின் நண்பர் எஸ், கருணானந்தம் அவர்களின் உதவியால் தமிழரசு இதழில் செய்தியாளராகப் பணியாற்றும் சூழல் அமைந்தது. 

தமிழகத்தின் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், “ கவிஞர் சாமி பழனியப்பனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நாடறிந்த கவிஞர். நல்ல பத்திரிகையாளர். எனவே அவருடைய வயதுக்கும் படிப்புக்கும் விலக்களித்து, அவரைத் தமிழரசு ஆசிரியப் பிரிவில் நியமிக்கிறேன்” என்று கோப்பில் எழுதியிருந்தார். அப்பொழுது சாமி. பழனியப்பன் வயது 48 ஆகும். 1972 இல் செய்தியாளராகப் பணியில் இணைந்து உதவி ஆசிரியராகப் பணியுயர்வு பெற்று, இதழாளராக 1986 இல் ஓய்வுபெற்றவர். தமிழரசு அலுவலகப் பணியிலும் கலைவாணர் அரங்கத்துப் பணியிலும் சாமி பழனியப்பன் பணியாற்றியதைக் கவிஞர் அறிவுமதி நினைவுகூர்வார். அப்பொழுது இளங்கவிஞர்கள் பலருக்குச் சாமி. பழனியப்பன் நெறிகாட்டி, வளர்த்தெடுத்துள்ளார். 

சாமி. பழனியப்பனின் இல்லற வாழ்க்கை 

சாமி. பழனியப்பன் கமலா அம்மையார் அவர்களை 27.11.1952 இல் சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு 1 இலட்சுமி 2 தமிழரசன் 3 செல்வி 4 நாகம்மை 5 பாரதி (பழநிபாரதி) 6. சாந்தி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்களுள் பழநி பாரதி அவர்கள் புகழ்பெற்ற கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்குபவர். 


சாமி. பழனியப்பன், கவிஞர் பழநி பாரதி

சாமி. பழனியப்பன் கவிதைகள் 

சாமி பழனியப்பன் பல்வேறு கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருப்பினும் அவற்றையெல்லாம் முறைப்படித் தொகுத்துவைக்க இயலாமல் பின்னாளில் அரிதின் முயன்று சில நூல்களைச் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டுள்ளார். 

அவ்வகையில் திராவிடநாடு, பொன்னி, குடியரசு, பம்பாய் விந்தியா, கொழும்பு, மின்னொளி, சேரநாடு, விடுதலை, தமிழரசு முதலிய ஏடுகளில் இவர் கவிதை எழுதியுள்ளார். 

சாமி. பழனியப்பன் நூல்கள்: 

1.   சிரிக்கும் வையம் (இந்தி எதிர்ப்புக் கவிதைகள்)

2.   பாரதியும் பாரதிதாசனும் (1953)

3.   புரட்சி இலக்கியம்

4.   புகழ்க்கன்னி 

5.   மலரும் தமிழகம்

6.   காதல் உள்ளம் 

7.   மாம்பழக் கவிச்சிங்கம்

8.   ஆதனூர் அண்ணல் 

9.   பாரதி யார்? 

10.  குறளில் விளக்கு  

11.  அப்பரடிகள் வாழ்வும் வாக்கும் 

12.  வள்ளுவர் தந்த அறநெறி  

13.  வள்ளுவர் தந்த காதல் இன்பம் 

14.  வள்ளுவர் தந்த பொருள் வாழ்வு 

15.  அஞ்சல் தலைகளின் கதை  

16.  சிறுவர் பூங்கா 

17.  காதல் நெஞ்சம் 

18.  அச்சம் தவிர்த்த அமரகவி 

19.  வள்ளுவர் உள்ளம் 

20.  கலைஞரின் முத்துக்குவியல்  

21.  குழந்தையின்பம்  

22.  ஒளவையார் அருளிய நீதி நூல்கள் 

23.  நாடக மேதை பெர்னாட்ஷா

24.  மலர்கள்

25.  சாமி பழனியப்பன் கவிதைகள் (1984) (முழுமைப்பதிப்பு (2002) 

26.  திருக்குறள் உரை 

27.  குன்றக்குடி அடிகளார் பொன்மொழிகள் 

28.  நினைவு மலர்கள் (2001) 

தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, மு. வரதராசனார், முருகு சுப்பிரமணியன்,  முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம், கவிஞர் கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், கவிஞர் திருலோக சீத்தாராம், தமிழறிஞர்கள் வ.சுப.மாணிக்கம், நெ.து.சுந்தரவடிவேலு, தமிழண்ணல், ஒளவை நடராசன், அகிலன்  போன்ற பெருமக்களோடு பழகிக் களித்தவர். 

சாமி. பழனியப்பனின் கவியரங்கப் பணிகள்: 

சாமி. பழனியப்பனின் கவிதைகள் இதழ்களில் வெளிவந்ததுடன் பல கவியரங்குகள் வழியாகவும் மக்களிடம் சென்றன. நூற்றுக்கணக்கான கவியரங்குகளிலும் வானொலிக் கவியரங்குகளிலும் கவிதை பாடி இவர் கவிதைத் துறையில் தம் பெயரைப் பதியவைத்துள்ளார். அவ்வகையில் அந்நாளில் புகழ்பெற்ற அறிஞர்களான பாவேந்தர் பாரதிதாசன், குன்றக்குடி அடிகளார். சித்பவாநந்தர், நீதியரசர் எஸ். மகாராஜன், அ. சிதம்பரநாதன் செட்டியார், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், பேராசிரியர் அ. சீனிவாசராகவன், மயிலை சீனி வேங்கடசாமி முதலான அறிஞர்களின் தலைமையில் கவிதை பாடிய பெருமைக்குரியவர். 

சாமி. பழனியப்பன் தமிழ் உணர்வும் பகுத்தறிவுச் சிந்தனையும் வாய்த்த குடும்பத்தில் தோன்றியதாலும் இளம் அகவை முதல் திராவிட இயக்கத் தொடர்பு வாய்த்தமையாலும் இவர்தம் படைப்புகளில் இத்தகையை உணர்வுகளைக் காண இயலும். உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்த உணர்வுகளைக் கவிதையாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் சாமி. பழனியப்பன் அவர்கள். இவர் தம் கவிதைகளை ஒட்டுமொத்தமாக உள்வாங்கிப் பயிலும்பொழுது அவற்றின் உள்ளடக்கமாக இருப்பவை கீழ்வரும் செய்திகளாகும். 

தமிழ்ப்பற்று, இந்தி எதிர்ப்பு, பாரதியார் பெருமை, காந்தியின் சிறப்பும் பண்பும், தாகூர் பெருமை, பாவேந்தர் புகழ் பாடுதல், அறிஞர் அண்ணாவின் புகழ் பாடுதல், தென்னார்க்காடு சிறப்புரைத்தல், வையை ஆறு, காவிரியாற்றின் வளம், கபினி அணை கட்டிய கர்நாடக அரசினைக் கண்டித்த பாடல், இலங்கையில் 1947 இல் ஏற்பட்ட வெள்ளப் பாழ் குறித்த செய்தி, தமிழகத்தைத் தாக்கிய புயல்(1979), தென்றலை வாழ்த்துதல், காதல் பாடல்கள், விதவைக் கொடுமை, சமூக மாற்றத்துக்கான பாடல்கள், போலிச் சுதந்திரம் (1947), மே நாள் சிறப்புரைத்தல் முதலியன கவிதைப் பாடுபொருள்களாக அமைந்து கற்பவரின் உள்ளத்தில் கலந்துறையுமாறு உள்ளன. 

சாமி. பழனியப்பன்  பிறமொழிக் கவிதைகள் பலவற்றைத் தழுவிப் பல கவிதைகளைப் படைத்துள்ளார். அவ்வகையில் பன்மொழிப் புலவன் இக்பால் குறித்த கவிதை, விண்ட்சேவின் கவிதையைத் தழுவி எழுதப்பட்ட என் காதலி கவிதை (பக்கம் 108), டென்னிசனின் கவிதையைத் தழுவி எழுதப்பட்டுள்ள யாருக்காக (118, 119), கரீந்திரநாத் சட்டோபாத்தியாயாவின்  கவிதையைத் தழுவி எழுதப்பட்ட இறந்தவர் சிரிப்பு (பக்கம் 139-140) முதலிய கவிதைகள் யாவும் சாமி. பழனியப்பன்  அவர்களின் கவிதைத்துறை ஈடுபாட்டுக்குக் கட்டியம் கூறுவன. 

சாமி. பழனியப்பன் பெற்ற விருதுகள் 

சாமி பழனியப்பன் அவர்கள் தமிழ்நாட்டு அரசின் வெளியீடான தமிழரசு இதழ் நடத்திய பெரியார் நூற்றாண்டு விழாவில் அவ்விழாத் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர்.  பெரியார் புரட்சிமொழிகள் நூல் அச்சிடும் பணியின் பொறுப்பாளராகவும் விளங்கியவர். சாமி பழனியப்பன் கவிதைகள் என்ற இவர்தம் கவிதை நூல் 1987 ஆம் ஆண்டில் தமிழக அரசின்  சிறந்த மரபுக் கவிதைநூல் என்று பாராட்டிப் பரிசளிக்கப்பட்டுள்ளது. சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றம் இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி, 26.02.1987 இல் இவருக்குப் “பைந்தமிழ்க் கவிஞர்” என்ற பட்டம் நல்கியது. அதற்குரிய வெள்ளிப் பதக்கத்தையும் நல்கியது. 1988 இல் வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருதினையும் பெற்றவர். 1990 இல் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாவேந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சாமி. பழனியப்பனைப் பாராட்டி, விருது நல்கி 10 ஆயிரம் உருவா பரிசு நல்கியது. அதுபொழுது முதல்வராக இருந்தவர் கலைஞர் மு. கருணாநிதி ஆவார். விசுவகுலக் கவிமுரசு என்னும் விருதினை விசுவகர்மா சமூக இயக்கத்தினர் வழங்கினர். 

எளிமையும் கனிவும் நிறைந்த சாமி பழனியப்பன் அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியானவர். தன்மானமும் தமிழ்மானமும் நிறைந்தவர். சமூக மாற்றத்துக்கான கவிதைகளை மொழிப்பற்றுடனும் இனப்பற்றுடனும் எழுதியவர். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடன் நன்கு பழகி அவர்களின் உணர்வுகளைப் போற்றி மதித்தவர். சாமி. பழனியப்பனின் கவிதைகள் மரபுக் கவிதையின் மாண்பறியும் ஆய்வாளர்களுக்குப் பெரு விருந்தாகும். 






நன்றி: தமிழ்த்துறை, ஏ.வி.சி கல்லூரி, மயிலாடுதுறை

 

 

 

கருத்துகள் இல்லை: