நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர்


கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர்

தமிழ்ப்புலவர் வரிசை என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்தவர் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் ஆவார். மேலும் தமிழ்ப் புலவர் அகரவரிசை, மேற்கோள் அகரவரிசை (இரு தொகுதிகள்), தென்னாட்டுப் பழங்கதைகள் (எட்டு நூல்கள்), தனிப்பாடல் திரட்டு (6 நூல்கள்), சூளாமணி உரை, பிரபுலிங்க லீலை உரை, திருப்போரூர் சன்னிதிமுறை உரை, இரங்கேச வெண்பா, முதுமொழி வெண்பா என்னும் வெண்பா நூல்களுக்கு உரை எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு.

பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாரைக் கழகத்திற்கு அறிமுகம் செய்த பெருமையும் கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களுக்கு உண்டு. படிப்போர்க்குப் பயன்படும் வகையில் கம்பராமாயணம், வில்லிபாரதம், கந்தபுராணம், விநாயகபுராணம், சூளாமணி போன்ற நூல்களை உரைநடை நூல்களாக உருவக்கித் தந்தவரும் இவரேயாவார்.

கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் அவர்கள் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி, மலையான்குத்தகை என்ற ஊரில் வாழ்ந்த சதாசிவம் பிள்ளை(தேவர்), இரத்தினம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக 08. 03. 1907 இல் பிறந்தவர்.  நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்புவரை பயின்றவர். இதனையடுத்து கல்விபெறுவதற்குத் தில்லைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கடுங்காய்ச்சல் வந்தது. இதனால் செவிப்புலன் பாதிப்புற்றது. காதுகேட்கும் திறன் கடைசிவரை இல்லாமல் போனது.

புலவர் அவர்கள் இடைவிடாத தம் முயற்சியால் தமிழ் இலக்கியங்களைத் தமிழாசிரியர்களிடத்துக் கேட்டுப் படிக்கலானார். “கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்” என்பதற்கேற்பப் புலவர் அவர்கள் தமிழில் நல்ல புலமைபெற்றார். சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் தொடர்பு கிடைத்த பிறகு பல நூல்களை எழுதியும் பதிப்பித்தும் கழக ஆட்சியர் வ. சுப்பையா பிள்ளை அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். சு. அ. இராமசாமிப் புலவர் என்பது சுப்பிரமணிய அருட்டிரு இராமசாமிப் புலவர் என்று விரியும்.

சு. அ. இராமசாமிப் புலவர் அவர்களுக்கு முறையான படிப்பு குறைந்த அளவில் அமைந்தாலும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பு அமைந்த பிறகு பல நூல்களை எழுதித் தந்து கழகத்தின் புலவராகக் கடமையாற்றினார். மறைமலையடிகள் நூலகத்தில் தங்கித் தமிழ்ப்பதிப்புப் பணிகளைச் செய்ய வாய்ப்பு அமைந்ததால் புலவர் அவர்களும் குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் பல நாள் தங்கித் தமிழ்ப் பணிகளைக் கவனித்துள்ளார். பிழைதிருத்தும் பணியில் நல்ல புலமையுடையவர். புலவர் அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிக் கழகம் 1008 வது வெளியீட்டு விழாவில் (21.4.1961) புலவருக்கு நினைவுப்பேழை வழங்கிப் பாராட்டியது. இனியன் என்ற பெயரிலும் புலவர் எழுதியுள்ளார். படைப்பு, வரலாறு, தொகுப்பு, உரை, உரைநடை என்று பல திறத்தனாவாகப் புலவரின் படைப்புகள் உள்ளன.


புலவர் அவர்களுக்குத் திருமடங்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. அதனால் தாம் இறப்பதற்கு முன்பாகத் தம் நூல்களைத் திருமடங்களுக்குக் கொடையாக வழங்கிவிட்டார். செல்வத் திருஅகவல் என்ற நூலினை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்று புலவர் சொன்னதால் அவரின் வாரிசுகள் செல்வத் திருஅகவலைப் பலவாண்டுகளாகப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் செல்வம் மட்டும் குடும்பத்திற்கு வந்தபாடில்லை.



சு. அ. இராமசாமிப் புலவர் அவர்கள் திருத்துறைப்பூண்டி அடுத்த கருப்பக்கிளர் என்ற ஊரில் திருமணம் செய்துகொண்டு கருப்பக்கிளர் ஊரினர் ஆனார். இவருக்குத் தமிழ்மணி, மங்கையர்க்கரசி, மயிலேறும் பெருமாள்(60), முருகேசன்(57), சிந்தாமணி ஆகிய மக்கட் செல்வங்கள் வாய்த்தனர். புலவர் அவர்கள் தமிழ்ப்புலவர்களின் வரலாறுகளை எல்லாம் தொகுத்து எழுதிப் பாதுகாத்தார்கள். ஆனால் அவர்தம் பிறங்கடைகளுக்கோ புலவரின் சிறப்போ, அவர்களின் குடும்பம் பற்றிய வரலாறோ தெரியாதபடி கல்வியறிவில் பின்தங்கிவிட்டனர். அதனால் உழவுத்தொழில் ஈடுபட்டு வறுமை வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுள் மங்கையர்க்கரசி அவர்கள் தந்தையார் பற்றிய சில செய்திகளைச் சொல்கின்றார். மற்றவர்களுக்கு அவ்வளவு விவரம் தெரியவில்லை.


  சு.அ.இராமசாமிப் புலவர் (இளமைத் தோற்றம்)

இராமசாமிப் புலவர் அவர்கள் தம் எழுபத்தாறாம் அகவையில் (06.10.1983 செந்தமிழ்ச்செல்வி இதழ் குறிப்பிடும் ஆண்டு; 24.03.1983 என்று குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர் ) இயற்கை எய்தினார். புலவர் விருப்பப்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மங்கையர்க்கரசி (புலவரின் மகள்)


இரா.மயிலேறும்பெருமாள் (புலவரின் முதல் மகன்)


இரா. முருகேசன், துணைவியாருடன் (புலவரின் இராண்டம் மகன்)

இராமசாமிப் புலவரின் முதல்மகன் மயிலேறும்பெருமாள் கல்வியறிவு இல்லாதவர். இரண்டாம் மகன் முருகேசன் எட்டாம் வகுப்புவரை படித்தவர். முருகேசன் அவர்களுக்கு நான்கு பெண் மக்கள். அதில் ஒருவர் வாய்பேச இயலாதவர். முருகேசன் அவர்கள் திருப்பூரில் பெண்குழந்தைகளுடன் தங்கிப் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தார். நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்த கொடுத்த வகையிலும், குழந்தைப்பேறு உள்ளிட்ட குடும்பக் கடமைகளிலும் புலவரின் இளைய மகன் மிகப்பெரிய பொருளாதாரச் சரிவில் உள்ளார். புலவர் வாழ்ந்த வீட்டை விற்றுக் கடனை அடைக்கத் திட்டமிட்டு வருகின்றனர். தமிழார்வலர்களும் அரசும் முன்வந்து தமிழுக்கு உழைத்தவர்களின் வாரிசைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புலவர் வாழ்ந்த இல்லம்

கருப்பக்கிளர் சு.அ. இராமசாமிப் புலவர் அவர்களின் தமிழ்க்கொடைகள்:


 புலவரின் நூல்


புலவரின் நூல்


புலவரின் கையெழுத்துப்படி

1. வெளிவந்தவை

தமிழ்ப்புலவர் வரிசை 31 பகுதிகள்
கதை இன்பம் 12 பகுதிகள்
இலக்கியச் சிறுகதைகள் 10 பகுதிகள்
தென்னாட்டுப் பழங்கதைகள் 8 பகுதிகள்
தமிழ்ப்புலவர் அகர வரிசை 6 பகுதிகள்
தனிப்பாடல் திரட்டு 5 பகுதிகள்
தமிழ்நாட்டு வள்ளல்கள் 2 பகுதிகள்
சூடாமணி உரை 2 பகுதிகள்
பழமொழி விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
திருக்குறள் விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
மேற்கோள் விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
கம்ப இராமாயணம் வசனம் 2 பகுதிகள்
ஆத்திசூடி விளக்கக் கதைகள் 2 பகுதிகள்
திருக்குறள் 50 கதைகள்
திருக்குறள் அரும்பதவுரை
முதுமொழிக்கதை
உலக நீதிக்கதைகள்
கொன்றைவேந்தன் கதைகள்
நறுந்தொகைக் கதைகள்
மூதுரைக் கதைகள்
நல்வழிக்கதைகள்
நன்நெறிக் கதைகள்
நீதிநெறி விளக்கக் கதைகள்
நீதி வெண்பாக் கதைகள்
அறநெறிச்சாரக் கதைகள்
புலமை வித்தக போதினி
தமிழுந் தமிழரும்
கல்லாட உரைநடை
குறுந்தொகை வசனம்
எழுத்தாளர்களும் பதிப்பகங்களும்
கந்தபுராண வசனம்
வில்லிபாரத வசனம்
சூளாமணி வசனம்
கோவலன்
தேம்பாவணி உரைநடை
உரையாசிரியர்கள்
வளையாபதிக் கதை முதலியன
யசோதர காவிய கதை
காதல் வெறி முதலிய கதை
பரலோக யாத்திரைக் கதைகள்
நூறு நகைச்சுவைக் கதைகள்
புலவர் நகைச்சுவை
பிரபுலிங்க லீலை அரும்பதவுரை
பிரதோட விளக்கம்
கொக்கோக ரகசியம்
நினைத்தால் சிரிப்பு
பாட்டி கதைகள்
இலாகிரிப் பொருள்கள்
புறநானூற்றுக் கதைகள்
அகநானூறு உரைநடை III
சிலேடை அகராதி
ஓவியக் கலைஞர்கள்
செல்வத் திறவுகோல்
கழகத் தமிழ் அகராதி
இதழ் விளக்க வரிசை
அரிச்சந்திர புராண உரைநடை
காரிய சித்தி மாலை உரை
திருவருட் கதைகள்
திருவாமாத்தூர்ப் புராண உரைநடை
... வரலாறு உரைநடை
சிவாநந்தர் வரலாறு உரைநடை
விநாயக புராண வசனம்
திருவருட் செல்வம்
குமார சம்பவம்
இரகு வமிசம்
மேக சந்தேசம்
மாளவிகை
விக்கிரமோர்வசி
சகுந்தலை
பன்னூல் பாடல் திரட்டு (புதுத் தொகுப்பு)
சிறப்புப் பெயர் அகர வரிசை
ஆத்திசூடி தெளிவுரை
உலக நீதி தெளிவுரை
கொன்றைவேந்தன் தெளிவுரை
நறுந்தொகை தெளிவுரை
மூதுரை தெளிவுரை
நல்வழி தெளிவுரை
நன்னெறி தெளிவுரை
விநோதக் களஞ்சியம்
பதினோராந் திருமுறைக் குறிப்புரை
திருத்தொண்டர் மாக்கதை குறிப்புரை
திருக்குறள் சொற்பொருள்
சிவப்பிரகாசர் பிரபந்தத் திரட்டு குறிப்புரை
நல்லறிவுக் கதைகள்
விநாயக கவச குறிப்புரை
சிறைவிடத்தந்தாதி குறிப்புரை
அபிராமியந்தாதி உரை
மறையசையந்தாதி உரை
இராமாயணம் பாலகாண்ட உரை
இலக்கண அகராதி
இரங்கேச வெண்பா உரை
முருகேசர் முதுமொழி வெண்பா உரை
இளைஞர் பாரதக் கதை
இளைஞர் கந்தபுராணக் கதை
சோழநாட்டுப் புலவர்கள் I
சோழநாட்டுப் புலவர்கள் II
தமிழ்நாட்டுக் கவிஞர்கள்
தொண்டை நாட்டுப்புலவர்கள்
தமிழ்நாட்டுப் பெண்மணிகள்
நளன் கதை
இசுலாமியக் கதை
குசேலர் கதை
அரிச்சந்திரன் கதை
மதுரை மாலை உரை
செல்வத்திருமகளே வருக
நாலடியார் விளக்கக் கதை
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு

2. செய்யுள் நூல்கள்

1. கவிதைக் கலம்பகம்
2. வீரசேகர பஞ்சரத்தினம் (I)
3. அருணாசல அட்டகம் (II)
4. தட்சணாமூர்த்தி தசகம்
5. குன்றை வெண்பாவந்தாதி
6. கட்டளைக் கலித்துறையந்தாதி
7. குன்றைக் குருபரமாலை
8. குன்றை இருவர் இரட்டை மணி மாலை
9. சிவானந்தர் வரலாறு (3)
10. .. இராமசாமிப் பிள்ளை வரலாறு (4)
11. குமார விநாயகர் பதிகம்
12. செங்கமல நாயகி பதிகம்
13. மெய்யப்ப சதகம்
14. மகாதேவ பதிகம்
15. திருவேங்கட நாதர் புராணம்
16. முத்துராமலிங்கர் பதிகம்
17. அருணாசலப் பதிகம்

3. வெளிவராதவை

1. முற்காலப் போரும் தற்காலப் போரும்
2. பன்னிருவர் பகை
3. இன்பக் கோவை
4. இனியன் சிறுகதைக் கோவை
5. இனியன் கதைகள்
6. நாயின் கதைகள்
7. நூலாசிரியர்கள்
8. மெய்ஞ்ஞானச் செல்வர்கள்
9. நாலடியார் பொழிப்புரை
10. திருக்காளத்திப் புராண வசனம்
11. வெளிநாட்டுக் கதைகள்
12. கடவுளைப் பற்றிய கதைகள்
13. மண் வண்டி
14. நானூறு நகைச்சுவைக் கதைகள்

4. பெயர் போனவை

மீனாட்சி திருமணம்
முத்தத்தின் இரகசியங்கள்
திருக்குறள் பொழிப்புரை
அகநானூறு வசனம் (1)
குடும்பத் திட்டம்
பொது அறிவு
வீரவனப் புராண வசனம்
வாழத்தெரியாதவர்
வீரபாண்டியக் கட்டபொம்மன்
கிருட்டிண சைதன்யர்

நூல்களின் எண்ணிக்கை 220


களப்பணியில் துணைநின்ற பேராசிரியர் தனராஜ் அவர்கள்

களப்பணியில் துணைநின்ற திரு. ஆறுமுகம் அவர்கள்

இவர்களுக்குநன்றி:

முனைவர் தனராஜ் அவர்கள் (திரு.வி.க. கல்லூரி, திருவாரூர்)
திரு. சிவபுண்ணியம் அவர்கள் (மேலைப்பெருமழை)
திரு. ஆறுமுகம் அவர்கள் (கருப்பக்கிளர்)
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர் குடும்பத்தினர்
செந்தமிழ்ச்செல்வி (கழகம்)
பிரெஞ்சு ஆய்வு நிறுவன நூலகம் (IFP), புதுச்சேரி

(இக்கட்டுரையை முழுமையாகவோ, பகுதியாகவோ எடுத்து வேறு தளங்களில் பயன்படுத்தும் அன்பர்கள் முன் இசைவு பெற வேண்டும். அல்லது கட்டுரைக்குரிய இணைப்பை வழங்க வேண்டும். தாங்களே உருவாக்கியது போன்று வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டுகின்றேன். மு.இ.)



3 கருத்துகள்:

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

பேராசிரியரே வணக்கம். புலவரைச் செம்மையாக அறிமுகம்செய்து, அவருக்கு எம்போன்ற இளைஞர் மத்தியில் நன்மதிப்பினைத் தேடித்தந்துள்ளீர்கள். நாங்கள் அறியாத் தமிழ்த்தொண்டரை அறிமுகம்செய்தமைக்கு நன்றி. 220 நூல்கள் என்பது வியப்பையும் மகிழ்வையும் தருகின்றது. புலவர் தம் ஆத்மா தங்களை வாழ்த்தும்.
நன்றி
தங்கள் இளவல் முனைவர் ப. சரவணன்.

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

பேராசிரியரே வணக்கம். புலவரைச் செம்மையாக அறிமுகம்செய்து, அவருக்கு எம்போன்ற இளைஞர் மத்தியில் நன்மதிப்பினைத் தேடித்தந்துள்ளீர்கள். நாங்கள் அறியாத் தமிழ்த்தொண்டரை அறிமுகம்செய்தமைக்கு நன்றி. 220 நூல்கள் என்பது வியப்பையும் மகிழ்வையும் தருகின்றது. புலவர் தம் ஆத்மா தங்களை வாழ்த்தும்.
நன்றி

முனைவர் ப. சரவணன், மதுரை. சொன்னது…

பேராசிரியரே வணக்கம். புலவரைச் செம்மையாக அறிமுகம்செய்து, அவருக்கு எம்போன்ற இளைஞர் மத்தியில் நன்மதிப்பினைத் தேடித்தந்துள்ளீர்கள். நாங்கள் அறியாத் தமிழ்த்தொண்டரை அறிமுகம்செய்தமைக்கு நன்றி. 220 நூல்கள் என்பது வியப்பையும் மகிழ்வையும் தருகின்றது. புலவர் தம் ஆத்மா தங்களை வாழ்த்தும்.
நன்றி