நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 11 ஏப்ரல், 2013

பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களுக்குத் தமிழக அரசின் உ.வே.சா. விருதுபேராசிரியர் ம.வே. பசுபதி அவர்கள்

திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியின் முன்னாள் முதல்வரும், உ.வே.சா.நூலகத்தில் காப்பாளராகப் பணிபுரிந்தவரும், பல நூல்களின் ஆசிரியருமாகிய பேராசிரியர் ம. வே. பசுபதி அவர்களின் தமிழ்ப்பணியைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான உ.வே.சா. விருதைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் கல்வெட்டறிஞரும், பேராசிரியருமான .கா. ம. வேங்கடராமையா அவர்களின் மகனாவார். பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களிடம் நான் ஐந்தாண்டுகள்(1987-92) திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ்கற்க வாய்ப்பு அமைந்தது. அவர்களின் உள்ளங் கவர்ந்த மாணவன் யான். யாப்பருங்கலக் காரிகையை அவரிடம் பாடம் கேட்டேன். அதனால் ஆற்றுப்படை நூல்களை எழுதும் அளவிற்குப் புலமையும் எனக்குக் கிடைத்து. என் பேராசிரியர் அவர்கள் விருதுபெற உள்ளமை நினைத்து என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு:


மந்திரவேதி வேங்கடராமையா பசுபதி என்பதன் சுருக்கமே ம.வே.பசுபதி ஆகும். மந்திரவேதி என்பது ஆந்திராவின் கர்ணூல் மாவட்டத்தின்(வேங்கிநாடு) ஊர். குலோத்துங்க சோழன் காலத்தில் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் முன்னோர்கள் தமிழகத்திற்கு வந்தவர்கள்.
ம.வே.பசுபதி அவர்கள் 21.08.1942 திருப்பனந்தாளில் பிறந்தவர். பெற்றோர் கா.ம.வேங்கடராமையா - அன்னபூரணி ஆவர். திருப்பனந்தாளில் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை பயின்றவர்.1961 முதல் 1967 வரை தமிழாசிரியராக அரசுபள்ளிகளில் பணிபுரிந்தவர். 1968 முதல் 1987 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். 1988 முதல்2000 வரை திருப்பனந்தாள் கா.சா.சு.கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தவர். உ.வே.சா. நூலகத்தின் காப்பாளராக எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் ஓலைச்சுவடிகளிலிருந்து 23 நூல்களைப் பதிப்பித்துள்ளார். பதிப்பாசிரியராக இருந்து 7 நூல்களைப் பதிப்பித்துள்ளார். சிற்றிலக்கியங்கள் 15 எழுதியுள்ளார். இவரின் கவிஞனும் சுவைஞனும், பாவேந்தரின் பாநாயம், கம்ப சிகரங்கள், புதிய திருவள்ளுவமாலை உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். குமரகுருபரர் என்ற சமய இலக்கியத் திங்களிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர். தொலைக் காட்சிகளிலும், பல்வேறு பட்டிமன்றங்களிலும், கவியரங்குகளிலும் கலந்துகொண்டு தமிழ்ப்பணி செய்தவர். இவர்தம் பேச்சு யுடியூப் போன்ற இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.

கருத்துகள் இல்லை: