சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப்
பல்கலைக்கழகத்தின் தமிழியல் பண்பாட்டுப் புலத்தின் சார்பில் “கணினி, கையடக்கக் கருவிகளில்
தமிழ்” என்னும் தலைப்பில் மலேசியாவைச் சேர்ந்த முத்தெழிலன் அவர்களின் உரையாற்றினார்.
17.04.2013 பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற
சிறப்பு உரையரங்கில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் முருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மலசியாவைச் சேர்ந்த தமிழ்க் கணினி வல்லுநர்
முத்து நெடுமாறன் அவர்கள் கணினி, கையடக்கக் கருவிகளில் தமிழ் என்ற தலைப்பில் இரண்டுமணி
நேரம் சிறப்புரையாற்றினார். இவர்தம் உரை கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு எவ்வவாறு
உள்ளது என்பதைச் சிறப்பாக எடுத்துரைப்பதாக இருந்தது.
முத்து.நெடுமாறன் உரை
கணினி, இணையம் என்ற இரண்டு நிலைகளில் தமிழ்
கடந்து வந்த வரலாற்றை முதலில் விளக்கிய முத்து அவர்கள் கையடக்கக் கருவிகளில் இன்று
தமிழின் பய்னபாடு எவ்வாறு உள்ளது என்பதைப் பெருந்திரைக்காட்சி வழியாக அரங்கில் இருந்தவர்களுக்கு
விளக்கினார்.
1980 அளவில் ஆங்கில எழுத்துகளை நீக்கிவிட்டுக்
கணினித்திரைகளில் தமிழைத் தெரியச் செய்ய எடுத்த முயற்சிகளை நினைவுகூர்ந்தார். அதுபோல்
ஆங்கில விசைப்பலகைகளில் தமிழ் விசைப்பலகையை அமைத்ததையும் நினைவுகூர்ந்தார்.
எழுத்துரு உருவாக்கம் தமிழ்க்கணினிக்கு முதலில்
தேவையாக இருந்தது. ஏனெனில் கடல் கடந்த நாடுகளில் அச்சுத் தொழிலுக்கு ஆள் இல்லாமல் தொல்லைப்பட்ட
நிலையில் கணினி அச்சு அனைவருக்கும் கைகொடுத்ததால் அச்சுநோக்கில் கணினி எழுத்துருக்கள்
தொடக்கத்தில் உருவாக்கப்பட்டன. மைக்ரோசாப்டு விண்டோசு வந்த பிறகு தமிழ் அச்சுத்துறை
முன்னேறியது. இணையம் வந்த பிறகு 1990 இல் கணினியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர்.
Tamilnet.net தமிழ் எழுத்துகளைக் கொண்டு மடலாடலை ஊக்கப்படுத்தியது.
அதன் பிறகு ஒருங்குகுறியின் வளர்ச்சி ஏற்பட்டது. கணினி, மடிக்கணிகளில் பயன்பட்ட தமிழ்
அடுத்துக் கையடக்கக் கருவிகளில் நுழைந்துள்ளது.
Apps என்ற குறுஞ்செயலிகள் கையடக்கக் கருவிகளில்
சிறப்பாக ஒத்துழைக்கின்றன. ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒன்றாகக் குறுஞ்செயலிகளைக் கொண்டு
துல்லியமான சேவையைப் பெறலாம். எனவே வரும் காலங்களில் கணினி, மடிக்கணினியின் இடத்தைக்
கையடக்கக் கருவிகள் பிடித்துவிட வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிகுறிகள் இப்பொழுது நன்கு
தெரிகின்றன. கணினிக் காலத்தில் இருந்த தொழில்நுட்பச் சிக்கல்கள் கையடக்கக் கருவிகளில்
இல்லை. தட்டச்சுப்பலகைச் சிக்கல், எழுத்துருச் சிக்கல் தீர்ந்து ஒருங்குகுறியில் சிறப்பாக
இன்று தட்டச்சிட முடிகின்றது.
முத்து அவர்களின் உரையில் மின்னூல் உருவாக்கம்,
பயன்பாடு, சிறப்புகள் குறித்த பல வியப்பூட்டும் செய்திகள் இடம்பெற்றன. குறுஞ்செயலிகள் குறித்து விளக்கினார். அடுத்து விவேகத்
தமிழ் உள்ளீடு பற்றிப் பேசினார். மேலும் செல்லினம், தாம் நடத்தும் செல்லியல் கையடக்கக்
கருவிச் செய்தி இதழ் பற்றியும் விளக்கினார்.
மின்னூல்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
நீரோட்ட வடிவமைப்பு, பொருத்த வடிவமைப்பு, நிலைபேற்று வடிவமைப்பு பற்றி விளக்கினார்.
அச்சுவடிவம் போன்றதே மின்னூல் என்று குறிப்பிட்டுவிட்டு மலேசியா எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின்
நூல்கள் மின்னூல்களான வரலாற்றையும் பாப்பாவின் பாவலர் முரசு நெடுமாறனின் நூல் மின்னூலான
வரலாற்றையும் எடுத்துரைத்தார். பழைய நூல்களையும் மின்னூல்களாக்கலாம் என்று அவர் மின்வடிவப்படுத்திய
பழைய பதிப்புகளை எடுத்துக்காட்டியதும் அரங்கினர் மகிழ்ச்சியடைந்தனர்.
மின்னூல்களுக்கும் படிமக்கோப்பு நூல்களுக்கும்
உள்ள வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார். படிமக்கோப்பு மின்னூல்களில்
எழுத்துருச்சிக்கல் இருக்காது. படிமக்கோப்புகளைத் தமிழில் தேடமுடியாது. பரிந்துரைத்துப்
பங்கிடமுடியாது. குறியீட்டுவசதி, இணைப்பு வசதிகள் தர இயலாது என்றார். மின்னூல்களின்
எழுத்தைப் பெரிதாக்க இயலும். கதை, கவிதை மின்புத்தகமாக இருப்பது நன்று. Webbook என்ற
பெயரில் முரசு நிறுவனம் 1993 இல் மின்னூல் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதையும் எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழகங்களிடமிருந்து கணினி வல்லுநர்கள்
என்ன எதிர்பார்க்கின்றனர் என்று வினாவை எழுப்பிக்கொண்டு கணினி வல்லுநர்களின் எதிர்பார்ப்பை
விளக்கினார். அடுத்த கட்ட வளர்ச்சி என்பது பலதுறை சார்ந்தவர்கள் இணைந்துசெய்ய வேண்டிய
நிலையில் உள்ளோம் என்று குறிப்பிட்டுவிட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் ஆய்வாக அமையவேண்டும்
என்றும் ஒருதுறை ஆய்வை அடுத்த அடுத்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் தொலைநோக்குப்
பார்வையிலும் அறிவியல் அடிப்படையிலும் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சொல்
தரவுகள் உருவாக்கல், எழுத்து- உரை, உரை- எழுத்து என்ற ஆய்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்
என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு ஊடகத்துறை, கணினித்துறை சார்ந்த
அறிஞர்கள் திரளாக வந்திருந்தனர். எழுத்தாளர் மாலன், எழுத்தாளர் பொன்.தனசேகரன், மணி.மணிவண்ணன்,
அந்திமழை அசோகன், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன், வள்ளி
ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சு. பாலசுப்பிரமணியன்
அனைவருக்கும் நன்றிகூறினார்.
மு.இளங்கோவன், முத்து நெடுமாறன்
எழுத்தாளர் பொன் தனசேகரன், பேரா.வேங்கடராமன், எழுத்தாளர் மாலன், மு.இளங்கோவன்
1 கருத்து:
பலரை படங்களில் பார்க்க முடிந்தது... நன்றி ஐயா...
கருத்துரையிடுக