நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 ஏப்ரல், 2013

கொள்கைப் பாவலர் தமிழேந்தியின் தமிழ் வாழ்க்கை…



கவிஞர் தமிழேந்தி அவர்கள்

சிந்தனையாளன் என்ற ஏட்டின் பின்னட்டையைப் படித்துவிட்டுதான் பலர் இதழைப் படிப்பார்கள். அந்த அளவு தமிழுணர்வு சார்ந்த, மக்கள் நலம் நாடும் பாட்டுக்களை வடித்துப் புகழ்பெற்றவர் கவிஞர் தமிழேந்தி. அரக்கோணத்தில் வாழ்ந்து வரும் கவிஞர் தமிழேந்தி அவர்கள் தனிப்பாடல்களும் கட்டுரைகளுமாக வரைந்தவர். அண்மையில் மூன்று நூல்களை வெளியிட்டு அனைவரின் எதிர்பார்பையும் நிறைவுசெய்துள்ளார். இந்த நூல்கள் வருமாறு: 1. தமிழேந்தி கவிதைகள் 2. திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே, 3. பன்முக நோக்கில் பாவேந்தர்.

கவிஞர் தமிழேந்தியின் பாடல்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை நினைவூட்டும் தரமுடையவை. இவர் பாவேந்தரின் நெறியில் நின்று வாழ்ந்து வருபவர். பகுத்தறிவு, மொழிப்பற்று, சமூக மேம்பாட்டுக்குப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படைத்து வருபவர். அன்னாரின் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் இங்கு நினைவுகூர்கின்றேன்.

கவிஞர் தமிழேந்தி அவர்களின் இயற்பெயர் யுவராசன் என்பதாகும். 07.06.1950 இல் அரக்கோணத்தை அடுத்த மின்னல் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சுப்பிரமணி, வள்ளியம்மாள். பிறந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தவர். புகுமுக வகுப்பை மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரியில் நிறைவுசெய்தவர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்தவர்(1967-69). 1970 முதல் இடைநிலை ஆசிரியர் பணியாற்றியவர். தனித்தேர்வராகப் புலவர், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். 1992 முதல் தமிழாசிரியர் பணிபுரிந்தவர். முதுகலைத் தமிழாசிரியராக 2006 இல் பணி ஓய்வுபெற்றவர்.

சென்னை வானொலியில் 1972 முதல் இவர் எழுதிய இசைப்பாடல்கள் அரக்கோணம் சு. யுவராசன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் ஒலிபரப்பாகியுள்ளன.  நான்கு கவிதை நாடகங்களையும் வானொலிக்காக எழுதி வழங்கியுள்ளார்.

இவர்தம் கவிதையாற்றலைப் போற்றி 2000 ஆம் ஆண்டில் பாவேந்தர் மரபுப்பாவலர் விருதும், வேலூர்  உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாவேந்தர் விருதும் வழங்கிப் பாராட்டியுள்ளன. தமிழகத்தின் உயர்ந்த விருதுகளும் சிறப்பும் பெறத்தக்க இந்தப் பாவலரைத் தமிழ் அமைப்புகள் அழைத்துச் சிறப்புச் செய்யவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பும் பரிந்துரையும் ஆகும்.

1972 இல் இராணி என்னும் அம்மையாரை உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அருவி, கனிமொழி(இரசியா), பாவேந்தன் என்ற மூன்று மக்கள்செல்வங்கள். அனைவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தவர்.

சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்துவரும் கவிஞர் தமிழேந்தி அவர்கள் அறிஞர் ஆனைமுத்து அவர்களின் அரசியில் நிலைப்பாட்டை முன்னெடுத்து வருபவர். தந்தை பெரியார், பாவேந்தர் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்.




முகவரி:
கவிஞர் தமிழேந்தி அவர்கள்,
வள்ளுவர் இல்லம், 44 இராசாசி வீதி,
அரக்கோணம்- 631 001
கைப்பேசி: 94434 32069

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிஞர் தமிழேந்தி அவர்களைப் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

அ. வேல்முருகன் சொன்னது…

ஓராண்டுக்கு முன்பு அய்யா தமிழேந்தியை சந்தித்தேன். அதற்கு முன்......... 1987 என்று நினைவு அவர் இல்லத்தில் நடைபெற்ற கவியரங்கம், பொற்கோ தலைமை தாங்கினார்.

மீண்டும் தங்கள் தளத்தில் புகைப்படம் மூலம் சந்திப்பு

நன்றி

வளரும்கவிதை / valarumkavithai சொன்னது…

அய்யா தமிழேந்தி அவர்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக வந்துள்ளது. நான் சிந்தனையாளன் இதழின் ஆயுள் உறுப்பினன் ஆகலின், அவரது எழுச்சி மிக்க கவிதைகளை இறுதிப்பக்கத்தில் இருக்குமென்று முதலிலேயே தேடிப் படித்து மகிழ்வேன். அவருக்கு வணக்கங்களும், தங்களுக்கு நன்றியும். இந்தத் தொடரே அடுத்து யாரைப்பற்றி வரும் என ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அரிய - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களோடும் - பயனுள்ளதாக உள்ளது. இந்த உங்கள் பணி தொடரட்டும்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
http://valarumkavithai.blogspot.in/