முனைவர் க.பஞ்சாங்கம்
தமிழ்த் திறனாய்வு உலகில் அனைவருக்கும் அறிமுகமான
பெயர் பஞ்சு என்ற பஞ்சாங்கம். பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்கள் சிலப்பதிகாரத் திறனாய்வுகள்
என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். படைப்பு, திறனாய்வு, பெண்ணியம்,
தலித்தியம் இவர்தம் விருப்பமான துறைகள். பொதுவுடமைக் கொள்கைகளின் பின்புலத்தில் ஆய்வுசெய்வதிலும்
ஆய்வுப்பொருளை உற்றுநோக்குவதிலும் வல்லவர். தம் மாணவர்களை அறிவுசார்ந்த துறைகளில் ஈடுபடுத்தியதில்
பேரா. பஞ்சு அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. புதுவை அரசின் கல்லூரிகளில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர்.
பேராசிரியர் பஞ்சு அவர்களிடம் உரையாடும்பொழுதும்,
இவர் உரையை மேடையில் கேட்கும்பொழுதும் இவர்தம் சிந்தனைப் போக்கையும் தனித்துவத்தையும்
அடையாளம் காணமுடியும். எழுத்திலும், பேச்சிலும் வல்லவரான பேராசிரியர் க. பஞ்சாங்கம்
அவர்கள் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வருபவர். அவர்தம்
வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்கள் விருதுநகர்
மாவட்டம் இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் 04.02.1949 இல் பிறந்தவர். இவர் தம்
பெற்றோர் திருவாளர்கள் கனியப்பன், முத்தம்மாள் ஆவர். தந்தையாரை இளம் அகவையில் இழந்த
பஞ்சாங்கம் அவர்கள் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்த இவர், இராசபாளையம் - தென்காசி செல்லும்
பாதையில் உள்ள புத்தூரில் அமைந்துள்ள சரசுவதி ஆரம்பப் பாடசாலையில் தொடக்கக் கல்வியைப்
பயின்றவர். உயர்நிலைக் கல்வியைத் தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப்
பள்ளியில் படித்தவர். விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை
(1965-66) நிறைவுசெய்தவர்.
1967-70 வரை மதுரை தியாகராசர் கல்லூரியில்
இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். 1970-72 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்
முதுகலை பயின்றவர். ஔவரை துரைசாமி பிள்ளை, சுப.அண்ணாமலை, மெ.சுந்தரம், சஞ்சீவி உள்ளிட்ட
அறிஞர்களிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர்.
1972- இல் நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உரையாளர் (டியூட்டர்) பணியில் இணைந்தார்.
1973 இல் புதுவை அரசின் நேர்காணலில் கலந்துகொண்டு அரசு பணி பெற்றார். காரைக்கால் அறிஞர்
அண்ணா கலைக்கல்லூரியில் முதலில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. 1977 இல் புதுவைத் தாகூர் கல்லூரிக்குப் பணிமாறுதல்
அமைந்தது. 1979 இல் திருவாட்டி பிரபாவதி அம்மையாரை மணந்து, இவர்களின் இல்லறப் பயனாகச்
செல்வம், பாண்டியன் என்னும் மக்கட் செல்வங்களைப் பெற்றவர்.
1983 முதல் 1988 வரை முழுநேர ஆய்வாளராக இணைந்து,
முனைவர் ஔவை. நடராசன் அவர்களின் மேற்பார்வையில் “சிலப்பதிகாரத் திறனாய்வுகள்” என்ற
தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். 1988 முதல் 19991 வரை காரைக்கால் கல்லூரிக்கு
மாறுதல் கிடைத்து அங்குப் பணியாற்றினார். 1991 முதல் 93 வரை புதுவை பாரதிதாசன் அரசு
மகளிர் கல்லூரியில் பணிபுரிந்து, 1993 முதல் 2011 வரை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு
மையத்தில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களின் தமிழ்க்கொடை:
1.
ஒட்டுப்புல்(கவிதை),
1977
2.
மத்தியில்
உள்ள மனிதர்கள்(புதினம்), 1982
3.
இலக்கியத்தில்
தொல்படிவம்(மொழிபெயர்ப்பு), 1988
4.
நூற்றாண்டுக்
கவலை( கவிதை),1990
5.
தமிழ்
இலக்கியத் திறனாய்வு வரலாறு,1990
6.
சிலப்பதிகாரத்
திறனாய்வுகள் ஒரு பார்வை, 1993
7.
பெண்ணெனும்
படைப்பு(திறனாய்வு), 1994
8.
மறுவாசிப்பில்
கி.ரா(திறனாய்வு), 1995
9.
தமிழா
(பாரதியுடன் ஓர் உரையாடல்), 1999
10. பெண்-மொழி- புனைவு(திறனாய்வு),1999
11. மகாகவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள்(தொகுப்பு),
2000
12. இலக்கியத்தில் இருப்பியலும் திறனாய்வின்
இயங்கியலும், 2000
13. பயணம்(கவிதை), 2004
14. சிலப்பதிகாரத்தில் சில பயணங்கள்(திறனாய்வு),
2002
15. பாரதி-பன்முக ஆளுமை(தொகுப்பாசிரியர்), 2002
16. கி.ரா 80, (தொகுப்பு), 2003
17. நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல்(திறனாய்வு),2003
18. ஒரு விமர்சகனின் பார்வையில் (திறனாய்வு),
2004
19. தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள்(திறனாய்வு),
2004
20. ஒரு தலித்- ஒரு அதிகாரி - ஒரு மரணம்(புதினம்),
2005
21. தொன்மத் திறனாய்வு, 2005
22. புனைவுகளும் உண்மைகளும்(திறனாய்வு),
2006
23. ஹெலன் சீக்சு – புதிய பெண்ணியக் கோட்பாட்டாளர்,
2006
24. பெண்-மொழி-படைப்பு(திறனாய்வு), 2007
25. சங்க இலக்கியம்(திறனாய்வு), 2007
26. பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்(திறனாய்வு)
2008
27. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்(1901-1980), (திறனாய்வு),
2008
28. நவீன இலக்கியக் கோட்பாடுகள், (திறனாய்வு), 2008
29. ஒட்டுப்புல்(கவிதைத்தொகுப்பு), 2009
30. மனோன்மணியமும் பின்காலனித்துவமும்(திறனாய்வு),
2010
31. இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்,
2012
32. கி.ராவின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்,
2012
33. புதிய கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்,
2013
பேராசிரியர்
க.பஞ்சாங்கம் பெற்ற பரிசுகள்:
திருப்பூர்த்
தமிழ்ச்சங்கப் பரிசு
புதுவை அரசின்
கம்பன் புகழ்ப் பரிசில்
காசியூர்
ரெங்கம்மாள் பரிசு(கோவை)
கணையாழி
பேராசிரியர் சிவதம்பி விருது
சமூகச்செயல்பாடு:
தலைவர் பாரதி அன்பர்கள் அறக்கட்டளை, புதுவை.
சாகித்ய
அகாதெமி பொதுக்குழு உறுப்பினர்(2003-2007)
பல்கலைக்கழக
அறக்கட்டளைப் பொழிவு: ஆறு
பேராசிரியர்
க.பஞ்சாங்கம் அவர்களின் மேற்பார்வையில் 12 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
60 ஆய்வாளர்கள் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் இருநூறுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில்
கலந்துகொண்டு கட்டுரை படித்துள்ளார்.தற்பொழுது புதுச்சேரியில் தமிழாய்வுகளில் ஈடுபட்டு உழைத்துவருகின்றார்.
முகவரி:
முனைவர்
க.பஞ்சாங்கம்,
எண்.25, 20
ஆம் குறுக்குத் தெரு,
ஔவைநகர்,
புதுச்சேரி- 605 008
செல்பேசி:
9003037904
(இக்கட்டுரையையும்
படத்தையும் எடுத்தாளுவோர் எடுத்த இடத்தைக் குறிப்பிட்டால் மகிழ்வேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக