நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 ஏப்ரல், 2013

அசோகன் நாகமுத்துவின் போதியின் நிழல்…



சீனப்பயணியான யுவான்சுவாங் பற்றி வரலாற்றுப் பாடத்தில் ஒரு மதிப்பெண் அல்லது மூன்று மதிப்பண் அளவிற்கு நமக்கு அறிமுகம் ஆகியிருக்கும். அதன்பிறகு கல்லூரிக் காலங்களில் யுவான்சுவாங் நிழலாக அறிமுகம் ஆகியிருப்பார். அதனைத் தவிர அதிகம் அறிமுகம் இல்லாமல் இருந்த யுவான்சுவாங் என்ற பயணி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து பௌத்த ஞானம் பெற்ற சீரிய வரலாற்றைப் புனைகதையாக வடித்துள்ளார் அசோகன் நாகமுத்து. அந்திமழை மாத இதழின் நிர்வாக ஆசிரியராகக் கடமையாற்றும் இவர் வேதாரண்யம் அடுத்த மருதூர்க்காரர். கால்நடை மருத்துவம் பயின்ற இவர் சென்னையில் தங்கி ஊடகத் துறையில் தொய்வில்லாமல் உழைத்துவருகின்றார்.

தமிழ்ப் புதின ஆசிரியர்கள் பலரும் பல்வேறு சோதனை முயற்சிகளை அவரவர் கல்வி, பட்டறிவுகளுக்கு ஏற்பச் செய்துபார்த்துள்ளனர். வாழ்க்கையை வரலாறாக அமைத்தும், வரலாற்றை வாழ்க்கையாக அமைத்தும், சிற்றூர்ப்புற மக்களின் வழக்காறுகள், பண்பாடுகள் இவற்றை உள்ளடக்கமாக அமைத்தும், அரசியல், நாட்டு நடப்புகள், சமயம், சாதிப்பூசல்கள், பெண்களின் பிரச்சனைகள் இவற்றை உள்ளடக்கமாக வைத்தும் பல்வேறு புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இதிலிருந்து சற்று மாறுபட்டுப் பயணக்குறிப்பை அடிப்படையாகக்கொண்டு ஒரு புதினத்தை உருவாக்கியுள்ள அசோகன் நம் பாராட்டுக்கு உரியவர்.

சீன தேசத்திலிருந்து யுவான்சுவாங் புறப்பட்ட பயணப்பாதைகளை அடையாளங்கண்டு அதன் பின்புலத்துடன் போதிய கற்பனைகள் குழைத்து இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. இந்தப் புதினத்தைக் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் நின்று ஆசிரியர் கதையைப் புனைந்துள்ளார். இப்புதினத்தை உருவாக்க அசோகன் களப்பபணியாற்றியும், உரிய நூல்களைக் கற்றும் உரியதுறையில் போதிய அறிவுபெற்றும் புதினத்தைப் புனைந்துள்ளமை பாராட்டிற்குரியது. சுகுமாரனின் அறிமுகவுரையும், அசோகனின் முன்னுரை, பின்னுரைகளும் இந்தப் புதினத்திற்குரிய சிறப்பைப் பெற்று நிற்கின்றன. தமிழ்ப் புதினங்களில் ஒரு தேக்க நிலை அண்மைக்காலத்தில் நிலவியது. அதனை உடைத்து இதுபோன்ற புதினங்கள் வெளிவருகின்றமை தமிழின் நல்ல சூழலாகவே பார்க்கின்றேன்.

சீன தேசத்திலிருந்து அரசனின் கட்டளையை மீறி யுவான்சுவாங் மேற்கு நோக்கிப் புறப்படுவதும், வரும் வழியில் வெப்பத்தையும், குளிரையும் தாங்கியும் ஆறலைக் கள்வர்களின் கொள்ளையடிப்புகளில் தப்பியும், அரசர்களின் ஆதரவில் பயணத்தை அமைத்துக்கொண்டும் வருகின்றமை புதினத்தைக் கற்போர் ஆர்வமாகப் புதினத்தைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன.

யுவான்சுவாங் வெறும் பயணியாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் தங்கி ஒரு மாணவனைப் போல் பௌத்த ஞானத்தைக் கற்பதும் பௌத்த நெறிகளைப் பரப்புவதும். அந்த அந்தப் பகுதியில் உள்ள சமயம் சார்ந்த அறிவைப் பெறுவதும் இயல்பாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளன. புதினத்தைக் கற்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் இருக்க திருப்பங்களையும், கற்பனைக் கதைமாந்தர்களையும் படைத்துள்ளார்.

 பௌத்த சமயம் சார்ந்த உண்மைகளையும் வரலாறுகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாகத் தந்து செல்வது அசோகனின் திறமையாகக் கொள்ள வேண்டும். யுவான் வருகைபுரிந்தபொழுதும், அதற்கு முன்பு புத்தர் காலத்திலும் இருந்த அரசர்கள், அவர்களின் புத்தமதத் தொண்டு, பணிகள், கொடைகள், சமய ஆதரவு குறித்த பல தகவல்களை இந்தப் புதினத்தில் நாம் அறியமுடிகின்றது. வடநாட்டில் பரவிக்கிடக்கும் தூபிகளின் வரலாற்றையும், வேற்றுச் சமயப் படையெடுப்புகளில் புத்த பிக்குகளில் நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இந்தப் புதினத்தில் அசோகன் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தரின் பிறந்த இடம், ஞானம் பெற்ற இடம், பரிபூரணம் அடைந்த இடம் யாவும் கண்டு, அதனை உரியவகையில் இயைத்துப் புதினத்தை அசோகன் திறம்பட யாத்துள்ளார். புத்தரின் வரலாற்றையும், கருத்துகளையும் நினைவுகளையும் நிலைபெறச் செய்த பெருமை அசோக மன்னருக்கு உண்டு. அதுபோல் யுவான்சுவாங்கின் பயணத்தைத் தமிழில் நிலைநிறுத்திய பெருமை நம் அசோகனுக்கு உண்டு.

காடு, மலை, ஆறு, நாடு கடந்துவந்த யுவான்சுவாங் புத்தரின் தடம்தேடிப் பலவாண்டுகள் வந்து, நாளந்தாவில் கல்வியும் சமய அறிவும் பெற்று ஒரு முழுமதி நாளில் போதியின் நிழலில் கண்மூடித் தியானித்ததை வாழ்வின் பெரும்பேறாக உணர்கின்றார்.

சற்றொப்ப பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 645 இல் யுவான்சுவாங் சீன தேசத்தின் சாங்கானுக்குச் செல்லும்பொழுது 22 குதிரைகளில் 627 சமற்கிருத நூல்களும், புத்தர்பிரானின் 115 புனிதப் பொருட்களும் புத்தரின் பொற்சிலை ஒன்றும் கொண்டுசென்ற குறிப்பை அசோகன் குறிப்பிட்டு, யுவான்சுவாங்கின் அறிவார்வத்தை நமக்கு நினைவூட்டுகின்றார். யுவான்சுவாங் தம் அறுபத்தைந்தாவது வயதில்(கி.பி.664 இல்) இயற்கை எய்தினார் என்று படிக்கும்பொழுது யுவானின் பௌத்த ஈடுபாடும், கல்வியில் அவருக்கு இருந்த ஈடுபாடும் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றது.

போதியின் நிழல் புதினத்தைப் பொழுதுபோக்கிற்காகப் படிக்காமல் வரலாற்றை அசைபோடுவதற்காகப் படிக்கலாம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடநூலாகப் பயிலும் சிறப்பிற்குரிய நூல்.

நூல்: போதியின் நிழல்
ஆசிரியர்: அசோகன் நாகமுத்து
விலை: 180
பக்கம்: 266

கிடைக்குமிடம்:
அந்திமழை
ஜி 4, குருவைஷ்ணவி அபார்ட்மென்ட்சு,
20, திருவள்ளுவர் நகர் முதன்மைச்சாலை,
கீழ்க்கட்டளை, சென்னை- 600 117
செல்பேசி:  044- 43514540
0091 9444954674

கருத்துகள் இல்லை: